சிறப்புக் குழந்தைகளுக்கான அடுத்த நிகழ்வை ஒட்டன்சத்திரத்தில் நடத்துகிறோம். இந்தக் கல்வியாண்டில் சோதனை முயற்சியாக ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துவிட்டு அடுத்தாண்டிலிருந்து தமிழகம் முழுக்கவும் பரவலாக பல ஊர்களிலும் செய்யலாம் என்பதுதான் திட்டம். திட்டமெல்லாம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் செயல்படுத்த ஆள்பலம் வேண்டும்.
கடந்த நிகழ்ச்சிக்கு விக்னேஸ்வரன் வந்திருந்தார். ஒட்டன் சத்திரத்திலிருந்து பைக்கிலேயே வந்திருந்தார். நூற்று முப்பது கிலோமீட்டராவது இருக்கக் கூடும். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது 'அடுத்தடுத்து செய்யணுங்க...யாராவது கூட நின்னா வேற வேற ஊர்ல செய்யலாம்' என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஆனால் இவ்வளவு சீக்கிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரே வாரத்தில் தம் ஊரில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த மையம் எங்கேயிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, பொறுப்பாளரிடம் பேசி, இடம் ஒன்றைத் தேர்வு செய்து என பல காரியங்களை முடித்துவிட்டார். அவ்வளவு சீக்கிரம் அவரால் ஏற்பாடுகளைச் செய்துவிட முடியாது என நினைத்திருந்தேன். இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கின்றன. இனி நாம் தயாரானால் போதும். கடந்த நிகழ்வுக்கு வந்திருந்த 'கதை சொல்லி' சதீஷ் வேறொரு நாடக நிகழ்வுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார். மற்றவர்களிடம் இன்னமும் பேசவில்லை. நாட்கள் இல்லை. ஆனால் பெரிய காரியமில்லை என நினைக்கிறேன்.
மனநலம் குன்றிய, மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் ஐம்பது முதல் அறுபது பேர் வரைக்கும் கலந்து கொள்வார்கள். நம்பியூரில் நடத்தியதை போலவே காலையில் தொடங்கி மதியம் வரைக்கும் நிகழ்ச்சி நடக்கும். குழந்தைகளுக்கு கதை சொல்லுவது போக, அவர்களுக்கான நல்ல உணவு, ஐஸ்கிரீம், சாக்லேட், சிறு அன்பளிப்பு என அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமே நிகழ்வின் இலக்காக இருக்கும்.
கடந்த நிகழ்வைப் போலவே மிகச் சிறப்பாக நடத்திவிட வேண்டும். 'இத்தகைய நிகழ்வுகளைப் பத்திரிக்கைகளில் வெளியிடச் செய்ய வேண்டும்' என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அப்பொழுது எனக்கும் அப்படிதான் தோன்றியது. பிறகு யோசித்தால் அவசியமில்லை என முடிவு செய்து கொண்டேன். சத்தமில்லாமல் அமைதியாக இத்தகைய காரியங்களைச் செய்வதில்தான் உண்மையான சந்தோசம் இருக்கிறது. ஆனால் இத்தகைய குழந்தைகளுக்காக சிறப்பு மையங்கள் ஒவ்வொரு ஒன்றியத்தில் செயல்படுகின்றன என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிய வேண்டும்.
கடந்த வாரத்தில் கூட ஒருவர் 'என் குழந்தையின் பிறந்தநாளுக்காக அன்னதானம் வழங்க விரும்புகிறேன்' என்றார். அன்னதானம் என்றால் செலவு தொகையைக் கொடுத்துவிட்டு வருவதில்லை. நாமே அத்தனை ஏற்பாடுகளையும் செய்து அந்தக் குழந்தைகளோடு சேர்ந்து குடும்பத்தோடு அமர்ந்து உண்டுவிட்டு வர வேண்டும். அந்தக் குழந்தைகள் உணவு உண்பதற்கு கூட அவ்வளவு சிரமப்படுவார்கள். அவர்களுக்கு நம்முடைய கருணையும் கண்ணீரும் அவசியமில்லை. 'நீங்களும் எங்களைப் போலவேதான்' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும். அதுதான் அந்தக் குழந்தைகளுக்கு நாம் செய்யக் கூடிய மிகப் பெரிய உபகாரம்.
