முதலில் புஞ்சை புளியம்பட்டி சிறப்புப் பள்ளியில் இருக்கும் குழந்தைகளைச் சந்தித்து அவர்களிடம் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கிவிடலாம் என நினைத்திருந்தோம். 'அது என்ன விவகாரம்?' என்று தெரியாதவர்களுக்காக- தமிழகம் முழுவதும் ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஒரு பள்ளிக்கூடம் செயல்படுகிறது. மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம். அரசு நடத்துகிற இந்தப் பள்ளிகளில் சுமார் இருபது முதல் இருபத்தைந்து பேர் வரைக்கும் படிக்கிறார்கள். அப்படியான ஒரு பள்ளிதான் புஞ்சை புளியம்பட்டி பள்ளி. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் இருபதாயிரம் ரூபாய் வசூல் செய்து வைத்திருந்தார்கள். இந்தச் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுகிறவர்கள் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். மீதிப் பணத்தை அறக்கட்டளையிலிருந்து கொடுத்து அந்தப் பள்ளிக் கூடத்துக்கு ஒரு தொலைக்காட்சி வாங்கித் தருவதுதான் திட்டம்.
ஏப்ரல் ஏழாம் தேதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முன்பு ஒரு சிறப்புப் பள்ளியை மட்டும் அழைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று நினைத்திருந்தோம். இப்பொழுது அதில் ஒரு சிறு மாறுதல். அக்கம்பக்கத்தில் இருக்கும் இதே போன்ற மூன்று சிறப்புப் பள்ளி மாணவர்களை அழைத்து வர வாகனம் ஏற்பாடு செய்து, குழந்தைகளுக்கான விளையாட்டு, கதை சொல்லல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி, மதிய உணவு வழங்கி, சிறியதொரு அன்பளிப்பு கொடுத்து மகிழ்ச்சியாக அனுப்பி வைக்கலாம் என்று அதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருக்கிறோம்.
நம்பியூரில் சிவசக்தி திருமண மண்டபத்து உரிமையாளரிடம் கேட்டிருக்கிறோம். வாடகை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். குழந்தைகளை வாகனம் வைத்து அழைத்து வருவதால் கல்வித் துறையில் முறையான அனுமதியைப் பெற வேண்டும். முதல் முறை என்பதால் குழந்தைகளை வெகு தொலைவிலிருந்து அழைத்து வர வேண்டியதில்லை எனத் தோன்றியது. மூன்று சிறப்புப் பள்ளிகளிலும் சேர்த்து அளவாக ஐம்பது அல்லது அறுபது குழந்தைகளை மட்டும் வைத்து இந்த நிகழ்வைச் செய்யலாம். அனைத்தும் சரியாக அமையும்பட்சத்தில் அடுத்த ஆண்டிலிருந்து இத்தகையை சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு வெவேறு ஊர்களில் தொடர்ந்து சில பணிகளைச் செய்யலாம் எனத் தோன்றுகிறது.
நிகழ்வில் கதை சொல்லல், விளையாட்டு என்பது மாதிரியான உற்சாகமூட்டும் செயல்கள் மட்டும்தான் இப்போதைய திட்டத்தில் இருக்கிறது. இத்தகைய செயல்பாடுகளில் திறன் வாய்ந்த சில நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை அனைத்தும் சிறப்பாக அமையும்பட்சத்தில் அடுத்தடுத்து இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது இந்தக் குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கு உதவும்படியான சில பயிற்சிகளைத் திட்டமிட வேண்டும். இந்த முறையே கூட குழந்தைகளுக்கான சிறு மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் யோசனையாக இருக்கிறது. நேரம் எப்படி ஒத்து வரும் என்று தெரியவில்லை.
களத்தில் இருந்தாலும் கூட சில பகுதிகள் கண்களிலேயே படுவதில்லை. 'எங்களுக்கு ஒரு டிவி வாங்கித் தர முடியுமா' என்று அவர்கள் விசாரிக்காமல் இருந்திருந்தால் சிறப்புப் பள்ளிக்குச் சென்றிருக்கவே மாட்டோம். அங்கே போனால்தான் 'இப்படியும் இருக்கிறார்கள்' என்பது புரிகிறது. கிராமத்துக்கு குழந்தைகள். இத்தகைய குழந்தைகளுக்கு ஒரு நாள் வெளியூர் பயணம், அங்கே புது நண்பர்கள், கதை கேட்டல் என்பதெல்லாம் எவ்வளவு முறை சாத்தியம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. சந்தோஷப்படுத்திவிடலாம். மிகச் சிறப்பான உணவுக்கும் ஏற்பாடு செய்துவிட வேண்டும். ஐஸ்கிரீம் மாதிரியான குழந்தைகள் விரும்பக் கூடிய சில உணவுகளாவது இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.
'எப்பொழுது நிகழ்ச்சி' என்று நிறைய பேர் கேட்டிருந்தார்கள்.இப்படியான நிகழ்வுகள் எதையும் இதுவரை செய்ததில்லை என்பதனால் ஒவ்வொரு முறை யோசிக்கும் போது ஒரு ஐடியா தோன்றும். இப்பொழுதுதான் ஒரு வடிவத்துக்கு வந்திருக்கிறது. இதன் வடிவமும் கூட மாறலாம். ஆனால் தேதி உறுதியானது. முதலில் இந்த வாரம் சனிக்கிழமையே நிகழ்வினை ஏற்பாடு செய்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தோம். அனுமதி வாங்குதல், வாகன, உணவு ஏற்பாடுகள் என இன்னமும் சில காரியங்கள் இருக்கின்றன. அவசரகதியில் செய்து முடிக்க வேண்டியதில்லை. பொறுமையாகச் செய்தாலும் அந்தக் குழந்தைகளுக்கு மறக்க முடியாத தினமாக இருக்க வேண்டும்.
வருக! வருக!!