Nov 25, 2017

தர்மயுத்தம்

ஜெயலலிதாவின் உடல்நலம் நசிந்த பிறகு அழுதபடியே பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் ஓபிஎஸ் கூவத்தூர் கும்மாளத்துக்கு முன்பாக சசிகலா தரப்பு தன்னை மிரட்டியதாகவும் இனி நீதி கேட்டு தர்மயுத்தம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்த தருணத்தை ஒரு கணம் நினைத்துப் பார்க்கலாம். ஜெவின் மரணத்துக்குப் பிறகு இருண்டு கிடந்த அதிமுகவை மீட்டெடுக்க வந்த வெளிச்ச நாயகனாக அவரை நம்பினார்கள். தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் வாகனங்களில் ஆட்கள் திரண்டு சென்னையை நோக்கி வந்து கொண்டேயிருந்தார்கள். அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு குடியிருப்புக்கு நடிகர்  மனோபாலா அழைத்துச் சென்றிருந்தார். ஓபிஎஸ்ஸைப் பார்ப்பதைவிடவும் அங்கே வந்திருந்த மக்களைப் பார்ப்பதில்தான் அத்தனை சுவாரசியமும் இருந்தது. 

அந்தச் சாலை முழுவதும் தற்காலிகக் கடைகள் நிறைய முளைத்திருந்தன. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் குவிந்திருந்தார்கள். ஏகப்பட்ட கெடுபிடிகள். வீட்டுக்கு வெளியிலேயே பெருங்கூட்டம் தடுக்கப்பட்டது. வடிகட்டி ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஓ.பி.எஸ் தனது வீட்டுக்குள் இருப்பார். முக்கியப்பிரமுகர்கள் வரும் போது அவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பார்கள். மிக முக்கியப் பிரமுகராக இருந்தால் அவரை ஓபிஎஸ் அழைத்து வந்து வெளியில் குவிந்திருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் காட்டிப் பேசுவார். ‘பார்த்தீங்களா? ஒவ்வொரு பெருந்தலையா என் பக்கம் வர்றாங்க’ என்பதான பாவனை. பெரும்பாலான செய்திச்சேனல்களில் லைவ் ஓடிக் கொண்டிருந்தது. தர்மயுத்தத்தில் சினிமா பிரபலங்களும் கட்சிக்காரர்களும் இணைந்தபடியே இருந்தார்கள். ‘தலைவன் உருவாகிக் கொண்டிருப்பதை நேரடியாகப் பார்க்கிறோம்’ என்ற புளகாங்கிதத்தில் அந்தச் சாலையில் சுற்றிக் கொண்டிருந்தேன்.

அதுவரைக்கும் சாம்ராஜ்யத்தின் நிழல் ராணியாக இருந்த சசிகலாவை யார் எவ்வளவு திட்டினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிமுகக் கூட்டம் அங்கே சேர்ந்திருந்தது. கெட்டவார்த்தைகள் அவர் மீது மிகச் சரளமாக பிரயோகிக்கப்பட்டன. அவரோடு ஒட்டியிருந்தவர்கள் அத்தனை பேரும் வசவு வாங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கு ஓபிஎஸ் மட்டும்தான் நாயகன்.

ஓபிஎஸ்ஸின் வீட்டுக்கு வெளியில் நின்றபடியே ‘அய்யாவை ஒரு தடவை பார்த்துட்டு போய்டணும்’ என்று கேட்ட பழைய எம்.எல்.ஏவைப் பார்த்தேன். அநேகமாக அவர் எம்.எல்.ஏவாக இருந்த போது ஓபிஎஸ் ஒன்றியச் செயலாளராக இருந்திருக்கக் கூடும். ‘நீங்க அய்யாவோட பி.எஸ்.ஓ கிட்ட பேசுங்க...அவங்க வரச் சொன்னால் உள்ளே அனுப்புறேன்’ என்று கான்ஸ்டபிள்கள் மறுத்தார்கள். அங்கேயே அவசர அவசரமாக தாம் பழைய எம்.எல்.ஏ என்று ஒரு காகிதத்தில் எழுதி உள்ளே அனுப்பினார். அனுமதி வந்ததா என்று தெரியாது. 

‘எனக்கு ரவிந்தீரநாத்தைத் தெரியும்’ என்று சொல்லியபடி ஒரு பெண்மணி ஓபிஎஸ்ஸின் மகனை அலைபேசியில் அழைத்தார். ரவிந்திரநாத் அவரது அழைப்பை எடுக்கவேயில்லை. ‘இன்னொரு தடவை பண்ணுங்க’ என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லிவிட்டு அவரது அலைபேசியைத் திருட்டுத்தனமாகப் பார்த்து அந்த எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டேன். ‘என்ன இருந்தாலும் முதலமைச்சரின் மகன் எண் அல்லவா?’. அந்த எண் இன்னமும் என் செல்போனில் இருக்கிறது.

