Oct 30, 2017

விளம்பரப் பதாகைகள்

திருலோச்சன சுந்தரி யாரென்று தெரியவில்லை. தம் வீட்டுக்கு முன்பாக யாரோ பேனர்களை நட்டு அழிச்சாட்டியம் செய்ய நீதிமன்றத்தை நாடி அட்டகாசமான தீர்ப்பை வாங்கியிருக்கிறார். ‘உயிருடன் இருப்பவர்களுக்கு பதாகைகள் வைக்கக் கூடாது’ என்கிற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணமாகியிருக்கிறார். அந்த அம்மையாரும் அவர்தம் குடும்பமும் வாழ்க வளமுடன். இத்தகைய பிரச்சினைகளில் உள்ளூர் அதிகாரிகளிடம் கெஞ்சினாலும் சரி; காவல்துறையை அணுகினாலும் சரி- துரும்பைக் கூட அசைக்க முடியாது. ‘ஏங்க பிரச்சினை பண்ணுறீங்க?’ என்று நம்மிடமே திருப்பிக் கேட்டு அனுப்பி வைத்துவிடுவார்கள். 

கடந்த சில மாதங்களாக- ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடைபெறுகிற ஆட்சியில் தமிழகத்தில் அபரிமிதமான விளம்பர மோகம் தலை தூக்கியிருக்கிறது. ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பிரஸ்தாபித்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள். இந்த அணி, அந்த அணி, உள்ளூர் அமைச்சர், கட்சிப் பிரமுகர்கள் என்று ஒருத்தர் பாக்கியில்லை. சதுர அடிக்கு இவ்வளவு ரூபாய் என்று ரேட் கொடுத்துத் பதாகைகள் அச்சடித்துத் தந்துவிடுகிறார்கள். வாங்கி வந்து நான்கு குச்சிகளை நட்டு பல்லைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

வள்ளல்களையும் செம்மல்களையும் பேனர்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ‘இதுக்கு பேனர் கட்டுங்க..அதுக்கு பேனர் கட்டுங்க’ என்று மேலிடங்களிலிருந்தே அச்சடித்து ஒன்றியங்களுக்கும், நகரங்களுக்கும், கிளைக் கழகங்களுக்கும் அனுப்பிவைத்துவிடுவதாகச் சொன்னார்கள். இப்படியெல்லாம் விளம்பரம் செய்து ‘நாங்க அதைச் செய்தோம்; இதைச் செய்தோம்’ என்று காட்டிக் கொள்ளாவிட்டால் அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டும் என ஒவ்வொருவருக்கும் பயம் நாடி நரம்புகளில் எல்லாம் ஊறிக் கிடக்கிறது. நீங்கள் என்னதான் விளம்பரம் செய்தாலும் மண்ணைக் கவ்வியே தீர வேண்டும் என்று யாராவது சொன்னால் தேவலாம்.

எதுக்கு இவ்வளவு விளம்பரம் மோகம் என்று மண்டை காய வேண்டியதில்லை. அலுவலகங்களில் பணி புரிகிறவர்கள் ஒன்றை கவனித்திருக்கக் கூடும். வேலை செய்கிறவர்கள் விளம்பரங்களைச் செய்து கொள்ள மாட்டார்கள். வந்தோமா வேலையைச் செய்தோமா என்றிருப்பார்கள். ஆனால் இந்த உடான்ஸ்பாண்டிகள் இருக்கிறார்கள் பாருங்கள். வேலையே செய்யாமல் டபாய்த்தபடி சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிற அவர்கள்தான் அரை மணிக்கொரு மின்னஞ்சல்களை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அலுவலக மீட்டிங்களில் தங்களால்தான் நிறுவனமே இயங்குவது போலப் பேசுவார்கள். ஓணானைப் போலத் தலையைத் தூக்கித் தூக்கிக் காட்டினால் மற்றவர்கள் நம்பிவிடுவார்கள் என்கிற நம்பிக்கை அது. எல்லோருக்குமே தெரியும்- இவன் சீன் போடுகிறான் என்று. ஆனால் சீன் போடுகிறவனுக்கு மட்டும் அது உறுத்தவே உறுத்தாது. அப்படித்தான் இருக்கிறது நிலைமை.

இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது பார்க்கவே ‘அப்பாடா’ என்றிருந்தது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி என்று எங்கேயும் பேனர்களைக் காணவில்லை. முக்குக்கு முக்காக வைத்திருந்த பதாகைகளையெல்லம் சுத்தபத்தமாக நீக்கியிருந்தார்கள். யாரும் இளித்துக் கொண்டிருக்கவில்லை. நீதிமன்றத் தீர்ப்புதான் காரணம். ஆளுங்கட்சி மட்டுமில்லை. எந்தக் கட்சிக்குமே இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்பது பெருத்த நிம்மதி. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எதிர்கட்சித் தலைவர் கலந்து கொண்ட இளைஞரணி விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது. அங்கேயும் கூட கொடிகளைத் தவிர வேறு விளம்பரங்கள் இல்லை. சுவர்களில் எழுதியிருந்தார்கள். அது எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். தவறேதுமில்லை. இல்லையென்றால் சூரியனே, நெருப்பே என்று அவர்களும் படம் காட்டியிருப்பார்கள். 

அவர்களுடைய பணம்; அவர்கள் செலவு செய்கிறார்கள். சரிதான். ஆனால் பதாகைகள் என்பவை விளம்பரங்கள் என்பதையும் தாண்டி சூழலியலுக்குக் கடும் பாதிப்பை உண்டாக்கக் கூடியவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வைத்துவிட்டு எடுத்து வீசும் அத்தனை பேனர்களும் மட்காமல் மண்ணுக்குள் புதைந்து கிடப்பவை. அவை மண்ணோடு மண்ணாகப் போக எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியாது. ஏற்கனவே நிறைந்து கிடக்கும் பாலித்தீன் பைகளுடன் இவையும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய நீர் புகாத திரையை உருவாக்குகின்றன. மழை நீர் உள்ளே இறங்க வாய்ப்பில்லாத திரையை உருவாக்கும் பதாகைகள் மிக ஆபத்தானவை. இதைப் பற்றியெல்லாம் எந்த அரசியல்வாதிக்கும் அக்கறை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கூழ் ஊற்றுவதாக இருந்தாலும் சரி; பூப்பு நன்னீராட்டு விழாவாக இருந்தாலும் சரி- அரசியல் பிரமுகர்கள் வருகிறார்கள். வழியெங்கும் தோரணங்கள். ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு அவை எங்கே போகின்றன? சில பேனர்களை குடிசைகளின் கூரைகளின் மீது போர்த்தியிருக்கிறார்கள். மழைக்கும் வெயிலுக்கும் தாங்கும். அவற்றைத் தவிர எந்தப் பலனுமில்லாத வெட்டி பந்தாக்களுக்கான அடையாளங்களாக மட்டுமே இருக்கின்றன. 

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியமானது. தீர்ப்புக்குத் தடை கோரிய மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா இருக்கும் போது பேனர்களுக்குக் எதிராகத்தான் டிராபிக் ராமசாமி போராடினார். இன்னும் சில அமைப்புகளும் போரடின. அப்பொழுதே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். better late than never. இப்பொழுதாவது வழங்கினார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். வலுவில்லாத அரசாங்கம் அமைவது இந்த வகையில் நல்லதுதான். ஒருவேளை நாளை வலுவான அரசாங்கம் அமைந்தாலும் இந்த நீதிமன்றத் தீர்ப்பு கடைபிடிக்கப்பட்டால் நன்றாக இருக்கும். ஹெல்மெட் தீர்ப்பு மாதிரி காற்றில் கரையாமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டிக் கொள்ளலாம்.  

நீதிமன்றத்துக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் ஒரு கோரிக்கை. இதே தீர்ப்பு நடிகர்களுக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட்டால் பெரும் புண்ணியமாகப் போகும். நண்டுகளும் சிண்டுகளும் அணில்களும் ஆமைகளுமாக ஊரை நாறடிப்பது கொஞ்சம் கட்டுக்குள் வரும். அரசியல்வாதிகளுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அவர்தம் அடிப்பொடிகளுக்கும் தாமாகவே சூழலியல் சார்ந்த சுரணை வரும் என்றெல்லாம் தப்புக்கணக்குப் போட வேண்டியதில்லை. இப்படியான தீர்ப்புகள்தான் ஒழுங்கமைக்கும். அந்தவகையில் பேனர்களால் நமக்கு ஏற்பட்டிருக்கும் மூச்சுத் திணறலுக்கு இத்தீர்ப்பு சிறு நிவாரணம்,

நீதிபதிக்கு நன்றி. திரிலோச்சன சுந்தரிக்கு வாழ்த்துக்கள்.

Oct 29, 2017

மூன்றாம் நதி - விமர்சனங்கள்


சிலருக்குத்தான் புத்தகமும் சினிமாவும் ஒன்றாகப் படும். இரண்டுமே கலைதான். படைப்பாளிகளால் உருவாக்கப்படுபவை. அப்படி தங்கள் கற்பனைகளை படைக்கையில் தங்களது அடையாளத்தை ஏதேனும் ஓர் இடத்தில் படைக்க தவறுவதில்லை. அதிலும் சினிமா என்றால் கேட்கவே வேண்டாம். சில இயக்குனர்களின் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என ஆளுக்கு 10 அடையாளங்களை கூறிவிட முடியும். அதெல்லாம் இப்போதுதான். சினிமாவை பலர் அதிகம் கவனத்துடன் பார்க்க ஆரம்பித்த பிறகுதான். அதற்கு முன்பெல்லாம் சினிமாக்களின் அடையாளம் அதன் நாயகன் மட்டும்தான். "கொட்டாய்ல என்ன படம் ஓடுது?" என்ற கேள்விக்கு " கமல்/இரஜினி படம்" என்றுதான் பதில் கிடைக்கும்.

அந்த காலகட்டத்தில் இயக்குனர்கள் படத்தில் ஏதேனும் ஒரு காட்சியில் தோன்றி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தினார்கள். கே.எஸ்.ரவிக்குமார் (அ) ஃபினிசிங் குமார்தான் இதில் குறிப்பிட வேண்டியவர். இதை ஆரம்பித்தது எனக்கு தெரிந்து ஏ.பி.நாகராஜனாகத்தான் இருக்கும்.திருவிளையாடல்-நக்கீரன், தில்லானா மோகனாம்பாள்-சாமியார் பாத்திரங்கள். கையெடுத்து கும்பிட்டு "என் இனிய தமிழ் மக்களே" என ஆரம்பிப்பது, வள்ளுவர் அமர்ந்த உலகம் சுற்றுகையில் "அகர முதல" வருவது என ஆளுக்கொரு அடையாளங்கள்.

புத்தகங்களில் எடுத்துக் கொண்டால் எழுத்தாளர்களும் தங்களை கதையினூடே எங்கேனும் சொருகி வைத்திருப்பார்கள். சத்தியமாக இது தவிர்க்க முடியாத ஒன்று. அனைத்து பாத்திரங்களும் எழுத்தாளரின் குரலை பேசுவதற்கு பதில் ஏதேனும் ஓரிடத்தில் வந்து போவது சால சிறந்தது. அதிலும் பல கதைகள் சொந்த அனுபவங்களாக இருக்கையில் தன்னை இணைக்காமல் எழுதுவது அசாத்தியம்தான். அதை முழுமையாக சாத்தியமாக்கும் போதுதான் முழுமையான கதைசொல்லியாக முடியும்.

சில எழுத்தாளர்கள் குறும்புக்காக கூட தங்களை படைப்புகளில் நுழைத்துக் கொள்வதுண்டு. சுஜாதாவின் "காயத்ரி"யில் ஒரு ஒல்லியான உயரமான எழுத்தாளன் என்று தன்னை நுழைத்தது சுஜாதாவின் குறும்புதான். ஏனென்றால் வெறுமனே கனேஷ்-வசந்தை வைத்து கூட இக்கதையை முடித்திருக்க முடியும். அதிலென்ன சுவாரசியம்? அவரது பல கதைகளில் பல இடங்களில் தன் அடையாளத்தை காட்டியிருப்பார். அதிகம் எதிர்மறை பாத்திரங்களில்.

பாலகுமாரன் பற்றி சொல்லவே வேண்டாம். வாழ்க்கையை மனிதர்களை புரிந்து கொண்ட வயதான பாத்திரம் அவரது பல கதைகளில் வந்து அழகாக பேசும். அது பாலகுமாரன்தான். இல்லையென்றால் அவரது அனுபவங்களை நாயகனின் வாழ்க்கையோடு இரசிக்கும்படி இணைத்து விடுவார்.

வா.மணிகண்டனின் "மூன்றாம் நதி" படித்தேன். நிசப்தம் தொடர்ந்து வாசிப்பதால் அந்நியமாக தெரியாத மனிதர். சோனா காலேஜ் சீனியர் என்பதாலே அண்ணன் என்றுதான் மனதில் பதிவானவர். கதையில் ஏதேனும் ஒரு இடத்தில் அவர் வெளிப்பட வேண்டும் என மிகவும் எதிர்பார்த்துக் கொண்டே படித்தேன். போலிஸ் ஸ்டேசனில் சிலிண்டர் திருட்டை புகார் கொடுக்க வரும் இடத்தை மிக இரசித்தேன்.

மேட்டூர் பேருந்து நிலையத்தில் வாசிக்க துவங்கிய புத்தகத்தை பவானிக்கு முன்பே முடித்து விட முடிந்தது. அவ்வளவு வேகமான எழுத்து நடை. ஆற்றுநீர் போல என்பதை விட மாடியிலிருந்து பைப்பில் இறங்கும் நீரை சொல்லலாம். மிக வேகமாக போகிறது. 100 பக்கம் குறைவாக தெரிகிறது. "நகரமயமாக்கல்" அதற்குள் அடங்க கூடிய சமாச்சாரமா?

நானே புத்தகம் வாங்கி தாமதமாகத்தான் படிக்கிறேன். எப்படியும் இப்புத்தகத்தின் அறிமுகம் பலரை ஏற்கனவே சென்று சேர்ந்திருக்கும். யாரெனும் தவறவிட்டிருந்தால் தவறாமல் வாங்கி படியுங்கள். 100₹ தான். எழுத்தாளருக்கு என் வேண்டுகோள் என்னவென்றால் இந்த கதையை இதோடு முடிக்க வேண்டாம். பவானியில் துவங்கி பவித்ராவையும் தாண்டி பயணிக்க வேண்டிய களமிது. அடுத்த உலகப்போர் என்ற ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகத்தான் வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அந்த உலகப்போர் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதை அறியாதவர்கள்...

- கார்ட்டூனிஸ்ட் கதிர்

                                                                                           ****

இந்த உலகம் எளிய மனிதர்களால்தான் சூழ்ந்திருக்கிறது. புழுக்களைப் போட்டு மீன்களைப் பிடிக்கும் தந்திரம் தெரிந்தவனின் கையில் புழுக்களாய் சிக்கிக் கொள்ளும் எளிய மனிதர்கள் இந்த உலகெங்கும் வியாபித்து இருக்கிறார்கள். ஒரு கிராமம் நகரமாகவும், ஒரு நகரம் மாநகரமாகவும் மாறிக்கொண்டிருக்கும் பொழுது அங்கு இருக்கும் எளிய மனிதர்கள் அல்லது அங்கு வரும் எளிய மனிதர்களின் மனநிலை என்னவாக இருக்கும். அதுவும் பெண்ணாக இருந்தால். அதுதான் பவானி. நாவலின் நாயகி பவானி.

எப்போதோ படித்திருக்கவேண்டிய நாவல். நண்பரின் மூலமாக வாங்கிவரச் சொல்லி அமெரிக்காவின் ஏதொரு மூலையில் ஒரே மூச்சாய் படித்து கண் கலங்கிய நாவல். கிராமத்துப் பெண்களைவிட நகரத்துப் பெண்கள் மிகவும் அழுத்தமான சூழலில் வாழ்கிறார்கள். அதுவும் அன்றாட வாழ்வுக்காகப் போராடும் மனிதர்களின் மனநிலை எத்தனைக் கலங்கியதாக இருக்கும்.. எத்தனை வலிகள் நிறைந்திருக்கும்.. கண்ணீர் படிந்த தலையணைகள் அடுத்த இரவிலும் அவளின் கண்ணீருக்காகவே காத்திருக்கும் போல.. ஒவ்வொரு விடியலும் குழப்பமானதாகவே இருக்கிறது.

