Jan 31, 2018

தூர் கிளப்பு

சில பணிகளைச் செய்யும் போது உடனடியாகப் பலன் தெரிந்துவிடாது. ஆனால் நிச்சயமாகப் பலன் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்குமல்லவா? கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் குளத்தைத் தூர் வாரும் போது அப்படித்தான் இருந்தது. உள்ளூர்காரர் பழனிசாமி ‘இதைச் செய்ய முடியுமா?’ என்று கேட்டு அணுகிய போது கொஞ்சம் தயக்கமிருந்தது. அடுத்த சில நாட்களில் கோட்டுப்புள்ளாம்பாளையத்திற்குச் சென்று பார்க்கையில் குளம் முழுக்க பாறையாக மேடாகிக் கிடந்தது. அவரே உள்ளூர்வாசிகள் நான்கைந்து பேர்களை அழைத்துக் கொண்டு வந்தார். இரவு பத்து மணிக்கு மேலாக இருக்கும். வெகு நேரம் பேசினோம். என்ன செய்வது எப்படிச் செய்வது என்பது மாதிரியான திட்டமிடல். 


     (குளம் - தூர் வாருவதற்கு முன்பாக)

ஊர்க்காரர்கள், ‘நாங்க பார்த்துக்கிறோம்’ என்று தைரியமாகப் பேசினார்கள். நம்பிக்கை வந்தது.

அடுத்த ஓரிரு நாட்களில் குளத்துக்கு எதிரில் இருக்கும் பழைய கோவில் ஒன்றில் ஊர்காரர்கள் பத்து அல்லது இருபது பேர்களுடன் கூடி விவாதித்தோம். ‘உள்ளூர் அரசியல் எதுவும் இல்லாம பார்த்துக்குங்க’ என்றேன். ‘அதெல்லாம் பிரச்சினையே இருக்காதுங்க’ என்றார்கள். செய்துவிடலாம் என்கிற தைரியம் வந்தது. அப்பொழுதே தாசில்தார் பூபதியிடமும் கோட்டாட்சியர் கோவிந்தராஜிடமும் பேசினோம். அனுமதி கொடுத்துவிட்டு தூர் வாரும் பணியை கோட்டாட்சியர்தான் தொடங்கியும் வைத்தார். கிட்டத்தட்ட முப்பது டிராக்டர்கள், மூன்று ஹிட்டாச்சி வண்டிகள் என உள்ளூர்வாசிகள் களமிறங்கினார்கள். சற்றேறக்குறைய பதினைந்தாயிரம் சுமை (லோடு) மண் குளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அந்தப் பகுதியிலேயே இவ்வளவு பெரிய அளவுக்குத் தூர்வாரப்பட்டது அநேகமாக கோட்டுப்புள்ளாம்பாளையம் குளமாகத்தான் இருக்கும். தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை விற்று வண்டி வாடகை, டீசல் செலவுக்கு பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அப்படியே செய்தார்கள். அக்கம்பக்கத்து ஊர்களுக்கெல்லாம் கோட்டுப்புள்ளாம்பாளையம் குளத்து மண் சென்றது. பார்த்த பக்கமெல்லாம் மேடாக்கி வைத்திருந்தார்கள்.

                                                             (தூர் வாரப்படும் போது)

குளத்தின் ஆழம் சராசரியாக பதினைந்து அடி அதிகரிப்பட்டது. குளத்தின் நடுப்பகுதியில் மட்டும் இருபது அடிவரைக்கும் தோண்டி எடுக்கப்பட்டது. முதலில் பாறையாகத் தெரிந்த குளம் கை வைத்தவுடன் உடைந்து போனது. அது மிகப்பெரிய உற்சாகம். மண்ணை அள்ளி எடுக்க ஏதுவாகிப் போனது. வாரி எடுத்துவிட்டார்கள். இதெல்லாம் நடந்து கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. 


                                                                    
 (ஆழப்படுத்தப்படுகிறது)

குளத்து வேலை முடிந்த பிறகு உள்ளூர்காரர் பழனிசாமியிடம் இரண்டொரு முறை பேசினேன். ‘மழை பேஞ்சுதுங்களா?’ என்று கேட்டால் ‘பேஞ்சுதுங்க..ஆனா கொளம் நம்பற அளவுக்கு இல்லீங்க’ என்பார். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். அவரிடம் காட்டிக் கொள்ள மாட்டேன். கடமையைச் செய்தாகிவிட்டது. பலன் மெல்லக் கிடைக்கட்டும் என்கிற மனநிலை வந்து ஒட்டிக் கொண்டது.

பவானி ஆற்றிலிருந்து கால்வாய் பிரிந்து கீழ் பவானித் திட்டம் என்று ஓடுகிறது. அது பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் பிரித்திருக்கிறார்கள். அந்தக் கால்வாயில் தற்பொழுது நீரைத் திறந்து விட்டிருக்கிறார்கள். அதன் காரணமாகக் குளம் நிரம்பிவிட்டது. நிரம்பிய குளத்தை நிழற்படமெடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். நேற்று காலையில் படத்தைப் பார்த்தவுடன் வெகு சந்தோஷமாக இருந்தது. உள்ளூர்க்காரர்களிடம் அழைத்துப் பேசினேன். அக்கம்பக்கத்தில் இருக்கும் கிணறு, நிலத்தடி நீர்மட்டம் எல்லாம் தம் கட்டிக் கொள்ளும் என்றார்கள்.


                                   
  (நீர் நிரம்பிய குளம்)

‘நீங்க மட்டும் அன்னைக்கு சரின்னு சொல்லலைன்னா’ என்றார்கள். அவர்களிடம் பேசும் போது திரும்பத் திரும்ப அதையேதான் சொல்வார்கள். உண்மையைச் சொன்னால் ‘சரி’ என்று சொன்னது மட்டும்தான் என் பங்களிப்பு. பிற எல்லாமும் இயல்பாக நடந்தது. எவ்வளவோ கோரிக்கைகள் வருகின்றன. எல்லாவற்றையுமா செய்ய இயல்கிறது? இந்தக் காரியத்தை இவர்கள்தான் செய்ய வேண்டும் என்று எங்கோ விதிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய காரியங்களுக்கு ‘சரி’ என்று சொல்லத் தோன்றுகிறது. நாமெல்லாம் வெறும் காரியக் கருவிகள்தான். அதற்கு மேல் எதுவுமில்லை.

‘இந்த வருஷம் கொளம் நம்பாம போயிருந்தா பங்குனி சித்திரையில் குடிக்கிறதுக்கே தண்ணி இல்லாம கஷ்டம் ஆகியிருக்கும்’ என்றார். இனி அந்தப் பிரச்சினை இருக்காது. ஒன்றிரண்டு வருடங்களுக்காவது நிலத்தடி நீர் மட்டம் குறையாது என்ற நம்பிக்கையிருக்கிறது. இன்னொரு அம்சமும் உண்டு. ஒரு முறை நிரம்பிவிட்டால் இனி மழை பெய்தால் சட்டென்று நிரம்பிவிடக் கூடும். பார்க்கலாம்.

ஒரு வேலையைச் செய்யும் போது என்ன சங்கடம் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நாம் அடையக் கூடிய இலக்குதான் முக்கியம். அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்காவது இந்த ரிசல்ட் பலனளிப்பதாக இருக்கக் கூடும்.

நிசப்தம் அறக்கட்டளை மூலமாகச் செய்யப்பட்ட கிராமம் சார்ந்து பணிகளில் இது முதல் வெற்றி. அட்டகாசமான வெற்றியும் கூட. உடன் நின்ற அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. குறிப்பாக உள்ளூர்காரர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும். அவர்களது உற்சாகமும் அர்ப்பணிப்பும் இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. திரு.பழனிசாமி, திரு.அரசு தாமசு, திரு. கார்த்திகேயன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி. எப்பொழுதும் போலவே நிசப்தத்தின் நன்கொடையாளர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும்  இந்த வெற்றி சமர்ப்பணம்.

வேகத்தை இன்னமும் அதிகரிக்க வேண்டும். Miles to go!

Jan 30, 2018

நலம் வாழ...

நண்பரொருவருடன் திருமணத்துக்குச் சென்றிருந்தோம். அவருக்கு உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகள்.நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். எல்லாவற்றுக்கும் மாத்திரைகளை விழுங்குகிறார். அது பிரச்சினையில்லை. வந்துவிட்டது. என்ன செய்ய முடியும்? உபாதைகள் கட்டுப்பாட்டை மீறும் போது வலுக்கட்டாயமாக வேதிப்பொருட்களை நாட வேண்டியதுதான். அதே சமயம் நாம் உள்ளே எடுத்துக் கொள்கிற அத்தனை வேதிப்பொருட்களையும் நம் உடலும் சுரக்கிறது. அதை சற்றேனும் ஊக்கப்படுத்துகிற வேலையை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. எவையெல்லாம் நம் உடலுக்கு எதிரானவையோ அவற்றைக் கட்டுப்படுத்தி எவையெல்லாம் உகந்தவையோ அவற்றின் மீது கவனம் செலுத்தி...

நிறைய இருக்கின்றன. 

சரவணன் அண்ணன் மாதிரியான சித்த மருத்துவர்களிடம் அவ்வப்பொழுது பேசுவதுண்டு. சிறு சிறு உபாதைகளுக்கு எளிய வைத்தியங்களைச் சொல்வார்கள். தொண்டையில் கிருமித் தொற்று என்றால் தேனில் மிளகு கலந்து அதை உட்கொண்டால் போதும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பட்டையைப் பொடியாக்கில் தேனில் கலந்து எடுத்துக் கொள்வது அதைவிட வீரியம் மிக்கது. இதையெல்லாம் முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை. அப்படியும் சரியாகவில்லை என்றால் ஆண்ட்டிபயாடிக் தவிர வேறு வழியில்லை. ஆனால் பட்டையையும் மிளகையும் முயற்சித்துப் பார்க்கலாம் அல்லவா?. ‘அஞ்சரைப் பொட்டியில் ஆயிரம் வைத்தியம்’ என்று சொல்வார்கள். 

‘காலையில் எந்திரிச்சு பல்லை விளக்கிட்டு காபிக்கு பதிலா ரெண்டு டம்ளர் சுடு தண்ணீரைக் குடிச்சுடு’ என்பார்கள். அதனால் என்ன நடக்கும் என்பது தெரியாது. ஆனால் காபியைத் தவிர்த்துவிட்டு இரண்டு குடுவை வெந்நீரைக் குடிப்பதில் நிச்சயமாக எந்த துர்பலனும் இருக்காது. நம்மால் இயலக்கூடிய இப்படியான சில செயல்களைச் செய்து கொண்டிருக்கலாம். அதற்கே மொடத்தனம். செய்வதில்லை.

முதல் பத்தியில் சொன்ன நண்பர் எங்கள் லே-அவுட்டில்தான் இருக்கிறார். திருமணத்தில் அவரது நாவும் கட்டுப்பாட்டில் இல்லை. வாயும் கட்டுப்பாட்டில் இல்லை. பொறுக்கமாட்டாமல் கேட்டும்விட்டேன். ‘அதுதான் மாத்திரை சாப்பிடுறோமே’என்கிறார். வந்த கடுப்பில் ‘நீங்க எப்படியோ இருந்துட்டுப் போங்க..உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு..ஞாபகம் வெச்சுக்குங்க’ என்று சொன்னதும் முகம் இருண்டு போய்விட்டது அவருக்கு. ஆனால் ஆகட்டும்.

கண்களுக்கு முன்பாகவே சரிந்து போகிறார்கள். மாத்திரைகளை விழுங்கியபடியே அலட்சியத்தோடு இருக்கும் இப்படியொரு extreme என்றால் இன்னொரு பக்கம் ‘எனக்குத்தான் ஒண்ணுமே இல்லையே’ என்கிற எக்ஸ்ட்ரீம். உடல்நலத்தில் மட்டும் இப்படியொரு அலட்சியம் இருக்கவே கூடாது. 

மருத்துவரைப் போல பேசிக் கொண்டிருக்கிறேன். விடுங்கள்.

எல்லாவற்றிலும் கவனமாக இருந்தாலும் நம்மை மீறி ஏதேனும் நிகழ்ந்தால் விதி என்று விட்டுவிடலாம். ஆனால் குறைந்தபட்ச ஒழுங்காவது வாழ்க்கையில் அவசியமில்லையா. தாந்தோன்றித்தனமாகத் திரிகிறவர்கள் இருந்துவிட்டுப் போகலாம். திருமணம் செய்து, ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் இப்படி ஒழுங்கீனமாக இருப்பதைப் பார்த்தால் அலறத்தான் செய்கிறது. முப்பது அல்லது முப்பத்தைந்து வயது வரைக்கும் பெரிய பிரச்சினையில்லை. கல்லைப் போட்டாலும் கரைக்கிற வயது என்பார்கள். ஆனால் அதன் பிறகு ஒவ்வொன்றாக மக்கர் அடிக்கத் தொடங்கும் போது அலர்ட் ஆகிக் கொள்ள வேண்டியதுதான்.

‘எங்கீங்க நேரம்?’என்பார்கள். 

ஒரு நாளைக்கு அரை மணியிலிருந்து முக்கால் மணி நேரம் போதும். உடலை அப்படியும் இப்படியும் அசைத்தால் கன வேலை செய்யும். அதைக் கூடச் செய்வதில்லை. ஏ.ஸி.அறையில் அழுத்தி வைத்து குதச்சூடு தலையில் ஏறும் வரைக்கும் அப்படியே அமர்ந்திருந்தால் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கும் நாலாயிரத்துச் சொச்ச நோய்களில் கால்வாசியாவது எட்டிப்பார்த்துவிடும். அறிவுரை சொல்கிற அளவுக்கு வைத்தியசிகாமணி இல்லை. ஆனால் எருமை மாட்டின் மீது மழை பெய்வது போல இருக்கிறவர்களிடமாவது இதையெல்லாம் பேச வேண்டியிருக்கிறது.

