‘இன்று நாம் அடைந்திருக்கும் இடத்தை சுயமாக அடைந்தோம்’ என்று நினைத்தால் அது முட்டாள்த்தனமான வாதம். பல பேர்கள் பின்னால் இருந்திருப்பார்கள். கை பிடித்துக் கடைசி வரைக்கும் அழைத்து வந்திருக்க வேண்டியதில்லை. எறும்பின் தடத்தில் விரலை நீட்டினால் அது திசையை மாற்றிக் கொள்ளும். நீரின் ஓட்டத்தில் நகரும் இலைக்குப் பக்கத்தில் ஒரு கல்லை எடுத்து வீசினால் அதன் போக்கு மாறும். அப்படித்தான். ஒற்றைச் சொல், ஒற்றை வரி நம்முடைய திசையை மாற்றியிருக்கலாம். அப்படியான மனிதர்களை நாம் எப்பொழுதும் நினைத்துக் கொள்வதில்லை. எப்பொழுதாவது நினைத்துக் கொள்வதுண்டு. பேராசிரியர். அரங்கசாமி குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னார்கள். அதற்காக எழுதிய கட்டுரை. பேராசிரியர் குறித்தான நினைவு நூலில் வெளியாகியிருக்கிறது.
***
பேராசிரியர் கா.அரங்கசாமி- இந்தப் பெயரை எனது எட்டாம் வகுப்பில் முதன் முறையாகக் கேள்விப்பட்டேன். பேச்சுப் போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும் கலந்து கொள்ளத் தொடங்கியிருந்த தருணம் அது. பேச்சுப் போட்டியொன்றுக்கு நடுவராக வந்திருந்த பேராசிரியர் பரிசுக்குரியவர்களை அறிவித்துப் பேசிய பேச்சு இன்னமும் நினைவில் இருக்கிறது. ‘மேடையில் பேசுறதும் எழுதறதும் சாதாரணமா வந்துடாது...உங்களுக்கு அது இருக்குது...அல்லது இருக்குன்னு நம்புறீங்க...அதை கெட்டியா புடிச்சுக்குங்க..இந்தச் சமூகத்தில் உங்களுக்கான அடையாளமாக அது ஒரு நாள் மாறும்’ என்றார்.
சமீபத்தில் அருளரசு அவர்கள் அழைத்து ‘அப்பா பத்தி ஒரு கட்டுரை எழுத முடியுமா?’ என்று கேட்ட அடுத்த வினாடியே கட்டுரையின் முதல் பத்தியாக இதுதான் இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டேன். அந்த நிகழ்வில் நாங்கள் அத்தனை பேரும் பள்ளி மாணவர்கள். சீருடையில் அமர்ந்திருந்தோம். மிக இயல்பான கொங்குத் தமிழில் பேசினார். அதன் பிறகு பேராசிரியரை எப்பொழுது நினைவுக்குக் கொண்டு வந்தாலும் அவர் சொன்ன இந்த வரிகள்தான் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கும். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் அவை?
அந்தப் போட்டியில் எனக்கு அவர் பரிசளிக்கவில்லை என்பது வேறு கதை. அதை தனியாகப் பேசிக் கொள்ளலாம்.
எந்த வீட்டில்தான் பேச்சுப் போட்டிக்கும் கட்டுரைப் போட்டிக்கும் தடையில்லாமல் விடுவார்கள்? ‘படிக்கிற வேலையைப் பாரு...மார்க் வாங்கு’ என்றே சொல்லிக் கொண்டிருக்கும் சமூகத்தில் பேராசிரியர் மாதிரியானவர்களின் உத்வேகம்தான் என்னைப் போன்ற அடுத்த தலைமுறையினர் பலருக்கும் உந்துசக்தி. பேசுவதையும் எழுதுவதையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற விதையை அவர்தான் விதைத்தார். இன்னும் எத்தனையோ பேருக்கு அவர் விதைத்திருக்கக் கூடும்.
