Oct 3, 2017

வரலாறு தெரியுமா மணியா?

சத்தியமங்கலம் என்றால் வீரப்பன் பற்றித் தெரியும். அதிரடிப்படையினரின் முகாம் இன்னமும் கூட அங்கேயிருக்கிறது. ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு கூட முடிந்தபாடில்லை. இவையெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அங்கேதான் ‘சத்தியமங்கலப் போர்’ என்ற பெயரில் போர்கள் நடந்தன. (Battle of Sathyamangalam). கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக. அப்போதைய மைசூர் சமஸ்தானத்தின் மன்னரும் தனது தந்தையுமான ஹைதர் அலி 1782 ஆம் ஆண்டு இறந்த பிறகு தனது முப்பத்தியிரண்டாம் வயதில் முடி சூடி கொண்ட திப்புவின் கைகளில்தான் அடுத்த பதினேழு ஆண்டுகள் ஆட்சி இருந்தது- அவர் கொல்லப்படும் வரைக்கும். சமஸ்தானத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பிலிருந்தே- அதாவது, தமது பதினைந்தாவது வயதிலிருந்து திப்பு சுல்தான் போர்களில் களமாடிக் கொண்டிருந்தவர்தான். ஆங்கிலேயே ஆட்சியின் மீது கடும் வெறுப்பைக் கொண்டிருந்த திப்பு, அவர்களுக்கு எதிரான போர்களை உக்கிரமாக்கினார். அதனால்தான் ஹைதர் அலியைவிடவும் திப்புவின் மீது ஆங்கிலேயர்களுக்கு பன்மடங்கு வன்மம் உருவானது. திப்பு சுல்தான் தனது வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களைப் போர்க்களங்களிலேயே கழித்தார். இன்றைய தமிழ்நாட்டுக்குள்ளும் கர்நாடகாவுக்குள்ளும் தொடர்ந்து ஒவ்வொரு களமாகப் பயணித்தபடியே இருந்தவர் திப்பு. 

சத்தியமங்கலம் புத்தகக் கண்காட்சியில் பேசுவதற்காக சில தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். சத்தியமங்கலப் போர் குறித்தான ஒரு குறிப்பு நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட History of India என்ற புத்தகத்தில் கிடைத்தது. ஆன்லைனிலேயே புத்தகம் கிடைக்கிறது. நூலாசிரியர் எவ்வளவு களப்பயணம் செய்தார் என்று தெரியவில்லை. நூலில் பிழைகள் இருக்கின்றன. ஆயினும் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாக அந்த வெள்ளைக்காரர் செய்துவிட்டுப் போயிருப்பது பெரும்பணி. இப்படியொரு நுனி கிடைத்தால்தான் நாம் வரலாறுக்குள் நுழைய முடியும். திப்புவின் வால் பிடித்துத் தேடினால் கார்ன்வாலிஸ் வந்தார். திப்புவை எதிர்த்துப் போரிட்ட அவரது தளபதி ஃபளாய்ட் சிக்கினார். அத்தனையும் சுவாரஸியம். இவர்கள் சண்டையிட்ட பல இடங்களிலும் சுற்றியிருக்கிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் எனக்கு  திப்புவையும் தெரியாது. ஹைதர் அலியையும் தெரியாது. திப்பு கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குள் நுழைய பயன்படுத்தப்பட்ட கெஜலட்டி பாலம் சிதிலமடைந்திருந்தாலும் இன்னமும் இருக்கிறது. சத்தியமங்கலத்தில் இருக்கும் வேணுகோபாலசாமியின் கோவில் கம்பத்தில் திப்புவின் உருவத்தைப் பொறித்து வைத்திருக்கிறார்கள். 

பேசுவதற்கு நிறைய இருந்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள்- பேச்சைக் கேட்பதற்காக கோவை, ஈரோடு, மைசூரிலிருந்து நண்பர்கள் வந்திருந்தார்கள். நானே நம்புகிற மாதிரி இல்லை. நீங்கள் எப்படி நம்புவீர்கள்?

