Oct 29, 2017

கேள்வி பதில்கள்

பள்ளியில் படிக்கும்போது சமூக அறிவியல் வரலாறு பாடத்தில் “முகமதியர்களின் ஆட்சிக்காலம் இந்தியாவின் பொற்காலம் என்று படித்திருக்கிறேன் “ உங்களுக்கு தெரிந்தவரையில் இது உண்மையான தகவலா அல்லது சற்று திரித்து கூறப்பட்டுள்ளதா?

பொற்காலம், இருண்டகாலம் என்பதில் நம்பிக்கையில்லை. திமுகவின் ஆட்சி பொற்காலம்; காங்கிரஸ்/பாஜக ஆட்சி பொற்காலம்; அதிமுகவின் ஆட்சி பொற்காலம் என்பது போலத்தான். அனைத்து அரசுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்திருப்பார்கள். கொழுத்தவர்களும் இருந்திருப்பார்கள். ‘யாருக்கு பொற்காலம்?’ என்றுதான் கேட்க வேண்டும்.

குடும்பம் ஒரு வன்முறை அமைப்பா?

குடும்பம் என்ற அமைப்பு இல்லையென்றால் நாம் இதைவிடவும் வன்முறையாளர்களாக இருந்திருப்போம். நம் உணர்வுகளுக்கான வடிகாலாக குடும்பம் இருக்கிறது என்பதுதான் உண்மை. 

மெர்சல் விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

அவரவருக்கு அவரவர் அரசியல். அவரவருக்கு அவரவர் இலாபம். இதில் நாம் ஏன் மண்டை காய வேண்டும்?

ஓரளவுக்கு திருப்தியான கேள்விகள் கேட்கப்படுக்கின்றனவா?

தீபாவின் தொனியில் சொன்னால் ‘அதை நீங்கள்தான் கூற வேண்டும்’

இந்தியா சுதந்திர நாடுதானா?

சுதந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் நாடு.

குஜராத் சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதியை அறிவிக்காமல் வேண்டுமென்றே தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தியதே? தன்னிச்சை அமைப்பான தேர்தல் ஆணையமே இப்படி இருந்தால் மற்ற துறைகளின் நிலை ?

தேர்தல் ஆணையம், சிபிஐ, வருமான வரித்துறையெல்லாம் தன்னிச்சை அமைப்பு என்று நம்புகிற அளவுக்கு அப்பாவிகள் வாழும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என்றுதான் துக்கம் தொண்டையை அடைக்கிறது.

2019 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாகிஸ்தானுடன் போர் வர வாய்ப்பிருக்கிறதா?

போர் வந்தால் மக்கள் வாக்களித்துவிடுவார்கள் என்று நம்புகிறீர்களா? 

எடப்பாடி அரசு இன்று வரை செய்யாத நல்ல காரியங்கள் என்னென்ன?

டெங்குவை வேடிக்கை பார்ப்பது. தலையெடுத்திருக்கும் விளம்பர மோகம், அரசுத்துறைகளின் செயல்படாத தன்மை, ஒவ்வொரு மட்டத்திலும் தலைவிரித்தாடும் ஊழல் - ஒன்றா? இரண்டா? 

‘ஜிஎஸ்டி வரி கொண்டு வந்ததில் காங்கிரஸ் கட்சிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது’ என்று மோடி கூறியதிலிருந்தே ஜிஎஸ்டி தோல்வி அடைந்து விட்டதாக அவரே ஒப்புக்கொண்டு விட்டார் என்று கருதலாம்தானே?

சமீபத்தில் ஒரு மீம்ஸ் பார்த்தேன். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிற ஐடியா யாருடையதாக வேண்டுமானாலும் இருக்கலாம். அறுவை சிகிச்சையை மருத்துவர் செய்வதற்கும் கம்பவுண்டர் செய்வதற்கும் வித்தியாசமிருக்கிறது அல்லவா? மக்களுக்கு வலி இல்லாமல் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு திட்டத்தையும் பாறாங்கல்லைத் தூக்கிப் போடுவது போல அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Sarahahவில் வந்த கேள்விகள்.

2 எதிர் சப்தங்கள்:

vv9994013539@gmail.com said...

arumayana padilgal.

Selvaraj said...

நானும் கூட தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு சிறு நம்பிக்கை வைத்திருந்தேன் ஆனால் இப்போது இல்லை

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும்போது போரா ? யாருங்க கொளுத்தி போடுறது ?

நல்ல பதில் "அறுவை சிகிச்சை ஒன்றுதான் அதை யார் செய்வது என்பதுதான் முக்கியம்" மருத்துவர் யார் கம்பவுண்டர் என்பது புரிந்துவிட்டது