பத்து வருடங்களுக்கு முன்பாக மலேசியா சென்றிருந்த சமயம். ‘அங்க போய் அது தெரியாது..இது தெரியாதுன்னு சொல்லாத’ என்று நாசூக்காகச் சொல்லி அனுப்பினார்கள். ‘வல்லவனை அனுப்புகிறோம்’ லட்சக்கணக்கில் அவர்களிடம் பில் போடுவார்கள். ‘தெரியாதவனை அனுப்பி ஏமாத்திட்டீங்களா?’ என்று அவர்கள் முரண்டு பிடித்துவிடக் கூடாதல்லவா? அதனால் அவர்களின் பயம் அவர்களுக்கு.
சூங் ஃபூய் கென் என்ற பெண்மணியிடம் அனுப்பி வைத்தார்கள். நல்ல பெண்தான். ஆனால் என்னை அசகாயசூரன் என்று நினைத்துவிட்டாள். எனக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை. ‘இதைச் சொல்லிக் கொடு’ என்று கேட்கவும் பயம். மன அழுத்தம் அதிகமானால் எனக்கு வாயில் புண் வரும். காலங்காலமாக கருஞ்சுக்கிட்டி (இத்தினியூண்டு இருப்பதனால் மணத்தக்காளிக்கு சுக்கிட்டி என்று பெயர்) கீரையைத் தின்பதும், சோம்புவை மெல்வதும் என்பதெல்லாம் கதைக்கே ஆகவில்லை. டென்ஷன் ஆவதைக் குறைத்தால் சரியாகிவிடும் என்று தெரிந்த பிறகுதான் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்திருக்கிறது. அது தனிக் கதை.
மலேசியாவிலும் அதே கதைதான். அவர்களின் பாமாயில் சமையல் வேறு மூக்கைத் துளைக்கிறது. புண் நாவைத் துளைக்கிறது. ‘ஏண்டா வந்தோம்’ என்றாகிவிட்டது. போதாக்குறைக்கு பொருளாதார மந்தம் ஆரம்பித்து பெரு நிறுவனங்கள் ஆட்களை வீட்டுக்கு அனுப்பத் தொடங்கியிருந்தார்கள். திருமணத்துக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லாம் சேர்ந்து கீழே தள்ளி மேலே அமர்ந்திருந்தன.
நமக்கும் ஒரு பொறுமை இருக்கிறதல்லவா?
ஒரு வாரம் பொறுத்துப் பார்த்துவிட்டு சூங் ஃபுய் கென்னிடம் வெட்கத்தைவிட்டுச் சொல்லிவிட்டேன். ‘எனக்கு ஒன்றரை வருஷம்தான் அனுபவம். இப்போத்தான் தெரிஞ்சுட்டு இருக்கேன்..தயவு செஞ்சு சொல்லிக் கொடு ஆத்தா’ என்றேன். அவள் ஓடிப் போய் இன்னொரு சைனாக்காரியிடம் நசுக்கிவிட்டு வந்துவிட்டாள். அவர் நிறுவனத்தின் இயக்குநர். அந்தப் பெண்மணி வழியாக ஹைதராபாத் விவகாரம் போய் அங்கேயிருந்து மேலாளர் அழைத்தார். கிட்டத்தட்ட அழுகிற சூழல்.
‘ஆமாங்க எனக்குத் தெரியல..சொல்லிட்டேன்..வேண்டாம்ன்னா திரும்ப வந்துடுறேன்’ என்றேன். ‘நீ சொல்லியிருக்கக் கூடாது..எங்ககிட்ட கேட்டிருக்கலாம்ல’ என்றார்.
சொல்லியாகிவிட்டது. என்ன செய்ய முடியும்? அவர் என்ன மாய்மாலம் செய்தார் என்று தெரியவில்லை. அநேகமாக பில்லிங் தொகையைக் குறைத்திருக்கக் கூடும். அது எனக்குப் பிரச்சினையில்லை. பெருஞ்சுமை குறைந்தது போல இருந்தது. அதன் பிறகு சூங் ஃபுய் கென்னும் பிலிப்பும் சொல்லிக் கொடுத்தார்கள்.
என் குருவிக்கூட்டு மண்டைக்கு அதுவொரு பெரிய பாடம்.
