மண்டவலின்னு ஓராள். தெலுங்குப்ப்பார்ட்டி. தெலுங்கர்கள் கணினி படித்தால் என்ன செய்வார்களோ அதையே செய்து அமெரிக்கா சென்றுவிட்டார். கடந்த முறை நான் அமெரிக்கா சென்றுவிட்டுத் திரும்பிய போது அவரது பெற்றோர்களும் அதே நாளில் இந்தியா திரும்பினார்கள். முதியவர்கள். அவரை வழியனுப்பி வைக்க மண்டவலி வாயெல்லாம் பல்லாக ‘அட நீயும் இதே வண்டிதானா? பத்திரமா இவங்களை ஊருக்குக் கூட்டிட்டு போய்டு’ என்றார். இந்த மாதிரியான வேலைகளை ஒப்படைத்தால் கருமமே கண்ணாக செய்து முடித்துவிடுவேன்.
இலண்டன் வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு வேறொரு விமானம் மாற வேண்டும். இலண்டன் விமான நிலையத்தில் பார்க்க எவ்வளவு இருக்கிறது? அரைக்கால் ட்ரவுசரும் தொழபுழா பனியன்களுமாக- அந்தத் தருணத்தில் மடிக்கணினியைத் திறந்து ‘அன்புமிகு மண்டவெலிக்கு வணக்கம், தாங்கள் அநேகமாக உறங்கிக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்...இப்பொழுது நாங்கள் லண்டனை அடைந்துவிட்டோம். கவலைப்பட வேண்டாம் உமது பெற்றோரை ஹைதராபாத் விமானத்தில் ஏற்றிவிட்டுத்தான் கண் துஞ்சுவேன்’ என்று மின்னஞ்சல் அனுப்பினேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஹைதராபாத்தில் சியர்ரா அட்லாண்டிக் நிறுவனத்தில் பணியாற்றிய போது ஒரு திருமணத்திற்காக சில தெலுங்கு நண்பர்களுடன் ஸ்கார்ப்பியோ வண்டியில் குண்டூருக்குச் சென்று கொண்டிருந்தோம். முரளி என்றொருவரும் எங்களுடன் இருந்தார். ஆள் ஆஜானுபாகுவாக இருப்பார். ஒடிசாவுக்கும் ஆந்திராவுக்கும் எல்லையில் உள்ள ஊரைச் சேர்ந்தவர். மிலிட்டரிக்காரர்கள் அணியும் பனியன் போன்ற ஒன்றை அணிந்து கொண்டு முன் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தார். இரவு பதினோரு மணி இருக்கும். ஒரு வனாந்திரத்தில் வாகனம் சென்று கொண்டிருக்கிறது. அப்பொழுது ஜிபிஎஸ் அவ்வளவாக எளிதாகியிருக்கவில்லை. சாலை பிரிகிற இடத்தில் குழப்பம் வந்துவிட்டது. வலது பக்கம் திரும்ப வேண்டுமா இடது பக்கம் திரும்ப வேண்டுமா என்று யாருக்கும் தெரியவில்லை. பத்து நிமிடங்கள் நின்று பார்க்கலாம் என்றும் யாரேனும் வந்தால் தடம் கேட்டுக் கொண்டு பிறகு கிளம்பலாம் என்று வண்டியை ஓரங்கட்டியிருந்தோம்.
அந்தச் சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. வண்டியை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் யாரோ பேசுகிற சத்தம் கேட்டது. நடந்து வருகிறார்கள் என்று தோன்றியது. ஆனால் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். மூன்று பேர்கள். ஆளுக்கொரு மிதிவண்டி. அவர்கள் அருகில் வரவும் வண்டியின் விளக்கை எரியவிட்டு கதவைத் திறந்து முரளி அவர்களிடம் செல்வதற்காக இறங்கியதுதான் தாமதம். மூன்று பேரும் கதறத் தொடங்கிவிட்டார்கள். ஒருவர் சைக்கிளைக் கீழே போட்டுவிட்டு தலை தெறிக்க ஓட இன்னொருவர் மிதிவண்டியைத் திருப்பிக் கொண்டு பதற இன்னொருவர் மிதிவண்டியிலிருந்து இறங்கி மண்டியிட்டுவிட்டார். வண்டிக்குள்ளிருந்த எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்களும் இறங்க மண்டியிட்டிருந்தவர் கிட்டத்தட்ட செத்துப் பிழைத்துவிட்டார்.
