சத்தியமங்கலத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. அதில் பேச அழைத்திருக்கிறார்கள். தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறேன். பேசுவது ஒரு பக்கம். இத்தகைய சிறு அளவிலான புத்தகக் கண்காட்சி நடைபெறும் பகுதிகளில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். அக்கம்பக்கத்து ஊர்களில் இருக்கும் கிராமப்புற பள்ளிகளிலிருந்து மாணவர்களை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கச் சொல்ல வேண்டும். ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களே புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்களுக்கு புத்தகங்களுடன் நெருக்கம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சார்லஸ் முந்தாநாள் எழுபதாயிரம் ரூபாயை அனுப்பியிருந்தார். அதில் ஐம்பதாயிரம் ரூபாயை இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாக உத்தேசம். அவருக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.
பத்து பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளிக்கும் ஐந்தாயிரம் ரூபாய்க்கான கூப்பன்களை அச்சடித்து விநியோகித்துவிடலாம். இருபத்தைந்து ரூபாய், முப்பது ரூபாய், ஐம்பது மற்றும் நூறு ரூபாய் கூப்பன்களாக இருக்கும். அதை மாணவர்களிடம் ஆசிரியர்கள் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் மாணவர்கள் தாம் விரும்பக் கூடிய புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தமது ஆசிரியர்களிடம் காட்டினால் அவர்கள் அனுமதிக்கும்பட்சத்தில் புத்தகம் பள்ளி நூலகத்தில் சேரும். புத்தகத்தின் விலைக்கு ஏற்ற கூப்பன்களை கடைக்காரர்களிடம் மாணவர்கள் கொடுத்துவிடுவார்கள். கண்காட்சியின் இறுதி நாளில் ஒவ்வொரு கடைக்காரர்களும் தம்மிடமிருக்கும் கூப்பன்களை ஒப்படைத்து அதற்கேற்ற பணத்தை வாங்கிக் கொள்ளலாம்.
பத்து கிராமப்புற பள்ளிகளில் நூலகம் அமைக்கப்படுவதற்கு சார்லஸ் அனுப்பி வைத்த தொகை பயன்படுத்திக் கொள்ளப்படும். திட்டம் எப்படி இருக்கிறது?
அது இருக்கட்டும். என்னையும் நம்பி பேசுவதற்கென அழைத்திருக்கிறார்கள் பாருங்கள்.
சத்தியமங்கலத்தில் ஒன்றரை ஆண்டுகள் படித்திருக்கிறேன். இரண்டாம் வகுப்பு. சாரு மெட்ரிகுலேஷனில் சித்ரா டீச்சர் செய்த அழிச்சாட்டியங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து போகின்றன. ட்ரவுசரை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக மைதானத்தைச் சுற்றவிடப் போவதாகச் சொல்லி வகுப்புத் தோழி பானுவை விட்டு ட்ரவுசரை உருவச் சொல்ல அவள் சாம பேத தான தண்ட முயற்சிகளை எல்லாம் பிரயோகித்து இழுக்க விடுவேனா பார் என்று இழுத்துப் பிடித்து என் மானத்தைக் காப்பாற்றியதைப் பற்றி பேசுவேனா?
சரவணனும் நானும் பள்ளிப் பேருந்தில் பயணித்த போது ‘என்னடா ஒடக்காயாட்ட எட்டிப் பார்த்துட்டே இருக்க?’ என்று பள்ளி ஆயா கொட்டு வைத்து மண்டை புடைத்த கதையைப் பேசுவேனா? ‘அந்தக் கிழவி சோத்துல பேதி மருந்த கலந்துடுவோம்டா’ என்று திட்டமிட்டதைப் பேசுவேனா? ‘உங்க பையன் உருப்படமாட்டான் போலிருக்கு’ என்று அப்பொழுதே வசைபாடியதைக் கேட்டு வந்து 'டீச்சர் கிடக்குறாங்க விடு’ என்று அப்பா சொன்னதைச் சொல்வேனா?
