Dec 29, 2018

எல்லாருக்கும் பெய்யும் மழை

25.11.2018 தேதியிட்ட கல்கி வார இதழில் எழுத்தாளர் திரு.ரமணன் நிசப்தம் குறித்து எழுதிய கட்டுரை. திரு.ரமணன் அவர்களுக்கும், கல்கி இதழுக்கும் நன்றி.

(திரு.ரமணன்)


வலைதளம் மூலம் வற்றாத சேவை

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதுவதின் மூலம் பெரிய அளவில் என்ன சமூக சேவை செய்துவிடமுடியும்? சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்ல பணியைச் செய்ய வேண்டுமென்றால் அடைப்படையான தேவை பணம். அது தொடந்து எழுதிக்கொண்டிருப்பதால் மட்டுமே எப்படிக் கிடைக்கும்? என்று எண்ணும் நம்மைப்போலப் பலரை திகைக்க வைக்கிறார் கொங்கு மண்டல இளைஞர் வா.மணிகண்டன். தன் வலைப்பூவில் எழுதுவது மூலமே பெரிய அளவு நிதி திரட்டி உதவிக்கொண்டிருக்கிறார்.

கரட்டடிபாளையம்(ஈரோடுவட்டம்) என்ற கிராமத்துக்காரரான இவர் கணினியில் முதுகலைப்பட்டதாரி. தொடர் பணிமாற்றங்களுக்கும், முயற்சிகளுக்கும், பயிற்சிகளுக்கும் பின்னர் பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல பணியில் அமர்ந்தவர். கவிஞரான இவரது வலைப்பூ “நிசப்தம்”. பேர்தான் நிசப்தமே தவிர மனிதர் மனித உணர்வுகள் வாழ்வின் யாதர்த்தங்கள், சமூக அவலங்கள் அரசியல் போன்ற பல விஷயங்களில் தன் கருத்தை உரக்கச் சொல்பவர். அதனாலேயே இவரது நிசப்தத்தின் வாசகர் வட்டம் குறுகிய காலத்தில் மிகப் பெரிதாக வளர்ந்தது.

ஒரு முறை இவரது வாசகர் ஒருவர் கேட்டக்கொண்டதற்கு ஏற்ப.கல்விச்செலவுக்கு வந்த வேண்டுகோளை தன் வலைப் பூவில் வெளியிட அதற்கு வந்த ஆதரவைக் கண்டு ஆச்சரியப்பட்டுப்போனார் மணிகண்டன். தன் வாசகர்களில் இத்தனை பேர் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையும், உதவிகள் செய்வதில் ஆர்வமும் கொண்டிருப்பதை கண்டு ஊக்கமடைந்து தொடர்ந்து அதுபோல உதவிகள் செய்யத்துவங்கினார். உள்நாடு வெளிநாடு என்று பல இடங்களிலிருந்து முகமறியாத மனிதர்களிடமிருந்து பணம் வரத்துவங்கியது. ஆரம்பகாலங்களில் தனது பெயரிலேயே நன்கொடைகளைப் பெற்று உதவி வந்த இவர் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் நிசப்தம் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் அறப்பணிகளை நிர்வகித்து வருகிறார்.

கடந்த இரண்டாண்டில் மட்டும் இந்த அறக்கட்டளை செய்திருக்கும் உதவிகள் ஒரு கோடிக்கும் மேலிருக்கும். நல்ல இலாபத்தில் இயங்கும் ஒரு கார்பேர்ட், தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு தன்னார்வல நிறுவனம் இதைப்போல செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஒரு தனி மனிதன், அதுவும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மனிதர் செய்திருப்பதை அறியும்போது பிரமிப்பாகயிருக்கிறது

அறக்கட்டளையின் வரவு செலவுகளை மாதந்தோறும் வங்கியின் அறிக்கையோடு தன் நிசப்தம் வலைப்பூவில் வெளியிடுகிறார். வங்கியின் ஸ்டேட்மென்ட்டில் வரிசை எண்ணிட்டு அவை பெறப்பட்ட நாள் நன்கொடை/ வேண்டுகோளின் விபரங்கள்(எந்த மாதிரி உதவி கோரப்பட்டிருக்கிறது) அதன் தற்போதைய நிலவரம், போன்ற விபரங்களை ஒரு பட்டியலாக இணைத்து வெளியிடுகிறார்.

“உரியத் தளராத ஆர்வத்துடனும் மங்காத அறவுணர்ச்சியுடனும் வா மணிகண்டன் பணியாற்றிவருகிறார். அவரது நிசப்தம் அறக்கட்டளை ஆதரவற்றவர்களுக்கான மருத்துவ உதவிக்கும், எளியோரின் கல்விக்கும் பெரும்பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்முன் இதற்காக தலைவணங்குகிறேன்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

கல்வி மருத்துவ உதவிகளைத்தாண்டி சமூகப்பணிகளையும் செய்கிறது நிசப்தம். அறக்கட்டளை. 2015 பெரு வெள்ளத்தில் அரசு நிவாரணப்பணிகள் அடையாத கிராமங்களைத் தேடிச் சென்று உதவியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு முதல் ஏரி குளங்களை தூர்வாரி மீட்டெடுத்தல், சமுதாய காடுகள் உருவாக்கம் போன்றவற்றைச் செய்யத் துவங்கியிருக்கிறார்கள் .

வேமாண்டம்பாளையம் ஒரு சிறிய கிராமம். ஒரு வருடத்துக்கு முன்பாக அந்த ஊரில் இருந்த குளத்தில் இருந்த சீமைக் கருவேல மரத்தையெல்லாம் நிசப்தம் சார்பில் அழித்துக் கொடுத்திருக்கிறார்கள்.. குளம் மட்டுமில்லை- பஞ்சாயத்து முழுவதிலும் இருந்த சீமைக் கருவேலம் அழிக்கப்பட்டன. கிட்டத்தட்ட அறுபது ஏக்கர் குளம். சில ஊர்களில் இருக்கும் குளங்கள் அக்கம்பக்கத்து ஆறுகளில், ஓடைகளில் நீர் ஓடினால் நிரம்ப வாய்ப்பிருக்கிறது. இந்தக் குளத்துக்கு அந்த வாய்ப்பில்லை. மழையைத் தவிர வேறு எந்த வழியுமில்லை. வானம் பார்த்த பூமி. காய்ந்து கருவாடாக்கிக் கிடந்த அந்தக்குளம். மழையால் இப்போது நிரம்பியிருக்கிறது.. ஒரு வருடக் காத்திருப்புக்குப் பிறகான பெரு மகிழ்ச்சி இது. என்கிறார் மணிகண்டன்.. பல ஆண்டுகளாகக் காய்ந்து கிடந்த பூமியில் நீர் நிரம்பிக் கிடப்பதை பார்க்க யாருக்குத்தான் மகிழ்வாக இருக்காது? அடுத்த இரண்டாண்டுகளுக்கு அந்தக் கிராமத்தில் தண்ணீருக்கு பிரச்சனையில்லை. நிரம்பிய நீரைக்கண்டு மனம் நிறைந்திருக்கும் நிசப்தம் இதுபோல மேலும் இரண்டு கிராமங்களுக்குச் செய்திருக்கிறார்கள்.

இம்மாதிரி நீர் நிலைகளின் அருகில் அடர் வனம் என்ற முறையில் நிறைய மரங்களை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அடர்வனம் என்பது ஒரே இடத்தில் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களைத் தேர்ந்தெடுத்து மிக நெருக்கமாக நட்டு வளர்ப்பது,. மிக வேகமாக வளரும் அந்த மண்ணின் தன்மைக்கேற்ற மரக்கன்றுகளைக் கண்டுபிடித்து நடுகிறார்கள் ஒரு அல்லது இரண்டு ஆண்டுகளில் அந்த இடத்தில் ஒரு சின்ன அடர் வனம் உருவாகிறது. கோட்டுப்புள்ளாம்பாளையம் என்ற கிராமத்தில் இரண்டாயிரம் செடிகளுடன் ஒரு வனத்தை உருவாக்கி அது செழித்து என அந்தப்பகுதி இப்போது பக்கத்து கிராம மக்களுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்டாகியிருக்கிறது

இத்தனை பெரியபணிகளை எப்படி இவரால் சாதிக்க முடிகிறது.? “தொடர்ந்த முயற்சிகள் தான் சார்” என்கிறார். முதலில் கிராமங்களில் இளைஞர்களை அழைத்துபேசுகிறோம். நிறையவே பேசுகிறோம்.. அரசியல் வாதிகளிடம் பெற்ற அனுபவத்தால் மிகத் தயங்குவார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கையைப் பெற்றபின் திட்டங்களை விளக்கினால் முன்வருவார்கள். முன் வந்துவிட்டால் பின் வாங்குவதில்லை.வேமாண்டம்பாளையத்தில் அத்தனை பணிகளையும் செய்தது உள்ளுர் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தான். அதிகாரிகளை சந்தித்துபேசினால் 95% பேர் உதவுகிறார்கள் என்று சொல்லும் இவர் சில கிராமங்களில் சவால்களையும் சந்தித்திருக்கிறார். ஆனால் மனம்தளாரமல் தொடர்கிறார்.

“நல்லவர்கள் நான்கு பேர் கொடுக்கும் பணத்தை வாங்கித் தனிப்பட்ட நபர்களுக்கு உதவுவது என்பது ஒரு சங்கிலித் தொடராக இருக்க வேண்டும். உதவி செய்கிறவர்களைவிடவும் உதவி பெறுகிறவர்களிடம் இந்த எண்ணம் வலுக்க வேண்டும். அதுதான் நாம் படுகிற அத்தனை சிரமங்களுக்குமான அர்த்தமாக இருக்கும். நாம் விதைக்கிற ஒவ்வொரு ரூபாயும் அடுத்தடுத்த சந்ததிக்கான விளைபொருட்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். என்று சொல்லும் மணிகண்டன் இப்போது பங்களுரிலிருந்து பணிமாறி கொங்கு நாட்டில் கோவைக்கு வந்திருக்கிறார்.

இவர்களைப் போன்றவர்கள் ஓய்வு நேரம் வார விடுமுறைகளை தியாகம் செய்து சமூக சேவைசெய்வது அவர்களுக்கு அது உள்ளூர அளிக்கும் ஒரு நிறைவுக்காக, விடுதலைக்காக. நம்மைப்போன்ற பலரால் அதைச் செய்யமுடியாது.

மணிகண்டன் போன்றவர்களை முன்வைத்தே ‘எல்லாருக்கும் பெய்யும் மழை’

Dec 26, 2018

முள் கிரீடம்

பதினைந்து வருடங்களுக்கு முன்பாக அம்மாவும் அப்பாவும் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார்கள்.  இளங்கலைப் பொறியியல் படிப்பை முடிக்கும் போதே வேலைக்குச் சென்றுவிட முடியும் என நினைத்திருந்தேன். ஆனால் அவ்வளவாக நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு வரவில்லை. நான்காம் வருடத்தின் இறுதிப் பருவம் நெருங்க நெருங்க பதற்றம் தொற்றிக் கொண்டது.  சென்னை அல்லது பெங்களூருவில் தங்கி வேலை தேடுவதா என்று குழம்பி இறுதியில் ‘எம்.ஈ. படிக்கட்டுமா?’ என்று கேட்டதற்கு மறுப்பேதும் சொல்லாமல் வீட்டில் சம்மதித்தார்கள். அப்பொழுது வருடத்துக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அது தவிர விடுதிக் கட்டணம். வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு எழுதியதில் எம்.டெக் படிப்பில் சென்ஸார் சிஸ்டம்ஸ் டெக்னாலஜியும், மெக்கட்ரானிக்ஸூம் கிடைத்தது. இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். 

‘வங்கியில் கடன் வாங்கிக்கலாம்’ என்றேன். ‘என்னால முடிஞ்ச வரைக்கும் கட்டறேன்..முடியலைன்னா பார்த்துக்கலாம்’ என்றார் அப்பா.

காட்பாடியில் இறங்கிய போதே அம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. விடுதியறையில் பெட்டி படுக்கையெல்லாம் வைத்துவிட்டுக் கிளம்பும் போது அழுது கொண்டேயிருந்தார். பையன் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டான் என்ற வருத்தம் அவருக்கு. ஆனால் கல்லூரியின் வசதிகள் அவர்களுக்கு பிரமிப்பூட்டக் கூடியதாக இருந்தது. எனக்கும்தான். நூலகங்கள், ஆய்வகங்கள் அவற்றின் நவீனத்தன்மை என ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக இருந்தன. பேராசியர்கள் அதைவிட பிரமாதப்படுத்தினார்கள். பி.வி.ஏ.ராவ் என்ற ஐ.ஐ.டியின் பேராசிரியர் ஒருவரின் வகுப்பில் அமர்ந்திருந்தது எந்தக் காலத்திலும் மறக்காது. சுத்தியல் எடுத்துத் தட்டும் போதே அதிர்ச்சியினால் நம் கைகள் வலிக்கத் தொடங்குகிறது. ஆனால் மரங்கொத்தி மரத்தைக் கொத்திக் கொண்டேயிருக்கிறது. அதன் தலைக்கு ஏன் ஒரு பாதிப்புமில்லை? என்று கேட்டுவிட்டு அவரே பதிலையும் சொன்னார். அதன் தலையில் இருக்கும் கொண்டை உட்பட அதன் தலையின் அமைப்பு அதிர்ச்சியை கிரகித்துக் கொள்வதாகவும் சொல்லியதோடு நிறுத்தாமல் அதை நிறுவுவதற்கென ஒரு சமன்பாட்டை எழுதி இதுதான் காரணம் என்றார். 