திருமணத்தை முடித்துக் கொண்டு திரும்ப வரும்போது பைக்கில் நண்பர் பேசவே இல்லை. உம்மணாமூஞ்சியாகவே இருந்தார். இறங்கியவுடன் ‘தப்பா எடுத்துக்காதீங்க’ என்று சொல்லி விட வேண்டும் என நினைத்தேன். யோசித்துக் கொண்டே வந்திருப்பார் போல. ‘நீங்க சொல்லுறது சரிதான்’ என்றார். கடைபிடித்தால் சரி.

பெரியவர்கள் சொல்வார்கள். வயது இருக்கும் போது நம் உடல் நமக்கு பொருட்டே இல்லை. தாறுமாறாக இருந்துவிடுவோம். ஆனால் வயது கூடக் கூட உடல் மட்டும்தான் பிரச்சினையாக இருக்கும். நம்முடைய செயல்பாடுகளை முடக்கும் அந்தப் பிரச்சினைகள்தான் நம்முடைய சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கியெறிகிற வேலைகளைச் செய்யும்.

வாழ்க்கை முறையில் சில ஒழுங்குகளைக் கடைபிடித்தால் போதும். ‘எப்பவாச்சும் கல்யாணத்துல ஸ்வீட்’. ‘எப்பவாச்சும் பார்ட்டியில் பொறிச்சது’ ‘எப்பவாச்சும் சரக்கு’. எல்லாவற்றிலும் எப்பொழுதுமே அளவாக இருந்தால் தொந்தரவில்லை. ‘எப்பவாச்சும்’ என்ற சாக்குப் போக்கில் அள்ளிக் கொட்டுவதுதான் பெரிய வினை. உடலுக்கு ஏற்ற அளவில் தண்ணீர் அருந்துவது, ஏழு மணி நேரத் தூக்கம், பதினோரு மணிக்குப் பின்பாக விழிப்பைத் தவிர்த்தல், நாற்பது நிமிட நடைப்பயிற்சி, புகையைக் குறைத்தல், முடிந்த வரைக்கும் அசைவம் தவிர்த்தல், அப்படியே உண்டாலும் இரவுகளில் அசைவம் தவிர்த்தல், உறங்குவதற்கு முன்பாக வயிற்றுக் குழியை முழுமையாக நிரப்பாமல் காலியாக வைப்பது, அரிசியைக் குறைத்து, காய்கறிகள் அதிகம் சேர்ப்பது என இப்படி எல்லாமே எல்லோருக்குமே சாத்தியமான விஷயங்கள்தான். ஒரே சிரமம்- மனது வைக்க வேண்டும்.

‘என்ன ஆகிவிடும்?’ என்ற அசால்ட்தன்மை நல்லதுதான். ஆனால் உடல்நலத்தில் மட்டும் இது ஆகவே ஆகாது.

Jan 28, 2018

யாவரும்

லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் புத்தகத்துக்கு முன்பாக மூன்று புத்தகங்கள் வெளியாகியிருந்தன. இரண்டு உயிர்மை. ஒன்று காலச்சுவடு. அப்பொழுது ஜீவகரிகாலனிடம் அறிமுகம் இருந்தது. கப்பலில் சரக்கு அனுப்பி வைக்கும் நிறுவனத்தின் ஊழியர். வாசகர். அதற்கு மேல் ஒன்றுமில்லை. சென்னையில் இரண்டொரு முறை பைக்கில் அழைத்துக் கொண்டு சுற்றியிருக்கிறார். வேல்கண்ணன், சாத்தப்பன், கண்ணதாசன், பாலா இளம்பிறையுடன் சேர்ந்து ஒரு பதிப்பகம் தொடங்கப் போவதாகச் சொன்னார். ஆளுக்கு சொற்பப் பணம். அப்பொழுது அவர்களால் அவ்வளவுதான் முடியும். இருபதாயிரம் ரூபாய் இருந்தால் புத்தகம் வெளியே கொண்டு வந்துவிடலாம் என்றார். அப்படித்தான் லிண்ட்சே லோஹன் புத்தகம் வெளியானது. இருபதாயிரம் ரூபாயைப் புரட்டுவதற்கே பெரும் சிரமப்பட்டார்கள். அந்தப் புத்தகக் கண்காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய ஆயிரம் பிரதிகள் விற்றன. அதில் பதிப்பகத்தின் உழைப்பு மிக அதிகம். புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு கரிகாலன் புத்தகக் கண்காட்சியில் கடை கடையாக அலைந்தது நினைவில் இருக்கிறது. கிட்டத்தட்ட நூறு கிலோ உருவம். வியர்த்து விறுவிறுக்க அலைந்தது மனதுக்குள் என்னவோ செய்தது. எத்தனை புத்தகம் எழுதினாலும் இவர்கள் பிரசுரம் நடத்துகிற வரையில் இவர்களிடம்தான் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். 

சுழி மட்டும்தான் லிண்ட்சே லோஹன். அதன்பிறகு பெரிய பங்களிப்பு எதையும் நான் செய்ததில்லை. ஆனால் அவர்களது வெற்றியை மகிழ்வாக உணர முடிகிறது. மெல்ல மெல்ல மேலேறியவர்கள் இந்தச் சில வருடங்களில் தமிழ் பிரசுரத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டார்கள். அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. தனியாக அலுவலகம், நாற்பது தலைப்புகளில் புத்தகங்கள், ஏகப்பட்ட இளம் எழுத்தாளர்கள், புத்தகக் கண்காட்சியில் தனியாக ஸ்டால், சில லட்சங்களில் வியாபாரம் என்று தம் கட்டிவிட்டார்கள். கரிகாலன் தனது பழைய வேலையை விட்டுவிட்டு முழுமையாக பதிப்பக வேலைகளில் இறங்கிவிட்டார். பொருளாதார ரீதியில் பெரும் செல்வாக்கு இல்லையெனிலும் இது மிக முக்கியமான காலகட்டம். தழைத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மகிழ்ச்சி.


சென்னைப் புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பகத்துக்கு ஒரு கடை கிடைத்திருப்பதாகச் சொன்ன போது ‘நஷ்டப்படாம கடையை நடத்திடுங்க...’ என்றேன். அவர்களின் தோளுக்கு நஷ்டம் என்பது மிகப்பெரிய சுமை. கையூன்றிக் கர்ணமடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தருணத்தில் பாரம் இறங்காமல் இருப்பது முக்கியம்.  இந்த வருடம் என்னால் புத்தக கண்காட்சிக்குச் செல்ல இயலவில்லை. கடைசி நாளில் கரிகாலனை அழைத்துப் பேசினேன். ‘லாபம்தாங்க..சந்தோஷம்’ என்றார். இந்த உற்சாகம் அடுத்த இரண்டாண்டுகளுக்கு அவர்களை இயங்க வைக்கும்.

திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்கு புத்தக மூட்டையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

இளம் வயதில் கிடைக்கக் கூடிய இத்தகைய சிறு சிறு வெற்றிகள்தான் எதிர்காலத்தில் நாம் நிகழ்த்தவிருக்கும் பெரும் சாதனைகளுக்கான படிக்கட்டுகள். யாராவது முன்னேறிக் கொண்டிருக்கும் போது நம்மவர்கள் சும்மா விட்டுவிடமாட்டார்கள். ஆயிரம் சச்சரவுகளைக் கிளப்புவார்கள். புரளிகள் மேலேறி வரும். கடந்த சில வருடங்களில் யாவரும் பற்றிய புரளிகளும் கிசுகிசுக்களும் எவ்வளவோ காதுகளில் விழுந்திருக்கின்றன. ஒவ்வோர் அடியையும் எண்ணி அளந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான பொறாமையிலும் வயிற்றெரிச்சலிலும் பேசப்படுகிற புரளிகளில் எதுவுமே உண்மையில்லை என்று தெரியும். ஆனால் ஒவ்வ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் புரிய வைத்துக் கொண்டிருக்க முடியாது. அது அவசியமுமில்லை. கால ஓட்டத்தில் நாம் நட்டு வைத்துவிட்டு ஓடுகின்ற மைல் கற்கள்தான் வரலாறுகளாக நிலைக்குமே தவிர அடுத்தவர்களின் வெற்றுச் சொற்கள் இல்லை. சொற்கள் எதுவுமே யாவரும் குழுமத்தைச் சலனப்படுத்தவில்லை என்பதுதான் பெரும் ஆறுதல். 

‘உங்க பணத்துலதான் பப்ளிகேஷன் நடத்துறோம்ன்னு சொன்னாலும் சொல்வாங்க’ என்று சிரிப்பார். 

‘இது வேறயா? சத்தம் போட்டுச் சொல்லாதீங்க..என் தம்பி கேட்டான்னா சொத்தைப் பிரிக்கச் சொல்லிடுவான்’ என்று பதிலுக்குச் சிரிப்பேன். 

மிகச் சரியாகக் கணக்கு காட்டுவது, ராயல்டி தொகையைக் கொடுத்துவிடுவது என்று சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு யாவரும் வந்து சேர்ந்திருக்கும் தொலைவுக்கு நிறையப் பேர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். ரமேஷ் ரக்‌ஷன், கார்த்திக் புகழேந்தி, அகிலா, கவிதைக்காரன் இளங்கோ என்று பெரிய பட்டியல் அது. பட்டியலை என்னால் முழுமைப்படுத்த முடியாது. இவ்வளவு பேர்கள் இவர்களுக்கு ஆதரவாக நிற்பதே பெரிய பலம்தான். 

பெரும் பதிப்பகங்களுக்கு ஒன்றிரண்டு எழுத்தாளர்கள் இருப்பார்கள். ஸ்டார் எழுத்தாளர்கள். அவர்களை மட்டுமே தூக்கிப் பிடிப்பார்கள். மற்றவர்களைக் கண்டு கொள்ளமாட்டார்கள்.  ‘அதை எந்தக் காலத்திலும் செய்துவிடாதீர்கள்’ என்பதுதான் அவர்களிடம் முன்வைக்க விரும்புகிற ஒரே விஷயம். பதிப்பகத்துக்கு ஒவ்வொரு எழுத்தாளனுமே முக்கியம்தான். ஒவ்வொரு வாசகனும் முக்கியம். யார் ஒருவரையும் தனியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

சென்னை அற்புதமான ஊர். அர்ப்பணிப்புடன் வேலை செய்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உழைப்புக்கேற்ற இடத்தை அது ஒதுக்கித் தந்துவிடும். யாவரும் பதிப்பகத்துக்கும் அதுவொரு இடத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஆனால் இன்னமும் வெகு காலம் இருக்கிறது. செல்ல வேண்டிய தூரமும் வெகு தொலைவு. போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும். எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் சல்லிப்பைசாவுடன் ஒரு தொழிலைத் தொடங்கி முத்திரையைப் பதிப்பது இன்னும் நூறு இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமையும். அதற்காகவே இவர்களை வாழ்த்தத் தோன்றுகிறது. இந்த பாஸிட்ட்டிவ் எனர்ஜியை சமூகத்துக்கு யாராவது எங்கேயாவது விதைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். யாவரும் குழுமம் தொடர்ந்து வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 

Jan 24, 2018

ஊர் கூடி...

மென்பொருள் துறையில் உருவாகக் கூடிய அழுத்தங்கள், புதிய சவால்கள், நுட்பங்கள் என்பதைப் பற்றியெல்லாம் எழுதுகிற போது நிறைய மின்னஞ்சல்கள் வரும். விவாதங்களுக்கும் புதிய திறப்புகளுக்குமான மின்னஞ்சல் அவை. அப்படித்தான் பிக் டேட்டா பற்றி எழுதிய போது கீதா சுரேஷ் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அமெரிக்காவில் வசிக்கிறார். பிக்டேட்டாவுக்கான இணைய வகுப்புகளையும் நடத்துகிறார். ‘தமிழில் பிக்டேட்டா பற்றி விரிவாக எழுதுகிறேன்’ என்றார். அப்படி அவர் எழுதுகிற கட்டுரைகளின் தொடர்ச்சி இது. மற்ற கட்டுரைகளைவிடவும் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக நினைக்கிறேன். வாசித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

                                                               ***

பெருந்தகவலை (பிக்டேட்டா) கையாளும் போது ஏற்படும் சவால்கள் என்ன?

அளவில் அதிகமான மற்றும் பல வகையான தகவல்களை ஒரு சேரக் கையாளும் போது பல சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. சேகரிப்பு, வகை பிரித்தல், பராமரித்தல் என தொழில்நுட்பம் சார்ந்த பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால்தான் வல்லுநர்களுக்குத் தேவை உருவாகிறது.

பெருந்தகவலை எவ்வாறு சேர்த்து வைப்பது ?

இன்றைய நிறுவனங்கள் முன் எப்போதையும் விட அதிகமான தகவல்களை தகவல்களை கையாள வேண்டி இருக்கிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 கோடி (2 பில்லியன்) மக்கள் இன்டர்நெட்டை பயன் படுத்துகிறார்கள். எல்லா வகையான தொழில்களும் வளர்ந்து வருகின்றன. இதனால் மேலும் மேலும் புதிய தகவல்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. இப்படியே போனால் 2020 வருடவாக்கில் கிட்டத்தட்ட 44 ஸிட்டா பைட்டு (zetabyte) அளவு தகவல்கள் உருவாகி இருக்கும்.

1 ZB = 1 Million petabytes = 1Billion Terabytes = 1Trillion Gigabytes (கணக்குப் போட்டால் தலையே சுற்றுகிறது)

ஆக, இந்தப் பெருந்தகவலை எங்கே சேகரிக்கப் போகிறோம்? எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? இதெல்லாம்தான் பிக்டேட்டா நுட்பங்களின் முன்னால் இருக்கக் கூடிய சவால்கள்.

