‘I want to be your sex slave' என்பதை முதுநிலை படித்துக் கொண்டிருந்த போது முதன்முறையாகக் கேள்விப்பட்டேன். அப்பொழுது ரெடிஃப் சாட் வெகு பிரபலம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகத்தில் இருக்கும் கணினியில் அமர்ந்து அந்தத் தளத்தில் யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பதுண்டு. அப்பொழுதுதான் யாரோ ஒருத்தன் இப்படி எழுதியிருந்தான். ‘இப்படியெல்லாம் கூட இருப்பாங்களா? ஜாலியாத்தானே இருக்கும்’ என்று நினைத்துக் கொண்ட பருவம் அது. பிறகு வயது கூடக் கூட ‘அடங்கொண்ணிமலையா’ என்று தெரிய வந்தது. எந்தவிதமான அடிமை முறையுமே கொடுமையானதுதான்.
வரலாறு முழுக்கவும் மனிதர்களை ஏதாவதொரு காரணத்துக்காக அடிமையாக்குதல் நிகழ்ந்ந்திருக்கிறது. குழந்தைகளைக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, வலுக்கட்டாயமான விபச்சாரம் என்பதெல்லாமே பாலியல் அடிமையாக்குதலின் வெவ்வேறு பரிணாமங்கள்தான். நிறையச் சுட்டிக்காட்டலாம். இரண்டாம் உலகப்போர் குறித்தான திரைப்படங்கள் சிலவற்றில் பார்த்ததுண்டு. ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் நாஜிக்கள் பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியது, ஜப்பானிய வீரர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக பெண்களை அனுப்பி வைப்பது என்பதையெல்லாம் பல படங்களில் காட்டியிருக்கிறார்கள். அத்தனையும் வரலாறுதானே? மனித மனதின் சிக்கல்களும் பாலியல் வேட்டைகளும் எல்லாக் காலத்திலும் எல்லா ஊர்களிலும் ஏதாவதொரு வகையில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
நேற்றிரவு வெளிநாட்டுத் திரைப்படங்களைத் தேடிக் கொண்டிருந்த போது 2017க்கான ஆஸ்கார் விருதுகளுக்கான போட்டியில் இருக்கும் திரைப்படங்களில் Get Out முக்கியமானது என்றொரு செய்தி கண்ணில்பட்டது. பார்த்துவிட வேண்டியதுதானே? பிப்ரவரியில் வெளியான இத்திரைப்படத்தை fmovies தளத்தில் சப்-டைட்டிலுடன் பதிவேற்றி வைத்திருக்கிறார்கள்.
கிறிஸ் ஒரு கறுப்பின இளைஞன். தன்னுடைய காதலி ரோஸூடன் அவளது பெற்றோரைச் சந்திக்கச் செல்கிறான். அவர்கள் வெள்ளைக்காரக் குடும்பம். தன்னை ஏற்றுக் கொள்வார்களா என்கிற சந்தேகமில்லாமல் இல்லை. ரோஸின் அப்பா நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். அம்மா உளவியல் வல்லுநர். ஹிப்னாடிசமும் அவருக்குத் தெரியும். ரோஸூக்கு சகோதரன் ஒருவன் இருக்கிறான். அவனைத் தவிர மற்றவர்களுக்கு கிறிஸ்ஸின் நிறம் பற்றிய பிரச்சினையில்லை. சுமூகமாகப் பழகுகிறார்கள்.
