நவம்பர் ஒன்றாம் தேதி வந்தால் போதும் பெங்களூரு அல்லோகலப்படுகிறது. மாநிலம் முழுவதுமேதான். மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் நடத்தத் துவங்கியதைக் கொண்டாடுகிறார்கள். ராஜ்யோத்ஸவ தினம் என்று ஒரு மாதத்திற்கு ராஜாங்கம் நடத்துகிறார்கள். பார்த்த பக்கம் எல்லாம் மஞ்சள் சிவப்பு கன்னடக் கொடி பறக்கும். விஷ்ணுவர்தன், சங்கர் நாக் மாதிரியான வெளி மாநிலங்களில் அதிகம் தெரியாத கன்னட நடிகர்களின் பதாகைகள் நிரம்பி வழியும். குவெம்பு, யு.ஆர்.அனந்தமூர்த்தி மாதிரியான அறிவுஜீவிகளுக்கும் கனத்த மரியாதை. அது ஏன் சங்கர் நாக் மற்றும் விஷ்ணுவர்தனுக்கு மட்டும் முக்கியத்துவம்? அவர்கள் இருவரும் ஏழைப் பங்காளர்களாக அதிகமாக நடித்தவர்கள். ராஜ்குமாரைக் கூட அதிகம் பொருட்படுத்துவதில்லை. காரணம் கேட்டால் அவர் நிறையப் வரலாற்று ரீதியிலான படங்களில்தான் நடித்தார் என்கிறார்கள். அதைவிடவும் முக்கியமான காரணம்- ராஜ்குமாரைக் கிட்டத்தட்ட தமிழராகத்தான் பார்க்கிறார்கள்.
கன்னட ராஜ்யோத்ஸவ மாதத்தில் கார்போரேட் அலுவலங்களில் கூட கூட்டம் நடத்தி எல்லோரையும் வரவழைத்து ‘கன்னடம் கத்துக்குறதுன்னா சொல்லுங்க...புக் தர்றோம்’ என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்கள். அலுவலகங்களிலேயே பணிபுரிகிறவர்களே செய்கிற ஏற்பாடுகள்தான். கன்னடத்தவர்களுக்கு அடிப்படையிலேயே இப்படியான மொழியுணர்வு உண்டென்றால் இன்னொன்றும் உண்டு.
சில மாதங்களுக்கு முன்பாகக் காவிரி பிரச்சினை வந்ததல்லவா? அப்பொழுது ஒருவர்- நம்மவர்தான்- ஃபேஸ்புக்கில் கன்னடர்களை விமர்சித்து எழுதியிருக்கிறார். அவர் முன்பு பணி செய்த அலுவலகத்தில் இருக்கும் ஆட்களுக்கு இதை ஒருவர் போட்டுக் கொடுத்துவிட்டார். தற்பொழுது எங்கே பணியில் இருக்கிறார் என்பது தெரிந்திருந்த அவர்கள் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார்கள். ‘அவன் எங்கே இருக்கான்? எப்போ அலுவலகம் விட்டு வெளியில் வருவான்? எப்பொழுது சாத்தலாம்?’ என்றெல்லாம் திட்டமிட்டதைத் தெரிந்து கொண்ட இன்னொரு தமிழ் ஆள் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த நிர்வாகம் தலையிட்டுத் தடுத்திருக்கிறது. எழுதியவனும் சரி; திட்டமிட்டவர்களும் சரி. படித்தவர்கள்தான். ஒன்றாகப் பணியாற்றியவர்கள். ஆனாலும் கூட அடி போடத் தயாராகிவிட்டார்கள். ஒருவேளை அவன் சிக்கியிருந்தால் சின்னாபின்னமாகியிருக்கக் கூடும்.
