Feb 4, 2018

கோட்டுப்புள்ளாம்பாளையம் குளம்

கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் நிரம்பியிருக்கும் குளத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன்.  பறவைகள் வந்து போகின்றன. சலனப்படம் எடுத்து பதிவேற்றிவிட வேண்டும் எனத் தோன்றியது.


எவ்வளவு செலவு பிடித்தது என்று கேட்கிறார்கள்.

ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரைம் ஆகும் என ஒதுக்கி வைத்திருந்தோம். கூடுதலாகத் தேவைப்பட்டால் ஐம்பதாயிரம் வரைக்கும் உள்ளூரில் வசூலித்துக் கொள்வதாகச் சொன்னார்கள். மண் எடுக்க ஆரம்பித்த போது மண்ணுக்கான தேவை அக்கம்பக்கத்தில் இருந்தது. மண் தேவைப்படுகிறவர்கள் அணுகினார்கள். ஒரு டிராக்டர் மண் இருநூறு ரூபாய் என விற்கப்பட்டது. அந்தப் பணத்தைத் டிராக்டர்காரர்களே மண்ணை வாங்குகிறவர்களிடமிருந்து வாங்கிக் கொள்வார்கள். இருநூறு ரூபாயில் நூறு ரூபாய் டிராக்டர்காரருக்கான வாடகை. ஹிட்டாச்சி வண்டிக்காரருக்கு ஒரு சுமை மண்ணை வழிக்க நூறு ரூபாய் என்று டிராக்டர்காரர் கொடுத்துவிடுவார்.

பண விவகாரத்தில் உள்ளூர்க்காரர் உட்பட இடையில் யாருடைய தலையீடும் இருக்காது. சற்றே தொலைவான இடங்களில் கொண்டு வந்து மண்ணைக் கொட்ட வேண்டுமானால் டிராக்டர்காரர் சற்று கூடுதலான பணத்தை வாடகையாக வாங்கிக் கொள்வார். ஹிட்டாச்சிக்காரர்களுக்கு ‘ஒரு சுமைக்கு நூறு ரூபாய்’ என்பதில் மாறுதல் எதுவும் இருக்காது.

மண் விற்பனை செய்த பணமே குளத்தைத் தூர் வார சரியாக இருந்தது. கூடுதலாக எந்தப் பணமும் தேவைப்படவில்லை. ஒருங்கிணைப்பை மட்டும் சரியாகச் செய்தால் போதும். ட்ராக்டர்காரர்கள், உள்ளூர்வாசிகள், மண் வழிக்கும் எந்திர உரிமையாளர்கள், மண்ணை வாங்குகிறவர்கள், அரசு அதிகாரிகள்- வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரகத் துறை, உள்ளிட்ட பல தரப்பையும் சுமூகமாக ஒருங்கிணைத்துவிட்டால் அதன் போக்கில் பணி நிறைவடைந்துவிடும்.

ஏற்கனவே இரண்டு குளங்களில் பணியைச் செய்த அனுபவமிருக்கிறது என்பதால் அது நிறையக் கை கொடுத்தது. உள்ளூர்வாசிகளின் உற்சாகம்தான் மிக முக்கியமான ஆயுதம். இதுதான் சிக்கலானதும் கூட. அதனை எப்படி காப்பாற்றுவது என்பதில்தான் நம் முழுமையான கவனம் இருக்க வேண்டியிருக்கும். 

குளத்தைச் சுற்றிலும் நிறைய இடமிருக்கிறது. குறைந்தபட்சம் இருபத்தைந்து முதல் ஐம்பது மரங்களாவது நட முடியும். ஊர்க்காரர்களிடம் பேசி மரங்களை நடுவதுதான் அடுத்த திட்டம். முதற்கட்டமாகத் திட்டமிட்டாகிவிட்டது. இரண்டொருவரிடம் பேசியும் ஆகிவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அந்தக் காரியத்தையும் செய்து முடித்துவிடலாம். முடித்துவிட்டு எழுதுகிறேன்.

6 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

சிறப்பு.வாழ்த்துக்கள்.

சேக்காளி said...

//ட்ராக்டர்காரர்கள், உள்ளூர்வாசிகள், மண் வழிக்கும் எந்திர உரிமையாளர்கள், மண்ணை வாங்குகிறவர்கள், அரசு அதிகாரிகள்- வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரகத் துறை, உள்ளிட்ட பல தரப்பையும் சுமூகமாக ஒருங்கிணைத்துவிட்டால் அதன் போக்கில் பணி நிறைவடைந்துவிடும்.//
ஸ்சப்பா!!!!

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

எனது பெரிய அக்கா மற்றும் உறவினர்கள் நிறைய உள்ள ஊர் என்பதில் தனிப்பட்ட முறையில், மணி-உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் தழைத்து ஓங்கி வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்

Yarlpavanan said...

தங்கள் பதிவு சிறந்த முகாமைத்துவத்திற்கு எடுத்துக்காட்டு.
தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

Anonymous said...

thalaivare arasiyalukku vaanga

Anonymous said...

panai maram naduga!!!