வாய் பிளந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

விவேகானந்தன் சண்முகநாதன் என்கிற மெக்கட்ரானிக்ஸ் பேராசிரியர் ஐ.ஐ.டி மும்பையிலிருந்து வந்திருந்தார். அவரது ஆய்வகத்தில் ரோபோ ஒன்றிருந்தது. ‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதுல ப்ரோகிராம் செய்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். உண்மையிலேயே அந்தக் கல்லூரியில்தான் பொறியியல் படிப்பின் உயரங்களை உணர்ந்து கொள்ள முடிந்தது. வெற்றுப் பெருமைக்காகச் சொல்லவில்லை- வி.ஐ.டி அப்படியானதொரு பல்கலைக்கழகம்தான். வருமானத்தைத் திரும்பத் திரும்ப கல்லூரியின் வளர்ச்சிக்கெனவே திருப்புகிறார்கள். கற்பனைக்குக்கே எட்டாத வளர்ச்சி அது. எந்தவிதமான அழுத்தமுமில்லாமல் படிப்பு முடியும் போது தொண்ணூறு சதவீதத்தைத் தாண்டியிருந்தேன். ஏகப்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு வந்தன. எனக்குத்தான் மென்பொருள் துறையில் விருப்பமில்லை. சிடிஎஸ், டிசிஎஸ்ஸெல்லாம் விட்டுவிட்டு விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தேன். 

அந்தக் கல்லூரியில் படித்த இரண்டு வருடங்களும் இன்னமும் கனவு போல இருக்கிறது. வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த வண்ணக் கனவு. இப்பொழுது எதற்காகக் கல்லூரி புராணம் என்றால் காரணமிருக்கிறது. சமூக மாற்றங்களைச் செய்ததற்காக சிறந்த முன்னாள் மாணவர் என்ற விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி முன்னாள் மாணவர் தினத்தைக் கொண்டாடுவார்கள். வரும் ஜனவரியில் நடைபெறும் விழாவில் விருது தரப் போவதாக மின்னஞ்சல் வந்திருந்தது. சில விருதுகள் நம்மை சலனப்படுத்திவிடும். இந்த விருது அப்படியானதுதான். கண்டிப்பான அப்பாவிடமிருந்து முதுகில் ஒரு செல்லத் தட்டு வாங்குவது போல. என்னவோ தெரியவில்லை- அப்பாவின் நினைவு வந்து வந்து போனது. அவர் இருந்திருந்து இந்தத் தகவலைச் சொல்லியிருந்தால் மெலிதாக ஒரு புன்முறுவல் பூத்துவிட்டு ‘எப்போ தர்றாங்க?’ என்று மட்டும் என்னிடம் கேட்டிருப்பார். தேதியைச் சொன்னவுடன் அடுத்த வேலையை அவர் பார்க்கத் தொடங்கிவிடுவார். ஆனால் தமக்குத் தெரிந்த அத்தனை பேரிடமும் பெருமையாகச் சொல்லியிருப்பார்.

நாம் படித்த கல்லூரி நம்மை உற்சாகப்படுத்துவது மிகப்பெரிய ஆசுவாசமாக இருக்கிறது. அதே சமயம் விருதுகள் நம்மை உற்சாகமூட்டக் கூடியவையாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. சற்று பதற்றமூட்டக்கூடியவையாகவும் இருக்கலாம். சமீபமாக நிறைய அழைப்புகள் வருகின்றன. புஷ்பவனம் கிராமத்திலிருந்து ஒரு பெண் அழைத்திருந்தார். ‘என் மகளுக்கு ஃபீஸ் கட்டுங்க..புயலில் எல்லாம் போய்விட்டது’ என்றார். அவரது மகள் தனியார் கல்லூரியில் படிக்கிறார். ‘தனியார் கல்லூரியில் படிப்பவர்களுக்கு உதவுவதில்லை’ என்று சொன்னால் ‘அப்ப எங்களை மாதிரியானவங்களுக்கு என்ன வழி’ என்று கேட்கிறார். பதில் சொல்லவே முடியாத தர்மசங்கடமான கேள்வி. இத்தகைய கோரிக்கைகளை நிராகரிக்கும் போது பயமாகவும் இருக்கிறது. பதற்றமாகவும் இருக்கிறது. அழைப்புகளைத் தவிர்க்கும் போது குற்றவுணர்ச்சியும் தொற்றிக் கொள்கிறது. விருது வாங்கும் போது இத்தகைய பதற்றமும் பயமும்தான் விரல்களில் சில்லிடும் எனத் தோன்றுகிறது.

அறக்கட்டளை என்பது தலையில் முள் கிரீடம் அணிந்திருப்பது போல. அதன் சுமையும் அதிகம். அழுத்தமும் அதிகம். ஆனால் அது வேகமாக இழுத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. குதிரையின் பின்னால் கட்டப்பட்ட ஒருவனைப் போல வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறேன். பாராட்டுகளுக்கும் புகழுக்கும் இணையாக வசையும் பேசுகிறார்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்களின் பரிந்துரைகளை நிராகரிக்கும் போது அதன் விளைவுகள் அதிபயங்கரமானவையாக இருக்கின்றன. என்னால் இயன்றதெல்லாம் வெளிப்படையான கணக்கு வழக்கு மட்டும்தான். அதையும் மீறிய சொற்களின் கணைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் மனவலிமையை இறைவன் அருளட்டும் என்று மட்டும் இந்தத் தருணத்தில் வேண்டிக் கொள்கிறேன்.

தேர்வுக்குழுவினருக்கும், கல்லூரிக்கும், நிர்வாகத்திற்கும், நிசப்தம் நண்பர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி.

Dec 20, 2018

கடனும் உழவனும்

விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து நிறைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். ஒரு வடக்கத்திக்காரர் ‘எனக்கு வீட்டுக்கடனும், கார் கடனும் இருக்கிறது. அதை எப்படி விவசாயக்கடனாக மாற்றுவது’ என்று கேட்டிருந்தார். எவ்வளவு எகத்தாளம்? விவசாயிகளின் விவகாரத்தில் காங்கிரஸ் செய்தது, பாஜக செய்யவில்லை என்ற வாதங்களையெல்லாம் தள்ளி வைத்துவிட்டுத்தான் கடன் சம்பந்தமான விவாதத்தை அணுக வேண்டும். 

உழவர்களின் பிரச்சினைகள் மிகச் சிக்கலானவை. நீர் பற்றாக்குறை, வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை, விலை நிர்ணயமின்மை, இயற்கை சார்ந்த பாதிப்புகள் என பிரச்சினைகளின் பரப்பு மிகப் பெரியது. மேம்போக்காக இருந்து பார்த்தால் நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதவை.

எங்கள் பகுதியில் கடந்த சில வருடங்களாக நீர் இல்லாமல் விவசாயமே நடைபெறவில்லை. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் காய்ந்து கிடந்தன. உழவர்களிடம் பேசினால் இருக்கும் துக்கத்தையெல்லாம் மறைத்துவிட்டு ‘வயல் காய்ஞ்சு கிடந்துச்சுன்னா அடுத்த முறை வெள்ளாமை நல்லா வரும்’ என்றார்கள். இந்த வருடம் காவிரியில் நீர் பெருகி, பவானியிலும் நீரோட நெல்லும் நன்கு விளைந்திருந்தது. ஆனால் பரவலாக நோய்த்தாக்குதலுக்குள்ளாகிவிட்டது என்கிறார்கள். விலையுமில்லை. வேளாண்மை பற்றித் தெரியாதவர்கள் ‘அதுக்கென்ன, புல்லுக்கு கூட இந்த வருஷம் கன கிராக்கி’என்பார்கள்- எப்பொழுதோ இருந்த கிராக்கியை மனதில் வைத்துக் கொண்டு. ஒரு வருடம் கிராக்கி உருவாகி இரண்டு லட்ச ரூபாய் சம்பாதித்துவிட்டால் அடுத்த பல வருடங்களுக்கு அடி மேல் அடி வாங்குகிறார்கள்.

இப்படித்தான் விவசாயமிருக்கிறது. வளையலை அடமானம் வைத்து வெறும் மூன்றாயிரம் ரூபாய் கடன் வாங்கி அந்தத் தொகைக்கு உரம் எடுத்து வருகிறவர்கள் இருக்கிறார்கள். 

மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவனுக்குக் கூட குறைந்தபட்ச உத்தரவாதம் என்றிருக்கிறது. வேளாண்மையில் மட்டும்தான் அப்படி எதுவுமேயில்லை. கஜா புயலில் பார்த்தோம் அல்லவா? எவ்வளவோ கனவுகள் இருந்திருக்கும்- அடுத்த கட்டமாக இறக்கவிருக்கும் தேங்காய்களின் வருமானத்தில்தான் மகனுக்கும் மகளுக்கும் கல்லூரிக் கட்டணம் கட்டுவதாக முடிவு செய்து வைத்திருப்பார்கள். ஒரே காற்று அடித்து வீசி எல்லாவற்றையும் அழித்துவிட்டது. ‘பிற தொழில்களில் மட்டும் பாதிப்பில்லையா?’ என்று கேட்பார்கள். இதற்கான பதிலை நான் சொல்லவில்லை. பார்த்து வந்தவர்களுக்குத் தெரியும்- எத்தனை வருட உழைப்பு, எத்தனை வருடங்களுக்கான கனவு அது என்று.

விவசாயத் தொழிலைப் புனிதப்படுத்தவில்லை. அது அவசியமுமில்லை. ஆனால் ‘எனக்குப் பிறகு தனது சந்ததி விவசாயத்துக்குச் செல்லட்டும்’ என்று ஏன் எந்தவொரு உழவனும் சொல்வதில்லை என்று சிந்தித்தால் போதும். அதில் அவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் சுயமாகச் சம்பாதிப்பவர்களில் மிக மோசமாகச் சீரழிக்கப்படும் ஜீவன் என்றால் அவன் விவசாயிதான். தான் கோடிகளில் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்யக் கோருவதில்லை. இரண்டு லட்ச ரூபாயைத் தள்ளுபடி செய்யச் சொல்கிறான். அவ்வளவுதான். திணறிக் கொண்டிருக்கும் அவர்கள் ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறார்கள். 

‘விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வது தவறான முன்னுதாரணம்’ என்று பேசுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நம் தேசத்தின் கிராமப் பொருளாதாரம் பற்றி எந்தவொரு புரிதலுமில்லாத மேட்டுத்தட்டு அறிவுஜீவி என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியும். புள்ளிவிவரங்கள், கணக்கு வழக்குகள் எதுவும் வேண்டியதில்லை. எப்பொழுதாவது நேரம் வாய்க்கும் போது உழவர் சந்தையிலோ அல்லது காய்கறி கட்டி எடுத்துவரும் உழவனிடமோ கால் மணி நேரம் பேச்சுக் கொடுத்தால் புரிந்து கொள்ள முடியும்.

எங்கள் தாய்மாமன் விவசாயி. பத்து ஏக்கர் நிலத்தில் பூஞ்செடி போட்டிருக்கிறார்கள். அறுபது வயதை நெருங்கிவிட்டது. காலையில் நான்கு மணிக்கு எழுந்துவிடுகிறார்கள். நான்கைந்து மூட்டைகள் பறித்தவுடன் வண்டியில் கட்டி பத்துக் கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்று கோயமுத்தூர் செல்லும் வண்டியில் ஏற்றிவிடுவார். ஒரு நாளுக்கு ஐந்தாறு முறை செல்ல வேண்டும். முதலில் செல்லும் மூட்டைக்கு நல்ல விலை. நேரம் கடந்து செல்லச் செல்ல விலை குறைந்து கொண்டேயிருக்கும். மகளுக்குத் திருமணம் செய்துவிட்டார். மகன் வேலைக்குச் சென்றுவிட்டான். ‘ஏன் இவ்வளவு சிரமப்படுறீங்க’ என்கிற கேள்விக்கான பதில் ‘நான் விவசாயி’ என்பதுதான். காலகாலத்துக்கும் கஷ்டப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். இந்தச் சமூகத்தில் ஓரளவுக்கேனும் மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் அப்படி உழைத்தால்தான் உழவனுக்கு சாத்தியம். ஒரு வருடம் சம்பாதிப்பதை அடுத்த மூன்று வருட வேளாண்மை விழுங்கிவிடும்.

பத்து ஏக்கர் விவசாயத்தை விட்டுவிடலாம். அரை ஏக்கரிலும் முக்கால் ஏக்கரிலும் வேளாண்மைத் தொழிலைச் செய்து கொண்டிருப்பவர்களுக்கான வருமானம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? ஆடு, மாடு மேய்த்து பால் கறந்து ஊற்றித்தான் பெரும்பாலானவர்கள் அவர்களது தினசரி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கடனைத் தள்ளுபடி செய்வதால் இந்த தேசம் குறைந்துவிடப் போவதில்லை. 

கடந்த ஒன்றிரண்டு நாட்களாக இதை எதிர்த்துப் பேசுகிறவர்களின் வாதங்களில் கண்களில்பட்டபடியே இருக்கிறது. மாதம் ஒரு லட்ச ரூபாய் வருமானத்தைத் தாண்டிய குடும்பங்கள் கணிசமாகிவிட்ட நம் தேசத்தில் ‘இந்தக் கடனையெல்லாம் தள்ளுபடி செஞ்சா நாடு நாசமா போய்டும்’ என்று பேசுகிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகத்தான் இருக்கும். 

Dec 18, 2018

சைவ அரசியல்

உணவு எப்பொழுதுமே விவாதத்திற்குரியதாகிவிடுகிறது. ஒன்றரைக் கோடி ரூபாய் இட்லி விவகாரமில்லை. அது அரசியல். இது சைவம் - அசைவம் பற்றியது. சைவத்தையும் அசைவத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில் பார்பனர்களின் ஆதிக்கம் இருக்கிறது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் எந்தவொரு சமாச்சாரத்தையும் 360 டிகிரியோடு கூட நான்கைந்து டிகிரிகள் சேர்த்து அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துவிடுகிறார்கள். யார் சொல்வது சரி; யார் சொல்வது தவறு என்றெல்லாம் யோசித்து முடிவுக்கு வருவதற்குள் இன்னொரு சங்கதியைக் கையில் பிடித்துக் கொள்கிறார்கள். 

