Oct 12, 2017

வந்தாச்சு வந்தாச்சு

ஒன்றும் ஆகவில்லை.

எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு எதைப்பற்றியும் நினைக்கக் கூடாது என திடீரெனத் தோன்றியது. மின்னஞ்சல், ஃபேஸ்புக், நிசப்தம் என எல்லாமும் அடக்கம். தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருப்பனவற்றிலிருந்து துண்டித்துக் கொள்வது ஒரு வகையில் ஆசுவாசமானதுதான். ஃபேஸ்புக் நிறைய நேரத்தைக் கொல்கிறது. கணினியைத் திறந்தவுடன் தன்னிச்சையாக F என்ற எழுத்துக்குச் செல்லும். அப்படி என்னதான் இருக்கிறது F சொல்லில் என்ற கேள்வி எழாமல் இல்லை.

எண்பதுகளில் அடையாளச் சிக்கல் பற்றி நிறைய உரையாடல்கள் நிகழ்ந்ததாகச் சொல்வார்கள். ‘நான் யார்?’ என்ற கேள்விக்கான தேடல் அது. அந்தச் சிக்கலின் இன்னொரு பரிமாணத்தில்தான் இன்றைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்லுதல். எல்லோரையும் வசைபாடுதல். எல்லாவற்றிலும் ஒரு நெகட்டிவிட்டி விரவியிருக்கிறது. எது குறித்தும் சந்தேகம். எவரையும் தூக்கியெறிதல் என்பதான மனநிலையை மையப்புள்ளியாகக் கொண்டுதான் மொத்தச் சமூகமும் சுழல ஆரம்பித்திருக்கிறது. தம்மைத் தவிர இங்கு எதுவுமே சரியில்லை என்பதும் தம் சித்தாந்தத்தைத் தவிர அனைத்துமே போலி என்பதும் எவ்வளவு மோசமான எண்ணம்? அதைத்தான் இறுகப் பற்றத் தொடங்கியிருக்கிறோம்.

சைபர் உலகத்தினை உதறிவிட்டு இருந்தால் மனம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இணையம் தாண்டி வெளியில் இருக்கும் உலகம் உன்னதமானது. உண்மையானது. அங்குதான் ரத்தமும் சதையுமான மனிதர்கள் உலவுகிறார்கள். நம்முடைய சமூக மனோவியலை தொடர்ந்து ஆராய்ந்து ‘எவனை எந்தக் கொக்கியில் தொங்கவிட வேண்டும்’ என்பதைக் கணித்து அவனது கண்களுக்கு அது குறித்தான உரையாடலும் அத்தகைய மனிதர்களையும் மட்டுமே காட்டி அது குறித்து மட்டுமே யோசிக்கச் செய்து, அவர்களுடன் மட்டுமே உரையாடச் செய்து என ஒருவிதமான மனநோய்க் கூறுகளை உருவாக்குகிற சமூக ஊடகங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுபடுவதுதான் வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்ள உதவும் எனப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு நாளைக்கும் ஒரு ‘ட்ரெண்ட்’ அதைத் தவிர மனம் எது குறித்தும் யோசிப்பதில்லை. வேறு எதையும் தெரிந்து கொள்ளக் கூட எத்தனிப்பதில்லை. வழக்கமாக என்.டி.டிவி.காம் மாதிரியான இணையதளங்களை செய்திகளுக்காக வாசிப்பதுண்டு. அவை கூட இப்படியேதான் இருக்கின்றன. எவை ‘ஹாட்’ எவை ‘ட்ரெண்ட்’ என்பதைத் தவிர்த்து பிற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. 

நாம் எதை அணுக வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்கிற யோசனைக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. தீவிரமான சுய பரிசோதனைகளுக்கும் தேவை இருக்கிறது. ‘நீ இதைச் செய்’ என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிற சைபர் ஊடகத்தில் அதன் போக்கில் சென்றபடியே இருந்தால் நிலைமை விபரீதமாகிவிடக் கூடும். ‘இதைத்தான் நீ யோசிக்க வேண்டும்’ ‘இதைத்தான் நீ எழுத வேண்டும்’ என்று வெளிப்படையாகச் சொல்லாமல் ஆனால் நம்மை வற்புறுத்திக் கொண்டிருக்கிற உலகம் விபரீதமானதுதானே?

புரிதலுக்காக சில நாட்கள் எல்லாவற்றையும் தவிர்த்திருந்தேன். நிறைய மனதுக்குள் ஊறிக் கிடக்கிறது. இன்னமும் சில நாட்கள் இப்படியே இருந்திருக்கலாம்.

‘என்னாச்சு?’ ‘என்னாச்சு?’ என லட்சக்கணக்கானவர்களின் பிரதிநிதிகளாக விசாரித்த நான்கே முக்கால் பேர்களுக்கும் நன்றி. மூன்று பேர்கள் குறுஞ்செய்திகள் அனுப்பியிருந்தார்கள். மூன்று கால்- முக்கால்.  

நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகம் அதன் போக்கில் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். யாரும் எதையும் மாற்றப் போவதில்லை. ‘நாம்தான் மொத்த உலகத்தையும் வலது தோளில் வைத்துத் தாங்கிக் கொண்டிருக்கிறோம்’ என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது எவ்வளவு அபத்தம்?

5 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

இன்னா அவசரம் முழுசா தீபாவளி ல்லாம் கொண்டாடிட்டு வர்ரது.

அனோனிமஸ் said...

//நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகம் அதன் போக்கில் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். யாரும் எதையும் மாற்றப் போவதில்லை.//

சப்தமாக ஒலிக்கும் நிசப்தத்தை இயக்குபவர் முரணான எழுத்துகள்.

சேக்காளி said...

//இன்னா அவசரம் முழுசா தீபாவளி ல்லாம் கொண்டாடிட்டு வர்ரது//
பொங்கலும் தான் ரெண்டு மாசம் கழிஞ்சா வந்துருமே. அதையும் கொண்டாடிட்டு வரச் சொல்லுங்க.

சேக்காளி said...

நான் நாலு ல ஒண்ணா? இல்ல காலு ல ஒண்ணா?

Vinoth Subramanian said...

Obviously, it's a different feel. I've experienced it. Several times I was away from internet. I felt bored but found some other things to do.