Sep 29, 2017

கமல் கமலாகவே வரட்டும்

நந்தி வழிபாடு தமிழகத்தில் பழங்காலத்தில் இருக்கவில்லையாம். சமணர்களை தாங்கள் அடக்கிவிட்டதற்கான அடையாளமாகத்தான் - சமணத்தில் ரிஷப கணம், சிம்மகணம் என்றெல்லாம் உண்டு- லிங்கத்தின் முன்பாக ரிஷபம் அடங்கியிருக்கிறது என்பதான குறியீடாக நந்தி வழிபாடு தொடங்கியது என்று ஒரு வரலாற்றாய்வாளர் சொன்னார். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. காவி என்பது கருப்புக்குள் அடக்கம் என்று நடிகர்- இன்றைய தினம் வரைக்கும் நடிகர்தானே?- கமல்ஹாசன் பேசிய போது இப்படித்தான் அர்த்தப்படுத்திக் கொண்டேன். அவர்தான் தெளிவாகச் சொல்லமாட்டார் அல்லவா? நாம்தான் எதையாவது புரிந்து கொள்ள வேண்டும். சமீபகாலம் வரைக்கும் தாம் தெளிவாக இருந்தபடியே அடுத்தவர்களைக் குழப்புகிறார் என்பதுதான் அனுமானமாக இருந்தது. ஆனால் அவரே பெருங்குழப்பத்தில்தான் இருக்கிறார்.

கமல் அரசியலுக்கு வருவதில் தவறு எதுவுமில்லை. தனிமனிதர்களால் இந்தச் சமூகத்தில் எந்தவிதமான அரசியல் அல்லது சமூக மாற்றத்தையும் உருவாக்கிவிட முடியாது. மாற்றம் வேண்டுமென விரும்பினால் அவன் இயக்கமாக மாற வேண்டும். ஒரு சித்தாந்தம் அல்லது தனிமனிதனை உச்சியில் நிறுத்தி அந்த மையத்தைச் சுற்றிலும் ஒரு கூட்டத்தை உருவாக்க வேண்டும். அந்தக் கூட்டம் விரிவடையும் போது மட்டுமே மாற்றங்கள் சாத்தியமாகும். தனிமனிதர்களாகச் செயல்பட்டால் சலனங்களை வேண்டுமானால் உருவாக்கலாம்- விமர்சனமோ பாராட்டோ வரும்போது அதையும் தனியொருவனாகவே ஏற்றுக் கொள்ளவும் கழுத்தைக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். அதுவே இயக்கம் என மாறும் போது அவனது சிந்தாந்தத்தையும் தனிமனித பிம்பத்தையும் காப்பாற்றுவதற்கு ஒரு கூட்டம் துணையாக இருக்கும். கீழ்மட்ட எதிரிகளுக்கு எதிராகக் கத்தியைச் சுழற்றுகிற வேலையை கூட்டம் பார்த்துக் கொள்ளும். தமக்கு எதிரான பெரும் தடைக்கற்களை உடைக்கிற வேலையைத் தலைவன் செய்தபடியே அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டேயிருக்கலாம். எந்தவொரு வரலாறுமே இப்படித்தான் உருவாகியிருக்கிறது. 

ரசிகர் மன்றமாக இருக்கும் வரைக்கும் தனிமனித துதியைச் செய்து கொண்டிருக்கிற கூட்டம் அது. யாரும் அதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. அதுவே அரசியல் இயக்கமாக மாறும் போது தமக்கான கொள்கையையும் தெளிவாக முன்வைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. கமல் அரசியலுக்கு வரப் போகிறார் என்பதற்குப் பிறகான நேர்காணல் ஒன்றில் தான் ‘நாயகன்’ பட வெற்றி விழாவுக்காக தமிழகத்தில் பதினெட்டு ஊர்களுக்குச் சென்றதாகப் பேசியிருந்தார். அரசியலுக்கு வந்த பிறகு மீண்டும் சுற்றுப்பயணம் இருக்கும் என்பதான பேச்சு அது. ஆச்சரியமாக இருக்கிறது. 1987 ஆம் வருடம் நாயகன் படம் வெளியானது. முப்பது வருடங்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதையும் சுற்றிப் பார்த்ததை வைத்துக் கொண்டுதான் தமது கட்சிக்கான கொள்கைகளை வழிவகுக்கப் போகிறாரா என்ன? அந்த அர்த்தத்தில்தான் புரிந்து கொண்டேன். இரண்டாயிரத்தில் இருந்த தமிழகம் இன்றில்லை. வெறும் பதினேழு ஆண்டுகளில் எவ்வளவோ மாறியிருக்கின்றன. தூர்தர்ஷன் கூட முழுமையாக பரவியிராத முப்பதாண்டுகளுக்கு முன்பான தமிழகத்தை தாம் பார்த்ததைப் பெருமையாகச் சொல்லுகிற மனிதருக்கு இந்த நிலம் குறித்தும் அதன் மக்கள் குறித்தும் என்னவிதமான புரிதல் இருக்கும் என்று அயற்சியாக இருக்கிறது.