அதே போலவே, பெருந்தகவலின் மற்றொரு சவால் தகவல் செயலாக்கம் (data processing). தகவல் செயலாக்கம் என்பது வேறொன்றுமில்லை. குப்பையில் இருந்து பொறுக்குமணியைச் சேகரிப்பது மாதிரி. கொட்டிக் கிடக்கும் தகவல்களிலிருந்து பயனுள்ள தகவலை அறிவதற்காக தகவலை ஆய்வு செய்வது, உருமாற்றும் செய்வது போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது.

பெருந்தகவல் பல்வகையான தகவல்களாக (அமைப்புள்ள தகவல் - structured data, ஒளி வடிவிலான தகவல், ஒலி வடிவிலான அல்லது கோப்பு வடிவிலான தகவல்) என கசமுசாவென்று பல வடிவிலும் இருக்கக் கூடும். இவை எந்த ஒழுங்குமற்ற அமைப்பில்லா தகவலாகவும் (unstructured data)) இருக்கலாம். இப்படிக் குப்பையாகக் கொட்டுகிற தகவல்களை ப்ராஸஸ் செய்வதே மலை போன்ற காரியம்தான்.

இதில் இன்னொரு பெரிய பிரச்சினையும் இருக்கிறது. உருவாகும் 90% தகவல் அமைப்பில்லா தகவல் (unstructured data). எந்த ஒழுங்குமில்லாத இந்த அமைப்பில்லா தகவலை அமைப்புள்ள தகவலாக மாற்றினால் மட்டுமே அதிலிருந்து மிகவும் பயனுள்ள அறிவை (knowledge) உருவாக்க முடியும்.

இதை எவ்வாறு செய்வது? ஆரக்கிள் (Oracle), டெராடாட்டா (Teradata) போன்ற பாரம்பரிய (Traditional) டேட்டாபேஸ் மென்பொருள் இதை செய்ய முடியுமா?

பொதுவாக பெருந்தகவலை பகுப்பாய்வு செய்ய பெரிய அளவில் பகுப்பாய்வு/சிபியு (CPU) திறன் தேவைப் படுகிறது. ஆரக்கிள் மாதிரியான பாரம்பரிய டேட்டாபேஸ் மென்பொருட்கள் ஒப்பீட்டளவில் சிறிய தகவல்களை மட்டுமே பகுப்பாய்வு செய்ய பயன்படுகின்றன. இவை வேகமான செயலி (Processor) மற்றும் அதிக மெமரியைப் பயன்படுத்துகின்றன. அதனால் முதலீடு அதிகம். அப்படியே பணத்தைக் கொட்டி முதலீடு செய்தாலும் கூட இருப்பதிலேயே வேகமான செயலியாலும் கூட பெருந்தகவலைப் பகுப்பாய்வு செய்ய முடிவதில்லை.

ஆக, பாரம்பரிய டேட்டாபேஸ் மென்பொருள்களால் பெருந்தகவலை பகுப்பாய்வு செய்ய முடிவதில்லை எனும் போது பெருந்தகவல் பகுப்பாய்வு எவ்வாறு செய்வது?

பரவுக் கணினிச் செய்முறை (Distributed Computing)

பரவுக் கணினிச் செய்முறை என்பது ஒரே கட்டளை நிரலை (ப்ரோக்ராமை) ஒரே நேரத்தில் பல கணினிகளுக்கு வேலையை பிரித்து கொடுத்து, வேலையைச் செய்து முடிப்பதாகும். இது ஒரு பலசாலியால் முடியாத வேலையை ஊர் மக்கள் கூடி ஒரு குழுவாக வெற்றிகரமாக முடிப்பது போன்றதாகும்.


பரவுக் கணினிச் செய்முறைக்கு அதிக விலையுயர்ந்த கணினிகள் தேவை இல்லை. சாதாரண கணினிகள் போதுமானது. இது நிறுவனங்களுக்கான செலவை பெருமளவில் குறைத்து அதிக பயனை தருகிறது.

பரவுக் கணினிச் செய்முறையில் உள்ள சவால்கள் என்ன?

1. பல கணினிகளுக்கு வேலையை பிரித்து கொடுத்து வேலையை ஆரம்பித்த பின் ஒரு கணினியின் செயல் பழுதடைந்து விட்டால், மொத்த வேலையும் பாதிக்கப் படக் கூடாது. அதே சமயம் வேலை தொடர்பான தகவல்களும் தொலைந்து போகக் கூடாது. வேலையின் பயன்முடிவு (result) சரியாகக் கொடுக்கப் பட வேண்டும்.

2. ஒரு கணினியின் பயன்முடிவு மற்ற கணினிகளின் பயன்முடிவுகளோடு சரியான முறையில் சேர்த்து கொடுக்கப் பட வேண்டும்.

3. கணினி வலைப்பின்னல் (network) தொடர்பான சிக்கல்கள், துண்டிப்புகள் கையாளப்பட வேண்டும்.

இந்தச் சவால்களையெல்லாம் சமாளிப்பது எப்படி?

பெருந்தகவல் தொடர்பான மென்பொருள்கள் இந்த சிக்கல்களை திறமையாக கையாள்கின்றன. இவற்றில் ஹடூப் (Hadoop) முன்னணியில் நிற்கிறது. ஹடூப் என்பது ஓபன் சோர்ஸ் (Open source) எனும் வகை மென்பொருள் கூட்டணி (Software Platform). யார் வேண்டுமானாலும் மேம்படுத்தலாம். இது இலவசமாகக் கிடைக்கக் கூடியது. இதனை வாங்குவதற்கு பணம் செலவழிக்க தேவை இல்லை. மேற்சொன்ன பெருந்தகவல்களை ஹடூப் மென்பொருள்கள் மூலமாக சேமிக்கவும் வகைப்படுத்தவும் முடியும். இலவசமாகக் கிடைக்கிறது என்பதால் பல நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் தொகையை மிச்சப் படுத்த முடிகிறது.

நிறுவனங்கள் ஹடூப் மென்பொருளை உபயோகப் படுத்த முடிவு செய்யும் பொது, அவற்றுக்கு சில சிக்கலான மற்றும் அவசர உதவிகள் பெறுவதற்காக ஹடூப் மென்பொருள் உதவிகளை விற்கும் கிளொட்ரா (Cloudera) அல்லது ஹார்ட்டன்ஒர்க்ஸ் (Hortonworks) நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அதற்கு சிறு பணம் செலவு செய்கின்றன. அது ஆரக்கிள் (Oracle), டெரா டாட்டா (Teradata) நிறுவனங்களுக்கு செலவு செய்வதை விட மிகக் குறைவான பணம்.

2005-இல் டக் கட்டிங் (Doug Cutting) மற்றும் மைகேல் சபாரெலா இணைந்து ஹடூப்பை உருவாக்கினர். இதற்கு யாஹூ நிறுவனம் நிதி உதவி வழங்கியது.

2006-இல் யாஹூ நிறுவனம் இதை அபாச்சே (Apache) நிறுவனத்திடம் ஒப்படைத்து ஓபன் சோர்ஸ் (Open source) மென்பொருளாக மாற்றியது.

ஒரு சுவாரசியமான கதை: டக் (Doug)-இன் மகன் ஹடூப் எனும் ஒரு மஞ்சள் யானை பொம்மை வைத்திருந்தான். டக் பல பெயர்கள் யோசித்து விட்டு, கடைசியில் ஹடூப் எனும் பெயரையே வைத்து
விட்டார்.

ஹடூப் எவ்வாறு பரவுக் கணினிச் செய்முறையில் உள்ள சவால்களை கையாள்கிறது?

ஹடூப் பெருந்தகவல்களை கையாள்வதில் ஒரு முன்னணி மென்பொருளாக திகழ்கிறது. ஹடூப் தகவல்களை பல கணினிகளில் பிரித்து சேமித்து வைக்கிறது. பல கணினிகள் ஒன்றாக சேர்த்து ஒரு ஹடூப் திரள் அல்லது கிளஸ்ட்டர் (Cluster) என்று அழைக்க படுகிறது. ஹடூப் தகவல் சேமிப்பு மற்றும் தகவல் செயலாக்கம் இரண்டையும் திறமையாக பல கணினிகளுக்கு பிரித்து கொடுத்து வேலை செய்கிறது. ஹடூப் எந்த ஒரு தகவலையும் 2 அல்லது 3 கணினிகளில் சேமித்து வைக்கிறது. இதனால் ஒரு கணினியின் செயல் பழுதடைந்து விட்டால் அதில் உள்ள தகவல்கள் இழப்பு ஆகாது.

அதே சமயம், ஹடூப் தகவல் செயலாக்கதிலும் ஒரு பாதிப்பும் வராது. ஒரு கணினியின் செயல் பழுதடைந்து விட்டால் அதில் உள்ள தகவல் செயலாக்கங்கள் மற்றொரு கணினியில் ஆரம்பிக்கப்பட்டு அதன் முடிவுகள் மற்ற கணினிகளுடன் சேர்ந்து தரப்படும்.

ஹடூப் திரளில் சில கணினிகளை இணைத்தால், அதற்கு ஏற்றவாறு, அந்த ஹடூப் திரளின் செயல் வேகம் அதிகரிக்கும். ஒரு கணினியின் செயல் பழுதடைந்து விட்டால், ஹடூப் திரளின் செயல் வேகம் சற்று குறையுமே அன்றி, செயல் முடிவுகளில் தவறு எதுவும் நேராது.

ஹடூப் நிரல்களை ஜாவா, ரூபி, பைதான் மொழிகளில் எழுதலாம்.

இந்த பல சிறு கணினிகள் சேர்ந்து ஒரு பெரிய தகவலை கையாளும் ‘கூட்டு முயற்சி’ வித்தையை, நம் வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

சில சமயம் நாம் தேவை இல்லாமல் நமது பிரச்சனைகளை நம்மை விட பெரிதாக கற்பனை செய்து கொள்கிறோம். நாம் எந்த ஒரு பெரிய பிரச்சினையையும் சிறு பிரிவுகளாக பிரித்தால், ஒவ்வொன்றுக்கும் சில மணி நேரம் ஒதுக்கி அதை தீர்க்கமாக எதிர்கொண்டால் சமாளித்து விடலாம். உதரணத்திற்கு ஹடூப் படிப்பதை சிறு சிறு பகுதிகளாக பிரித்து ஒரு தகுந்த வழிகாட்டி அல்லது நண்பனின் உதவியுடன் எளிதாக படித்து விட முடியும்.

(பிக்டேட்டா கட்டுரைகளை ‘பிக்டேட்டா’ என்ற லேபிளில் க்ளிக் செய்து வாசிக்கலாம்).

geethashdp@gmail.com

Jan 23, 2018

செங்காயனின் அம்மா

செந்தில் ஒரு வருடம் மூத்தவன். அவனது அப்பாவைப் பார்த்ததில்லை. அம்மாதான் கடும் உழைப்பாளி. அவரிடம் எப்பொழுதுமே பத்து அல்லது இருபது மாடுகளும் எருமைகளும் இருக்கும். மாடுகளை விரட்ட ஒரு குச்சியையும் சோத்துப் போசியையும் எடுத்துக் கொண்டு காலையில் பண்டம்பாடிகளை ஓட்டிச் செல்வார். தினசரி குறிப்பிட்ட நேரத்தில் அவரைப் பார்க்க முடியும். வாய்க்கால் ஓரமாக அவற்றை மேய விட்டு சாயந்திரம் திரும்ப ஓட்டி வருவார். அவருடன் எப்பொழுதும் பேசியதில்லை. ஆனால் செந்தில் நல்ல நண்பன். விடுமுறை தினங்களில் கால்நடைகளை அவன் ஓட்டி வரும் போது என்னையும் அழைத்துக் கொள்வான். அவனிடம் ஒரு மிதி வண்டி இருக்கும். தள்ளியபடியே வாய்க்காலுக்குச் செல்வோம். மேய்ச்சலிலும் பெரிய வேலை இல்லை. காலங்காலமாக மேய்ந்து பழகிய கால்நடைகள் அவை. வெறுமனே மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் போதும். அவை தம் போக்கில் மேய்ந்து கொள்ளும்.

தூக்குப் போசியை அவன் எடுத்து வந்தால் அன்றைய தினம் செந்திலின் அம்மா மேய்ச்சலுக்கு வர மாட்டார் என்று அர்த்தம். ‘மேச்சுட்டு வான்னு அனுப்புச்சு உட்டுருச்சு..சாயந்திரமா கீது வந்தாலும் வரும்’ என்பான்.  ‘வயிறு நம்பியிருக்குதான்னு பார்க்கலைன்னா அம்மாவுக்குத் தூக்கமே வராது’ என்பான். தேர்வு விடுமுறைகளில் ‘நீயும் வர்றியா’ என்பான். டிபன் பாக்ஸில் சோற்றை எடுத்துக் கொண்டு நானும் கிளம்பிவிடுவேன். எங்கள் வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள். அலுவலகத்திலிருந்து அம்மா வீடு திரும்புவதற்குள் வீடு திரும்பிவிட்டால் போதும். பிரச்சினை எதுவுமில்லை. சோத்துப் போசிகளை சைக்கிளில் வைத்துவிட்டு வாய்க்காலில் இறங்குவது, குருவி பிடிப்பது என்று எதையாவது செய்து கொண்டிருப்போம். நெற்கதிர்கள் முற்றுகிற தருணமாக இருந்தால் வயலுக்குள் பறவைகள் வந்து போகும் கால அளவை வைத்து குஞ்சு பொறித்திருப்பதையும் முட்டையிட்டிருப்பதையும் கண்டு பிடித்துவிட முடியும். அவன் அதில் கை தேர்ந்தவனாக இருந்தான். குஞ்சு பொறித்திருந்தால் விட்டுவிடுவோம். முட்டையாக இருந்தால் அவற்றை எடுத்து வந்து சாணத்தில் உருட்டி நெருப்பில் வாட்டி முட்டைகளை சோற்றுக்கு சைட் டிஷ்ஷாக மாற்றித் தின்போம். அதெல்லாம் ஒரு வித்தை.