பெங்களூர் சாலைகளில் இருந்து எடுத்தெழுத அத்தனை கதைகள் இருக்கிறது. எளிய மனிதர்கள் ஒரு புறம், வளர்ந்துவரும் மென்பொருள் நிறுவனங்கள், நகரத்தை மாற்றும் மேலைநாட்டு மோகம், இதற்கிடையில் எதுவுமே அறியாது குப்பைகளை பொறுக்கிக்கொண்டு இருக்கும் மனிதர்கள். நகரத்தின் ஒட்டுமொத்த மாற்றத்தையும் ஒரு நதியாக தொட்டுவிட்டுச் செல்கிறாள் பவானி..

எளிய மனிதர்களைப் பற்றி வெறுமனே எழுதி மட்டும் விட்டுப்போகாமல், கனிந்த நெஞ்சம், திடமான பார்வை, சரியான திட்டமிடல் என்று  நிசப்தம் அறக்கட்டளை வைத்து தன்னால் முடிந்த உதவிகளை முறையாக செய்துவரும் மணிகண்டனை எப்படி பாராட்டாமல் இருப்பது..

லவ் யூ மணிகண்டன்..!

- காளிதாஸ் நடராஜன்

பேராசிரியர் அரங்கசாமி

‘இன்று நாம் அடைந்திருக்கும் இடத்தை சுயமாக அடைந்தோம்’ என்று நினைத்தால் அது முட்டாள்த்தனமான வாதம். பல பேர்கள் பின்னால் இருந்திருப்பார்கள். கை பிடித்துக் கடைசி வரைக்கும் அழைத்து வந்திருக்க வேண்டியதில்லை. எறும்பின் தடத்தில் விரலை நீட்டினால் அது திசையை மாற்றிக் கொள்ளும். நீரின் ஓட்டத்தில் நகரும் இலைக்குப் பக்கத்தில் ஒரு கல்லை எடுத்து வீசினால் அதன் போக்கு மாறும். அப்படித்தான். ஒற்றைச் சொல், ஒற்றை வரி நம்முடைய திசையை மாற்றியிருக்கலாம். அப்படியான மனிதர்களை நாம் எப்பொழுதும் நினைத்துக் கொள்வதில்லை. எப்பொழுதாவது நினைத்துக் கொள்வதுண்டு. பேராசிரியர். அரங்கசாமி குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னார்கள். அதற்காக எழுதிய கட்டுரை. பேராசிரியர் குறித்தான நினைவு நூலில் வெளியாகியிருக்கிறது.

                                                                ***

பேராசிரியர் கா.அரங்கசாமி- இந்தப் பெயரை எனது எட்டாம் வகுப்பில் முதன் முறையாகக் கேள்விப்பட்டேன். பேச்சுப் போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும் கலந்து கொள்ளத் தொடங்கியிருந்த தருணம் அது. பேச்சுப் போட்டியொன்றுக்கு நடுவராக வந்திருந்த பேராசிரியர் பரிசுக்குரியவர்களை அறிவித்துப் பேசிய பேச்சு இன்னமும் நினைவில் இருக்கிறது. ‘மேடையில் பேசுறதும் எழுதறதும் சாதாரணமா வந்துடாது...உங்களுக்கு அது இருக்குது...அல்லது இருக்குன்னு நம்புறீங்க...அதை கெட்டியா புடிச்சுக்குங்க..இந்தச் சமூகத்தில் உங்களுக்கான அடையாளமாக அது ஒரு நாள் மாறும்’ என்றார். 

சமீபத்தில் அருளரசு அவர்கள் அழைத்து ‘அப்பா பத்தி ஒரு கட்டுரை எழுத முடியுமா?’ என்று கேட்ட அடுத்த வினாடியே கட்டுரையின் முதல் பத்தியாக இதுதான் இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டேன். அந்த நிகழ்வில் நாங்கள் அத்தனை பேரும் பள்ளி மாணவர்கள். சீருடையில் அமர்ந்திருந்தோம். மிக இயல்பான கொங்குத் தமிழில் பேசினார். அதன் பிறகு பேராசிரியரை எப்பொழுது நினைவுக்குக் கொண்டு வந்தாலும் அவர் சொன்ன இந்த வரிகள்தான் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கும். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் அவை?

அந்தப் போட்டியில் எனக்கு அவர் பரிசளிக்கவில்லை என்பது வேறு கதை. அதை தனியாகப் பேசிக் கொள்ளலாம். 

எந்த வீட்டில்தான் பேச்சுப் போட்டிக்கும் கட்டுரைப் போட்டிக்கும் தடையில்லாமல் விடுவார்கள்? ‘படிக்கிற வேலையைப் பாரு...மார்க் வாங்கு’ என்றே சொல்லிக் கொண்டிருக்கும் சமூகத்தில் பேராசிரியர் மாதிரியானவர்களின் உத்வேகம்தான் என்னைப் போன்ற அடுத்த தலைமுறையினர் பலருக்கும் உந்துசக்தி. பேசுவதையும் எழுதுவதையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற விதையை அவர்தான் விதைத்தார். இன்னும் எத்தனையோ பேருக்கு அவர் விதைத்திருக்கக் கூடும். 

வளர வளர, தமிழ்நகரில் இருக்கும் அவரது வீட்டைத் தாண்டி பல முறை சென்றிருக்கிறேன். ஆரம்பத்தில் மிதிவண்டியில் பிறரு ஈருளியில். ஆனால் அவரது வீட்டுக்குள் சென்றதில்லை. அவர் இறப்பதற்கு நான்காண்டுகளுக்கு முன்பாகத்தான் முதன் முறையாக உள்ளே சென்றேன். அதற்குக் காரணமிருக்கிறது. ‘நம் ஊரின் வரலாற்றைத் தோண்டித் துருவிக் கொண்டேயிருந்த பேராசிரியர் அரங்கசாமி முதுமையின் காரணமாக ஆந்து போயிருக்கிறார்’ என்றார் ஒரு நண்பர். பேராசிரியரைப் பார்த்துப் பேச வேண்டும் எனத் தோன்றியது.

மழை ஓய்ந்திருந்த ஒரு மாலை வேலையில் வீட்டுக்குள் நுழைந்த போது அவர் மட்டுமே வீட்டில் இருந்தார். அவருக்கு என்னைத் தெரியாது. அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் நடுவராக இருந்த பேச்சுப் போட்டியில் நான் கலந்து கொண்டது, நிகழ்வில் அவர் பேசியது குறித்தெல்லாம் சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டேயிருந்தார். ‘எனக்கு ஏன் பரிசு கொடுக்கலைன்னுதான் இத்தனை வருஷமா உங்களைப் பார்க்க வரலைன்னு நினைக்கிறேன்’ என்றேன். வெடித்துச் சிரித்தார். 

‘உனக்குப் பரிசுதானே வேணும்..இரு வாரன்’ என்று சொல்லி உள்ளே சென்றவர் தாம் எழுதிய நான்கைந்து புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து ‘வாழ்த்துக்கள்’ என்றார். பேராசிரியர் மாதிரியானவர்கள் வாழ்த்துச் சொல்லும் போதும் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? சந்தோஷமாக வாங்கிக் கொண்டேன். அவரிடம் பேச்சுக் கொடுத்த போது அவருடைய நினைவுகள் மங்கத் தொடங்கியிருப்பதாக உணர முடிந்தது. மூளையின் அடியாழத்தில் சேமிக்கப்பட்டுக் கிடந்தவற்றை மெல்ல எடுத்துக் கொடுக்க வேண்டியிருந்தது. அவரது கள ஆய்வுகள், கல்வெட்டியல் புலமை, தமிழ் மொழி குறித்தான அவரது தேடல்கள், சாதிகளின் வரலாறுகள் என நிறையப் பேசினார். அவர் பேசுவதைப் பார்க்கும் போது மழை ஓய்ந்த பிறகும் கூரையிலிருந்து ஒழுகும் நீர்த்திவலைகள் நினைக்கு வந்து போயின. அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். 

அதன் பிறகு ஊருக்கு வரும் போதெல்லாம் அவரைச் சந்தித்துப் பேசினேன். அவர் தொகுத்த கொங்குக் கட்டுரை மணிகள், எழுதிய தீரன் சின்னமலை வரலாறு உள்ளிட்ட புத்தகங்களை வாசித்துவிட்டு நிறையச் சந்தேகங்களைக் கேட்டிருக்கிறேன். தமிழ்நகரில் இருந்த காந்தத்தை இத்தனை ஆண்டுகளாக தவறவிட்டுவிட்டோமே என்று வருந்தாமல் இருந்ததில்லை. கோபியின் வரலாறு பற்றித்தான் அவரிடம் பேச வேண்டும் என நினைத்திருந்தேன். ‘அளுக்குளி, அயலூர் மாதிரியான ஊர்கள்தான் ரொம்ப பழசு...அங்க தேடு...அங்க இருந்து வால் புடிச்சுட்டு வந்தா கோபி பத்தி நிறைய எடுக்கலாம்’ என்றார். அவரது கள ஆய்வுகள் அந்த ஊர்களில் நடைபெற்றிருந்தன.

‘நீங்க இந்த ஊரைத் தாண்டியும் செயல்பட்டிருக்கணும்’ என்று சொல்ல வேண்டும் என மனதுக்குள் பல முறை நினைத்ததுண்டு. ஆனால் தமது வாழ்க்கையை அவர் பரிபூரணமாக வாழ்ந்து முடித்திருந்தார். தமது மகன்கள் சிறப்பான இடங்களை அடைந்திருப்பது குறித்தும் தமது ஆய்வுகள் காலங்கடந்தும் நிற்கும் என்பதுமான பெருமிதம் அவரிடமிருந்தது. எனவே அவரிடம் அப்படிச் சொல்ல வேண்டியதில்லை என்று முடிவு செய்து கொண்டேன். களப்பணி, வரலாற்று ஆய்வுகள், திருக்குறள் பேரவை சார்ந்த செயல்பாடு, எழுத்து என்று கடைசி வரைக்கும் தமிழ் சார்ந்த, இந்த மண் சார்ந்த சிந்தனைகளுடனேயே வாழ்ந்து கொண்டிருந்த அறிஞராகத்தான் அவரைப் புரிந்து கொள்கிறேன்.

அவர் இறந்த போது ஊரில்தான் இருந்தேன். அவரது உடலைப் பார்க்க வேண்டும் என விரும்பவில்லை. அப்படித் தவிர்த்ததால்தான் இப்பொழுதும் அவரது வீட்டைக் கடக்கும் போதெல்லாம் உள்ளே தமது வாசிப்பு அறையில் பேராசிரியர் இருப்பதாகவே தோன்றுகிறது. அவர் அங்கேயே அமர்ந்து வாசித்தும் எழுதிக் கொண்டும் இருக்கட்டும்- காலகாலத்துக்கும்.

‘கா.அரங்கசாமியைப் பற்றி ஒரே வரியில் சொல்லுக’ என்று யாரேனும் கேட்டால் என்னால் சொல்ல முடியும். ஒவ்வோர் ஊரிலும் தலைமுறைக்கான அடையாளங்களாக சிலர் இருப்பார்கள். கோபியிலும் அப்படியான அடையாளங்கள் உண்டு. கா.அரங்கசாமியும் அப்படியான அடையாளம். ‘கடந்த தலைமுறையில் எங்கள் ஊரில் தமிழுக்கான அடையாளம் அவர்’.

கேள்வி பதில்கள்

பள்ளியில் படிக்கும்போது சமூக அறிவியல் வரலாறு பாடத்தில் “முகமதியர்களின் ஆட்சிக்காலம் இந்தியாவின் பொற்காலம் என்று படித்திருக்கிறேன் “ உங்களுக்கு தெரிந்தவரையில் இது உண்மையான தகவலா அல்லது சற்று திரித்து கூறப்பட்டுள்ளதா?

பொற்காலம், இருண்டகாலம் என்பதில் நம்பிக்கையில்லை. திமுகவின் ஆட்சி பொற்காலம்; காங்கிரஸ்/பாஜக ஆட்சி பொற்காலம்; அதிமுகவின் ஆட்சி பொற்காலம் என்பது போலத்தான். அனைத்து அரசுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்திருப்பார்கள். கொழுத்தவர்களும் இருந்திருப்பார்கள். ‘யாருக்கு பொற்காலம்?’ என்றுதான் கேட்க வேண்டும்.

குடும்பம் ஒரு வன்முறை அமைப்பா?

குடும்பம் என்ற அமைப்பு இல்லையென்றால் நாம் இதைவிடவும் வன்முறையாளர்களாக இருந்திருப்போம். நம் உணர்வுகளுக்கான வடிகாலாக குடும்பம் இருக்கிறது என்பதுதான் உண்மை. 

மெர்சல் விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

அவரவருக்கு அவரவர் அரசியல். அவரவருக்கு அவரவர் இலாபம். இதில் நாம் ஏன் மண்டை காய வேண்டும்?

ஓரளவுக்கு திருப்தியான கேள்விகள் கேட்கப்படுக்கின்றனவா?

தீபாவின் தொனியில் சொன்னால் ‘அதை நீங்கள்தான் கூற வேண்டும்’

இந்தியா சுதந்திர நாடுதானா?

சுதந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் நாடு.

குஜராத் சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதியை அறிவிக்காமல் வேண்டுமென்றே தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தியதே? தன்னிச்சை அமைப்பான தேர்தல் ஆணையமே இப்படி இருந்தால் மற்ற துறைகளின் நிலை ?

தேர்தல் ஆணையம், சிபிஐ, வருமான வரித்துறையெல்லாம் தன்னிச்சை அமைப்பு என்று நம்புகிற அளவுக்கு அப்பாவிகள் வாழும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என்றுதான் துக்கம் தொண்டையை அடைக்கிறது.

2019 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாகிஸ்தானுடன் போர் வர வாய்ப்பிருக்கிறதா?

போர் வந்தால் மக்கள் வாக்களித்துவிடுவார்கள் என்று நம்புகிறீர்களா? 

எடப்பாடி அரசு இன்று வரை செய்யாத நல்ல காரியங்கள் என்னென்ன?

டெங்குவை வேடிக்கை பார்ப்பது. தலையெடுத்திருக்கும் விளம்பர மோகம், அரசுத்துறைகளின் செயல்படாத தன்மை, ஒவ்வொரு மட்டத்திலும் தலைவிரித்தாடும் ஊழல் - ஒன்றா? இரண்டா? 

‘ஜிஎஸ்டி வரி கொண்டு வந்ததில் காங்கிரஸ் கட்சிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது’ என்று மோடி கூறியதிலிருந்தே ஜிஎஸ்டி தோல்வி அடைந்து விட்டதாக அவரே ஒப்புக்கொண்டு விட்டார் என்று கருதலாம்தானே?

சமீபத்தில் ஒரு மீம்ஸ் பார்த்தேன். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிற ஐடியா யாருடையதாக வேண்டுமானாலும் இருக்கலாம். அறுவை சிகிச்சையை மருத்துவர் செய்வதற்கும் கம்பவுண்டர் செய்வதற்கும் வித்தியாசமிருக்கிறது அல்லவா? மக்களுக்கு வலி இல்லாமல் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு திட்டத்தையும் பாறாங்கல்லைத் தூக்கிப் போடுவது போல அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Sarahahவில் வந்த கேள்விகள்.

Oct 27, 2017

என்ன இருந்தாலும் பொம்பளதானே?

நான்கு பேர்கள் விதவிதமான பிரச்சினைகளைச் சந்தித்துவிட்டுக் கடைசியில் ஒரு புள்ளியில் இணைகிறார்கள் என்பது திரைக்கதை ஃபார்முலாக்களில் ஒன்று. சமீபத்தில் வந்த ‘மாநகரம்’ திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம். சென்னை நகரில் ஒரேயிரவில் சிலருக்கு நடக்கும் பிரச்சினைகள்தான் திரைக்கதை. ஒவ்வொருவரையும் இன்னொருவருடன் சம்பவத்தின் வழியாகப் பிணைத்திருப்பார்கள். சம்பவங்களால்தான் இணைக்க வேண்டும் என்பதில்லை. உணர்வுப்பூர்வமாகவும் இணைக்க முடியும் என்பதற்கு ‘Lipstick Under My Burkha'வைச் சுட்டிக் காட்டலாம். 


அமேசான் ப்ரைமில் பார்த்த படம். 

நான்கு பெண்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள். நால்வரும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.