உணவுப் பழக்கத்தில் நான் தொடக்கத்திலிருந்தே அசைவம்தான். எப்பொழுதெல்லாம் சாப்பிட முரண்டு பிடிக்கிறேனோ அப்பொழுதெல்லாம் பையனுக்கு ‘கறி ஏக்கம் புடிச்சுடுச்சு’ என்று வீட்டில் மிளகு அரைப்பார் அம்மா. குழந்தைகளுக்கு விதவிதமான ஏக்கங்கள் உண்டு. ஏதாவதொரு ஏக்கம் வரும் போது உணவு மீதான விருப்பம் குறைந்துவிடும். கறிக்கான ஏக்கம்- கறி ஏக்கம். சைவத்துக்கு மாற வேண்டும் என்றெல்லாம் நினைத்ததேயில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அசைவம் சேர்த்துக் கொண்டிருந்தேன். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத போது சித்த மருந்துகளை உட்கொண்டார். சித்த மருத்துவர்கள் உணவில் அசைவம் வேண்டாம் என்றார்கள். அப்பா தவிர்த்த போது அவரோடு சேர்த்து நானும் தவிர்த்தேன். ‘அப்பாவுக்கு உடல்நிலை சரி ஆகும் வரைக்கும் சைவமாகவே இருக்கிறேன்’ என்று கடவுளையும் வேண்டிக் கொண்டேன். அப்பாவுக்கு சரியாகவே இல்லை. 

ஆனால் அந்த வேண்டுதல் மட்டுமே சைவத்துக்கு மாறக் காரணமில்லை. அந்தக் காலகட்டத்தில் உருவான வள்ளலார் மீதான ஆர்வம், அவரைப் பின் தொடர்பவர்களுடனான நட்பு, சித்த மருத்துவம் சார்ந்த புத்தகங்கள் என நிறையச் சொல்ல முடியும். சித்த மருத்துவத்தில் அசைவம் உண்டு. கோழியின் ரத்தம், குருவியின் ரத்தம் என மருத்துவர்களே நோய்களுக்குத் தகுந்தாற்போல பரிந்துரைக்கிறார்கள். ஆனால் உணவைப் பொறுத்த வரையிலும் அசைவத்தைவிடவும் சைவம் சிறப்பு என பல சித்த மருத்துவ நூல்களும் வலியுறுத்துகின்றன. சித்த மருத்துவத்தின் சிகாமணியான ஜட்ஜ் பலராமைய்யர் புத்தகத்தைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் ‘அய்யர் அப்படித்தானே சொல்வார்?’ என்று நிராகரித்துவிடுவார்கள். எந்தவொரு சித்த மருத்துவப் புத்தகத்திலும் உணவு முறை பற்றியக் குறிப்புகளின் விவரம் இருந்தால் தேடிப் பார்க்கலாம். சைவம்தான் பிரதானமாக இருக்கும். 

என்னைச் சுற்றிலும் எண்பது வயதைத்  தாண்டி ஆரோக்கியமாக வாழும் பல முன்னோர்கள் ஒரு கட்டத்தில் சைவத்துக்கு மாறியவர்களாக இருக்கிறார்கள். என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் என்னவோ இருக்கிறது என உறுதியாக நம்புகிறேன். ‘அசைவம் சாப்பிடலைன்னா ஒண்ணும் ஆகிடாது’ என்று மனம் மாற இவையெல்லாமும் கூடக் காரணம்.

இன்னொரு முக்கியமான ஒன்றுமிருக்கிறது- மனோவலிமை. சிறுவயதிலிருந்து அசைவம் பழகி திடீரென்று சைவத்துக்கு மாறுவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. நாவும் மனமும் அலை மோதின. தொடக்கத்தில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கறி ஏக்கம் எட்டிப் பார்த்திருந்தது. மீன் மட்டும் உட்கொள்ளலாம். குஸ்கா தவறில்லை என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. வீட்டில் கறிக்குழம்பும் வேகும் போது ‘ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுக்கலாமா’ என்று இருக்கும். சில முறை உண்டதும் உண்டு. இதையெல்லாம் தவறு என்று கருதவில்லை. மனதை இவ்வளவு கட்டுப்படுத்தி எதைச் சாதிக்கப் போகிறோம் என்று கூட நினைத்ததுண்டு. தேவையில்லாமல் மனதைச் சங்கிலி போட்டுப் பூட்டுவது அவசியமற்ற செயல் என்றும் தோன்றியது.

அப்பொழுதுதான் சைவம் என்பதை அறம் சார்ந்த விஷயமாகவும் பார்க்கத் தோன்றியது. மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிற மனதைவிடவும் எந்தவொரு உயிரையும் தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது என்று நினைப்பதுதானே சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அறக்கட்டளை, மனிதம் அது இது என்று பேசுவதைவிடவும் தனிமனிதனாக, உயிர் கொல்லாமை என்பதை பின்பற்ற வேண்டும் என்ற உறுதி பூண்டது அப்படித்தான். ஒரு பழக்கத்திலிருந்து நம்மால் மனதைக்  கட்டுப்படுத்த முடியும் என்பது ஒருவகையில் திருப்தியானது. 

இதுவொன்றும் புதிய கருத்துருவாக்கமில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே வள்ளுவன் எழுதி வைத்ததுதானே புலால் உண்ணாமை. தமிழகத்தில் பரவியிருந்த புத்தமும், சமணமும் வலியுறுத்துவதும் கூட சைவத்தைத்தானே? அம்பேத்கரின் வழியாக புத்தத்தைப் போற்றுகிறவர்கள் கூட இந்துத்துவத்தை எதிர்க்க ‘நான் மாட்டுக்கறி உண்டேன்’ என்று சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. இந்துத்துவ அடிப்படைவாதிகளைச் சீண்ட ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. அதற்காக அசைவத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டியதில்லை. சைவம் என்பது இந்துத்துவம் சார்ந்ததில்லை என்பதைப் பேசிச் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை எனவும் நினைக்கிறேன். சமூக ஊடகங்கள் வலுப்பெற்றுவிட்ட இந்தக் காலத்தில் எதைச் சொன்னாலும் ஆதரிக்க நான்கு பேரும் எதிர்க்க ஆயிரம் பேரும் இருப்பார்கள்.

‘பூச்சிகளைப் பறவைகள் தின்னவில்லையென்றால் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகிவிடும். அது உணவுச் சங்கிலியின் சமதன்மையையே குலைக்கும்’ என்பார்கள். அதுபோலவே மனிதர்களும் அசைவம்தான் என்பது காலங்காலமான நிலை அதை ஏன் சிதைக்க வேண்டும் என்றெல்லாம் கேட்பவர்கள் உண்டு. உணவு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த ஒன்று. ஆனால் அதில் அரசியல் கலப்பதைத் தவிர்க்கவே முடியாது.

சைவம் சந்தோஷமானது. அவ்வளவுதான்.

Dec 13, 2018

கருத்துக்கணிப்புகள் - அரசியல் இல்லை.

தேர்தல் முடிந்தவுடன் நடந்த கருத்துக் கணிப்புகள் எதுவுமே துல்லியமாக இல்லை. மேம்போக்காக அடித்து விட்டிருந்தார்கள். பிக் டேட்டா படித்துக் கொண்டிருப்பதால் இந்த சூட்சமங்களை எல்லாம் தெரிந்து கொள்வது சுவாரசியமாக இருக்கிறது. பெருந்தகவல் (Bigdata) என்பதில் பல துறைகள் இருக்கின்றன. ஒன்றுமில்லாத மாதிரிதான் தெரியும்- இருக்கும் தகவலை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வருவதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறது. உதாரணத்துக்கு ஒன்று- மாவட்டம், அதில் இருக்கும் பஞ்சாயத்துகள், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள மக்கள் தொகை- இதுதான் தகவல் என்று வைத்துக் கொள்வோம். இது எந்த வடிவத்திலும் இருக்கலாம். பிடிஎஃப்பாக இருக்கலாம், வேர்ட் வடிவத்தில் இருக்கலாம். இதையெல்லாம் எக்ஸெல்லில் போட்டு ஒரு வகைப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியிருந்தது. ‘நமக்குத் தெரியாத எக்ஸெல்லா’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மூச்சுத் திணறிப் போனது. கைவசம் இருக்கும் தகவலை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வருவது கூட பிக்டேட்டாவின் ஆட்கள் தேவைப்படும் களம்தான். (unstructured data to structured data). இப்படி நிறைய களங்கள் இருக்கின்றன.

பிக்டேட்டா பற்றி இன்னொரு நாள் பேசுவோம். 

தேர்தல் கருத்துக் கணிப்பைப் பொறுத்த வரையிலும் இரண்டு படிகள் உண்டு. வாக்காளர்களிடம் கேட்டு பதிலை வாங்குவது முதல்படி. இதுவே சிக்கலானதுதான். ஒவ்வொரு தொகுதியிலும் கணிப்பு நடத்த முடியாதல்லவா? குறிப்பிட்ட தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில் எந்தெந்த தொகுதிகளில் எந்த வகையான ஆட்களிடம் கணிப்பு நடத்துகிறோம் என்று துல்லியமாகச் செய்ய வேண்டும். உதாரணமாக சேலத்தில் ‘நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டீங்க?’ என்று கேட்டு பதிலை வாங்கிவிடலாம். முப்பத்தைந்து கிலோமீட்டர் தள்ளி கொங்கணாபுரத்தில் பதிலை வாங்க முடியாது. சிரித்துச் சமாளித்துவிடுவார்கள் அல்லது மாற்றிச் சொல்லிவிடுவார்கள். இரண்டு ஊர்களும் ஒரே தொகுதியில் வரக் கூடும். இடம் மாறும் போது மக்களின் பழக்கவழக்கங்கள் மாறுகிற வாய்ப்புகள் மிக அதிகம். நாம் வாங்கிய பதில்கள் சரியானவை என்ற கணக்கில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தால் தவறான முடிவுக்குத்தான் வந்து சேர்வோம். அதனால்தான் கள அனுபவமில்லாத ஆட்கள் தகவல் சேகரித்தால் சொதப்புவதற்கு வாய்ப்பு அதிகம். 

இரண்டாம்படி புள்ளியியல் வல்லுநர்களுக்கானது. 1200 பேரிடம் கணிப்பு நடத்தியிருந்தால் அதில் ஆண்கள் எவ்வளவு பேர், பெண்கள் எவ்வளவு பேர், வயதானவர்கள், இளைஞர்கள் என விகிதாச்சார அடிப்படையில் பிரித்து அதை மாநிலம் முழுக்கவும் இருக்கும் ஆறு கோடி வாக்காளர்களின் மனநிலையோடு பொருத்துவது மிக முக்கியமான கட்டம். நிறைய Quantitative methods இருக்கின்றன. புள்ளியியல் அறிவில்லாதவர்கள் எந்த மென்பொருளைப் பயன்படுத்தினாலும் தவறான முடிவுதான் வந்து சேரும். இரண்டு படிகளிலும் தொண்ணூற்றைந்து சதவீதம் சரியாகச் செய்தால் மட்டுமே கிட்டத்தட்ட சரியான முடிவுக்கு வர முடியும். 

தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும் போது எளிதான காரியமாகத் தெரியும். ஆனால் மேலே குறிப்பிட்ட சேலம்-கொங்கணாபுரம் உதாரணம் போல நிறையச் சிக்கல்கள் உண்டு. அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவையும் வெளியிட்டார்கள். வழக்கத்தைவிடவும் கூட அதிகமானவர்களைத் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்தார்களாம். ஆனால் முழுமையாகத் தவறாகிவிட்டது. காரணம் என்னவென்றால் அவர்கள் தொலைபேசியில் அழைத்து ‘நீங்க யாருக்கு ஓட்டுப் போடுவீங்க’ என்று கேட்டிருக்கிறார்கள். வதொலைபேசி அரிதாக இருந்த கால கட்டம் அது. மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். கணிப்பு நடத்தியவர்கள் இந்த ஒரு அம்சத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை. மேல்தட்டு மக்களின் வாக்குகள் மட்டுமே முடிவைக் காட்டுவதில்லை அல்லவா?

கருத்துக் கணிப்பைப் பொறுத்தவரையிலும் இந்த இரண்டு படிகள் மேம்போக்காகத் தெரிபவை. ஆனால் அதனுள் மடிப்பு மடிப்பாக ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.

ஆன்லைனில் நடக்கும் கருத்துக்கணிப்புகள் இப்படித்தான். முரசொலியோ அல்லது நமது எம்.ஜி.ஆரோ ஆன்லைனில் கருத்துக் கணிப்பு நடத்தினால் என்னவாகும்? அதை வாசிக்கிறவர்கள் வாக்களிப்பார்கள். முரசொலியின் முடிவு திமுகவுக்கு வெற்றி என்று காட்டும். நமது எம்.ஜி.ஆரின் முடிவு டிடிவியை வெற்றி என்று காட்டும். நானும் நீங்களும் கருத்துக் கணிப்பு நடத்தினாலும் கூட அப்படித்தான் இருக்கும். என்னுடைய கருத்துக்கள் பிடிக்காதவர்கள் எட்டியே பார்க்கமாட்டார்கள். என்னைப் பின் தொடர்கிறவர்களில் பெரும்பாலானவர்கள் என்னுடைய விருப்பு வெறுப்பு சார்ந்தவர்களாக இருப்பார்கள். ஒரு தலைப்பட்சமான முடிவாகத்தான் கிடைக்கும்.

சார்பற்ற, நடுநிலையான தகவல் சேகரிப்பில்தான் கணிப்பின் முழு வெற்றியும் அடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு மட்டும் என்றில்லை. எந்தவிதமான கணிப்புக்கும் இதே சூட்சமம்தான். வணிக நிறுவனங்கள் நடத்துகிற கருத்துக் கணிப்பைக் கூட எடுத்துக் கொள்ளலாம். கடைக்கே வராத ஆளொருவர் அதிசயமாக வந்திருப்பார். அவரின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு முடிவுக்கு வந்தால் கதை கந்தலாகிவிடும்.

