Sep 28, 2017

எங்கப்பாருக்கு குதுர இருந்துச்சு..

ஊருக்குள் வாப்பாடு தெரியாத ஆட்கள் நிறையப் பேர் சுற்றுவார்கள். வகைப்பாடு தெரியாதவன் என்று அர்த்தம். எதை எங்கே செய்ய வேண்டும் அல்லது பேச வேண்டும் என்ற ஒரு நிந்த நிது இருக்க வேண்டாமா? இருக்காது. அப்படியொரு வாப்பாடு தெரியாதவனாக இருந்த காலம் அது. கோடை காலம். வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. எங்களுக்கொரு சேக்காளி இருந்தான். சையத் நவாப் ரஹ்மான். வெகு நாட்களுக்கு ‘நாங்கதாண்டா ஆற்காடு நவாப்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவன். ‘எங்கப்பாருக்கு குதுர இருந்துச்சுடா..அந்தக் கெழவன்தான் தொலைச்சுப் போட்டான்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறான். கெட்ட கெட்ட வார்த்தைகளில் அப்பாரைத் திட்டுவான். என்ன சொன்னாலும் நம்பிக் கொள்ள வேண்டியதுதானே?

சையது படிக்கவில்லை. சைக்கிள் கடையொன்றுக்குச் சென்று வந்தான். எங்கள் அம்மாவுக்கு அவனைக் கண்டாலே ஆகாது. கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடுவான் என்று அவனுடன் சேர்வதற்கான தடா பொடாவெல்லாம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. சிட்டுக்குருவி பிடித்து அதை அவன் வறுத்துக் கொடுப்பான். அதைத் தின்பதற்காகவாவது அவனுடன் கள்ளத் தொடர்பிலிருந்தேன். ஊருக்குள் என்ன கசமுசா நடந்தாலும் அவனுக்குச் செய்தி வந்துவிடும். பிற்காலத்தில் எங்கள் ஊரில் ஒரு கொலை நடந்தது. கணவனை மனைவி ஆள் வைத்துத் தீட்டினாள். அவர்கள் கசமுசா விவகாரத்தை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எங்களுக்கு சையது சொல்லியிருந்தான். அவன் சொன்ன பிறகு நாங்களும் அவனோடு சேர்ந்து புலனறிந்து நோட்டம் பிடித்ததெல்லாம் தனிக்கதை. சென்சார். சென்சார். சென்சார். அவனொரு ஜகஜாலக் கில்லாடி. அவ்வளவுதான்.

‘ஆத்தோரமா ஷூட்டிங் நடக்குது’ என்று அவனுக்குத் தகவல் கிடைக்க இருவருமாக கிளம்பினோம். பவானி ஆற்றங்கரை. ஷுட்டிங் என்றாலே அந்த அறியாப்பருவத்தில் கிளுகிளுப்புதான். பாண்டித்துரை ஷூட்டிங் நடந்த சமயத்தில் சில்க்கைவிட்டு அக்கம்பக்கம் நகர மாட்டோம். நாட்டாமை டீச்சர். இப்படி பெரிய பட்டியல் இருக்கிறது. அவர்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகு வெள்ளைத் துணியைப் போர்த்தியபடி அமர்ந்த் கொள்வார்கள். எங்களது திறந்த வாயில் ஈ புகுந்து வெளியே வரும். அந்தக் காலத்தில் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கச் சென்றால் மதிய உணவையும் உண்டு கொள்ளலாம். கூட்டம் எதுவும் இருக்காது. அம்மா அரசு அலுவலர் என்பதால் காலையிலேயே உணவு தயாரித்து வைத்து விட்டுப் போயிருப்பார். தின்றுவிட்டு பொழுது சாயும் வரைக்கும் தடிமாடாகச் சுற்றிக் கொண்டிருப்பேன். சோத்துக்கு வேண்டி  சாப்பிடவில்லையென்று தெரிந்தால் திட்டு விழும். அதனால் இப்படி படப்பிடிப்புத் தளங்களில் வாய் வைத்து வயிற்றை நிரப்பியிருந்தால் அம்மா வீடு திரும்புவதற்குள்ளாக நான் சாப்பிடுகிற அளவுக்கான உணவை எடுத்து சாக்கடையில் கொட்டிவிடுவேன். அப்படி எடுத்துக் கொட்டிவிட்டு சையதுவும் நானுமாக படப்பிடிப்பைப் பார்க்கச் சென்றிருந்தோம். 