‘எழுத்து ஊர்வலங்கள்’ என்று தலைப்பைக் கொடுத்திருந்தார்கள். பொதுவான தலைப்பு. எப்படி வேண்டுமானாலும் வளைத்து வளைத்து ஏர் ஓட்டலாம்.


எழுத்தும் எண்ணும் இல்லையென்றால் வாழ்க்கை நமக்கெல்லாம் வேறு மாதிரி இருந்திருக்கும். வாத்தியார்கள், பள்ளிக்கூடங்கள், பாடங்கள், கம்யூட்டர், கால்குலேட்டர் என எதுவும் இருந்திருக்காது.  வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்திருப்போம். பகுத்தறிவு கொண்ட மனிதன் எண்களைக் கண்டறிந்தான். எல்லாவற்றிலும் எண்ணிக்கை இடம் பிடித்தது. தேதிகளும் மாதங்களும் ஆண்டுகளும் உருவாகின. அதே போலத்தான் எழுத்தும். எண்களையும் எழுத்துக்களையும் கொண்டு எல்லாவற்றையும் பொறித்து வைத்தார்கள். சுவடிகளிலும், கற்களிலுமாக கதைகளும் பாடல்களும் வரலாறுகளும் பதியப்பட்டன. கோவில் கட்டக் கொடுக்கப்பட்ட மானியத்திலிருந்து, படிக்கட்டுக்களை யார் அமைத்துக் கொடுத்தார்கள், மடங்களைக் கட்டியவர்கள் யார் என்பதில் தொடங்கி இன்றைய தினம் ட்யூப்லைட் உபயதாரர் என்று விளக்கிலேயே எழுதுகிற வரைக்கும் வரலாறுகள் பல்வேறு பரிமாணங்களை எடுத்தன.

கொங்கு நாட்டின் எல்லைகள், அதன் வரலாறு, தீரன் சின்னமலை, திப்பு சுல்தான் என கலந்து கட்டி உள்ளூர் மண்ணோடு தொடர்புபடுத்தி இணைத்து வைத்திருந்தேன். யாரையும் புனிதப்படுத்துவதற்கான எத்தனிப்புகள் இல்லை. அதே சமயம் மட்டம் தட்டுவதும் நோக்கமில்லை. இதே திப்புவைப் பற்றிய நிறைய எதிர்மறைச் செய்திகளும் இருக்கின்றன. திப்புவின் ஆட்கள் படையெடுத்து வந்த போது தமது அமத்தாவை மொடாவுக்குள் வைத்து ஒளித்து வைத்திருந்தார்கள் என்று எங்கள் ஆயா சொல்லக் கேட்டிருக்கிறேன். மருத்துவர் சத்தியசுந்தரியும் இப்படியொரு தகவலைச் சொன்னார். இன்றைய கர்நாடகாவில் இருக்கும் குடகு நாட்டின் வரலாறைத் தேடிச் சென்றால் திப்புவின் படை செய்த அழிச்சாட்டியங்கள் இருக்கின்றன. அப்படியென்றால் திப்பு நல்லவனா? கெட்டவனா?

இன்றைக்கு எல்லோரையுமே குறுங்குழுக்களுக்கான பிம்பங்களாக மாற்றி வைத்திருக்கிறோம். திப்புவை இசுலாமியர்கள் கொண்டாடினால் தீரன் சின்னமலையைக் கவுண்டர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள். வரலாற்று நாயகர்கள் எல்லோருமே குழுக்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகிறார்கள். காமராஜர், வ.உ.சி என யார் தப்பியிருக்கிறார்கள் என்று கணக்குப் பார்த்தால் யாரையும் நாம் விட்டு வைக்கவில்லை என்பதுதான் அவலம். இந்த அடையாளச் சிக்கல்களை உடைத்துத்தான் வரலாற்று நாயகர்களையும் நிகழ்வுகளையும் குறித்தான நம் புரிதல்களை விரிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் அடி வாங்காமல் செய்வதில்தான் நம் சூதானம் இருக்கிறது.