பெரும்பாலும் இந்தியாவில் கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருப்பதேயில்லை. ஆனால் கருத்துக்கணிப்பை நடத்துகிற ஏஜென்ஸிகள் கணிசமான தொகையைப் பெற்றுக் கொள்கின்றன. பிக் டேட்டாவைக் கொஞ்சம் படித்துக் கொண்டிருப்பதால் இதையெல்லாம் கவனிக்கத் தோன்றுகிறது. புதிதாகத் தெரிந்து கொள்வது எதுவுமே- அதுவும் நம்முடைய ஆர்வத்துக்குத் தீனி போடுவதாக இருந்தால் இன்னமும் சுவாரஸியம்தான்.

எதிர்காலத்தில் பிக்டேட்டாவில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் உருவாகும் போது கணிப்புகள் சரியாக அமையக் கூடும்.

Dec 10, 2018

மே ஐ ஹெல்ப் யூ?

வீட்டில் இருந்து வேலை செய்கிறேன் என்று சொன்னால் வர வர மரியாதையே இல்லை. பண்ணையத்து ஆளுக்குக் கூட கொஞ்சம் மரியாதை இருக்கும். ‘சாமிக்கு சாத்துற பட்டுத்துணி வாங்கிட்டு வா’, ‘பையனுக்கு தேன் வாழை வாங்கிட்டு வா’, ‘பேங்க்ல பணம் போட்டுட்டு வந்துடு’ என்று ஆளாளுக்கு ஒரு வேலை வைக்கிறார்கள். எல்லா வேலையும் ஒரே நாளில் முடிக்க வேண்டும்.  மூன்றாவது வேலை தம்பி சொன்னது. ‘உன்ர ஆபிஸூக்குப் பக்கத்துலதானே பேங்க் இருக்கு?’ என்று கேட்டால் ‘எனக்கு ஃபோன் பேசக் கூட நேரமில்லை’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டான்.  இதையெல்லாம் அம்மாவிடம் சொல்ல முடியாது. ‘ஊட்டுக்கு ஏதாச்சும் ஒத்தாசையா இருடா’ என்பார். பற்களைக் கடித்துக் கொண்டு இருந்துவிட வேண்டியதுதான்.

எந்த வங்கிக்கு வேண்டுமானாலும் சென்றுவிடலாம். ஸ்டேட் பேங்க் இருக்கிறது பாருங்கள். வெட்டக் கொண்டு போவது போலவே இருக்கும். ஆயிரத்தெட்டு விதிமுறைகள். எல்லாவற்றுக்கும் காசு. அம்மாவின் ஓய்வூதியக் கணக்கு அந்த வங்கியில்தான் இருக்கிறது. அதில் ஒரு நாற்பத்தைந்தாயிரம் ரூபாயை செலுத்த வேண்டிய வேலை எனக்கு.

சரவணம்பட்டிக் கிளைக்குச் சென்றால் ‘உங்க ஏடிஎம் அட்டையைக் கொடுங்க’ என்றார்.  

‘என்ர கணக்கு இல்லீங்க..அம்மாவுதுங்க’ என்றால் ‘அது இங்க சாத்தியமில்லை...’என்றார். வேறொரு நபரின் கணக்கில் பணம் செலுத்த முடியாதாம். அவரே ‘அத்திபாளையம் பிரிவுக்கு போங்க’ என்றார். பெங்களூர் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம். உடலும் குளிர்ச்சியாக இருக்கும். கண்ணும் குளிர்ச்சியாக இருக்கும். கண் குளிர்ச்சி என்றால் மரங்களைச் சொல்கிறேன். நீங்கள் எதையாவது குண்டக்க மண்டக்க எடுத்துக் கொள்ள வேண்டாம். இங்கே கோயமுத்தூரில் வெறும் புழுதிதான் இருக்கிறது. சரவணம்பட்டியில் தொடங்கி ரயில் நிலையம் வரைக்கும் வெறும் புழுதிதான்.

அத்திபாளையம் பிரிவுக் கிளைக்குச் சென்றால் அங்கு பணம் செலுத்தும் எந்திரம் வேலை செய்யவில்லை. அங்கிருந்து கணபதிக்குச் செல்லச் சொன்னார்கள். கணபதி என்பது கோவையில் ஒரு இடத்தின் பெயர். சிவன், முருகன் என்றெல்லாம் இடங்கள் இருக்கின்றனவா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கேயும் எந்திரம் வேலை செய்யவில்லை. என்னய்யா இது வம்பாகப் போய்விட்டது என்று கிளைக்குள் நுழைந்தால் ‘மே ஐ ஹெல்ப் யூ’ என்ற பலகையின் கீழாக வழக்கமாக பெண்கள்தானே இருப்பார்கள். ம்க்கும். சீருடையில் ஒரு கட்டையன். மட்ட மத்தியானம் ஒன்றரை மணி. வெயில் சொட்டையைப் பிளந்திருந்தது. கண்கள் நிறையப் புழுதி. எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளலாம். கட்டையரிடம் ‘சார்...எங்கேயுமே வேலை செய்யல...பக்கத்துல வேற எங்க சார் இருக்கு?’என்றேன். 

‘ராமநாதபுரம், அத்திபாளையம் பிரிவுப் பக்கமாகப் போங்க’ என்றார். இந்த ராமநாதபுரம் ராமேஸ்வரம் ராமநாதபுரம் இல்லை. கோயமுத்தூரில் இப்படி ஒரு இடம். கோவைவாசிகள் குழப்பவாதிகள். 

‘அத்திபாளையம் பிரிவிலிருந்துதாங்க வர்றேன்...ராமநாதபுரம் இங்க இருந்து பக்கமா?’ என்றேன். இந்தக் கேள்வியில் ஏதாவது தவறு இருக்கிறதா? ‘உங்களுக்கே தெரியலைன்னா எனக்கு எப்படித் தெரியும்’ என்கிறார்.

‘என்னங்க இப்படி எகிறுறீங்க?’ என்றால் ‘நீ என்ன மினிஸ்டரா?’ என அவர் கேட்டவுடன் கோபம் வந்துவிட்டது. வேறு ஏதாவது ஒருவரைச் சுட்டிக் காட்டியிருந்தால் கூட கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். நம்மூர் மந்திரிகள் அவ்வளவு பெரிய அப்பாடக்கர்களா? மந்திரிகள் கேட்டால்தான் பதில் சொல்வாராம். உச்சியில் இருக்கும் நான்கேகால் முடிகளும் சிலிர்த்து நின்றன. என்னைப் பார்த்தால் பொல்லி மாதிரிதானே தெரியும்? இவன் என்ன செய்துவிடுவான் என்று எழுந்து வந்துவிட்டான். அந்த ஆள் வருவதைப் பார்த்தால் அடித்துவிடுவான் போலிருந்தது. அவன் அடித்தால் அவ்வளவுதான். தூக்கிச் செல்ல ஸ்ட்ரெச்சர்தான் வர வேண்டும். நமக்கு எதுக்கு ஸ்டெரெச்சர் எல்லாம்? சட்டையைப் பிடித்து தர தரவென இழுத்து ஓரத்தில் போட்டுவிடுவார்கள். நமக்கு பலமே நாக்குதான். அதை மட்டும் ஒழுங்காகப் பயன்படுத்திவிட வேண்டும் என்ற கணக்கில் ‘நீ யூனிபார்ம்ல இருக்க...அடிச்சா நீ காலி’ என்றேன். அது அவனை யோசிக்கச் செய்திருக்க வேண்டும். ‘சிசிடிவி கேமரா இருக்குல்ல’ என்றும் ஒரு பிட்டைச் சேர்த்துப் போட்டேன்.

ஆனால் ஒன்று. இவ்வளவு பிரச்சினை நடக்கிறது. யாருமே எதுவுமே கண்டுகொள்ளவில்லை. அவரவர் இடத்திலிருந்து பார்க்கிறார்களே தவிர ஒருவரும் குரல் எழுப்பவில்லை. ‘கோயமுத்தூர்க்காரங்க பக்குவமானவங்க கண்ணு’- இப்படித்தான் சொன்னார்கள். என்ன இருந்தாலும் பக்கத்து ஊர் என்ற நினைப்பில் நம்பிக் கொண்டிருந்தேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இரண்டு பேர் சண்டைப் போட்டுக் கொண்டால் நமக்கு என்ன வந்தது? சண்டையை எண்டர்டெய்ன்மெண்டாக எடுத்துக் கொள்கிறவர்கள்தான் எல்லாப் பக்கமும். 

கோபமாகப் பேசியபடியே வெளியில் வந்துவிட்டேன். பொடனி மீது கூட அடி விழவில்லை என்ற தைரியம் வந்தவுடன்தான் ஓரிடத்தில் கால்கள் நின்றன. படபடப்பே அடங்கவில்லை. மெல்ல எட்டி உள்ளே பார்த்த போது கட்டையன் வேறொரு ஆளிடம் பேசிக் கொண்டிருந்தான். விறுவிறுவென்று தலைமை மேலாளர் அறை வரைக்கும் சென்றுவிட்டேன். அவரிடம் பேசத் தொடங்கிய போது படபடப்புடன் நாக்குக் குழறியது. இப்படியெல்லாம் சண்டையில் நாக்குக் குழறி பல வருடங்கள் ஆகிவிட்டன. 

‘ஒரு புகார் கடிதம் எழுதிக் கொடுங்க’ என்றார்.  

‘எச்சரிச்சு அனுப்புங்க சார்’ என்றேன். எதற்கு தேவையில்லாத வம்பு என்ற தயக்கம்தான்.  ‘அந்த எடத்துல உக்காந்துட்டு இருக்கிறவங்கதான் சார் பேங்க்கோட இமேஜ்’ என்றார். அவர் சொன்னதும் சரிதான். படபடவென்று எழுதிக் கொடுத்துவிட்டு கீழே வந்தேன். கோயமுத்தூர் முகவரியை எழுதாமல் கரட்டடிபாளையத்து முகவரியை எழுதிக் கொடுத்தேன். ஆட்டோவில் ஆள் அனுப்பினால் கூட வீடு பூட்டிக் கிடக்கும். 

‘மே ஐ ஹெல்ப் யூ’ இடத்தில் அவன் அமர்ந்திருக்கவில்லையென்றால் அவனிடம் ஏன் செல்லப் போகிறேன்? கேட்டதும் எக்குத்தப்பாக எதுவுமில்லை. பக்கத்தில் இருக்கும் கிளை எது என்று கேட்டதற்கே கோபம் வந்துவிடும் என்றால் அவன் ஏன் அந்த இடத்தில் அமர வேண்டும்?

கீழே வரும் போது ‘சீஃப் மேனேஜர்கிட்ட ஒரு புகார் கொடுத்துட்டேன்..பார்த்து பேசிக்குங்க’ என்றேன். விக்கித்தது போலப் பார்த்தார். மந்திரிகள் புகார் அளிக்கவெல்லாம் மாட்டார்கள். நம்மால் அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? நிற்காமல் வந்துவிட்டேன்.

ஐசிஐசிஐக்கும், ஹெச்.டி.எஃப்.சிக்கும் சென்று வந்தால் ஸ்டேட் பேங்க் மாதிரியான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் தெனாவெட்டைப் புரிந்து கொள்ள முடியும். தனியார் வங்கிகளில் வெண்ணெய் கட்டியை வெட்டுவது போலத்தான் பேசுகிறார்கள். வார்த்தைகள் வழுக்கும்.

அரசு நிறுவனங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அடி விழுந்துவிடுமோ என்று பயப்பட வைக்கிற அலுவலங்களில் அடுத்த முறை எப்படி நுழைய முடியும்? 

வேணியிடம் சொல்லலாம்தான். ‘நாற்பது வயசுல நாய்க்குணம்’ என்று ஏற்கனவே அம்மா அவளிடம் பாடம் போட்டு வைத்திருக்கிறார். கோபத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று சோற்றில் உப்பைக் குறைத்துவிடுவார்கள். 

பவானியும் சத்தியமங்கலமும்

பவானி ஆற்றின் நீளம் 217 கிலோமீட்டர். மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்தில் சமவெளியை அடைந்து பவானிசாகர், சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம் வழியாகச் சென்று பவானி கூடுதுறையில் காவிரியாற்றில் கலக்கிறது. நதியின் மீது இரண்டு அணைகள் இருக்கின்றன- பவானிசாகர் அணை, கொடிவேரி அணை. பெரும்பாலும், எல்லாக் காலத்திலும் சிறு ஓடை அளவிற்கேனும்  வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் நதிகளில் ஒன்று. நீர்தான் ஓடிக் கொண்டிருக்கிறதே தவிர பாதிப்பு இல்லாமல் இல்லை. மனிதர்களால் ஏதேனுமொரு வகையில் பாதிப்பு உண்டாவது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

விஸ்கோஸ் என்ற நிறுவனம் சிறுமுகை என்ற இடத்தில் கழிவு நீரை எந்தவிதச் சுத்திகரிப்புமில்லாமல் அப்படியே ஆற்றில் கலக்கியது. மாசடைந்து கொண்டிருந்த நதியைக் காக்க பல்வேறு அமைப்புகள் களமிறங்கின. பவானி நதி நீர் கூட்டமைப்பும் அதன் தோழமை அமைப்புகளும் போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுத்து வழக்கு நடத்தி ஆலையை மூடச் செய்தார்கள். நீண்டகாலப் போராட்டம் அது. ஆனால் விஸ்கோஸோடு அந்த நதிக்கான ஆபத்து முற்றாக நீங்கிவிடவில்லை. காகித ஆலைகள், சாயப்பட்டறைகள் என வழி நெடுகவும் அந்த நதிக்கு இன்னமும் ஆபத்துதான்.

காகித ஆலைகளில் பல நூறு அடிகளுக்கு ஆழ்துளைக் குழாய்களை அமைத்திருக்கிறார்கள். கண்காணிப்பு இல்லாத சமயங்களில் ஆற்று நீரில் கலப்பதையும், கண்காணிப்பு தீவிரமாகும் போது ஆழ்துளைக் குழாய்களில் இறக்குவதும் வாடிக்கை. இப்படி நீரும் மண்ணும் கசகசத்துக் கிடக்கின்றன. நோய்கள் வராமல் என்ன செய்யும்?