வயல்காரனோ, குத்தகைக்கு வயல் ஓட்டுகிறவனோ, தண்ணிவாக்கியோ பார்க்காமல் இருந்தால் போதும். இல்லையென்றால் கத்துவார்கள். ‘நெல்லை முதுச்சீங்கன்னா இந்தப் பக்கமே அண்ட உடாம தொரத்திடுவோம்’ என்ற வரிகளுக்குப் பின்னால் இத்யாதி இத்யாதி வசையை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் எதிர்ப்புகளை மீறாமல் சந்தோஷம் எங்கே இருக்கிறது? 

செந்தில் அவனது அம்மாவுக்கு பயப்படுவான். காலங்காலமாக பண்டம்பாடிகளை மேய்த்ததைத் தவிர அதுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்குது என்பதை அவன் அப்பொழுதே உணர்ந்திருந்தான். அந்த உணர்வினால் வரக் கூடிய மரியாதை கலந்த பயம் அது. உண்மைதான். மழையும் வெயிலும் அந்தம்மாவை நிறுத்தியதே இல்லை. ‘அம்மா திட்டும்’ ‘அம்மா அடிக்கும்’ என்றுதான் எதற்கெடுத்தாலும் சொல்வான். 

வயல்வெளிக்குள் பாம்புகள் அதிகம். பெரும்பாலும் தண்ணீர் பாம்புகளாக இருக்கும் அல்லது பச்சைப் பாம்புகள். விஷமற்றவை. நான் பயந்து நடுங்குவேன். அவன் அவற்றை இலாவகமாகப் பிடித்து விளையாடுவான். ஒரு முறை விஷமில்லாத ஒரு பாம்பை என் மீதாக வீச தடுமாறி வரப்பிலிருந்து சேற்றுக்குள் விழுந்தேன். நான் விழுந்த நேரம் கீழேயும் ஒரு பாம்பு. அது வழுவழுவென வழுக்கிச் செல்ல சில கணங்கள் மூர்ச்சையற்றுக் கிடந்தேன். எழுப்பிவிட்டான். ‘செத்தே போய்ட்டேன்னு நெனச்சேன்’ என்றேன். அவன் அதிர அதிரச் சிரித்தான். எனக்கு செமக் கடுப்பு. அவன் ஆள் செவச் செவ என்றிருப்பான். ‘இந்தச் செங்காயன் மட்டும் பயப்படுவே மாட்டேங்குறான்’ என்று நினைத்துக் கொண்டேன். 

வயலும் வாய்க்காலும் அவனுக்கு அத்துப்படி. அதிலேயேதான் பிறந்து வளர்ந்திருக்கிறான். இப்படியான செயல்கள் எல்லாம் அவனை ஹீரோவாகவே வைத்திருந்தன. வயது கூடக் கூட என்னிடமிருந்த குழந்தைமை காணாமல் போகத் தொடங்கியது. அவன் அழைக்கும் போதெல்லாம் ‘இல்ல செந்திலு..நான் வரல’ என்று மறுக்க மறுக்க அவனும் நானுமாக விலகிக் கொண்டிருந்தோம். கல்லூரிக்காலங்களில் எதிர்ப்படும் போது சிரிப்பதும் ‘நல்லாருக்கியா?’ என்பதோடும் முடிந்துவிடும். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகப் பார்த்த போது வேலையைப் பற்றியெல்லாம் விசாரித்தான். யாரிடமும் சம்பளத்தைச் சொல்ல மாட்டேன். சொல்லக் கூடாது என்றில்லை. அவன் கேட்டான். சொன்னேன். ‘நல்லா இருந்தீன்னா செரி’என்றான். கொஞ்ச நேரம் பேசிவிட்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு கிளம்பினான். 

இப்பொழுதும் அவனது அம்மாதான் பண்டபாடிகளை பார்த்துக் கொள்கிறார். கடந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது மதியம் இரண்டு மணி வாக்கில்தான் கால்நடைகளை அந்தம்மா வாய்க்காலுக்கு ஓட்டிச் சென்றார். ‘இந்நேரத்துக்கு அப்புறம் போறீங்க...எப்ப மேச்சுட்டு எப்ப வருவீங்க?’ என்றேன். கேட்டிருக்கக் கூடாது. கேட்டுவிட்டேன். ‘என்ன மேச்சு என்ன ஆவுது கண்ணு’ என்றார். ‘உன்னையைப் பார்க்கும் போதெல்லாம் பேசோணும்ன்னு நெனப்பு வரும்..நான் தான் பேசறதில்ல’ என்று சொல்லிவிட்டு தனக்குத் தானே நிறையப் பேசினார். அவருடைய அருகாமையிலேயேதான் நடந்தேன். ஆனால் அவர் பேசுவது காதுகளில் விழவேயில்லை. ‘என்ன சொல்லுறீங்க?’ என்று கேட்கவும் தைரியமில்லை. தனக்குள்ளாக புலம்பியபடியே நடந்தார். 

செந்தில் இப்போது இல்லை. இறந்துவிட்டான்.

கட்டுத்தறியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சுருண்டு விழுந்து இறந்து போனான். என்ன காரணம் என்றெல்லாம் விசாரிக்கவில்லை. விசாரித்து என்ன ஆகப் போகிறது? அவனுக்குத் திருமணமும் ஆகியிருக்கவில்லை. காய்ச்சல் இருந்திருக்கும் போலிருக்கிறது. அடுத்த நாள் சாணம் வழித்து சுத்தம் செய்யும் போது கட்டுத்தறியிலேயே இறந்து கிடந்திருக்கிறான். 

எல்லாமே சரியாகப் போய்க் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பார்க்கவே இல்லாத ஒன்று மொத்தத்தையும் புரட்டிப் போட்டு தொடக்கப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் போய்விடுகிறது. கனவுகளும் கோட்டைகளும் மண்மேடாகி அதன் மீது மனிதர்களை அமர வைத்துவிடுகின்றன. உச்சியில் இருப்பதுமாக கைக்கு எட்டாததுமாக எதுவுமே வேண்டாம். ஓடுகிறபடியே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தால் போதும் என்று சில மனிதர்கள் நினைக்க வைத்துவிடுகிறார்கள். 

‘ஒத்த ஆளும் போய்ச் சேர்ந்துட்டான்’ என்று அந்தம்மா சொன்னது காதில் விழுந்தது. அவரைக் கிளறிவிட்டுவிட்டோமோ எனச் சங்கடமாக இருந்தது. புடவைத் தலைப்பை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டார். ‘நல்லா இரு சாமீ’ என்று சொல்லிவிட்டு தனக்குத்தானே பேசியபடியே நடந்தார். காலங்காலமாக அவர் நடந்து கொண்டிருக்கும் அதே பாதை. பண்டம்பாடிகளை மேய்த்ததைத் தவிர அதுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்குது என்று செந்தில் பேசியது நினைவில் வந்து போனது. பேச எதுவுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டேன். பண்டம்பாடிகள் மெல்ல நடந்து கொண்டிருந்தன. பல மனிதர்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

Jan 18, 2018

பலூன் உடைவது போல

வாழ்நாளில் இவ்வளவு கடுமையான பணிச்சுமையை எதிர்கொண்டதேயில்லை. அழுத்தித் தள்ளிவிட்டார்கள். மூச்சு முட்டி, சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. இன்னமும் முடிந்தபாடில்லை. மாலை ஏழரை மணிக்கு ஒரு மின்னஞ்சல் வரும். நிறுவனத்தின் பெருந்தலைகள் எல்லோரையும் மின்னஞ்சலில் வைத்து ‘இன்றுக்குள் முடித்துவிட முடியுமா?’ என்று கேட்டு எழுதியிருப்பான் ஒருத்தன். எட்டு மணி நேர வேலை அது. இப்படித்தான் நாட்களைத் தின்றார்கள். 

கடந்த வாரத்தில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தோம். காலையில் பத்து மணிக்கு அழைத்தார்கள். பக்கமாகச் சென்றாகிவிட்டது. ‘இதெல்லாம் பிரச்சினை..பார்க்க முடியுமா?’ என்றார்கள். சனிக்கிழமையும் முடிந்து போனது. ஞாயிறும் முடிந்து போனது. பொங்கலுமில்லை. போகியும் இல்லை. புத்தகக் கண்காட்சிக்குக் கூடச் செல்ல முடியவில்லை. ஒரே அங்கலாய்ப்புதான். முதலில் திணறலாக இருந்தது. உள்ளே இருக்கும் அழுத்தம், உள்ளரசியல் இன்னபிற கச்சடா.

வேலைதானே? செய்து கொடுப்போம் என நினைக்க நினைக்க என்னையுமறியாமல் சிக்கிக் கொள்ளத் தொடங்கியிருந்தேன். காலையில் எழுந்தவுடன் ‘ஆபிஸிலிருந்து ஏதாச்சும் மெயில் வந்திருக்குமா’ என்கிறளவுக்குச் சிக்கியிருந்தேன். ஆறு மணி நேரத் தூக்கம். பிற வேலைகள் நியூரான்களுக்குள் ஓரங்கட்டப்பட்டு சிந்தனை முழுவதும் அலுவலகப் பணியிலேயே இருந்தது. எல்லோருமே இப்படியான தருணங்களை எதிர்கொண்டிருக்கக் கூடும். இன்னமும் ஒன்றிரண்டு மாதங்களுக்காவது இந்த வேலை இப்படித்தான் இருக்கும். நானும் அப்படியே ஓடிக் கொண்டிருந்திருக்கக் கூடும். 

எங்கள் வீதியில் நஞ்சுண்டா என்றொருவர் குடியிருந்தார். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறவர். சமீபத்தில் இரண்டு வீதிகள் தள்ளி இடம் வாங்கி புதியதாக வீடு கட்டிக் குடி போயிருக்கிறார்கள். 60x40 இடத்தில் வீடு. ஒரு வருடம் கூட முழுமையாக முடிந்திருக்காது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் இருந்திருக்கிறார். மகன் ஏழாம் வகுப்புப் படிக்கிறான். அப்பனும் மகனுமாக மதியவாக்கில் ஏரிக்குச் சென்றிருக்கிறார்கள். இவர் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க பொடியன் நீருக்குள் இறங்கிவிட்டான். 

மாநகராட்சிக்காரர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து புதுப்பித்த ஏரி அது. அடியில் இன்னும் மண் இறுகவில்லை போலிருக்கிறது. பொடியன் தண்ணீருக்குள் திணறுவதைப் பார்த்தவர் ஓடி வந்து நீருக்குள் இறங்கி பையனை மேலே தூக்கிவிட்டு அவர் சிக்கிக் கொண்டார். பையன் கத்திக் கதறிப் பார்க்க ஓடி வந்த யாராலும் காப்பாற்ற முடியவில்லை. மகனுக்காக உயிரையே கொடுத்துவிட்டார் மனுஷன். தீயணைப்பு வீரர்கள் வந்து மேலே எடுத்தார்களாம்.

‘எனக்காக அப்பா இறந்துட்டார்’ என்று பையன் அழுது கொண்டேயிருந்ததாகச் சொன்னார்கள். இதுதான் உள்ளுக்குள்ளேயே உறுத்திக் கொண்டேயிருந்தது. 

இருக்கும் கொஞ்ச நஞ்ச வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு வேலையை மட்டுமே கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டியதில்லை. வாழ்வதற்கான ஒத்தாசைதான் வேலையும் சம்பளமும். அதுவே வாழ்க்கை என்றால் வாழ்நாளில் கணிசமான நாட்களையும் வருடங்களையும் இழந்துவிடக் கூடும். உடல்நிலையைக் கெடுத்து மனநிலையைக் கெடுத்து எல்லாவற்றையும் அமெரிக்காக்காரனுக்கு அர்ப்பணிக்க வேண்டியதில்லை. பணிச்சுமை இருக்கும்தான். ஆனால் அது எந்தவிதத்திலும் நமது செயல்பாடுகளை பாதித்து நம் உடலைக் கெடுத்துவிடக் கூடாது.

கடந்த சில நாட்களாக யோசித்து அழுந்தச் சூழ்ந்திருந்த வேலையின் சிக்கல்களை நீக்குவதற்கு மேலும் சில நாட்கள் ஆகிவிட்டன. அவர்கள் மீட்டிங் வைப்பார்கள். அழுத்துவார்கள். கழுத்தைப் பிடிப்பார்கள். எல்லாவற்றையும் சமாளித்து நம்முடைய தினசரி செயல்பாடுகளை மெல்ல மீட்டெடுப்பதுதான் விடுபடுதலுக்கான வழி. அதிகபட்சமாக என்ன நடக்கும்? அதற்கு பயந்து நம்மை அடகு வைத்துவிட வேண்டியதில்லை. எழுதுவதும் வாசிப்பதும் எப்பொழுதுமே வடிகாலாக இருந்திருக்கின்றன. ஆசுவாசம். அதை விட்டிருக்கிறேன். குழந்தையுடன் ஆத்ர்மார்த்தமாக பேச வழியில்லாமல் திணறியிருக்கிறேன். அலுவலகத்தின் ஏசி அறையைத் தாண்டி உலகம் மிகப் பெரிது. அதை விட்டுவிட்டு அமெரிக்காவாழ் மிஸ்ராக்களுக்குக்கும், அகர்வால்களுக்குமாக பினாத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

கடந்த சில நாட்களாக மணீஷூம் அவனது அப்பாவுமாகவே நினைவுகளில் ஊசலாடுகிறார்கள். பலூன் உடைவது போலத்தான். இல்லையா? எல்லாமும் சில கணங்களில் முடிந்துவிடுகிறது.

