Apr 30, 2018

ஆசிர்வாதம்

அம்மா பெங்களூரில் இருந்தார். வெள்ளிக்கிழமை அலுவலகம் முடிந்து வந்து கிளம்பி அவரைக் கொண்டு போய் ஊரில் விடும் போது மணி மூன்றாகியிருந்தது. ஒட்டன் சத்திரம் போக முதல் பேருந்து எத்தனை மணிக்கு என்று போக்குவரத்துத் துறை நண்பரிடம் கேட்டு வைத்திருந்தேன். மூன்றரை மணி. அதை விட்டால் நான்கரை மணிக்கு . மூன்றரை மணி பேருந்தை பிடிப்பது சாத்தியமில்லை. அரை மணி நேரம் அலாரம் வைத்துக் கொண்டு படுத்து எழுந்த போது அம்மா திட்டினார்.

'ஏண்டா எந்நேரமும் ஓடிட்டே இருக்க?' என்ற அவரது வழக்கமான குற்றச்சாட்டு. எதையோ சொல்லி சமாளித்துவிட்டு பேருந்தில் ஏறினால் எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. எட்டரை மணிக்கு ஓட்டன்சத்திரம் நிலையத்தில் நின்ற போதுதான் விழிப்பு வந்தது.நல்லவேளையாக விழித்தேன். இல்லையென்றால் மதுரைதான் போயிருக்க வேண்டும். 

சந்திரசேகரை பேருந்து நிலையத்திலேயே சந்தித்தேன். அவர் திண்டுக்கல்லிருந்து நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். குழந்தைகளுக்கு உணவு பரிமாறும் வரைக்கும் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்தார். பேருந்து நிலையத்துக்கு வந்து விக்னேஸ்வரன் அழைத்துச் சென்றார். நம்பியூரில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகளுக்கு வாகனம் ஏற்பாடு செய்திருந்தோம். இங்கு அவர்களாகவே வருவதாகச் சொல்லிவிட்டார்கள். அதுதான் ஒரேயொரு குறை. ஒவ்வொரு குழந்தையாக வந்து சேர்வதற்கு தாமதாகிவிட்டது.

உணவுக்கு ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார்கள். சாப்பாட்டு தட்டிலிருந்து, தண்ணீர் குடிக்க காகித கப் வரைக்கும் எல்லாவற்றையும் வாங்கித் தயாராக வைத்திருந்தார்கள். ராஜா ஸ்டோர்ஸ் என்ற கடைக்காரர் குழந்தைகளுக்கான அன்பளிப்பு பொருட்களை இலாபமில்லாமல் கொடுத்திருந்தார். விக்னேஸ்வரனின் அணி கடந்த ஒரு வாரமாக வேலை செய்து கொண்டிருந்தது. 

பேராசிரியர் ராம்ராஜும் அவரது மாணவர் பிறை சூடனும் கோவையிலிருந்து வந்திருந்தார்கள். பி.எஸ்.ஜி கல்லூரியைச் சார்ந்தவர்கள். ஒரு பேராசிரியர் எந்தவிதமான தயக்கமுமில்லாமல் குழந்தைகளோடு குழந்தைகளாக இணைவதை பார்க்க வெகு சந்தோஷமாக இருந்தது. பூபதிராஜா புதுச்சேரியில் ஆராய்ச்சித் துறை மாணவர். அவர் எனக்கு முன்பாகவே பேருந்தில் வந்து மண்டபத்தில் தரையில் அமர்ந்தபடியே தூங்கி கொண்டிருந்தார். எவ்வளவு சிரமப்படுகிறார்கள்? ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. இத்தகைய காரியங்களில் யாரோ ஒருவர் மட்டும் சிரமப்பட்டால் இத்தகைய செயல்பாடுகளை சாத்தியப்படுத்தவே முடியாது. பாண்டீஸ்வரி என்னும் ஆசிரியை தமது குழந்தைகளோடு வந்திருந்தார். வரும் குழந்தைகளை அமர வைப்பதில் ஆரம்பித்து உணவு வரைக்கும் அவர்தான் ஒழுங்கு செய்தார். என்னதான் ஆண்கள் இருந்தாலும் குழந்தைகளை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு பெண் அவசியம். ஆசிரியர் கணேஷ், பூபதி பெங்களூரிலிருந்து வந்திருந்த மணிகண்டன்- இது நான் இல்லை, கருணாநிதி, செல்லாயி டீச்சர் என இன்னும் ஏகப்பட்ட பேர்களின் ஆத்மார்த்தமான உழைப்பு இருந்தது. கல்வித்துறையிலிருந்து (எஸ்.எஸ்.ஏ) ஒரு அதிகாரி வந்து முழுமையாக கவனித்தார்.

பெரும்பாலான குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியவர்கள். அவர்களை சிரிக்க வைத்து, விளையாட வைத்து, சாக்லேட் கொடுத்து, அன்பளிப்பு கொடுத்து, வயிறார உணவு கொடுத்து அனுப்பி வைத்தோம். விக்னேஸ்வரனின் உழைப்பு அசாத்தியமானது. பெற்றோர்கள் ஆரம்பத்தில் 'என்னவோ நிகழ்ச்சி' என்றுதான் அமர்ந்திருந்தார்கள். பெரிய உற்சாகமில்லை. ஆனால் ராமராஜும், பிறையும், பூபதியும் உள்ளே இறங்கிய போது மொத்தக் காட்சியும் மாறிப் போனது. அந்தக் குழந்தைகளின் கவனத்தை ஈரப்பதே மிகக் கடினம். 

'எனக்கு ஒரு குத்துவிடு' என்றார். ஒரு குழந்தை அவர்களைக் குத்தியது. குத்தும் போதெல்லாம் மைக்கில் விரல் வைத்து 'லொட்' என்று தட்டினார்கள். தான் குத்துவதால்தான் சத்தம் கேட்கிறது என்று நினைத்து அரங்கிலிருந்து ஒவ்வொருவரையும் அந்தக் குழந்தை குத்திக் கொண்டேயிருந்தது. யாரைக் குத்தினாலும் சத்தம் வரவில்லை. 'இந்த மூணு பேருதான் சரி' என்று அவர்களை மட்டும் துரத்தித் துரத்தி குத்திக் கொண்டேயிருந்தது.  

இப்படி நிறைய கவித்துவமான காட்சிகள். 

ஒரு பெண்குழந்தையால் சரியாக நடக்க முடியாது. பார்வையும் குறைபாடு. அதுபாட்டுக்கு உள்ளே புகுந்து எல்லோரிடமும் லோலயம் செய்து கொண்டிருந்தது. 'ஃபேஸ்புக்கில் லைவ் போடுங்க' என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள். படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் அருகில் ஓடி வந்துவிடும். 'என்னப்பா வேணும்' என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாது.


ஒரு குழந்தையின் அப்பா வந்து பேசினார். அவரது மூத்த மகள் கோபியில்தான் படிக்கிறாளாம். 'இதுக்குதான் இப்படி ஆகிடுச்சுங்க' என்றார். அவருக்கு பேச வார்த்தைகள் எதுவுமில்லை. 'ஏனோ பேசணும்ன்னு தோணுச்சு' என்றார். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. என் எண்னை அவருக்கு கொடுத்து 'எப்போ வேணும்னாலும் கூப்பிடுங்க' என்றேன். அழுதுவிடுவார் போலிருந்தது. அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன். 

மூன்று பேரும் கதை சொன்னார்கள். கீழே விழுந்தார்கள். உருண்டு புரண்டார்கள். குழந்தைகள் அப்படியே ஒன்றிப் போனார்கள்.பெற்றோர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எனக்கு கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. வேறு எதை வேண்டுமானாலும் செய்யலாம்- எளிய மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவத்தைப் போன்ற சந்தோஷமும் திருப்தியும் வேறு எதிலும் கிடைக்காது.

இருபத்தொன்பதாயிரம் ரூபாய் செலவு பிடித்தது. எல்லாவற்றையும் உள்ளூர்வாசிகளே கொடுத்துவிட்டார்கள். 

இரவில் தாராபுரத்திலிருந்து பேருந்து ஏறினேன். தூக்கம் வந்தது. ஆனால் தூங்கவேயில்லை. அந்தக் குழந்தைகளின் முகமும் சலனமில்லாமல் கிடந்த பெற்றோரின் முகங்களும் நினைவில் வந்து போயின. உடைந்து அழுது விட வேண்டும் எனத் தோன்றியது.

இவ்வளவு அற்புதமான செயலை சாத்தியப்படுத்திய ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான நன்றி. அந்தக் குழந்தைகளின் உற்சாகமும் மகிழ்ச்சியும், பெற்றோரின் கண்ணீரும் உங்களை எல்லாக் காலத்திலும் ஆசிர்வதிக்கட்டும். அதை மட்டும்தானே நாம் ஒவ்வொருவரும் எதிர்பார்த்தோம். 

Apr 26, 2018

சிரிக்காம சாமியை வேண்டிக்குங்கய்யா

விடிந்தும் விடியாமலும்  அச்சிறுப்பாக்கத்தில் இறங்குகிறேன். மசமசவென இருக்கிறது. மணி ஐந்து கூட ஆகியிருக்கவில்லை. எந்த ஊருக்குப் போனாலும் ஆறு மணிக்கு முன்பாக யாரையும் அழைக்கமாட்டேன். அது பொல்லாத பாவம். பேருந்து நிலையத்திலோ அல்லது கோவிலிலோ என ஏதாவதொரு இடத்தில் அமர்ந்து கொள்வேன். நேற்றும் அப்படித்தான். கரூர் வைஸ்யா வங்கியின் முன்பாக அமர்ந்திருந்தேன்.  

வெளிச்சம் வந்தவுடன் லியோவின் எண்ணுக்கு அழைத்தேன். லியோ ஜெயராஜின் உதவியாளர். தம்பி மாதிரி. வந்தவர் அவர்களது அலுவலகத்தில் இறக்கிவிட்டு 'சார் நீங்க தூங்குங்க' என்று பாயை விரித்துக் கொடுத்தார். ஏ.சி. அறை. குளுகுளுவென்று காற்று வீசுகிறது.  இதுவரைக்கும் படித்ததை வைத்துப் பார்த்தால் பந்தா விடுவது போலத் தெரியுமே.

நீங்க வேற. மேலே படியுங்கள். ஆனால் ஒரு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு - 'இதை வைத்து இவன் மானத்தை எப்பவும் வாங்க மாட்டேன்' என்று மாரியாத்தா மீது சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வாசியுங்கள். 

லியோ கிளம்பியவுடன் உட்புறமாகப் பூட்டிக் கொண்டேன். இரவு அரசுப் பேருந்தில் பயணம். வெக்கையில் கசகசவென இருந்தது. ஏ.ஸி காற்று சிலுசிலுவென்று வீசியதால் சட்டை பேண்ட்டை- ஆமாம் பேண்ட்டும்தான் கழற்றி போட்டுவிட்டு பைக்குள் இருந்த பிரஷை எடுத்து சாவகாசமாக வாய்க்குள் திணித்துக் கொண்டு வரவேற்பறை முழுக்கவும் சுற்றி அங்கேயிருந்ததையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய புத்தகங்களை வைத்திருந்தார்கள். கோக்கா-கோலாவின் வெற்றிக் கதையில் ஆரம்பித்து 'லூஸிங் மை வெர்ஜினிட்டி' என்ற ரிச்சர்ட் பிரான்சன் புத்தகம் வரை நிறைய. அரை மணி நேரமாவது இருக்கும். 

பொறுமையாக மேய்ந்துவிட்டு இனி குளித்துவிட்டு வந்தால் ஒரு தூக்கம் போடலாம் என்ற நினைப்பும் வந்திருந்தது. என் தலையெழுத்து பாருங்கள்- எப்பொழுதுமே பையில் ஒரு துண்டு இருக்கும். அன்றைய தினம் துண்டும் இல்லை. மறந்து தொலைத்திருந்தேன். குளித்துவிட்டு வந்து சொட்டச் சொட்டப் பார்க்கிறேன் சிசிடிவி கேமிரா கொட்டக் கொட்டப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

'அடப்பாவிகளா குளியலறைக்குள் இருந்து வருவதையெல்லாம் படம் எடுத்து என்னய்யா செய்வீங்க' என்று அவசர அவசரமாக ஆடையை அணிந்து கொண்டு- அந்த பரபரப்பை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அவசரத்துக்கு அண்டாவுக்குள் கூட கை நுழையாது என்பார்கள். பேண்ட்டுக்குள்  கால் நுழையுமா? பாத்ரூமுக்கு முன்னாடியே கேமிரா என்றால் வரவேற்பறையில் இல்லாமல் இருக்குமா? ஓடிச்சென்று பார்த்தால் அங்கொரு கேமிரா. 

போச்சா? எல்லாவற்றையும் படம் எடுத்துவிட்டார்கள்.

என்ன செய்வதென்றே தெரியவில்லை. பதற்றத்தில் நடுங்குகிறது. கண்டதையும் கற்பனை செய்யாதீர்கள். உடல் நடுங்குகிறது என்றேன். அப்படியே அவர்களிடம் ஒத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு முன்பாக இன்னொரு வழி தென்பட்டது. மேல்மருவத்தூர் அங்கேயிருந்து பக்கம்தான். மூன்று கிலோமீட்டர். ஆதிபராசக்தியிடம் ஒரு வேண்டுதலைப் போட்டு விட்டு வந்துவிடலாம் என்று கிளம்பினேன். தூக்கமாவது ஒன்றாவது. மானம் முக்கியம். இதற்கு முன்பாகவும் அச்சிறுபாக்கம் வந்திருக்கிறேன். தங்கியிருக்கிறேன். ஆனால் கோவிலுக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றியதில்லை. கண்டக்டர் ஏழு ரூபாயை வாங்கி பையில் போட்டுக் கொண்டு சீட்டு தரவில்லை. வேறொரு நாளாக இருந்திருந்தால் புரட்சி பேசியிருப்பேன். அப்பொழுது கேமிரா தவிர எதுவும் நினைவில் இல்லை. 

அந்நேரத்தில் கோவிலில் கூட்டமில்லை. வரிசை மடமடவென நகர்ந்தது. ஓம் சக்தி பராசக்தி என்று உச்சரித்தபடியே நடந்தார்கள். நான் மட்டும் 'ஓம் சக்தி..மானத்தை காப்பாத்து சக்தி' என்றபடியே நடந்தேன். பராசக்தியின் சிலை சற்று பெரிதாக இருந்தது. 'நான் பார்த்துக்கிறேன் போ' என்று சொல்வது போலத் தோன்றியது. 'நீ மட்டும் பார்த்துக்கலைனா ஊரே பார்த்துடும்' என்று நினைத்துக் கொண்டேன். 

கோவிலை விட்டு வெளியே வரும்போது ஜெயராஜ் அழைத்தார். 'கோவில்ல இருக்கேன்' என்றேன் சுரத்தேயில்லாமல். அவர் அங்கேயே வந்துவிட்டார். 

'கேமிரா இருக்குதுன்னு சொல்லுறதில்லையா' என்று கேட்டேன். 

'எந்தக் கேமிரா?' என்றார். விலாவாரியாகச் சொன்னேன். 

'ஜட்டியோட வந்தீங்களா' என்று கேட்டார். போட்டு வாங்குகிறாராம். 'ஏங்க வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுறீங்க?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். 

சிரித்துவிட்டு 'நான் பார்த்துக்கிறேன் விடுங்க' என்றார். 

'யோவ்..நீங்க பார்க்கக் கூடாதுன்னுதானே சொல்லுறேன்' என்றேன். அதற்கும் சிரித்தார்.