ஒன்றரை வருடங்களில் ஒரு நூறு கதைகளைச் சேகரித்த ஊர் அது.
சமணர்கள் தமிழகத்திற்குள் நுழைவதற்கான வாயிலாக இருந்ததும், ஹைதரும் திப்புவும் நினைத்தால் கிளம்பி வந்த தடமாகவும், புலிகள் உலவும் வனமாகவும் என வரலாறு சார்ந்தும் இயற்கை சார்ந்தும் சத்தியமங்கலத்துக்கு நிறையச் சிறப்புகள் உண்டு. கடைசியாக வீரப்பன் ஒளிந்திருந்தது வரைக்கும். இதையெல்லாம் பேசினாலே சுவாரசியமாகத்தான் இருக்கும்.
பார்த்துவிடலாம் ஒரு கை.
ஆகவே தாய்மார்களே, பெரியோர்களே, என்னைப் போன்ற சில்வண்டுகளே- அக்டோபர் இரண்டாம் தேதி. காந்தி பிறந்த நாள். சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவாக இருப்பினும் தவிர்த்துவிட்டு சத்தியமங்கலம் நோக்கித் திரண்டு வருக. சத்தி அதிர்ந்தது என்றெல்லாம் செய்தி வராவிட்டாலும் பரவாயில்லை. ‘அடுத்த வருடம் இவனைக் கூப்பிடவே கூடாது’ என்று மட்டும் அவர்கள் நினைத்துவிடக் கூடாது. வரிக்கு வரி கைதட்டுக. வார்த்தைக்கு வார்த்தை ஓ போடுக. ‘இவன் அப்படியொன்னும் நல்லா பேசலயே’ என்றும் குழம்ப வேண்டும். ‘எதுக்கு இப்படி கை தட்டுறாங்க’ என்றும் குழம்ப வேண்டும்.
இன்குலாம் ஜிந்தாபாத்! புரட்சி ஓங்குக!!
12 எதிர் சப்தங்கள்:
மணிகண்டன்,
பூரணகும்பம்,யானை,எங்கள் அன்பு அண்ணன் என்கிற அலங்கார வளைவு இதையெல்லாம் விட்டுவிட்டீர்களே?
-சரவணகுமார்
வாழ்த்துக்கள் .. நல்ல முயற்சி
//. திட்டம் எப்படி இருக்கிறது?//
நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
மழைக்கு ராயல் என்ஃபீல்ட் ஷோரூமை அண்டியபடி பதுங்கியிருந்த திரு.திருடர் சார் அவர்களுக்கு வணக்கம்.
அக்டோபர் ரெண்டாம் தேதி நிசப்தம் வலைத்தள மொல்லாளி சத்தியமங்கலம் புத்தக திருவிழாவிற்கு வரப் போகிறார். எனவே அங்கு வந்து தங்கள் கடமையை ஆற்றவும்.
ஏற்கனவே பெங்களூரில் பரிச்சயம் இருப்பதால் சத்தியமங்கலத்தில் கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி அநாகரிகமாக நடந்து கொள்ள வேண்டாம். உங்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டு தானாகவே கையில் வைத்திருக்கும் பணத்தை கொடுத்து விடுவார்.
அவரின் வருகை உங்களுக்கு தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவே வருகையின் நாள் தேதி நேரம் எல்லாம் குறிப்பிட்டு அழைப்பிதழ் கூட விநியோகித்திருக்கிறார்.
அத்தோடு நிற்காமல் "சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவாக இருப்பினும் தவிர்த்துவிட்டு சத்தியமங்கலம் நோக்கித் திரண்டு வருக" என்று தமது பதிவின் மூலமும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
நிற்க! அந்நாளில் காந்தி ஜெயந்தியும் வருவதால் விரதம் ,நோன்பு ஏதும் கடைபிடித்து கடமைக்கு இடையூறு செய்து விடாதீர்கள்.