எங்களை நக்சலைட்டுகள் என்று நினைத்துக் கொண்டார்களாம். ‘இது நக்சலைட் ஏரியாங்க..இவுரு பனியன் வேற அந்தக் கலருல போட்டிருந்தாரு..திடீர்னு லைட்டை போட்டீங்களா..அதான் பயந்துட்டோம்’ என்றார். அவர் கொஞ்சம் முதியவர். மற்றவர்கள் இளவட்டம் போலிருக்கிறது. ஓடிவிட்டார்கள். இவர் மண்டியிட்டுவிட்டார். நாங்கள் வழி கேட்பதற்காக நின்றிருந்தோம் என்று சொல்லிப் புரிய வைத்த போதும் அவர் நடுங்கிக் கொண்டேயிருந்தார். அந்த இரவிலும் அவருக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. அதுவரைக்கும் தைரியமாக இருந்த எங்களுக்கு அந்தக் கணத்திலிருந்து வியர்க்கத் தொடங்கியது. ‘யோவ் இது நக்சலைட் ஏரியாவாமா...கிளம்புங்கய்யா’ என்று கிளம்பி மணிக்கு 120 கிமீ வேகத்தில் வண்டியை விரட்டினோம்.
இதே போன்றதொரு சம்பவத்தை எங்கள் அப்பாரு விவரித்திருக்கிறார். அம்மாவுக்கு மாமா முறை- அப்பாரு. அவர் சத்தியமங்கலம் பக்கத்தில் ஒரு கிராமம். பல வருடங்களுக்கு முன்பாக தாளவாடியிலிருந்து குதிரையை வாங்கிக் கொண்டு நான்கைந்து பேர் கூட்டாக வந்த போது- அந்தக் காலங்களில் பண்ணாரி மைசூரு சாலையில் இந்தளவுக்கு போக்குவரத்து இல்லை- அந்தி சாய்ந்த பிறகும் பயணம் செய்தது தவறுதான். எப்படியும் விடிவதற்குள்ளாக ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று வந்து கொண்டிருந்த போது வீரப்பனும் அவரது ஆட்களும் குறுக்காட்டியிருக்கிறார்கள். துப்பாக்கி வைத்திருந்தார்களாம். குதிரையைப் பறித்துக் கொள்வார்கள் என்றுதான் பயந்தார்களாம். ஆனால் இவர்கள் பயந்தபடி இல்லாமல் ஊர் விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டும் அப்பொழுது இவர்கள் வழியில் உண்பதற்காகக் கட்டிக் கொண்டு வந்த கட்டுச்சோற்றையும் கையில் வைத்திருந்த பணத்தையும் வாங்கிக் கொண்டு துரத்திவிட்டிருக்கிறார்கள். ‘செத்துப் பொழச்சேன்’ என்றார் அப்பாரு.
இந்தக் கதையை வண்டியிலிருந்தவர்களிடம் சொல்லி ‘நம்மகிட்ட ஸ்கார்ப்பியோ வண்டியை நக்சலைட்டுகள் பிடுங்கிட்டா என்ன பண்ணுறது?’ என்றேன். வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த உரிமையாளரின் முகம் போன போக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.
வீரப்பனைப் பார்த்து செத்துப் பிழைத்த அப்பாரு போலத்தான் ஆந்திர மிதிவண்டிக்காரரும் செத்துப் பிழைத்திருந்தார். வீரப்பனையும் நக்சலைட்டையும் பார்க்காத நாங்களும் அப்படித்தான் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தோம்.
அந்தத் திருமணத்திலிருந்தே மண்டவலியைத் தெரியும். என்னுடைய மேலாளரும் அவரும் ஒன்றாக வேலை செய்திருந்தார்கள். கைகுலுக்கிப் பேசிக் கொண்டோம். இப்பொழுது மண்டவலி அமெரிக்கா சென்று ஒரு நிறுவனத்தில் வேலையில் இருக்க, அதே நிறுவனத்தில் நானும் ஒப்பந்தப் பணியாளாராகப் பணிக்குச் சேர, அவரது பெற்றோரை இந்தியா அழைத்து வந்து சேர்த்து, போதாக்குறைக்கு அவர் மேலாளராக இருக்கும் அதே ப்ராஜக்டில் என்னையும் சேர்த்துவிட்டார்கள். விதி விளையாடுகிறது. வடிவேலு கணக்காக ‘மல நல்லாருக்கியா மல’ என்றுதான் பேசத் தொடங்கினேன். அர்ஜூன் கணக்காக ஒரு சுரத்தேயில்லாமல் ‘வேலையைப் பாரு’ என்று மண்டவலி சொல்லிவிட்டது. முந்தாநாள் கடித்துக் குதறிவிட்டது.