இரவு உணவின் போது ரோஸின் அப்பா ‘நீ சிகரெட் பிடிப்பியா’ என்கிறார். கிறிஸ் சிரிக்க தன்னுடைய மனைவி ஹிப்னாடிச முறையில் தன்னைப் புகைப்பழக்கத்திலிருந்து விடுவித்ததாகச் சொல்வார். அன்றைய தினம் இரவில் தூக்கம் வராமல் வெளியில் கிறிஸ் வெளியில் காற்றாட அலையும் போது அந்த இல்லத்தில் பணியாற்றும் இரு கருப்பின மனிதர்கள் கிறிஸ்ஸை திகிலூட்டுவார்கள். பதறியடித்து உள்ளே வருகிறவனை ரோஸின் அம்மா ஹிப்னாடிசம் செய்வாள். இதை மறுநாள் ரோஸிடமும் கிறிஸ் தெரிவித்துவிடுவான். அவளுக்கும் அது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
வார இறுதியில் அந்த வீட்டில் ஒரு பார்ட்டி நடைபெறுகிறது. அத்தனை பேரும் வெள்ளை மனிதர்கள். பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள். ஒரேயொரு கறுப்பின இளைஞன் மட்டும் அந்தக் கூட்டத்தில் உண்டு. அவன் தன்னைவிடவும் முப்பது வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்திருப்பான். ‘அவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு’ என்ற சந்தேகத்தை ரோஸிடம் கிறிஸ் சொன்னாலும் அவனால் உறுதியாகச் சொல்ல முடியாது. அவனை நிழற்படம் எடுத்து தன்னுடைய நண்பன் ராட் வில்லியம்ஸூக்கு அனுப்புகிறான். அந்த இளைஞனை ராடுக்குத் தெரியும். ‘இப்போ அவன் வேற மாதிரி மாறிட்டான்’ என்று கிறிஸ் சொன்னவுடன் ராடுக்கு சந்தேகம் உண்டாகும். ‘நீ அங்க இருந்து உடனே கிளம்பு..இல்லைன்னா உன்னை sex slave ஆக்கிவிடுவார்கள்’ என்பான்.
‘நாம கிளம்பலாம்’ என்று கிறிஸ் ரோஸிடம் சொல்ல அவளும் உடனடியாகத் தயாராவாள். அந்தச் சமயத்தில் ரோஸ் நிறையக் கறுப்பின ஆடவர்களுடன் எடுத்து வைத்திருந்த நிழற்படங்கள் அவனது கண்ணில்படும். தனக்கு முன்பு இவளிடம் நிறைய கறுப்பின இளைஞர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்பதை அவன் தெரிந்து கொள்வான். ‘அந்தக் கார் சாவியைக் கொடு’ என்று கிறிஸ் திரும்பத் திரும்பக் கேட்க அவள் தராமல் இழுத்தடிப்பாள். அப்பொழுதிருந்து கிறிஸ்ஸின் கெட்ட நேரம் ஆரம்பாகும். அதன் பிறகு படம் ஜெட் வேகம். தப்பிக்க முயற்சிப்பவனை ரோஸின் சகோதரன் தாக்கும் போது அவளது அம்மா ஹிப்னாடிசம் செய்து மயங்கச் செய்ய, கிறிஸ் அவர்களிடம் வசமாகச் சிக்கிக் கொள்வான். அவனை ரோஸூம் அவளது சகோதரனும் தூக்கிச் சென்று கட்டிப் போடுவார்கள்.
இனி மூன்று கட்டமாக அவனை உருமாற்றுவார்கள். கடைசிக் கட்டமாக அவனது மூளையின் ஒரு பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளை நீக்கிவிட்டு வேறொரு வெள்ளைக்காரனின் மூளையைப் பொருத்திவிடுவார்கள். அதன் பிறகு அவன் கிறிஸ்ஸாக இருக்கமாட்டான். யாருடைய மூளையைப் பொருத்துகிறார்களோ அந்த வெள்ளைக்காரன் ஆசைப்படுவதையெல்லாம் கிறிஸ்ஸின் உடல் செய்யும். Sex slave என்பது ராட் பயன்படுத்தும் சொல். அதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஏன் கிறிஸ்ஸுடைய மூளையின் ஒரு பகுதியை மட்டும் விட்டுவைக்கிறார்கள் என்றால் அந்தப் பகுதியைப் பயன்படுத்தித்தான் ஹிப்னாடிசம் வழியாகத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
பக்காவான திட்டமிடல். வசவான வலை. சிக்கிக் கொண்டான். இனி கிறிஸூக்கு என்ன ஆகும் என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். அட்டகாசமான படம்.