'பாத்ரூம்க்கு முன்னாடி கூட கேமிரா இருக்கு...அப்படி என்னய்யா ஆபிஸ்..பெரிய மொஸாட்' என்று  கேட்டுவிட்டு  'ஆபிஸ்ல பொண்ணுங்க இருக்காங்களா' என்றேன். ஒரு பெண் பணியில் இருக்கிறாராம். கடவுளே. கடவுளே. 

பேருந்து நிலையத்திலேயே தங்கி கொள்வது எவ்வளவு பெரிய வசதி பார்த்தீர்களா? கொசுக்கடியைத் தவிர எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. இனிமேல் யாராச்சும் 'எங்க ஆபிஸ்ல தங்கிக்கலாம் வாங்க' என்று சொல்லிப் பாருங்கள். ஒரே வெட்டாக வெட்டுகிறேன். இதற்கு முன்பாக ஜீவகரிகாலன் அலுவலத்தில் வேறு பல நாட்கள் தங்கியிருக்கிறேன். எங்கே எதையெல்லாம் பதிவு செய்து வைத்திருக்கிறார்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

மேல்மருவத்தூர் பராசக்தியையும் மீறி அச்சிறுப்பாக்கத்துக்காரர்கள் இதையெல்லாம் லீக் செய்யாமல் இருக்கக் கடவது. நாம் ஒன்றும் நடிகனா நடிகையோ இல்லைதான் என்றாலும்- யோவ்! சிரிக்காம சாமியை வேண்டிக்குங்கய்யா. 

ஜெயிச்சுடு செவல

கர்நாடக தேர்தலில் யார் வெல்வார்கள்? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் ஒரே பதிலைத்தான் சொல்கிறார்கள். 'யாருக்கும் மெஜாரிட்டி வராது..குமாரசாமி கிங் மேக்கராக இருப்பார்'. ஆனால் தினசரி சூழல் மாறிக் கொண்டேயிருக்கிறது. ஆரம்பத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புகள் அருமையாக இருப்பது போலத் தெரிந்தது. பாஜகவும் அசமஞ்சமாக இருந்தது போலத் தெரிந்தது.

சித்தராமைய்யாவின் சில அதிரடிகள் பாஜகவை ஆட்டம் காணச் செய்தது. இந்திரா கேன்டீன், லிங்காயத் சமூகத்தை தனி மதம் என அங்கீகரிப்பது போன்ற மாஸ் திட்டங்களால் பாஜக அலர்ட் ஆகியது. அதே சமயம் அமித்ஷா கலந்து கொண்ட கூட்டங்கள் கூட கூட்டமில்லாமல் காற்று வாங்கியது அவர்களை இன்னமும் அலறவிட்டன. தமது வியூகங்களை கடைசி நேரத்தில் மாற்றியிருக்கிறது பாஜக. 


எடியூரப்பாவின் மகனுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் வருணா தொகுதியில் (இப்பொழுது வரைக்கும் சித்தராமையாவின் தொகுதி இது. இதில் அவரது மகன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்) பாஜக சார்பில் போட்டியிடுவார் எனச் சொல்லப்பட்டு அவர் பரப்புரையைக் கூட ஆரம்பித்திருந்தார். அதே போல இப்பொழுது எம்.பி ஆக இருக்கும் எடியூரப்பாவின் வலது கை ஷோபா எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு யஷ்வந்தபுராவில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது. கடைசியில் அவருக்கும் சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. எடியூரப்பாவின் ஆட்களுக்கே சீட் தரவில்லை என்பது அதிசயம்தான். 


'ஜெயிக்கிற வழியை மட்டும் பாருங்க' என்றுதான் பாஜகவின் தலைமை சொல்லியிருக்கிறது. இதுவரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 'குவாரி மாஃபியா' ரெட்டி சகோதரர்களின் ஆட்கள் ஏழு பேருக்கு பாஜக சீட் கொடுத்திருக்கிறது. கடந்த பாஜகவின் ஆட்சியில் 'முடிஞ்சா பெல்லாரி பக்கம் வந்து பாருங்க' என்று ரெட்டி சகோதர்கள் சித்தராமைய்யாவை மிரட்டியதும் அவர் துணிந்து பிரமாண்டமான பாதயாத்திரை அவர்கள் கோட்டையிலேயே நடத்தியதும் அதன் பிறகு ரெட்டி சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டு சித்தராமையா முதலமைச்சர் ஆனதெல்லாம் கர்நாடக அரசியலின் சுவாரசியமான நிகழ்வுகள். அதில் ரெட்டி சகோதர்கள் கடும் எரிச்சலில் இருக்கிறார்கள். கட்சி அரசியல் தாண்டி 'ரெட்டிக்கும் சித்துவுக்குமான போட்டி'யாக மாறியிருக்கிறது. ரெட்டிகளின் எரிச்சலையும் கடுப்பையும் பாஜக அறுவடை செய்யப் பார்க்கிறது. சித்தராமையா போட்டியிடும் பாதாமி தொகுதியில் ரெட்டியின் தளபதி ஸ்ரீராமுலுவே எதிர்த்து நிற்கிறார் என்பதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.

(ஸ்ரீராமுலு)

பாஜக மட்டுமில்லை. காங்கிரசும் அப்படிதான். வெற்றி மட்டும்தான் நோக்கம். ஒவ்வொரு தொகுதியும் முக்கியமானதாகியிருக்கிறது. 

(ஹாரிஸ்)

சாந்தி நகர் தொகுதியின் எம்.எல்.ஏ ஹாரிஸின் மகன் இரண்டு மாதங்களுக்கு முன்பாக பாரில் ஓர் இளைஞனைப் போட்டு கும்மி எடுத்துவிட்டான். கடந்த இரண்டு மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் பரப்பன அக்ரஹார சிறையில் கிடக்கிறான். தேர்தல் சமயத்தில் இது காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக மாறிப் போனது. ஹாரிஸுக்கு தேர்தலில் இடம் கிடைக்காது என்றார்கள்.  ஆனால் ஹாரிஸ் பண முதலை. 'உங்களை நிறுத்தினா அக்கம் பக்கம் நான்கைந்து தொகுதிகளில் தோற்க வாய்ப்பிருக்கிறது' என்று தலைமை  சொன்ன போது 'என்னை நிறுத்தலைன்னா பதினைந்து இருபது தொகுதிகளில் உங்களை என்னால தோற்கடிக்க முடியும்..தெரியும்ல' என்று பன்ச் அடித்ததாகச் சொல்கிறார்கள். ஹாரிஸ் செய்தாலும் செய்துவிடுவார்.  224 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் வைத்திருந்தார்கள். அதில் ஹாரிஸின் சாந்திநகரும் ஒன்று. கடைசியில் அவருக்கே இடம் கொடுத்துவிட்டார்கள். வேட்பு மனுத் தாக்கலுக்கு மட்டும் பத்தாயிரம் பேரைத் திரட்டி வந்தார். 

அசோக் கேணி என்றொரு தொழிலதிபர். அவர் மீதான  பல கோடி ரூபாய் ஊழல் வழக்கு விசாரணையை சித்தராமையாவின் அரசுதான் முடுக்கிவிட்டது.  இப்பொழுது அவரே காங்கிரஸ் வேட்பாளர்.  பீதர் தொகுதியில் நிற்கிறார். எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்பார்கள் என்று தெரியவில்லை. அரசியலில் வெட்கமாவது மானமாவது. வெற்றிதான் முக்கியம். நல்லவன் கெட்டவன் என்றெல்லாம் எதுவுமில்லை. பணம் படைத்தவர்கள், சாதிய வாக்குகளை அள்ளக் கூடியவர்கள் என்று ஒவ்வொரு கட்சியினரும் பற்களை வெருவிக் கொண்டு வேலை செய்கிறார்கள்.

இவர்கள்தான் வெல்வார்கள்.

எளியமனிதர்கள் அரசியலைப் பார்த்து பயப்படும் அளவுக்கு பணத்தாலும் பலத்தாலும் முறுக்கேறிக் கிடக்கிறது இந்த தேசம். ஜனநாயம் என்பதெல்லாம் வெறும் பேச்சுதான். இல்லையா?  

(குமாரசாமி)

காங்கிரசும் பாஜகவும் அறுதிப் பெரும்பான்மைக்காக சண்டை கட்டுகிறார்கள். 2019 நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு கர்நாடக தேர்தல்தான் ஒத்திகை என்கிற அளவுக்கு பேசுகிறார்கள். அதனால் இரண்டு கட்சிகளுமே 'ஜெயிச்சுடு செவல' என்று இறங்கி அடிக்கிறார்கள். அதே சமயம் மதச்சார்பற்ற ஜனதாதளம் முப்பது தொகுதிகளைப் பிடித்துவிட தம் காட்டுகிறது. குமாரசாமி பிடித்துவிடுவார் என்றுதான் சொல்கிறார்கள். அவர்களது கட்சிக்கு என செல்வாக்கான தொகுதிகள் இருக்கின்றன. எந்த அலையும் இப்பொழுது இல்லை. முன்பெல்லாம் எடியூரப்பா மேஜிக் என்று சொல்வார்கள். அது இப்பொழுது வேலைக்கு ஆகவில்லை. காங்கிரஸ், ராகுலைவிடவும் சித்தராமையாவை நம்புகிறது. காங்கிரசும் பலவீனம்தான். இந்தச் சூழலில் குமாரசாமியின் கட்சி முப்பதுக்கும் அதிகமான தொகுதிகளில் வென்றாலும் கூட ஆச்சரியப்பட  வேண்டியதில்லை. கடைசியில் இரண்டு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது குமாரசாமிதான் கிங் மேக்கராக இருப்பார். எந்தக் குதிரை வலிமையானதாக இருக்கிறதோ அதில் ஏறிக் கொள்வார். சித்தராமையா முன்பு ஜனதாதள கட்சியில் இருந்து காங்கிரசுக்குச் சென்றவர் என்பதால் அவருக்கும் குமாரசாமிக்கும் ஏழாம் பொருத்தம். எனவே காங்கிரஸ் பெரும்பான்மை பெறாவிட்டால் குமாரசாமி எடியூரப்பாவின் முதுகில் ஏறவே வாய்ப்புகள் அதிகம்.

கேள்வி பதில்கள்

நம்ம பசங்க ஸ்கூல்ல, விளையாட போற இடத்துல வேற கிளாஸ் பசங்க, வேற ஸ்கூல், ஏரியா பசங்க வேண்டும் என்றே பிரச்சனை செய்து அடிக்கறப்போ நம்ம என்ன செய்யலாம்?
விட்டுவிடுவதுதான் நல்லது  குழந்தைகளாகவே தமது எதிர்ப்புணர்வை வளர்த்து சமாளித்துப் பழக்கட்டும். எல்லாவற்றுக்கும் தடுப்பரண் அமைத்துக் கொடுக்க வேண்டியதில்லை. எல்லை மீறும் போது மட்டும் நாம் தலையிடலாம். 

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை வாசிப்பீர்களா?
முன்பு வாசித்திருக்கிறேன்.

நீங்கள் செய்த சாதனை என்றால் எதைச் சொல்வீர்கள்?
ஒன்றுமில்லை. 'இதுதான் சாதனை' என்று நினைக்கும் போது தேங்கிவிட்டோம் என்று அர்த்தமாகிவிடும். இப்போது எதற்கு அந்த சிந்தனை? காலமிருக்கிறது. 

பெங்களூரில் என்ன பிடிக்கும்?
கண்கள் குளிர்ச்சியாகவே இருக்கும். சீதோஷ்ணத்தைச் சொல்கிறேன்.

இப்படி அலைவதால் உடம்பு கெட்டுப் போய்விடாதா?
இதுவரை கெடவில்லை என்று சந்தோஷமாக இருக்கிறது. 

சிறந்த கேள்வி கேட்டால் பரிசு கிடைக்குமா?
இது நல்ல கேள்வி. உங்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்று நினைத்தால் நீங்கள் யார் என்று கூடத் தெரியாது.  அதனால் பரிசெல்லாம் கிடையாது.

சில்க்கூர் எங்கே இருக்கிறது? 
இது மொக்கையான கேள்வி. கூகிள் கூடச் சொல்லிவிடும். 

கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பீர்கள்?
எப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்! அடசாமீ..

உங்கள் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. உங்களுக்கு அவை பற்றித் தெரியுமா?
ஒன்றிரண்டு தெரியும். நேற்று கார்த்தி சந்திக்க வந்திருந்தார். காபி குடித்துக் கொண்டிருக்கும் போது 'நீங்க இந்துத்துவ ஆதரவாளர்தானே' என்றார். இத்தனைக்கும் அவர் நிசப்தம் தொடர்ந்து வாசிக்கிறவர். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பார்வை. அடுத்தவர்களின் பார்வைக்காக நாம் செயல்பட வேண்டியதில்லை. பிம்பங்கள் அழிந்து புதிதாக உருவாக்கிக் கொண்டேதான் இருக்கும். நமக்கு நாம் நேர்மையாக இருந்தால் போதும். நேர்மை என்றால் நமக்கு சரி என்று படுவதைச் செய்வது. உள்ளொன்று வைத்து புறமொன்று நடிக்காதது. விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால் அதைத் தாண்டி நம்மால் எதையும் செய்ய முடியாது. 
                                                                    ***

Sarahah வில் கேட்கப்பட்டவை 

Apr 25, 2018

99 கிலோமீட்டர்

99 கிலோமீட்டர் கடை பற்றி அங்குமிங்குமாகத் தெரியும். பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? சென்னையிலிருந்து தொண்ணூற்று ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் கடைக்கும் அதே பெயரை வைத்துவிட்டார். கூட்டம் அள்ளுகிறது. கடையின் உரிமையாளர் மனோகரன்தான் நண்பர் ஜெயராஜுக்கு வழிகாட்டி. அவரது ஆலோசனையின் பெயரில் ஜெயராஜ் சில தொழில்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். மனோகரன் வழிகாட்டுவதற்கு சரியான ஆள். அவரைப் போன்றவர்களின் ஆலோசனை இருந்தால் எந்த மனிதனும் மேலே வந்துவிட முடியும். 


மனோகரன் மாதிரியானவர்களுடன் அரை மணி நேரம் அமர்ந்து பேச வேண்டும். எவ்வளவு சுறுசுறுப்பு? சுறுசுறுப்பு என்பது இரண்டாவது. அவருடைய வியாபார மூளை இருக்கிறதே. எல்லாவற்றையும் வாடிக்கையாளர்களை முன் வைத்தே யோசிக்கிறார். அதுதான் அவரின் பெரும் பலமும் கூட. 'வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுக்கு அனுமதி இல்லை' என்றுதான் கடைகளில் எழுதி வைத்திருப்பார்கள். 'நீங்க சாப்பாட்டைக் கொண்டு வந்து இங்க வெச்சு சாப்பிடுங்க' என்கிறார். 

விக்கெட் அவுட். 

அப்படி வருகிறவர்களைக் கவர ஏகப்பட்ட அம்சங்களால் நிரப்பி வைத்திருக்கிறார். புத்தகங்கள். விளையாட்டுச் சாமான்கள். காபி கடை. கைவினைப் பொருட்கள். பழங்காலத்து பொருட்கள் என்று ஏதாவதொரு வகையில் ஈர்த்துவிடுகிறார்கள்.

'சாப்பிடறதுக்கு நிறுத்தினோம்ன்னு ஒரு நினைப்பே இருக்கக் கூடாது....என்ஜாய் பண்ணணும்' என்று மனோகரன் பேச்சு வாக்கில் சொன்னார். காலம் மாறிக் கொண்டேயிருக்கிறது. 'எண்ட் ப்ராடக்ட்டில் மட்டும்தான் எங்க கவனம் என்றிருந்தால் கவிழ்த்துவிடும்'. அப்படியொன்று எதுவுமே இந்தக் காலத்தில் இல்லை. எல்லாமே பேக்கேஜ்தான். எல்லாவற்றையும் கலந்து கட்டிதான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. சாப்பிட வந்தாலும் சரி; சினிமா பார்க்க வந்தாலும் சரி. பேக்கேஜ். அதுதான் வெற்றியைக் கொடுக்கும். 