பிரேசில்காரர்கள் பிரச்சினையே இல்லை. நன்றாகக் கடலை போட முடிகிறது. ‘நல்ல பிரேசில் படங்களாகச் சொல்லுங்க’ என்று இப்பொழுது அவர்களிடம்தான் கேட்கிறேன். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் இருக்கிறார்களே? சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ‘டேய் நீ யாருன்னு எனக்குத் தெரியும்..நான் யாருன்னு உனக்குத் தெரியும்’ என்கிற கதைதான். நாம் என்ன டகால்ட்டிகள் செய்வோம் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் எப்படிப்பட்ட தில்லாலங்கடிகள் என்று நமக்குத் தெரியும். காதில் ரத்தம் வராத குறைதான். வாரத்திற்கு நான்கு முறை மீட்டிங் வைக்கிறார்கள். அதுவும் மணிக்கணக்கில். நள்ளிரவு வரை நீள்கிறது. போதாக்குறைக்கு மின்னஞ்சலில் வேறு அனுப்பச் சொல்கிறார்கள். நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்? அப்படியும் அங்குமிங்குமாகக் கோட்டைவிட்டுவிட்டேன்.
அதனால்தான் என்னைக் கீழே தள்ளி கைகால்களைப் பிடித்துக் கொண்டு கொரவலியைப் பிடித்து ஒரே கடி. அவருடைய பிரச்சினைகள் அவருக்கு.
ரோஷம் வந்துவிட்டது. முந்தாநாள் அதிகாலை மூன்று மணியாகிவிட்டது- ஓட்டைகளையெல்லாம் அடைத்து முடிக்க. ‘வாங்குகிற காசுக்கு வேலை செய்யணும்ல’ என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படியில்லை. பொதுவாகவே ஐடியைப் பொறுத்த வரைக்கும் ரிப்போர்ட்தான் பேசும். ‘இன்னைக்கு இதைச் செஞ்சேன்..அதைச் செஞ்சேன்’ என்று அளந்து கொண்டேயிருந்தால் பிரச்சினையில்லை. அதே மின்னஞ்சல்களை வைத்துக் கொண்டு ‘இன்னைக்கு இதை இவன் செஞ்சான்..அவன் அதைச் செஞ்சான்..இவர்களையெல்லாம் நான் ஃபாலோ செஞ்சேன்’ என்று நமக்கு மேலாக இருப்பவர்கள் அவர்களுக்கு மேலாக இருப்பவர்களிடம் சொல்வார்கள். ஒரு படிநிலை இது.
நான் மட்டும் கடி வாங்குவதில்லை. கடி வாங்க ஆளாளுக்கு ஒரு காரணம். அமெரிக்காவில் இருக்கும் இன்னொருவர் அழைத்தார். ‘நீங்க வேலை செய்யறீங்களோ இல்லையோ..வாய் நிறைய வார்த்தையை வெச்சுட்டு அலங்காரம் செஞ்சு செஞ்சு வெளிய அனுப்பிட்டே இருங்க..உங்களை யாருமே கேட்க மாட்டாங்க’ என்றார். அது சரிதான். வார்த்தைகளுக்கு அலங்காரம் செய்வதில்தான் பாதிப்பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். உலகம் அப்படியானதுதானே!
7 எதிர் சப்தங்கள்:
மண்டவெலி ...மண்டவலி..// Ha ha
Nowadays all indutrial sectors are like that. So many Mandavalis are there.
சரி தான்
// அரைக்கால் ட்ரவுசரும் தொழபுழா பனியன்களுமாக-//
இதையெல்லாம் நேரா பாப்பீங்களா? இல்ல ஒண்ணரை கண்ணால பாப்பீங்களா?
வேலை பாதி, வாய் அலங்காரம் பாதி--இது தான் எந்த துறையிலும். ஆனால் ஐ.டி.யில் வேலை 25% மற்றும் அளப்பு/அலங்காரம் 75%.
I paid for 2 subscription to chinna nathi. IOS personally visited their office and paid it. They look promising but I got only two issues.
I have to admit the content was really good.
மண்டைவலிக்கு தமிழ் படிக்க தெரியாதுதானே ??
Post a Comment