குளத்தைத் தூர் வாரினோம். நீர் நிரம்பியது. சந்தோஷம். அடுத்து? குளத்தைச் சுற்றிலும் பத்து புங்கன் மரங்களை நட்டு வைக்கலாம் என்றுதான் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. இத்தகைய காரியங்களைப் பொறுத்த வரையில் களத்தில் கால் வைத்துப் பார்த்தால்தான் ஏதாவது புதியதாகத் தோன்றும். கடந்த ஒன்றிரண்டு நாட்களாக நிறையப் பேர்களிடம் ‘செடி நட்டு வைக்க ஏற்பாடு செஞ்சுடலாம்’ என்று பேசி ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தோம். நான்கைந்து பேர்களாகக் குளத்தைப் பார்க்கச் சென்றிருந்த போது மொத்த திட்டத்தையும் ஓரமாக வைத்துவிடும்படியான மின்னலொன்று அடித்தது.
அடர்வனம். (Dense forest)
மியவாக்கி முறை பற்றி முன்பு சில முறை எழுதியிருக்கிறேன். இணையத்தில் தேடினாலும் கிடைக்கும். குறுகிய இடத்தில் நிறைய மரங்களை வெகு நெருக்கமாக வைக்கும் முறை இது. இருபது செண்ட் இடமிருந்தால் இரண்டாயிரத்து ஐநூறு மரங்களை வளர்த்துவிட முடியும். கொஞ்சம் செலவு பிடிக்கும். எப்படியும் ஒன்றரை லட்ச ரூபாயாவது ஆகும். நாற்று வாங்கி, மண்ணைத் தோண்டி, தோண்டிய மண்ணில் குப்பையைக் கலந்து, சொட்டு நீர் பாசனம் அமைத்து, சுற்றிலும் கம்பிவேலி அமைத்து என நிறைய வேலைகள் இருக்கின்றன.
குளத்தை ஒட்டிய மாதிரியே இடமிருக்கிறது. அந்த இடத்தில் அடர்வனம் அமைப்பதாகத் திட்டம். இத்தகைய காரியங்களில் உள்ளூர்காரர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி நம்முடைய திட்டங்களில் சில மாறுதல்களைச் செய்வது திட்டம் முழுமையாக வெற்றியடைய உதவும். நேற்று கணினியைத் தூக்கிச் சென்று ஊரில் சிலரை அழைத்து விவரித்திருக்கிறோம். அடர்வனம் என்பதன் அடிப்படை, அதனால் உண்டாகக் கூடிய சாதக பாதகங்கள் என எல்லாவற்றையும் ஒரு மணி நேரம் விவரித்துவிட்டு அவர்களுடன் சிறு கலந்துரையாடலும் நடத்தினோம். உள்ளூர்வாசிகளுக்கு வெகு சந்தோஷம். முழுமையான ஒத்துழைப்பைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் ஒத்துழைப்பார்கள். அவர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் குளம் தூர்வாரப்பட்டு, நீர் நிரம்பியது என்பதெல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது.
முதற்கட்டமாக உள்ளூர்க்காரர்கள் சிலரை அழைத்துப் பேசி ஆரம்பகட்ட திட்டமிடல்களைச் செய்து வைத்திருக்கிறோம். இனி முழுமையான செலவுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டியிருக்கிறது. தயாரிப்பைச் செய்து அடுத்த வாரம் மீண்டும் ஊர்க்காரர்கள் அத்தனை பேர்களையும் அழைத்து விவரிக்கவிருக்கிறோம். மியவாக்கி முறையில் மிகச் சிறப்பாக அடர்வனத்தை உருவாக்கியிருக்கும் களம் அறக்கட்டளையினரையும் அழைத்து வர வேண்டியிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் அவர்களின் ஆலோசனை மிகுந்த உதவியாக இருக்கும்.
பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்திற்குள் செடிகளை நட்டுவிடுவோம். காலம் தாழ்த்திக் கொண்டிருந்தால் பங்குனி சித்திரையில் வெயில் உச்சிக்கு ஏறும் போது குளத்து நீர் வற்றத் தொடங்கிவிடும். அதற்குள்ளாக செடிகளை உயிர்பிடிக்கச் செய்துவிட வேண்டும். குளத்தை ஒட்டினாற் போலவே அரசாங்கத்தின் ஆழ்குழாய் இருக்கிறது. ஒரு மோட்டாரைப் பொறுத்தினால் அந்த ஆழ்குழாயிலிருந்து நீரை எடுத்துக் கொள்ளலாம்.
பெரிய வேலைதான். ஆனால் செய்ய முடியாததில்லை.
இந்தக் குளத்தையும் அடர்வனத்தையும் முன்மாதிரியானதாக அமைத்துவிட்டால் பின் தொடர்ந்து அக்கம்பக்கத்து ஊர்களிலும் யாரேனும் முன்னெடுக்கக் கூடும். வெளியூர்க்காரர்களுக்கும் இதுவொரு வழிகாட்டியான மாதிரியாக அமைந்துவிடும்.
அருகிலேயே நீர் நிரம்பிய குளம். எழுபத்தைந்து வகையான மரங்களுடன் பறவைகளுக்கான ஒரு குட்டி சரணாலயம் என இந்தக் குளத்தையே இரண்டொரு வருடங்களில் மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஓர் ஊரில் நூறு மரங்களை நட்டு அவற்றில் நாற்பது மரங்களைக் காப்பதைவிடவும் மூன்றாயிரம் மரங்களை ஒரே இடத்தில் நட்டு அவற்றில் இரண்டாயிரத்து ஐநூறு மரங்களைக் காப்பது சிரமமில்லை. செய்துவிடலாம்- நண்பர்கள் நிறையப் பேர் தோள் கொடுக்கவிருக்கிறார்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்பு வரைக்கும் குளத்தைத் தூர்வாருவோம் என்று நினைக்கவேயில்லை. நிகழ்ந்தது. ஆயிரம் சுமை மண்ணை குளத்திலிருந்து அகற்றுவோம் என்றுதான் முதலில் கருதினோம். பதினைந்தாயிரம் சுமை மண் வெளியேற்றப்பட்டது. குளத்தில் நீர் நிரம்பும் என எதிர்பார்க்கவில்லை. நிரம்பியது. அடர்வனம் அமைப்போம் என்று கடந்த வாரம் வரைக்கும் நினைக்கவில்லை. இப்பொழுது வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். முடித்துவிட்டுப் மிச்சத்தைப் பேசுவோம்.
நன்றி.
நன்றி.
10 எதிர் சப்தங்கள்:
முயற்சி திருவினையாக்கும்!
வாழ்த்துக்கள்!
கல்வி,மருத்துவம் மட்டும் தானா..,
விவசாயம் இல்லையா...?! என்று கேட்க நினைத்தேன்......!!!
அடர்வனம் நல்லது.சரியான திருப்புமுனையாக அமையும்.எனக்கான இடம் அமையும் போது நானும் செய்வேன். இறையருள் இருந்தால். ..
அடர்வனம் நல்லது.சரியான திருப்புமுனையாக அமையும்.எனக்கான இடம் அமையும் போது நானும் செய்வேன். இறையருள் இருந்தால். ..
மிடியல. ஒண்ணா ஓடி வர மிடியல.
நீங்க போய்ட்டே இருங்க. நான் கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு(இளைப்பாறிட்டு)
பின்னாடியே வர்றேன்.
All the very best Mani...
Neenga Madurai pakkam pirakkaama poiteenga ...
Unga kooda oru aala ninnuruppen..
அருமை. மிக்க மகிழ்ச்சி
👌👏 சந்தோசம்
இறுதியாய் உள்ள வார்த்தை ஏற்கத்தக்கல்ல. ஏனிந்த புதுப் பழக்கம். நி யாயமாய் நாங்கள் சொல்ல வேண்டியதது.
Hats off to all your efforts..
வாழ்த்துக்கள்
Post a Comment