வானம் பார்த்த பூமியில் வெள்ளாட்டுக் குட்டிகளை மேய்த்துக் கொண்டிருக்கும் பெண்மணியின் மகன் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெறுகிறான். நாடோடிகள் குடும்பத்தில் இருந்து மேலெழுந்து வரும் ஒருவன் தேசிய அளவிலான வாள் சண்டை போட்டியில் வெற்றி பெற்று தெற்காசிய அளவிலான போட்டிக்குச் செல்கிறான்.
அட்டகாசம். இல்லையா?
சில காரியங்களைத் தொடங்கும் போதே 'இது சரியாக அமைந்துவிடும்' என்கிற நம்பிக்கை உருவாகிவிடும். பதினாறு மானவர்களைத் தேர்ந்தெடுத்த போது அப்படியானதொரு நம்பிக்கை இருந்தது. பதினாறு பேர்களும் பொறுக்கியெடுத்த முத்துக்கள். முன்பு எழுதி இருக்கிறேன் - நிசப்தம் சார்பில் நிறைய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையைச் செய்கிறோம். அவற்றில் பதினாறு மாணவர்களுக்கு மட்டும் தனிக் கவனத்தைச் செலுத்துகிறோம். அது ஏன் பதினாறு மாணவர்கள் மட்டும் என்றால் நிறையக் காரணங்களைச் சொல்ல முடியும். எல்லோரையும் இழுத்துப் பிடிக்குமளவுக்கு அனுபவம் நம்மிடமில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்தால் போதும். கிடைக்கும் வெற்றியை வைத்து அடுத்தடுத்து எட்டி வைக்கலாம்.
மற்ற மாணவர்களைவிடவும் இந்த பதினாறு மாணவர்களிடம் ஏதோ ஒரு சிறப்பம்சம் இருக்கிறது என்று நம்புகிறோம். திறமையாளர்கள். அம்மா அப்பா இல்லாதவர்களாகவோ, கூலி வேலைக்குச் செல்கிற பெற்றோர்களைக் கொண்டவர்களாகவோ, சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களாகவோ இருப்பவர்கள் இவர்கள். தமது திறமைகளையெல்லாம் உள்ளுக்குள் புதைந்து கிடைக்கும் சில உணர்வுகளினால் அடக்கி வைத்திருப்பவர்கள். சற்று தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தினால், கொஞ்சம் கூர் தீட்டினால் இவர்களால் முக்கியமான வெற்றிகளை அடைய முடியும். இவர்கள் அடையக் கூடிய வெற்றியானது அவர்கள் சார்ந்திருக்கும் சமூகம்/பகுதியில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
பதினாறு பேர்களுக்கும் கீர்த்தி நாராயணன், அபிநயா, சந்திரசேகர் மாதிரியான யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வகுப்பு எடுத்தார்கள். தன்னம்பிக்கை, இலக்கு நிர்ணயித்தல், ஆங்கிலம் என சில முக்கியமான தலைப்புக்கள். ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் எனக்கு முழுமையான விவரங்கள் தெரியும். ஒவ்வொருவருக்கும் என்ன பலம், என்ன பலவீனம் என்று கணித்து வைத்திருக்கிறோம். இவர்களுடன் அடிக்கடி அலைபேசியில் பேசுவதும் உண்டு. இவர்களுக்கென ஒரு வாட்ஸாப் குழுமத்தை உருவாக்கியிருக்கிறோம். அதில் தினசரி ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அவர்களுக்குள்ளாக விவாதிக்கிறார்கள். இப்படியான பின்னணியில் மெல்ல, அதே சமயம் உறுதியாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நட்சத்திரங்களின் சில முக்கியமான வெற்றிகளைக் குறிப்பிட வேண்டும்.
சார்லி தற்காப்புக் கலையிலும், வாள் சண்டையிலும் கில்லாடி. அவனுடைய முந்தைய தலைமுறைகள் நாடோடிகளாகத் தெரிந்தவர்கள். அவர்களது சமூகத்தில் இந்தத் தலைமுறைதான் படிக்க ஆரம்பித்திருக்கிறது. சார்லியை கல்லூரியில் சேர்த்திருக்கிறோம். முதலாமாண்டு படிக்கிறான். சமீபத்தில் மாநில அளவிலான வாள் சண்டை போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலும் வெற்றி பெற்று அடுத்ததாக தெற்காசிய அளவிலான போட்டிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறான். விளையாட்டில் எனக்கு அவ்வளவாக விவரங்கள் தெரியாது. சார்லிக்கு மட்டும் சரியான திறப்புகள் அமையுமானால் அவனால் ஒலிம்பிக் வரைக்கும் செல்ல முடியும். மிகச் சீரிய கவனக் குவிவு கொண்டவன். அவன் பார்க்கிற பார்வையிலேயே அது தெரியும்.