அப்பொழுதுதான் அச்சிறுப்பாக்கம் வந்து சேர்ந்திருந்தேன். 'மனோகரன் சாரை பார்த்துட்டு வரலாம்' என்று ஜெயராஜ் அழைத்தார். 

 'எந்த மனோகரன்?' என்றேன். சொன்னார்.

சலிப்பே தோன்றவில்லை. இத்தகைய வெற்றியாளர்களை பார்க்க எவ்வளவு வேண்டுமானாலும் சிரமப்படலாம். வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ள எதையாவது வைத்திருப்பார்கள்.சக மனிதனிடமிருந்து கற்றுக் கொள்வதைவிடவும் வேறு சுவாரசியம் இருக்கிறதா என்ன? சந்தோஷமாகத் தலையை ஆட்டினேன். 

நாங்கள் சென்றிருந்த பொது பாடகர் மனோ உணவருந்திக் கொண்டிருந்தார். பணியில் இருந்தவர்கள் எந்தவிதமான சலனமும் இல்லாமல் இருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. 'மனோ வந்திருக்காரு' என்றேன்.  'பெரிய ஆளுக நிறையப் பேரு வருவாங்க சார்' என்றார் சூப்பர்வைசர். புரிந்து கொள்ள முடிந்தது. 

மனோகரன் வந்தார். எந்த பந்தாவுமில்லாத சாதாரண ஆள். எப்பொழுது நம் கால்  தரைக்கு மேலாகப் போகிறதோ அப்பொழுது இந்த உலகம் நம்மை விட்டு விலகிவிடும் என்ற வாக்கியம் நினைவில் வந்தது. 'அது ஆச்சா...இது முடிஞ்சுதா' என்று பணியாளர்களை விசாரித்துக் கொண்டிருந்தார்.

 'சாதாரணமாவே இருப்பாரு மணி..அதான் அப் டு டேட் ஆக இருக்காரு' என்று ஜெயராஜ் சொன்னார். அது சரிதான். 

பொதுவாக நம் மக்களில் 'சாப்பிட வந்தோம்னா சாப்பிடணும்' என்கிற ஆட்களும் இருப்பார்கள். அவர்களையும் விட்டுவிடக் கூடாது. அவர்களிடம் ஜிகினா வேலை எடுபடாது. இவர்கள் உணவிலும் பிரமாதப்படுத்திவிடுகிறார்கள். பாரம்பரிய உணவுகள்.  நிறையக்கடைகளில் பாரம்பரிய உணவுகள் என்ற பெயரில் மருந்தைக் கொண்டு வந்து வைக்கிறவர்கள்தான் அதிகம். ஏண்டா வாங்கினோம் என்று யோசிக்க வைத்துவிடுவார்கள். இவர்கள் வித்தியாசப்படுத்துகிறார்கள். இளநீர் பாயசம் மாதிரியான உணவுப் பொருட்கள் அட்டகாசம். எனக்கு சாப்பாட்டு ருசி பற்றி அவ்வளவாகத் தெரியாது. அங்கே சென்று வந்தவர்கள் என்னைவிடவும் தெளிவாகச் சொல்ல முடியும்.

என்னைக் கவர்ந்த அம்சமெல்லாம் மனோகரன்தான். விமானப்படையில் சில வருடங்கள் பணியாற்றிவிட்டு ஊருக்கு வந்துவிட்டார். சரியான தொழில் எதுவும் அமையவில்லை. இவரும் சரியான பாதையில் பயணிக்கவில்லை.இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். உருப்படியான வருமானம் எதையாவது அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியவர் ஏதோ கைக்கு கிடைத்த தொழில்களையெல்லாம் முயற்சித்துவிட்டு கடைசியாக பால் வியாபாரம் தொடங்குகிறார். பால் வியாபாரம் என்றால் பெரிய அளவில் இல்லை. உள்ளூர் வியாபாரம். அதிலிருந்துதான் 99 கிலோமீட்டரில் ஃபில்டர் காபி கடையை ஆரம்பிக்கிறார்.

காபி கடையிலிருந்து சிறகு விரிகிறது.விரிவாக்கிக் கொண்டேயிருக்கிறார். இப்பொழுது பிரமாண்ட வியாபாரம். கிட்டத்தட்ட ஜீரோவிலிருந்து தொடங்கப்பட்ட பயணம் இது. எட்டிப்பிடிக்க முடியாத உயரம். இதே சாலையில்  மால் ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாலின் பட்ஜெட்டை இப்போதைக்கு வெளியில் சொல்லலாமா எனத் தெரியவில்லை. எனக்கு மூச்சு அடைத்தது.

'என்ன பிசினஸ் தொடங்கலாம்?' என்று கேட்கிறவர்கள் மனோகரன் மாதிரியான ஆட்களைத்தான் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே தொழில் தொடங்குகிறவர்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுவதில்லை. நமக்கு யார் வாடிக்கையாளர் என்று தெரிந்து அவர்களை நோக்கி காய்களை நகர்த்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

எவ்வளவு ஆரியபவன்களும்  வசந்தபவன்களும் மூடப்பட்டிருக்கின்றன என்று நமக்கு தெரியும்தானே? நல்ல பெயர் சம்பாதித்திருப்பார்கள். வியாபாரத்துக்கு உகந்த இடமாகவும் இருக்கும். ஆனாலும் கோட்டை விட்டிருப்பார்கள். தொடர்ந்து தம்மைப் புதுப்பித்துக் கொள்ளாத எந்த தொழிலும் நிலை பெற முடியாது. அது இந்தத் தொழிலாக இருந்தாலும் சரி. மனோகரன் மாதிரியானவர்கள் தொடர்ந்து தம்மை புதுப்பித்துக் கொள்கிறார்கள். ஐந்து வருடங்களில் உருமாறிவிடுகிறார்கள். 'எப்பொழுதும் புதுசு' என்பதுதான் ஈர்த்துக் கொண்டேயிருக்கிறது. அதுதான் தொழிலில் வெற்றி சூட்சமமே.   

மகத்துவம்

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் என்ற ஊர் பெயரை கேள்விப்பட்டிருக்கக் கூடும். ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவில்  ஒன்று இருக்கும் ஊர்.  அந்த மரக்காணம் பக்கத்தில் இருக்கும் நடுக்குப்பம் என்கிற கிராமத்தில் சில பெண்கள் சத்தமில்லாமல், அதே சமயம் மிக முக்கியமான செயலைச் செய்து கொண்டிருக்கிறார்கள். காடு மேடுகளில் தேடி அரிதினும் அரிதான தாவரங்களையும் மரங்களையும் தேடி எடுத்து நாற்றுக்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

'இதெல்லாம் அழிச்சிடுச்சே' என்று சொல்லப்படுகிற தாவரங்கள் இந்தப் பெண்மணிகளின் கண்களில் எப்படியோ பட்டுவிடும் போலிருக்கிறது. அவைகள் நாற்றுக்களாகிவிடுகின்றன. 'ஓவர் பில்ட்-அப்' என்று நினைக்கிறவர்கள் கட்டுரையின் இறுதியில் இருக்கும் பட்டியலை ஒரு முறை பார்த்துவிட்டு வரவும். அதில் எத்தனை தாவரங்களை நமக்குத் தெரியும் என்று கணக்குப் போட்டால் இந்த எளிய கிராமத்து பெண்களின் சாதனையின் மகத்துவம் புரியும்.

அரிதான வகை நாற்றுக்கள். 

நடுக்குப்பத்தில் மூன்று நான்கு பெண்கள் சேர்ந்து அன்னை மகளிர் சுயஉதவிக் குழு என்ற பெயரில் இயங்குகிறார்கள். செல்வி என்ற பெண்மணிதான்  அதில் முக்கியமானவர். நாங்கள் சென்றிருந்த போது அவருக்கு உதவியாக கங்கா, பவித்ரா என்ற இரண்டு பெண்கள் இருந்தார்கள். செல்விக்கும் கங்காவுக்கும் ஒவ்வொரு வகை தாவரம் குறித்தும் தெரிகிறது.


ஒவ்வொரு செடியைக் காட்டும் போதும் அதைச் சேகரித்த இடத்தையும் சொல்கிறார்கள். 'இது தேவதானப்பட்டியில இருந்து எடுத்து வந்தது' 'இது ஜவ்வாது மலைல கிடைச்சது' என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். எங்களுடன் இருந்த ஆனந்துக்கு வெகு சந்தோசம். ஆனந்த் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். மரங்களின் தகவல் சுரங்கம் அவர். இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். பெரும்பாலான மரங்களின் தாவரவியல் பெயரைச் சொல்லி அதன் இலை எப்படியிருக்கும், அதன் மலர்கள் எப்படி இருக்கும் என்று விவரிக்கிறார். அவர் படித்தது என்னவோ விமானவியல் துறை. அது பிழைப்புக்கு. ஆர்வத்துக்கு காடுகள். பள்ளிக்காலத்திலிருந்தே காடுகளுக்குள் சுற்றும் இளைஞர். வனங்கள் அமைப்பதில் அனுபவஸ்தர்.

'எவ்வளவு மரங்களை சேர்த்து வெச்சு இருக்காங்கண்ணா' என்றார். நாற்பத்தொன்பது வகை நாற்றுக்களை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கி கொண்டோம். விலை சற்று அதிகமாகத்தான் தெரியும். ஒரு நாற்று முப்பத்தைந்து ரூபாய் வரைக்கும் வருகிறது. ஆனால் வேறு எங்குமே இந்த வகை நாற்றுக்களைத்  தேடிப் பிடிக்க முடியவில்லை.

'விலையைக் குறைச்சுக்குங்கக்கா' என்றால்  'பொம்பளைங்க காட்டுக்குள்ளயும் மலை மேலயும் இதையெல்லாம் தேடுறது எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியும்ல' என்கிறார்கள். நிதர்சனமான உண்மை. அந்த உழைப்புக்கு ஏற்ற விலை.

கிளம்பும் போது 'நீங்க செய்யறது மிகப்பெரிய சேவை..எந்தக் காலத்திலேயும் இதை விட்டுடாதீங்க' என்றேன். அதை அவர்களிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. இந்தக் குழு மாதிரியானவர்கள் இல்லையென்றால் பல மரங்கள் அடையாளமற்றுப் போகவும் வாய்ப்பிருக்கிறது. அழிந்து போகவும் சாத்தியங்கள் இருக்கின்றன.

'நாங்க கடைசி வரைக்கும் செய்வோம்' என்றார் செல்வி.

புதுச்சேரியில் செயல்படும் ஆரோவில்லின் இடத்தை குத்தகைக்கு எடுத்து அந்த இடத்தில இந்தப் பெண்கள் நர்சரியை அமைத்திருக்கிறார்கள். பெயர்ப்பலகை கூடக் கிடையாது. ஆனாலும் செடிகளைத் தேடுகிறவர்கள் எப்படியாவது கண்டுபிடித்துவிடுகிறார்கள். 'அந்தக் குழுவினரிடம்தான் அரிதான செடிகள் இருக்கும்' என்ற நம்பிக்கையில் வருகிறார்கள். பொய்த்துப் போவதில்லை. இத்தகைய மனிதர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். பத்திரிக்கைகள் இந்தப் பெண்மணிகள் குறித்து வெளியுலகுக்கு எடுத்துச் சொல்லலாம். நம்மைப் போன்றவர்கள்  யாராவது நாற்றுக்களைத்  தேடுவது தெரிந்தால் நடுக்குப்பம் நர்சரியை தாராளமாகப் பரிந்துரை செய்யலாம்.

நடுக்குப்பம் நர்சரியிலிருந்து நாங்கள் வாங்கிய நாற்பதொன்பது  வகை நாற்றுக்கள் கீழே- 

வெயிலுக்கு தாக்குப் பிடித்து வளரும் நாட்டு வகை நாற்றுக்களாக மட்டும் எடுத்துக் கொண்டோம். இவற்றில் சில வகைகள் புதர்களாக அல்லது செடியாக மட்டுமே வளரும். அதுவும் அடர்வனத்தில் தேவைதான். மொத்தமாக ஆயிரம் நாற்றுக்களை வாங்கியிருக்கிறோம். அடர்வனத்துக்கு இன்னமும் ஆயிரம் நாற்றுக்கள் தேவை. புங்கன், வாகை மாதிரியான எளிதில் கிடைக்கும் வகைகளை வேறு பக்கம் வாங்கிக் கொள்ளலாம் என்று வந்துவிட்டோம். எப்படியும் எழுபது வகைகளுக்கும் குறையாமல் அடர்வனத்தில் இருக்கும். 
 1. பிராய்
 2. இடம்புரி (திருகு மரம்)
 3. ஒதியன்
 4. பேய் அத்தி
 5. பச்சை கனகாம்பரம் 
 6. நுணா
 7. நழுவை 
 8. கடுக்காய்
 9. அழிஞ்சல்
 10. காட்டு எலுமிச்சை 
 11. வெண் சீத்தா
 12. பாய் மொண்ணை 
 13. நொச்சி 
 14. பாவட்டம்
 15. வெப்பாலை 
 16. எட்டி
 17. இரும்புளி
 18. இலந்தை
 19. மா
 20. வன்னி
 21. இங்க் மரம் (இது வட்டார பெயர். சரியான பெயர் தெரியவில்லை)
 22. நரிவிலி
 23. தரணி
 24. கடல் ஆத்தி
 25. இருவாட்சி
 26. ஆத்தி
 27. வெல் விளா (காட்டுபாட்சி)
 28. வெண்ணாந்தை
 29. வில்வம்
 30. நீர் அடம்பை
 31. பூந்திக் கொட்டை (சோப் நட்)
 32. குகமதி
 33. வீரா
 34. முறுக்கன்
 35. காட்டு கறிவேப்பிலை
 36. கருமரம்
 37. கன்னிரா 
 38. கல்யாண முருங்கை
 39. காட்டு நாரத்தை
 40. செருண்டி
 41. சூரக்காய்
 42. சிறுதும்புளி
 43. அத்தி
 44. அகல்யா 
 45. ஈர்குள்ளி
 46. பாலமரம் (மனில்காரா)
 47. பச்சைக் கிளுவை
 48. குமிழம்
 49. எலும்பொட்டி 
எவ்வளவு பெரிய மகத்தான சேவையை இந்த மண்ணுக்கும் சூழலுக்கும் செய்து வருகிறார்கள். அற்புதமான பசுமைப் போராளிகள் இவர்கள்.  பல்லாண்டு வாழட்டும்.

திருமதி. செல்வியின் தொடர்பு எண்:7548808332.

Apr 23, 2018

மரம்

அடர்வனம் அமைப்பதற்கான வேலைகளை மிகத் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறோம். குளத்து மண் சரியில்லை. ஒன்றரை அடிக்கு ஆழம் தோண்டினாலும் வெறும் பாறைதான். அடியில் வாழை மட்டைகளைப் போட்டு மேலாக நாற்பது லோடு செம்மண்ணைக் கொட்டியிருக்கிறோம். ஆழ்குழாய் கிணற்றில் மோட்டார் பொருத்தி நீர் பாய்ச்சத் தயாராக இருக்கிறோம். இனி சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும். ஆட்சியர் அப்பொழுதே அனுமதி கொடுத்துவிட்டார். எழுத்துப் பூர்வமாக அனுமதிக் கடிதம் எதுவும் தரவில்லை. ஆனால் அதை பெற்றுக் கொண்டுதான் அடுத்த வேலைகளை செய்ய வேண்டும். 