ஒரு விளம்பர ஷூட்டிங். டெல்லி கணேஷ்தான் வயலுக்குள் உரத்தை இறைத்துக் கொண்டிருந்தார். அவரையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்குமளவுக்கு பொறுமையில்லை. நீங்க யூரியா வித்தாலும் சரி யூரினை வித்தாலும் சரி என ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றோம். வீட்டிலாவது சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம். வறப்பசி. வேறு ட்ரவுசரும் கைவசமில்லை. அப்பொழுது வயசுக்கு வந்திருக்கவில்லை என்றாலும் அவிழ்த்து வைத்துவிட்டு இறங்குகிற அளவுக்கு பொடியன்களும் இல்லை. தண்ணீரில் இறங்கினால் பசி அதிகமாகிவிடும்.

‘அட அப்படியே எறங்கு...போறதுக்குள்ள ட்ரவுசர் காஞ்சுடும்’ என்றான். 

‘ஈர ட்ரவுசர் போட்டா வீங்கிப் போய்டும்டா’ என்று மறுத்தேன்.

‘அப்படின்னா கழட்டி ஓரமா வெச்சுட்டு ஆத்துக்குள்ள வா...நா வேணும்ன்னா கண்ணை மூடிக்குறேன்’ என்றான். இவனை நம்ப முடியாது. பார்த்தாலும் பார்த்துவிடுவான். விடவும் மாட்டான். எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்துவிட்டு வீங்கினாலும் பரவாயில்லை என்கிற தீர்ப்புக்கு மனம் வந்து சேர்ந்துவிட்டது. தலையை நனைத்த பிறகு சட்டையை விரித்து மீன் பிடித்து அங்கேயே கல்லில் தேய்த்து - உப்பு மிளகுபொடி, தீப்பெட்டியெல்லாம் எப்பவும் வைத்திருப்பான் - ஈரத்துணியோடு அமர்ந்து கற்களைக் கூட்டி நெருப்பு மூட்டி மொட்டைப்பாறையில் காய வைத்திருந்த மீன் துண்டுகளை வறுத்துத் தின்றுவிட்டுக் கிளம்பும் போது அந்தி சாயத் தொடங்கியிருந்தது. வீங்கிவிட்டது என நினைக்கிறேன்.

பகல் நேரத்தில் எங்கள் வீட்டில் யாருமில்லை. பிரச்சினையில்லை. ஒருநாளும் இல்லாத திருநாளாக சையதுவின் வீட்டில் அவனைத் தேடியிருக்கிறார்கள். ‘எங்கேயாவது சுற்றிவிட்டு வந்துவிடுவான்’ என்று நினைக்கிற வீடுதான் அது. அன்றைய தினம் அவனது அப்பாருக்கு உடல்நிலை சரியில்லை. மூச்சிழுக்கவும் அவர் சையதுவைக் கேட்டிருக்கிறார். நாங்கள் மீன் வறுத்துக் கொண்டிருக்கும் போது அவர் தமது கடைசி மூச்சை இழுத்து விட்டிருப்பார் போலிருக்கிறது. உயிர் பிரிவதற்குள்ளாக அவனைப் பிடித்துவிட வேண்டும் என்று அலைந்திருக்கிறார்கள். போய்ச் சேர்ந்துவிட்டார். நாங்கள் வந்து சேரும் போது அவனது வீட்டில் ஓலை வேய்ந்திருந்தார்கள். ஆடு மேய்க்கிறவர் ஒருவர் பார்த்து ‘உங்கப்பாரு போய்டுச்சு...எங்கடா போன?’ என்று கேட்டார். அவன் எதுவும் சொல்லவில்லை. ஆற்காடு நவாப் இறந்துவிட்டார். 

