Dec 18, 2017

குழந்தைகளா? ப்ராய்லர் கோழிகளா?

‘ஆண்டுவிழா நடத்துகிறோம். உங்கள் மகன் கலந்து கொள்வதாக இருப்பின் ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து அனுப்பவும்’ என்றொரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்கள். பள்ளியிலிருந்து. ஏற்கனவே கொடுத்த காசெல்லாம் போதாது என்று இப்படியொரு வருமானம். பணம் கொடுத்தால் மேடையேறலாம். இல்லையென்றால் வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டும். கடந்தாண்டு சென்றிருந்தேன். முப்பது அல்லது நாற்பது குழந்தைகளை மேடையில் ஏற்றிவிடுவார்கள். ஐந்து நிமிடங்கள் பாட்டு ஒன்று பாடும். திக்குக்கு ஒன்றாக கையை அசைப்பார்கள். அவ்வளவுதான். நடனம் முடிந்தது. பெற்றவர்கள் ஆளுக்கு ஒரு கேமிராவைத் தூக்கிக் கொண்டு வந்து மேடைக்கு முன்பாக நின்று கொள்வார்கள். பின்னால் இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவரவருக்கு அவரவர் பிள்ளை. காக்கைக்கும் தன் குஞ்சு...

பாடல் முடிந்தவுடன் ‘ஓ வாவ்...சூப்பர்ப் டான்ஸ்’ என்று தொப்புள் தெரிய சேலை கட்டிக் கொண்டு நடக்கவே தெரியாத செவத்த டீச்சர் மைக்கில் கத்தியவுடன் கூட்டம் புளகாங்கிதம் அடைந்து ஆர்பரிக்கும். இதுக்கு எதுக்கு பணம் வாங்குகிறார்கள் என்று குழப்பமாக இருந்தது. உடைக்கு மட்டும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகுமா? விழா நடத்துவதற்கான மொத்தச் செலவையும் நம் தலையில் கட்டிவிடுவதற்கான ஏற்பாடு அது. சில பள்ளிகளில் ஒரு மாணவனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கூட வாங்குகிறார்களாம். கல்லுக்கு ஏற்ற பணியாரம். சோறு கூட போடுவார்களாக இருக்கும்.

‘இதெல்லாம் தேவையில்லை’ என்று சொன்னால் ‘நம்ம பையன் மட்டும் மேடையில் ஆடலைன்னா நல்லா இருக்குமா?’ என்கிறார்கள். ப்ராய்லர் கோழி இன் மேக்கிங்.

‘டேய் ஆண்டு விழா போட்டிகளில் கலந்துக்கிறவங்களுக்கு நாளைக்கு செலக்‌ஷன்..ஆலமரத்துக்கு கீழ நடக்கும்...கலந்துக்கிறவங்க கலந்துக்கலாம்’ என்று ஒரு சுற்றறிக்கையை வாசித்துவிட்டு ஆசிரியரோ ஆசிரியையோ வகுப்பறையில் அறிவித்தவுடன் மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடிவினா, நாடகம் என்று எல்லாவற்றிலும் காலை நனைத்துவிட வேண்டும் என்ற ஆசை பற்றிக் கொள்ளும்.

நடராஜ் என்றொரு ஆசிரியர் இருந்தார். தமிழ் பண்டிட். எந்நேரமும் வாய் சிவக்க வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருப்பார். அவரும் மன்சூர் அலி என்ற இன்னொரு ஆசிரியரும்தான் பெரும்பாலும் கலை நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். நடனம் ஆடிக் காட்டலாம், நாடகம் நடத்திக் காட்டலாம். அவர்களுக்குப் பிடித்திருந்தால் ‘உங்க டீம் செலக்ட் ஆகிடுச்சு’ என்பார்கள். பிறகு தகவல் பலகையிலும் அறிவித்துவிடுவார்கள். அதன் பிறகு மாணவர்களாகத் தயாரித்துக் கொள்ள வேண்டியதுதான். மூன்றாம் வகுப்புக்கான கலை நிகழ்ச்சியில் கூட ஆடிக்காட்டச் சொல்லித் திறமையிருந்தால்தான் தேர்ந்தெடுத்தார்கள். பணம் கொடுத்தால் மேடையேறலாம் என்கிற அயோக்கியத்தனமெல்லாம் இல்லை.

அருள்பிரகாஷ் என்றொரு சீனியர் ‘டேய் நான் நாடகம் போடுறேன்..நீ வர்றியா?’ என்றார். 

‘சரிங்கண்ணா’ என்றேன். இரண்டே பேர்தான். நான் வரிசையாகக் கேள்விகளைக் கேட்க வேண்டும். அவர் பதில் சொல்வார். அத்தனையும் நகைச்சுவையான கேள்வி பதில்கள். அப்படித்தான் நினைத்துக் கொண்டோம். 