தலையும் வாலும் புரியாதவர்களுக்காக-

கோட்டுப்புள்ளாம்பாளையம் என்ற கிராமத்தின் குளத்தை தூர் வாரினோம். சுமார் பதினைந்தாயிரம் லோடு மண்ணை எடுத்த பிறகு குளம் வெகு ஆழமானது. நீரும் நிரம்பியது. பக்கத்திலேயே ஏதாவது செய்யலாம் என்று அரசிடம் அனுமதி வாங்கி இருபத்து நான்கு சென்ட் இடத்தில அடர்வனம் அமைக்கிறோம். அடர்வனம் என்பது ஜப்பானிய முறை. வெகு நெருக்கமாக மரங்களை நட்டு அமைக்கப்படும் வனம். இருபத்து நான்கு சென்ட் இடத்தில இரண்டாயிரம் மரங்களை நடுவதாகத் திட்டம்.

அதற்கான ஏற்பாடுகள்தான் முதல் பத்தியில் சொன்னது. ஓர் அதிகாரி வந்து பார்த்துவிட்டு 'இப்போ இருக்கிற அதிகாரிகள் சரின்னு சொல்லிட்டாங்க..நாளைக்கு புதுசா வர்ற பஞ்சாயத்து பிரசிடெண்ட் மரத்தை வெட்டுறோம்ன்னு தீர்மானம் போட்டா எப்படி தடுப்பீங்க' என்று கேட்டார். சரியான கேள்வி. நம்மவர்கள் செய்தாலும் செய்வார்கள். அந்தச் சமயத்தில் தடுக்க வேண்டுமானால் தண்டவாளத்தில்தான் தலை வைக்க வேண்டும். அதனால் ஆட்சியரைச் சந்தித்து கடிதம் கேட்கவிருக்கிறோம். 

அது ஒரு பக்கம். 

இன்னொரு பக்கம் நாற்றுக்களைத் துழாவிப் கொண்டிருக்கிறோம். இரண்டாயிரம் நாற்றுகளையும்  நாட்டு மரங்களாக வேண்டும். இந்த மண்ணுக்குரிய மரங்கள்; அழியும் தருவாயில் இருக்கும் மரங்கள் எனத் தேடித் பிடித்து நட்டுக் காப்பாற்றிவிட்டால் போதும். அடுத்த தலைமுறைக்கு கொடுத்த மாதிரி இருக்கும். விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும். ஆனால் நாற்றுகள்தான் இல்லை.

நண்பர் ஜெயராஜ் மரக்காணம் பக்கத்தில் தேடிக் கொண்டிருக்கிறார். நிசப்தம் தளத்தை தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்கு ஜெயராஜ் பற்றித் தெரிந்திருக்கும். சென்னை, கடலூர் வெள்ளத்தின் போது நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் செய்யப்பட்ட பணிகளுக்கு தூணாக இருந்தவர். பொருட்களை வாங்குவதில் தொடங்கி பிரித்து, பொட்டலம் கட்டி, ஸ்டிக்கர் ராஜாக்களின் கண்களில் மண்ணைத் தூவி பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எடுத்துச் சென்று விநியோகிப்பது வரைக்கும் அத்தனைக்கும் ஜெயராஜும் அவரது அணியும்தான் காரணம். லேசுப்பட்ட காரியமில்லை. 

அடர்வனம் திட்டத்திலும் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அவரும் பாவாவும் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசனும் செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் ஒரு முறை தேடித் பார்த்து இருக்கும் செடிகளின் எண்ணிக்கை, விலை ஆகியவற்றின் பட்டியல் தயாரித்துவிட்டார்கள். ஆனால் அது போதாது. ஒவ்வொரு வகையிலும் அதிகபட்சம் நாற்பது செடிகள் வைக்கலாம். அப்படியென்றால் ஐம்பது அல்லது அறுபது வகையாவது கிடைக்க வேண்டும். இப்பொழுது முப்பத்தைந்து வகை மரங்களைத்தான் கண்டறிந்திருக்கின்றோம். 

ஜெயராஜுடன் சேர்ந்து செடிகளை வாங்க வேண்டும். ஆனந்த் பொறியியல் முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர். விவசாயத்தில் ஆர்வமிக்கவர். ஏற்கனவே ஒரு அடர்வனத்தை வெற்றிகரமாக அமைத்தவர். எனக்கும் ஜெயராஜூவுக்கும் மரங்களைப் பற்றி எதுவும் தெரியாது. 'நீங்க வர முடியுமா?' என்று கேட்டேன். 'வர்றங்கண்ணா' என்று சொல்லியிருக்கிறார்.  மரங்கள் குறித்த அவரது அறிவு ஆச்சரியப்படுத்துகிறது. அருணாச்சலம் இன்னொரு ஆலோசகர். நாங்கள் மூவருமாகச் சேர்ந்து இந்த வாரம் மரக்காணம் பக்கத்தில் செடிகளைத் தேடப் போகிறோம்.

அருணாச்சலம் எங்களின் இன்னொரு ஆலோசகர். அதே போல மாவட்ட வன அலுவலர் பிரபாகரனைச் சந்திக்க பழனிசாமியும், கணேசமூர்த்தியும் இந்த வேகாத வெயிலில் பைக்கிலேயே அறுபது கிலோமீட்டர் தூரம் வரைக்கும் செல்கிறார்கள். நினைத்தாலே மண்டை காய்கிறது. திங்கட்கிழமை அதுவுமாக சொந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு இந்த வெக்கையில் அலைய வேண்டும் என்று அவர்களுக்கு தலையெழுத்தா என்ன? 'உங்களை சிரமப்படுத்துறேன்' என்று சொன்னால் 'நீங்க இப்படிச் சொல்வதுதான் சிரமப் படுத்துகிறது' என்கிறார்கள். 

அடர்வனம் அமைப்பது என்பது ஆரம்பத்தில் எளிமையான காரியமாகத் தெரிந்தது. ஆனால் மிகக் கடுமையான உழைப்பைக் கோரும் செயல் இது. நாற்றுக்களைச் சேகரித்துவிட்டால் அக்னி நட்சத்திரம் முடிந்தவுடன் நட்டுவிடலாம். எப்பொழுதும் சொல்வது போல உண்மையிலேயே ஏகப்பட்டவர்களின் உழைப்பு இருக்கிறது. 

'உனக்கு எத்தனை மரங்கள் தெரியும்?' என்று ஒரு பேராசிரியர் கேட்டார். இருபத்தைந்து மரங்களின் பெயர்களைச் சொல்லலாம். அவ்வளவுதான் அடையாளமும் தெரியும். அதற்கு மேல் தெரிய வாய்ப்பில்லை. நாட்டு மரங்களின் வகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். பல மரங்களின் பெயரை இப்பொழுதான் கேள்விப்படுகிறேன். வாழ்நாளில் ஐநூறு வகை மரங்களையாவது அடையாளப்படுத்துகிற அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  அதைக் கூடாது தெரிந்து கொள்ளவில்லையென்றால் 'இயற்கை மீது ஆர்வம்' என்று சொல்வதற்கே அர்த்தமில்லை. வெறுமனே உடான்ஸாகத்தான் இருக்கும். 
 1. புளி
 2. புங்கை
 3. புன்னை
 4. ஆலம்
 5. அரசு
 6. ஒதியன்
 7. கொன்றை
 8. பின்றை
 9. நுணா
 10. வாகை
 11. பூவரசு
 12. கருவேலம்
 13. கருவேப்பிலை
 14. வேம்பு
 15. நாவல்
 16. தேக்கு
 17. மா
 18. பலா
 19. தென்னை
 20. பனை
 21. நாகலிங்கம்
 22. ஆச்சா
 23. நெல்லி
 24. உசில்
 25. வேங்கை
 26. மருதம்
 27. தடசு
 28. இலுப்பை
 29. தோதகத்தி
 30. வன்னி
 31. குமிழ்
 32. கடுக்காய்
 33. தாண்டி
 34. விளா
 35. அத்தி
 36. தாழை
 37. அகில்
 38. இலவம்
 39. தேவதாரு
 40. கடம்பம்
 41. சால்
 42. செண்பகம்
 43. பலாசு (புரசு)
 44. காட்டாத்தி
 45. இருவாட்சி
 46. மாவிலிங்கம்
 47. குடைவேலம்
 48. அகத்தி
 49. வில்வம்
 50. எட்டி
 51. தும்பை
 52. இலந்தை
 53. கடுக்காய்
 54. கிளுவை
 55. கருங்காலி
 56. குருந்த
 57. கோங்கு
 58. நாரத்தை
 59. தில்லை
 60. தேற்றா 
 61. பராய்
 62. பன்றீர்
 63. பாதிரி
 64. பாலை 
 65. மகிழம்
 66. மூங்கில்   
 67. பப்பாளி
மேற்சொன்ன மர நாற்றுக்கள் எங்கேயாவது இருந்து (ஓரடிக்கு மேலான உயரம் இருந்தால் உசிதம்) தெரியப்படுத்தினால் பேருதவியாக இருக்கும். பாறை மண் என்பதால் சிறுசெடிகள் மேலே வருவது சிரமம் என்கிறார்கள்.  அதனால் சற்று வளர்ந்த செடிகளாகத் தேடுகிறோம். பட்டியலில் இருப்பது தவிர வேறு எந்த நாட்டு வகை மரங்கள் இருந்தாலும் தெரியப்படுத்தவும். எப்படி பெற்றுக் கொள்வது என்று பிறகு முடிவு செய்து கொள்ளலாம். ஒரு அடர்வனத்தை அமைந்துவிட்டால் போதும். எந்தச் செடி எங்கே கிடைக்கும் என்பதில் ஆரம்பித்து நிலத்தை தயார் செய்வது வரை எல்லாவற்றையும் ஆவணப்படுத்திவிடுவேன். யார் வேண்டுமானலும் அமைக்கும்படியான ஆவணமாக அது இருக்க வேண்டும். 

வர்றீங்களா பாஸ்?

ஒட்டன்சத்திரத்தில் இருபத்தெட்டாம் தேதி சந்திக்கிறோம். 

சிறப்பு கவனம் கோரும் குழந்தைகளுக்கான நிகழ்வை ஒட்டன்சத்திரத்தில் நடத்த விரும்புகிறோம் என்றும் அதற்கு அனுமதி வேண்டும் என்றும் கோரி கடந்த வாரம் அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களுக்கு ஒரு சந்தேகம். கடந்த வருடம் இப்படித்தான் யாரோ வந்து கேட்டார்களாம். அனுமதி கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளின் விவரங்களை எல்லாம் சேகரித்து எங்கயோ அனுப்பியிருக்கிறார்கள். 'அவங்க காசு வசூலிக்க எங்க குழந்தைகளைப் பயன்படுத்திட்டாங்க' என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படியான என்.ஜி.ஓக்கள் நிறைய இருக்கின்றன.

பெங்களூரில் ஒருவர் இருக்கிறார். ஸ்கார்பியோவில்தான் சுற்றுவார். பின்பக்கமாக தமது அறக்கட்டளையின் பெயரை எழுதி வைத்திருப்பார். வருமானத்துக்கு என்று தனியாக வேலை எதுவுமில்லை. இதுதான் வருமானமே. வருடம் ஒரு முறை படம் எடுத்து அனுப்பினால் போதும் அந்த வருடத்துக்கான பணம் வந்துவிடும்' என்று சொன்னார்கள். நீதானா அது என்று கேட்காதீர்கள். அறக்கட்டளைக்கு லெட்டர் பேடே இப்பொழுதுதான் அடித்து வைத்தேன்.  அப்புறம் சந்தேகப்படாமல் என்ன செய்வார்கள்? நம்மையும் சேர்த்துதான் சந்தேகப்படுவார்கள். 

பள்ளிக் கல்வித்துறையில் அனுமதியளித்துவிட்டார்கள். திருமண மண்டபத்துக்கு வாடகை, உணவு, ஐஸ்கிரீம், குழந்தைகளுக்கு  என எல்லா ஏற்பாடுகளையும் விக்னேஷ்வரனும் அவரது குழுவினரும் செய்திருக்கிறார்கள். 'இந்த முறை உணவுக்கான தொகையை நான் தரட்டுமா' என்று சிலர் கேட்டார்கள். இப்படி கேட்கிற மனிதர்கள் இருக்கும் வரைக்கும் எவ்வளவு பெரிய காரியத்தையும் செய்யலாம். ஆனால் உள்ளூர்வாசிகள் ஆளாளுக்கு ஒரு செலவினை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பணம் எதுவும் தேவைப்படாது. 

கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் நிகழ்ச்சியில் குழந்தைகளை ஏதேனும் வகையில் மகிழ்ச்சிப்படுத்த இயலுமா என்று மட்டும் யோசித்தால் போதும். உணவு பரிமாறலாம், குழந்தைகளை அமர வைப்பதில், ஒருங்கிணைப்பதில் உதவலாம் அல்லது வெறுமனே ரசிக்கலாம்.

நன்கொடை எதுவும் வேண்டாம். வெறும் கையை வீசிக் கொண்டு வரலாம். 

பூபதிராஜ் பாண்டிச்சேரியிலிருந்து வருகிறார். ராமராஜ் கோவையிலிருந்து வருகிறார். இருவரும் கதை சொல்லிகள். தம்பிச்சோழனும் சென்னையிலிருந்து வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவரும் கதை சொல்லித்தான். 'அடுத்த முறை நான் செய்யறேன்..இந்த முறை சும்மா வேடிக்கை பார்க்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார். முடிந்தால் கையைப் பிடித்து உள்ளே இழுத்துவிடலாம் என்றிருக்கிறேன். 

'குழந்தைகளின் சந்தோஷத்தில் பங்கெடுக்க வேண்டும்' என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வேறு எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியதில்லை. மூன்று மணி நேரம் அந்தக் குழந்தைகளை உற்சாகமூட்டினால் போதும். சில பெற்றோர்கள் தமது குழந்தைகளின் சேட்டைகளால் கோபமடைவார்கள். அவர்களை 'அடிக்காதீங்க' என்று தடுத்தால் போதும். 'எங்க சிரி பார்க்கலாம்' என்று அந்தக் குழந்தையைச் சிரிக்க வைத்தால் போதும். இப்படியாக குட்டி குட்டி போதும்.

கடந்த முறை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார்கள். கூடுதல் செலவு அவர்களுக்கு. ஒட்டன்சத்திரத்தில்  நிகழ்ச்சி நடக்கும் இடமானது திருமண மண்டபம்.  'அங்கேயே நான் குளித்துக் கொள்ளலாமா?' என்று கேட்டேன். சரி என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு அது போதும். பிரச்சினையில்லை. இரவில் பெங்களூரில் பேருந்து பிடித்தால் நேராக சேலம். அங்கே கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு ஐந்து மணிவாக்கில் திண்டுக்கல் வந்து இறங்கும்படி திட்டமிட்டுக் கொள்வேன். பையில் எப்பொழுதும் ஒரு நீளமான துண்டு இருக்கும். விரித்துப் போட்டால் அசதிக்கு அருமையாகத் தூக்கம் வரும். மற்றவர்களை இதையே செய்யச் சொல்ல முடியாது. ஆனால் அறை வசதி இருக்கிறது. குளிக்கும் இடவசதியும் இருக்கிறது. செளகரியப்படி முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.  

வரவு செலவு உட்பட எதிலும் நான் தலையிடவில்லை. உள்ளூர் அணிதான் மொத்த ஒருங்கிணைப்பையும் செய்கின்றனர். விக்னேஸ்வரன் அவ்வப்பொழுது அலைபேசியில் ஆலோசனை கேட்கிறார். சொல்வதோடு சரி. 'அவங்ககிட்ட நீங்க பேசறீங்களா?' என்பார். இத்தகைய செயல்களைச் செய்யும் பொது ஒற்றை தொடர்புப் புள்ளி இருக்க வேண்டும். அனைத்து தகவல்களும் அவர் வழியாகவே பரிமாறினால்தான் குழப்பங்கள் வராது. நம்பியூர் நிகழ்ச்சிக்கு ஆசிரியர் இளங்கோ போல. ஒட்டன்சத்திரத்துக்கு விக்னேஷ். 