அம்மா அப்பாவின் சொற்படி நடக்கும் இசுலாமியப் பெண் ரெஹானா. பர்தா இல்லாமல் எங்கேயும் செல்ல அவளுக்கு அனுமதி இல்லை. வெளியில் பர்தாவும் உள்ளுக்குள் நாகரிகப் பெண்ணாகவும் திணறுகிறாள். கல்லூரியில் முதலாமாண்டு சேரும் அவள் தமக்குத் தேவையான லிப்ஸ்டிக், ஷூவையெல்லாம் பெரும் கடைகளில் இருந்து திருடுகிறாள். கல்லூரியில் ஜீன்ஸுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்கிறாள். கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது எல்லாவற்றையும் வெளியிலேயே விட்டுவிட்டு லிப்ஸ்டிக்கைத் துடைத்துவிட்டு பர்தா அணிந்தபடி நுழைகிறாள். இது ஒரு பாத்திரம்.  Plabita அஸாம் பெண் நடித்திருக்கிறாள்.

ஷிரின் இன்னொரு பெண். மனைவியை தமக்கான பாலியல் உருவமாக மட்டுமே பார்க்கிற கணவன் அவளுக்கு. அவனுக்குத் தெரியாமல் வேலைக்குச் செல்கிறாள். அவன் வெளிநாட்டில் இருந்து வரும் போதெல்லாம் கருக்கலைப்பும், கருத்தடையுமாக நைந்து போகிறாள். ஆணுறை கூட அணிய மறுக்கும் அவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பும் இருக்கிறது. அவளிடம் கொஞ்சிக் குலாவும் அவன் மனைவியிடம் இயந்திர கதியில் இயங்கிவிட்டு எழுந்து ஆடையை அணிந்து கொள்கிறவனாக இருக்கிறான். ஷிரின் வேலைக்குச் செல்கிறாள் என்பதைத் தெரிந்த பிறகு அவள் வேலைக்குச் செல்லக் கூடாது என்பதைக் கூட உறவின் போது முரட்டுத் தனமாக இடித்து ‘நீ பொம்பளை’ என்கிறவன் அவன். கொங்கனா சென், ஷிரினாக நடித்திருக்கிறார்.

லீலாவின் அப்பன் சிறுவயதிலேயே மனைவியையும் மகளையும் விட்டுச் சென்றுவிட லீலாவின் அம்மா நிர்வாண மாடலாக பணியாற்றுகிறார். லீலா அழகுக்கலையில் பயிற்சி பெற்றவள். அழகுக் கலைக் கூடத்தில் பணியாற்றுகிறாள். அவளுக்கு ஒரு நிழற்படக்காரனுடன் காதல். ஆனால் லீலாவின் அம்மா அவளை வேறொருவனுக்கு நிச்சயம் செய்து வைக்கிறாள். நிச்சயம் நடக்கும் நாளில் ஓர் அறைக்குள் லீலாவும் நிழற்படக்காரனும் உறவில் ஈடுபடுகிறார்கள். அம்மா வந்துவிடுகிறாள். ‘உனக்கு எவ்வளவுதான் நல்ல இடமா பார்த்தாலும் நீ இப்படியானவனைத்தான் தேடிப் போவ’ என்று அம்மா சலித்துக் கொள்கிறாள். நிச்சயதார்த்தத்துக்குப் பிறகும் நிழற்படக்காரனுடன் தான் அவள் நேசத்துடன் இருக்கிறாள். அவளது நிச்சயதார்த்தமும் காதலும் மேடும் பள்ளங்களைச் சந்திக்கின்றன. இது மற்றொரு பாத்திரம். 

உஷாவாக நடித்திருக்கும் ரத்னா பதக் மிக முக்கியமான பாத்திரம். கணவனை இழந்து ஒரு காலனிக்குப் பொறுப்பானவளாக இருக்கும் ஐம்பதுகளைத் தாண்டிய முதிர் பெண். அவளது நிறைவேறாத காமமும் வெளியுலகில் அவளுக்கு இருக்கும் பிம்பமும் மிகப்பெரிய முரண். தனக்கு நீச்சல் பயிற்சியாளனாக இருக்கும் இளைஞனுடன் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஃபோன் வழியான காம சல்லாபத்தில் ஈடுபடுவதும் அதே சமயத்தில் தனது அபிலாஷைகளை வெளியில் காட்டிக் கொள்ள முடியாமல் தவிப்பதுமாக தூள் கிளப்பியிருக்கிறார்.

நான்கு பெண்களும் எதிர்கொள்ளும் சம்பவங்கள், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், உண்டாகும் பிரச்சினைகள் என்பதெல்லாம் வெவ்வேறாக இருப்பினும் இந்தச் சமூகம் அவர்களைப் பார்த்து ‘நீ பொம்பளதான்’ என்று சொல்வதுதான் நால்வரையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது. அதைத்தான் படமாக்கியிருக்கிறார் Alankrita Shrivastava. தில்லான திரைப்படமும் கூட. உடலுறவுக்காட்சிகளையும் முத்தக்காட்சிகளையும் இயல்பாக இணைத்திருக்கிறார்கள்- ஆபாசம் என்று ஒதுக்கிவிட முடியாதபடிக்கு.

ஆரம்பத்தில் படம் குறித்தான குறிப்புகளையும் விளம்பரங்களையும் பாரத்துவிட்டு பெண்ணியவாதியின் படம் என்று சற்று பயந்தபடிதான் இவ்வளவு நாட்களாகப் பார்க்காமல் விட்டு வைத்திருந்தேன். பெண்ணியவாதிகள் என்ற பெயரில் துள்ளி தமக்கான அடையாளத்தை மட்டும் கோருகிறவர்களையெல்லாம் பொருட்படுத்தவே வேண்டியதில்லை. 

இந்தத் திரைப்படத்தில் வரும் பாத்திரஙளைப் போன்ற பெண்களால்தான் நம் சமூகம் நிரம்பியிருக்கிறது. இவர்கள் நான்கு பேர்களுமே நம் சமகாலப் பெண்களின் முகங்கள். பிரதிநிதிகள்.

ஆசைகளையும் துக்கங்களையும் தமக்குள் புதைத்துக் கொண்டு இந்தச் சமூகம் ஒரு பெண் வெளியுலகில் எப்படி வாழ வேண்டும் என்று நிர்பந்திக்கிறதோ அதற்கு இம்மியும் பங்கமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற பெண்கள்தான் இங்கே பெரும்பான்மையினர். தம்மைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் கண்களுக்குத் தெரியாத இரும்புச் சிறைக்குள் இருந்தபடி புன்னகைக்கும் பல கோடிப் பெண்கள்தானே நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள்? வெளிப்படையாகச் சொன்னால் இங்கே நாம் சுதந்திரம் என்று சொல்லிப் பெண்களுக்குக் கொடுத்து வைத்திருப்பதெல்லாம் வெறும் பாவனைதான்.

வேலைக்குச் செல்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். ஆனால் ஆயிரம் ரூபாயைச் சுதந்திரமாக எடுத்து ‘என் பணம்’ என்று செலவு செய்ய எத்தனை பெண்களுக்கு வாய்த்திருக்கிறது? ஏதோவொரு பயம் அவர்களுக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது. உடைபடாத விலங்கு அது. என்னதான் படித்திருந்தாலும் வேலைக்குச் சென்றாலும் பெண் என்றால் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். சமையலை அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். இன்றைக்கும் முக்கால்வாசிப் பெண்களுக்கு இதுதானே சூழல்? ஐஸ்க்ரீம் கடையிலும் உணவகத்திலும் எந்தவொரு கட்டுப்பாடுமில்லாமல் நினைத்த நேரம் சென்று வருகிற வாய்ப்பும் வசதியையும் எத்தனை பெண்களுக்கு உருவாக்கி வைத்திருக்கிறோம்? 

‘இந்தக் காலத்துல பொம்பளைங்களுக்கு என்ன இல்லை?’ என்று கேட்பது எளிது. ஆனால் உண்மையை பெண்களால்தான் சொல்ல முடியும். அமத்தாவும் ஆத்தாவும் வாழ்ந்த காலத்தைவிடவும் இப்பொழுது நிலைமை முன்னேறியிருக்கிறது. அம்மாவுக்கும் அத்தைக்கும் இருந்ததைவிடவும் இன்றைய பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் நம் சமூகத்தின் ஆழ்மனங்களில் ஏறிக்கிடக்கும் துரு அப்படியேதான் இருக்கிறது. ‘என்னதான் இருந்தாலும் நீ பொம்பளதான’ என்கிற துரு. 

படம் பார்க்கும் போது தெரியவில்லை. பார்த்து முடித்த பிறகுதான் என்னவோ செய்கிறது. 

மொட்டுக்கள்

சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி இருக்கிறது. தனியார் கட்டணம்தான் வசூலிக்கிறார்கள். கல்லூரியை அரசுடைமையாக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் கட்டணத்தை மாற்றியது போலத் தெரியவில்லை. கல்லூரிக்கட்டணம் மூன்று லட்சத்து இருபத்தேழாயிரம் ரூபாய். விடுதிக் கட்டணம் ஐம்பத்து மூன்றாயிரம் ரூபாய். வசதி இருப்பவர்கள் கட்டிவிடுகிறார்கள். கெளதம் மாதிரியான ஆட்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். கெளதம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். அப்பா தொகுப்பூதியம் பெறும் நூலகர். எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அரூர் பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சார்ந்தவர்கள். பனிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்து நூறுக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தான். தாழ்த்தப்பட்ட பிரிவு என்றாலும் கட்-ஆஃப் சற்றே குறைய ராஜா முத்தையா கல்லூரியில்தான் இடம் கிடைத்திருக்கிறது. ‘இந்த ஒரு வருஷம்தான்..அடுத்த வருஷம் ஃபீஸ் குறைஞ்சுடும்’ என்று எல்லோரும் சொல்ல கெளதம் மருத்துவப்படிப்பில் சேர்ந்துவிட்டான். வங்கிக் கடன் ஒன்றரை லட்சம் கிடைக்கிறது. இருந்த போதும் வருடம் கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாயைக் கூடுதலாகப் புரட்டியாக வேண்டும். முதல் வருடம் சமாளித்துவிட்டார்கள். இப்பொழுது இரண்டாம் வருடம்.

கெளதமும் அவனது குடும்பமும் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இந்த வருடமும் அதே மூன்றேகால் லட்ச ரூபாய்தான் கட்டணம். மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். மருத்துவர் ராமதாஸ் கல்லூரிக்கட்டணத்தை மாற்றச் சொல்லி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பெரிய அளவில் ஊடகக் கவனம் கிடைக்காத பிரச்சினையாகிப் போனது. மாணவர்கள் தரப்பு சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் மாணவர்கள் கட்ட வேண்டிய கட்டணம் குறித்து தீர்ப்பு வரும் போலிருக்கிறது. மாணவர்கள் விடுதியில் இருந்துதான் படித்தாக இருந்தாக வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் சொல்லியிருக்கிறார்கள். விடுதிக் கட்டணம் ஐம்பதாயிரம் ரூபாய் கட்டிய மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிவிட்டன. கெளதமும் அவனது அப்பாவும் மாற்றி மாற்றிப் பேசினார்கள். நிறைய விசாரித்தோம். அவர்கள் சொன்ன எந்தச் செய்தியும் பொய் இல்லை. ஒதுக்கப்பட்டிருக்கும் வங்கிக்கடன் கல்லூரிக் கட்டணத்துக்கானது. விடுதிக் கட்டணத்தைக் கட்டிவிட்டால் வகுப்புகளுக்குச் செல்வான் என்று அவரது அப்பா சொன்னார். மகன் மருத்துவம் படிப்பதற்காக தமது மற்ற இரண்டு பிள்ளைகளையும் செலவில்லாத படிப்புகளாகச் சேர்த்திருக்கிறார்கள். 

கெளதமிடம் பேசினேன். வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் மாணவனின் தோரணை அவனிடம் இருந்தது. ‘இந்த வருஷம் வகுப்புக்குப் போகாமல் இருக்க வேண்டாம்’ என்று அழைத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்திருக்கிறோம். அப்பா புரட்டிக் கொடுத்த மீதத் தொகையை விடுதியில் கட்டிவிட்டு கல்லூரிக்குச் சென்றுவிட்டான். நேற்று அழைத்திருந்தான். ‘அநேகமா படிப்பை நிறுத்திடுவனோன்னு பயமா இருந்துச்சு’ என்றான். மருத்துவப்படிப்பை ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் பணத்துக்காக நிறுத்துவதை வேடிக்கை பார்ப்பதைப் போன்ற பாவம் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால் இன்னமும் கால்வாசி தூரத்தைக் கூடத் தாண்டவில்லை. தீர்ப்பு மாணவர்களுக்குச் சாதமாக வந்துவிட்டால் பிரச்சினையில்லை. ஒருவேளை எதிர்மறையாக வந்துவிட்டால் வருடம் நான்கு லட்ச ரூபாய் என்பது பெருந்தொகை. இப்போதைக்கு கெளதமின் வகுப்புகள் தொடர்கின்றன. அவன் கல்லூரிக்குச் சென்றுவிட்டான். பார்க்கலாம்.


பிரவீணா இன்னொரு முத்து. ஆயிரத்து நூற்றைம்பதுக்கும் அதிகமான மதிப்பெண்கள். அரசுக் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அப்பா தனியார் மில் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரே மகள். நன்றாகப் படிக்க வைத்துவிட்டார். பிரவீணா முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது அப்பாவுக்கு நெஞ்சுவலி. நாமக்கல்லில் தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டார். நான்கைந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஆனால் பலனில்லை. இறந்துவிட்டார். அம்மாவும் பிரவீணாவும் மட்டும்தான். சொந்த வீடு எதுவுமில்லை. அப்பாவின் மருத்துவச் செலவுக்காக கடன் வாங்கி வைத்திருந்த தொகையில் கொஞ்சம் மிச்சமிருக்கும் போலிருக்கிறது. அதை வைத்துத்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக வாடகை உள்ளிட்ட செலவுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இனிமேல் தானும் ஏதாவதொரு வேலைக்குத் தான் செல்ல வேண்டும் என்றார் பிரவீணாவின் அம்மா. என்ன வேலை என்பதெல்லாம் அவருக்குத் தெரியவில்லை. உடைந்து போயிருந்தார்.

பிரவீணாவின் கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம் எல்லாம் இப்பொழுது பெருஞ்சுமை. எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் அவர்கள் விழிக்க ஒரு கல்லூரி பேராசிரியர் விவரங்களைக் கொடுத்திருக்கிறார். தயங்கித் தயங்கித்தான் தொடர்பு கொண்டார்கள். யோசித்துப் பார்த்தால் அவர்களுக்குக் கடினமான சூழல். கவலைப்பட வேண்டியதில்லை என்று பிரவீணாவைத் தேற்றுவதுதான் பெரிய காரியமாக இருந்தது. இரண்டாம் ஆண்டுக்கான முழுத் தொகையையும் நிசப்தம் வழியாகக் கட்டிவிடலாம் என்று காசோலையைக் கொடுத்தோம். இப்போதைக்கு இருக்கட்டும். ஒருவேளை பிரவீணாவின் அம்மா திடம்பெற்று சம்பாதிக்க ஆரம்பித்தால் ஒரு பகுதியை அவர் சமாளிக்கட்டும்.

பிரவீணாவும் கெளதமும் வெவ்வேறு படிப்புகள். இரண்டு பேருமே மிகச் சிறப்பாகப் படிக்கக் கூடியவர்கள். முதலாமாண்டு மிகுந்த நம்பிக்கையுடன் படிப்பில் சேர்கிறார்கள். இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது பெரும் பாறாங்கல் உருண்டு வந்து விழுகிறது. யாருக்கு எப்பொழுது எந்த மாதிரியான தடைகள் வரும் என்று எவராலும் கணிக்க முடியாது. ஆனால் எங்கேயோ இருந்து யாரோ கை நீட்டுவார்கள். அதுதான் உலக நியதி. இங்கே கைவிடப்பட்டவர்கள் என்று யாருமில்லை. அவர்கள் இரண்டு பேரிடமும் அதைத்தான் சொன்னேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் இதுவரை அவர்கள் படித்தது வீணாகிவிடாது. உள்ளுக்குள் நெருப்பை மட்டும் அணையாமல் பார்த்துக் கொண்டால் அவர்கள் படித்து முடித்துவிடுவார்கள். 

ஆயிரம் கைகள் இருக்கின்றன.

இருவரையும் தொடர்ந்து கவனித்துக் கொள்ளலாம். பெரும் பிரச்சினைகள் சூழாமல் இருவரும் மருத்துவராக இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்ளலாம்.

Oct 26, 2017

கிஸ் பண்ணிட்டான்..

