'எங்க ஊருக்கு வந்ததை நீ ஏன் சொல்லல' என்று ஆயிரத்து எட்டு பேர்கள் கேட்டார்கள் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? ஆனால் இரண்டு பேர்கள் கேட்டார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அப்பவும் 'நம்ப மாட்டோம்' என்று சொன்னால் 'சத்தியமா ஒருத்தரு கேட்டாருய்யா..நம்புங்க ப்ளீஸ்' என்று கெஞ்சுவதைத் தவிர எனக்கு வேறு மார்க்கம் இல்லை.
கடந்த வாரம் பல்லடம் சென்றிருந்தேன். அங்கே செயல்படும் லட்சுமி மில்ஸ் நடுநிலைப்பள்ளியின் ஆண்டுவிழாவில் சிறப்புரையாற்ற அழைத்திருந்தார்கள். இதையும் நம்பவில்லையா? திரும்பத் திரும்ப சத்தியம் செய்ய முடியாது. மெய்யாலுமே நான்தான் சிறப்பு விருந்தினர். ஐம்பதாண்டுகளைத் தாண்டிய பள்ளி. கடந்த ஆண்டில் பதினைந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நூலகம் அமைத்துக் கொடுத்தோம் அல்லவா? அதில் இந்தப் பள்ளியும் ஒன்று.
'சனிக்கிழமைன்னா கண்டிப்பா வந்துடுவேன்' என்று சொல்லியிருந்தேன். சனிக்கிழமைதான் ஆண்டுவிழா. நுழைந்தவுடன் நூலகப் புத்தகப் பட்டியலை எடுத்துக் காட்டி எப்படிப் பயன்படுத்துகிறோம் என்றார்கள். தினசரி நூலக வகுப்பு இருக்கிறது. 'ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரைக்கும் இருக்கும் எந்த மாணவனை அழைத்தும் இந்தப் புத்தகங்கள் குறித்து நீங்கள் பேசச் சொல்லலாம். அவர்கள் பேசுவார்கள்' என்றார்கள். கவிழ்ந்துவிட்டேன். இதுதானே நாம் எதிர் பார்ப்பது?
ஒரு பள்ளியின் ஆண்டுவிழாவை இவ்வளவு சிறப்பாக நடத்த முடியும் என்பதை நேரடியாகப் புரிந்து கொண்ட தருணம் அது. பாராட்ட வேண்டுமே என்பதற்காகச் சொல்லவில்லை. உண்மையிலயே தலைமையாசிரியரும், பிற ஆசிரியர்களும், மாணவர்களும் கடுமையாக உழைத்திருந்தார்கள். நேர்த்தியான திட்டமிடலும் நிகழ்வின் ஒருங்கிணைப்பும் பிரமாதம். அசத்திவிட்டார்கள்.
என்னிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள்- 'ஒரு கூட்டத்துக்கு எவ்வளவுங்க காசு வாங்குறீங்க?' என்று. என்னைப் பார்த்தல் அப்படியா தெரிகிறது? 'அடப்பாவத்த' என்று நினைத்துக் கொள்வேன். உண்மையைச் சொன்னால் காசு கொடுக்கிற யாரும் என்னைக் கூப்பிடுவதில்லை. ஏதாவது தனியார் கல்லூரிகள் அவ்வப்பொழுது ஏமாந்துவிடுவார்கள். நான்காயிரமோ அல்லது ஐந்தாயிரமோ கிடைக்கும். பணத்தை வாங்கியவுடன் அந்த ஊரிலேயே நல்ல கடையாகப் பார்த்து பிரியாணி விழுங்குவேன். சைவத்துக்கு மாறிய பிறகு அதுவுமில்லை. சைவ பிரியாணி சாப்பிடுவதற்கு பதிலாக பட்டினி கிடைக்கலாம்.
அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் காசு வாங்குவது போன்ற பாவம் வேறு என்ன இருக்க முடியும்? கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிடுவது வழக்கம். பேருந்திலேயே போய் விடலாம். சில மாதங்களுக்கு முன்பாக ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு அழைத்திருந்தார்கள். வறண்ட கிராமம் அது. டவுன் பஸ்ஸிலிருந்து இறங்கி- முகம் கழுவக் கூட வழியில்லை. அலைபேசியில் அழைத்து 'சார், உங்க ஸ்கூல் எங்க இருக்கு' என்றேன். அறிவியல் ஆசிரியர் தனது இரு சக்கர வாகனத்தில் வருவதாகச் சொன்னார். அவர் வரும் வரைக்கும் ஏன் நின்றிருக்க வேண்டும் என நடக்கத் தொடங்கியிருந்தேன். எதிரில் அவர் வருகிறார். ஆசிரியருக்கு என சில உடல்மொழிகள் உண்டு. அவரை நான் கண்டுபிடித்துவிட்டேன். அவர் நில்லாமல் 'சொய்ங்' எனப் பறந்துவிட்டார். 'இவனைப் பார்த்தா சிறப்பு விருந்தினர் மாதிரி இல்லையே' என நினைத்திருக்க வேண்டும்.
அந்த நொடியிலிருந்து திருந்திவிட்டேன். விழா என்று கிளம்பினால் கசங்காத வேஷ்டி கட்டிக் கொள்ள வேண்டியது. உச்சபட்சமாக சட்டைப்பையில் ஒரு சீப்பு வைத்திருக்கிறேன் என்றால் என் அலர்ட் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளலாம். இருக்கிறதோ இல்லையோ வாரிக் கொள்ள வேண்டியதுதான். பல்லடத்துக்கு அரசு தாமஸ், கார்த்திகேயனுடன் சென்றிருந்தேன். வண்டியை விட்டு இறங்கும் போது யாருக்கும் தெரியாமல் தலையில் சீப்பை வைத்து ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு நுழைந்தேன்.
மேடையேற்றி அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு ஒலிவாங்கியைக் கொடுத்தார்கள். நல்ல கூட்டம் சேர்ந்திருந்தது. அநேகமாக எண்ணூறு பேராவது இருக்க வேண்டும். 'லைட்டை அவங்க பக்கம் திருப்புங்க' என்றேன். யாராவது கூட்டத்திலிருந்து கல் எடுத்து அடித்தாலும் கூட கண்ணுக்குத் தெரியும். 'அப்படியெல்லாம் அடிக்க மாட்டாங்க..தைரியமா பேசுங்க' என்றார்கள்.
'அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது.. எனக்குத் தெரியாதா..நீங்க லைட்டை திருப்புங்க' என்று கறாராகச் சொல்லிவிட்டேன். அதன் பிறகுதான் கால் நடுக்கம் குறைந்தது.
'நம்பிக்கை ஒளி' - இதுதான் தலைப்பு. நினைவுத் திறனை மேம்படுத்திக் கொள்ளுதல், கவனக் குவிவுக்கான பயிற்சிகள், தன்னம்பிக்கை எனக் கலந்து பேச்சைத் தயாரித்திருந்தேன். பேசியதை முழுக்கவும் பதிவு செய்தார்கள். அவர்களிடம் வாங்கி யூடியூபில் பதிவேற்றுகிறேன். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். பேசி முடித்த பிறகு நன்றாக இருந்ததாகச் சொன்னார்கள். முகஸ்துதியோ என்னவோ. பொன்னாடை போர்த்தி, விவேகானந்தர் படம் ஒன்றுடன், குங்குமச்சிமிழும், சந்தனக் கிண்ணமும் கொடுத்து அனுப்பினார்கள். நிகழ்ச்சி முடிந்து நேராக மாமனார் வீட்டுக்குத்தான் சென்றேன். பந்தா செய்ய ஏதுவாக இருந்தது. ஒரே அலம்பல்தான். வழக்கத்திற்கு மாறாக மறுநாள் காலையில் இட்லியும் கூடவே வடையும் சுட்டுக் போட்டார்கள் என்றால் உங்களுக்கே புரியும்.
இனி நிறைய மேடைகளில் பேசுவதாக உத்தேசம்.
கல்லூரியில் படிக்கும் போது நிறைய மேடைகளில் பேசியிருக்கிறேன். அதன் பிறகு மேடைகளில் பேசுவதை நிறையக் குறைந்து போனது. இனி ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான். வேஷ்டிகளைத் தயாராக வைத்திருக்கிறேன். சீப்பும்தான். ஆங்காங்கே இருக்கும் தாய்மார்களும் பெரியோர்களும் பெருந்திரளாக வந்திருந்து கல்லெடுத்து அடிக்காமல் சிறப்பு செய்யவும்.
அடுத்த கூட்டம் மார்ச் 09. பனையம்பள்ளி பள்ளிக்கூடத்தில். 'லைட்டை அங்க திருப்புங்க பாஸ்'