அவனுக்கு அப்பாரு இறந்ததைவிடவும் வீட்டில் மாட்டிக் கொள்வோமோ என்றுதான் பயம் அதிகமாக இருந்தது. ‘ஆத்துக்குப் போனோம்ன்னு மூச்சுவிட்டுறாதடா..எங்கப்பன் கொன்னே போடுவாரு’ என்றான். நான் பயந்திருந்தேன். அவன் வீட்டுக்குள் நுழையும் போது நான் யார் கண்ணிலும் படாமல் தப்பித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். சாவு வீட்டில் கூட்டம் சேர்ந்திருக்கவில்லை. வீட்டு வாசற்படியை அவன் மிதித்ததுமே அவனது முதுகில் குப்பென்று ஒரு அடியைப் போட்டார் அவனது அப்பா. ஒரே ஓட்டம். தலை தெறிக்க ஓடிவிட்டேன்.

என் கெட்ட நேரம்- எங்கள் வீட்டுச் சாவி சையது ட்ரவுசருக்குள் சிக்கிக் கொண்டது. ‘அந்தக் குல்லாக்காரன் நம்மளையும் சாத்திடுவானே’ என்று நடுக்கம் இல்லாமல் இல்லை. ஆனால் சாவி இல்லாமல் என்ன செய்வது? ஒரு மொத்து வாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 

பம்மியபடியே வெளியே நின்றேன். அவனது அப்பா வெளியிலேயே நின்றிருந்தார். ‘அப்பா செத்துப் போயிருக்காரு..இந்தாளு அழுகாம நின்னுட்டு இருக்காரே’ என்று நினைத்தபடியே பார்த்தேன்.

‘ஏஞ்சாமீ?’ என்று கேட்டார். பரவாயில்லை. அடி விழாது போலிருக்கிறது.

‘ஊட்டுச் சாவி சையது கிட்ட இருக்குதுங்க’ என்றேன்.

‘இரு கண்ணு அந்தத் தெள்ளவாரியைக் கூப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு ‘டேய்...’ என்று சப்தமிட்டார்.

‘ஆத்துக்கு போய்ட்டு வர்றீங்களா?’ என்று அவர் கேட்கவும். அவசரமாக மறுத்து ‘மீன் வறுத்துத் திங்கப் போனோம்’ என்று சொல்லச் சொல்ல சையது வெளியில் வந்தான். அவன் முகத்தைப் பார்த்திருக்க வேண்டுமே. ‘ஆத்துக்குப் போனோம்ன்னு சொல்லவே இல்லையேடா’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே சாவியைக் கையில் திணித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான். உறவினர்கள் வரத் தொடங்கினார்கள். நான் ஒரே ஓட்டம்தான்.

சில நாட்களுக்குப் பிறகு பார்த்த போது ‘உனக்கெல்லாம் கொஞ்சமாச்சும் வாப்பாடு இருக்குதாடா?’ என்றான். அப்பாரு சாகும் போது இவன் பக்கத்தில் இல்லையென்று முதுகு பழுத்ததாகச் சொன்னான். அப்பாருவின் உடல் கிடந்த போதேதான் அடி விழுந்திருக்கிறது. அதன் பிறகு அவனை அவனது அம்மாயி ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். தூத்துக்குடி பக்கம். சையதுவின் குடும்பம் இப்பொழுது எங்கேயிருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை இப்பொழுதும் சையது தூத்துக்குடியில் இருக்கக் கூடும். உண்மையான ஆற்காடு நவாப் குடும்பத்துக்கு சென்னை ராயப்பேட்டையில் பதினேழு ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக அரண்மனையொன்று இருக்கிறது. 

4 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

//அதைத் தின்பதற்காகவாவது அவனுடன் கள்ளத் தொடர்பிலிருந்தேன்//

Anonymous said...

நீங்க சொல்றது அமீர் மஹால் ஆ ?

சேக்காளி said...

//எங்களுக்கொரு சேக்காளி இருந்தான்//
நான் அவனில்லை

சேக்காளி said...

// வீங்கிவிட்டது என நினைக்கிறேன்.//
எத்த தண்டிக்கு????