வேலையை ஓரங்கட்டிவிட்டு நேற்று அருவி படம் பார்த்தேன். அமேசான் ப்ரைமில் இருக்கிறது. வாசிப்பதற்காக சில புத்தகங்களை எடுத்து வைத்திருக்கிறேன். எழுதத் தொடங்கியிருக்கிறேன். வேலை ஒரு பக்கம். நாம் நாமாகவே இருக்க வேண்டும். பல்பு எரிவது போல இதை உணர்ந்து கொள்ள ஒரு நஞ்சுண்டாவின் மரணத்தை நேரில் பார்க்க வேண்டியிருந்திருக்கிறது. கொடுமை.

Jan 12, 2018

பேசாப் பொருளைப் பேசத் துணிதல்

புனிதப்படுத்தப்பட்ட ஒன்றைப் பற்றி யாராவது பேசும் போது வெறியெடுத்தவர்களைப் போலக் கிளம்புவது சமீபமாக அதிகரித்திருக்கிறது. தீபாபவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்றால் ‘நீ யாருடா?’ என்பார்கள். விநாயகர் சதுர்த்திக்காக நீர் நிலைகளைக் கெடுக்க வேண்டாம் என்றால் ‘எங்களுக்குத் தெரியும்..நீ கிளம்பு’ என்பார்கள். கிறித்துவத்தைப் பற்றி உன்னால் பேச முடியுமா? இஸ்லாம் பற்றி நீ விமர்சனம் செய்ய முடியுமா? என்று அடுக்குவது வழக்கம். 

இதைச் சமீபமாக என்று கூடச் சொல்ல முடியாது. காலங்காலமாக வல்லான் சொல்வதுதானே நியாயம்? வரலாற்றில் ஏகப்பட்ட தகவல்கள் முற்றாக அழிக்கப்பெற்று தமக்குப் பிடித்த வகையில் வரலாறு எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் காலத்தில் விவாதங்களுக்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் இடமில்லாமல் வெர்ச்சுவல் ரெளடிகளின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது. அலைபேசியில் அழைத்துப் பேசி பதிவு செய்து ‘அவனை ஒரு வழியாக்கிட்டேன்’ என புளகாங்கிதம் அடைகிற மனநிலைதான் பெருகி வளர்ந்திருக்கிறது. 

சமீபகாலத்தில் அறிவு சார்ந்து நிகழ்ந்த ஆழமான விவாதம் என்று எதைச் சொல்ல முடியும்? தொலைக்காட்சிகளுக்கு அன்றைக்கு எது சூடோ அதுதான் விவாதப் பொருள். நான்கைந்து பேர்களை அழைத்து வைத்துக் கத்தவிட்டு டி.ஆர்.பியை ஏற்றிக் கொண்டு சமோசா கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். இங்கே எல்லாவற்றுக்கும் இரண்டு நாட்கள்தான் ஆயுள் என்பது துரதிர்ஷ்டம். ஒற்றை வரியைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு மட்டையைச்  சுழற்றுகிறவர்கள்தான் சுற்றிலும் இருக்கிறார்கள்.

இப்படியே எதைப் பற்றியும் அறிவார்ந்த விமர்சனங்களும் விவாதங்களுமில்லாமல் ஒரு தசாப்தத்தைக் கடத்தினால் எந்தச் சலனமுமற்ற மொன்னையான சமூகமாக தமிழ் சமூகம் மாறிவிடும் அல்லது எதைப் பற்றியும் புரிதலில்லாத ரவுடிக் குழுக்களாக மாறியிருப்போம். ஆண்டாளையும் தீபாவளிவையை மட்டுமில்லை. பெரியாரைப் பற்றிப் பேசினாலும் ஒரு குழு கத்தியைத் தூக்கிக் கொண்டு வரும். அம்பேத்கரைப் பற்றிய கேள்விகளை எழுப்பினாலும் அடி விழும். தமிழ் தேசியத்தைப் பற்றிய குரல் எழுப்பினால் கழுத்தை நெரிப்பார்கள். இந்திய தேசியம் பற்றி விமர்சனம் செய்தால் சண்டைக்கு வருவார்கள். தகவல் தொடர்பு எளிமையாக்கப்பட்டு அவை நம் விரல்களுக்கிடையில் வந்த பிறகு எல்லாவற்றையும் புனிதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘அதைப் பத்தி நீ பேசக் கூடாது’ என்று தடுத்து எல்லாவற்றையும் முரட்டுத்தனமாக ஆதரிக்கும் சிறு சிறு குழுக்கள் நிறைய உருவாகியிருக்கின்றன. 

நாகரிகம் என்பதே உருமாறி, அழிந்து, புதுப்புது வடிவங்களை நோக்கி நகர்ந்து கொண்டேயிருப்பதுதான். நிரந்தரம், சாஸ்வதம் என்றெல்லாம் எதுவுமில்லை. உரையாடல்கள் வழியாக ஒவ்வொன்றும் தம்மைப் புதுப்பித்துக் கொள்வதும் அழிந்து போவதும்தான் அந்தச் சமூகத்தை பக்குவப்பட்ட சமூகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது. அதற்கு அனுமதிக்காமல் வெற்றுப் பெருமையைக் கத்தியபடியே தடியைத் தூக்கிக் கொண்டு நின்றால் எதைப்பற்றியுமே துணிந்து ஒரு கருத்தைச் சொல்ல இயலாத சூழல்தான் உருவாகும். பிறகு விவாதமாவது வெங்காயமாவது. இன்றைக்கு நாம் வரலாறு என்று படித்துக் கொண்டும் நம்பிக் கொண்டும் இருப்பது முழுமையான வரலாறுதானா என்ற கேள்வி எழ வேண்டியதில்லையா? கடவுள்களின் வரலாறுகளும் கதைகளும் புனிதமாக்கப்பட்ட சம்பவங்களும் அப்படியே நிகழ்ந்தவைதானா? இன்றைக்கு நாம் தலைவர்களாகக் கருதிக் கொண்டிருப்பவர்களை மறுவிவாதங்களுக்கு உட்படுத்த வேண்டியதில்லையா? நன்மைகளையும் தீமைகளையும் தொடர்ந்து விவாதத்துக்குட்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டியது சமூகத்தில் முக்கியமான செயல்பாடு.

நாம் நம்பிக் கொண்டிருப்பனவற்றில் பெரும்பாலானவை ஊதிப் பெருக்கட்டவை. கட்டமைக்கப்பட்டவை. மறைத்துத் திரிக்கப்பட்டவை. சரியோ, தவறோ- இவற்றையெல்லாம் யாராவது எங்கேயிருந்தாவது பேச ஆரம்பிக்கட்டும். எல்லாவற்றைப் பற்றியும் முழுமையான அலசல்களும் ஆராய்ச்சிகளும் தேவையாக இருக்கின்றன. எழுப்படும் சர்ச்சைகளுக்கு பொருள் பொதிந்த தர்க்கப் பூர்வமான பதில்களும் பதில் விவாதங்களும் அவசியமாக இருக்கின்றன. ஆனால் அப்படியானதொரு காலகட்டத்தில் நாம் இல்லை என்றுதான் ஒவ்வொரு சம்பவங்களும் உணர்த்துகின்றன. 

எதைப் பற்றியும் உடைத்துப் பேசாமல் எல்லாவற்றையும் பூசி மொழுகி கல் தோன்றி முன் தோன்றாக் காலத்திலேயே என்று இழுத்துக் கொண்டிருந்தால் காட்டுமிராண்டித்தனம்தான் வளரும். வைரமுத்து ஆண்டாள் பற்றிப் பேசிய முழுக்கட்டுரையும் இணையத்தில் இருக்கிறது. முழுமையாக வாசித்து முடிக்க இருபது நிமிடங்கள் ஆகக் கூடும். ஆனால் அதற்குக் கூட பொறுமையில்லை. ‘என்னதான் சொல்ல வருகிறார்’ என்று கூட கவனிக்காமல் அவரை அழைத்து ‘உங்கம்மா கதவைத் திறந்து வெச்சிருந்தாங்களா’ என்று ஒருவர் கேட்கும் ஒலிக்கோப்பைக் கேட்க நேர்ந்தது. அபத்தம். வைரமுத்து பேசியது தவறு என்றால் அதற்கு பதில் சொல்ல தரவுகளைத் தயாரிக்க முடியாதா?

எல்லாவற்றிலும் சூடாகவே இருந்து எதைச் சாதிக்கப் போகிறோம்? ஆண்டாளைப் பற்றிய விவாதம் ஒரு பக்கமெனில் இயேசுவைப் பற்றிய விவாதமும் நடக்க வேண்டும். நபிகளைப் பற்றிய உரையாடலும் உருவாக வேண்டும். முத்தலாக், மதமாற்றத்தில் ஆரம்பித்து சாதியம், தமிழ் தேசியம் வரைக்கும் எல்லாவற்றைப் பற்றியும் திறந்த மனநிலையுடன் எதிர் தரப்பை அணுகுகிற மனநிலை எல்லாம் எந்தக் காலத்திலும் வராதா? 

ஒட்டிப் பேசுவதற்கு சில குழுக்கள் இருப்பின் அதை வெட்டியும் மறுத்தும் விவாதத்தை வளர்த்தெடுக்க இன்னொரு குழு இருக்க வேண்டும். அதுதானே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும்? ‘உங்கம்மா யோக்கியமா?’ என்று ஒருவன் கிளம்பி வந்தால் ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று நினைக்கிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கும். எழுதப்பட்ட, நமக்குச் சொல்லப்பட்ட கதைகளையும் புனைவுகளையும் அப்படியே உருவேற்றிக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு எந்தவிதமான வரலாற்று ஆய்வுகளும் விவாதங்களுமில்லாமல் கடத்துவது நாகரிகமடைந்த சமூகத்திற்கு பொருத்தமானதில்லை. அது நம்மைப் பழைய பெருங்காய டப்பாவாகவேதான் வைத்திருக்கும். உள்ளுக்குள் சில சொட்டு ரத்தங்களுடன் கூடிய டப்பாவாக.

Jan 10, 2018

லா.ச.ராவின் நினைவுக் குறிப்புகள்

'குழந்தை மரணித்துத் தூளியில் எடுத்துக் கொண்டு சென்றாலோ, வேறு அருகிலோ தூரத்திலோ, இவர் கண் பார்வை படும்படியாக சவ ஊர்வலம் வந்து கொண்டிருந்தாலோ என்ன அவசர வேலையாய் சென்று கொண்டிருந்தாலும் அந்த இடத்தில் நின்று செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டுக் கும்பிட்டு வழி அனுப்புவார். குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவரைக் கும்பிடுவார். சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தையைக் கும்பிடுவார். புத்தாடை அணிந்து அவ்ந்தால் புதுப்புடவை கட்டி வந்து நமஸ்கரித்தால் கும்பிட்டுப் பின் ஆசிர்வதிப்பார். இரவு பெய்த மழையில் குளித்துக் காலையில் மலர்ச்சியில் சிரித்துக் கொண்டிருக்கும் செம்பருத்தியைக் கும்பிடுவார். ஆர்பரித்துக் கொட்டும் குற்றால அருவியைக் கும்பிடுவார். அத்துமீறிக் கட்டவிழ்த்துக் கொண்டு ஓடும் கன்றுக் குட்டியைக் கும்பிடுவார். இலையில் கச்சிதமாய்ப் பரிமாறப்பட்டு அதனதன் இடத்தில் அமர்ந்திருக்கும் உணவு வகைகளைக் கும்பிடுவார். இவற்றைக் கும்பிட்டதைவிட இவர் சாமி கும்பிட்டது குறைவுதான்’

லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் பற்றிய அவரது மனைவி ஹைமாவதி எழுதியிருக்கும் நினைவுக் குறிப்பு இது. இதை வாசித்த பிறகு லா.ச.ரா பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். புத்தகம் முழுவதையும் வாசித்து முடித்துவிட்டேன். லா.ச.ராவின் மனைவி திருமதி.ஹைமாவதியின் குறிப்புகளைப் புத்தகமாக்கி விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பத்தி புத்தகத்தின் கடைசி சில பக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது. வாசித்த பிறகு மனம் கனமாகிவிட்டது.  


கடந்த வாரத்தில் பாரதிமணி அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்த போது அவரிடம் கூடுதலாக சில பிரதிகள் இருந்தன.  ‘அன்பு நண்பனுக்கு’ என எழுதில் கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டு புத்தகம் பற்றி நிறையப் பேசினார். ‘இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்களா?’ என்று அவரிடம் கேட்டேன். அவருக்கும் நூல் குறித்து நிறைய ஆச்சரியங்கள்.

லா.ச.ரா தொண்ணூற்றொரு வயது வாழ்ந்தவர். 1916 ஆம் ஆண்டு அக்டோபர் 29ல் பிறந்து அதே அக்டோபர் 29, 2007 மறைந்தார். எழுத்தாளர் என்பதைத் தாண்டி தொண்ணூறுகளைத் தாண்டி வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையப் படிப்பதில் நிறையச் சுவாரசியங்கள் இருக்கின்றன. எத்தனை அனுபவங்களைச் சேர்த்திருப்பார்கள்? அந்த ஒவ்வொரு அனுபவமும் அவர்களைத் தட்டி நெகிழ்த்து மெருகூட்டி ஆசான்களாக மாற்றுகின்றன. அதிலிருந்து சிட்டிகையை கிள்ளி எடுப்பதே பெரும்பாடம்தான்.