சசிகலா ஒழிக, அம்மா வாழ்க, கழகத்தைக் காக்க வந்த இதய தெய்வம் எங்கள் அண்ணன் என்றெல்லாம் குரல்கள் எழுப்பப்பட்டுக் கொண்டேயிருந்தன. நத்தம் விஸ்வநாதனோ, கே.பி.முனுசாமியோ வெளியே வந்த போதெல்லாம் கூட்டத்தினர் ஆர்ப்பரித்தார்கள். மாஃபா பாண்டியராஜன் ‘இன்னும் எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள்’ என்று உசுப்பேற்றினார். சசிகலாவின் தரப்புக்கு சம்மட்டி அடி கொடுக்கப் போகிறவராக பாண்டியராஜனைப் பார்த்தார்கள்.

எவ்வளவு உற்சாகம் அங்கே! எவ்வளவு நம்பிக்கைகள்?

ஏதோவொரு ஊரிலிருந்து கால் ஊனமுற்ற ஐந்து பேர்கள் வந்திருந்தார்கள். அத்தகைய மனிதர்கள்தான் ஸ்கோர் செய்ய முக்கியமானவர்கள் என்பதால் அவர்களை ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்திக்கும் இடம் வரைக்கும் அனுமதித்தார்கள். ‘ஐயா வெளியில் வரும் போது நீங்க அவர்கிட்ட பேசுங்க’ என்று ஓரத்தில் அவர்களை அமர வைத்திருந்தார்கள். டிவி சேனல்கள் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்கள். அவர்கள் கையில் ஆளாளுக்கு ஒரு விண்ணப்பம் இருந்தது. இத்தனைக்கும் அப்பொழுது ஓபிஎஸ் எந்தப் பதவியிலும் இல்லை. 

நடிகர்கள் கட்சிப்பிரமுகர்கள் என்று அந்த வளாகம் நிரம்பிக் கொண்டேயிருந்தது. கட்சியும் ஆட்சியும் ஓபிஎஸ் வசம்தான் என்ற நம்பிக்கை அத்தனை பேரிடமும் இருந்தது.

ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. எல்லாவற்றையும் எடுத்து உடைத்துப் போட்டுவிட்டார். ‘தமக்கு என்ன பலன் கிடைக்கும்?’ என்பதை மட்டுமே கணக்குப் போடுகிற மனிதராக இருப்பவர் எப்படித் தலைவனாக இருக்க முடியும்? மிக மோசமாக பேரம் நடத்தப்பட்டது. ஆட்சியைக் கலைந்துவிடாமல் காப்பாற்றிக் கொள்வதற்கான பேரமாக எடப்பாடி தரப்பில் நடத்தப்பட்டது. தமக்குத் தேவையான பதவிகளை அடைவதற்கான பேரமாக ஓபிஎஸ் தரப்பில் நடத்தப்பட்டது. அவ்வளவுதான். எடப்பாடி தன்னை ஸ்திரமாக்கிக் கொண்டார். ஓபிஎஸ் என்ன சாதித்தார்? குறைந்தபட்சம் தன்னுடன் இருந்தவர்களுக்காவது அவரால் பதவி பெற்றுத் தர முடிந்ததா? இன்றைய அமைச்சர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் மாஃபா பாண்டியராஜன் இருபத்தொன்பதாவது இடத்தில் இருக்கிறார். ராஜலட்சுமி என்றொரு பெயர் இளம் அமைச்சருக்குப் பிறகு பாண்டியராஜனின் பெயர் வரிசையில் இருக்கிறது. அதைத் தவிர வேறு யார் அந்த அணியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள்?

தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், நிதியமைச்சர், துணை முதலமைச்சர். பதவிகளை வாங்கிக் கொண்டார். சரி. மற்றவர்களுக்கு? மைத்ரேயன் புலம்புகிறார் என்றால் புலம்பாமல் என்ன செய்வார்?