மேலதிக விவரங்களுக்கு அவரைத் தொடர்பு கொள்ளுங்கள். 

அங்கேயிருந்து பழனி மலை முப்பது கிலோமீட்டர்தான். அந்தக் காலத்தில் கொங்கு நாட்டின் தென் எல்லை அது. வடக்கே பெரும்பாலை. மேற்கே வெள்ளியங்கிரி. கிழக்கில் குளித்தலை. தெற்கில் பொதினி- பழனி. மதியம் நிகழ்ச்சி முடிந்தவுடன் முப்பாட்டன் முருகனை பார்த்து வரலாம் என்று திட்டம். 


நாள் : 28-04-2018 (காலை 9 மணி) 

இடம்:
K T திருமண மஹால்,
குழந்தை வேலப்பர் கோயில் அருகில்,
பழனி ரோடு,
ஒட்டன்சத்திரம்.

விக்னேஷ்வரன் - 9994644558/7667744558

ஒட்டன்சத்திரத்தில் சந்திப்போம்!

Apr 20, 2018

நீதான் காரணம்

வணக்கம். என் பெயர் கிரிதரன். ஒராண்டுக்கு முன்பாகப் பொறியியல் படிப்பை முடித்த வேலையுள்ள பட்டதாரி. 'மசால் தோசை 38 ரூபாய்' எனும் உங்கள் புத்தகத்தை, “யாரோ மணிகண்டன்னு எழுத்திருக்காருடா. படிச்சுப் பாரு, நல்லா இருக்கு இயல்பா” என்று என் தந்தை கொடுத்தபோதுதான் உங்களது மானசீக அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு ‘நிசப்தம்’ தளத்தைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். தங்களது கல்விப்பணி மற்றும் சமூகப்பணிகள் ('தங்களது' என்று சொன்னால் நீங்கள் “ஊர்கூடி இழுத்துத்தான் நிசப்தம் எனும் தேர் நகர்கிறது” என்று சொல்லிவிடுவீர்கள்) என்னை ஆச்சரியப்படவைக்கத் தவறியதேயில்லை.

'லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்' வாசித்த பின்னர் நான் உங்களுக்கு அனுப்பிய பத்தியைப் படித்துவிட்டு நீங்கள் பதில் மின்னஞ்சல் அனுப்பியது இன்னமும் நினைவிலிருக்கிறது. “ஜீவகரிகாலனுக்கும் இதை அனுப்பி வைக்கிரேன். அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்” என்று சொல்லியிருந்தீர்கள்.

கிண்டி பொறியியல் கல்லூரியில் (அண்ணா பல்கலைக்கழகம் என்று சொன்னால் தான் பலருக்குத் தெரியும்) இயந்திரப் பொறியியல் படித்துப் பின் ஒரு மென்பொருள் ஸ்டார்ட்-அப்பில் ஒரு வருடம் ‘சேல்ஸ்’ வேலை பார்த்துவிட்டு இப்போது வேலையை விட்டுவிட்டேன் (பதற வேண்டாம். வேலை கேட்டு இதை எழுதவில்லை. தயவுகூர்ந்து மேலே படிக்கவும்).

கல்லூரியில் படிக்கும்போதே சூர்யா நகர் எனும் பிற்படுத்தப்பட்ட பகுதியின் குழந்தைகளிடம் உரையாடவும், அவர்களுக்கு மாலை வகுப்பெடுக்கவும் வாய்ப்பு கிட்டியது. அது கல்வி, கற்றல் தொடர்பான சில மாற்றங்களை என்னுள் விதைத்ததோடு, அது தொடர்பாக ஏதேனும் செய்ய வேண்டும், களப்பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலையும் தந்தது. எனினும், நடுத்தர வர்க்கத்திற்கே உரிய குழப்ப மனநிலையுடன் நிறுவன வேலையைத் தேர்ந்தெடுத்தேன்.

அங்கு மேலாளரின் குடைச்சல்கள் தாங்க முடியாத அளவிற்கு இருந்தது என்பது ஒருபுறம் உண்மை எனினும், அது ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தியது. குடிமைப்பணித் தேர்வுகள் எழுதலாம் என்ற முடிவுடன் இருந்த (இருக்கும்) எனக்கு ‘பப்ளிக் பாலிசி’ குறித்த சில தகவல்கள் நண்பர் ஒருவர் மூலமாகக் கிடைத்தது. அது தொடர்பான சில ‘ஃபெல்லொஷிப்’களுக்கு விண்ணப்பித்தேன்.

தற்போது ‘டீச் ஃபார் இந்தியா’ அமைப்புடன் இரு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வேறு சில விண்ணப்பங்கள் தொடர்பான இறுதி முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

இவ்வளவு பீற்றலும் உங்களுக்கு நன்றி சொல்லத்தான். மதில் மேல் பூனையாய்த் தைரியமான முடிவெடுக்கத் திராணியற்று இருந்த எனக்குத் தங்களது பல பதிவுகள் நிதர்சனத்தை வெளிக்காட்டியிருகின்றன. கல்வித்துறை, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் சிறிய அளவிலான மாற்றத்தையேனும் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு உந்துதலை ஏற்படுத்தின.

நல்ல காசு சம்பாதித்துக்கொண்டு ஏ.சி. அலுவலகத்தில், மூன்று வேளை உணவுடன், மகிழுந்தில் சொகுசான பயண வசதிகளுடன் இருந்திருக்கலாம்தான். ஆனால், நான் கற்ற கல்விக்கான அர்த்தம் அதுவாக இருக்காது என்று முழுமையாக நம்புகிறேன். அந்நம்பிக்கைக்கு நீங்களும் ஒரு காரணம். வீட்டில் சொன்னபோது சற்றே தயங்கிய பெற்றோர், “சரி ஒரு ரெண்டு வருஷம் பாப்போம் என்னதான் பண்றான்னு” என்ற ரீதியில் விட்டிருக்கிறார்கள். அதற்குள், குடிமைப்பணித் தேர்வுகளையோ அல்லது இந்த ‘ஃபெல்லொஷிப்’ முடிந்து அது தொடர்பான பிற வாய்ப்புகளையோ ஒரு கை பார்த்து விட முடியும் என்ற ஒரு அனாமத்தான தைரியம் வந்திருக்கிறது.

அனைத்திற்கும் நன்றி. பெங்களூருகு வந்து உங்களை நேரில் பார்ப்பதாகத்தான் திட்டம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அதனால் இம்மின்னஞ்சல். கூடிய விரைவில் உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற ஆவலாக உள்ளேன்.

நன்றி.

அன்புடன்,
கிரிதரன்.

உற்சாகமூட்டும்படியாகவோ அல்லது பதற்றம் அடையச் செய்யும்படியாகவோ மின்னஞ்சல் எதுவும் வந்தால் அதை வேணிக்கு அனுப்பி வைப்பேன். இந்தக் கடிதம் இரண்டுமானது. என்னைவிடவும் நீங்கள் பத்து அல்லது பனிரெண்டு வயது குறைவானவராக இருக்கக் கூடும். உங்கள் வயதில் எனக்கொரு தம்பி இருந்து அவன் இந்த முடிவை எடுத்திருந்தால் என்னுடைய எதிர்வினை என்னவாக இருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன். 

நீங்கள் குறிப்பிடும் ஏ.சி அறையில் அமர்ந்து கொண்டு, மூன்று வேளை உணவை உண்டு, நல்ல காசு சம்பாதித்தபடியேதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஓரளவுக்கு நிலையான வாழ்க்கை அமைந்திருக்கிறது. கிடைக்கும் நேரத்தில்தான் சமூகத்துக்கு, அடுத்தவர்களுக்கு என்று ஒதுக்குகிறேன். 'உங்களை பின் தொடர்கிறேன்' என்று யார் சொன்னாலும் இதைத்தான் தெளிவாகச் சொல்கிறேன். நாம் நிலையான இடத்தில் இருக்க வேண்டும். ஓரளவுக்கேனும் பொருளாதாரச் சுதந்திரம் இருக்க வேண்டும். குடும்பம் வலுவானதாக இருக்க வேண்டும். அதன் பிறகு நாம் யாருக்கு வேண்டுமானாலும் உதவலாம். 

இந்தச் சமூகம் மிகுந்த சுயநலமிக்கது. 'அவனாகவே  தேடி வரட்டும்' என்றுதான் எதிர்பார்க்கும். திருப்பித் தரும் என்றெல்லாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. நாம் வீழ்ந்துகிடந்தாலும் கண்டுகொள்ளாமல் அது தன் போக்கில் நடப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதே சமூகத்தில்தான் எந்தவிதமான ஆதரவுமில்லாத பல்லாயிரம் மனிதர்கள் வாழ்கிறார்கள். வாழ்வு தரும் உச்சபட்ச வலியுடன் இதே சமூகத்தில் எண்ணற்றவர்கள் நைந்து கொண்டிருக்கிறார்கள். யாரிடம் கேட்பது என்பது கூடாது தெரியாத எளியவர்களை அறிந்து அறியாமலும் நாம் தினசரி கடந்து கொண்டேயிருக்கிறோம். இவர்களுக்கு நாம் கை நீட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் அதற்குமுன் நம் கால்களை வலுவாக பதித்துக் கொள்ள வேண்டும். 

எதற்காகச் சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். 

சமீபத்தில் மட்டும் மூன்றாவது ஆள் நீங்கள். மணிவண்ணன் என்றொரு தம்பி வீட்டில் வந்து சந்தித்துவிட்டு 'இனி சிவில் சர்வீஸ் படிக்கப் போறேண்ணா..இந்த முடிவுக்கு உங்க எழுத்து ஒரு காரணம்..' என்று ஐடி வேலையை விட்டுவிட்டுச் சென்றிருந்தார். அவரைப் பற்றி எழுதி இருந்தேன். அதன் பிறகு ஒரு பெண் இதை சொன்னார். இப்பொழுது நீங்கள். 

நாம் இன்னொருவருக்கு உந்துசக்தியாக இருப்பது மிகப்பெரிய உற்சாகம். எந்தக் கணத்தில் எந்த வரி யாரைத் தூண்டும் என்று தெரியாது. தங்களின் இந்தக் கடிதத்தை பிரசுரம் செய்ய விரும்புகிறேன். இதன் வழியாக பொதுவாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டும்.

படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கிற தருணம். உங்களை போலவே உங்கள் குடும்பத்துக்கும் சில கனவுகள் இருக்கும். இந்தத் தருணத்தில் எடுக்கும் முடிவுதான் மிச்சமிருக்கும் மொத்த வாழ்க்கைக்குமான அடிநாதமாக இருக்கும். இப்படியொரு துணிச்சலான முடிவை எடுத்துவிட்டு 'எல்லாவற்றுக்கும் காரணம் நீதான்' என்று சொல்லும் போது பதற்றப்படுவது இயல்புதானே?

என்னுடைய பதற்றம் ஒரு பக்கம் இருக்கட்டும். 

என் தம்பியாக இருந்தாலும் இதைத்தான் சொல்வேன்-
சரியான தருணத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறீர்கள். சமூகம் என்பதை ஒதுக்கி வையுங்கள். அது மனதின் ஒரு மூலையில் ஓய்வில் இருக்கட்டும். முதலில் வெற்றியடைந்துவிடுங்கள். வேறு எதிலும் கவனம் இருக்க வேண்டாம். 'இது இல்லைன்னா அது' என்ற அலைவுறுதல்தான் நம்முடைய மிகப்பெரிய எதிரி. இருபது அல்லது முப்பது வயதுகளில் நாம் நிர்ணயிக்கும் இலக்கு என்பது  'இது மட்டும்தான்' என்றிருக்க வேண்டும். ஒற்றை இலக்கு. அப்பொழுதான் வெறியெடுத்து ஓடுவோம். இது கிடைக்காவிட்டால் இன்னொன்று இருக்கிறது என்ற சூழல் அமைந்தால் நம்முடைய வேகம் மட்டுப்பட்டுவிடும். அதற்கு வாய்ப்பே உருவாகக் கூடாது. வேகம் மட்டும் குறையவே கூடாது. 

குடிமைப்பணித் தேர்வுகளையோ அல்லது இந்த ‘ஃபெல்லொஷிப்’ முடிந்து அது தொடர்பான பிற வாய்ப்புகளையோ - என்ற வரியை நீங்கள் திருத்த வேண்டும். ஒற்றை இலக்கை நிர்ணயிப்பது மிக அவசியம். அப்படி நிர்ணயித்துக் கொள்ளுங்கள். 

அதன் பிறகு திரும்பிப் பார்க்க எதுவுமில்லை. கடுமையான உழைப்பைச் செலுத்துங்கள். நம்முடன் போட்டியிடும் அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கும். யாரும் நம்மைவிட உயர்ந்தவர்கள் இல்லை. அது நினைவில் இருக்கட்டும். கவனத்தைக் குவித்து இலக்கை நோக்கி வெறியெடுத்து ஓடுங்கள். பெற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய குறியாக இருக்கட்டும். உங்களின் வெற்றி அவர்களை பெருமையடைச் செய்ய வேண்டும். அவர்கள் பூரிக்கட்டும்.  

நீங்கள் வெற்றியடைவீர்கள். அதன் பிறகு சொல்லுங்கள் 'நீதான் காரணம்' என. அந்தத் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன். 

மனப்பூர்வமான வாழ்த்துக்கள் கிரி. 

Apr 19, 2018

நிசப்தம் செயலி (App)

நிசப்தம் தளத்துக்கு இரண்டு App உண்டு. முதலாவது செயலியை சிவசுப்பிரமணியன் உருவாக்கிக் கொடுத்தார். இரண்டாவது சிவராஜ் உருவாக்கியது. ஒன்றை ஆயிரம் பேர் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறார்கள். சிவராஜ் உருவாக்கியதை எழுநூறு பேர் தரவிறக்கம் செய்து அதன் வழியாக தளத்தைப் படிக்கிறார்கள். 

மேலே இருக்கும் பத்தியை வாசிக்கும் போது 'பந்தா பண்ணுறான்' என்று தோன்றுகிறதா? கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வாசிக்கவும்.


நமக்கெல்லாம் ஒருவர் மெனக்கெட்டு வேலை செய்கிறார் என்றால் பந்தாவாக இருக்காதா? அதிலும் சிவராஜ் இருக்கிறாரே- இதுவரை மட்டும் செயலியை பதினெட்டு முறை அப்டேட் செய்திருக்கிறார். புதிது புதிதாக எதையாவது இணைத்துக் கொண்டேயிருக்கிறார். 

உண்மையிலேயே எனக்கு சந்தோசம். நெகிழ்ச்சியும் கூட. 

இதையே அவர் வணிகரீதியாக யாருக்காவது செய்து கொடுத்திருந்தால் பத்தாயிரம் ரூபாயாவது கொடுத்திருப்பார்கள். என்னைப் பற்றி தெரியாதா? எச்சில் கையில் காக்கா ஓட்டாத கஞ்சப்பிசினாரி. பைசா பலனில்லை அவருக்கு. ஆனாலும் தொடர்ந்து மெருகேற்றுகிறார்.