பெங்களூரில் கன்னடம், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என ஐந்து மொழிகளில் ஏதேனும் ஒன்று தெரிந்தால் கூட போதும். கிட்டத்தட்ட பெரும்பாலானவர்களுக்கு இம்மொழிகளில் பரிச்சயம் இருக்கும். ஆட்டோக்காரர்களிடமிருந்தும் தள்ளுவண்டிக்காரர்கள் வரை. இவர்களில் பெரும்பாலானவர்கள் பிழைக்க வந்தவர்களாக இருக்கக் கூடும். அதுவே அரசு அலுவலகங்களில் ஏதேனும் பேச வேண்டுமானால் தப்பும் தவறமாக இருந்தாலும் கூட கன்னடத்தில் பேசினால் கிடைக்கும் மரியாதை தனி. நுட்பமாக கவனித்தால்தான் தெரியும். ஆனால் ‘நம்ம மொழியைப் பேச முயற்சிக்கிறான்’ என்பதற்கான மரியாதை அது.
‘இது ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்..எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்களா?’ என்று கேட்கலாம். பெரும்பாலானவர்கள் அப்படித்தான். நிச்சயமாகச் சொல்ல முடியும்.
கர்நாடகத்திற்கென தனிக் கொடி வைத்திருக்கிறார்கள். அது அரசினால் அங்கீகரிக்கப்பட்டது இல்லை. ஆனால் பொதுவான ஒரு கொடி. வினாயகர் சதுர்த்தியில் கூட அந்தக் கொடிதான் பறக்கும். கட்டடங்களில் பறக்கவிட்டிருப்பார்கள். ‘கன்னடத்தவர்களின் கட்டடம்’ என்பதான சமிக்ஞை அது. ஆட்டோக்களிலும் பறக்கும். இருசக்கர வாகனங்களின் எண் பலகையில் கொடியை வரைந்திருப்பார்கள். ஏதேனும் ஒருவகையில் ‘இது என் மாநிலம்..இது என் மொழி’ என்கிற உணர்வு தூண்டப்படுகிறது.
தமிழர்களுக்கு இப்படியான பொதுவான அடையாளச் சின்னம் என்னவென்று கேட்டால் எதைச் சொல்ல முடியும்? ‘மலையாளிகள், ஆந்திராக்காரர்கள் என யாருக்குமே இல்லை. நமக்கு மட்டும் ஏன் தேவை’ என்று கூட கேட்கலாம்தான். ஓர் இனத்துக்கென இத்தகைய சில அடையாளங்களின் தேவை அவசியமானது இல்லையா?
‘இந்திய தேசிய கீதத்தை திரையரங்குகளில் பாடுவது சரியா தவறா?’ என்றொரு கருத்து விவாதத்தை கடந்த மாதம் அலுவலகத்தில் நடத்தினார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இப்படி ஏதாவதொரு பொதுவான தலைப்பில் விவாதம் நடக்கும். தேசிய கீதம் படப்படுவது சரியா தவறா என்று உறுதியான முடிவு எதுவும் என்னிடமில்லை. எனவே விவாதத்தை வேடிக்கை பார்த்தேன். ஒரு தெலுங்கு நண்பர் பேசும் போது ‘ஒவ்வொரு முறையும் எழுந்து நிற்கும் போதும் எனக்கு புல்லரிக்கிறது’ என்றார். அவர் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. இளம் வயதிலிருந்தே ‘இது நம்முடையது’ என்கிற உணர்வு ஏற்றப்பட்டிருந்து அது சிதையாமல் காக்கப்பட்டிருக்குமாயின் அதே உணர்வுடன் எழுந்து நிற்கும் போது தேசியத்தின் பக்கமாகச் சாய்வதற்குத்தான் வாய்ப்பு அதிகம். பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படுவது, கொடியேற்றப்படுவது என்பதெல்லாம் இதனடிப்படையில்தானே?