தானே எதிர்பாராமல் தனக்குப் பின்னால் சேர்ந்த கூட்டத்தையும் செல்வாக்கையும் வலுவானதாக்கிக் கொள்கிற வல்லமையும் ஆளுமையும் அவரிடமில்லை. தான் தலைவனாக இருக்க வேண்டுமானால் தன்னோடு இருப்பவர்களையெல்லாம் மேலே ஏற்றிவிடுகிறவனாக இருக்க வேண்டும். ‘என்கிட்ட எவ்வளவு தலைகள் இருக்கு பாரு’ என்று காட்டி தனக்குத் தேவையானதை அடைந்து கொண்டவரை யார்தான் மதிப்பார்கள்? ஒட்டியிருந்தவர்கள் கூட ஒதுங்கிக் கொள்வார்கள். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் என்பதை சதுரங்க வேட்டையுடனெல்லாம் ஒப்பிட முடியாது. அங்கு வெள்ளை கறுப்பை வெட்டும். கறுப்பை வெள்ளையை வெட்டும். அரசியலில் யார் யாரை வெட்டுவார்கள் என்றே தெரியாது. எடப்பாடி ஓபிஎஸ்ஸை வெட்டுவாரா, எடப்பாடியை அமித்ஷா வெட்டுவாரா என்றெல்லாம் யாருக்குமே தெரிவதுமில்லை; யாராலும் கணிக்க முடிவதுமில்லை. 

7 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//எடப்பாடி ஓபிஎஸ்ஸை வெட்டுவாரா, எடப்பாடியை அமித்ஷா வெட்டுவாரா என்றெல்லாம் யாருக்குமே தெரிவதுமில்லை//
இப்போது கத்தி ஆர்கே நகர் வாக்காளர்கள் கையில்.

Unknown said...

திருப்பதியில் சாமி கும்பிடும் போதும்
தமிழ்நாட்டுக்கு மழை பெய்ய வேண்டி
கொண்ட எடப்ப்பாடியார் எங்கே.

இனப்படுகொலை செய்து விட்டு பேரன்களுக்கு
பதவி கேட்டு வந்திருக்கிறீர்களே
என்று டெல்லியில் பத்திரிக்கைகாரர்கள்
கேட்ட போது ஒரு வீட்டில் சாவு சத்தம்
கேட்டால் இன்னொரு வீட்டில் மோளம்
அடிப்போம் என்று சொன்ன கட்டுமரம்
எங்கே?

வெள்ளை மனிதர் எடப்பாடியாரே மேல்

கண்ணன் கரிகாலன் said...

வைகோ பிரிந்து தனிக்கட்சி கண்டபோது , விஜயகாந்த் புதுக்கட்சி துவங்கிய போதும் இருந்த எழுச்சியும் புதிய தலைவரைக் கண்ட ஆர்வமும் இதை விட அதிகமாக அல்லவா இருந்தது. அவர்களின் போக்கு, உடன் சென்றோர் போக்கு, ஒப்பிடுகையில்.... பன்னீர் .... பரவாயில்லைதான் ....

கண்ணன் கரிகாலன் said...

அண்ணாவால் தனக்குப்பின் என்று அடையாளம் காட்டப்பட்டு , அவர் மறைவுக்குப் பின் முதல்வர் பதவியை ஏற்றவர் நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றப்பட்ட நெடுஞ்செழியன்.
தன்னிலும் இளைஞர் கலைஞர் முதல்வரானதும் முரண்பட்டு சில மாதங்கள் அவரை விமர்சனம் செய்தார். பிறகு கலைஞரை ஏற்றுக்கொண்டு அவரிடம் அமைச்சராக இருந்தார்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.
நம் துணை முதல்வர் நிலை நெடுஞ்செழியனானி
ரினும் மற்றும்
மேம்பட்ட​தே.

கண்ணன் கரிகாலன் said...

ஆயினும் அந்த ஓபிஎஸ் புரட்சி நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் மன்னார்குடி கொள்ளையர் வகையறா ஆள் அல்லவா முதல்வராக இருப்பார். ஆக தற்போதுள்ள நிலை நல்லதென்றே கொள்ளவும். வேறு
என்ன செய்வது.

silviamary.blogspot.in said...

ஓபிஎஸ் எந்த ஆளுமையும் இல்லாத வெற்று மண்குதிரை. பிஜேபியிடம் இப்போது பிணைக் கைதியாக இருக்கிறார். இவரை பிஜேபி கொடுத்த அழுத்தத்தினால் எடப்பாடி தங்களுடன் சேர்த்துக் கொண்டு அவரும் பிணைக்கைதியாக ஆகிப் போனார். ஆளும்கட்சியின் தயவு இருக்கும் வரை இருவரும் ஆட்சியில் தொடர்வார்கள். எடப்பாடியாரை விடவும் ஓபிஎஸ் விசுவாசமாக இருப்பார் என்பதால் - தரையிலேயே விழுந்து விட்டானய்யா - பிஜேபி எப்படியாவது ஓபிஎஸ்ஸை முதல்வராக்க முயற்சிக்கிறது. அதற்காகத் தான் இப்பொழுது அதிருப்தி நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதவரோ கண்ணா?

Vinoth Subramanian said...

All are frauds. Who is least in the list is the quest of the people.