‘பெரீப்பா...ஒரு பையன்ன்ன்ன்ன்...பாத்ரூம்ல இருந்து வெளீல வந்தான்...வெளில ஒரு புள்ள நின்னுட்டு இருந்தாளா....அவளைக் கிஸ் பண்ணீட்டான்’ யுவி இப்படிச் சொன்ன போது ‘என்னடா இது.. இந்தக்காலத்துப் பசங்களோட கருமமா இருக்குது’ என்றார் அம்மா. யுவி ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். ஷாக் கொடுப்பதில் அவனொரு கில்லாடி. இப்படி எதையாவது அவ்வப்போது சொல்வான். சுற்றியிருப்பவர்கள் பதறியபடி பேச்சை மாற்றிவிடுவார்கள் அல்லது கண்டும் காணாதது போல இருந்துவிடுவார்கள். அவன் சொன்ன போது எனக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. பெரியப்பனின் ஜீன் போலிருக்கிறது எனத் தோன்றியது. அந்தக் காலத்திலேயே இப்படி எதையாவது பார்த்துவிட்டு வந்து கண் காது மூக்கு வைத்து எதையாவது சொல்லிக் கொண்டிருப்பேன். ‘அவனைப்பாருடா... அஸ்மா தீபா ரெண்டு பேரையும் லவ் பண்ணுறான்...ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்கப் போறான்’ என்றொரு கிசுகிசுவை உருவாக்க அது டீச்சர் காது வரைக்கும் போய் ‘சத்தியமா நான் சொல்லல டீச்சர்’ என்று கற்பூரம் அணைக்காத குறைதான். அப்பொழுது மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.

அடுத்தவனைப் பார்த்து வயிறு எரிவது, அவன் அப்படிடா, இவன் இப்படிடா என்றெல்லாம் கதையளப்பது- அவன் செய்தானோ இல்லையோ- கிளப்பிவிடுவதையே பிழைப்பாக வைத்திருந்தவன் நான். ஒரு காரியமும் உருப்படியாகச் செய்ததில்லை. கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண். செம அழகு. அவளாகவேதான் வந்து பேசினாள். ‘அவளா வந்து பேசற அளவுக்கு நீ என்ன அழகனா?’ என்று கேட்கக் கூடாது. பருவத்தில் பன்றிக்குட்டியு கூட அழகுதான். வில்லை வளைத்து வைத்த புருவமும் அரும்பு மீசையும். ஆனால் அவள் வந்து பேசிய காரணம் வேறு. பேச்சுப்போட்டி அரட்டை அரங்கம் என்று கொடி நட்டி வைத்திருந்தேன். அது சம்பந்தமாக வந்து பேசினாள். இரண்டு நாட்கள் அடிவயிறு முழுக்க பட்டாம்பூச்சிதான். நெஞ்சாங்குழி முழுக்கவும் கம்பளிப் பூச்சிதான். நூலகத்திலும் கேண்டீனிலுமாகப் பார்த்துப் பார்த்த்டு டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒருத்தன் சந்தோஷமாக இருந்தால் எங்கேயாவது புகையும். 

ஒருத்தன் வந்தான். ‘வேண்டாம் விட்டுரு...அவ எங்க ஏரியா’ என்பதைச் சொல்வதற்காக. என்னைவிட ஒரு வருடம் இளையவன் என்றாலும் ஆள் கழுமுண்டராயனாக இருப்பான். போதாக்குறைக்கு உள்ளூர்வாசி. முக்கி எடுத்துவிடுவானோ என்று தவிர்த்துவிட்டு அவளிடம் ‘உன்னைப் பற்றி அவன் கண்டபடி சொல்கிறான்’ என்று போட்டுக் கொடுத்துவிட்டேன். இங்கே நாகரிகமாக எழுதியிருக்கிறேன். நான் சொன்னதையெல்லாம் அவள் நம்பியிருந்தால் ஜென்மத்துக்கும் பேசியிருக்க மாட்டாள். நமக்கு கிடைக்காதது அந்த பயில்வானுக்கும் கிடைக்கக் கூடாது என்கிற நப்பாசைதான். கல்லூரி முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களாம். ‘நான் சொல்லவேயில்லை..அவன் உன்கிட்ட உடான்ஸ் விட்டிருக்கான் கண்ணு’ என்று கெஞ்சிக் கூத்தாடியிருப்பான். 

இன்னொருத்தி அப்படித்தான். குனிந்த தலை நிமிர மாட்டாள். ‘உங்க ஊர்தான்..செமயா இருக்கால்ல’ என்று பற்ற வைத்தார்கள். ‘எங்க ஊரு தண்ணி அப்படி..அழகாத்தான் இருப்போம்’ என்று சொல்லிவிட்டு அவளிடம் பேசத் துடித்த நாட்கள் இருக்கின்றனவே. எப்பொழுது இரண்டு மூன்று பேர்களுடனேயே சுற்றுவாள். அர்ஜூன் ரெட்டி படம் பார்த்த பிறகுதான் உரைக்கிறது. நம்மை மாதிரியான ரெவிடிகள் எல்லாம் நேரடியாகச் சென்று பேசியிருக்க வேண்டும். ‘ஏய்..போங்கடி’ என்று அல்லக்கைகளைத் துரத்தியிருக்க வேண்டும். ம்க்கும். வெகு நாட்களுக்குப் பிறகுத் தனியாக வந்தாள். ‘நீங்க கோபியா?’ என்று மட்டும்தான் கேட்டேன். ‘மேவானி’ என்றாள். இரு ஊர்களுக்கும் அதிகபட்சம் பத்து கிலோமீட்டர் தொலைவுதான் இருக்கக் கூடும். அதற்கு மேல் என்ன கேட்க வேண்டும் என்று எனக்கும் தெரியவில்லை. அவளும் பதில் சொல்லவில்லை. அடுத்த நாள் எதிரில் பார்த்தால் சிரிக்கக் கூடும் என்று நினைத்திருந்தேன். தலையைக் குனிந்தபடியேதான் நடந்து போனாள்.

‘கிஸ் பண்ணிட்டான்’ என்று யுவி சொன்ன போது இதெல்லாம்தான் நினைவுக்கு வந்து போயின. 

பள்ளிக்காலத்தில் உள்ளூரில் ஒரு தனிப்பயிற்சி வகுப்பு நடைபெறும். அங்கேயொரு அழகி வந்தாள். நாங்கள் படித்துக் கொண்டிருந்தது ஆண்கள் பள்ளி. பாலைவனம். ட்யூசனில் இப்படிப் பார்க்கும் ஒன்றிரண்டு பெண்கள்தான் ரோஜாப்பூக்கள். அவள் வேறொர்ய் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் பேசலாம் என்று நினைக்கும் போதெல்லாம் இருவர் குறுக்கே வந்துவிடுவார்கள். பெரிய செல்வன். சின்ன செல்வன். ஒருத்தன் பெரிய அண்ணனாம். இன்னொருத்தன் சின்ன அண்ணனாம். ‘ஏண்டா இப்படியெல்லாம் செண்டிமெண்ட் பார்க்குறீங்க?’ என்று கடுப்பாக இருக்கும். மூன்று பேரும் கடிதம் எழுதிக் கொள்வார்கள். ‘அன்புள்ள பெரிய அண்ணனனுக்கு...சின்ன அண்ணனை நன்றாகப் படிக்கச் சொல்லவும்’ என்று எழுதியிருப்பாள். ஒரே பள்ளி; ஒரே வகுப்பறை. பக்கத்து பக்கத்து இடம். ஆனால் கடிதாசி. எரிச்சல் வருமா? வராதா? அப்பொழுதும் ஒரு கிசு கிசுவைக் கிளப்பிவிட்டேன். மூன்று பேரும் வெறியெடுத்துத் திரிந்தார்கள்.

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ஒரு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் சேர்ந்திருந்தோம். நாங்கள் மூன்று பேர். எங்களுடன் ஒரு அக்காவும் வந்தார். அக்கா மருத்துவப்படிப்பு முடித்திருந்தார். ஏகப்பட்ட வயது வித்தியாசம். ஆனாலும் அந்த அருகாமை, புன்னகை எல்லாம் சந்தோஷம்தான். அந்த அக்கா ரங்கீலா படத்துக்குச் செல்வதாகச் சொன்னார். எனக்கு இந்தியில் ஒரு வார்த்தை தெரியாது. விகடனில் ஜாக்கி ஷெராஃப்பும் ஊர்மிளாவும் கிளுகிளுப்பாக இருக்கும் படம் ஒன்றை பிரசுரம் செய்திருந்தார்கள். அக்கா வேறு படத்துக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டார் அல்லவா? எப்படியாவது அதே காட்சிக்குச் சென்றாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று பணம் வாங்கிப் போய் ‘வசனமாடா முக்கியம்? படத்தைப் பாருடா’ என்று பார்த்துவிட்டு எழுந்து வரும் போது அக்காவைப் பார்த்துச் சிரித்துப் புளகாங்கிதம் அடைந்தெல்லாம் ஒரு பருவம். நெருங்காமல் நெருங்கிப் பேசுகிற த்ரில்.

ஒரு பெண் நம்மைப் பார்த்தால் போதும் பேசினால் போதும் என்று திரிவதே ஒரு சந்தோஷமான அனுபவம்தான். அந்தப் பார்வைக்கும் சிரிப்புக்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டு காலங்காலமாக இப்படிக் கதை சொல்லிக் கொண்டு திரியலாம். இவர்கள் என்னடாவென்றால் ஒன்றாம் வகுப்பிலேயே கிஸ் அடிக்கிறார்களாம்! சின்னப்பசங்க...

Oct 25, 2017

எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க?

அலுவலகத்தில் உரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். ‘இருப்பதிலேயே பெரிய சவால் என்று எதை நினைக்கிறீர்கள்?’ என்று ஒரு பொதுக்கேள்வியை முன்வைத்தார்கள். சந்தேகமேயில்லாமல்- அழுத்தங்களைச் சமாளிப்பதுதான் என்றேன். Stress Management என்பது இலாவகமான கலை. ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. ‘பத்து மணிக்கு ஆபிஸ் வந்துடுன்னு சொல்லுறீங்க...கண்டவன் கூட எல்லாம் வரும் வழியில் சண்டை போட்டுவிட்டு வந்தேன்’ என்றேன். சிக்னலில் பச்சை விழுந்தவுடன் வண்டியை நகர்த்திவிட வேண்டும். ஒரு வினாடி தாமதித்தாலும் பின்னால் நிற்பவவன் ஒலியெழுப்பத் தொடங்கிவிடுகிறான். செமக் கடுப்பு. கண்டபடி திட்டிவிட்டு அவனைத் தாண்டி வந்தவுடன் இரத்த அழுத்தத்தை அளந்து பார்த்தால் எப்படியும் 150/100 என்ற அளவிலாவது இருக்கும். 

‘எதுக்கு இவ்வளவு கோபம் வருகிறது?’ என்று யோசித்துப் பார்த்தால் பத்து மணி என்கிற இலக்குதான் முக்கியக் காரணம். பத்து நிமிடங்கள் முன்னாடி கிளம்பினால் பிரச்சினையே இல்லை என்று யாராவது அறிவுரை சொல்வார்கள். அது காலங்காலமாகச் சொல்லப்படுகிற அறிவுரை. ஒரு மணி நேரத்தில் அடைந்துவிடக் கூடிய இடத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் கிளம்பினால் போதும். பத்து நிமிடங்கள் முன்னதாகக் கிளம்பி ஏன் பத்து நிமிடங்களை வீணடிக்க வேண்டும்? ‘இவுரு பெரிய அப்துல்கலாமு...பத்து நிமிஷத்தை வீணடிக்காம போக்ரானில் அணுகுண்டு வெடிக்கப் போறாரு’ என்று யாராவது கலாய்க்கக் கூடும். அவர்களைத் தனியாக டீல் செய்து கொள்ளலாம்.

அழுத்தங்களைச் சமாளிப்பதுதான் நம் காலத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. வீட்டில் உருவாக்கப்படும் அழுத்தங்கள், வெளியிடங்கள், பணி புரியும் இடங்கள் என சகல இடங்களிலும் அழுத்திப் பிழிகிறார்கள். தமக்குள்ளாகவே உருவாகும் தனிமனித மன அழுத்தத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சுயபச்சாதாபம், தமக்கு நிகழ்ந்த துக்கங்கள், நிறைவேற்றப்படாத காமம் போன்ற காரணங்களினாலும் தனிமனிதனுக்குள்ளாக அழுத்தம் உருவாகிறது. நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதனுமே நிரம்பக் காற்று நிரப்பப்பட்ட பலூன்களாக இருப்பதுதான் பெரும் துரதிர்ஷ்டம். வெடித்துவிடக் காத்திருக்கும் வெடிகுண்டு பலூன்கள்.

‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..லா..ல..லா’ என்று இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் எவ்வளவு தூரம் சாத்தியம்? யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பல்வேறு இடங்களிலிருந்து அம்புகள் வந்து விழுகின்றன. தனது கோபத்தை எங்கேயாவது வெளியேற்றிவிடக் காத்துக் கொண்டேயிருக்கிறார்கள். யாராவது சிக்கினால் சிக்கியவன் மேல் சுடுதண்ணீரைக் கொட்டுவது போலக் கொட்டிவிடுகிறார்கள். அமில வார்த்தைகள்.

தொழில்களிலும் போட்டிகள் அதிகம். செலவினங்களைக் குறைக்க வேண்டும். இலாபத்தைப் பெருக்க வேண்டும். கார்போரேட் நிறுவனங்களில் மட்டுமில்லை- சுயதொழில் செய்கிறவர்களுக்குக் கூட டார்ச்சர்தான். எங்கள் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களால அத்தனை சனி, ஞாயிறுகளிலும் வேலை செய்யச் சொல்கிறார்கள். தினசரி பனிரெண்டு மணி நேரமாவது வேலை செய்ய வேண்டியிருக்கிறது. காந்தி ஜெயந்தி, தீபாவளி என்று எதுவும் இல்லை. நான் பரவாயில்லை. வேறு சிலர் திணறிக் கொண்டிருக்கிறார்கள். 

முன்பு எழுதியிருக்கிறேன் என்று ஞாபகம்- நண்பனொருவன் பன்னாட்டு வங்கியில் பணியில் இருந்தான். அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்த சமயம். வங்கிகளுக்கு கடும் அழுத்தங்கள் உருவாகியிருந்தன. அது பணியாளர்கள் மீது விடிந்தது. அவன் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. காலையில் அலுவலகத்திற்குச் செல்லும் போது ஷூவை இறுக்கிக் கட்டிக் கொள்வானாம். இரவில் பணி முடிந்து வீடு திரும்பும் போது ஷூவை இளக்கும் போது அன்றைய தினம் தனது மனதில் ஏறியிருந்த மொத்த அழுத்தமும் கால் வலியாக இறங்கி ஓடுவதாக உணர்ந்ததாகச் சொன்னான். ‘அடப்பாவி’ என்றேன்.

‘அதுவொருவிதமான Stress management' என்றான். அதுவொரு தவறான முறையிலான Stressmanagement.

அவன் இன்றைக்கு வேலையை விட்டுவிட்டான். அமெரிக்காவில் வேலையை விட்டு அனுப்பினார்கள். நண்பர்களுடன் சேர்ந்து சிறு நிறுவனத்தைத் தொடங்கினான். அது தம் கட்டியது விற்றுவிட்டார்கள். கிடைத்த பெருந்தொகையில் ரிசார்ட் ஒன்றை வாங்கி ‘இது போதும்’ என்று அமைதியாகிவிட்டான். பெரும்படிப்பு படித்தவன். ‘படிச்சதெல்லாம் வீணா போய்டாதா?’ என்று தெரியாத்தனமாகக் கேட்டேன். ‘படிக்கிறது சம்பாதிக்கிறதுக்குன்னு நினைச்சா உன்னை மாதிரி பெரிய முட்டாள் யாராச்சும் இருக்க முடியுமா?’ என்று கேட்டு பெரிய குண்டு பல்பாகக் கொடுத்தான்.

நிறுவனம் தொடங்கி, இலாபம் பார்த்து, பெருந்தொகையைக் கையில் சேகரிப்பது அவனைப் போன்ற பெருமண்டைக்காரர்களுக்குச் சாத்தியம். எல்லோருக்கும் சாத்தியமான காரியமா என்ன?