அரவிந்த் இன்னொரு நட்சத்திரம். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மீன் வளத்துறை (Fisheries) குறித்தான படிப்பை படித்து கொண்டிருக்கிறான். அவனை முதன் முறையாகச் சந்திக்கும் போதே 'ஏதாச்சும் அறிவியல் ரீதியாகச் செஞ்சுட்டே இருப்பான்' என்றுதான் அறிமுகப் படுத்தினார்கள். படிப்பும் அவன் செய்கிற அறிவியல் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இருக்காது. உ.சகாயம் தலைமையில் இயங்கும் சென்னை அறிவியல் நகரமானது மாநில அளவில் அறிவியல் விழாவை நடத்தியது. மாநிலம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட நானூறு பங்கேற்பாளர்களில் அரவிந்த் முதலிடம். அதுவும் அவனது படிப்புக்கு சம்பந்தமே இல்லாத ஒன்றைச் செய்திருக்கிறான். மழைக் காலங்களில் வாகனங்களைப் பயன்படுத்தி உபரி நீரைச் சேகரிப்பது குறித்தான ப்ராஜக்ட் அது.
தான் முதலிடம் பெற்றதை அழைத்துச் சொன்னான். சந்தோசம்.
'அம்மாவிடம் சொல்லி விட்டாயா?' என்றேன். அவனது அம்மா வறக் காட்டில் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் எளிய மனுஷி.அவர்களுக்கெல்லாம் இதுதான் வாழ்நாள் சந்தோசம்.
'முதல்ல உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க சார்' என்றான். எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்? எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அரவிந்த் அடுத்ததாக தேசிய அளவிலான போட்டிக்குச் செல்கிறான்.
சார்லியும், அரவிந்தும் மிகப் பெரிய உந்து சக்திகள். அவர்கள் வென்றது எந்தவிதமான போட்டியாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர்களது குடும்பப் பின்னணியிலிருந்து பார்த்தால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் வெல்வது மிகப் பெரிய சாதனைகள். எழுதும் போதே சிலிர்க்கிறது.
இவர்கள் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னமும் வெகு தூரம் இருக்கிறது. ஆனால் இத்தகைய குறிப்பிடத் தகுந்த வெற்றிகளைப் பாராட்டி உற்சாகமூட்ட வேண்டும். அவர்களது நீண்ட கால பயணத்தில் இவை ஒவ்வொன்றும் மைல்கல். அத்தனை பெரும் ஏற்கனவே திறமையாளர்கள். சார்லியின் சாதனையில் அவனது உழைப்பும் அவனது பயிற்சியாளர் குணசேகரனின் அர்ப்பணிப்பும் இருக்கிறது. அரவிந்தின் வெற்றியில் அவனது வெறியெடுத்த உத்வேகம் இருக்கிறது. இவற்றில் எந்த விதமான கிரெடிட்டையும் அடுத்தவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் உண்மையில் காற்றில் பறக்கும் சிறகு போல மனம் இலேசாகி இருக்கிறது.
சார்லியும் அரவிந்தும் வென்றிருக்கிறார்கள். தமிழரசனும், அஸாருதீனும், அய்யாவும், அங்குராஜும், ராஜேந்திரனும் தயாராக இருக்கிறார்கள். பதினாறு பேர்களில் அடுத்தடுத்து வெற்றியாளர்கள் வருவார்கள் என உறுதியாக நம்பலாம். ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு. அதை நோக்கி கடுமையாகப் பயணிக்கிறார்கள். அவர்களால் நிச்சயமாக இலக்கை அடைந்து விட முடியும். அவர்களின் வெற்றிதான் அடுத்த வருடம் இன்னமும் பத்து மாணவர்களைக் கூடுதலாகத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை நமக்குக் கொடுக்கும். இவர்களை பார்த்து உழைக்கும் உத்வேகத்தை அடுத்தவர்களுக்கும் கொடுக்கும்.