செயலியில் மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நிறத்தை மாற்றியமைக்கலாம். பிற தளங்களின் இணைப்பை உள்ளீடு செய்வதன் மூலமாக பிற வலைத்தளங்களையும் வாசிக்க முடியும். இது புதிய வசதி. இதைச் சொல்லி பரிசோதித்துப் பார்க்கச் சொன்னார். தொடர்ச்சியாக நான் வாசிக்கும் தளமென்றால் அது ஜெமோவின் தளம். உள்ளீடு செய்து பார்த்தேன். அது வேலை செய்யவில்லை. 'ஜெமோவின் தளம் வேர்ட்பிரஸ்..இப்போதைக்கு பிளாக்கர் அடிப்படையில் இயங்கும் தளங்களுக்கு மட்டுமே இந்த வசதி வேலை செய்யும்' என்றார். விரைவில் எல்லா தளங்களையும் வாசிப்பதற்கான வசதியைச் செய்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். 

அவர் செய்கிற உதவிக்கு நான் செய்யக் கூடிய ஒரே பிரதியுபகாரம் என்றால் இணைப்பை நிசப்தம் தளத்தில் கொடுப்பதுதான்.  தயவு செய்து டவுன்லோடு செய்து மானத்தைக் காப்பாற்றுங்கள். அவர் என்னைப் பற்றி என்னவோ ஏதோவென்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. டவுன்லோடு செய்தவர்களுக்கு கமுக்கமாக இருநூறு ரூபாய் அனுப்பி வைக்கிறேன் சொன்னால் மட்டும் நம்பவா போகிறீர்கள்? அதனால் வதந்திகளை நம்பாமல் தரவிறக்கம் செய்யவும்.


'நீங்க எழுதுவீங்கன்னு சொன்னாங்க..நான் படிச்சதே இல்ல' என்று யாராவது சொன்னால் 'ஆமாங்க..ஆப் கூட இருக்கு' என்று ஸீன் போட்டுவிடுகிறேன். அதுவும் மாமனார் வீட்டு சொந்தமாக இருந்தால் செம பந்தா. தமிழில் வலைப்பதிவுக்கென செயலி வைத்துக் கொண்டு பந்தா செய்கிற ஒரே ஆள் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா தான்.

விடமுடியுமா?

நிறயப் பேர் வாசிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். 
நன்றி சிவராஜ். 

நிசப்தம் செயலியை ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் பிளேஸ்டோரில் திறந்து 'அப்டேட்' என்று க்ளிக் செய்வதன் வழியாக புதிய செயலியாக மாற்றிக் கொள்ளலாம். இதுவரை தரவிறக்கம் செய்யாதவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளவும். தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு நிச்சயம் உதவும். 

கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். செயலியை தொடர்ந்து மெருகேற்ற சிவாவுக்கு உதவும். அல்டாப்பு செய்வதற்கு எனக்கும் உதவும்.

sivarajng@gmail.com

செயலிக்கான இணைப்பு:

தும்பி

'அண்ணா உங்களுக்கு அன்பளிப்பு கொடுக்கணும்...யார் கொடுத்துவிட்டாங்கன்னு சொல்ல மாட்டேன்' என்று மைவிழி சொன்ன போது குழப்பம்தான். பிறந்தநாள் அன்பளிப்பாக இருக்கும் என நினைத்தேன். நான்கு தும்பி இதழ்கள். இதழின் ஆசிரியர் சிவராஜ் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.  சிறு கூழாங்கல்லையும் கொடுத்து அனுப்பி இருந்தார். அவர் எல்லோருக்குமே கூழாங்கல்லைக் கொடுப்பாராம். 'குக்கூ' காட்டுப்பள்ளி பற்றி கேள்விப்பட்டிருக்கக் கூடும். சூழலியல் சார்ந்து இயங்கும் பள்ளி அது. அதை நிறுவியவர் சிவராஜ். குக்கூ பற்றியும் சிவராஜ் பற்றியும்  நிறைய எழுத வேண்டும். தனியாக எழுத வேண்டும்.


கடைசியாக வெளியான இதழில் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். குரங்கணி தீ விபத்து சமயத்தில் சென்னை ட்ரெக்கிங் க்ளப் பீட்டர் வான் ஹெய்ட் பற்றி எழுதி இருந்ததற்கான நன்றி. அந்தக் கட்டுரை மிகப் பரவலான கவனம் பெற்றிருந்தது. நிறையப் பேர் அது பற்றிப் பேசினார்கள். 

பீட்டர் மாதிரியான ஆட்களைப் பார்ப்பது அபூர்வம். பெங்களூரில் அவரைச் சந்திக்கையில் - பீட்டர் தலைமறைவாக இருந்த போது ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது பெங்களூரிலும் இருந்தார். காலைச் சிற்றுண்டிக்கு வந்திருந்தவரைப் பார்த்தேன். மிகச் சோர்வாக இருந்தார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். 

'நீங்க ஒரு விளக்கம் எழுதுங்க' என்றேன். சிரித்தார். 

'உங்களைப் பத்தி நிறைய தப்பா பேசறாங்க' என்றேன். 

'சரிதான்..ஆனா என்னைத் தெரிஞ்சவங்க தப்பா பேச மாட்டாங்க' என்றார். சத்தியவாக்கு அது. 

எல்லோருக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. விளக்கம் கொடுத்தால் மட்டும் இந்த உலகம் நம்பவா போகிறது? அவர் எந்த வெளிச்சத்தையும் விரும்புவதில்லை. கடந்த வாரம்தான் ஜாமீன் கிடைத்தது. இப்பொழுதும் கூட அவர் வாயே திறக்கவில்லை. அதற்கான அவசியம் இருப்பதாக அவர் நினைக்கவில்லை போலிருக்கிறது.

இந்த உலகம்  சில சமயங்களில் மனிதர்களைக் கொண்டாடித் தள்ளிவிடும். மறறொரு சமயத்தில் கண்டு கொள்ளவே கண்டு கொள்ளாது. பீட்டர் இப்பொழுது மீண்டும் காடு மேடு என்று சுற்றிக் கொண்டிருக்கக் கூடும்.  தம் இருப்பைக் காட்டிக் கொள்ளாத மனிதர்களை உலகம் மறந்துவிட்டு அது பாட்டுக்கு பரபரத்துக் கொண்டிருக்கிறது. 

அப்பொழுதே எழுதியிருக்கலாம். அவருக்கு பிணை கிடைத்திருக்கவில்லை. விவகாரத்தை பெரிதுபடுத்தியிருப்பார்கள். பீட்டருக்கு தாம் விரும்பும் வாழ்க்கை அமையட்டும்.

                                                                                  ***


தும்பி அட்டகாசமான சிறுவர் மாத இதழ். இதுவரை பதினான்கு இதழ்கள் வந்திருக்கின்றன. இதழின் உள்ளடக்கம் மிக எளிமையானது. சிறார்களுக்கான  ஒரு கதை- குறைந்தது பதினைந்து பக்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பக்கத்தையும்  கதைக்கு ஏற்ற ஓவியங்களால் நிரப்பியிருக்கிறார்கள். அந்தக் கதையின் ஆங்கில வடிவம் அடுத்த நான்கைந்து பக்கங்கள். பிறகு ஜெயமோகன், வண்ணதாசன் மாதிரியானவர்களின் சிறு கட்டுரையொன்று. அவ்வளவுதான் தும்பியின் உள்ளடக்கம். ஆனால் செதுக்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வடிவமைப்பு, அச்சாக்கம், காகிதத்தின் தரம் என அட்டகாசம்.

வாசிக்கப் பழகிய குழந்தைகளுக்கும் சரிப்பட்டு வரும். நாம் வாசித்துக் குழந்தைகளுக்குச் சொல்வதென்றாலும் பொருத்தமான இதழாக இருக்கும். 

இதழ் ஐம்பது ரூபாய். சற்று விலை அதிகம் என்பது போலத்தான் தெரியும். ஆனால் விலைக்கு ஏற்ற பணியாரம். ஒன்று அல்லது இரண்டு இதழ்கள் அனுப்புவார்களா என்று தெரியவில்லை. அழைத்துக் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால், அவர்களிடம் கைவசமிருந்தால் பழைய இதழ்களையும் வாங்கிவிடலாம். கோடை விடுமுறையில் இரண்டு நாட்களுக்கு ஓர் இதழ் என்று வாசித்தாலும் கூட உருப்படியான வேலையாக இருக்கும்.

'எந்நேரமும் டிவியை பார்க்கிறாங்க' என்பதுதான் குற்றச்சாட்டு. எப்படியாவது தொலைக்காட்சியை தொலைத்துவிடுங்கள். நாம் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. குழந்தைகளுக்கு அதுதான் மிகப்பெரிய விடுதலை. வானத்தைப் பார்க்கவும், பூமியில் விளையாடவும் அது மட்டும்தான் ஒரே வழி. இல்லையென்றால் கார்ட்டூன்களை மட்டுமே பார்த்து இந்த இரண்டு மாதங்களையும் வீணடித்துவிடுவார்கள். 

குழந்தைகள் வாசிப்பது மிக அவசியம். ஒவ்வொரு சொல்லும் அவர்களை யோசிக்கச் செய்யும். 'பெங்குவின் ஓடியது' என்று கண்கள் படிக்க பெங்குவின் எப்படி ஓடும் என்று மூளை கற்பனையான சித்திரத்தை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளும். ஒரு குழந்தையின் பெங்குவின் தங்க நிறத்தில் இருக்கக் கூடும். இன்னொரு குழந்தையின் பெங்குவின் பச்சை நிறத்தில் இருக்கக் கூடும். இப்படியான கட்டற்ற கற்பனை குழந்தைகளுக்கு வெகு தேவை. இதுதான் குழந்தைகளின் வளர்ச்சியில் மிக அவசியமானதும். தொலைக்காட்சி, கணினி போன்றவை அப்படியில்லை. 'பெங்குவின் இப்படித்தான் இருக்கும்...இப்படித்தான் நடக்கும்' என அறுதியிட்டுக் காட்டிவிடுகிறார்கள். குழந்தைகள் கற்பனைக் கொடி கட்டுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்துவிடுகிறது. 

குழந்தைகள் வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. வாசித்த கதையை நமக்கோ அல்லது சக குழந்தைகளுக்கோ சொல்லிக் காட்ட வேண்டும். 'நீ படிச்ச கதையைப் பத்தி ஒரு குறிப்பை எழுது' என்று சொல்லி அவர்களிடம் எழுதி வாங்கினால் இன்னமும் அருமை. இயலுமெனில் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து வார இறுதி நாட்களில் நாடகமாக்கலாம். கதையை அப்படியே நாடகமாக நடத்த வேண்டும் என்பதில்லை. பட்டி பார்த்து டிங்கரிங் செய்து நம் திறமையையும் காட்டலாம். கதையின் கதாபாத்திரங்களாக மாறி குழந்தைகள் நடிக்கும் போது அவர்களின் பன்முக ஆளுமை வலுப்பெறும். கதாபாத்திரங்களை உள்வாங்குவார்கள். வசனம் பேசுவதற்கான நினைவாற்றலைப் பயன்படுத்துவார்கள். நடிக்கும் போது மேடை பயம் குறையும். நிறையச் சொல்லலாம். 

ஒரு நாடகத்துக்கு நாம் உதவினால் அடுத்த நாடகத்தை அவர்களையே தயாரிக்கச் சொல்லி மேடையேற்றலாம்.  தும்பிகளை வாசித்த போது இதுதான் தோன்றியது. நான்கு குழந்தைகள் இருந்தால் போதும். உருப்படியாகச் செய்துவிடலாம். 

தும்பி அதற்கு நிச்சயமாக உதவக் கூடும்.

தும்பி சிறுவர் மாத இதழ்,
60/85. அய்யங்குளம் தெரு, திருவண்ணாமலை - 606601
மொபைல்: 9843870059
மின்னஞ்சல்: thumbigal@gmail.com

Apr 18, 2018

அநாகரிக அரசியல்

ஹெச். ராஜா, இந்தியாவை  ஆளும் கட்சியின் தேசியச்  செயலாளர். அந்தப் பொறுப்பில் இருக்கும் மனிதர் 'தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம்' என்று கனிமொழியையும் கருணாநிதியையும் நேரிடையாகத் தாக்கி டிவிட்டரில் எழுதுகிறார். காலையில் இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் அருவெறுப்பாக இருந்தது.

கள்ளக் குழந்தை என்னும் சொல் மிகக் கேவலமானது. 

பொதுவாக அரசியல் கட்சிகளின் கீழ்மட்ட ஆட்கள் அசிங்கமாகப் பேசுவார்கள். மேடைப் பேச்சாளர்கள் எதிர்கட்சியினரைக்  கேவலமாக வர்ணிப்பார்கள். மேல்மட்ட ஆட்கள் இதையெல்லாம் உள்ளூர ரசித்தாலும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார்கள். அப்படி மேல்மட்ட ஆட்கள் பேசாமல் இருக்கும் வரைதான் பொதுவெளியில் ஒரு கட்டுப்பாடு இருக்கும். மேல்மட்ட ஆளே இத்தகைய உரையாடல்களை ஆரம்பித்து வைத்தால் சாக்கடைதான் உருவாகும். இத்தகைய எந்த யோசனையுமில்லாமல் ஒரு கட்சியின் தேசியச் செயலாளர் என்ற பதவியில் இருப்பவரே இப்படி சில்லறைத்தனமாகப் பேசுவது கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் தூண்டி விடுவது போலாகாதா? அல்லது அதைத்தான் கட்சி விரும்புகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

அரசியல் விமர்சனம் என்பது வேறு. மக்களாட்சியில் அது அவரவருக்கான உரிமை. கருணாநிதியில் ஆரம்பித்து யாரை வேண்டுமானாலும் அவர்களது கொள்கைகள், செயல்பாடுகளின் அடிப்படியில் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்கான பதிலை கட்சிக்காரர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அடுத்தவர்கள் அதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தனிப்பட்ட வசைகள், ஒருவரின் பிறப்பு குறித்தான கொச்சையான விமர்சனங்களை யாராவது முன்வைக்கும் போது அதை பொதுமக்கள்  பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

இதுவரைக்குமான தமிழகத்தின் கடந்த கால அரசியல் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.  ஆனால் இப்பொழுது சற்று பண்பட்ட அரசியல் கண்ணில் படத் தொடங்கியிருக்கிறது.  இனியாவது நாகரிகமான, பண்புமிக்க அரசியல் களம் தமிழகத்தில் உருவாகும் என்று எதிர்பார்த்தால் அதை இவர்கள் விரும்பவே மாட்டார்கள் போலிருக்கிறது. 'ராஜா பிறப்பதற்கு பத்து மாதங்கள் முன்பாக அவரது ஊரான காரைக்குடியில் திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் தங்கியிருந்ததாக ஒரு கேள்வி' என திமுகவின் ஆர்.எஸ் பாரதி பெயரில் ஒரு அறிக்கை சுற்றியடிக்கிறது. திட்டத்தான் செய்வார்கள்.  சமூக ஊடகத்தில் விடுவார்களா? இதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று சமூக ஊடகத் தளங்களில் ஜெயலலிதா உட்பட ஒவ்வோர் அரசியல் தலைவரின் பிறப்பு குறித்தும் ஆளாளுக்கு வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

கதை முடிந்தது. நாகரிக அரசியலாவது ஒன்றாவது. 

ஒரு மனிதன் செய்யவே கூடாத இழிவான செயல்கள் என்று ஒரு பட்டியலைத் தயாரித்தால் அதில்  சக மனிதனின் பிறப்பை இழிவு செய்வது  என்பது நிச்சயம் இடம் பெறும்.  மனிதனாகப் பிறப்பெடுத்துவிட்ட எந்தவொரு மனிதனும் சமம்தான். அவனது பிறப்பின் அடிப்படையில்- அது சாதி, மதம் என்றாலும் சரி, பெற்றோர் சார்ந்ததாக இருந்தாலும் சரி-ஒருவனை சிறுமைப் படுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை. யாருக்கும் அருகதையுமில்லை. எந்த ரத்தம் எந்தத்   தலைமுறையில் கலந்தது என்று யாருக்குத் தெரியும்? இன்னொருவன் மீது சாணத்தை எடுத்து வீசுவதால் தம்மை புனிதனாக்கிக் கொள்ள முடியாது என்பது கூட மேதாவிகளுக்குத் தெரிவதில்லை. 

