Mar 14, 2018

சகல ஆர்வலர்

'பனையம்பள்ளியில் நல்ல பேசுனீங்களா?'

'என் மேலயே நம்பிக்கை இல்லையா..ஃபோட்டோ பாரு'

'பேசறது எப்படிங்க ஃபோட்டோவுல தெரியும்'

'ஊருக்குள்ள பாதிப் பேச்சாளருங்க ஃபோட்டோ காட்டித்தான் ஏமாத்திட்டு இருக்கறாங்க'

'என்னது நீங்க பேச்சாளரா?'

'நான் 'சகல ஆர்வலர்'  ராம சுப்பிரமணியன்'

இதற்கு மேல் எப்படிக் கேள்வி கேட்க முடியும். இப்படித்தான் வாயை அடைக்க வேண்டும்.
                                                                                   ***
பனையம்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைக்கும்தான் இருக்கிறது. அரசு ஆரம்பப் பள்ளி. ஆனால் மாணவர்களுக்கு கணினி ஆய்வகம் அமைத்துச் சொல்லித் தருகிறார்கள். மாணவர்களும் படம் காட்டுகிறார்கள். அரசுப் பள்ளியில் இதெல்லாம் பெரிய விஷயம். பெரும்பாலான பள்ளிகளில் 'எல்லோரும் பிரைவேட் ஸ்கூலுக்கு போயிடுறாங்க' என்றுதான் புலம்புவார்கள். இந்தப் பள்ளியில் வருடந்தோறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. சந்தோஷமாகச் சொன்னார்கள். தலைமையாசிரியருக்குத்தான் வாழ்த்துச் சொல்ல வேண்டும். ஆசிரியர்களைப் பாராட்ட வேண்டும். முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நிறைய உதவிகளை செய்கிறார்கள். ஊர் கூடி தேர் இழுப்பதை நேரில் பார்த்துவிட்டு வந்தேன். இத்தகைய அரசுப் பள்ளிகளை மனம் குளிர வாழ்த்தலாம்.

மேடைப் பேச்சு ஒரு கலை. தொடர்ச்சியான கண்ணியும் கூட. விடாமல் பேசிக் கொண்டேயிருந்தால் நமக்கென ஒரு வடிவம் சிக்கிவிடும். ஆனால் எந்தக் காலத்திலும் வெறுமனே தன்னம்பிக்கைப் பேச்சாளராக மட்டும் ஆகிவிடக் கூடாது என்று இருக்கன்குடி மாரியம்மனை வேண்டிக் கொள்வதுண்டு.

பனையம்பள்ளி மாணவர்களிடம் பேசுவதற்காக சில விஷயங்களை தயாரித்து வைத்திருந்தேன். மாணவர்களைவிடவும் பெற்றவர்களுக்காகத்தான் பேச வேண்டும்.

இன்றைக்கு அறிவியலும் இயற்கையும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளை இயற்கையிடமிருந்து பிரித்து எடுப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் அறிவியலுக்கு இருக்கிறது. அலைபேசியைக் கையில் கொடுத்து 'நீ சாப்பிடு சாமி' என்று சொல்வதும் 'டிவி பார்த்தால் குழந்தை அமைதியாக இருக்கிறது' என்பதனால் முழுமையாக அனுமதிப்பதும் குழந்தைகளை இயற்கையிடமிருந்து அந்நியப்படுத்திவிடும். பிள்ளைகள் குறும்பு செய்யாமல் இருந்தால் நம்முடைய வேலைகள் சுலபமாகும் என்பதற்காக குழந்தைகளை நாம் கருவிகளிடம் அடமானம் வைக்க வேண்டியதில்லை - இதுதான் பேச்சின் சாராம்சம்- இடையிடையே மானே, தேனே, அபிராமி அபிராமி எல்லாம். 