தங்களது தினசரி செயல்பாட்டில் தொடங்கி எல்லாவற்றிலும் உருவேறிக் கிடக்கும் அந்த அனுபவங்களை அவருடனேயே வாழ்ந்த இன்னொருவர் சொல்லச் சொல்லக் கேட்பது பெரிய பாடம். தம்மைப் பற்றித் தாமே எழுதுவதைவிடவும் நம்மோடு கூடவே இருந்தவர்கள் கவனித்து உள்வாங்கி எழுதுவதில்தான் சுவாரசியம் அதிகம். இந்த நூலின் பலமே அதுதான். கத்தரித்து அடுக்கிய சொற்கள் இல்லை. பேச்சுவழக்குதான். மடித்துத் திருகிய வாக்கியங்கள் இல்லை. பிராமண வீட்டு உரையாடல் நடைதான். ஆனாலும் புத்தகத்தின் அடிநாதம் நம்மை எங்கேயோ இழுத்துப் பிடிக்கிறது.

பாரதி மணி, இந்நூலின் பிரதியைக் கொடுத்தவுடனேயே பாடமாகத்தான் வாசிக்க விரும்பினேன். புத்தகமும் அப்படித்தான் இருந்தது.

காலையில் நான்கரை மணிக்கு காபி, மதியம் பதினோரு மணிக்கு முழுச்சாப்பாடு, இரவில் தயிர் சாதம் என்பதில் ஆரம்பித்து ரசத்துக்கு மிளகு எண்ணிப் போடுவது வரைக்கும் மனிதர் ஒவ்வொரு கணத்தையும் முழுமையாக வாழ்ந்திருக்கிறார் என்று தோன்றியது. 

ஹைமாவதி தமது மகனுடன் ஓசூரில்தான் வாழ்கிறார். விரைவில் சந்திக்க வேண்டும்.

எவ்வளவுதான் வேலைச்சுமை என்றாலும் என்னுடைய ஒரு தினத்தின் கடைசியான பணியாக வாசிப்பு இருக்கும். குறைந்தபட்சம் பத்துப் பக்கங்களாவது வாசித்துவிட்டு வாசித்து முடித்த பக்கத்தில் ஒரு துண்டுச்சீட்டை அடையாளத்திற்காகச் செருகிவிட்டு உறங்குவது வழக்கம். கடந்த ஒரு வாரமாக கடுமையான பணிச்சுமை. ஒரு வழியாக்கிவிட்டார்கள். இந்தப் புத்தகத்தைத்தான் வாசித்தேன். ஒரு தாத்தா நம்மோடு இருப்பது போலவே இருந்தது.

லா.ச.ராவின் நாவல்களில் ஏதேனுமொன்றை வாசித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாசிப்பதுதான் சரி. தனது எழுத்துக்களில் ஒவ்வொரு சொல்லையுமே சலித்துப் பொறுக்கி எடுத்து எழுதுகிற எழுத்தாளர் அவர். தனது வாழ்க்கையை இவ்வளவு ரசித்து வாழ்ந்த ஓர் எழுத்தாளனால் மட்டுமே அப்படியான எழுத்தை எழுதுவது சாத்தியம். நூல் குறித்து மேலும் விரிவாக எழுத நிறைய இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல் பட்டியல் தயாரித்தால் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். 

திருமதி லா.ச.ராவின் நினைவுக் குறிப்புகள்- ஹைமாவதி ராமாமிர்தம், விஜயா பதிப்பகம்.

Jan 8, 2018

அவர்களுக்கு என்ன தெரியும்

வெள்ளிக்கிழமையன்று வெளியூர் கிளம்புவதாகத்தான் உத்தேசம். போக்குவரத்துத் துறையின் வேலை நிறுத்தத்தால் வீட்டிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. ஒருவிதத்தில் நல்லதுதான். சனிக்கிழமையன்று மகனின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு வரச் சொல்லியிருந்தார்கள். இத்தகைய கூட்டங்களுக்கு மனைவி செல்வதுதான் வழக்கம். இந்த முறை மாறிவிட்டது.

‘பையன் படிப்பில் பிரச்சினையில்லை’ என்றுதான் டீச்சர் ஆரம்பித்தார். எனக்கு முன்பாக ஆசிரியையிடம் பேசிக் கொண்டிருந்த பெற்றோர் அதைத்தான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ‘ஆங்கிலத்தில் மட்டும் ஏன் ஏ கிரேடு’ என்பதுதான் அவர்களின் பிரச்சினையாக இருந்தது. மற்றவற்றில் அவர்களது குழந்தை ஏ+ போலிருக்கிறது.

மகியிடம் ‘நீ போய் விளையாடு’ என்று சொல்லிவிட்டு ‘இங்க பாருங்க..அவன் படிக்கலைன்னாலும் பிரச்சினையில்லை’ என்றேன். 

குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு முடிக்கிற வரைக்கும் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் குழந்தைகளின் ஆர்வத்தைக் கண்டறிவதுதான் வேலையாக இருக்க வேண்டும். ‘இப்படித்தான் கிதார் வாசிப்பார்கள்’ ‘இதுதான் கராத்தே’‘நீச்சல் இப்படி அடிப்பாங்க’ என்று விதவிதமான வாய்ப்புகளைக் காட்டினால் போதும். எதையும் அழுத்திச் சொல்லித் தர வேண்டியதில்லை. உலகின் வர்ணங்களைக் காட்டினால் குழந்தைகள் தமக்கு எது பிடிக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். 

அப்படித்தான் என் சிட்டுக்குருவி மண்டை கருதுகிறது. அப்படியில்லாமல் ‘நீ இதைத்தான் செய்ய வேண்டும். இப்படித்தான் வளர வேண்டும்’ என்று குழந்தைகளிடம் திணித்தால் அவர்களுக்கு வெறுப்புதான் வளரும்.

Let them enjoy their learning. ஒவ்வொரு பாடத்துக்குமான அறிமுகம்தான் பத்து வயது வரைக்கும் குழந்தைகளுக்கான அவசியம். ‘அதை மட்டும் செஞ்சீங்கன்னா போதும்’ என்றேன் ஆசிரியையிடம். குழந்தைகளை அவர்கள் போக்கில் படிக்க விட்டு விட வேண்டும். நூற்றுக்கு நூற்றிப்பத்து மதிப்பெண்கள் வாங்கச் சொல்லி வதைக்க வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பிலேயே ராமானுஜங்களை எதிர்பார்ப்பது குழந்தைகளின் மீதான பெரியவர்களின் வன்முறை.

‘ஆர் யூ சீரியஸ்?’ என்றார் ஆசிரியை. ஆமாம் என்றேன்.

ஆசிரியைக்கு இவனைப் பற்றித் தெரியும். சில சமயங்களில் வகுப்பில் பொது அறிவுப்போட்டிகள் நடத்துவானாம். முன்பு ஒரு முறை சொல்லியிருக்கிறான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் கேள்விகள் கேட்பேன். இணையம்தான் துணை. இயற்பியல், வேதியியல், வானியல் என சகலமும் கலந்து கட்டிக் கேட்பதுண்டு. அவனால் எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள முடிகிறதோ அதை வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவதுண்டு.

முன்பொருமுறை ஏதோ பேச்சுவாக்கில் எங்கள் அம்மா ‘ஃபேமிலி ப்ளானிங்’ என்ற வார்த்தையை உதிர்த்துவிட்டார். 

அதைக் கேட்டுக் கொண்டிருந்தவன் ‘ஃபேமிலி ப்ளானிங்ன்னா என்ன?’ என்றான். என்ன செய்வார்களோ அதைச் செய்தார்கள். அம்மா பேச்சை மாற்றி விட்டார். இந்த மாதிரியான கேள்விகளை அவன் எழுப்பினால் அன்றைய தினமே அவனைத் தனியாக அழைத்து பதில் சொல்லித் தந்துவிடுவேன். ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜனில் இருந்து நிறைய. பிறவற்றைச் சொல்லித் தரும் போது போகிற போக்கில் டெஸ்ட்டிக்கிள், ஓவரிஸ் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுத்தால் அவனுக்கும் தயக்கம் எதுவும் இருப்பதில்லை.

இணையத்தில் ஒரு படத்தைக் காட்டி கருமுட்டையிலிருந்து கரு உண்டாவதைத் தடுப்பதற்காக செய்யப்படுகிற அறுவை சிகிச்சை என்ற போது புரிந்து கொண்டான். ‘ஆமாம்..நாய் குட்டி போடாமல் இருக்க நாய்க்கு ஆபரேஷன் செஞ்சதா வீரப்பன்காட்டு அப்பிச்சி சொன்னாரு’ என்றான். அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. எங்கேயாவது கேள்விப்பட்டிருப்பார்கள். மூன்றாம் வகுப்பு படித்த போது எனக்கு ஊரில் இருந்த அத்தனை கெட்ட வார்த்தைகளும் தெரியும். ஆனால் முழுமையாகத் தெரிந்திருக்காது. எந்த வார்த்தை எந்த உறுப்பைச் சுட்டுகிறது என்று தெரியாமலே பேசிக் கொண்டிருப்பேன். யார் வழியாகவோ, எங்கேயோ இருந்து அரைகுறையாகத் தெரிந்து கொள்வதைவிட நாமாகவே சொல்லிக் கொடுத்துவிடுவது நல்லதுதானே?

அவனது வகுப்பில் முப்பது மாணவர்கள். பத்துப் பத்து பேராக மூன்று குழுக்களாக அமைத்து கேள்விகள் கேட்பதாகச் சொல்லியிருக்கிறான். அப்படியொரு பொது அறிவுப்போட்டியில் ‘ஃபேமிலி ப்ளானிங் என்றால் என்ன?’ என்று கேட்டிருக்கிறான். ஆசிரியை மயக்கம் போடாத குறைதான். ஏதோ சொல்லி வேறு கேள்வியைக் கேட்கச் சொல்லியிருக்கிறார். கடந்த முறை வேணி பெற்றோர் ஆசிரியர் கூட்டத்துக்குச் சென்ற போது ஆசிரியை இதைச் சொன்னாராம். ‘அப்பனும் மகனும் சேர்ந்து ஏதோ சதி செய்கிறார்கள்’ என்று நினைத்திருப்பாள்.

இதைக் கேள்விப்பட்ட பிறகு சற்று அலர்ட்டாகி விட்டேன். ‘இதெல்லாம் அறிவுக்காகச் சொல்லித் தர்றேன்...தேவையில்லாமல் வெளியில் பேச வேண்டாம்..உன்னை அதிகப்பிரசங்கி என்பார்கள்’ என்ற எச்சரிக்கையுடன் மட்டுமே அடல்ட்ஸ் ஒன்லி விவகாரங்களைப் பேசுவது வழக்கமாகியிருக்கிறது. குழந்தைகளுக்கு இதெல்லாம் தேவையா என்றால் தேவையில்லைதான். ஆனால் எல்லாவற்றையுமே குழந்தைகள் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறு எதுவுமில்லை என்று நினைப்பேன்.

குழந்தைகளிடம் எவற்றையெல்லாம் மறைக்கிறோமோ அவற்றின் மீதுதான் அவர்களின் கவனம் குவியும். க்யூரியாசிட்டி. அதைத்தான் தோண்டித் துருவுவார்கள். பெரும்பான்மையான நேரம் அதில்தான் கவனம் செல்லும். எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்கிற பக்குவத்தை பெற்றவர்கள்தான் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். 

மீசை முளைக்கிற பருவத்தில் கசமுசா பற்றியே நினைத்து நினைத்து நேரத்தை வீணடிக்காமல் இருந்திருந்தால் ஒழுங்காகப் படித்து டாக்டராகியிருப்பேனோ என்னவோ! எம்புருஷனும் கச்சேரிக்குப் போகிறான் என்ற நினைப்பில் ஐடித்துறையில் சேர்ந்து இந்த பிரேசில் ப்ராஜக்டில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்க வேண்டியதில்லை.

Jan 7, 2018

போக்குவரத்துத் துறை

சித்தப்பா பேருந்து நடத்துநர். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே காக்கி சட்டைதான். விடுப்பு எடுக்கவே மாட்டார். வீட்டில் ஏதாவது நிகழ்வு என்றாலும் கூட பணியை முடித்துவிட்டு வந்து கலந்து கொள்வதுதான் வழக்கம். அவர்கள் விடுப்பு அளிக்கிறார்களோ இல்லையோ இவர் வெகு சின்சியர். அப்படி இருந்த மனிதர் கடந்த ஒன்றிரண்டு மாதங்களாக விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதற்கு அவர் அளிக்கும் கட்டணம் மாதம் பத்தாயிரம் ரூபாய். இலஞ்சம்தான். காலம் முழுக்கவும் ஒரு மனிதன் குடும்ப நிகழ்வுகளுக்காகக் கூட விடுப்பு எடுக்காமல் சேர்த்து வைத்த விடுமுறைகளை தான் பயன்படுத்திக் கொள்ள மாதம் பத்தாயிரம் ரூபாயை லஞ்சமாக வழங்க வேண்டியிருக்கிறது என்பது மட்டுமே இத்துறையின் லட்சணத்தைக் காட்டிவிடும்.

தமிழக அரசுத்துறைகளில் மிக மோசமாகப் பராமரிக்கப்பட்டு, மிகவும் கொடூரமான அளவில் ஊழல் தலைவிரித்தாடுகிற துறை என்றால் அது போக்குவரத்துத்துறைதான். பெயருக்குத்தான் சொகுசுப் பேருந்து. வண்டியின் லட்சணத்தைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? இருக்கைகள் குதிக்கும். சாளரங்களை மூட முடியாது. லொட லொட சத்தம் தூங்கவிடாது. மிகைப்படுத்திச் சொல்லவில்லை. தொண்ணூற்றைந்து சதவீதப் பேருந்துகள் இப்படித்தான். நடத்துநர்களிடம் கேட்டால் ‘நாங்க என்ன சார் செய்வது?’ என்பார்கள். அவர்கள் என்ன செய்ய முடியும்? வாகனங்கள் வாங்குவதில் ஊழல், உதிரிப் பாகங்கள் வாங்குவதில் ஊழல் என்று எல்லாவற்றிலும் கைவைத்துவிடுகிறார்கள். தொண்ணூறுகளுக்குப் பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சர்களாக இருந்தவர்களின் சொத்து மதிப்பு உயர்வை யாராவது ஆய்ந்தால் நிலைமை பல்லிளிக்கும்.