ஜெ- கருணாநிதி சகாப்தத்திற்குப் பிறகான அரசியல் களத்தில் இழிவான அரசியலுக்கான முதல் படியை ராஜா எடுத்து வைத்திருக்கிறார். இந்தத் தருணத்தில் இதனை வெறுமனே கீழ்த்தரமான விமர்சனமாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. நிர்மலா தேவியிடமிருந்து கவனத்தை திசை திரும்புவதற்கான செயலாகவும்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் திசை திருப்ப ஆயிரம் வழிகள் இருக்கின்றன ஐயா. அடுத்த தலைமுறைக்கான அரசியல் களம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதை அசிங்கப்படுத்தி தவறான பாதையில் மடை மாற்றிவிட வேண்டாம்.

'இவனுக்கு என்ன வந்தது? திமுகவுக்கு வக்காலத்து வாங்குகிறான்' என்று கேட்பதற்கு முன்பாக- இத்தகைய, மோசமான வசையை யாரை நோக்கி வீசினாலும் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். நம்முடைய அரசியல் சார்புகள், கொள்கைகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தேசிய செயலாளர் என்கிற அந்தஸ்தில் இருக்கும் ஒரு நபர் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் போது அதை வெறுமனே ட்ரெண்ட் ஆக்குவதோடு நில்லாமல் சகல தரப்பிலும் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.

ஊடகங்கள் இத்தகைய மனிதர்களின் முன்பாக மைக் நீட்டுவதை தவிர்த்தாலே இங்கே தேவையில்லாத சலம்பல்கள் குறையும். இங்கே பெரும்பாலான 'பலூன்களை' தலைவர்களாக்கி ஊடங்கள்தான் மேலே பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றன. இனியும் ஊடகங்கள் மாற வாய்ப்பில்லை. அவர்கள் இப்படியேதான் இருப்பார்கள். 

இன்றைக்கு இருப்பதைவிடவும் நாகரிகமான அரசியலை நோக்கி கட்சியையும் தமிழகத்தையும் நகர்த்த வேண்டிய பொறுப்பு நம் காலத்து அரசியல் நாயகர்களுக்கு இருக்கிறது. அவர்கள் தவறுகிற இடங்களில் குத்திக் கட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இருண்ட காலத்தை நோக்கி இழுத்து அநாகரிகமான அரசியலுக்கு வித்திடும் அரசியல் பிரமுகர்களை அடுத்த தலைமுறையினர் கட்சி பேதமில்லாமல் நிராகரிக்க வேண்டும்.

கட்சிகள், தலைவர்களை எல்லாம் தாண்டிய பொதுவான அரசியல் புரிதல் நமக்கு அவசியம். சக மனிதனை இழிவுபடுத்தாத, சமூகத்துக்கு எள்ளளவும் பயனளிக்காத இத்தகைய சில்லறைத்தனமான சலசலப்புகள் இல்லாத அரசியல் களத்தை நாம் உருவாக்க வேண்டிய தருணம் இது.  அறிவு சார்ந்து, சித்தாந்தங்கள் அடிப்படியில் வலுவான உரையாடலை நாம்தான் முன்னெடுக்க வேண்டும். அதற்கான பெரும்பலமாக சமூக ஊடகம் நம் கைவசமிருக்கிறது. இத்தகைய மனிதர்கள் சீந்தப்படாமல் விட்டாலே போதுமானது.

ஒட்டன்சத்திரத்தில்.


சிறப்புக் குழந்தைகளுக்கான  அடுத்த நிகழ்வை ஒட்டன்சத்திரத்தில் நடத்துகிறோம். இந்தக் கல்வியாண்டில் சோதனை முயற்சியாக ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துவிட்டு அடுத்தாண்டிலிருந்து தமிழகம் முழுக்கவும் பரவலாக பல ஊர்களிலும் செய்யலாம் என்பதுதான் திட்டம். திட்டமெல்லாம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் செயல்படுத்த ஆள்பலம் வேண்டும்.

கடந்த நிகழ்ச்சிக்கு விக்னேஸ்வரன் வந்திருந்தார். ஒட்டன் சத்திரத்திலிருந்து பைக்கிலேயே வந்திருந்தார். நூற்று முப்பது கிலோமீட்டராவது இருக்கக் கூடும். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது 'அடுத்தடுத்து செய்யணுங்க...யாராவது கூட நின்னா வேற வேற ஊர்ல செய்யலாம்' என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஆனால் இவ்வளவு சீக்கிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரே வாரத்தில் தம் ஊரில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த மையம் எங்கேயிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, பொறுப்பாளரிடம் பேசி, இடம் ஒன்றைத் தேர்வு செய்து என பல காரியங்களை முடித்துவிட்டார். அவ்வளவு சீக்கிரம் அவரால் ஏற்பாடுகளைச் செய்துவிட முடியாது என நினைத்திருந்தேன். இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கின்றன. இனி நாம் தயாரானால் போதும். கடந்த நிகழ்வுக்கு வந்திருந்த 'கதை சொல்லி' சதீஷ் வேறொரு நாடக நிகழ்வுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார். மற்றவர்களிடம் இன்னமும் பேசவில்லை. நாட்கள் இல்லை. ஆனால் பெரிய காரியமில்லை என நினைக்கிறேன்.

மனநலம் குன்றிய, மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் ஐம்பது முதல் அறுபது பேர் வரைக்கும் கலந்து கொள்வார்கள். நம்பியூரில் நடத்தியதை போலவே  காலையில் தொடங்கி மதியம் வரைக்கும் நிகழ்ச்சி நடக்கும். குழந்தைகளுக்கு கதை சொல்லுவது போக, அவர்களுக்கான நல்ல உணவு, ஐஸ்கிரீம், சாக்லேட், சிறு அன்பளிப்பு என அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமே நிகழ்வின் இலக்காக இருக்கும்.  


 

கடந்த நிகழ்வைப் போலவே மிகச் சிறப்பாக நடத்திவிட வேண்டும். 'இத்தகைய நிகழ்வுகளைப் பத்திரிக்கைகளில் வெளியிடச் செய்ய வேண்டும்' என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அப்பொழுது எனக்கும் அப்படிதான் தோன்றியது. பிறகு யோசித்தால் அவசியமில்லை என முடிவு செய்து கொண்டேன். சத்தமில்லாமல் அமைதியாக இத்தகைய காரியங்களைச் செய்வதில்தான் உண்மையான சந்தோசம் இருக்கிறது. ஆனால் இத்தகைய குழந்தைகளுக்காக சிறப்பு மையங்கள் ஒவ்வொரு ஒன்றியத்தில் செயல்படுகின்றன என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிய வேண்டும். கடந்த வாரத்தில் கூட ஒருவர் 'என் குழந்தையின் பிறந்தநாளுக்காக அன்னதானம் வழங்க விரும்புகிறேன்' என்றார். அன்னதானம் என்றால் செலவு தொகையைக் கொடுத்துவிட்டு வருவதில்லை. நாமே அத்தனை ஏற்பாடுகளையும் செய்து அந்தக் குழந்தைகளோடு சேர்ந்து குடும்பத்தோடு அமர்ந்து உண்டுவிட்டு வர வேண்டும். அந்தக் குழந்தைகள் உணவு உண்பதற்கு கூட அவ்வளவு சிரமப்படுவார்கள். அவர்களுக்கு நம்முடைய கருணையும் கண்ணீரும் அவசியமில்லை. 'நீங்களும் எங்களைப் போலவேதான்' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.  அதுதான் அந்தக் குழந்தைகளுக்கு நாம் செய்யக் கூடிய மிகப் பெரிய உபகாரம். 

அந்த நண்பர் தமது ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு மையத்தில் அப்படிதான் தமது குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு வந்து நிழற்படங்களை அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு வெகு சந்தோசம். குழந்தைகள் அதைவிடச் சந்தோஷப்பட்டிருப்பார்கள். அத்தனை குழந்தைகளுமே ஏழைக் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அந்தக் குழந்தைகளுக்கு திருப்தியான உணவைக் கொடுத்து மகிழ்ச்சிப் படுத்துவதைவிட பெரிய சந்தோசம் என்ன இருந்துவிட முடியும்?

கடந்த முறை கலந்து கொள்ள முடியாத நண்பர்கள் இந்த முறை ஏப்ரல் இருபத்தெட்டாம் தேதி ஒட்டன்சத்திரம் வந்துவிடுங்கள். அரை நேரம் இருந்துவிட்டு வரலாம். ஏன் அழைக்கிறேன் என்றால் விக்னேஷ்வரனைத்தான் சுட்டிக் காட்ட வேண்டும். மதுரையிலிருந்தோ தேனியிலிருந்தோ யாரேனும் வந்து 'நம்ம ஊரிலும் இப்படிச் செய்யலாமே' என்று நினைத்தால் அடுத்த மாதம் அங்கேயொரு நிகழ்வை ஏற்பாடு செய்துவிடலாம். அப்படியான தொடர்ச்சியான செயல்பாடு இது. ஆர்வமிருக்கும் ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டிய காரியமும் கூட. 

இந்த மாதிரியான செயல்பாடுகளின் போது தள்ளி நின்று பார்த்தால் கூட போதும். அதன் மனவெழுச்சியை வார்த்தைகளில் கொண்டு வர முடியும் எனத் தோன்றவில்லை. 

எந்தவொரு பொதுக்காரியத்தையும் செய்ய உள்ளூரில் ஒருவரின் துணை வேண்டும். இல்லையென்றால் சாத்தியமில்லை. விக்னேஷ்வரன் ஐடியா கேட்கிறார். அலைபேசியில் சொல்வதோடு சரி. களத்தில் ஒவ்வொரு காரியத்தையும் செய்து முடிக்கிறார். விக்னேஷ்வரன் மாதிரியானவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் கிடைத்தால் போதும். இன்னும் பல செயல்களைச் செய்ய முடியும்.

செய்வோம். 

இப்போதைக்கு தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள். முழுமையான விவரங்களை- அனைத்தும் உறுதி செய்யப்பட்டபிறகு இருபத்து மூன்றாம் தேதியன்று எழுதுகிறேன். 

நிழற்படங்கள்: திரு.சுந்தரகிருஷ்ணன் 

Apr 16, 2018

இப்போ வாடா பார்க்கலாம்

'உங்களுக்கு கன்னடம் தெரியுமா?' 

'அதை ஏன் கேட்குறீங்க...அதைப் பழகாம ஒருத்தன் கூடவும் சண்டை போட முடியறதில்லை' - இப்படித்தான் புலம்புவேன். டிராபிக் சிக்கனல்களில் யாராவது எரிச்சலைக் கிளப்புவார்கள். வடக்கத்திக்காரன் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டும் 'உனக்கு அறிவில்லையாடா' என்று கத்திவிட்டு அவன் பதில் சொல்வதற்குள்ளாக ஓடி வந்துவிடுவேன். அப்படியும் ஏமாந்திருக்கிறேன். கன்னடர்களில் சிலர் செக்கச் செவேலென  இருப்பார்கள். கொங்கணி பகுதிக்காரர்கள் மாதிரியான சிலரிடம் உணர்ச்சிவசப்பட்டு கத்திய பிறகு 'ஏன்னு பேக்கு' என்பார்கள்.

'அடங்கொன்னிமலையா நீ கன்னடமா' என்று அப்பொழுது நான் பம்முவதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். 

'இதெல்லாம் உனக்குத் தேவையா...இனிமேல் வாயை மூடிட்டு இரு' என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வதுண்டு. ஆனாலும் நமக்குள்ளும் ஒரு போராளி ஒளிந்து கொண்டிருக்கிறான் அல்லவா? சரியான லோலாலயத்தான். அவ்வப்பொழுது உணர்ச்சிவசப்பட்டு என்னை மாட்டிவிட்டுவிடுவான். எங்கள் அலுவலகம் இருக்கும் எம்.ஜி.சாலையில் மாநகராட்சியே குப்பைத் குப்பைத் தொட்டிகள் நிறைய வைத்திருக்கும். ஒரு பான்பராக் வாயன் கிழித்து வாயில் போட்டுக் கொண்டு பொட்டலத்தை கீழே போட்டான். ஐடி பட்டையை கழுத்தில் மாட்டி பார்ப்பதற்கு அப்பிராணியாகத்தான் இருந்தான். 

'பெரிய ஆபத்து இருக்காது' என்ற நம்பிக்கையில் 'கீழ போடுறீங்களே..குப்பைத் தொட்டியில் போடலாமே' என்றேன்.

'உன் வேலையைப் மட்டும் பாரு...f ***கிங் இடியட்' என்றான். சுருங்கிவிட்டது-முகம்தான். இங்கு யாருக்குமே அறிவுரை சொன்னால் சுள்ளென்று வந்துவிடுகிறது. 'நாம யாரு? எவ்ளோ படிச்சுட்டு இங்க வந்து பொட்டி தட்டிட்டு இருக்கோம்? நமக்குத் தெரியாத உலக நடப்பா?' என்று உள்ளுக்குள் இருக்கும் ஈகோவை சுரண்டி விட்ட மாதிரி ஆகிவிடுகிறது. பெண்களிடமும் திட்டு வாங்கியிருக்கிறேன். கோரமங்களா சோனி வேர்ல்டு சிக்கனலில் அவள் விடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தாள். அறிவுரை புண்ணாக்கை அவளிடம் தள்ளப் பார்த்தேன். இவனாவது நான்கு எழுத்து கெட்ட வார்த்தை. அந்தப் பெண் ஏழு எழுத்தில் திட்டிவிட்டு போனாள். ஜென்மத்துக்கும் மறக்காது. நம் முகத்தைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது என்று நொந்து போனேன்.  

ஒவ்வொரு ஆங்கிலக் கெட்ட வார்த்தையாக விரல் விட்டு எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்காமல் மேலே படியுங்கள்.

படித்தவர்கள் ஆங்கிலத்தில் திட்டுகிறார்கள் என்றால் படிக்காத முரடர்கள் வேறு மார்க்கம். கடந்த வாரத்தில் கூட பொம்மனஹள்ளியிலிருந்து கூட்லு செல்லும் சர்வீஸ் சாலையில் இப்படித்தான். ஒருவர் ஹெல்மெட் போடாமல் செல்போனில் பேசியபடியே நடுச் சாலையில் சென்று கொண்டிருந்தார். 'பாவம்..மனுஷன் கீழே விழுந்தால் என்னவாகும்' என்ற எண்ணத்தில் அவரை முந்துவது போல முந்தி கையை நீட்டி மெல்லத் தட்டி 'ஓரமா நின்னு பேசுங்க' என்று சைகை காட்டினேன். தொட்டுச் சொல்லி இருக்கக் கூடாது போல.  தீக்குச்சியை பற்ற வைத்து வீசிவிட்டேன். 

'டேய் டேய்..நில்லுடா' என்று கன்னடத்தில் கத்தினார். 

'மாட்டினோமா?' என்று பயத்தில் வண்டியை வேகம் எடுத்தேன்.

இந்தக் கருமாந்திரம் பிடித்த சாலையில் அடிக்கடி யாராவது வண்டியைக் குறுக்கே நிறுத்தி பாதையை மறித்துவிடுவார்கள். வண்டியின் பக்கக்  கண்ணாடி வழியாகப் பார்த்தேன். அவன் செல்போனை துண்டித்துவிட்டு வேகம் எடுத்திருந்தான். 