வளர வளர, தமிழ்நகரில் இருக்கும் அவரது வீட்டைத் தாண்டி பல முறை சென்றிருக்கிறேன். ஆரம்பத்தில் மிதிவண்டியில் பிறரு ஈருளியில். ஆனால் அவரது வீட்டுக்குள் சென்றதில்லை. அவர் இறப்பதற்கு நான்காண்டுகளுக்கு முன்பாகத்தான் முதன் முறையாக உள்ளே சென்றேன். அதற்குக் காரணமிருக்கிறது. ‘நம் ஊரின் வரலாற்றைத் தோண்டித் துருவிக் கொண்டேயிருந்த பேராசிரியர் அரங்கசாமி முதுமையின் காரணமாக ஆந்து போயிருக்கிறார்’ என்றார் ஒரு நண்பர். பேராசிரியரைப் பார்த்துப் பேச வேண்டும் எனத் தோன்றியது.
மழை ஓய்ந்திருந்த ஒரு மாலை வேலையில் வீட்டுக்குள் நுழைந்த போது அவர் மட்டுமே வீட்டில் இருந்தார். அவருக்கு என்னைத் தெரியாது. அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் நடுவராக இருந்த பேச்சுப் போட்டியில் நான் கலந்து கொண்டது, நிகழ்வில் அவர் பேசியது குறித்தெல்லாம் சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டேயிருந்தார். ‘எனக்கு ஏன் பரிசு கொடுக்கலைன்னுதான் இத்தனை வருஷமா உங்களைப் பார்க்க வரலைன்னு நினைக்கிறேன்’ என்றேன். வெடித்துச் சிரித்தார்.
‘உனக்குப் பரிசுதானே வேணும்..இரு வாரன்’ என்று சொல்லி உள்ளே சென்றவர் தாம் எழுதிய நான்கைந்து புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து ‘வாழ்த்துக்கள்’ என்றார். பேராசிரியர் மாதிரியானவர்கள் வாழ்த்துச் சொல்லும் போதும் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? சந்தோஷமாக வாங்கிக் கொண்டேன். அவரிடம் பேச்சுக் கொடுத்த போது அவருடைய நினைவுகள் மங்கத் தொடங்கியிருப்பதாக உணர முடிந்தது. மூளையின் அடியாழத்தில் சேமிக்கப்பட்டுக் கிடந்தவற்றை மெல்ல எடுத்துக் கொடுக்க வேண்டியிருந்தது. அவரது கள ஆய்வுகள், கல்வெட்டியல் புலமை, தமிழ் மொழி குறித்தான அவரது தேடல்கள், சாதிகளின் வரலாறுகள் என நிறையப் பேசினார். அவர் பேசுவதைப் பார்க்கும் போது மழை ஓய்ந்த பிறகும் கூரையிலிருந்து ஒழுகும் நீர்த்திவலைகள் நினைக்கு வந்து போயின. அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.
அதன் பிறகு ஊருக்கு வரும் போதெல்லாம் அவரைச் சந்தித்துப் பேசினேன். அவர் தொகுத்த கொங்குக் கட்டுரை மணிகள், எழுதிய தீரன் சின்னமலை வரலாறு உள்ளிட்ட புத்தகங்களை வாசித்துவிட்டு நிறையச் சந்தேகங்களைக் கேட்டிருக்கிறேன். தமிழ்நகரில் இருந்த காந்தத்தை இத்தனை ஆண்டுகளாக தவறவிட்டுவிட்டோமே என்று வருந்தாமல் இருந்ததில்லை. கோபியின் வரலாறு பற்றித்தான் அவரிடம் பேச வேண்டும் என நினைத்திருந்தேன். ‘அளுக்குளி, அயலூர் மாதிரியான ஊர்கள்தான் ரொம்ப பழசு...அங்க தேடு...அங்க இருந்து வால் புடிச்சுட்டு வந்தா கோபி பத்தி நிறைய எடுக்கலாம்’ என்றார். அவரது கள ஆய்வுகள் அந்த ஊர்களில் நடைபெற்றிருந்தன.