வாகனங்கள் வாங்குவதில் ஊழல், உதிரிகளில் திருடுவதையெல்லாம் விட்டுவிடலாம். பணியாளர்கள் அனுபவிக்கும் சிரமங்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டால் போதும். பணி நியமனத்துக்கு ஏழு அல்லது எட்டு லட்ச ரூபாய் என்பதில் ஆரம்பித்து, விடுப்பு வழங்குவதற்குக் கூட லஞ்சம் என்பது வரை சகலத்திலும் தொழிலாளியின் வயிற்றில் அடிக்கிறார்கள். பேருந்து நிலையங்களில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடத்துநர் அல்லது ஓட்டுநர்களிடம் பேசுவதை கவனித்திருக்கிறீர்களா? அடிமைகளிடம் பேசுவதைப் போல பேசுவார்கள். செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் செய்கிற லோலாயம் அதைவிட அதிகமாக இருக்கும். இதே லோலாயத்தை பக்கத்தில் இருக்கும் கர்நாடகத்தில் பார்க்க முடியாது. எல்லை மீறுகிறார்கள் என்று தெரிந்தால் நடத்துநரும் ஓட்டுநரும் பேருந்தை விட்டு இறங்கிச் சென்றுவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழகத்தில் ஊழியர்கள் நடுங்குவார்கள். அதனால்தான் விடுப்பு தராமல் தாளிப்பதிலிருந்து ஊழியர்களின் அத்தனை உரிமைகளிலும் கை வைக்கிறார்கள்.

முதன் முறையாக போக்குவரத்து ஊழியர்கள் துணிந்து களத்தில் இறங்கியிருக்கிறார்கள். மக்களுக்குச் சிரமம்தான். ஆனால் அதே சமயம் அவர்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளை மாநிலம் புரிந்து கொள்ளட்டும்.

‘கண் புரை அறுவை சிகிச்சைக்கு விடுமுறை தாங்கய்யா’ என்று கேட்ட ஓட்டுநரிடம் ‘சரி போய்ட்டு மூணு நாளில் வந்துடுங்க’ என்று சொன்ன அயோக்கியத்தனமான அதிகாரியைத் தெரியும். அதிகாரிகளிடம் கேட்டால் ‘மேல இருந்து ப்ரஷர்’ என்பார்கள். ஒவ்வொரு ஓட்டுநருக்கும் இலக்கு உண்டு. KMPL. கிலோமீட்டர் பெர் லிட்டர். அதே போல நடத்துநருக்கு வருமான இலக்கு உண்டு. இந்த ஆகாவழி வண்டிகளை வைத்துக் கொண்டு எப்படி இலக்கை அடைய முடியும் என்று நொந்து போவார்கள். இலக்கு நிர்ணயிப்பது தவறில்லை. ஆனால் அதற்கேற்ற கட்டமைப்புகள் இருக்க வேண்டியதில்லையா. இப்படி தொழிலாளர்களை நசுக்கி மிச்சம் பிடித்த பணம் எல்லாம் எங்கே போனது? பெரும்பாலான போக்குவரத்து மண்டலங்கள் அடமானத்தில் இருக்கின்றன. கிட்டத்தட்ட பதினெட்டாயிரம் கோடி ரூபாய் கடனாக இருக்கிறது. இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் நட்டத்தில் துறை இயங்குகிறது. இதில்தான் மேல்மட்டத்தில் நடக்கும் ஊழல், அதிகாரிகளின் மிரட்டல், அரசுக்கு ஆதரவான தொழிற்சங்கத்தினர் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குகிறார்கள். இவையெல்லாம் ஊழியர்களை எரிச்சல் அடையச் செய்யாமல் என்ன செய்யும்? 

டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடிக்கான பணம், 8 கோட்டங்கள், 20 மண்டலங்கள் அங்கே அளவுக்கதிகமான அதிகாரிகள் என்று செலவுகள் ஒரு பக்கம் நெருக்க, சரியான பராமரிப்பின்மை, தலைவிரித்தாடும் ஊழல் என்றெல்லாம் தாறுமாறு செலவுகள் பெருக, தமக்கான பலன்களைக் கூட அடைய முடியாத  ஊழியர்களின் மன உளைச்சல்  என்பதெல்லாம் இன்னொரு பக்கமுமாக போக்குவரத்துத் துறையை ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கின்றன. கார்போரேட் நிறுவனங்களில் இலாபம் குறையும் போதெல்லாம் ஊழியர்களின் சம்பளப் பலனில் கை வைப்பார்கள். இங்கேயும் அதுதான் நடக்கிறது. கடைநிலை ஊழியர்களின் பலன்களை நிறுத்தி வைக்கிறார்கள். எங்கேயோ யாரோ செய்கிற தவறுகளுக்கு ஊழியர்கள்தான் பலிகடாவாகுகிறார்கள். 

‘ஓய்வு பெறுகிற தருணத்தில் இருக்கிற ஆட்களை ஏதேனும் சிக்கலில் சிக்க விடுங்கள்’ என்று கூடச் சொல்வதாகச் சொல்கிறார்கள். அந்தச் சிக்கலைக் காட்டி ஓய்வுகாலப் பலன்களை நிறுத்தி வைக்க முடியும் என்பதால் அப்படிச் செய்கிறார்களாம். எவ்வளவு கொடுமை? வாழ்நாள் முழுவதும் பேருந்திலேயே கசங்கிப் போகும் தமக்கான பலன்களைக் கொடுங்கள் என்றுதான் ஊழியர்கள் கேட்கிறார்கள்.

வழக்கமாக போக்குவரத்துறையில் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கம் பலமானதாக இருக்கும். போராட்டங்களின் போது தொழிற்சங்கத்தினரை அமைச்சர் அழைத்து ‘முடிச்சு விடுங்கப்பா’ என்று சொல்லி பெட்டியைத் தருவார். பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக புளகாங்கிதம் அடைந்து அறிவிப்பார்கள். இப்பொழுது தொழிற்சங்கங்களால் கூட எதுவும் செய்ய முடியவில்லை என்றால் ஊழியர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம். அத்தனை வெறுப்பில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்களின் போராட்டங்களை முறியடிக்க முடியவில்லையென்றால் இப்பொழுதெல்லாம் அரசு நாடுவது நீதிமன்றங்களைத்தான். ஒரே தீர்ப்பில் முடக்கிவிடுகிறார்கள். சமீபத்தில் ஆசிரியர்களின் போராட்டம் அப்படித்தான் முடக்கப்பட்டது. இன்றைக்கு போக்குவரத்து ஊழியர்கள் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறியிருக்கிறார்கள். ‘என்ன செய்வாங்க? பலன்களை நிறுத்துவாங்க...இப்போ மட்டும் என்ன வாழுது’ என்கிறார்கள். அதுதான் நிதர்சனம்.

ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது போக்குவரத்துறையைத் தனியார் மயமாக்குங்கள் என்றெல்லாம் கூவுகிறவர்களைப் பார்த்தால் ஆபாசமாக இருக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் மாதாந்திர வருமானம், பேருந்துகளிலேயே இரவுகளில் கொசுவர்த்திச் சுருளை பற்ற வைத்துக் கொண்டு உறங்கும் அவர்களின் வாழ்க்கை முறை, நேரத்துக்கு உணவில்லாமல் வாங்கிக் கொள்கிற அல்சர், உடல் உபாதைகள், வாரத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை, பொங்கலும் இல்லாத, தீபாவளியுமில்லாத தொழில் என்பதையெல்லாம் புரிந்து கொண்டவர்கள் அப்படிப் பேச மாட்டார்கள். தனியார் மயமாக்குதல் என்பதை எதிர்காலத்தில் செய்யலாம். இன்றைக்கு வேலை செய்து கொண்டிருப்பவர்களின் பலன்களை வழங்குங்கள் என்றுதான் கேட்கிறார்கள். உங்கள் வியாக்கியான விளக்குமாறைத் தூக்கிக் கொண்டு வருவதை நிறுத்துங்கள். ப்ளீஸ்!

Jan 2, 2018

ரஜினிகாந்த்

பாட்ஷா படவிழாவில் ரஜினி பேசிய பிறகு எங்கள் ஊரிலிருந்து தலைவர் வீட்டுக்கு வேன்களில் சென்றார்கள். அப்பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். வெள்ளியங்கிரி என்ற நண்பன் தானும் நாயக்கன்காட்டிலிருந்து செல்லும் வண்டியில் செல்வதாகச் சொன்னான். எங்கள் வீட்டில் விடமாட்டார்கள். அவன் கையில் ஒரு புத்தகம் இருந்தது. ரசீது புத்தகம். அப்பாவுக்குத் தெரியாமல் ஐம்பது ரூபாயைக் கொடுத்து ரசீது வாங்கி வைத்துக் கொண்டேன். ரசிகர் மன்றத்தினர் ஊர் முழுவதும் வசூல் செய்து கொடி கட்டிக் கிளம்பினார்கள். ஏகப்பட்ட வண்டிகள் கிளம்பின. ரஜினி பாடல்கள் பின்னணியில் ஒலிக்க அவர்கள் சிதறுகாய் அடித்த போது உடல் சிலிர்த்து அடங்கியது.

சென்னை சென்ற வெள்ளியங்கிரி திரும்பி வந்து தங்களை போயஸ்கார்டன் பகுதிக்குள்ளேயே விடவில்லை என்றான். ‘எப்படியும் தலைவருக்கு செய்தி போயிருக்கும்’ என்றான். இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்பொழுது ரஜினிக்கு இவ்வளவு சொட்டை இருந்ததாக நினைவில் இல்லை. தலையில் கொஞ்சம் முடி இருந்தது. இப்பொழுது எனக்கு இருப்பது போல. வெள்ளியங்கிரியைப் பார்த்து பல வருடங்களாகிவிட்டது. அவனது அப்பாவைப் பார்த்தேன். ‘அவனுக்கு கல்யாணம் ஆகி புள்ள இருக்குது’ என்றார். ‘வயசுக்கு வர்ற வயசுல’ என்றார். அந்தப் பயணக்குழுவில் பொடியன் வெள்ளியங்கிரி. அதில் வயது முதிர்ந்த ஒருங்கிணைப்பாளரை நினைத்துப் பார்க்கிறேன். அப்பொழுதே அவருக்கு ஐம்பது வயது இருக்கும். இந்நேரம் பேரனுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கக் கூடும்.

கடைசியில் தலைவர் அறிவித்துவிட்டார். காலத்தின் கட்டாயத்துக்கு செவி மடுத்திருக்கிறார். ஆண்டவனின் கட்டளையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ரஜினிக்கு வயதாகிவிட்டது என்பது பிரச்சினையில்லை. எம்.ஜி.ஆர் அதிமுகவை 1972ல் தொடங்கிய போது அவருக்கு ஐம்பத்தைந்து வயது. எம்.ஜி.ஆரின் அரசியல் அனுபவத்துடன் ரஜினியை ஒப்பிட முடியாது. எம்.ஜி.ஆர் காங்கிரஸில் இருந்திருக்கிறார். திமுகவில் இருந்திருக்கிறார். உட்கட்சி பிரச்சினைகள் நெருக்கிய போது அதைச் சமாளித்திருக்கிறார். எம்.ஜி.ஆரை விட்டுவிடலாம். ஆனால் வயதுடனும், அரசியல் அனுபவத்துடனும் என்.டி.ஆருடன் ரஜினியை ஒப்பிட முடியும். திரு. ராமாராவ் தெலுகு தேசம் கட்சியை 1982ல் தொடங்கிய போது அவர் அறுபது வயதைத் தொட்டிருந்தார். ஆந்திரப்பிரதேசம் உருவானதிலிருந்தே மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியிடமிருந்து மீட்டெடுப்பதாகச் சொல்லிக் கட்சியைத் தொடங்கி குறுகிய காலத்தில் நாற்காலியைக் கைப்பற்றினார். ரஜினிக்கு அறுபத்தெட்டு வயதாகிறது. கடந்த நாற்பதாண்டு காலமாக ஆண்டு கொண்டிருக்கும் திராவிட அரசியலிலிருந்து தமிழகத்தை விடுவிக்கப் போவதாக நம்புகிறார். 

வயதிலும் அரசியல் அனுபவத்திலும்தான் ரஜினியை ஓரளவுக்கு என்.டி.ஆருடன் ஒப்பிட முடியுமே தவிர தேர்தல் அரசியலில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கின்றன. மக்களிடம் தமக்கு உருவாகியிருக்கும் நம்பகத்தன்மை மிக முக்கியமானது. ‘வந்தாலும் வருவேன்’ என்று இருபது முப்பது வருடங்களாகச் சொல்லிக் கொண்டேயிருந்து மிக இயல்பாகவே மக்களிடம் நம்பகத்தன்மையை இழக்கத் தொடங்கியதில் ஆரம்பித்து இன்றைய சூழலில் தேர்தலில் விளையாடுகிற பணம் வரைக்கும் எவ்வளவோ எதிர்நிலைகள் ரஜினிக்கு எதிராக இருக்கின்றன. எண்பதுகளில் இருந்த அரசியல், ஊடகச் சூழல் இப்பொழுது இல்லை. தொண்ணூறுகளில் ரஜினியை ஊடகங்கள் தெய்வமாகக் காடிய போது அப்படியே நம்புகிற ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருந்தார்கள். இன்றைக்கு ஊடகங்கள் ரஜினியை தெய்வமாகக் காட்டத் தயாராக இருக்கின்றன. ஆனால் மிக இயல்பாகக் கலாய்த்து ஒதுக்கிவிடுகிற தன்மையை மக்கள் அடைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு சாமானியனிடமும் ஒரு ஊடகம் இருக்கிறது. கொண்டலாம்பட்டியிலிருந்து ஒரு மீம்ஸை உருவாக்கி தமிழகம் முழுக்கவும் பரப்ப முடிகிற வல்லமை சாதாரணனுக்கு இருக்கிறது. மிக எளிதாக எவ்வளவு பெரிதாகக் கட்டமைக்கப்படும் ஊடக பிம்பத்தையும் சாதாரணமாக நிராகரித்துவிடுகிறார்கள்.