நம் அளவுக்கு ஏதாவது யோசிக்க வேண்டியதுதான் என்று அடங்கிக் கொண்டேன். பிற எல்லாவிதமான அழுத்தங்களைக் காட்டிலும் தொழில் ரீதியாக உருவாகும் அழுத்தம்தான் பூதாகரமானதாகத் தெரிகிறது. பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் இருக்கக் கூடும். அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என்று இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கான நுட்பங்களைச் சொல்லித் தருகிறார்கள். ‘முட்டையில் படிச்சதுதான் கட்டைக்குப் போகிற வரைக்கும்’ என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. ரத்தத்திலேயே ஊறி இருக்க வேண்டும். இல்லையென்றால் சிறுகச் சிறுகப் பழகியிருக்க வேண்டும். ஆனால் அதெல்லாம் சாத்தியமில்லாதவர்களுக்கு மிகச் சுலபமான ஒரு காரியம் இருக்கிறது. தொழில் வேறு; குடும்பம் வேறு- இங்கேயிருக்கும் அழுத்தத்தை அங்கேயும் அங்கேயிருக்கும் சிக்கல்களையும் இங்கேயும் காட்டினால் சோலி சுத்தம். தனித்தனியாகக் கோடு போட்டு வைத்துக் கொள்வதில் ஆரம்பிக்கிறது அழுத்தங்களைச் சமாளிக்கும் கலை. 

குடும்பமும் தொழிலும் வெவ்வேறு என்ற தெளிவை உருவாக்கிவிட்டாலே பாதி அழுத்தத்தைச் சமாளித்தது போலத்தான் என்றொரு கட்டுரையில் வாசித்தேன். அலுவலக வேலையை வீட்டில் செய்யக் கூடாது; வீட்டை அலுவலகத்தில் நினைக்கக் கூடாது என்று அர்த்தமில்லை. ஆனால் இரண்டுக்குமான தெளிவு இருக்க வேண்டும். குடும்பத்துக்குத்தான் முன்னுரிமை என்கிற புரிதல் அவசியம். யோசித்துப் பார்த்தால் நம்முடைய உழைப்பு, சம்பாத்தியம் என எல்லாமே குடும்பத்துக்காகத்தானே? நாம் விழும் போதெல்லாம் தாங்கிப் பிடிப்பதும் குடும்பம்தான். ஊர் உலகத்தில் இருக்கும் அழுத்தத்தையெல்லாம் அங்கே கொண்டு போய் இறக்கி வைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

நிறைய இருக்கிறது. பேசவும், புரிந்து கொள்ளவும்.

Oct 23, 2017

குழந்தைகளைத் திட்டுங்கள்

‘குழந்தையைத் திட்டவே மாட்டேன்’ என்று சொல்கிறவரா நீங்கள்? அப்படியெனில் நீங்கள்தான் வாசிக்க வேண்டும்.

சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலேயே ஓர் உணவகம் இருக்கிறது. ஸ்ரீதர் வாண்டையாரின் உணவகம். ‘அங்க வர முடியுமா?’ என்றார் சிதம்பரத்து நண்பர். இப்பொழுது ஐரோப்பிய தேசமொன்றில் மனோவியல் ஆலோசகராக இருக்கிறார். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். திருமணம் செய்து கொள்ளவில்லை. தனிக்கட்டை. ‘நீங்க பெங்களூரு திரும்பும் போது தகவல் சொல்லுங்க’ என்று செய்தி அனுப்பியிருந்தார். குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். பேருந்து நிலையத்தில் வந்து காத்திருந்தார். இரவு எட்டு மணிவாக்கில் சந்தித்துப் பேசினோம். கையில் கத்தையாக செய்தித்தாள்களின் கத்தரிப்புகள். வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு அந்தக் கோப்பினைக் கையில் கொடுத்தார். குழந்தைகளின் தற்கொலை பற்றிய செய்தித் துண்டுகள் அவை.

எப்பொழுதாவது இந்தியா வந்து போகிறார். ‘தற்கால இந்தியக் குழந்தைகளின் மனநிலை’ குறித்து ஓர் ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறாராம். அதற்கு தோதாகக் கடந்த சில நாட்களாகச் சேகரித்த செய்திகள் அவை. நீலத் திமிங்கல விளையாட்டுத் தற்கொலைகளை அவர் பொருட்படுத்தவில்லை. ‘அது உங்களைத் தற்கொலை செய்ய வைக்கத் திட்டமிட்டு, வற்புறுத்தித் தூண்டுகிறது’ என்று சொல்லி அவற்றைத் தவிர்த்திருக்கிறார். மிகச் சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஏன் தற்கொலை முடிவெடுக்கிறது என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருந்தது. கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பான செய்தி ஒன்றைக் காட்டினார். டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வுக்காக தெருவைச் சுத்தம் செய்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறான். பனிரெண்டு வயதுப் பையன். ‘ஏண்டா உனக்கு ஏதாச்சும் காய்ச்சல் வந்துட்டா என்னடா பண்ணுறது?’ என்று ஏதோ சொல்லி அம்மா திட்ட அறைக்குள் தூக்குப் போட்டுக் கொண்டான்.

இப்படி பல செய்திகள் இருந்தன. மனம் பாரமாக இருந்தது. அவற்றை மூடி வைத்துவிட்டு சில வினாடிகள் அமர்ந்திருந்தேன்.

‘என்ன சொல்லுறீங்க?’ என்று கேட்டார். அமைதியாக இருந்தேன். மிக நுணுக்கமான விஷயம் இது. குழந்தைகளின் தற்கொலை என்பது அங்குமிங்குமாக கண்களில் பட்டிருக்கும். பொருட்படுத்தியதாக நினைவில்லை.

பதினைந்து முதல் இருபத்தொன்பது வயது வரையிலானவர்கள் இந்தியாவில்தான் மிக அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். தண்ணீரைக் குடித்துவிட்டு ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு தடிச்ச தோல் இல்லை’ என்றார். எதைச் சொன்னாலும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பெரியவர்கள்தான் முக்கியக் காரணம் என்றார். வாஸ்தவமான சொல். குழந்தைகளைத் திட்டுவதில்லை என்பதை பல பெற்றோர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. நானும் கூட அப்படித்தான். ஏதேனும் ஒரு காரணத்துக்காகத் திட்டும் போது- திட்டக் கூட வேண்டியதில்லை- கோமாளி, முட்டாள் என்று ஏதேனும் கேளிச் சொல்லைப் பயன்படுத்தினால் கூட பொலபொலவென்று கண்ணீர் வந்துவிடும் மகனுக்கு. 

‘இவன் என்ன இப்படி இருக்கான்?’ என்று அவ்வப்போது யோசித்திருக்கிறேன். ஆனால் தீர்வு குறித்துச் சிந்தித்ததில்லை.

மனோவியல் நிபுணர் ‘உங்க தலைமுறையில் இப்படி இருந்தீங்களா?’ என்றார். இல்லை. அம்மா கடுமையாகத் திட்டுவார். ஆசிரியர் அடிப்பார். அப்பா எப்பொழுதாவதுதான் அடிப்பார் ஆனால் செமத்தியான வணக்காக இருக்கும். அடி வாங்குவதும் வசைச்சொற்களைக் கேட்பதும் சலித்துப் போய்விடும். எப்படி ஏய்ப்பது, அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி, வசவுக்கு வாய்தா வாங்குவதற்கான வழிமுறைகள் குறித்தெல்லாம்தான் மனம் கணக்குப் போடும். Too sensitive என்றெல்லாம் இருந்ததேயில்லை. உண்மையாக அழுததைக் காட்டிலும் அடி வாங்குவதிலிருந்து தப்பிப்பதற்காக பாவனையாக அழுததுதான் அதிகம்.

இன்றைய குழந்தைகள் அப்படியில்லை. மனிதர்களுடன் உரையாடுவதை விடவும் திரைகளுடன்தான் அதிகம் உரையாடுகிறார்கள். கணினித்திரை, அலைபேசித் திரை, தொலைக்காட்சித்திரை எதுவும் குழந்தைகளுக்கு மனிதர்களின் மனங்களைச் சொல்லித் தருவதில்லை. அவை குழந்தைகளை மேலும் மேலும் ரத்தமும் சதையுமான மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன. சக குழந்தைகளுடன் விளையாடுவதும் சண்டையிடுவதும் வெகு அரிது. பள்ளிகளிலும் கண்டிப்புகள் இருப்பதில்லை. அம்மா அப்பாவும் செல்லம் என்ற பெயரிலும் தடித்த சொற்களைப் பயன்படுத்துவதில்லை.

நண்பர், தனது செய்திச் சேகரிப்புகளைச் சுட்டிக் காட்டி ‘இந்த மொத்தச் செய்திகளுக்கும் ஆதாரப்புள்ளின்னு இதைத்தான் சொல்வேன்’ என்றார். அவர் மிக இலாகவமாகவும் நிதானமாகவும் பேசினார். என்ன இருந்தாலும் மனோவியல் நிபுணர். அவர் பேசுவதை என்னால் மறுக்க முடியவில்லை. அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. Too sensitive to everything என்பது நல்லதில்லை. கோபமும் வசவும் மனிதர்களுக்குரிய குணங்கள். அதைக் குறைந்தபட்ச அளவிலாவது குழந்தைகளிடம் காட்டுவதும், அவர்களைத் திட்டுவதும், வசவுகளுக்கு அவர்களைப் பழக்குவதும் தவறில்லை என்பது அவரது வாதம். வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் போது ஒரு முறை அழைத்துப் பார்த்தால் குழந்தைகளின் கவனம் நம் பக்கம் திரும்பவில்லையெனில் ‘டேய்’ என்று சற்றே அதட்டுவதில் தவறொன்றுமில்லை. நமக்கே அது கடினமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கும் அந்த அதட்டலை ஏற்றுக் கொள்வது கடினம்தான். முதல் ஒன்றிரண்டு முறை அழுவார்கள். சுணங்குவார்கள். அது பிரச்சினையில்லை. இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை அவர்களுக்குப் பழகிவிடும். நம்முடைய கோபத்தை நாம் மறைத்துக் கொண்டு குழந்தைகளிடம் எப்பொழுதுமே காட்டாமல் இருந்துவிட்டு நம்மையும் மீறி ஏதேனும் தருணத்தில் கொட்டிவிடும் போது அந்தப் பிஞ்சுகளால் அதனைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள்.

பதின்பருவத்துக் குழந்தைகள்தான்  (Teen age) தற்கொலை என்ற உச்சகட்ட முடிவுகளை அதிகம் எடுக்கிறார்கள். அவர்களது வயது அப்படி. தம்மைப் பெரியவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். சென்சிடிவ்வாக வளர்ந்து நிற்கும் அவர்களால் அம்மாவும் அப்பாவும் திட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவசரப்பட்டுவிடுகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே ‘அம்மா திட்டுவாங்க’ ‘அப்பா திட்டுவாங்க’ என்ற மனநிலையை உருவாக்காமல் விட்டுவிடுவது பெற்றோரின் முக்கியமான தவறாக இருக்கிறது. அப்படிக் குழந்தைகளை உருவாக்குவதும் கூட ஒரு வகையிலான அவர்களின் மன அழுத்த மேலாண்மைதான். 

‘யோசிச்சுப் பாருங்க’ என்றார். 

அவர் சுட்டிக்காட்டியது மிக முக்கியமான விஷயமாகத் தெரிந்தது. இப்படியொரு கோணத்தில் யோசித்ததில்லை. உணவை முடித்துவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகும் இதுதான் மனதுக்குள் உலாத்திக் கொண்டிருந்தது. 

நீங்களும் யோசித்துப் பாருங்கள்.

என்ன செய்தோம்?

சனிக்கிழமை ஒரே நாள்தான் விடுமுறை. அதுவும் கூட விடுமுறை இல்லை. சொல்லாமல் அடித்துக் கொண்ட கட். காரைக்கால் பெங்களூரிலிருந்து நானூறு கிலோமீட்டரைத் தாண்டும். போகும் போது பாண்டிச்சேரி- சிதம்பரம்-காரைக்கால் என்று சென்று சேர்ந்திருந்தேன். காரைக்காலில் அரசலாறு என்றொரு ஆறு ஓடுகிறது. அதன் கரையோரம் ஒரு பொதுப்பணித்துறையின் விருந்தினர் விடுதி. அங்கு அறை ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள். இரவுகளில் பயணம் செய்தால் நம்மையும் மீறிய ஒரு அசதி இருக்கும். தண்ணீரைத் திருகி விட்டு தலை மீது ஊற்றும்படியாக ஐந்து நிமிடங்கள் நின்றுவிட வேண்டும். அது புத்துணர்ச்சியைக் கொடுத்துவிடும். குளித்து அறையைப் பூட்டி சாவியைத் திரும்பக் கொடுத்துவிட்டு அரசலாறு வழியாகவே நடந்தால் நதி கடலைச் சேரும் இடம் வரைக்கும் செல்லலாம். அப்படித்தான் சுற்றிக் கொண்டிருந்தேன். 

பேராசிரியர் ராதாகிருஷ்ணன் கொச்சியிலிருந்து வந்திருந்தார். நாங்கள் இருவரும்தான் பயிற்சியாளர்கள். ராதாகிருஷ்ணன் மென்பொருள் துறையில் பணியாற்றியவர். இப்பொழுது கொச்சியிலிருக்கும் மேலாண்மைக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்திருக்கிறார். ஒவ்வொரு பயிற்சிக்கும் கைக்காசைச் செலவு செய்து கொண்டுதான் வருகிறார். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத மனிதர். இப்படியானவர்களே நம்மிடம் வந்து சேர்கிறார்கள் என்று சந்தோஷமாக இருந்தாலும் இவர்களையும் சேர்த்து அலைகழிக்கிறோமோ என்று துளி வருத்தமில்லாமல் இல்லை. 

சில நூறு வருடங்களுக்கு முன்பாக காரைக்கால் நகரத்தை பிரெஞ்சுக்காரர்கள் விலை கொடுத்து வாங்கி அதைத் தங்களின் ஆளுகையின் கீழாகக் கொண்டு வந்துவிட்டார்கள். இன்னமும் நகரத்தில் பழமை அப்படியேதான் இருக்கிறது. பழங்கால ஓட்டுவீடுகள், பெரும் தூண்கள் என்று அழியாமல் காத்திருக்கிறார்கள். புதுச்சேரி அரசாங்கத்தின் ஸ்கார்ப்பியோ ஒன்றை எங்களுக்காக ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அரசாங்க கல்வியியல் கல்லூரியில்- பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி- செய்திருந்தார்கள்.

கடந்த சில மாதங்களாகவே இந்நிகழ்வுக்கான திட்டமிடல்களைச் செய்து கொண்டிருக்கிறோம். இந்த வருடத்தின் முதல் நிகழ்வு இது. சரியாக அமைந்துவிட்டால் அடுத்தடுத்து பல பள்ளிகளில் நடத்திவிட முடியும். ஆட்சியர் அட்டகாசமான மனிதர். ‘இதை அவர்கிட்ட சொல்லிடுங்க; அதை இவர்கிட்ட சொல்லிடுங்க’ என்றெல்லாம் கை நீட்டவில்லை. ஒவ்வொரு முறையும் அவரிடம் நேரடியாகப் பேச முடியும். காரைக்கால் மாவட்டத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகளிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தார்கள். சற்றேறக்குறைய எண்பது மாணவர்கள். ‘நன்றாகப் படிக்கும் மாணவர்கள், கொஞ்சம் வீக்..பற்றவைத்தால் பிடித்துக் கொள்வான், தான் கற்றதை பிற மாணவர்களுக்குச் சொல்லித் தரக் கூடிய மாணவ/மாணவி’ என்ற கலவையில் தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தோம். புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் துணை இயக்குநர் அதையெல்லாம் பொறுப்பெடுத்துச் செய்து கொண்டிருந்தார்.

காலையில் ஒன்பதரை மணிக்கு நிகழ்ச்சியைத் தொடங்கினோம். மாணவர்களைக் கலந்து அமரச் செய்வது முதற்காரியம். ஒரு வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் ஒரே பள்ளி மாணவர்களாக இருக்கக் கூடாது. அவர்கள் கலந்து அமர்ந்த பிறகு ஒரு விளையாட்டு. Desert Survival Program என்று பெயர். ஒரு பாலைவனம். அங்கேயொரு விபத்து நிகழ்கிறது. கையில் பதினைந்து பொருட்கள் இருக்கின்றன. தம்மைக் காப்பாற்ற ஒரு குழு வந்து கொண்டிருக்கிறது. அதுவரைக்கும் உயிர் பிழைக்க எது மிக முக்கியமான பொருள், எது முக்கியமற்ற பொருள் என்று வகைமைப்படுத்த வேண்டும். இதை ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாகச் செய்ய வேண்டும். இதே வகைமைப்படுத்தலை மதியம் உணவுக்குப் பிறகு அணியாகச் சேர்ந்து செய்ய வேண்டும். இரண்டிலும் வித்தியாசம் இருக்கும். ஒருவன் தலைவனாக உருவாகியிருப்பான். அவன் சொன்னதைத்தான் பிற நால்வரும் செய்திருப்பார்கள். ‘ஏன் அவன் தலைவனாக உருவெடுக்கிறான்’ என்று புரிந்து கொள்ளும்படியாக பேராசிரியர் பேசுவார். Leadership quality என்பது பற்றியும் அதற்குத் தேவையான Values, Passion என்பது பற்றியெல்லாம் விரிவாகச் சொல்லித் தருவது ஒரு பகுதி.