முதலாளிகள்தான் இப்படிச் செய்கிறார்கள் என்றால் இப்பொழுது இன்னொரு ஆபத்தை அரசே உருவாக்குகிறது. சத்தியமங்கலம் நகராட்சியானது நகரம் முழுக்கவும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்துகிறது. சிறப்பு. ஆனால் அதைச் சுத்திகரிக்கும் நிலையத்தை பவானி ஆற்றங்கரையோரம் அமைத்திருக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக மழை பெய்து கரை வழிய நீர் ஓடிய போது சுத்திகரிப்பு நிலையம் ஆற்றுக்குள் மூழ்கிவிட்டது. என்னவிதமான திட்டமிடல் என்றே புரியவில்லை. அடுத்த ஓரிரு மாதங்களில் பாதாளச் சாக்கடைத் திட்டம் இயங்கத் தொடங்கும் போது இப்படிச் சுத்திகரிப்பு நிலையம் நீரில் மூழ்கும் சூழல் வந்தால் மனிதக் கழிவுகள் அப்படியே ஆற்று நீரில் கலக்காதா? அல்லது நிலையத்தில் அடைப்பு ஏற்படும் போது நகரம் முழுக்கவும் நீர் எதிர்த்து வீடுகளுக்குள் புகாதா?

அரசின் திட்டங்களையும் அதை அமல்படுத்துவர்களைப் பற்றியும் நமக்குத் தெரியாதா என்ன? சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் நிறுத்தினால் கணிசமான இலாபம் கிடைக்குமெனில் அதிகாரிகள் அந்த இரண்டு மணி நேரமும் கழிவை அப்படியே ஆற்று நீரில் கலக்கிவிடுவார்கள். இரவு நேரங்களில் இதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆற்று வழியெங்கும் வாழும் மக்கள் அந்த நீரைத்தான் குடிக்க வேண்டும். காவிரியிலும் அதுதான் கலக்கும்.

தனக்கு நிகழும் எல்லா அநீதிகளுக்கும் அடங்கி ஒடுங்கி மெல்ல மெல்லச் செத்துப் போவதில் நதிகளுக்கு நிகராக வேறு எதுவுமில்லை. ஆதி மனிதனுக்கு தனது கரையில் வாழ்விடம் உருவாக்கிக் கொடுத்த அதே நதியைத்தான் இன்றைக்கு மனிதன் எல்லாவிதத்திலும் பலாத்காரப்படுத்துகிறான். தொழிற்சாலைக்கழிவுகள், மணல் திருட்டு, வரைமுறையற்ற நீர் உறிஞ்சல் என சகலவிதத்திலும் மனிதன் நதிகளைச் சீரழித்துக் கொண்டிருக்கிறான். எந்த நதியாவது எதிர்வினை புரிகிறதா? நதிகளின் இந்தச் சலனமற்ற தன்மைதான் அரசாங்கத்தையும் கூட அசமஞ்சமாக்கிவிடுகிறது. சின்னாபின்னப்படுத்தப்படும் நதிகளின் பட்டியலை எடுத்தால் பவானி நதியானது முதல் பத்து இடங்களில் இருக்கும்.

கொங்கு மண்டல மக்களில் பலருக்கும் இப்படியொரு திட்டம் நடந்து கொண்டிருப்பதே தெரியவில்லை. சில சிறு குழுக்கள் தவிர பெரும்பாலானவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஏற்கனவே பவானி ஆற்றங்கரையிலும் காவிரியின் கரையிலும் வாழ்கிற மக்களுக்கு (குறிப்பாக ஈரோடு மாவட்டம்) புற்று நோய் அதிகம் என்று ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. இது இன்னமும் நிரூபிக்கப்படாத தரவு. அது எப்படியோ இருக்கட்டும்- நேரடியாக மனிதக் கழிவுகளை ஆற்றில் கலப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் உருவாக்கும் போது அதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? இயற்கையை மனசாட்சியற்றுச் சீரழிக்கும் இத்தகைய திட்டங்களை எதிர்த்து பெருந்திரளாக மக்கள் கூட வேண்டும். அவர்களின் எதிர்ப்புகளினால் மட்டுமே எதிர்கால சந்ததியினருக்கும் நாம் அனுபவித்ததில் பாதியையாவது கொடுத்துவிட்டுச் செல்வோம். இல்லையென்றால் நம்மோடு சேர்த்து எல்லாமும் பாழாய் போய்விடும்.

Dec 6, 2018

அகல் விளக்கு

சூப்பர் 20 பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக- சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம். பெரும்பாலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற தகுதி வாய்ந்த பயிற்றுநர்களால் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வருடம் இருபது மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இருபது பேருமே சூப்பர் என்பதால், அதுதான் சூப்பர் 20. பயிற்சி வகுப்புகள் தவிர்த்து இந்த வருடம் வழிகாட்டி (Mentor) என்பதையும் சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்கிற திட்டமிருக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தும் வழிகாட்டிகளை இணைத்துவிடுவதுதான் திட்டம். 

விண்ணப்பம் அனுப்பிய மாணவர்களை இரண்டு மூன்று கட்டங்களில் வடிகட்டி, நேர்காணல் நடத்தி இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாணவர்களில்  ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்கிறது. அவர்களது இலக்கினை நாம் மாற்றப் போவதில்லை. தாம் கொண்டிருக்கும் இலக்கினை அடைவதற்கான வாய்ப்புகள் என்ன, இலட்சியத்தை அடைவதற்கான செயல்பாடுகள் என்ன, அதை எப்படி மேற்கொள்வது, சரியான பாதையில் செல்கிறார்களா என்பது போன்ற வழிகாட்டுதலை மட்டுமே நாம் செய்ய வேண்டும். எந்தக் கணத்திலும் மாணவர்கள் துவண்டுவிடாமலும், தமது எண்ணத்திலிருந்து திசை மாறிவிடாமலும் காப்பது மட்டுமே நம் இலக்கு.

கிட்டத்தட்ட அத்தனை மாணவர்களுமே விளிம்பு நிலையில் இருப்பவர்கள்தான். பட்டியலைப் பார்த்தவர்களுக்குப் புரிந்துவிடும். அவர்களது பெற்றோரின் தொழில்/நிலையை கவனித்தால் புரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தில் ‘ஏன் இந்த இலக்கை அடைய விரும்புகிறீர்கள்?’ என்று ஒரு கேள்வி இருந்தது. ‘என் குடும்பத்தைப் பசியில்லாமல் காக்க’ என்று ஒரு மாணவன் எழுதியிருந்தான். ஏன் இந்தத் திட்டம் அவசியமானது என்பதை இந்த ஒரு வரி பதில் உணர்த்திவிடும் என நம்புகிறேன். இத்தகைய மாணவர்களுக்கு வழிகாட்டுவது உன்னதமான செயலாக இருக்கும்.

சூப்பர்-20 க்கு இருபது வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். மாணவர்கள், அவர்கள் படிக்கும் படிப்பு, அவர்களது இலக்கு ஆகியவற்றை பட்டியலில் பார்க்கலாம். இந்தப் பட்டியலில் யாருக்கேனும் வழிகாட்டியாக இருக்க முடியும் எனக் கருதினால் தொடர்பு கொள்ளவும். 


தமக்குத் தகுதிகளும் விருப்பமும் இருப்பினும் ‘இது நமக்கு சரிப்பட்டு வருமா?’ என்று பலருக்கும் தயக்கம் இருக்கும். வழிகாட்டி என்பது எந்தவிதத்திலும் உங்களது தனிப்பட்ட வாழ்க்கையை அல்லது தொழிலைப் பாதிக்காது. அதை நிச்சயமாகச் சொல்ல முடியும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஒதுக்கினால் போதும். மேற்சொன்னபடி அந்த மாணவர்களுக்கான வழிகாட்டல்களை அளிப்பதன் வழியாகவும் அவர்களது தயாரிப்புகளை சரி பார்ப்பதன் வழியாகவும் அந்த மாணவரின் வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும். மிகக் குறைந்தபட்ச அர்பணிப்பு இருந்தால் போதும். இதனைச் செய்துவிடலாம். வாரம் ஒரு முறை அலைபேசியில் மாணவர்களுடன் பேச வேண்டும். அவ்வப்பொழுது அந்த மாணவரின் போக்கு குறித்தான தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான். ஒரேயொரு விஷயம்- இடையில் மாணவர்களை கைவிட்டுவிடக் கூடாது. மாணவர்கள் தொடக்கத்தில் ஆர்வம் காட்டமாட்டார்கள். நாம்தான் மெல்லப் பேசி அவர்களை உத்வேகப்படுத்த வேண்டும். ‘அவன் பேசவே மாட்டேங்குறான்’ என்று சொல்லி கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுதான் வழிகாட்டியில் இருக்கும் ஒரேயொரு பிரச்சினை. 

மற்றபடி, வழிகாட்டியாக இருப்பது ஆத்ம திருப்தியளிக்கும் விஷயம். நாம் செய்யும் இந்தப் பணி மீது சமூகத்தின் ஏதோவொரு மூலையில் இருக்கும் ஒரு குழந்தையை அவையத்து முந்திவிடச் செய்யலாம். வழிகாட்டலாம், வாய்ப்பிருப்பவர்கள் இடையில் ஒரு முறை மாணவரை நேரில் சந்தித்துப் பேசலாம். பெரும்பாலும் பெண் மாணவிகளுக்கு பெண்களையே வழிகாட்டியாக நியமிக்க வேண்டியிருக்கிறது. சிக்கலான காரணம் எதுவுமில்லை- பல சமயங்களில் மாணவர்கள் தங்களது தனிப்பட்ட பிரச்சினைகளை தமது வழிகாட்டியுடன் பகிர விரும்புவதுண்டு. அதனால் அதே பாலினத்தில் வழிகாட்டி இருந்தால் சரியாக இருக்கும்.

ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்- இவர்கள் ஒவ்வொருமே ஏதோவொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள். 

வாய்ப்பிருப்பவர்கள் தங்களது பெயர், படிப்பு, வேலை- எந்த மாணவருக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறீர்கள், எப்படி அந்த மாணவருக்கு உதவ முடியும் என்ற விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும். ஒரு குழந்தையின் எதிர்காலத்தில் ஒரு சிறு விளக்காக இருப்போம். அது அந்த மாணவரின் தலைமுறையையே கூட நிமிரச் செய்துவிடும்.

To: myvizhiselvi@gmail.com
Cc: vaamanikandan@gmail.com

Dec 4, 2018

எது நல்லா இருக்கும்?

ஒரு காலத்தில்  ‘சி# தான் எதிர்காலம். மற்ற தொழில்நுட்பமெல்லாம் காலி’ என்றார்கள். ஏகப்பட்ட பேர்கள் பயந்து போய் இருட்டு அறையில் முரட்டுக் குத்தாக உருவேற்றிக் கொண்டிருந்தார்கள். ஜாவா படிக்க ஆரம்பித்திருந்தேன். குடி கெட்டுப் போய்விடும் போலிருக்கிறதே என்று அவ்வப்போது சி# - ஐ மேய்ந்து கொண்டிருந்தேன். ஆனால் அப்படியொன்றும் புரட்டிப் போட்டுவிடவில்லை. பத்தோடு பதினொன்று அத்தோடு அதுவும் ஒன்று. அவ்வளவுதான். 

சி# என்றில்லை. பொதுவாகவே தொழில்நுட்பம், ஐடி ஆகியவற்றில் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். ‘இனிமேல் இதுதான்’ என்று அவ்வப்பொழுது ஒன்றை அவிழ்த்துவிடுவார்கள். பதினைந்தாண்டுகளுக்கு முன்பாக மெக்கட்ரானிக்ஸ்தான் அடுத்த கத்தை என்றார்கள். அதை நம்பிப் படித்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தெரியும். இன்றைக்கு தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் சாஃப்ட்வேருக்குள்தான் காலம் தள்ளிக் கொண்டிருப்பார்கள். அதே போலத்தான் பயோ-டெக்னாலஜி மீது ஒரு கவர்ச்சி இருந்தது. ‘இனி எல்லாமே பயோ டெக்னாலஜிதான்’ என்றார்கள். க்ளோனிங் எல்லாம் வந்துவிட்டது என்று புளகாங்கிதம் அடைந்தார்கள். ஆனால் இன்று வரைக்கும் இந்தியாவில் அதுவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பிரச்சினை படிப்புகளின் மீது எனச் சொல்ல முடியாது. ஆராய்ச்சிக் கூடங்களில் அவற்றுக்கான மரியாதை இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் வேலைச் சந்தையில் புதிய வஸ்துகள் என்னவிதமான தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பதுதான் முக்கியம். 

மெக்கட்ரானிக்ஸ் ஏன் பெரிய அளவில் எடுபடவில்லை என்று மிக எளிதாகச் சொல்லிவிட முடியும். மெக்கட்ரானிக்ஸ் என்பது மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸைச் சேர்த்துப் படிப்பது. ரோபோடிக்ஸ், தானியங்கி (ஆட்டோமேஷன்) என்பதற்கெல்லாம் எடுபடக்கூடிய படிப்பு அது.

2005 ஆம் ஆண்டு எம்.டெக் மெக்கட்ரானிக்ஸ் முடித்துவிட்டு விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தோம். நிறுவனத்தைப் பற்றிப் புரிந்து கொண்டு எங்கெல்லாம் ஆட்டோமேஷன் செய்ய முடியும், அதற்கு சந்தையில் கிடைக்கக் கூடிய எந்திரங்கள் எவை என்றெல்லாம் ஒரு திட்டமதிப்பீடு செய்து கொடுக்கச் சொன்னார்கள். எங்களுக்கு மேலாக ஒரு முதுநிலை மேலாளர் இருந்தார். கணக்குப் போட்டுப் பார்த்து ‘ஒரு கோடி ரூபாய் ஆகும்’ என்று சொன்னால் ‘ஒரு ஆளுக்கு மாசம் பத்தாயிரம் ரூபாய் கூலி..பத்து ஆட்களை வைத்துச் செய்தாலும் கூட மாசம் ஒரு லட்சம் போதும்...ஒரு கோடி ரூபாய் இருந்தால் பத்து ஆட்களை வைத்துக் கொண்டு நூறு மாசத்துக்கு வேலையைச் செய்துவிடலாம்..வட்டிக் கணக்கு என்ன ஆகும்’ என்பார். இந்தியாவில் ஆட்களுக்குப் பஞ்சமேயில்லை. திருப்பூர்க்காரன் வேலை செய்யத் தயாரில்லை என்றால் மதுரை, புதுக்கோட்டையிலிருந்து வந்து இறங்குவார்கள். அவர்களும் முரண்டு பிடித்தால் இருக்கவே இருக்கிறான் பீகார், ஒரிசாக்காரன். 