இவர்கள் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னமும் வெகு தூரம் இருக்கிறது. ஆனால் இத்தகைய குறிப்பிடத் தகுந்த வெற்றிகளைப் பாராட்டி உற்சாகமூட்ட வேண்டும். அவர்களது நீண்ட கால பயணத்தில் இவை ஒவ்வொன்றும் மைல்கல். அத்தனை பெரும் ஏற்கனவே திறமையாளர்கள். சார்லியின் சாதனையில் அவனது உழைப்பும் அவனது பயிற்சியாளர் குணசேகரனின் அர்ப்பணிப்பும் இருக்கிறது. அரவிந்தின் வெற்றியில் அவனது வெறியெடுத்த உத்வேகம் இருக்கிறது. இவற்றில் எந்த விதமான கிரெடிட்டையும் அடுத்தவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் உண்மையில் காற்றில் பறக்கும் சிறகு போல மனம் இலேசாகி இருக்கிறது.
சார்லியும் அரவிந்தும் வென்றிருக்கிறார்கள். தமிழரசனும், அஸாருதீனும், அய்யாவும், அங்குராஜும், ராஜேந்திரனும் தயாராக இருக்கிறார்கள். பதினாறு பேர்களில் அடுத்தடுத்து வெற்றியாளர்கள் வருவார்கள் என உறுதியாக நம்பலாம். ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு. அதை நோக்கி கடுமையாகப் பயணிக்கிறார்கள். அவர்களால் நிச்சயமாக இலக்கை அடைந்து விட முடியும். அவர்களின் வெற்றிதான் அடுத்த வருடம் இன்னமும் பத்து மாணவர்களைக் கூடுதலாகத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை நமக்குக் கொடுக்கும். இவர்களை பார்த்து உழைக்கும் உத்வேகத்தை அடுத்தவர்களுக்கும் கொடுக்கும்.
வாழ்த்துக்கள் அரவிந்த், சார்லி. வேகம் எடுங்கள். உங்களைத் துரத்திக் கொண்டு ஓடி வரட்டும் இந்த உலகம்.
11 எதிர் சப்தங்கள்:
16 ம்......மணி யானபசங்கள் ...மனம் நிறைந்த பாராட்டுக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மணி , கண்ணீர் வந்து விட்டது படிக்கையில்
நல்ல மனம் வாழ்க. அவர்களை பெற்றோர் அளவுக்கு சந்தோச பட்டிருக்கீங்க..ரொம்ப பெருமையா இருக்கு..
//'முதல்ல உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க சார்' என்றான்//
இத விட ஒரு மனுசனுக்கு வேற என்ன அங்கீகாரம் வேணும்.
வாழ்த்துக்கள் மணி.
//நட்சத்திர ஜன்னலில்//
"விக்ரமனை தோற்கடித்த தல" ங்கற கமெண்டோட பாதிப்பா?
உண்மையை சொல்லவும். காசெல்லாம் கேக்க மாட்டேன்.
சாதித்த மாணவர்களுக்கும் இவர்கள் சாதிக்க உறுதுணையாய் இருந்து இவர்களை செதுக்கியவர்களுக்கும் இவையனைத்தையும் ஒருங்கிணைத்து சாத்தியப்படுத்திய உங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.நிச்சயம் மேலும் உயரம் தொடுவார்கள்.
இருவருக்கும் தலா 1000 ரூபாய் மதிப்பிலா ன நூல்கள் பரிசு.... எப்படி வழங்க மணி ...
நன்றி இளவல்ஹரி. இரண்டு பேருக்கும் குட்டியாக ஒரு பாராட்டு விழா நடத்தும் எண்ணம் இருக்கிறது. இந்த வாரம் அல்லது அடுத்த வாரம். மற்ற பையன்களுக்கும் அதுவொரு உற்சாகத்தை வழங்க வேண்டும். நீங்க முடிந்தால் வந்து கலந்து கொள்ளுங்கள். அங்கேயே கொடுத்துவிடலாம். இல்லையெனில் மின்னஞ்சலில் விவரங்களை அனுப்புங்கள்.
If you can please elaborate or brief the water project and also interview both the boys and publish here sir.
வாழ்த்துக்கள் அந்த நம்பிக்கை நட்சத்திரங்களுக்கும் அவர்களுக்கு உந்துசக்தியாய் உள்ள நீங்கள் உட்பட உங்கள் தோழர்களுக்கும் .
ஒரேயோர் வேண்டுகோள். அவர்கள் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் தாங்கள் தங்கள் சமூகத்திற்கு திருப்பி செய்யவேண்டிய கடமையுள்ளது என்ற சிந்தனை அவர்கள் உள்ளத்தில் ஆழப்பதிந்ததிருக்க செய்க.
Post a Comment