வம்பு வழக்குக்குப் போகாமல் குந்த வைத்து அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம் என முடிவெடுத்தால் இவன் திப்புவை திட்டிக் கொண்டிருக்கிற அதே சமயத்தில் அவன் திப்புவைக் கொண்டாடுகிறான். யார் சொல்வதை நம்புவது? குழப்பம்தான். நம் காலத்தில் யாரையும் அப்படியே நம்ப முடியாது. நாமாக சில ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. திப்பு சுல்தான் யார்? ஹைதர் அலி யார்? இருநூறு வருடங்களுக்கு முன்பாக நம் மண்ணில் அவர்களின் செயல் என்ன என்பதையெல்லாம் மேம்போக்காகவாவது தெரிந்து வைத்துக் கொண்டால் குழுக்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்ளலாம். திப்பு கெட்டவன் என்றால் 1799ல் இறந்து போன திப்புவின் சிலையை ஏன் மக்கள் வேணுகோபாலசாமி கோவிலில் விட்டு வைத்திருக்கிறார்கள் என்பதையும் ஆராய வேண்டும். திப்புவின் ஆட்கள் சாமானியர்கள் மீது நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்படுகிற வன்முறைகளையும் ஆராய வேண்டும்.

திப்புவுக்கு மட்டுமில்லை. இதேதான் தீரன் சின்னமலைக்கும். வரி வசூல் செய்து மூட்டைகளைக் தூக்கிப் போய்க் கொண்டிருந்த ஆட்களை மடக்கி ‘எங்ககிட்ட வசூல் பண்ணுற உரிமையை உனக்கு யார் கொடுத்தது?’ என்று கேட்டு பணத்தைப் பறித்துக் கொண்டு துரத்திவிட்டார். அதுவரை தீர்த்தகிரியாக இருந்தவர் அப்பொழுதிருந்து சின்னமலை ஆனார் என்பது ஒரு செய்தி. சின்னமலை ஆங்கிலேயர்களை எதிர்த்தார்; திப்புவுக்கு உதவினார்; சின்னமலையின் நண்பர் கருப்பசேர்வை பிரெஞ்ச் மன்னனிடம் இந்தக் கூட்டணிக்காகத் தூது சென்றார் என்பது வரலாற்றின் ஒரு பக்கம். சின்னமலை தனக்கு எதிரானவர்களை வெட்டிக் கொன்றார் என்பது வரலாற்றின் இன்னொரு பக்கம். இரண்டையும்தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

சத்தியமங்கலம் எனக்குப் பிடித்த ஊர். ஒன்றிரண்டு வருடங்கள் அங்கே குடியிருந்திருக்கிறோம். படித்த பள்ளியில் சித்ரா டீச்சர் ட்ரவுசரை அவிழ்க்கச் சொல்லி மைதானத்தைச் சுற்ற வைக்கச் செய்த பிரயத்தனங்களும் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள நான் காட்டிய அதிரடிகளும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாதவை. அந்த சத்தியமங்கலத்தில்தான் வகுப்பறைகளுக்கு வெளியில்தான் உலகம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டது அங்கேதான். இரண்டாம் வகுப்பிலேயே வகுப்புகளுக்கு மட்டம் அடித்துவிட்டு வாய்க்காலில் தூங்கியதிலிருந்து, பீடியைப் பற்ற வைத்து வைக்கோல் போரைக் கொளுத்தியது வரைக்கும் எவ்வளவோ செய்திருக்கிறேன். அந்தக் கதைகளிலிருந்துதான் பேசுவதற்குத் திட்டமிட்டிருந்தேன்.

ஏழு மணிக்கு பேச அழைத்தார்கள். கொங்கு நாட்டின் மன்னர்கள், மைசூர், குடகு உள்ளிட்ட அக்கம்பக்கத்து நாடுகள், வரலாறைப் புரிந்து கொள்ள நமக்கிருக்கும் தரவுகள், கல்வெட்டுக்கள், பிராமி, கிரந்தம், வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்துக்களின் காலங்கள், சத்தியமங்கலக் கல்வெட்டுக்கள் குறித்தான குறிப்புகள் எனப் பேசுவதற்கு கடந்த பத்து நாட்களாகத் தயாரிப்புகளைச் செய்து கொண்டிருந்தேன். இப்படித் தேடும் போதுதான் புதுப் புது தகவல்கள் கிடைக்கின்றன. தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. ‘எனக்கு எல்லாமே தெரியும்’ என்று நினைத்துக் கொண்டிருப்பது எவ்வளவு முட்டாள்தனம்?