தொண்ணூறுகளில் தமக்கு இருந்த செல்வாக்கு இல்லை என்பது ரஜினிக்கும் தெரிந்திருக்கக் கூடும். 

அரசியல் ரீதியில் என்னதான் விமர்சனம் செய்தாலும் திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வங்கி மிக உறுதியானது. அதை உடைக்கத்தான் இதுவரை மேலேழுந்து வந்த ஒவ்வொரு மூன்றாவது சக்தியும் தொடர்ந்து முயன்றிருக்கின்றன. ஏற்கனவே இருக்கும் வலுவான திமுக, அதிமுகக் கட்டமைப்பை உடைத்து புதியதாக ஒரு கட்சியை ஒவ்வோரு வார்டுகளிலும் வளர்த்தெடுப்பது என்பதும் அவ்வளவு எளிதான காரியமில்லை. இதையெல்லாம் செய்து மூன்றாவது சக்தியாக உருவெடுத்துவிட முடியும் என பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த் என்று நடிகர்கள் ஒரு பக்கம் முயன்று தோற்றுப் போக, மூப்பனார், ராமதாஸ், வைகோ என அரசியல்வாதிகளும் இன்னொரு பக்கம் தோற்றுக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவும், கருணாநிதியும் களத்தில் இல்லாத போது சில்வண்டுகளுக்கெல்லாம் மூக்கு வியர்க்கும் போது காலங்காலமாக போக்குக் காட்டி வந்த ரஜினிக்கு அந்த எண்ணம் வருவதில் தவறில்லை. அதிமுகவையும் திமுகவையும் ரஜினி வென்றுவிடக் கூடாது என்று சொல்லவில்லை. அதற்கான சாத்தியங்கள் ரஜினியிடம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அதீதமான மக்கள் செல்வாக்குடன் கட்சி தொடங்கி நான்கைந்து வருடங்களில் ஆட்சியைப் பிடிப்பது ஒரு வழிமுறை. ஆட்சியைப் பிடிக்கிற அளவுக்கான செல்வாக்கையும் நம்பகத்தன்மையையும் அவர் இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.‘நம்ம கட்சி’ என்ற உணர்வோடு ஒவ்வோர் ஊரிலும் தொண்டர்களை இணைத்து கட்சியைக் கட்டமைத்து ஆட்சியைப் பிடிப்பது இன்னொரு வழிமுறை. அதற்கான ஆற்றலும் பணமும் வயதும் ரஜினியிடம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

திமுக, அதிமுக தாண்டிய மூன்றாவதுசக்தி வலுப்பெற்றால் அதை உளப்பூர்வமாக ஆதரிக்கலாம். ரஜினி மட்டுமில்லை- காங்கிரஸோ, பிஜேபியோ கூட அப்படி வலுப்பெற்றால் சரிதான். ஆனால் நேர்மையாகக் களம் கண்டு வலுவடைய வேண்டும். மக்களின் நம்பகத்தன்மையைப் பெற்று ஆட்சிக்கு வரட்டும். அப்படியில்லாமல் சகுனி அரசியலைச் செய்து மறைமுகமாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் கை வைத்தால் அதை எல்லாவிதத்திலும் எதிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ரஜினி அத்தகையதொரு வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அந்த பாபா அவருக்கு அருள் புரியட்டும்.

தனிப்பட்ட முறையில் ரஜினி நல்ல மனிதர் என்பதிலும் மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உடையவர் என்பதிலும் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் அடிப்படையில் அவர் தைரியமற்றவர். எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருந்திருக்கிறார். அதுதான் அவரது அரசியல் நுழைவை எதிர்க்கச் செய்கிறது. காலங்காலமாக விரும்பிக் கொண்டிருந்த மனிதர் அடுத்தவர்களின் பகடைக்காயாகிவிடுவாரோ என்ற அங்கலாய்ப்பினால் எழும் எதிர்ப்பு.

ஒருவேளை ரஜினி மூன்றாவது சக்தியாக காலூன்றுவாரேயானால் அது கொள்கை சார்ந்த சக்தியாக இருக்க வேண்டும் என உளப்பூர்வமாக விரும்புகிறேன் . வெளிப்படையாகத் தனது நிலைப்பாட்டைச் சொல்லுகிறபடியாக அமைய வேண்டும். ரஜினியின் அரசியல் நுழைவு என்பது சுயமாகச் சிந்தித்து, கொள்கை சார்ந்து, நல்லவர்களை வேட்பாளராக நிறுத்துவதாக இருக்குமானால் அதனை வரவேற்க எந்தவிதமான மனத்தடையும் இல்லை.  அவரால் மூன்றாவது சக்தியாக தமிழக அரசியலில் ஒரு சலனத்தை உண்டாக்க முடியுமானால் அது தமிழகத் தேர்தல் களத்துக்கும் அரசியலுக்கும் நல்லதுதான். ஆனால் அதுவே சில மறைவான நோக்கங்களுடனும் பின்னணி சக்திகளுக்குக் காவடி தூக்கவும் இயங்குவாரெனில் பூனைக்குட்டி வெளியில் வர வெகு நாளாகிவிடாது. தமது மொத்த செல்வாக்கையும் இழந்து செல்லாக்காசாக அரசியலிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகும். ரஜினியின் சாதாரண ரசிகனாக அதை எந்தக் காலத்திலும் விரும்ப மாட்டேன்.

Jan 1, 2018

இனி வரும் காலம்..

2018 ஆம் ஆண்டின் தொடக்கம் அதன் அக்காக்காரி 2017ன் தொடக்கத்தைப் போல இல்லை. பட்டாசுச் சத்தமே கேட்கவில்லை. ஒருவேளை நம் காதுதான் செவிடாகிவிட்டதோ என்றுதான் தோன்றியது. காலையில் எட்டு மணிக்கு நகரத்தின் பல இடங்களிலும் சுற்றி வந்து பார்த்தாலும் சூழல் அப்படித்தான் இருக்கிறது. குப்பை எதுவுமில்லை. இங்கு மட்டும்தான் அப்படியா என்று தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் பார்த்தால் கூட கடந்த வருடத்தில்தான் மிகப்பெரிய வேதனைகளையும் துன்பங்களையும் சந்தித்ததாக நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள். உற்சாகத்தை வடியச் செய்ததில் 2017க்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கக் கூடும். 

எப்படியோ போகட்டும். முடிந்த வருடம் முடிந்ததுவிட்டது.

2018 ஐ வரவேற்க வேண்டுமென்பதில் வெகு தீவிரமாக இருந்தேன். சேலம் இரும்பாலைக்குச் செல்லும் சிக்னலில் நேற்று ஒரு சிறுவன் பலூன் விற்றுக் கொண்டிருந்தான். எட்டு வயதுக்குள் இருக்கும். ஒவ்வொரு பலூனும் பத்து ரூபாய். அந்தச் சிறுவனைப் பார்க்கும் வரைக்கும் பத்து மணிக்கு முன்பாக பெங்களூருவை அடைந்து பிரிகேட் சாலைக்குச் செல்ல வேண்டும் என்ற நினைப்பில் வந்து கொண்டிருந்தேன். பொதுவாக சனிக்கிழமை இரவுகளிலேயே யுவசக்தியால் நிரம்பிக் கிடக்கும் அந்தச் சாலை புத்தாண்டுத் துவக்கத்தில் கேட்கவே வேண்டியதில்லை. போதை தலைக்கேற இறுகிய உடைகளிலிருந்து உடல் பிதுங்க நடனமாடுவார்கள். வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம் என்றிருந்தேன். சிக்னல் சிறுவனிடம் இரண்டு பலூன்களை வாங்கிக் கொண்டோம். அவனைப் பார்த்த பிறகு பிரிகேட் சாலைக்குச் செல்ல வேண்டும் என்பதெல்லாம் வடிந்து போனது. அவனுக்கும்தான் விடிந்தால் புத்தாண்டு. வீட்டுக்கு வந்தவுடன் உறங்கிப் போனேன்.

ஒவ்வோர் ஆண்டும் முடிந்தவுடன் திரும்பிப் பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள், வழக்கமான மாணவர்களுடன் புதிதாக இணைந்திருக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவி, அவர்களுக்கான ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உயிர் காக்கும் மருத்துவ உதவிகள் என்று அறக்கட்டளையிலிருந்து சில முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறோம். இன்னமும் எவ்வளவோ திட்டங்கள் இருக்கின்றன. கனவுகளும்தான். காலமும் கடவுளும்தான் துணை இருக்க வேண்டும்.

சில மனிதர்களைச் சந்திக்கும் போது மனம் உண்மையிலேயே கசங்கிப் போகிறது. ‘எல்லோரும் நல்லா இருக்காங்க’ என்பதெல்லாம் ஒருவிதமான மேம்போக்கான வாதம். நம் வட்டத்திற்குள் இருந்து நாமாகவே கற்பிதம் செய்து கொள்வது. இங்கு மனித வாழ்க்கை மிகக் குரூரரமானது. ஊர்ப்பக்கம் சொல்வார்கள். ‘ஒரு பூ ஏற மிதிச்சுட்ட’ என்று. கொடுத்து வைத்துப் பிறந்தவர்கள் என்று அர்த்தம். நீங்களும் நானும் கொடுத்து வைத்துப் பிறந்தவர்கள். வாழ்க்கையின் கசங்கல்களுக்குள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிற மனிதர்கள் புவியின் ஏதோவொரு விளிம்பில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அத்தகைய மனிதர்களை எதிர்கொள்வதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. 

‘ரேஷன் அரிசி வந்துட்டு இருக்கிறதால பரவாயில்லைங்க’ என்று ஒரு பெண்மணி அழும் போது அதற்கு ஏதேனும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட கணவரைக் கட்டிலில் கட்டி வைத்து கஞ்சி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரிசிதான் ஒரு குடும்பத்தின் பட்டினியைப் போக்குகிறது என்பதை சில வருடங்களுக்கு முன்பாக யாரேனும் சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். ‘மானியத்தை ஒழிப்போம்’ என்று பேசுவது வளர்ச்சி என நினைத்திருந்தேன். அப்படி ஒழிக்கப்படும் மானியம் எத்தனையோ குடும்பங்களில் நேரடி பாதிப்பை உண்டாக்கும் என்பதை கண்கூடாகப் பார்க்க நேர்கிறது.

நம்மைச் சுற்றிலும் நடக்கிற ஒவ்வொரு காரியத்திலும் ஏதோவொரு நுண்ணரசியல் இருக்கிறது. யாரையோ மேலே தூக்கிப் பிடித்து யாரையோ கால்களின் கீழாகப் போட்டு நசுக்கிறார்கள். டைனிங் டேபிளில் அமர்ந்து தேநீரை உறிஞ்சபடியே ‘சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்’ என்று டார்வினைக் கையைப் பிடித்து இழுத்து தக்கன தப்பிப் பிழைக்கும் என்றும் உலகம் அப்படித்தான் என்றும் நா கூசாமல் பேசுகிறோம். சமூகப் பொருளாதாரத்தின் ஆழமான சிக்கல்களைப் பேசாமல் எல்லாவற்றையும் மேம்போக்காக கீறிவிட்டுச் சென்று கொண்டேயிருக்கும் ஒரு சமூகத்தை தொழில்நுட்பம் மிக இலாவகமாகக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளைப் போலவே 2017லிலும் நிறையச் செய்திகளைத் தொட்டுவிட்டு மறந்த சமூகம்தான் நம்முடையது. வெறுமனே கவன ஈர்ப்புப் போராளிகளை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறோம். எல்லாவற்றையும் எல்லோருக்கும் அறிவித்துவிட எத்தனிக்கும் மனம். எத்தனை லைக், எத்தனை ஷேர், ஃபாலோயர்ஸ், ரிட்வீட் என்று எண்ணிக்கை சார்ந்த கவனத்துக்காக ஏங்குகிற மனம். நடித்து, போலியாக பிரஸ்தாபித்து கவனத்தை ஈர்க்கும் மனநிலை. எதைப்பற்றியும் கவலையில்லாமல் சகமனிதர்களிடம் அற்பக் காரணங்களுக்காக வன்மத்தையும் கோபத்தையும் கொட்டிக் கிழிக்கும் உபாயங்கள். 

யோசித்துப் பார்த்தால் பயமில்லாமல் இல்லை. 

உலகத்தின் இயல்பான வர்ணங்களையும் அதன் ஆழ பரிமாணங்களையும் புரிந்து கொள்கிற மனநிலை ஒவ்வொருவருக்கும் வாய்க்கட்டும். எதிர்வரும் ஆண்டில் எதிர்பார்ப்பு என்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை. எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகும் போது பெருத்த ஏமாற்றங்களாகிவிடும். எது குறித்தும் எந்த எதிர்பார்ப்புமில்லை. உலகம் அதன் போக்கில் இயங்கட்டும். அவரவர் அவரவருக்கான அர்ப்பணிப்புடன் பொறுப்புணர்ந்து செயல்பட புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆசைப்படும் அத்தனையும் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஆசைப்படுகிற ஒவ்வொன்றிலும் சக மனிதனுக்கு எள்முனையளவு கூட துன்பமும் வலியும் நேராதிருக்கட்டும்.