நிறுவனங்களின் முதலாளிகள் ROI என்பார்கள். Return Of Investment. அதைக் கணக்குப் பார்த்துவிட்டு ‘இதெல்லாம் வேலைக்கு ஆவாது தம்பி’ என்று சொல்லுகிற நிறுவனங்கள்தான் அதிகம். அதைத் தவறு என்றெல்லாம் சொல்ல முடியாது. அவர்கள் அனுபவஸ்தர்கள். தமது நிறுவனத்தை எப்படி நடத்த வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாதா? இருக்கிற போட்டிச் சூழலில் பணத்தை எப்படி பெருக்க வேண்டும் என்றுதான் யோசிப்பார்களே தவிர முடக்கத் தயாராக இருக்கமாட்டார்கள். 

ஒரு தொழில்நுட்பம் சூடு பிடிக்க வேண்டுமானால் அதை நிறுவனங்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த தொழில்நுட்பத்தில் வல்லுநர்களுக்கான தேவை இருக்கும். அதனால்தான் புதிய நுட்பம் ஒன்று சந்தைக்கு வரும் போது அதை தொழில் துறை சார்ந்தவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். கல்வியாளர்களுக்கும் (Academician) தொழிற்துறையினருக்கும் (Industrialist) இடையில் ஏணி வைத்தாலும் எட்டாத தூரம் இருக்கும். அதுவும் இந்தியாவில் இந்த வித்தியாசம் கற்பனையிலும் எட்டாதது. கல்வியாளர்கள் சொல்வதை மட்டும் நம்பினால் மெக்கட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி மாதிரிதான் இருக்கும்.

பயோ டெக்னாலஜி மோசமான படிப்பு என்று சொல்ல முடியுமா என்ன? நிச்சயம் அற்புதமான படிப்புதான். க்ளோனிங் மட்டுமே பயோ டெக்னாலஜி இல்லை.  பயோ-ஆயுதங்களுக்கு எதிர் மருந்து தயாரிப்பது மட்டுமே அதன் வீச்சு இல்லை. நம் தேவைகளுக்கு ஏற்ப உயிரி தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட வேலைகளைச் செய்ய முடியும். உதாரணத்துக்கு ஒன்றைச் சுட்டிக் காட்டலாம். இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய சவால்களில் பிரதானமானது என்று எதைக் கருதுகிறீர்கள்? கழிவறையைத்தான் சொல்ல வேண்டும். பல ரயில்களிலும் கழிவுகள் அப்படியே தண்டவாளத்தில்தான் கொட்டுகிறது. உலகின் மிகப்பெரிய ரயில்வே நம்முடையதுதான். ஆனால் இந்த நாற்றம் பிடித்த பிரச்சினைக்கு இப்பொழுது வரைக்கும் முழுமையான தீர்வு இல்லை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பயோ டாய்லெட்டை சோதனை முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். அண்டார்டிக்கா பாக்டீரியாவின் மூலமாக மனிதக் கழிவுகளை மீத்தேன் வாயுவாகவும், நீராகவும் பிரித்துவிடுகிற நுட்பம் அது. இதை கடந்த பல வருடங்களுக்கு முன்பாகவே இந்திய ரயில்வே துறை முயன்று பார்த்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு இவ்வளவு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. 

‘ஏன் இவ்வளவு வருடம் தேவைப்பட்டது’ என்று கேட்டால் அவர்களின் முன்னுரிமைகள் வேறு பலவாக இருந்தன. இந்த முன்னுரிமைகள்தான் கள நிலவரம். இதனைப் புரிந்து கொள்வதுதான் அவசியம். தொழிற்துறையினரின் நோக்கம், முன்னுரிமைகள் வேறாக இருக்கக் கூடும். ‘இதை அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று அவர்கள் ஒதுக்கி வைத்தால் அந்தத் தொழில்நுட்பத்தில் வேலை வாய்ப்பு உருவாவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் கல்வியாளர்கள் இருபது வருடங்களுக்கு முன்பாகவே ‘அடுத்தது பயோ டெக்னாலஜிதான்’ என்று குரல் எழுப்ப ஆரம்பித்திருந்தார்கள். நம்பிப் படித்தவர்களில் பலரும் வேறு துறைகளுக்குள் நுழைய வேண்டியிருந்தது.

பொதுவாகவே வேறொரு தொழில்நுட்பத்துக்கு மாறுகிறவர்கள், வித்தியாசமான படிப்பைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்கள் எதையுமே கல்வியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் சொல்வதை அப்படியே நம்புவதைவிடவும் தொழில் சார்ந்தவர்களிடம் பேசுவதன் மூலமாகவே முடிவு செய்ய வேண்டும். ஃபேன்ஸியான நுட்பங்களைத் அறிவுக்காகத் தெரிந்து கொள்வதற்கு வேண்டுமானால் படிக்கலாமே தவிர அதில் வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பதை தீர ஆலோசிப்பதன் மூலமாகவே முடிவுக்கு வர வேண்டும். 

மேற்சொன்ன ரோபோடிக்ஸ் உதாரணத்தையே எடுத்துக் கொள்ளலாம். ‘ஒரு கோடி ரூபாய்க்கு ரோபோட் செஞ்சு கொடுத்தா வாங்கிக்குவீங்களா’ என்று முதலாளி ஒருவரைக் கேட்டுப் பாருங்கள். அவர் கட்டாயமாக வேண்டாம் என்றுதான் சொல்வார். அதுவே பத்து லட்ச ரூபாய் என்றால் அவர் சரி என்று சொல்லக் கூடும். ஆக, இன்றைய சூழலில் ரோபோடிக்ஸின் வேலைச் சந்தை மதிப்பு அவ்வளவுதான். நிறைய ரோபோக்கள் விற்றால் நிறைய ரோபோடிக்ஸ் பொறியாளருக்கான தேவை இருக்கும். குறைந்த அளவிலான ரோபோக்கள் விற்றால் குறைந்த அளவிலான ஆட்களுக்கு மட்டுமே தேவை இருக்கும். இதுதான் நிதர்சனம். இதுதான் வேலைச் சந்தைக்கான அடிப்படை. ‘ரோபோடிக்ஸ் படிச்சவுடனே உனக்கு வேலை கிடைச்சுடும்’ என்று யாராவது சொன்னால் அவருக்கு நிலவரம் தெரியவில்லை என்று அர்த்தம்.

ரோபோடிக்ஸ் மட்டுமில்லை. எந்தவொரு நுட்பத்துக்குமான வேலைச் சந்தைக்கு இதுதான் அடிப்படை. இதை வைத்துத்தான் கணக்குப் போட வேண்டும். முடிவும் எடுக்க வேண்டும்.

Dec 1, 2018

அற்புத மனிதர்கள்

ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை ட்ரெக்கிங் குழுவினர் நாகம்மாள் என்ற அம்மையாரைப் பற்றி எழுதியிருந்தார்கள். கண் பார்வையற்ற, ஆதரவுக்கு யாருமில்லாத பெண்மணி. கஜா புயலில் அந்த அம்மையாரின் குடிசையும் சிதைந்து போயிருந்தது. வாட்ஸாப் குழுவில் ‘அடுத்த வேலை நாகம்மாளின் குடிசையை தயார் செய்வதுதான்’ என்று பீட்டர் எழுதியிருந்தார். இன்றைக்கு முடித்துவிட்டார்கள். உள்ளூர் ஆட்களின் உதவியுடன் சென்னை ட்ரெக்கிங் குழுவின் நண்பர்கள் இணைந்து குடிசையை அட்டகாசமாகச் செய்துவிட்டார்கள்.

இதைவிடவும் சந்தோஷப்பட கூடிய தருணம் என்று ஏதாவது இருக்கிறதா? 

புயல் வீசி ஓய்ந்து, கால் நீட்ட இருந்த ஒற்றை குடிசையையும் இழந்து, நிராதரவான பெருவெளியில் அமர்ந்திருந்த அந்த பாட்டியின் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்? இனி யார் நம்மைக் காக்கப் போகிறார்கள்? அடித்த புயல் நம்மையும் சேர்த்து வாரிச்சுருட்டிச் சென்றிருக்கக் கூடாதா என்ற எண்ணம் வந்திருக்காதா என்ன? எல்லாவற்றையும் இழந்து நின்ற பாட்டியின் கரங்களை வெதுவெதுப்பாக பற்றிக் கொள்ள யார் இவர்களை அனுப்பி வைத்தார்கள்? இந்த உலகம் இயங்குதலுக்கான ஆதாரப்புள்ளியே இந்த அன்பும் கனிவும்தானே?

ஒரு கணம் அமைதியாக அமர்ந்தால் எவ்வளவு வினாக்கள் தோன்றுகின்றன? தென் தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் கிழிந்த கந்தலெனக் கிடக்கும் ஒரு மூதாட்டிக்கு சம்பந்தமேயில்லாத மனிதர்கள் கைகொடுக்க வேண்டும் எங்கே விதிக்கப்பட்டிருக்கிறது? 

எழும்புகிற கேள்விகளில் மனம் சஞ்சலமடைந்து கிடக்கிறது. அடுத்த கனமே சலனமற்றும் அடங்கி ஒடுங்கிறது. முந்தைய படத்தையும் இன்று பீட்டர் அனுப்பியிருந்த படங்களையும் பார்த்த போது கண்ணில் நீர் கசிந்துவிட்டது. இலக்கியம் படி; அரசியல் பேசு; தொழில்நுட்பம் பழகு என்று யாராவது எங்கேயாவது நம்மை திசை மாற்றிக் கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் வாழ்தலின் அர்த்தம் மனிதம் மட்டும்தான். அதை மட்டும்தான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் உணர்த்திச் செல்கிறான். மனிதம் தாண்டி பெரியது எதுவுமில்லை.  

இருபத்து நான்கு லட்சம்

நவம்பர் 19 தொடங்கி 30 ஆம் தேதி வரை சுமார் இருபத்து நான்கு லட்சம் ரூபாய் கஜா நிவாரணத்திற்கென நன்கொடையாக வந்திருக்கிறது. அவற்றில் தார்பாலின் உள்ளிட்ட பொருட்களை நான்கேகால் லட்சத்திற்கு வாங்கியிருக்கிறோம். மீதமிருக்கும் தொகையானது மறு நிர்மாணப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

மறு நிர்மாணப் பணியாக என்ன செய்து தருவது என ஆலோசிக்கப்பட்டது. பள்ளிக்கூடம், அங்கன்வாடி ஆகியவற்றை சரி செய்து தரலாம் என்றெல்லாம் ஆலோசனை செய்த பிறகு எந்தவிதமான ஆதரவுமற்ற குடிசைவாசிகள் இழந்த குடிசைகளை மீண்டும் கட்டித் தரலாம் என்ற முடிவு செய்யப்பட்டது. பீட்டரும் அவரது குழுவினரும் ஒவ்வொரு பகுதியாக கள ஆய்வு செய்து பயனாளிகளை அடையாளம் கண்டறிந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரையிலும் சுமார் ஐம்பது பயனாளிகள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். 
இனிமேல் கஜா நிவாரணப்பணிகளுக்கென நிசப்தம் அறக்கட்டளைக்கு பணம் அனுப்ப வேண்டாம். இருக்கும் நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்தால் முதற்கட்டமாக இந்தத் தொகையை சரியான விதத்தில் பயன்படுத்தலாம். ஒருவேளை சில மாதங்களுக்குப் பிறகும் தேவையிருப்பின் அதற்கேற்ப அந்தத் தருணத்தில் முடிவு செய்து கொள்ளலாம்.  

நன்கொடையளித்த அனைவருக்கும் நன்றி. நன்கொடைக்கான ரசீது அனுப்பச் சொல்லி சிலர் கேட்டிருந்தார்கள். அப்பொழுது சாத்தியமாகவில்லை. மின்னஞ்சலைத் தேடியெடுத்து ரசீது அனுப்பி வைத்துவிடுகிறேன். ஒருவேளை யாரேனும் விடுபட்டுப் போயிருந்தால் வருத்தப்படாமல் ஒரு நினைவூட்டல் அனுப்பி வைக்கவும்.

vaamanikandan@gmail.com

பீட்டரும் சென்னை ட்ரெக்கிங் க்ளப்பும் தமிழகத்துக்குக் கிடைத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும். எந்த விளம்பரமுமில்லாமல் வெறித்தனமாக அடுத்தவர்களுக்கு உழைக்கிறார்கள். பீட்டர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கிட்டத்தட்ட தமிழன் ஆகிவிட்டவர். அந்த நீல நிற டீஷர்ட்டும், அரைக்கால் ட்ரவுசரும் தவிர வேறு எந்த ஆடையிலும் அவரைப் பார்த்ததாக நினைவில் இல்லை. அவருடன் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க பரட்டைத் தலையும், தாடியுமாக சேறிலும் மண்ணிலும் எந்தச் சங்கோஜமுமில்லாமல் வேலை செய்யும் நூற்றுக் கணக்கான இளைஞர்கள். அடுத்த வேலை எங்கே சாப்பிடுவது, எங்கே தூங்குவது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாத மனிதர்கள். அவர்களைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். என்ன எழுதினாலும் லட்சியமே செய்யாமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். 

வரவு செலவில் ஏதேனும் சந்தேகமிருப்பின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். பயன்படுத்தப்பட்ட தொகைக்கான ரசீதை சென்னை ட்ரெக்கிங் க்ளப் பொறுப்பாளர்கள் மூலமாகப் பெற்று மாத இறுதியில் நிசப்தம் தளத்தில் பதிவு செய்துவிடுகிறேன்.