ஒரே நாளில் ஒத்திகையெல்லாம் பார்த்துவிட்டு ஆலமரத்துக்குக் கீழாகச் சென்றோம். முதல் ஒன்றிரண்டு காட்சிகளிலேயே பல நாடகங்களையும் நிகழ்ச்சிகளையும் நடராஜூம் மன்சூர் அலியும் கழித்துக் கட்டினார்கள். 

எங்களை அழைத்தார்கள். குறளிலிருந்து ஆரம்பிப்போம் எனத் திட்டமிட்டிருந்தோம். தமிழாசிரியரை ஈர்ப்பதற்கான உபாயம் அது.

‘உம் பேரு என்ன?’

‘அருள் பிரகாஷ்’

மன்சூர் அலி என்னைப் பார்த்து ‘டேய் சுண்டைக்காயா..உம்பேரு என்ன?’ என்றார்.

சொன்னேன். ‘நாடகமா?’ 

‘ஆமாங்கய்யா’- வகுப்புகளைக் குறித்துக் கொண்டார்கள்.

அருள்பிரகாஷ்தான் ஆரம்பித்தார். ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை அண்டர்வேரைக் கிழிக்கும்’. அதுவரைத் தலையைக் குனிந்து கொண்டிருந்த தமிழாசிரியர் தலையைத் தூக்கிப் பார்த்தார்.

‘மறுபடி சொல்லு’ என்றார்.

என்னவோ விபரீதம் நடக்கப் போகிறது என எனக்குத் தெரிந்தது. அருளுக்கு அது தெரியவில்லை. நம்மை பாராட்டப் போகிறார் போலிருக்கிறது என்ற நினைப்பில் மீண்டும் உற்சாகமாகச் சொல்ல எழுந்தார். ஆசிரியருக்கு ஒரு கால் சற்றே ஊனம். தத்தி எழுந்து வந்தவர் அருகில் இருந்த செடிக்குள் வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு கும்மினாரே பார்க்கலாம். மன்சூர் அது வரைக்கும் அமைதியாகத்தான் இருந்தார். ஒருவேளை அவருக்கு உடனடியாக அர்த்தம் புரிந்திருக்கவில்லை என நினைக்கிறேன்.

‘அண்டர்வாரைக் கிழிக்குமாமா..’என்று நடராஜ் வாத்தியார் எடுத்துக் கொடுக்கவும் விபரீதம் எனக்குத் திரும்பியது. பையன்கள் கமுக்கமாகச் சிரித்தார்கள். மன்சூர் அடிப்பதற்குக வாகாக நான் அருகிலேயே நின்றிருந்தேன். ‘அவனுக்கு நீ அசிஸ்டெண்ட்டா?’ என்று கும்மிய கும்மு இருக்கிறதே.

நல்லவேளையாக முதல் குறளிலேயே தடுத்தாட்கொண்டார்கள். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவின் சுவர்களில் எழுதி வைக்கப்பட்டிருந்த குறள்களையெல்லாம் எங்களின் வசனங்களில் நுழைத்திருந்தோம். அதையெல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்த்திருந்தால் கொத்து புரோட்டா போட்டிருப்பார்கள்.

அடியை வாங்கிக் கொண்டு ஆடுகளத்தில் அமர்ந்திருந்தோம். இரண்டு பேருக்குமே முகம் வீங்கிப் போய்க் கிடந்தது. வாத்தியார்களை மாற்றி மாற்றித் திட்டிக் கொண்டிருந்தோம்.

பையன்கள் வந்தார்கள். 

‘என்னடா ஆச்சு?’ சுரத்தேயில்லாமல் கேட்டோம். 

மறுபடியும் நாளைக்கு வரச் சொன்னார்கள் என்று சொல்லவும் அருளுக்கு உற்சாகம். ‘வேற ஒண்ணு ரெடி பண்ணலாமா’ என்றார். அப்பொழுது அவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். நான் ஆறாம் வகுப்பு.

‘நான் வரலைங்கண்ணா’ என்றேன். எத்தனை முறை அடி வாங்குவது?

‘டேய்...இப்போ அடி வாங்க மாட்டோம்’ என்றார். எனக்கு நம்பிக்கையில்லை. அதையும் இதையும் சொல்லி கடைசியாக ஒரு வழியாக்கினார். இடையில் ஒரே நாள்தான் இருந்தது. பக்திப் பழங்களாக மாறினோம். ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டுக்காக அடித்துக் கொள்ளும் விநாயகர்-முருகன் கதை. அதே நகைச்சுவைதான் அடிநாதம். ஒரே நாளில் தயாரோனோம். 

வாத்தியார் முன்னாடி நின்ற போது குதர்க்கமாகப் பார்த்துவிட்டு ‘ஏதாச்சும் தப்பும் தவறுமா செஞ்சீங்க..சாவடிச்சுடுவேன்’ என்றார். 