‘எனக்கு இவ்வளவுதான் தெரியும்..இவ்வளவுதான் முடியும்’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டால் போதும். தவறாக நினைத்தால் நினைத்துவிட்டுப் போகட்டும். தலையை வெட்டிவிடவா போகிறார்கள். நேர்காணலிலும் கூட இந்தப் பாடம் பயன்படும். ‘இவ்வளவுதான் தெரியும்...எடுத்தால் எடுத்துக்குங்க’ என்கிற மனநிலையோடு அணுகினால் வேலை கிடைக்கிறதோ இல்லையோ- ஒருவேளை வேலை கிடைத்தாலும் அழுத்தம் இருக்காது. அலுவலகத்தில் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளைக் கூட கேட்டுவிடுவதுண்டு. ‘இது ஃப்ரெஷருக்குக் கூடத் தெரியுமே’ என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார்கள். கடந்த மாதம் கூட ஒரு கன்னடப்பெண்மணி அப்படித்தான் சொன்னாள். ‘ஆமாம்..எனக்குத் தெரியல’ என்றேன். பக்கத்தில் இருந்த நண்பர் ‘உங்களை மதிக்கமாட்டாங்க’ என்றார். மதித்து என் மகனுக்கு பெண் கொடுக்கவா போகிறார்கள்? நம்முடைய மரியாதை அலுவலகத்துக்கு வெளியில் இருந்தால் போதும் என்கிற மனநிலைதான் எனக்கு. சம்பள உயர்வில் கை வைக்கக் கூடும். அதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
அலுவலகம் என்றில்லை- பொதுவாக எந்த இடத்திலும் நம்மைப் பற்றி பிரஸ்தாபிக்காமல் இருந்துவிட்டால் பாரமே இல்லை. நம்மிடம் எதிர்பார்க்கமாட்டார்கள். எனக்கு அது தெரியும்; இது தெரியும் என்று இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்லி வைத்து பிம்பத்தைக் கட்டமைத்தால் அத்தனையையும் தூக்கிச் சுமக்க வேண்டியதாகிவிடுகிறது. அப்புறம் அழுத்தம் இல்லாமல் என்ன செய்யும்? அழுத்துகிறார்களே என்று நேரத்தை நீட்டி, பயந்து, பதறி என்று ஒரு வழியாக வேண்டியதுதான்.
யாராவது நம்மை இகழ்ந்துவிடுவார்களோ, நம்மை அரைவேக்காடு என்று சொல்லிவிடுவார்களோ என்கிற பயம் எல்லோருக்குமே உண்டு. அப்படியெல்லாம் யார் சொன்னாலும் கண்டுகொள்ள வேண்டியதில்லை. ‘ஆமாம் அதுக்கென்ன இப்போ?’ என்கிற மனநிலையில் இருந்தால் பெருமளவு ஆசுவாசமாக இருக்கும். குழந்தைகளிடமிருந்தே பழக்கிவிட்டுவிட வேண்டும். இந்தக் காலத்துக் குழந்தைகளிடம் கூட இந்தக் கெட்டபழக்கம் இருக்கிறது. தெரியாததைத் தெரியாது என்று ஒத்துக் கொள்வதில்லை. ‘ஆல் இன் ஆல் அழகுராஜாவாக’ இருப்பதில் ஒரு கெத்து. என்னைவிடச் சிறியவர்கள், மாணவர்கள் என்று யாரிடமும் இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அடிமுட்டாள் என்று அடுத்தவன் சொன்னாலும் கூட அதைப் பற்றிக் கவலைப்படவே வேண்டியதில்லை. அடுத்தவர்கள் சொல்வதால் எல்லாம் நமக்கு எந்த இழப்புமே இல்லை. கடைசி வரைக்கும் கற்றுக் கொண்டேதான் இருக்கப் போகிறோம். மெதுவாகக் கற்றுக் கொள்ளலாம். நமக்கு என்ன தெரியாது என்பதை மட்டும் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் போதும். கற்றுக் கொள்ளலாம்.
இயல்பாக இருந்து கொண்டால் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. நடித்துப் பழகிவிட்டால் வாழ்க்கையில் இயல்பாகவே இருக்க முடியாது.