வரலாறு என்பது கடந்த காலம். எல்லாமும் முடிந்து போனவை. அதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்? 

ஒன்றும் செய்யப்போவதில்லைதான். ஆனால் நாம் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லையெனில் அதை யாராவது மாற்றி எழுதுவார்கள். அடுத்தடுத்த தலைமுறைகள் இப்பொழுது மாற்றப்படுவதை அப்படியே நம்புவார்கள். அவரவருக்குத் தகுந்தபடியான வண்ணத்தை எடுத்து வந்து வரலாற்று நாயகர்கள் மீது வரலாற்றுச் சம்பவங்கள் மீதும் அடித்துவிட்டுப் போவார்கள். இன்றைக்கும் கூட நாம் வரலாறு எனப் படித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலானவை வல்லவர்களால் வகுக்கப்பட்டதுதான். வாய்க்காலை மட்டுமில்லை- வரலாறுகளையும் வல்லவர்கள்தானே வகுக்கிறார்கள்? ஒருவரை தமக்கு ஆகவில்லையென்று முடிவு செய்துவிட்டால் அடித்து வெளுத்துவிடுகிறார்கள். பெரியாரும் தப்பிப்பதில்லை. அம்பேத்கரும் தப்பிப்பதில்லை. காந்தியும் மிச்சமாவதில்லை. காமராஜரும் மிச்சமாவதில்லை. தரவுகளற்ற விமர்சனங்கள் ஒரு பக்கம் என்றால் மறைக்கப்பட்ட வரலாற்று நாயகர்கள் எத்தனை பேர்கள்? மாற்றி எழுதப்பட்ட சம்பவங்கள் எவ்வளவு?

வரலாறுகள் மாற்றப்பட்டு உண்மைகள் திரிக்கப்பட்டு இவனுக்கு அவனையும் அவனுக்கு இவனையும் எதிரியாக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். நமக்கான எதிரிகள் சீனாவும் பாகிஸ்தானும் என்று நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நம் எதிரிகள் நமக்குள்ளேயேதான் இருக்கிறார்கள். அவர்கள்தான் திரித்துக் கொண்டும் புரட்டிக் கொண்டுமிருக்கிறார்கள். பொதுவாக வரலாற்றில் நிகழ்ந்தவனவற்றை சரியென்றும் தவறென்றும் வகைப்படுத்தி நாம் தீர்ப்பு வேண்டியதில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் சரியான தரவுகளை நோக்கி நகர்ந்து கொண்டேயிருப்பதுதான். அந்தத் தேடல்தான் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யக் கூடிய மிகப்பெரிய உதவி. அந்தப் புரிதல்தான் நம் சமூகத்தின் சமநிலை குலையாமல் காப்பதற்கான முக்கியக் காரணி. 

இதைத்தான் பேசினேன். 

புத்தகக் கண்காட்சியை எளிமையாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால் நல்ல புத்தகங்கள் நிறையக் கண்ணில்பட்டன. விதைகள் வாசகர் அமைப்பு தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகள் இதே உத்வேகத்துடன் கண்காட்சியை நடத்தினால் கணிசமான வாசகர்களை உருவாக்கிவிடுவார்கள்.

தொடர்புடைய பதிவு: சிக்கவீர ராஜேந்திரன்

9 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//அதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்?//
நேற்று நடந்தவற்றை வைத்து தான் நாளை நடத்த வேண்டியதற்கான திட்டத்தை இன்று உருவாக்க முடியும்.
அதனால் நேற்றும் முக்கியம் தான்.

சேக்காளி said...

//நம் எதிரிகள் நமக்குள்ளேயேதான் இருக்கிறார்கள்//
மோடியும், எடப்பாடி பழனிச்சாமியும் இல்ல ல்லா?.

சேக்காளி said...

//கோவை, ஈரோடு, மைசூரிலிருந்து நண்பர்கள் வந்திருந்தார்கள்.//
அப்ப பெங்களூர் ல இருந்து அவரு (அதாம் ய்யா பர்சை வாங்கிட்டு போனாரே அவரு)வரல யா?