குழந்தைகள் மண்ணில் விளையாடட்டும். அஃது அவர்களின் உரிமை. தண்ணீரில் ஆடட்டும். அவர்களுக்கான சுதந்திரம் அது. மண்ணில் விளையாடினால் நோய் வரும், தண்ணீரில் ஆடினால் சளி பிடிக்கும் என்றெல்லாம் நாம் தடை போட வேண்டியதில்லை. அப்படித் தடை போடும் போதுதான் வீட்டிற்குள் முடங்கிப் போகிறார்கள். கருவிகள் அவர்களை ஆக்கிரமிக்கின்றன. 

கடந்த தலைமுறைக் குழந்தைகள் காடு மேடு எனச் சுற்றினார்கள். வேட்டை ஆடினார்கள். ஓடினார்கள். உடலில் வலுவேறியது. இன்றைக்கு அப்படியா இருக்கிறார்கள்? 

ஒரு பள்ளியின்  தலைமையாசிரியரிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். அவர் அதே பள்ளியில் படித்தவர். 'நாங்க படிக்கும் போது ஆண்டு விழாவுக்கு இந்த பென்ச்சை தூக்கி வெளியில் போடுவோம். நன்றாக நினைவில் இருக்கிறது- ஒரு மாணவனுக்கு ஒரு பென்ச். அடுத்த இருபதாண்டுகளில், நான் இந்தப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த போது இரண்டு மாணவர்கள் சேர்ந்து இந்த பென்ச்சை தூக்கினார்கள். இந்த ஆண்டு நான்கு பேர்கள் சேர்ந்து தூங்குகிறார்கள். பென்ச் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் பையன்களின் வலு குறைந்திருக்கிறது' என்கிறார். அவர் எதையும் மிகைப் படுத்திச் சொல்லவில்லை. இன்றைக்கு கிராமப்புற குழந்தைகள் கூட வெயிலைப் பார்ப்பதில்லை. மண்ணை மிதிப்பதில்லை. தண்ணீரில் நனைவதில்லை. 

வேட்டையும் விளையாட்டும் அவர்களைவிட்டு வெகு தூரச் சென்றுவிட்டன.

கிராமப்புறப் பள்ளிகளில் பேசும் போது இதைத்தான் வலியுறுத்த வேண்டும். வெறுமனே மதிப்பெண்கள் மட்டுமே போதுமானது இல்லை. குழந்தைகள் ஆளுமைகளாக வேண்டுமெனில் அவர்களுக்கான அத்தனை சுதந்திரமும் வழங்கப்படல் வேண்டும். மதிப்பெண்களுக்கான பொறுப்பை ஆசிரியர்கள் எடுத்துக் கொள்ளட்டும். குழந்தைகள் விளையாடவும் வாழ்க்கையை வாழ்வதற்குமான சூழலையும் சுதந்திரத்தையும் பெற்றோர்கள் வழங்கட்டும். 

பேசி முடித்து மேடையை விட்டு இறங்கி வெளியேறும் போது 'நீங்க பேசுனது எங்களுக்கு ரொம்பத் தேவை' என்று ஒரு பெரியவர் சொன்னார்.

'இல்லை இல்லை..இவன் உடான்ஸ் விடுகிறான் என்று மறுக்கவா போகிறீர்கள்?'. அப்படியெல்லாம் இருக்காது.

 அப்பாடா!

இனி இதே மாதிரி வால் பிடித்து அறிவுரையென்று ராவாமல் பேசினால் போதும்.

விடாது கருப்பு. வரும் சனிக்கிழமையன்று  வள்ளியாம்பாளையம் பள்ளியில் பேசுகிறேன். அதுவும் ஆரம்பப் பள்ளி. பேசி முடித்துவிட்டு வந்து இதே போல படம் போட்டு பந்தா காட்டுகிறேன். வெயிட்டீஸ்!

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//பேசி முடித்துவிட்டு வந்து இதே போல படம் போட்டு பந்தா காட்டுகிறேன்.//
பேசுனத youtube ல போடுய்யா. அத உட்டுட்டு படம் போடுவாராம்.பந்தா காட்டுவாராம்.

Felix said...

Please post it in youtube

Anonymous said...

Any reason why the post with youtube video was removed? You never did that before. Surprised.