Trust Opening Balance: Rs.15,76,639.18
Total Donations received: Rs.23,81,252.18 (From 11th Nov to 30th Nov)
Materials Purchased: Rs.4,09,683.00
(Another Rs. 25,000 yet to be debited)
Remaining Amount: Rs. 19,71,569.18 (For Gaja Relief)முந்தைய பதிவு : இணைப்பு 1
சென்னை ட்ரெக்கிங் க்ளப்:  இணைப்பு 2

Nov 30, 2018

2.0

வெகு நாட்களுக்குப் பிறகாக அவனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். எம்.டெக் படித்தவன். கடந்த முறை- சில வருடங்களுக்கு முன்பாக இருக்கும்- குர்கானில் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தான். ‘இப்ப அரக்கோணத்துலேயே இருக்கேன்’ என்றவனிடம் ‘கழுதை கெட்டா குட்டிச்சுவரு’ என்ற நினைப்பில் ‘ப்ரேக்ஸ் இந்தியாவா’ என்றேன். அரக்கோணம் பக்கத்தில் சோளிங்கரில் அப்படியொரு இருக்கிறது.

‘சொந்தமா ஒரு சின்ன பிஸினஸ்’ என்றான். 

பூ வியாபாரம். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பாக ஆரம்பித்திருக்கிறான். வெளியிலிருந்து பார்த்தால் ‘பூவில் என்ன இருக்கு’ என்றுதான் தோன்றும். ஆனால் இந்தியாவில் மூன்று வருடங்களுக்கு முன்பே எட்டாயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டிய வணிகமாம் அது. அவனேதான் சொன்னான். 

நண்பனின் மாமனார் பூக்கடை நடத்துகிறார். மார்க்கெட்டில் பூ கட்டி விற்கிறவர். அதைப் பார்த்துதான் இவனது மண்டைக்குள் பல்பு எரிந்திருக்கிறாது. அதே தொழிலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறான். அரக்கோணம் பக்கத்தில் ஜாதி மல்லி விவசாயிகளைப் பிடித்திருக்கிறான். பெரிய விவசாயிகள் இல்லை- ஐம்பது செண்ட் அல்லது நூறு செண்ட் இடத்தில் பூ விளைவிக்கிறவர்கள் அவர்கள். ஐம்பது செண்ட் நிலத்தில் பூ விளைவிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன். விவசாயிகள் பூவைத் தூக்கிக் கொண்டு எங்கேயும் போக வேண்டியதில்லை. செடியிலிருந்து பறித்து வைத்தால் இவர்களே வீட்டுக்குச் சென்று வாங்கிக் கொள்கிறார்கள். பூவை விவசாயிகளிடமிருந்து வாங்கும் வேலையானது காலை எட்டரை மணிக்குள் முடிந்துவிடும். 

எடை போட்டு வாங்கி வந்த பூவை உள்ளூர் பெண்களிடம் கொடுத்து கட்டித் தரச் சொல்லித் தருகிறான். கால் கிலோ கட்டித்தர அந்தப் பெண்களுக்கு பனிரெண்டு ரூபாய் கூலி. கட்டுவதற்கான நூலையும் இவனே கொடுத்துவிட்டு வந்துவிடுகிறான். ஒவ்வொரு கால் கிலோ பூவையும் ஒரே நூலில் கட்டித் தர வேண்டும். அவர்கள் வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு கூட்டமாக அமர்ந்து ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்தில் கட்டித் தந்துவிடுகிறார்கள். வீட்டில் சும்மா இருப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு சிறு வருமானம் அது. கூட்டமாக அமர்ந்து பேசியபடியே கட்டுவதால் பேச்சுக்கு பேச்சும் ஆச்சு அதே சமயத்தில் ஒன்றரை மணி நேரத்தில் சுமார் நூறு ரூபாய் சம்பாத்தியமும் ஆச்சு அந்தப் பெண்களுக்கு. 

கட்டி முடித்த பூவையெல்லாம் ஓரிடத்துக்குக் கொண்டு வந்து உருட்டி (Roll)செய்கிறார்கள்.  இது வேறொரு டீம். ஏனென்றால் இப்படி உருட்டப்பட்ட ஒவ்வொரு செண்டும் ஒரே அளவில் இருக்க வேண்டும். அதுதான் உருட்டுகிறவர்கள் வேலை. மதியம் ஒரு மணிக்குள் இந்த வேலையை முடித்து நெகிழி பைகளில் போட்டுச் சென்னை வரும் தொடர்வண்டியில் ஏற்றிக் கொண்டு இங்கேயிருக்கும் வியாபாரிகளிடம் விற்றுவிடுகிறான். ஒரே பூ - அதை அரக்கோணத்தில் விற்றால் ஒரு ரேட் அதுவே சென்னையில் விற்றால் இன்னொரு ரேட். ஒரு செண்டு பூவில் எட்டு அல்லது ஒன்பது முழம் வரும் போலிருக்கிறது. முகூர்த்த நாளில் முழம் நூறு ரூபாய்க்கு கூட விற்குமாம். அத்தகைய ஜாக்பாட் நாட்களில் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய். செமத்தியான இலாபம். மற்ற நாட்களிலும் ஒன்றும் மோசமில்லை. 

ஒரு நாளைக்கு சுமார் ஐநூறு செண்டு பூவை இப்படி அனுப்பிக் கொண்டிருக்கிறான். வருமானம் எவ்வளவு என்று கேட்கிறவர்கள் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் முடித்துவிட்டு மாலை ஆறு அலல்து ஏழு மணிக்கு வீடு திரும்பிவிடுகிறான். அடுத்த நாள் காலையில் மீண்டும் வேலைத் தொடக்கம்.

எம்.டெக் வடிவமைப்பு படித்தவன் அவன். முப்பத்தைந்து வயதாகிறது. கடினமான உழைப்பு. அலுங்காமல் குலுங்காமல் இருந்திருக்கலாம். 

‘சந்தோஷமா இருக்கேன்..ஒரு பொண்ணு...உள்ளூர்லயே படிக்கிறா’ என்றான். ஆயிரத்தெட்டு நெளிவு சுளிவு கொண்ட தொழில் இது. பனி பெய்தால் பூ விளைச்சல் குறையும். முகூர்த்த நாளில் வெளியூரிலிருந்து பூ நிறைய வந்து குவிந்துவிடும். அப்பொழுது வியாபாரிகள் விலையைக் குறைக்க முயற்சிப்பார்கள். ஒரு வீட்டில் கால் கிலோ  கொடுத்து வந்தால் ஐம்பது கிராம் பூவை எடுத்து வைத்துக் கொள்வார்கள். செண்டு கட்டும் போதும் அளவு குறையும். எல்லோருமே தெரிந்த/உள்ளூர் பெண்கள் என்பதால் அவர்களைக் கடிந்து கொள்ளவும் முடியாது.  இப்படி எவ்வளவோ சொல்கிறான். 

‘வீட்டில் எப்படி ஆதரவு’ என்றேன். சுயதொழில் என்று இறங்குகிறவர்களின் முட்டுக்கட்டையே அங்கேதானே? அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் தடை போட்டிருக்கிறார்கள். ‘இவ்வளவு படிச்சுட்டு பூ வியாபாரமா’ என்பதுதான் அவர்கள் பிரச்சினை. ஆனால் உள்ளூரில் மகன் இருக்கப் போகிறான் என்பது ஒருவகையில் அவர்களைச் சமாதானம் ஆக்கியிருக்கிறது.  

‘பூ மேல உனக்கு லவ்வா?’ என்றதற்கு பயங்கரமாகச் சிரித்து விட்டான்.

‘எல்லாத்தையும் ரொமாண்டிசைஸ் செஞ்சுக்குவியா?’ என்றவன் ‘மச்சி..இது ப்யூர் பிஸினஸ்...இதுதான் என் passion..அதில்தான் தொழிலைச் செய்யணும்ன்னு ஏதாச்சும் விதி இருக்கா?’ என்று வசனம் பேச ஆரம்பித்துவிட்டான். 

‘நம்மூருக்கு இது செட் ஆகும்ன்னு நினைச்சேன்..அமைஞ்சுடுச்சு...இதுவே ஜோலார் பேட்டைன்னா கூட இது வொர்க் அவுட் ஆகியிருக்குமான்னு தெரியல...இந்தத் தொழில் டைமிங் ரொம்ப முக்கியம்..அதுக்கு அரக்கோணம்தான் செட் ஆகுது’ என்றான். ஒரு தொழிலுக்குள் எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றன? 

பேச்சுவாக்கில் ‘பிஸினஸ் ஆரம்பிக்கலாம்’ என்று சொல்கிறவர்கள் அதிகம். ஆனால் பெரும்பாலானவர்கள் இப்படியெல்லாம் வழிகள் இருக்கின்றன என்று யோசிக்கவேமாட்டோம். எந்த ஊரில் தொழில் தொடங்கப் போகிறோம், அங்கே எதைக் கையில் எடுக்கலாம், அதில் என்ன சூட்சமங்கள் என்பதையெல்லாம் கண்டுபிடிப்பதில்தான் வெற்றியின் முதல்படி இருக்கிறது. பூ, அதை விளைவிக்கும் விவசாயிகள், அவர்களை ஒரு நெட்வொர்க் ஆக்குவது, உள்ளூர் பெண்களைப் பயன்படுத்துவது, சென்னை கொண்டு போவது, அங்கே வியாபாரிகளின் தொடர்பு என்பதையெல்லாம் கருவாக்கி, வடிவத்துக் கொண்டு வந்து, செயல்படுத்துவது என நண்பன் செய்திருப்பது பெரிய வேலை. எதிர்காலத் திட்டங்கள் என்று பூ ஏற்றுமதி உட்பட சிலவற்றைச் சொன்னான். ஆனால் அதையெல்லாம் பொதுவெளியில் விலாவாரியாக்குவது சரியாக இருக்காது. 

எண்ணித் துணிக கருமம்- கண்டபடி யோசித்தால் ஒரு பற்றுக் கோல் சிக்கிவிடாமலா போய்விடும்?

இந்தக் கட்டுரைக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்த போது 2.0 என்பதுதான் ட்ரெண்டாக இருக்கும் எனத் தோன்றியது. கட்டுரைக்கும் தலைப்புக்கும் ஏதாவது சம்பந்தமிருக்க வேண்டுமல்லவா? இருக்கிறதே. குர்கானில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி என்பது 1.0. அரக்கோணத்தில் பூக்காரன் என்பது 2.0.

Nov 28, 2018

சந்ததிக்கான விளைபொருட்கள்- தினமலரில்

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஏகப்பட்ட பேர் ஃபேஸ்புக் வழியாகத் தொடர்பு கொள்ள முயன்றார்கள்.  யாராவது என்னைப் பற்றி திட்டியிருக்கிறார்களோ என்னவோ என்றுதான் சந்தேகமாக இருந்தது. அப்படியெல்லாம் எதுவுமில்லை. தினமலரில் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். நிசப்தம் தளத்தில் உள்ள கட்டுரைகளைத் தொகுத்து ஒரு கட்டுரை தயார் செய்திருக்கிறார்கள். படம்தான் அட்டகாசம். ‘எப்படியும் இவனுக்கு அம்பது வயசு இருக்கும்’ என நினைக்க வைத்துவிடும். யூத் என்று காட்டிக் கொள்ள நானே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த ஓவியர் பெட்ரோலை ஊற்றியிருக்கிறார். உச்சியில் வெறும் நான்கே நான்கரை முடி. அது சரி. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அநேகமாக என்னை நன்கு அறிந்த ஓவியராகத்தான் இருக்க வேண்டும்.
                                                                   ***பிளாக்' - வலைப்பூவில் எழுதி, பெரிய அளவு நிதி திரட்டி உதவி வரும், 'நிசப்தம் அறக்கட்டளை' நிறுவனரும், கவிஞருமான, வா.மணிகண்டன்: 

ஈரோடு மாவட்டம், கரட்டடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கணினியில், முதுகலைப் பட்டதாரி. பெங்களூரில், பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த நான், தற்போது, கோவையில் பணி செய்து வருகிறேன்.'நிசப்தம்' என்ற வலைப்பூவில், மனித உணர்வுகள், வாழ்வின் யதார்த்தங்கள், சமூக அவலங்கள், அரசியல் போன்ற பல விஷயங்களில், என் கருத்தை பகிர்வேன். ஒருமுறை, வாசகர் ஒருவர் கேட்டதற்கிணங்க, கல்வி செலவுக்கான வேண்டுகோளை, என் வலைப்பூவில் வெளியிட, அதற்கு வந்த ஆதரவை கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.தொடர்ந்து அதுபோல உதவிகள் செய்யத் துவங்கியதும், உள்நாடு, வெளிநாடு என்று, பல இடங்களிலிருந்து, முகமறியாத மனிதர்களிடமிருந்து பணம் வரத் துவங்கியது. ஆரம்ப காலங்களில், என் பெயரிலேயே நன்கொடைகளைப் பெற்று உதவினேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான், 'நிசப்தம்' என்ற அறக்கட்டளையை துவங்கினேன். அதற்குள், எங்கள் அறக்கட்டளை செய்திருக்கும் உதவிகள், ஒரு கோடிக்கும் மேலிருக்கும். அறக்கட்டளையின் வரவு - செலவுகளை, வங்கியின் அறிக்கையோடு, மாதந்தோறும், வலைப்பூவில் வெளியிட்டு வருகிறேன்.