அதன் பிறகு பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளிக் கூடம், இயற்கை, நாடு ஆகியவற்றிடமிருந்து பிறந்ததிலிருந்து நாம் என்ன பெற்றுக் கொண்டோம், இதுவரை என்ன திருப்பிக் கொடுத்திருக்கிறோம் என்பது இன்னொரு பகுதி. இது ஒரு வகையிலான சுய அறிதல் (Self realization). மாணவர்கள் மேடையில் வந்து பேசினார்கள். ஒரு பெண் தனது அம்மா அப்பாவிடம் அன்பையும் உயிரையும் பெற்றுக் கொண்டதாக எழுதியிருந்தாள். அவர்களுக்கு எதையுமே திருப்பிக் கொடுக்கவில்லை என்று ஒரு கோடிட்டிருந்தாள். ‘ஏம்மா?’ என்று கேட்ட போது குழந்தையாக இருக்கும் போதே இருவரும் இறந்துவிட்டதாகச் சொன்னாள். ராதாகிருஷ்ணன் பெற்றோர்களின் சிறப்பைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவள் உடைந்து அழுது கொண்டிருந்தாள். விதவிதமான மாணவர்கள். விதவிதமான உணர்வுகள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே ஆட்சியரிடம் ‘கருத்தரங்கில் ஒரு மணி நேரம் நீங்க பயிற்சியளிக்க முடியுமா?’ என்று கேட்டிருந்தேன். பதினேழு வயதில் இருக்கும் மாணவர்களுக்கு ஆட்சியர் நேரடியாகத் தங்களிடம் பேசுகிறார் என்பது மிகப்பெரிய உத்வேகம். ஆட்சியர் கேசவன் மிக எளிய மனிதர். கலெக்டர் அலுவலக ஊழியர்களும் அதைத்தான் சொன்னார்கள். ‘பைக் எடுங்க’ என்று சொல்லி பின்னால் அமர்ந்தபடியே ஊருக்குள் சுற்று வருவாராம். மாணவர்களிடையே மிகச் சாதாரணமாகப் பேசினார். சாத்தான்குளத்துப் பக்கம் கிராமத்துப் பள்ளியில் படித்ததிலிருந்து அங்கேயே பி.எஸ்.சி வரைக்கும் படித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ல் தேர்வாகி நான்கைந்து வருடங்கள் சென்னையில் எந்த இலக்குமில்லாமல் சுற்றிவிட்டு யாரோ ஒருவரின் அறிவுரையின் பேரில் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயார் செய்யத் தொடங்கி ஒரு வருடம் கடுமையான உழைப்புக்குப் பிறகு தேர்வில் வெற்றியடைந்தது பற்றி இயல்பான பேச்சு மொழியில் பேசினார். அவருடன் மாணவர்கள் உரையாடினார்கள். பூஸ்ட் குடித்த உற்சாகம் அவர்களுக்கு. அத்துடன் காலை நேரப் பயிற்சி நிறைவடைந்தது.

மாணவர்கள் அத்தனை பேருக்கும் வடை, பாயசத்துடன் மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார்கள்.


மதியத்திற்கு மேல் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள், படிப்பதற்கான கால அட்டவணை தயாரித்தல், நேர மேலாண்மை, தேர்வுகளை அணுகும் முறை, தேர்வுகளை எப்படி எழுதுவது என்பதையெல்லாம் இரண்டு மணி நேரங்களுக்கு நான் பேசினேன். இதெல்லாம் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைக்காத exposure. பயிற்சியளிக்கும் போது நாம் சரியாகத் திட்டமிட்டு அவர்கள் சலிப்படைந்துவிடாமல் சொல்லிக் கொடுத்துவிட்டால் போதும். பிடித்துக் கொள்வார்கள். கடந்த ஆண்டு அனுபவத்திலிருந்து நிறையச் சுட்டிக் காட்ட முடியும். அசாருதீன், பவித்ரா என்று ஜொலித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை அதிகரித்துவிட வேண்டும் என்பதுதான் இலக்கு.

மாணவர்களிடம் கருத்துக்களை எழுதி வாங்கினோம். அவர்களுக்கு மிகப் பிடித்திருந்தது. 

பயிற்சி முடித்த பிறகு அந்தக் காலத்து பிரெஞ்சு கட்டிடத்தில் இயங்கும் ஆட்சியரின் அலுவகலத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆட்சியரிடம் பேசிக் கொண்டிருந்தோம். ‘இனி நான் என்ன செய்யணும்?’ என்றார். ‘கொஞ்சம் ஃபாலோ-அப் செஞ்சுக்குங்க சார்..தேவைப்பட்டால் ஜனவரியில் இன்னொரு முறை வருகிறோம்’ என்று சொல்லியிருக்கிறேன். அவர் கட்டாயம் செய்வார். அப்படியான கலெக்டர் அவர். அன்றைய தினம் புதுவை முதல்வர் நாராயணசாமியின் நிகழ்ச்சி ஒன்று காரைக்காலில் நடைபெற்றது. ஆட்சியர் முதல்வரை வரவேற்பதற்குத் அதற்குத் தயாரானார். எங்களை ஆட்சியர் அலுவலக கண்காணிப்பாளர் பாலு திருநள்ளாறு அழைத்துச் சென்றார். ஸ்பெஷல் தரிசனம். ரஞ்சனி பிரான்ஸில் இருக்கிறார். அவர் தனது தம்பியிடம் சொல்லி நடேசன் கடை அல்வாவும் குளோப்ஜாமூனும் ஒரு பெரிய பெட்டி வாங்கிக் கொடுத்து அனுப்பியிருந்தார். யோகேஷ் மயிலாடுதுறைக்காரர். காலையிலிருந்தே கருத்தரங்கில் இருந்தார். மாலையில் பைக்கில் ஏற்றிக் கொண்டு திருக்கடையூர் வரைக்கும் கொண்டு வந்துவிட்டார். இடையில் தரங்கம்பாடியில் டேனிஷ்கோட்டைக்குச் சென்றோம். அது போர்த்துக்கீசியர்களின் கோட்டை. 

திருக்கடையூரிலிருந்து சிதம்பரம் வரைக்கும் ஒரு பேருந்து அங்கேயிருந்து சேலம் வரைக்கும் ஒரு பேருந்து. சேலத்திலிருந்து பெங்களூருவுக்கு இன்னொரு பேருந்து. அலைச்சல்தான். ஆனால் எவ்வளவு பெரிய சந்தோஷமும் திருப்தியும் இது?

Oct 20, 2017

பனிரெண்டுக்குப் பிறகு?

காரைக்கால் செல்கிறோம். அந்த மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது அரசுப்பள்ளிகள் இருக்கின்றன- மேனிலைப்பள்ளிகள். அந்த மாணவர்களுக்கான ஒரு கருத்தரங்கு. மாணவர்களிடம் படம் காட்டுவதெல்லாம் நோக்கமில்லை. பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை எப்படி அணுகலாம்? தேர்வை எழுதுவது எப்படி? கல்லூரிகளில் எந்தப் படிப்புகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது பற்றியெல்லாம் ஒரு முழு நாள் கருத்தரங்கம். சுமார் எழுபது முதல் நூறு மாணவர்கள் கலந்து கொள்வார்கள். மாவட்ட ஆட்சியர் கேசவன் அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். ஆட்சியரே களத்தில் இறங்கி மாணவர்களுக்காக கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும் என்று யோசித்துச் செயல்படுத்துவதெல்லாம் பெரிய விஷயம். 

கொச்சியிலிருந்து பேராசிரியர் ராதாகிருஷ்ணன் வருகிறார். சேவியர் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர். இவருடன் சேர்ந்துதான் கடந்த ஆண்டு ஒரு கருத்தரங்கை நடத்தினோம். ஆறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டார்கள். நிறையப் பேர்கள் ஆயிரங்களைத் தாண்டினார்கள். அந்த மாணவர்களிலிருந்துதான் அசாரூதின், பவித்ரா, சாமிநாதன், விக்னேஷ் உள்ளிட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான கல்வி உதவித் தொகையைச் செய்து, சூப்பர் 16 என்ற பெயரில் மாதாந்திர பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறோம். ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டு பத்து பயிற்சியரங்குகளையாவது நடத்த வேண்டும் என்று சொல்லியிருந்தார். காரைக்காலில் முதல் நிகழ்வு. ஆசனூர், பர்கூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளையெல்லாம் இந்த வருடம் பட்டியலில் வைத்திருக்கிறோம். 

கருத்தரங்கில் தேர்வுகள், பாடம் என்பது பற்றியெல்லாம் பேச வேண்டியது என் பொறுப்பு. வாழ்வியல் அறங்கள், தலைமைப்பண்பு, தன்னம்பிக்கை போன்ற விவகாரங்கள் ராதாகிருஷ்ணனின் பொறுப்பு. அரசு தாமசு வந்தால் ஒருங்கிணைக்கும் வேலையைப் பார்த்துக் கொள்வார். 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இத்தகையை பயிற்சி வகுப்புகள் மிக அவசியம். வெளியுலகமே தெரியாமல் வளர்ந்து விடுகிறார்கள். சில மாணவர்களை இணைத்து ஒரு வாட்ஸப் குழுமத்தைத் தொடங்கியிருக்கிறேன். தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்கள். ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை’ ‘தீபாவளிக் கொண்டாட்டங்கள்’ ‘அஜீத்தை ஏன் பிடிக்கும்?’ ‘விஜய் ஏன் மாஸ்?’ என்பது மாதிரியான கேள்விகளைக் கேட்பேன். ஒரே விதி ஆங்கிலத்தில் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும். தொண்ணூற்றைந்து சதவீத மாணவர்கள் பதில் சொல்லவே தயங்குகிறார்கள். ஆங்கிலம், தன்னம்பிக்கை என்று பல தடைகள். ‘பரவாயில்லை ஏதாச்சும் எழுது’ என்று ஒவ்வொருவராக அழைத்துப் பேசி எழுதச் சொன்னால் எழுதுகிறார்கள். 

அந்தக் குழுமத்தில்  ‘I am coming to salama capadesani ni 8numbras’.  இப்படியொரு மாணவன் எழுதியிருக்கிறான். நம்ப முடிகிறதா? கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிற மாணவன். பனிரெண்டு ஆண்டுகளாக ஆங்கிலத்தில் தேர்வெழுதி தேர்ச்சியடைந்திருக்கிறான். கல்லூரியில் ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுதுகிறான். நம் கல்வித்தரத்தின் லட்சணத்தைத் தெரிந்து கொள்ளலாம். நூறு மாணவர்கள் படித்தால் வெறும் இரண்டு பேர்கள் தேறினாலே பெரிய விஷயம். ஆனால் தேர்ச்சியடையச் செய்து மேலே மேலே அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அறிவொளி இயக்கம் செய்ய வேண்டிய காரியமான ‘எழுதப் படிக்கத் தெரியும்..அவ்வளவுதான்’ என்பதைத்தான் இன்றைக்கு பல பள்ளிகளும் கல்லூரிகளும் செய்து கொண்டிருக்கின்றன. 

‘எட்டுப் பேர்களுடன் ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்திருக்கிறேன்’ என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தம். அந்த மாணவனைக் குறை சொல்ல முடியாது. அவ்வளவுதான் நம் கல்வி அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

அரசுப்பள்ளிகள், தமிழ்வழிக் கல்விக் கூடங்களில் இருக்கும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் இறங்கிப் பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது. அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. செய்வார்களா என்று தெரியாது. கல்வியமைச்சர் பார்த்து மனம் வைக்க வேண்டும். 

அவர்கள் செய்வதைச் செய்யட்டும். நம்மால் முடிந்தளவுக்கு உழைக்க வேண்டியதுதான். மாணவர்களோடு மாணவர்களாக இறங்கி ஒரு தீக்குச்சியை உரசி வீசிவிட வேண்டும். ஐநூறு மாணவர்களுக்கு பயிற்சியளித்தால் குறைந்தது நூறு பேராவது தலையை மேலே தூக்கிவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதுதான் நோக்கமும் கூட.

                                                                      ***

நாளை மாணவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் கட்டுரையின் பிரதி-

தேர்வுகள் நெருங்குகின்றன. லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுதுவார்கள். எழுதட்டும். பதற்றமடையத் தேவையில்லை. பதறுகிறவனைவிடவும் மிகத் தெளிவாக யோசனை செய்து செயல்படுத்துகிறவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். தேர்வுகள், போட்டி, மதிப்பெண்களையெல்லாம் தாண்டி முக்கியமானது ‘அடுத்து என்ன படிக்கலாம்?’ என்பது. முக்கால்வாசிப்பேரின் எதிர்காலத்தை ப்ளஸ் டூ முடித்த பிறகு தேர்ந்தெடுக்கப் போகிற படிப்புதான் நிர்ணயம் செய்கிறது. தேர்வு நெருங்க நெருங்க ஒவ்வொருவரும் குழப்புவார்கள். ஆசிரியர்கள், நண்பர்கள், பக்கத்துவீட்டுக்காரர்கள், உறவினர்கள் என்று ஆளாளுக்கு அறிவுரைகளைச் சொல்வார்கள். கேட்டுக் கொள்வதில் தவறேதுமில்லை. நூறு விதமான கருத்துக்களைக் கேட்டு உள்ளே போட்டுக் குதப்பி நமக்கு எது சரிப்பட்டு வரும் என்று இறுதியில் முடிவெடுக்கலாம். ஆகவே, காதுகளைத் திறந்து வையுங்கள். ஆனால் யாருடைய கருத்துமே உங்களை வீழ்த்திவிடாத தெளிவோடு இருங்கள். அடுத்தவர்களிடம் நீங்கள் கேட்பது ஆலோசனைகள்தான். உங்களுக்கு உதவக் கூடிய ஆலோசனைகள். மற்றபடி, நீங்கள் என்ன படிக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுத யாரையும் அனுமதிக்காதீர்கள். அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ப்ளஸ் டூ முடித்த பிறகு என்ன படிக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்வது?

 1) சிறு வயதிலிருந்து விருப்பமான துறை எது? (ஒன்று அல்லது இரண்டு துறைகளை முடிவு செய்வது நல்லது - கணிதம், அறிவியல், கணக்கியல், விலங்கியல், மருத்துவம், பொறியியல் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.)

 2) நமக்கு விருப்பமான துறைக்குள் நுழைய உதவும் படிப்புகள் என்ன இருக்கின்றன? அவற்றை எந்தெந்தக் கல்லூரிகள் சொல்லித் தருகின்றன?

 3) படிப்புக்கான வேலை வாய்ப்புகள் எப்படி? (அரசு வேலை வாய்ப்பு, தனியார் வேலை வாய்ப்பு, மேற்படிப்பு பிறகு ஆராய்ச்சி, சுயதொழில் என்று சகலத்தையும் யோசிக்க வேண்டும்)

 4) நாம் படிக்கிற படிப்பை வைத்துக் கொண்டு எந்தவிதமான போட்டித் தேர்வுகளை எழுத முடியும்?

இவை மேம்போக்கான கேள்விகள். ஆனால் இந்தக் கேள்விகளிலிருந்துதான் தொடங்க வேண்டும். பதில்கள் கிடைக்கக் கிடைக்க நமக்கு வேறு சில கேள்விகள் தோன்றும். பதில்களை ஆழமாகக் கண்டறியத் தொடங்கும் போதுதான் எதிர்காலம் குறித்தான விதவிதமான எண்ணங்களும் வழிகளும் கதவுகளும் தெரியும். 

உதாரணமாக, கால்நடைகள் சம்பந்தமாக ஆர்வமிருக்கிறது என்றால் பி.வி.எஸ்.சி (B.V.Sc) மட்டும்தான் படிப்பு என்று இல்லை. சற்றே மெனக்கெட்டு விரிவாகத் தேடினால் மீன்வளத்துறைக்கான படிப்பு இருக்கிறது, வனவியல் படிப்பு இருக்கிறது, பட்டுப்பூச்சி வளர்ப்புக்கான படிப்பு இருக்கிறது - இப்படி நிறையப் படிப்புகள் நம் கண்களில்படும். வனவியல் படிப்பை மேட்டுப்பாளையத்தில் படிக்கலாம். மீன்வளத்திற்கான படிப்பை சென்னையிலும் தூத்துக்குடியிலும் படிக்கலாம். பட்டுப்பூச்சி வளர்ப்புக்கான படிப்பை கோவையிலோ அல்லது மைசூரிலோ படிக்கலாம். 