சிக்கிவிட்டோம். அருகில் வந்தவன் 'லவடே க பால்' என்று கத்திவிட்டு 'என்னடா சொன்ன?' என்று முரட்டுத்தனமாகக் கேட்டான். 

வாயைத் திறந்தால் தமிழன் என்று காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் அந்தக் கணத்தில் அதை யோசிக்கவில்லை. என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டான் என உணர்ச்சிவசப்பட்டு  'நீதாண்டா லவடேகபால்' என்றேன். நம்மை மாட்டிக் கொடுக்க 'நீதாண்டா' போதாதா? கண்டுபிடித்துவிட்டான். 

இந்த ஊரில் நாற்பத்தைந்து சதவீதம் பேர் தமிழர்கள்தான். ஆனால் ஐடிகாரர்களைத் தவிர பெரும்பாலான தமிழர்கள் கன்னடம் பேசுவார்கள். கடந்த முறை காவிரி பிரச்சினை வந்த போது அடி வாங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் ஐடிவாலாக்கள்தான். என்னையெல்லாம் நிறுத்தி 'கன்னடத்தில் பேசு' என்றால் 'நெசரு ஏன்னு?' 'ஊட்டா ஆயித்தா?' தவிர ஒன்றும் தெரியாது. இவன் கன்னடத்தானா இல்லை தமிழனா என்று தெரியாமல் பெருங்குழப்பம். எப்படி இருந்தாலும் சிக்கினால் ஒரு அடி போட்டுவிடுவான். நான்கு பேர் கூடுவார்கள்தான். ஆனால் நல்லது செய்யத்தான் சொன்னேன் என்று எப்படிப் புரிய வைப்பது. சொன்னால் மட்டும் நம்பவா போகிறார்கள்? அப்படி நம்பினாலும் வாங்கின அடியை என்ன செய்ய முடியும்.

'தப்பிச்சுடுடா தம்பி' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு 'வாடா நீயி' என்று சொல்லிவிட்டு வண்டியை முறுக்கினேன். 'வாடான்னு சொல்லிட்டு எங்கடா போற?' என்றபடியே அவனும் முறுக்கினான்.

'ஆண்டவா குறுக்க யாரும் வந்துடக் கூடாது' என்று கிளப்பிய கிளப்பிருக்கிறதே. பின்னால் கத்தியபடியே வந்தான். என்ன கத்தப் போகிறான்? நில்லுடா நில்லுடா என்பான். அவன் என்னவோ கத்தட்டும். 'நீ வாடா..' என்று சொல்லி கையை உயர்த்தி 'வா..வா' என சைகை காட்டினேன். 'பயந்துட்டு ஓடுறான்' என்று அவன் நினைத்திருக்கக் கூடும். 

ஆனால் நாம் பந்தாவாகச் சொல்லிக் கொள்ள வேண்டும். என்னுடைய திடடமிடல் அது. ஸ்ட்ராட்டஜி. எதிரிகளை இப்படித்தான் குழப்ப வேண்டும். ஒரு கட்டத்தில் 'அங்க யாராச்சும் இவனோட ஆளுங்க இருப்பாங்களோ' என்று அவன் யோசித்திருக்க வேண்டும். எனக்கு யார் இருக்கிறார்கள்? 'கூட்லு சிக்கனலில் டிராபிக் போலீஸ் நிற்க வேண்டும்' என்று வேண்டாத தெய்வமில்லை.  வழக்கமாக நிற்பார்கள். 

'ஹெல்மெட் போடல சார்...காதுல செல்போன் சார்...அட்வைஸ் பண்ணினா கண்ட கண்ட முடின்னு திட்டுறான் சார்..பேட் ஃபெல்லோ ' என்று அந்நியன் அம்பி மாதிரி புகார் தெரிவித்திருக்கலாம். அதுதான் என்னுடைய டாக்டிஸாக இருந்தது. ஆனால் நம்முடன் சண்டை போடுவதற்காக ஒருவன் எவ்வளவு தூரம்தான் துரத்துவான்? அவனுக்கே சலித்துப் போயிருக்க வேண்டும். நான் சர்வீஸ் சாலையிலேயே சென்று கொண்டிருந்தேன். அவன் பிரதான சாலைக்கு சென்றுவிட்டான். நடுவில் தடுப்பு இருக்கும். இனி அவனால் வர முடியாது. கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. 

வண்டியின் வேகத்தைக் குறைத்து  'இங்க வாடா' என்றேன். 'இப்போ வாடா பார்க்கலாம்' என்றேன். உடல் சிலிர்த்து கொண்டு நின்றது. 

அவன் ஒரு சைகை காட்டினான் பாருங்கள். வ்யாக். வாந்தி வந்துவிடும். எனக்கு தெரிந்த சில பயங்கரமான கெட்டவார்த்தைகளைக் கத்தினேன். வண்டிச் சத்தத்தில் அவனுக்கு ஒன்றும் கேட்டிருக்காது. நூறடி தள்ளி டிராபிக் காவலர்கள் நின்றார்கள். ஆனால் பிரயோஜனமில்லை.

'இனி எவனுக்கும் அட்வைஸ் செய்யக் கூடாது' என வழக்கம் போல முடிவெடுத்துக் கொண்டேன். அப்படியே அட்வைஸ் செய்வதாக இருந்தால் ஃபேஸ்புக்கில்தான் செய்ய வேண்டும். இங்கேதான் அறிவுரைக்கெல்லாம் யாரும் திட்டமாட்டார்கள். லைக் போட்டு உசுப்பேற்றுவார்கள். அவர்களுக்கு என்ன உசுப்பேற்றி விட்டுப் போய்விடுவார்கள். அதே கெத்தில் சாலையில் அறிவுரை சொன்னால் நாம்தான் வாந்தியெடுக்க வேண்டும்.

Apr 14, 2018

விதிவிலக்குகள்

பிறந்தநாளன்று சில்கூர்  கோவிலுக்குச் சென்றிருந்த போது ரங்கராஜனைப் பார்த்தேன். பெரும்பாலான நாட்களில் அவரை அங்கு பார்க்க முடியும். தமிழில் பேசுவார். ஓரிருமுறை பேசியும் இருக்கிறேன். சில்கூர் கோவிலின் பிரகாரம் மிகச் சிறியது. நூற்றியெட்டு சுற்று சுற்றுவது அங்கு பிரபலம். கோவிலுக்குள் நுழையும் போதே அலைபேசியை வாங்கி வைத்துக் கொள்வார்கள். கோவிலைச் சுற்றும் போது அடுத்தவர்களிடம் பேசக் கூடாது என்பார்கள். எந்நேரமும் ஒரு கூட்டம் கோவிலைச் சுற்றிக் கொண்டிருக்கும். பெரும்பாலான சமயங்களில் ரங்கராஜன்தான் கோவிலைச் சுற்றிக் கொண்டிருப்பவர்களை வழிமுறைப்படுத்துவார். அந்தக் கோவிலுக்குச் செல்கிற ஒவ்வொருவருக்கும் இவரைத் தெரிந்திருக்கும். 

பெருமாளைப் போற்றி சில பாடல்களை பாடுவார். பக்தர்கள் அவரைப் பின்தொடர்ந்து பாடுவார்கள். பாடல்களைவிடவும் இடையிடையே அவர் அடிக்கும் பன்ச்கள் பிரபலம். 'நோ 3 ஜி, நோ 4 ஜி, ஒன்லி பாலாஜி' மாதிரியான பன்ச். நகைச்சுவையாக எதையாவது சொல்வார். கோவிலைச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் சிரிப்பார்கள். அங்கே சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் கலாய்ப்பார். வித்தியாசமான அனுபவம் அது. 


இந்த முறை கோவிலைச் சுற்றிக் கொண்டிருந்த போது சுகத்துக்கும், ஆனந்தத்துக்கு வித்தியாசம் இருக்கிறது என்று அவர் பேசிக் கொண்டிருந்தது நினைவில் இருக்கிறது. 

சுகம் என்பது உடல் சம்பந்தப்பட்டது. மெத்தை வேண்டும், ஏ.சி வேண்டும், நல்ல சுவையான உணவு வேண்டும் என்றெல்லாம் உடலைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதுதான் சுகம் தேடுவது என்பது. ஆனந்தம் என்பது மனம் சம்பந்தப்பட்டது. உடல் அடையும் வலிகளையும், வேதனைகளையும், துன்பங்களையும்  பொருட்படுத்தாமல் இறைவனை நெருங்குவதைப் பற்றி மட்டுமே மனம் சிந்தித்து மனம் பெறுகிற சந்தோசம் ஆனந்தம். 'நீங்க நூத்தியெட்டு சுத்து சுத்தும் போது கால் வலிக்கும்தான்..ஆனா மனசு பாலாஜியை நினைக்குது இல்லையா..அதுதான் ஆனந்தம்' என்றார்.

வழமையான கோவில் அனுபவத்தைத் தாண்டி எதையோ ஒன்றை அவர் உருவாக்கித் தருவதாகத் தோன்றும். 

நேற்றுதான் இரண்டு பார்ப்பனர்கள் குறித்து எழுதினேன். பாராட்டி வேறு எழுதிவிட்டேன். விடுவார்களா நம் மக்கள்? கைகூலியில் ஆரம்பித்து, சூத்திரனின் வேலையைச் சரியாகச் செய்கிறான் என்பது வரைக்கும் குதித்துத்  தள்ளிவிட்டார்கள்.  இது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இந்த உலகம் இருந்தாலும் பேசும்; செத்தாலும் ஏசும். எல்லாவற்றிலும் அரசியல் கண்டுபிடிப்பார்கள். பார்ப்பனர்களை மட்டுமில்லை யாரைக் கொண்டாடினால் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது? அடுத்தவர்களைத் தூக்கி வைத்தால் என்ன செய்துவிடப் போகிறார்கள்? கிஞ்சித்தும் பலனில்லை. புரிந்து கொள்கிறவர்கள் புரிந்து கொள்வார்கள். புரியாதவர்களைப் பற்றி கண்டு கொள்ள வேண்டியதில்லை.

'பார்ப்பான் தலித்தை கோவிலுக்குள்ளே விடுவானா?' என்று ஒருவர் கேட்டார். எல்லோரும் விடமாட்டார்கள்தான். ஆனால் விதிவிலக்குகள் உண்டு. அப்படியான விதிவிலக்குகளைச் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். நம்மூரில் பார்ப்பான் மட்டும்தான் சாதியைப் பிடித்துக் கொண்டிருக்கிறானா? வர்ணாசிரமத்தை ஆரியர்கள் கொண்டு வந்திருக்கலாம். இங்கு எத்தனை கவுண்டனும், தேவனும், வன்னியனும் தலித்தை தம் வீட்டுக்குள் அனுமதிக்கிறார்கள்?' சூத்திர சாதியினர் தமக்கு சொந்தமான கோவிலுக்குள் தலித்தை விட்டு பூசை செய்ய அனுமதிப்பார்களா? கேட்கலாம்தான். சூத்திரர்களையும் விட்டுவிடலாம். எத்தனை ஆதி திராவிடர்கள் அருந்ததியர் வீடுகளில் பெண் எடுக்கிறார்கள்? பொறியியல் படித்த ஒரு நரிக்குறவப் பெண் இருக்கிறாள். பிற எந்த சாதிக்காரன் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறான்? இங்கு பெரும்பாலான மனிதர்கள்- அவர்கள் எந்தச் சாதியாக இருந்தாலும் தமது சாதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

காற்றைவிடவும் மோசமாக சாதி சகல இடங்களிலும் ஊடுருவிக் கிடக்கிறது. அதனால்தான் விதிவிலக்குகள் மீது வெளிச்சம் பாய்ச்ச வேண்டியிருக்கிறது. 'நான் எல்லாம் மேல..கீழ இருக்கிறவனுக்கு உதவி செஞ்சுட்டேன் பார்த்தியா' என்று பட்டும்படாமலும் கெத்து காட்டுகிறவர்கள்தான் அதிகம். காலனிக்குள் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று பார்த்தால் தெரியும். தண்ணீர் பாட்டில் வாங்கி வைத்திருந்து தருவார்கள். 'நம் வீட்டில் தண்ணீர் குடிக்க மாட்டார்கள்' என்று அந்த மக்களை முழுமையாக நம்ப வைத்திருக்கிறோம். சகலரும் இப்படித்தான். 'நம்ம சாதிக்காரன்..பார்த்து பண்ணுங்க' என்று சொல்லாத சாதியே இல்லை. பார்ப்பான் பூணூலைத் தடவிப் பார்த்தான் என்று அவன் மீது கையை நீட்டி நாம் யோக்கியர்கள் ஆகிக் கொள்கிறோம்.

உண்மையில் இத்தகைய பிரச்சினைகளைக் கொஞ்ச நாட்களுக்கு எழுதவே கூடாது என நினைத்தேன். எதையாவது சொல்லி வசைபாடுவார்கள். மண்டை காய்ந்து கொண்டிருக்க வேண்டும். 

இன்றைக்கு ரங்கராஜன் பற்றி செய்தியொன்று வெளி வந்திருந்தது. 

நாளை மறுநாள் தலித் ஒருவரைத் தோளில் சுமந்து ஆந்திராவில் ஜியாகுடாவில் இருக்கும் ரங்கநாதர் கோவில் கருவறைக்குள் சென்று தலித்தை பூஜை செய்யச் சொல்லப் போகிறார். இது விதிவிலக்கான செயலாக இருக்கலாம். ஆனால் எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்?. அவரைப் பார்த்திருக்கிறேன். பேசியுமிருக்கிறேன். 

பாராட்டினால்  'இதுல என்ன அரசியல் இருக்குதுன்னு தெரியாதா?' என்பார்கள். நம்மவர்களின் நுண்ணறிவு மூளை விழித்துக் கொள்ளும். நம்மையும் போட்டு பிறாண்டித் தள்ளிவிடுவார்கள். இத்தகைய செயல்பாடுகளில் என்ன அரசியல் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஓர் அடியை எடுத்து வைக்கிறார்கள் அல்லவா? அதுதான் முக்கியம் என்பதுதான் என் நிலைப்பாடு. யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எந்தச் சாதியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். காலங்காலமாக 'இது என் சாதி பெருமை' 'இதுதான் எங்கள் குலத்தின் வழிமுறை' என்று சக மனிதனைப் பிரித்து வைத்திருக்கும் மனநிலையிலிருந்து விலகி வந்து ஓரடியை முன் வைக்கும் எந்தச் சாதிக்காரனாக இருந்தாலும் மனமுவந்து பாராட்டலாம். அதன் பின்னால் என்ன சுயநலமிருந்தாலும் சரி. அரசியல் இருந்தாலும் சரி.

நாமத்தையும் திருநீறையும் பார்த்து கடுப்பாகவும் வேண்டியதில்லை, குல்லாவை பார்த்தாலே பயந்து நடுங்க வேண்டியதுமில்லை. கிறித்துவர்கள் என்றாலே மதமாற்றுகிறவர்களுமில்லை. நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்துதான் கிடக்கிறார்கள். 

பிறந்தநாளன்று பெரிய மனிதர் யாருடைய காலையாவது தொட்டு வணங்கலாம் என்று நினைப்பேன்.சில்கூர் பாலாஜி கோவிலில் ரங்கராஜன் இருந்தார்.'தீவிர இந்துத்துவம் பேசுகிறவர்' என்ற எண்ணம் இவர் மீது உண்டு. இவருக்கு நம் அப்பா வயது இருக்குமா? நல்ல மனிதராக இருப்பாரா என்றெல்லாம் யோசனை தோன்றாமல் இல்லை. கடைசியில்  'இவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்..இவரைத் தொட்டுக் கும்பிடுவதா' என்று ஈகோ தடுத்துவிட்டது. 

இனி எப்பொழுது சந்தித்தாலும் தயங்காமல் தொட்டு வணங்குவேன். இந்த ஒரு செயலுக்காக