அப்படியே காந்தி ஜெயந்தியன்று நல்லது ஏதேனும் செய்தே தீர வேண்டுமெனில் பெங்களூர் ராயல் என்பீல்ட் ஷோரூம் அருகே பெற்றுக் கொண்ட பர்ஸ், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் பிரதிகள், மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் பண அட்டைகளை திருப்பி கொடுத்து விடவும்.
இன்குலாம் ஜிந்தாபாத்! புரட்சி ஓங்குக!!
இவண்:
சேக்காளி பதிவர்
சில்வண்டு பாறை
நன்றாக பேச வாழ்த்துக்கள். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்னு யாரோ சொன்னதா நியாபகம் நீங்க வேற போர் போர்னு கொளுத்தி போட்டுட்டுட்டீங்க
ஹா ஹா ஹா இந்த வரிகள் வழக்கமான உங்கள் பட்டாசு 'அடுத்த வருடம் இவனைக் கூப்பிடவே கூடாது’ என்று மட்டும் அவர்கள் நினைத்துவிடக் கூடாது. வரிக்கு வரி கைதட்டுக. வார்த்தைக்கு வார்த்தை ஓ போடுக. ‘இவன் அப்படியொன்னும் நல்லா பேசலயே’ என்றும் குழம்ப வேண்டும்.'
இன்குலாம் ஜிந்தாபாத்! புரட்சி ஓங்குக!! நீங்க ANTI INDIAN
Super idea.
UNGATTKU THERIYATHATHU ILLAI.
EN PANGIRKKU ORU NINAIVOOTAL.
அக்கம்பக்கத்து ஊர்களில் இருக்கும் கிராமப்புற பள்ளிகளிலிருந்து 12 th paddikum, 'DALIT, மாணவர்களை அழைத்து வந்து "NEET" 2018 EXAM KKU APPLY SEYYA TRY PANNALAM.
ஆசிரியர்களின் COOPERATIONUM KIDADIKKUM.
ANBUDAN,
M.NAGESWARAN.
நல்லது . போர் வந்துடுச்சு , அப்போ கிளம்பி வந்துருவோம்ல, எழுத்தாளர்களின் இமயமே - போஸ்டர் தலைப்பு ஓகே-ங்களா..
அப்புறம், யாருங்க இந்த சார்லஸ்,அவருக்கு வணக்கங்கள்.
70,000/ ரூவா, 80,000/ லாம் சகஜமா அனுப்பறாய்ங்க, பெரிய மனசு தான்.
இந்த பதிவே உங்கள் பேச்சை கேட்டது போலத்தான் இருக்கு ..இருப்பினும் வாழ்த்துகள்ங்க மணி .............கலக்குங்க மறக்காம வீடியோ போடுங்கள் ...
Hi ,
What time you will speak na?
மாலை ஐந்து மணிக்கு பூபதி.
இன்று மாலை வரை சத்தியமங்கலத்தில் தான் இருந்தேன் .. புத்தக விழா நடைபெறுகிற ஹால் க்கு சென்றிருந்தேன். ஒரு சில புத்தகங்களை வாங்கினேன், "கொங்கு நாடும் சமணமும்" உள்பட... ( நன்றி - கொங்குவில் சமணம் பற்றிய நிசப்தம் பதிவு)
சத்தியில் இது 2-ஆம் ஆண்டு புத்தக திருவிழா .. விதைகள் வாசகர் அமைப்பு மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் ..
நாளை ஒரு பணி நிமித்தமாக ஈரோடு திரும்ப வேண்டிய சூழல், எனவே தங்களின் உரையை கேட்கவும் , நேரில் சந்திக்கவுமான வாய்ப்பை இழக்க வேண்டியுள்ளது.
சிறப்பாக பேசவும் , மாணவர்களுக்கு புத்தகம் வாங்க வாய்ப்பு கொடுக்கும் திட்டத்திற்கும் என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சே. சரவணன்
Post a Comment