இப்படி பெரும்பாலானவர்களின் கவனத்திற்கு ஆளாகாமல் ஆனால் மிகச் சிறந்த அரசு வேலை வாய்ப்புகளையும், சுய தொழிலுக்கான திறப்புகளையும் கொண்ட படிப்புகள் நிறைய இருக்கின்றன. 

எல்லோரும் படிக்கிறார்கள் என்று பொறியியல், மருத்துவம் என்பதை மட்டுமே நாமும் குறி பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதற்காக அவற்றைக் குறை சொல்வதாக அர்த்தமில்லை. நல்ல கல்லூரியில் நாம் விரும்பும் பாடம் கிடைத்தால் படிக்கலாம். இல்லையென்றால் அதே குட்டையிலேயே குதிக்க வேண்டும் என்பதில்லை. விட்டுவிட்டு யாருமே கண்டுகொள்ளாத ஆனால் வேறு வாய்ப்புளைக் கொண்டிருக்கும் பாடங்களில் சேர்ந்து கொடி கட்டலாம்.

உணவு பதப்படுத்துதல், கடல்வளம் உள்ளிட்ட சில பாடங்கள் பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பதாலும் எந்தவிதத்திலும் குறைந்து போய்விடப் போவதில்லை. இயற்பியல், வேதியியல், புள்ளியியல் உள்ளிட்ட சில பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதன் வழியாக மேற்படிப்பு, ஆராய்ச்சி என்று கொடி கட்ட முடியும். வரலாறு பாடத்தைப் படிக்க நம்மூர்களில் ஆட்களே இல்லை. ஆனால் இன்றும் தொல்லியல் துறையில் ஆட்களின் தேவை இருந்து கொண்டேயிருக்கிறது. நாம்தான் தேட வேண்டும்.

நுணுக்கமாக திட்டமிட்டால் மிகச் சரியான பாடத்தைக் கண்டறிந்துவிட முடியும். இங்கே கொண்டாடப்படும் ஒவ்வொரு படிப்புக்கும் மிகச் சிறந்த மாற்றுப் படிப்புகள் இருக்கின்றன. ஆனால் நமக்குத் தெளிவு வேண்டும். அதே சமயத்தில் வித்தியாசமாகச் செய்கிறேன் என்று மாட்டிக் கொள்ளவும் கூடாது. படித்துவிட்டு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்கிற புரிதல் இருந்தால் போதும். சொல்லி  அடிக்கலாம். அதற்கான தேடல்களைத்தான் இனி நாம் விரிவாகச் செய்ய வேண்டியிருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் அல்லது காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆக வேண்டும் என்றோ அல்லது இத்தகையை உயர்பதவிகளை அடைய வேண்டும் என்றோ விருப்பமுடையவர்கள் கடினமான படிப்புகளில் சேர்ந்து மெனக்கெட வேண்டியதில்லை. அது அவசியமுமில்லை. எளிய பாடம் ஒன்றைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கலாம். மூன்று வருடங்கள் முடிந்தவுடன் உடனடியாக தேர்வுகளில் கவனம் செலுத்த முடியும். 

அதே போலத்தான் பட்டயக் கணக்கர் (Chartered account) ஆக விரும்புகிறவர்களுக்கும். பட்டமே படிக்காமல் நேரடியாகத் தேர்வு எழுத முடியும்.

ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து நேரடியாக அறிவியலில் முனைவர் பட்டம் வாங்க முடியும். இப்படி நிறைய இருக்கின்றன. நமக்குத்தான் தெரிவதில்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணி- தோண்டத் தோண்டத்தான் நீர் சுரக்கும். அப்படித்தான் - தேடத் தேடத்தான் விவரம் கிடைக்கும்.

விவசாயம், பொறியியல், மருத்துவம், கலை அல்லது அறிவியல் என எதுவாக இருப்பினும் அலசி ஆராய்ந்து நமது எதிர்காலப் படிப்பினை முடிவு செய்யும் போது நம்மிடம் இரண்டு பாதைகள் கைவசம் இருக்க வேண்டும். உதாரணமாக புள்ளியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்து அரசுப்பணிக்குச் செல்வது நம்முடைய இலக்காக இருக்கலாம். ஒருவேளை படிப்பை முடித்த பிறகு ஏதோ சில காரணங்களால் அரசாங்க வேலை கிடைக்கவில்லையென்றால் அடுத்த வாய்ப்பு என்ன என்பது குறித்தான தெளிவினை வைத்திருக்க வேண்டும். முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்டது போல ஆகிவிடக் கூடாது. ‘இது இல்லையென்றால் எது?’.அது தெரிந்தால் துணிந்து நுழைந்துவிடலாம். 

படிப்பை முடிவு செய்துவிட்டால் அடுத்த முக்கியமான கேள்வி- கல்லூரி.

நாம் விரும்புகிற பாடம் கிடைத்துவிட்டது என்பதற்காக போனாம்போக்கிக் கல்லூரியில் சேர்ந்து எதிர்காலத்தைத் தொலைப்பதைவிடவும் நல்ல கல்லூரியில் கிடைக்கும் பாடத்தில் சேர்ந்து அந்தப் பாடத்தை விரும்புவது எவ்வளவோ தேவலாம் என்றுதான் சொல்வேன். 

உள்கட்டமைப்பு, ஆய்வக வசதி, நூலகம், ஆசிரியர்களின் திறன், எதிர்காலத் திட்டமிடுதலுக்கான வசதி வாய்ப்புகள் (exposure) என எல்லாவற்றையும் பற்றித் தெரிந்து கொண்டுதான் கல்லூரியை முடிவு செய்ய வேண்டும். மோசமான கல்லூரியில் நிறைய மதிப்பெண் பெற்றும் வேலையின்றித் தவிப்பது நிகழ்ந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம் நல்ல கல்லூரியில் சுமாரான மதிப்பெண்ணுடன் தேறும் மாணவனுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். யாரோ சொல்கிறார்கள் என்று கண்ட கண்ட கல்லூரியில் கண்ட கண்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்து மாட்டாமல் இருந்தாலே வாழ்க்கையில் பாதிக் கிணறைத் தாண்டிய மாதிரிதான் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நல்ல கல்லூரியை எப்படிக் கண்டுபிடிப்பது? 

மிக எளிது. நண்பர்கள், ஆசிரியர்கள், சீனியர்கள் போன்றோரின் ஆலோசனைகளைப் பெற்று சுமார் பதினைந்து அல்லது இருபது கல்லூரிகளின் பட்டியலை தயார் செய்து வைத்துக் கொண்டு அந்தக் கல்லூரிகளுக்கு ஒரு ‘விசிட்’ போய்வருவது நல்லது. வெறுமனே போய் வராமல் அங்கேயிருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களைச் சந்தித்தும் விசாரிக்கலாம். இப்படி இருபது கல்லூரிகளை ஒரு சேரப் பார்க்கும் போது நமக்கே ஒரு எண்ணம் கிடைத்துவிடும். ‘அய்யோ இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா?’ என்றெல்லாம் பயப்பட வேண்டியதில்லை. துணிந்து இறங்கிவிட வேண்டும். நம்முடைய எதிர்காலத்திற்காகத்தானே செய்கிறோம்?

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஒரே ஆளிடம் ஆலோசனை கேட்பது குழியில் தள்ளிவிடும். நம் ஊரில் தெரிகிறதோ தெரியவில்லையோ அட்வைஸ் கொடுக்க மட்டும் தயங்கவே மாட்டார்கள். அதனால் குறைந்தது பத்து ‘தகுதியுள்ள’ நபர்களிடம் ஆலோசனை கேட்பதுதான் நல்லது. தகுதியுள்ள என்று எழுதியதற்கு அர்த்தம் புரிகிறதுதானே? விரிவாகவே சொல்லிவிடுகிறேன். தன் மகனோ அல்லது மகளோ பொறியியல் படிக்கிறார்கள் என்பதற்காக இஸ்ரோ சயிண்டிஸ்ட் என்கிற நினைப்பில் பீலா விடும் அறிவுசீவிகள் நம் ஊரில் அதிகம். தன் மகன் படிப்பதனாலேயே அந்தப் படிப்புதான் ஒஸ்தி என்று அடித்துவிடுவார்கள்.  இத்தகைய ஆட்களை நாசூக்காக கத்தரித்துவிட்டு விடும் வழியைப் பாருங்கள்.

தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பாகவிருந்தே தனியார் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அவசரப்படுத்துவார்கள். ‘உடனடியாகச் சேராவிட்டால் அத்தனை இடங்களும் தீர்ந்துவிடும்’ எனச் சிக்க வைக்க முயற்சிப்பார்கள். பல கல்லூரிகள் ஊர் ஊராக கூடாரம் போட்டு ஆள் பிடிக்கத் தொடங்குவார்கள். பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு இயல்பாக இருக்கும் பதற்றத்தை அறுவடை செய்வதற்காகவே காத்திருப்பவர்கள் அவர்கள். பணத்தைக் கட்டச் சொல்வார்கள். அவசரத்தில் நிறையப் பேர் கட்டிவிட்டு ‘சரி ஆண்டவன் கொடுத்த வழி’ என்று இருப்பதை கவனித்திருக்கிறேன். 

நிறையக் கல்லூரிகள் இருக்கின்றன. நிறையப் பாடங்கள் இருக்கின்றன. எனவே இந்த விஷயத்தில் பதற்றப்படாமல் நிதானமாக முடிவு செய்ய வேண்டும்.தேர்வு முடிவுகள் வரும் தினம் வரைக்கும் கல்லூரி குறித்தும், பாடத்திட்டம் குறித்தெல்லாம் தொடர்ந்து விசாரித்துக் கொண்டேயிருந்தால் ஓரளவுக்கு தெளிவு கிடைத்துவிடும். ‘ரிசல்ட் வரட்டும் பார்த்துக்கலாம்’ என்று மட்டும் தயவு செய்து சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். பன்னிரெண்டு வருடம் உழைத்தாகிவிட்டது. இன்னும் இரண்டு மூன்று மாதங்கள்தானே? சோம்பேறித்தனம்படாமல் உழையுங்கள். தயக்கமேயில்லாமல் கேள்விகளைக் கேளுங்கள். உங்கள் எதிர்கால வாழ்க்கையின் ஒட்டுமொத்த நகர்வும் நீங்கள் எடுக்கவிருக்கும் இந்த ஒரு முடிவில்தான் இருக்கிறது. 

என்ன படிக்கப் போகிறோம், எங்கே படிக்கப் போகிறோம் என்பது குறித்தான முடிவுக்கு வருவதற்காக நிறையப் பேரிடம் நிறையப் பேச வேண்டியிருக்கும். ‘யாரிடம் பேசுவது?’ என்று தெரியாதவர்கள் இணையத்தில் தேடுங்கள். ‘எங்கள் ஊரில் இணையமே இல்லை’ என்றால் தயங்கவே வேண்டாம். எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள். எங்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு உதவுகிறோம்.

Oct 19, 2017

கேள்வி பதில்கள்

எடப்பாடி அரசு நல்ல காரியம் ஒன்றைக் கூடச் செய்யவில்லையா?

மாநிலம் முழுவதும் குளம் குட்டைகளில் மண் எடுக்க அனுமதியளித்தது மிகச் சிறந்த செயல். மழைக்குப் பிறகு நிறைய நீர் நிலைகள் நிரம்பியிருக்கின்றன. பாராட்டியே ஆக வேண்டும்.

எழுத்தாளர் ஒருவரின் பயணக்கட்டுரை படிக்க நேர்ந்தது. நான் ஆறு வருடங்கள் தங்கியிருந்த இடம்.நிறைய தகவல் பிழைகள். அதிலிருந்து அவருடைய பிற கட்டுரை பற்றிய நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இது சரியா?

ஒரு கட்டுரையில் பிழைகள் நேர்வது இயல்பு. ஒரேயொரு கட்டுரைக்காகச் சந்தேகப்பட வேண்டியதில்லை. 

‘காந்தி மீது 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. கோட்சே சுட்டது 3 குண்டுகள்தான். 4-வது குண்டு எங்கிருந்து வந்தது என்று முறையாக விசாரிக்கவில்லை. அந்த 4-வது குண்டுதான் காந்தி உயிரிழக்க காரணம்’ என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதே?

வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கிறது. அபினவ் பாரத் என்கிற அமைப்பைச் சார்ந்த பங்கஜ் பத்னி என்பவர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த அமைப்பு பற்றி கூகிளில் தேடிப் பார்க்கலாம். அதற்கு மேல் இதில் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது?


சசிகலா தமிழ்நாட்டில் தங்களின் ஆட்சிதானே என்று கணக்குப்போட்டு தன்னை தமிழக சிறையில் அடையுங்கள் என்று போராடி சட்ட அனுமதி பெற்று தமிழக சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சிறையில் சசிகலாவின் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா அல்லது கடுமையாக கொடுமை படுத்தப்பட்டிருப்பாரா? (நழுவாமல் பதில் சொல்லவும்)

என்ன நிகழ்ந்திருக்கும் என்று யூகிப்பது சாத்தியமில்லை. ஆனால் தவறான முடிவெடுக்காமல் தப்பித்துவிட்டார் என்றுதான் நானும் நினைக்கிறேன்.

நீட் பற்றி வழவழவென்று ரவுண்டடிக்காமல் ஆணித்தமாக (மரியாதையாக அதை எதிர்த்து) உங்களுடைய கருத்தைக் கூறவும்?

உயர்திரு. நீட் அவர்கள் ஒழிக.

ARYAN INVASION THEORY என்பது இப்போது ஒரு கட்டுக்கதை என்பது பல்வேறு தரவுகளின் மூலம் நீருபிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த வரலாற்று திரிபை, திராவிட கட்சிகள், உண்மையான வரலாறாகவே இரண்டு மூன்று தலைமுறை பள்ளி மாணவர்களுக்கு கல்வி மூலம் புகுத்தியிருக்கிறது. ஆனால் அந்த திராவிட கட்சிகள், தவறான வரலாறை குழந்தைகளுக்கு கல்வி மூலம் புகுத்தியதற்காக வருத்தமடைந்திருப்பார்கள் என நீங்கள் நம்புகிறீர்களா? இதை விட முக்கியமானது, இந்த தவறான வரலாறை படித்த இரண்டு தலைமுறையின் ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் எத்தனை பேர் அல்லது எத்தனை சதவீதம் அவர்கள் கற்றது தவறான வரலாறு என உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

நிரூபிக்கப்பட்டுவிட்டதா? நான் இன்னமும் இது சரியான வரலாறு என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

குக்கூ குழந்தைகள் அறிவியக்கம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நேரடித் தொடர்பில்லை.

Did you feel any heat for criticizing politicians?

களத்தில் இறங்கினால் மட்டும்தான் அரசியல்வாதிகள் பதறுவார்கள். இணையத்தில் எழுதுவதெல்லாம் அவர்களுக்குப் பொருட்டே இல்லை. இங்கேயே மேய்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றி எழுதினால்தான் சூடு தெரியும்.

Which is your favorite movies in Tamil?

நாயகன், தில், பாட்ஷா

கமல் அரசியலுக்கு வந்தால் என்ன நிகழும்?

வயதான காலத்தில் அவருக்கு நன்றாகப் பொழுது போகும்.

Sarahahவில் கேட்கப்பட்டவை.

மிரட்டுகிறார்களாம்...

நேற்றிலிருந்து நிறையப் பேர் அழைத்திருக்கிறார்கள். ‘நீ எப்படிடா பட்டாசு வெடிக்கக் கூடாதுன்னு சொல்லலாம்’ என்பதுதான் அவர்களின் கேள்வி. வெடி இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவோம் என்று முந்தாநாள் எழுதியதன் விளைவு. அரசியல், திரைப்படம், இலக்கியவாதிகள் பற்றியெல்லாம் விமர்சித்து எழுதிய போது வராத அழைப்புகள் இவை. கிறித்துவர்களையும், இசுலாமியர்களையும் விமர்சனம் செய்த போதும் இப்படி யாரும் பேசியதாக நினைவில் இல்லை. ‘கட்டுரையைப் படிச்சீங்களா?’ என்று கேட்டால் ‘அப்படின்னா?’ என்று கேட்கிற ஆட்களாக இருந்தார்கள்.