அந்த நண்பர் தமது ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு மையத்தில் அப்படிதான் தமது குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு வந்து நிழற்படங்களை அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு வெகு சந்தோசம். குழந்தைகள் அதைவிடச் சந்தோஷப்பட்டிருப்பார்கள். அத்தனை குழந்தைகளுமே ஏழைக் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அந்தக் குழந்தைகளுக்கு திருப்தியான உணவைக் கொடுத்து மகிழ்ச்சிப் படுத்துவதைவிட பெரிய சந்தோசம் என்ன இருந்துவிட முடியும்?
கடந்த முறை கலந்து கொள்ள முடியாத நண்பர்கள் இந்த முறை ஏப்ரல் இருபத்தெட்டாம் தேதி ஒட்டன்சத்திரம் வந்துவிடுங்கள். அரை நேரம் இருந்துவிட்டு வரலாம். ஏன் அழைக்கிறேன் என்றால் விக்னேஷ்வரனைத்தான் சுட்டிக் காட்ட வேண்டும். மதுரையிலிருந்தோ தேனியிலிருந்தோ யாரேனும் வந்து 'நம்ம ஊரிலும் இப்படிச் செய்யலாமே' என்று நினைத்தால் அடுத்த மாதம் அங்கேயொரு நிகழ்வை ஏற்பாடு செய்துவிடலாம். அப்படியான தொடர்ச்சியான செயல்பாடு இது. ஆர்வமிருக்கும் ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டிய காரியமும் கூட.
இந்த மாதிரியான செயல்பாடுகளின் போது தள்ளி நின்று பார்த்தால் கூட போதும். அதன் மனவெழுச்சியை வார்த்தைகளில் கொண்டு வர முடியும் எனத் தோன்றவில்லை.
எந்தவொரு பொதுக்காரியத்தையும் செய்ய உள்ளூரில் ஒருவரின் துணை வேண்டும். இல்லையென்றால் சாத்தியமில்லை. விக்னேஷ்வரன் ஐடியா கேட்கிறார். அலைபேசியில் சொல்வதோடு சரி. களத்தில் ஒவ்வொரு காரியத்தையும் செய்து முடிக்கிறார். விக்னேஷ்வரன் மாதிரியானவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் கிடைத்தால் போதும். இன்னும் பல செயல்களைச் செய்ய முடியும்.
செய்வோம்.
இப்போதைக்கு தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள். முழுமையான விவரங்களை- அனைத்தும் உறுதி செய்யப்பட்டபிறகு இருபத்து மூன்றாம் தேதியன்று எழுதுகிறேன்.
நிழற்படங்கள்: திரு.சுந்தரகிருஷ்ணன்
5 எதிர் சப்தங்கள்:
First photo is an epic. The little boy is enjoying a lot.
சிறந்த பணி, பாராட்டுகள்
உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் தளத்தில் பகிர்ந்துமுள்ளேன்.
"அன்னதானம் என்றால் செலவு தொகையைக் கொடுத்துவிட்டு வருவதில்லை. நாமே அத்தனை ஏற்பாடுகளையும் செய்து அந்தக் குழந்தைகளோடு சேர்ந்து குடும்பத்தோடு அமர்ந்து உண்டுவிட்டு வர வேண்டும்" --- மணிகண்டன், மணிகண்டன்!! வேறு எதையும் சொல்ல முடிய வில்லை!
Dear Mani Anna,
I like to do service without any expectations and I am eagerly waiting for the day to join hands with you.
√
Post a Comment