கொடி, சின்னம், கீதம் போன்றவை அடையாளச் சின்னங்கள். மொழியையும், தேசத்தையும், மாநிலத்தையும் கண்களால் நேரடியாகப் பார்க்க முடிவதில்லை. அதனால் அவற்றுக்கு ஒரு அடையாளச் சின்னம் தேவைப்படுகிறது- ஒரு மதத்தின் சித்தாந்தத்துக்கு அடையாளமாக கடவுளின் உருவம் இருப்பதைப் போல. அந்த அடையாளச்சின்னத்தை பிரஸ்தாபித்து glorify செய்து கடவுளை நோக்கி நம்முடைய சாய்வு ஏற்படுவதைப் போல நாடு என்பதை நோக்கி நம்மை ஈர்ப்பதற்கான உபாயங்கள் அவை.
திரும்பத் திரும்பக் கன்னடக் கொடியைப் பார்க்கும் போது மிக இயல்பாக அவர்களுக்கு ‘இது என் மொழி; என் மாநிலம்’ என்கிற உணர்வு ஏற்படத்தானே செய்யும்? சாதி, இடம், இனம் சார்ந்த பிரிவினைகள் அவர்களுக்குள்ளும் உண்டு. லிங்காயத்துக்கள், கெளடாக்கள் என்று நிறையச் சச்சரவுகளும் உண்டு. ஆயினும் மாநிலம், மொழி என்ற அடிப்படையில் இணைய அவர்களுக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. இணைகிறார்கள். தமிழர்களிடம் ஏன் இல்லை?
6 எதிர் சப்தங்கள்:
//தமிழர்களிடம் ஏன் இல்லை?//
தவறானவர்கள் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நல்ல சிந்தனை. தமிழ் உணர்வாளர்கள் என்று தம்மை அடையாளம் காட்ட விரும்பும் அரசியல் சார்ந்த மற்றும் சாராத அனைத்து நற்றமிழர்கள் அனைவரும் இதிலாவது ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என அனைவரும் இறைஞ்சுவோமாக.கூடிய விரைவில் நமக்கும் ஒரு பொது அடையாளம் கிடைக்கும் என நம்புவோமாக.
வாழ்க வளமுடன்
tamilarkalidam unarvu irukirathu athai thavaranavarkal thangal suyalabathuku payanpaduthivitarkal.
"ஆயினும் மாநிலம், மொழி என்ற அடிப்படையில் இணைய அவர்களுக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. இணைகிறார்கள். தமிழர்களிடம் ஏன் இல்லை? "
நல்ல கேள்வி. செந்தமிழ் என்பது யார் தாய்மொழியும் கிடையாது. தற்காலத்தில் ஒரு 'தமிழ்மொழி' கிடையாது, பல தமிழ்கள் உள்ளன. அதனால் எவ்வளவுதான் தமிழ்வாழ்த்து பாடினாலும் , எல்லோருக்கும் அது பம்மாத்து என உள்ளூரத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் ஒரு பொது மொழியின் குறைவினால்தான் 'தமிழ்த்தாய் துதி' அரசியல் மேல்மட்டத்தினால் இரைச்சலுடன் முன்வைக்கப்படுகிறது. அதனால் மொழியின் கீழ் 'தமிழர்கள்' ஒன்று சேர்வது கஷ்டம். மாநில அடிப்படையில் ஒன்று சேர்வதை எதிர்பார்க்கலாம் , அது சாத்தியம்
I am a Tamilan but I think in general kannadigas are more tolerant towards other language people than us. For example can you imagine some kannadiga or Malayali surviving in Chennai without speaking Tamil?. Can they ride a auto or bus or buy things in shop without Tamil or English? . Somebody can live in Bangalore without speaking Kannada their whole life , that’s not possible in Chennai... It’s one of the reason chennai IT companies has hard time convincing an outsider employee to move to Chennai while it’s not a problem in Bangalore or Hyderabad or Pune
The crowd going behind such emblem or symbol are mostly unsecured willing to join mainstream . What u observed is a typical cosmopolitan threats unveiled initially in Mumbai. In a word, the entire article could be titled as "issues in cosmopolitan society "
Post a Comment