தலையை ஆட்டிவிட்டு நாடகத்தை ஆரம்பித்தோம். எங்கள் சேட்டைகளைப் பார்த்துவிட்டு ஆசிரியருக்கு ஒரே சிரிப்பு. அவரே சில ஐடியாக்களைக் கொடுத்து மெருகேற்றினார். ஆண்டுவிழா மேடையில் எங்களுக்குத்தான் பயங்கரமான கைதட்டு. அருள் பிரகாஷூக்கு எப்படியென்று தெரியவில்லை. என் வாழ்வில் மிக முக்கியமான சில நாட்கள் அவை. ஆயிரத்து ஐநூறெல்லாம் செலவு இல்லை. உடையெல்லாம் பெரிதாக இல்லை. சட்டையைக் கழற்றிவிட்டு நான் முருகனாக இருந்தேன். அவர் யானை முகத்தை அட்டையில் தயாரித்து ஒட்டிக் கொண்டு விநாயகராக மாறினார்.

அதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் ப்ராய்லர்ஸ் இன் மேக்கிங் என்பதன் தெளிவான வித்தியாசம் புரிகிறது. குழந்தைகளுக்கு ‘இதெல்லாம் வாய்ப்புகள்’ என்றுச் சுட்டிக் காட்டுவது வேறு. ‘நீ இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று மோல்டிங் செய்வது வேறு. குழந்தைகளுக்கு சுதந்திரச் சூழல் அவசியம். அவரவர் போக்கில் விட்டுவிட வேண்டும். அவர்களுக்கே நிறையத் தோன்றும். அவர்களுக்குத் தோன்றுவதை அதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒழுங்குபடுத்தினால் போதும். அதை விட்டுவிட்டு சனிக்கிழமை கிதார் வாசி; ஞாயிற்றுக்கிழமை அபாகஸ் பழகு; கிரிக்கெட் கோச்சிங் என்று தாளிப்பதுமில்லாமல் மேடையிலும் இதுதான் உடை. இதுதான் நடனம் என்றெல்லாம் எல்லாவற்றையும் நாம் வடிவமைத்துக் கொடுப்பதற்குப் பெயர்தான் ப்ராய்லர் கோழி வளர்ப்பு. குழந்தைகள் அவர்களுக்கான களங்களை அவர்களாகக் கண்டறியட்டும். எல்லாவற்றிலும் நாமே மூக்கை நுழைத்தால் அதைப் போன்ற டார்ச்சர் அவர்களுக்கு வேறெதுவுமில்லை.

11 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//பணம் கொடுத்தால் மேடையேறலாம் என்கிற அயோக்கியத்தனமெல்லாம் இல்லை.//
அதெல்லாம் அப்போ(து)
இப்ப பணமிருந்தா சமஉ வா ஆகி மொதமசைச்சரா வே ஆவலாம்.

சேக்காளி said...

//தொப்புள் தெரிய சேலை கட்டிக் கொண்டு நடக்கவே தெரியாத செவத்த டீச்சர் //
நடக்க தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன? தொப்புள் தெரியுதா ன்னு மட்டும் பா(ர்)க்கவும்.

Malar said...

Well said..it is the reality in many schools today.

Prakash Viswa said...

//நடக்க தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன? தொப்புள் தெரியுதா ன்னு மட்டும் பா(ர்)க்கவும்.//

யோவ் சேக்காளி.. பின்றீரைய்யா.. அது சரி.. மணி அண்ணன் பார்க்காமையா வந்திருப்பாரு..? :) :)

Anonymous said...

மணி அண்ணனுக்கு இன்னைக்கு நைட் வீட்ல அடி confirm டோய்!!

செந்தில்குமார் said...

முன்னாடி நின்னு போட்டோ எடுக்கறதோட முடிச்சுட்டா பரவாயில்லை, அதை வாட்சப்ல அனுப்பிவேற கொள்ளுவாங்களே

Vinoth Subramanian said...

//நடக்க தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன? தொப்புள் தெரியுதா ன்னு மட்டும் பா(ர்)க்கவும்.// vera level... chanceless reply...

சேக்காளி said...

//. அது சரி.. மணி அண்ணன் பார்க்காமையா வந்திருப்பாரு..?//
அதானே .மூணு நாளா பதிவு ஒண்ணும் எழுதாம இருக்கும் போதே ஒரு சந்தேகம் இருந்துச்சு.இப்ப கன்பர்ம் ஆயிடுச்சு.

tirupurashok said...

செம காமெடி செம கருத்து

Anonymous said...

முற்றிலும் உண்மை. சென்னையில் இருக்கும் சுந்தரவல்லி பள்ளியில் ukg படிப்புக்கு 1,32,000 பீஸ்!! ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு 5000 ரூபாய். கூட்டம் மொய்க்கிறது. அவர்கள் பந்தா தாங்க முடியாது.

ilavalhariharan said...

அடங்காமை அண்டர்வேரைக் கிழிக்கும் ...
படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்
சொல்ல வந்த கருத்து காதில் விழ வே ண்டியவர்க்கு விழட்டும் .