கடந்த, 2015ல், பெருவெள்ளத்தில், அரசு நிவாரணப் பணிகள் சென்றடையாத கிராமங்களைச் தேடிச் சென்று உதவினோம். கடந்த ஆண்டு முதல், ஏரி, குளங்களைத் துார் வாரி மீட்டெடுத்தல், சமுதாயக் காடுகள் உருவாக்கம் போன்றவற்றை, செய்யத் துவங்கினோம். ஈரோட்டில், வேமாண்டம்பாளையம், ஒரு சிறிய கிராமம். ஓராண்டுக்கு முன், அந்த ஊர் குளம் மட்டுமல்ல, பஞ்சாயத்து முழுவதிலும் இருந்த சீமைக் கருவேலங்கள், அறக்கட்டளை மூலம் அழிக்கப்பட்டன. கிட்டத்தட்ட, 60 ஏக்கர் குளம்; மழையைத் தவிர வேறு எந்த வழியுமில்லை; வானம் பார்த்த பூமி.காய்ந்து கருவாடாக கிடந்த குளம், மழையால் இப்போது நிரம்பி இருக்கிறது. ஓராண்டு காத்திருப்புக்குப் பின், பெருமகிழ்ச்சி. இதுபோல மேலும் இரண்டு கிராமங்களுக்கு செய்துள்ளோம். முதலில், கிராமங்களில் இளைஞர்களை அழைத்து பேசுவோம். வேமாண்டம்பாளையத்தில் அத்தனை பணிகளையும் செய்தது, உள்ளூர் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தான். அதிகாரிகளை சந்தித்துப் பேசினால், 95 சதவீதம் பேர் உதவுகின்றனர். நல்லவர்கள் நான்கு பேர் கொடுக்கும் பணத்தை வாங்கி, தனிப்பட்ட நபர்களுக்கு உதவுவது, ஒரு சங்கிலித் தொடராக இருக்க வேண்டும். உதவி செய்கிறவர்களை விடவும், உதவி பெறுகிறவர்களிடம் இந்த எண்ணம் வலுக்க வேண்டும். அதுதான், நாம் படும் அத்தனை சிரமங்களுக்குமான அர்த்தமாக இருக்கும்.நாம் விதைக்கிற ஒவ்வொரு ரூபாயும், அடுத்தடுத்த சந்ததிக்கான விளைபொருட்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

                                                                ***

கட்டுரையில் இரண்டு திருத்தங்கள் :

1) எப்பொழுதுமே என்னுடைய தனிப்பட்ட கணக்குக்கு பணம் பெற்று உதவியதில்லை. ஆரம்பத்தில் பயனாளியின் கணக்கு எண்ணை நேரடியாகக் கொடுத்துவிடுவேன். நன்கொடையாளர்கள் அவர்களுக்கு பணம் அனுப்பிவிடுவார்கள். 

2) வேமாண்டம்பாளையத்தில் ஓரளவுதான் ஆதரவு இருந்தது. கோட்டுப்புள்ளாம்பாளையத்தில்தான் நல்ல ஆதரவு கிடைத்தது. ஆனால் மழையின் காரணமாக குளம் நிரம்பியது உண்மை. (கடந்த கல்கி இதழில் இந்தவொரு தொனியில் கட்டுரை வெளியாகியிருந்தது. அதனடிப்படையில் எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அந்தக் கட்டுரையையும் நிசப்தத்தில் பதிவு செய்துவிடுகிறேன்).

தினமலர் குழுவுக்கு மனப்பூர்வமான நன்றி.

Nov 27, 2018

டெல்டா- III

சென்னை ட்ரெக்கிங் க்ளப் குழுவினர் நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகளை முடித்துவிட்டார்கள். கிட்டத்தட்ட இருபதுக்கும் மேலான இடங்களிலிருந்து பொருட்களைச் சேகரித்தார்கள். டெல்டா பகுதியிலில் மூன்று விநியோக மையங்களை அமைத்து நிவாரணப் பொருட்களை மையங்களுக்கு அனுப்பி அங்கிருந்து தேவையான பகுதிகளுக்கு பிரித்து அனுப்பினார்கள். அந்தந்த இடங்களில் குழுக்கள் அமைத்து அவர்கள் கசகசப்பில்லாமல் பொருட்களை உரியவர்களைச் சென்றடையும்படி செய்தார்கள்.

ஆச்சரியத்தக்க செயல்பாடு. எப்படி இணைகிறார்கள், இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வு ஏன் என்பதெல்லாம் விடை காண முடியாத அல்லது விடை தேட அவசியமற்ற வினாக்கள். வெறித்தனமாகப் பணியாற்றுகிறார்கள். அவ்வளவுதான். ஒவ்வொருவரும் நல்ல வருமானத்துடன் நல்ல நிலைமையில் இருப்பவர்கள்தான். அரைக்கால் ட்ரவுசரை மாட்டிக் கொண்டு இறங்கிக் களமாடிக் கொண்டிருந்தார்கள். களத்தில் அப்படியான குழு என்றால் பொருட்களை வாங்க, வாகனங்களை ஒருங்கிணைக்க, உதவி தேவைப்படும் இடங்களைக் கண்டறிய, தொடர்புகளை உருவாக்க என பல்வேறு வேலைகளைப் பிரித்து பக்காவாகச் செய்து முடித்திருக்கிறார்கள். (இணைப்பில்)

இனி அடுத்தகட்டம். மறு நிர்மாணம் சார்ந்த பணிகளைச் செய்ய வேண்டும். கிராமத்தைத் தேர்ந்தெடுப்பதா, பள்ளிகளையா அல்லது வீடுகளைக் கட்டித் தருவதா என ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. முழுமையான திட்ட உருவாக்கத்திற்குப் பிறகு இன்னும் ஓரிரு நாளில் அது குறித்து எழுதுகிறேன். 

வெள்ளிக்கிழமை வரைக்கும் வரும் நிதியை கஜா புயல் மறு நிர்மாணம் சார்ந்த பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று கேட்டார்கள். அதுவும் சரியாகப்பட்டது. எனவே வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 30) மாலை வரைக்கும் வரக் கூடிய நிதியானது இந்தச் செயல்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும். 

இதுவரையிலுமான வரவு செலவு விவரம்....

Opening Balance : Rs. 15,76,639.18
Donations: Rs. 17,38,782.10
Material Purchase: Rs. 2,76,763.00
Remaining Amount: Rs. 14,62,019.10

Next statement will be updated by Friday evening/Saturday Morning.

Nov 23, 2018

டெல்டா - II

கடந்த மூன்று நாட்களில் கஜா புயல் நிவாரணத்துக்கென 272 பேர் நிசப்தம்/சென்னை ட்ரெக்கிங் க்ளப் அணியிடம் பணம் அளித்துள்ளார்கள். பத்து லட்ச ரூபாயைத் தாண்டியிருக்கிறது. (பத்து லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து நூற்று முப்பத்தாறு ரூபாய்). சனிக்கிழமை (24.11.2018) மாலை வரையிலும் வரக் கூடிய நிதியானது கஜா வெள்ள நிவாரணத்துக்கென பயன்படுத்தப்படும். அதன் பிறகு நிசப்தம் வங்கிக் கணக்குக்கு வரக்கூடிய தொகை வழக்கம் போல நிசப்தம் அறக்கட்டளையின் கல்வி/மருத்துவ உதவிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும். 

சென்னை ட்ரெக்கிங் குழுவினர் களத்தில் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் பரவலாக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. ஓர் அணி சென்னையில் இருந்து ஒருங்கிணைக்கிறது. பொருட்களுக்கான தேவை எங்கேயிருக்கிறது, தன்னார்வலர்களுக்கான தேவை எங்கேயிருக்கிறது, பொருட்கள் எங்கே செல்ல வேண்டும், தயாராக இருக்கும் தன்னார்வலர்கள் என சகலத்தையும் இந்த அணி ஒருங்கிணைக்க, களத்தில் ஏகப்பட்ட ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள். பொருட்கள் விநியோகம், மரங்களை அப்புறப்படுத்துதல், மின்வாரிய ஊழியர்களுக்கு உதவி, வீடு அமைத்தல் என ஆங்காங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த வாரத்திலிருந்து மறு நிர்மாணப் பணிகளைத் தொடங்கவிருக்கிறார்கள். நன்கொடையில் பெரும்பாலான தொகை அந்தப் பணிக்குப் பயன்படுத்தப்படும். 

குழுவினர் பணியாற்றும் கிராமங்கள், எந்தத் தேதியில் எந்தப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன போன்ற விவரங்கள், நிழற்படங்கள், பொருட்களைச் சேகரிக்கும் மையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணைப்பில் உள்ள தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முந்தைய பதிவு: டெல்டா- நன்கொடை விவரம்

தற்போதைய நிதி விவரம்:

Opening Balance : Rs. 15,76,639.18
Donations : Rs.10,33,136.00
Material Purchase: Rs. 69180.00
Remaining Amount: Rs. 9,63,956.00 (As on 23.11.2019 4:30 PM)

vaamanikandan@gmail.com
அக்கினிக் குஞ்சுகள் - II

சூப்பர் 16 பயிற்சியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை மாணவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். நிரப்பிய படிவங்களை பலர்  அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதே சமயம் பல மாணவர்களுக்கு விண்ணப்பம் அனுப்புவது கூட எப்படி என்று தெரியவில்லை. 'Eppadi fill up pantathu' என்று கேட்டுக் கூட மின்னஞ்சல் வந்தது. இந்த ஒரு வரிதான் மின்னஞ்சலே. அதனால் இவர்கள் அனுப்புகிற விண்ணப்பத்தின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களைத் தேர்வு செய்வது சரியாக இருக்காது. மின்னஞ்சல் கூட அனுப்பத் தெரியாத நெருப்புப் பொறிகளை அடையாளம் காண்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். 

எனவே விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் அனைவரையும் ஓரிடத்துக்கு அழைத்து நேர்காணல் நடத்துவது எனத் திட்டமிட்டிருக்கிறோம். விண்ணப்பங்களை அனுப்பியவர்களில் சிலர் ‘கல்விக்கட்டணத்துக்காக சேர்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும். இது நிதியுதவி அளிப்பதற்கான தேர்வல்ல என்று அவர்களுக்குப் புரிய வைத்து அதன் பிறகு மாணவர்களை முடிவு செய்து கொள்ளலாம். 

ஞாயிற்றுக்கிழமை (25-11-2018) மதியம் மூன்று மணிக்கு கோபிச்செட்டிபாளையம் வைரவிழா முதல்நிலைப்பள்ளி (எம்.ஜி.ஆர் சிலை அருகில்) நேர்காணல் நடைபெறும். நிரப்பிய விண்ணப்பங்களை அனுப்பாதவர்களும் கூட நேரடியாக வந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். சில நண்பர்கள் தமக்குத் தெரிந்த மாணவர்களுக்கு சூப்பர் 16 குறித்த தகவலை அனுப்பி வைத்திருந்தார்கள். அந்த நண்பர்கள் இந்தச் செய்தியையும் சிரமம் பார்க்காமல் அனுப்பி வைத்துவிடவும். 

நேர்காணலுக்குப் பிறகு பதினைந்து முதல் இருபது மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விவரங்கள் தேவைப்பட்டால் 9842097878 (திரு.அரசு தாமசு) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

சூப்பர் 16 பற்றிய மேலதிக விவரங்கள் இணைப்பில் இருக்கிறது. 

Nov 21, 2018

டெல்டா - நன்கொடை விவரம்

டெல்டா பகுதிகளில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சிங்.ஜெயக்குமார் என்றொரு நண்பர் புஷ்பவனத்திலிருந்து நேற்று அழைத்தார். ‘நாங்க நாலாயிரம் பேர் இருக்கோம்...அரிசி கூட கிடைச்சுடுது..ஆனா பருப்பு, காய்கறியெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க..ஏதாச்சும் செய்யுங்க’ என்றார்.  ஒரு முகாமில் தங்கி சமைத்து உண்கிறார்கள். அவரிடம் செல்ஃபோன் இல்லை. பிஎஸ்என்எல் மட்டுமே வேலை செய்கிறது. நண்பர் ஒருவரிடமிருந்து அழைத்துப் பேசினார். திரும்ப அழைத்தால் இணைப்பு கிடைப்பதில்லை. இன்று மாலையில் ஓரளவு பொருட்கள் சென்றிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் போதாது என்றுதான் நினைக்கிறேன். 

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நிறைய நிவாரணப் பொருட்கள் செல்கின்றன. ஆனால் யானைப்பசிக்கு சோளப்பொரி என்கிற கதையாகத்தான் இருக்கும். ஏகப்பட்ட கிராமங்கள் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன. மின்சாரமில்லை. உணவுப்பொருட்கள் இல்லை. செல்போன் வசதியில்லை என்று திண்டாடுகிறார்கள். பல கடைகள் புயலில் சேதமடைந்துவிட்டதால் எந்தப் பொருட்களும் உள்ளூரில் கிடைப்பதில்லை. அதனால்தான் நமக்கு பாதிப்பின் முழுமையான பரிமாணம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.  இன்னமும் ஏகப்பட்ட கிராமங்கள் பற்றி மெல்ல மெல்லச் செய்திகள் வரக்கூடும். இப்பொழுதுதான் சில சாலைகள் சரி செய்யப்பட்டிருக்கின்றன. இன்னமும் இயல்பு நிலைமை திரும்ப பல நாட்கள் ஆகக் கூடும் என்றார் ஜெயக்குமார். 

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் தன்னார்வலர் குழுக்களில் இணையுங்கள். களப்பணிக்கும், பொருட்களை எடுத்துச் செல்வதற்குமான நிறையத் தேவையிருக்கிறது. எந்த ஊர்களுக்குத் தேவை என்பதைக் கண்டறிந்து அங்கே எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். 

நிசப்தம் அறக்கட்டளைக்கு கடந்த இரண்டு நாட்களில் டெல்டா நிவாரண உதவிகளுக்கு என ரூ 6,17,027.00 (ஆறு லட்சத்து பதினேழாயிரத்து இருபத்தேழு ரூபாய் வந்திருக்கிறது). அதில் முப்பதொன்பதாயிரம் ரூபாய் தார்பாலின் வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (வரிசை எண் : 95). முழுமையான வங்கி அறிக்கை (Bank Statement) கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. 

Opening Balance: Rs. 15,76,639.18
Donations:Rs. 6,17,027.00
Material Purchase: Rs.39,000
Remaining Amount: Rs. 5,78,027.00

ஏதேனும் சந்தேகமிருப்பின் vaamanikandan@gmail.com