பக்காவான திட்டமிடல். வசவான வலை. சிக்கிக் கொண்டான். இனி கிறிஸூக்கு என்ன ஆகும் என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். அட்டகாசமான படம்.
படத்தின் இசையும் ஒளிப்பதிவும் திகிலூட்டிக் கொண்டேயிருக்கின்றன. எப்படியெல்லாம் யோசித்துப் படம் எடுக்கிறார்கள்?
பார்ட்டிக்கு கூட்டமாக வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள் அல்லவா? அவர்கள் secret community. வந்திருந்தவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்திற்காக கிறிஸ்ஸைப் பிடிக்கிறது. ஒருத்தி ‘இவன் பயங்கர பலசாலி’ என்று அவனது புஜங்களைப் பிடிப்பாள். இன்னொருத்தி ‘மத்ததெல்லாம் நல்லா இருக்கா?’ என்பாள். இன்னொருவன் ‘இப்பொழுது கறுப்புதான் ஃபேஷன்’ என்பான். ஒரு பார்வையற்றவன் இவனது கண்கள் எனக்குத் தேவை என்பான். அவனுடைய மூளைதான் கிறிஸ்ஸின் உடலுக்கு மாற்றப்படும்.
படம் உண்டாக்கக் கூடிய த்ரில் ஒரு பக்கம் என்றால் நமது மூளையின் வழியாக நம்முடைய லட்சியம், ஆசைகள் என எல்லாவற்றையும் துறந்துவிட்டு எவனுடைய மூளைக்கோ நம் உடலைக் கொடுத்து அவனது ஆசைகளுக்கு வடிகாலாக மாறப்போகும் இளைஞனின் வலியும் துடிப்பும்...
படம் பற்றி விவாதிக்க நிறைய இருக்கிறது. ஒரு முறை படத்தைப் பார்த்துவிடுங்கள். பிறகு பேசுவோம்.
5 எதிர் சப்தங்கள்:
பார்க்க வேண்டிய படம் தான்.ஆவலைத் தூண்டும் வகையில் எழுதியுள்ளீர்கள்.
Try The Skeleton Key(2005) and The Others(2001) also, if you haven't seen before...
நன்றி. இந்த வாரத்தில் பார்த்துவிடுகிறேன்.
அடிமை முறையை இஸ்லாம் ஆதரிக்கிறது. அது தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை யாரும் வெளியே பேச மாட்டார்கள்
படம் பார்த்தேன். எனக்கு படத்தை வர்ணித்து சொல்ல தெரியாது ஆனா படம் அருமை .(நீங்கள் படத்தை பற்றி கூறியதால் புரிந்துகொள்ள எளிதாக இருந்தது) 'கடைசிக் கட்டமாக அவனது மூளையின் ஒரு பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளை நீக்கிவிட்டு வேறொரு வெள்ளைக்காரனின் மூளையைப் பொருத்திவிடுவார்கள்' இல்லை . அவர்கள் மூளையை மாற்றும் முன்பே ? கிறிஸ் தன் காதில் பஞ்சுகளை அடைத்து வைத்து அவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக கொன்று தப்பி விடுகிறான். கிறிஸ் க்கு தன் காதலியை தவிர அவர்கள் அனைவரின் மீதும் ஒரு சிறு நம்பிக்கையின்மை இருப்பது போன்று அவனின் முகபாவனையில் தெரியும். க்ளைமாக்ஸில் அந்த வீட்டில் அடிமையாய் இருக்கும் கறுப்பின இளைஞன் ஏன் ரோஸ் ஐ சுட்டு கொன்று தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தான் என்பது புரியவில்லை.
Post a Comment