‘நீங்க இந்த ஊரைத் தாண்டியும் செயல்பட்டிருக்கணும்’ என்று சொல்ல வேண்டும் என மனதுக்குள் பல முறை நினைத்ததுண்டு. ஆனால் தமது வாழ்க்கையை அவர் பரிபூரணமாக வாழ்ந்து முடித்திருந்தார். தமது மகன்கள் சிறப்பான இடங்களை அடைந்திருப்பது குறித்தும் தமது ஆய்வுகள் காலங்கடந்தும் நிற்கும் என்பதுமான பெருமிதம் அவரிடமிருந்தது. எனவே அவரிடம் அப்படிச் சொல்ல வேண்டியதில்லை என்று முடிவு செய்து கொண்டேன். களப்பணி, வரலாற்று ஆய்வுகள், திருக்குறள் பேரவை சார்ந்த செயல்பாடு, எழுத்து என்று கடைசி வரைக்கும் தமிழ் சார்ந்த, இந்த மண் சார்ந்த சிந்தனைகளுடனேயே வாழ்ந்து கொண்டிருந்த அறிஞராகத்தான் அவரைப் புரிந்து கொள்கிறேன்.
அவர் இறந்த போது ஊரில்தான் இருந்தேன். அவரது உடலைப் பார்க்க வேண்டும் என விரும்பவில்லை. அப்படித் தவிர்த்ததால்தான் இப்பொழுதும் அவரது வீட்டைக் கடக்கும் போதெல்லாம் உள்ளே தமது வாசிப்பு அறையில் பேராசிரியர் இருப்பதாகவே தோன்றுகிறது. அவர் அங்கேயே அமர்ந்து வாசித்தும் எழுதிக் கொண்டும் இருக்கட்டும்- காலகாலத்துக்கும்.
‘கா.அரங்கசாமியைப் பற்றி ஒரே வரியில் சொல்லுக’ என்று யாரேனும் கேட்டால் என்னால் சொல்ல முடியும். ஒவ்வோர் ஊரிலும் தலைமுறைக்கான அடையாளங்களாக சிலர் இருப்பார்கள். கோபியிலும் அப்படியான அடையாளங்கள் உண்டு. கா.அரங்கசாமியும் அப்படியான அடையாளம். ‘கடந்த தலைமுறையில் எங்கள் ஊரில் தமிழுக்கான அடையாளம் அவர்’.
8 எதிர் சப்தங்கள்:
#அவர் இறந்த போது ஊரில் தான் இறந்தேன்#
-எழுத்து பிழையா அல்லது அவ்வமைய மனநிலையா..
வாழ்க வளமுடன்
எழுதி முடிச்சதும் ஒருமுறை சரிபாருங்க. "ஊரில்தான் இருந்தேன்" என்பதற்கு பதில் வேறு என்னவோ இருக்கு.
பேராசிரியர் அவர்கள் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வது சிறப்பு.
உங்கள் ஊரின் இத் தலைமுறையின் தமிழ் அடையாளம் அவர் என்ற ஒற்றை வரி அருமை.
Please correct 'அவர் இறந்த போது ஊரில்தான் இறந்தேன்.'
//தமிழ்நகரில் இருந்த காந்தத்தை இத்தனை ஆண்டுகளாக தவறவிட்டுவிட்டோமே என்று வருந்தாமல் இருந்ததில்லை//
எடுத்துக்காட்டு தான் இந்த ஒற்றைக்காந்தம்.
நமது சோம்பேறிதனத்தாலும்,அக்கறையின்மையாலும் பல காந்தங்களை பல ஊர்களிலும் இழந்து கொண்டு தான் இருக்கிறோம்.
Actually, we are losing these kind of people so many recently. Moreover we do not even know their importance and contributions. At least few people like you are collecting and sharing all the information. We have to create awareness to explore more about our areas. Those information is very much needed now.
"இன்று நாம் அடைந்திருக்கும் இடத்தை சுயமாக அடைந்தோம்’ என்று நினைத்தால் அது முட்டாள்த்தனமான வாதம். பல பேர்கள் பின்னால் இருந்திருப்பார்கள்" உண்மை. எங்கள் ஊரில் கட்டுரை, பேச்சு மற்றும் பாட்டு போட்டிகளுக்கு குழந்தைகளை ஆர்வத்துடன் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துவார்கள்
Befitting tribute
Post a Comment