ஒரு சில்வண்டு ஏதோவொரு பத்தியை மட்டும் எடுத்து வாட்ஸப்பில் போட்டு கீழே எண்ணையும் கொடுத்திருக்கிறது. அது எண் விட்டு எண் பறந்து நாடு விட்டு நாடு கடந்து- என்னை வைத்து தீபாவளி கொண்டாடுகிறார்களாம். ‘இருடா மச்சான்..நான் பேசிட்டு வர்றேன்’ என்று ஒவ்வொருவனும் கெத்து காட்டுவதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். முதல் இரண்டு அழைப்புகளை எதிர்கொண்ட போது சற்று பதற்றமாகத்தான் இருந்தது. பேசியவர்கள் யாருமே உருப்படியானவர்கள் இல்லை என்று புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை. வாட்ஸப்பில் பிறந்து வளர்ந்தவர்கள். பிறகு நானும் அவர்களைப் போலவேதான் பேசினேன். ‘நீ பேசுறதையெல்லாம் ரெக்கார்ட் செஞ்சு வாட்ஸப்பில் போடுவேன்’ என்றான் ஒருவன். ‘அப்படின்னா... இடையிடையே உங்களோடு பேசிக் கொண்டிருப்பது வா.மணிகண்டன் ஃப்ரம் நிசப்தம்.காம்ன்னு சொல்லிக்கட்டுமா..விளம்பரமா இருக்கும்’ என்றேன். உடனடியாகக் கெட்ட வார்த்தைகளுக்கு மாறிவிட்டான். இணைப்பைத் துண்டித்துவிட்டேன். இவர்களுக்கு புதன்கிழமையன்று தீபாவளி. விடுமுறை தினம். தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் உருப்படியாக இல்லை போலிருக்கிறது. ‘ஒருத்தன் சிக்கியிருக்கான்..முட்டுச்சந்துக்குத் தூக்கிட்டு போலாம்..நல்லா டைம்பாஸ் ஆகும்’ என்று திட்டமிடுகிறார்கள். நமக்கு அப்படியா? பெங்களூரில் வெள்ளிக்கிழமைதான் தீபாவளி. விடுமுறை அளிப்பதாக இல்லை. சனிக்கிழமை கூட வேலை செய்யச் சொல்லி மண்டவலி மேனேஜர் மின்னஞ்சல் அனுப்புகிறார். 

மேலாளரைச் சமாளிப்பதா? இவர்களைச் சமாளிப்பதா?

எந்தவொரு சித்தாந்தத்திலும் அதன் ஆழ அகலங்களைப் புரியாத அடிப்படைவாதிகள் இருப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரைக்கும் அடையாளங்கள் மட்டும்தான் முக்கியம். என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அடையாளங்களைக் காப்பாற்றிவிட்டால் தமது சித்தாந்தங்களைக் காப்பாற்றிவிட முடியும் என்று நம்புகிற அடி முட்டாள்கள். இவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். விவாதங்கள், உருப்படியான கருத்துப் பரிமாற்றங்கள், கலந்து எடுக்கப்படும் முடிவுகள் என்பதில் எல்லாம் எந்தவிதமான நம்பிக்கையுமில்லாமல் தமது நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பவர்களை டார்ச்சர் செய்து அடக்கிவிட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

எந்த சித்தாந்தத்தையோ, அமைப்பையோ அல்லது இயக்கத்தையோ அடிப்படைவாதிகளால் காப்பாற்றிவிட முடியாது. அப்படியானதொரு மாயத் தோற்றத்தை வேண்டுமானால் உருவாக்கலாம். அதிகாரத் தோரணையில் ‘நாங்க ஒரு மாஃபியா’ என்ற எண்ணத்தில் சுற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் எதன் மீதும் பெரிய பிடிப்பில்லாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கிற மக்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள்தான் இங்கு பெரும்பான்மை. அவர்கள் ‘இது பரவால்ல போலிருக்கு’ என்று எதன் பக்கம் சாய்கிறார்களோ அதுதான் அதிகாரத்திற்கு வரும். அரியணை ஏறும். முதலிடம் பிடிக்கும். இதுதான் காலங்காலமாக நிகழ்ந்து வருகிற வரலாறு. அரசியல், மதம் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதுதான் நியதியாக இருக்க முடியும்.

தம்மைச் சார்ந்தவர்கள் மட்டுமே தம்மை அதிகாரத்திற்குக் கொண்டு வந்துவிட்டதாக நம்பி அழிச்சாட்டியங்களைச் செய்வது பெரும்பான்மை மக்களை அலுப்புறச் செய்யும். அவர்களிடம் அதீதமான பொறுமை உண்டு. பெரிதாக எதிர்விளைவுகளைக் காட்ட மாட்டார்கள். ‘இவனுகளுக்குப் போய் வாய்ப்புக் கொடுத்தோமே’ என்று தமது அத்தனை எரிச்சலையும் உள்ளே அடக்கி வைத்திருப்பார்கள். காலம் வரும் போது மிகச் சரியாகக் காட்டுவார்கள். 

‘நீ இந்து பேரில் சுத்துகிற கிறித்துவன்தானே?’ என்கிறான் ஒருவன். 

‘எப்படித் தெரியும்?’ என்றால் ‘நினைச்சேன்டா’ என்றான்.

இயற்கையை, சூழலை, சக உயிர்களை வதைக்காமல் பச்சை தீபாவளியைக் கொண்டாடலாம் என்றுதான் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சொல்லுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அவர்களிடம் போய் ‘நீ முதல்ல கறி திங்குறதை நிறுத்து’ ‘வாகனத்தில் போகாம நடந்து போ’ என்று மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அமைதியான தீபாவளி என்பது அவ்வளவு வன்முறையான கருத்தா என்ன? திரைத்துறையைச் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என்று யார் சொன்னாலும் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது என்ன மாதிரியான ஜனநாயகம்? அவர்களிடம் அலும்பு காட்டினால் அமைதியாகிக் கொள்வார்கள். ஆனால் எந்தக் காலத்திலும் இவர்களை ஆதரிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

அட்ராசிட்டிகளின் மொத்த உருவமாகத் திரிந்து கொண்டிருக்கும் சில்வண்டுகள் ஆபத்தானவர்கள். எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. இரண்டு நாட்களுக்கு எண்ணை அணைத்து வைத்தால் ஜிமிக்கி கம்மல் மாதிரி ஏதாவதொன்று வரும். விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் இவர்களை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற காவல் தெய்வங்களுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை- ‘சூழலைச் சிதைக்காமல் பண்டிகைகளைக் கொண்டாடுவோம்’ என்று அறிவுறுத்துவது மிகப்பெரிய பலன்களைத் தரும். நீங்கள் எண்ணெய் ஊற்றுவது போலவே பேசிக் கொண்டிருந்தால் துள்ளுகிறவர்கள் துள்ளிக் கொண்டேதான் இருப்பார்கள். ‘மதம் என்பது அடையாளங்களில் இல்லை’ என்று முதலில் புரிந்து கொள்ளட்டும். மதம் இன்னமும் வலுப்பெறும். 

Oct 18, 2017

என்ன படம் பார்த்தீங்க?

சினிமாக்காரர்களில் பெரும்பாலானவர்கள் சந்தித்தவுடன் ‘என்ன படம் பார்த்தீங்க?’ என்றுதான் கேட்கிறார்கள். இலக்கியவாதிகள் பிரச்சினையில்லை. ‘எந்த புத்தகம் வாசித்தீர்கள்?’ என்று கேட்பது வெகு அரிது. மீறிக் கேட்டால் ‘என் புஸ்தகத்தை வாசிச்சீங்களா?’ என்றுதான் கேட்பார்கள். ‘பாதி படிச்சிருக்கேன்..முழுசா படிச்சுட்டு உங்ககிட்ட பேசுறேன்’ என்று பதில் சொல்லிவிடலாம். அவரவர் பிரச்சினை அவரவருக்கு. 

சமீபத்தில் நிறையத் திரைப்படங்களைப் பார்க்க முடிந்தது. அமேசான் ப்ரைமில் வருடத்திற்கு ஐநூறு ரூபாய்தான் கட்டணம். உறுப்பினராகிவிட்டேன். நேனுமந்திரி நேனுராஜா, வேலையில்லாப்பட்டதாரி 2 மாதிரியான மொக்கைப்படங்களை அதில் பார்த்துவிடலாம். fmovies தளத்தில் வழக்கம் போல நல்ல படங்கள். 

The Clan என்றொரு அர்ஜெண்டினா திரைப்படம். ஒரு நடுத்தரக் குடும்பம் வரிசையாக ஆட்களைக் கடத்திச் சென்று பணம் பறிக்கும். கடத்துகிற வேலையைக் குடும்பமாகச் செய்யமாட்டார்கள். ஆனால் கடத்திக் கொண்டு வந்து வீட்டில்தான் அடைத்து வைப்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.  1980களில் நடந்த உண்மைக் கதை இது. நான்கு பேர்களைக் கடத்தி மூன்று பேர்களைக் கொன்றுவிட்டார்கள். அட்டகாசமான படம் என்று சொல்ல முடியாது. ஆனால் பார்க்கலாம்.

ப்ளேட் ரன்னர் 2049 என்றொரு படம் வந்திருக்கிறது அல்லவா? பெங்களூரில் பெரிய பெரிய விளம்பரங்களாக வைத்திருக்கிறார்கள். கதாநாயகி அழகாக இருந்தாள். கூகிள் செய்து பார்த்தால் அனா டி அர்மாஸ் என்று பெயராம். க்யூபாக்காரி. அவளை வால் பிடித்துப் போனால் அவள் இதற்கு முன்பாக நடித்திருந்த War dogs என்ற படம் சிக்கியது. 2016 இல் வெளியான படம்.  பெட்சீட் வியாபாரி ஒருவன். ஈ ஓட்டுகிற மாதிரியான அளவுக்குத்தான் வணிகம். அவனுக்கு ஒரு பால்யகால நண்பன் உண்டு. தில்லாலங்கடிப்பயல். அவன் ‘என் கூட சேர்ந்துக்குறியா?’ என்று கேட்கிறான். கேட்பவன் ஆயுத வியாபாரி. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் தமக்குத் தேவையான ஆயுதங்களுக்கு டெண்டர் விடுவார்கள். பெருந்தொகைக்கானவற்றை பெரும் கழுகுகள் பார்த்துக் கொள்ளும். ஐந்து பத்து சில்லரைகளை இவன் கண் வைத்துக் கொத்துவான். அதுவே கொழுத்த வருமானம். ‘எத்தனை நாட்களுக்குத்தான் பெட்சீட் வியாபாரத்தையே பார்ப்பது?’ என்று ஆயுத வியாபாரியுடன் ஒட்டிக் கொள்வான். க்யூபாக்காரிக்கு இதெல்லாம் தெரியாது.


வியாபாரிகள் இருவருக்கும் பெரிய நண்டு ஒன்று மாட்டும். ஈராக் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அங்கே தேவைப்படும் ஆயுதங்களுக்கான டெண்டர் ஒன்று வெளியாகிறது. துணிந்து இறங்கும் இவர்களுக்கே டெண்டர் கிடைத்துவிடும். ஆனால் சரக்கைக் கொண்டு போய் சேர்ப்பதற்குள் படாதபாடு பட்டு- பெட்சீட்காரன் தனது மனைவியிடம் பொய் சொல்லியிருப்பான். மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு மாட்டாமல் தப்பிக்க முடியுமா? க்யூபாக்காரியிடம் சிக்கி என சுறுசுறுப்பும் உணர்வுகளுமாகக் கலந்த திரைக்கதை. AEY என்று தேடினால் வியாபாரிகள் இருவரைப் பற்றியும் கதை கதையாக இணையத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். 

பொதுவாகவே உண்மைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் திரைப்படங்களை வெறுமனே திரைப்படம் என்று பார்த்தால் சுவாரசியம் அதோடு நின்றுவிடும். ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்றைத் தேடியெடுத்துக் கொண்டே போவதில்தான் கில்மாவே. அமெரிக்காவின் ஆயுத வியாபாரம், போருக்கான முஸ்தீபுகள், அதில் புரளும் பல பில்லியன் டாலர்கள், பல்லாயிரக்கணக்கான ஆயுத வியாபாரிகள், அவர்களின் வலையமைவு என எல்லாவற்றையும் பற்றி நாம் தேடுவதற்கான தீனிகளைப் படம் முழுக்கவும் இறைத்துக் கொண்டே போகும்.


அர்ஜெண்டினா படமான The Clan கூட அப்படித்தான். கடத்திப் பணம் சம்பாதிக்கிற ஒரு குடும்பத்தின் கதை. அதை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அந்தக் கதை நடக்கும் காலம், அப்பொழுது அர்ஜெண்டினாவின் அரசியல் சூழல், Falklands சண்டை, அந்தச் சமயத்தில் நாயகனின் உளவுத்துறை வேலை, அந்த உளவுத்துறையின் அப்பொழுது என்ன காரியங்களைச் செய்தது என்பதெல்லாம் படத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்ட புள்ளிகள்தான். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அத்தனை படங்களுமே இப்படித்தான். முப்பது சதவீதத்தை நேரடியாகச் சொல்லிவிடுவார்கள். மீதமிருக்கும் எழுபது சதவீதத்தை நாம் தேடுவதற்காக இடைவெளிகளைக் காட்டியிருப்பார்கள். எழுபது சதவீதத்தைத் நாம் தேடும் போது ஒவ்வொன்றும் புதுப் புள்ளியாகக் கண்களில்படும். அப்படி நாம் கண்டறியும் புள்ளிகளை நாமாகவே இணைக்கும் போது கிடைக்கும் தகவல்களும் சுவாரசியமும் அலாதியானது. பொதுவாக அப்படித்தான் படங்களைப் பார்க்கிறேன். 

சமீபத்தில் வேர்ல்ட் மூவிஸ் மியூசியம் என்றொரு ஃபேஸ்புக் பக்கத்தை நண்பர் அறிமுகப்படுத்தியிருந்தார். சிவசங்கர் என்றொரு நண்பர்தான் அட்மினாக இருக்கிறார். குழுமத்தில் கிட்டத்தட்ட இருபத்து நான்காயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் இருப்பவர்கள் இந்தக் குழுமத்தில் இணைந்து வைத்துக் கொள்ளலாம். குழுமத்தின் உறுப்பினர்கள் விதவிதமான படங்களைப் பற்றித் தொடர்ந்து பதிவு செய்து கொண்டேயிருக்கிறார்கள். விமர்சனங்கள் செய்கிறார்கள். விவாதம் நடைபெறுகிறது. எப்படித் திசைமாறாமல் ஆரோக்கியமான விவாதங்களாகவே முன்னெடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஏதாவது படம் பார்க்கலாம் என நினைக்கும் போது இந்தப் பக்கத்தில் ஒரு ஓட்டு ஓட்டிவிடுவது வாடிக்கை. அப்படித்தான் சமீபத்திய திரைப்படங்கள் நிறையப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நேனு ராஜா நேனு மந்திரியை விட்டுவிடலாம். காஜல் அகர்வால் படம் என்று நம்பிவிட்டேன். மொக்கை. அர்ஜூன் ரெட்டி நம் இந்திய சினிமாவுக்கு புது மொழி. படம் முழுக்க முத்தங்கள், அப்பட்டமான வசனங்கள் என்பதெல்லாம் நம் நடிகர்கள் செய்து பார்க்காத விஷயம். பலரும் படத்தைப் பார்த்திருக்கக் கூடும். மருத்துவக் கல்லூரிக் காதலர்களின் காதல். காதலில் எல்லாமே உண்டு. இந்தக் காதலில் ஒன்பது மாதங்கள் இடைவெளி விழுகிறது. இருவரும் சேர்கிறார்களா இல்லையா என்பது கதை. குடிப்பது, கஞ்சா புகைப்பது, தாடியும் சோகமுமாக அலைவது என்பதெல்லாம் சரி. ஆனால் நம்முடைய புனிதத்தன்மையை அப்படியே காப்பாற்றிவிட எத்தனித்திருக்கிறார்கள். ‘உன்னைத் தவிர வேறொருத்தன் நகம் கூட படல தெரியுமா?’ என்பதும் ‘அவன் பெண்களைக் கூட்டிட்டு வருவான்..ஆனா ஒண்ணுஞ் செய்யமாட்டான்..சும்மா பேசிட்டு இருப்பான்’என்று ஒருவனுக்கு ஒருத்தியை கஷ்டப்பட்டு நிறுவியிருக்கிறார்கள். பாலா தமிழில் எடுக்கிறாராம். அதை நினைத்தால் திக்கென்றுதான் இருக்கிறது.