அன்பே சிவம் said...

மனசு வலியோட இருக்குற ஒரு MANIசன் கிட்ட
கோவம் வர மாறி காமெடி பன்ற (அரசர்களோ,அ'Mechur'களோ, உம்ம நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல) 'சேக்காளி'களை கொஞ்சம் கண்டிச்சு வையுங்க.

Sudhagar Arumugam said...

//வரலாறு என்பது கடந்த காலம். எல்லாமும் முடிந்து போனவை. அதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்?

ஒன்றும் செய்யப்போவதில்லைதான்.//

You can understand present day affairs only if you know history, If you understand current affairs, only then you can predict the future. So history is very important.

Anonymous said...

பெரும்பான்மை சரித்திரம் வளைக்கப்பட்டிருக்கலாம். தாஜ் மஹால் இதற்கு முன் சிவன் கோயில் என்பது போல. சிவன் கோயிலெனில் "இந்துக்களின் இடம்" என்று அர்த்தமில்லை. அந்த இடம் கோயிலாகும் முன் வேறொன்றாக இருந்திருக்கலாம்.

சரித்திரம் தான் ஜாதிகளுக்கு பிறப்பிடம். இன்றைய சூழலை புரிந்துகொள்ள சரித்திரம் தேவை என்றால் எது உண்மையான சரித்திரம் என்கிற கேள்விக்கும் பதில் தேட வேண்டி இருக்கிறது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதென்றால் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

Anonymous said...

சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை.. இது சரித்திரம்... ஐயப்பன் பிரம்மச்சாரி என்கிறார்கள்.. ஆனால் ஐயப்பனின் இரண்டு மனைவியருள் புஷ்கலா செளராஷ்டிர பெண் என்பது சரித்திரம். சரி. ஐயப்பனின் காலகட்டம் கிருத யுகம். அதற்கு பின்னான கலியுகத்தில் 16 நூற்றாண்டில் வணிக நிமித்தம் மதுரைக்கு வந்தவர்கள் செளராஷ்டிரர்கள் என்பதுவும் சரித்திரம். இப்போது ஐயப்பனும் புஷ்கலாவும் சேர்த்தது எப்படி? இதுவும் சரித்திரம். எதை நம்புவது? எதை நம்பக்கூடாது?

நம் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் கட்டமைக்க சரித்திரம் தேவையில்லை. அடுத்த உயிர்கள் மீது அன்பும், கரிசனமும், எல்லோரும் இன்புற்று வாழ என்ன வழி என்கிற யோசனையும் இருந்தால் போதுமானது.

Vaa Manikandan said...

சரித்திரம் என்பது தரவுகளின் அடிப்படையிலானது. நிரூபிக்கப்பட்ட அல்லது நிரூபிக்க சாத்தியமுள்ள தகவல்களைக் கொண்டது. அய்யப்பன் கதையை சரித்திரம் என்று சொல்வது சரியான அணுகுமுறை இல்லை.

Anonymous said...

நிரூபணங்களில் நிலைத்தன்மை இருந்திருக்கிறதா?

ஐயப்பன் கதை தவறான உதாரணம் என்கிறீர்கள். சரி. உங்கள் வழிக்கே வருகிறேன்.

ஓரினச்சேர்க்கை மரபணு சார்ந்தது இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது அது மரபணு சார்ந்தது என்று நிரூபணமாகியிருக்கிறது. அப்படியானால், ஓரினச்சேர்க்கையாளர்கள் , இன்னொரு நேர்சேர்க்கை ஆணையோ, பெண்ணையோ ஏமாற்றி திருமணம் செய்ததை இதுகாறும் அனுமதித்தது அதன் மூலமாக ஓரினச்சேர்க்கையை அடுத்த தலைமுறைக்கு பரவ அனுமதித்ததாக அல்லவா அர்த்தமாகிறது?


நாம் நிரூபணங்கள் என்று எதை நினைக்கிறோமோ அவைகளையே கேள்விக்குட்படுத்தினால் சரித்திரம் என்பதன் உண்மையான முகம் தெரியலாம்.