தமிழகத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. சாதி அரசியலில் தொடங்கி வரிசையாக அடுக்கலாம். தலைவனாக உருவெடுக்கிறவர்களுக்கு ஒவ்வொன்று குறித்தும் குறைந்தபட்சமான புரிதலும் நிலைப்பாடும் இருக்க வேண்டும். இதெல்லாம் நம்முடைய எதிர்பார்ப்புதான். ஆனால் அது அரசியலுக்கு அத்தியாவசியமானது இல்லை. அண்ணாயிசம், காந்தியிசம், சோஷலிசம், கம்யூனிசம் என எல்லாவற்றையும் சேர்த்துத் தக்காளி ரசமாக வைத்த எம்ஜியாரை நம் தமிழகம் ஏற்றுக் கொள்ளவில்லையா? ‘பசி’ ‘ஏழை’ என்கிற சொற்களை தமது சித்தாந்தத்தின் முதுகெலும்பாக எம்ஜிஆர் காட்டினார். அதையே அச்சுபிசகாமல் விஜயகாந்த் பின்பற்றினார். அவரது கெட்ட நேரம், தமிழகத்தின் நல்ல நேரம்- முடங்கிப் போனார். கமல்ஹாசனும் கிட்டத்தட்ட புளிரசம் கான்செப்ட்தான். காவியுடன் கூட்டணி, கருப்பு அணிந்த நாத்திகன், இடதுசாரி பார்வையாளன், முதலாளித்துவத்தின் நண்பன் என ஒன்றுக்கொன்று முரணான எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு சித்தாந்தத்தை உருவாக்கக் கூடும். அதன் முதுகெலும்பாக ‘ஊழல்’ என்ற ஒற்றைச் சொல்லை முன்னிறுத்துவார் போலிருக்கிறது.

கமல் அரசியலுக்குள் நுழைந்தால் அது நிச்சயமாக திமுகவுக்கான பாதிப்புகளை உருவாக்கும். கமல் ஆட்சியமைக்கிறாரோ இல்லையோ- கடந்த முறை மக்கள் நலக் கூட்டணி திமுகவுக்குச் செய்த சேதாரத்தை கமல் நிச்சயமாக உருவாக்குவார். ‘பழம் பழுத்து தம் மடியில் விழும்’ என்று நம்பிக் கொண்டிருக்கிற ஸ்டாலினின் கனவு சிதையவும் வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கு மத்திய அரசாங்கம் தினகரன், ஸ்டாலின் என எல்லோருக்கும் ஏதாவதொரு வகையில் செக் வைத்திருக்கிறது. ஆனால் கமலுக்கு இதுவரை அழுத்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றைக்கு தமிழக அரசியலில் உருவாகியிருக்கும் வெற்றிடம் நிறைய நாவுகளை தொங்கச் செய்திருக்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் வலுவாகக் கோலோச்சிக் கொண்டிருந்த போது வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்பொழுது நாக்கைச் சுழற்றுகிறார்கள். அதிகாரம் என்பது அட்டகாசமான போதை. அதை ருசிபார்க்கும் ஆசை ரஜினிக்கும் இருக்கிறது. கமலுக்கும் இருக்கிறது. யாராக இருப்பினும் சுயமாக அரசியலுக்கு வந்தால் மனமார வரவேற்கலாம். களம் காணட்டும். போராடட்டும். மக்கள் ஏற்றுக் கொண்டால் அதிகார பீடமேறட்டும். ஆனால் எந்தவொரு அரசியல்வாதியும் இன்னொருவருக்கான ஸ்லீப்பர் செல்லாக களத்தில் காலடி வைப்பார்களேயெனில் முழுமையாக எதிர்க்க வேண்டும். தமது கொள்கைகளையும் அபிலாஷைகளையும் தம்மால் ஊடுருவச் செய்ய முடியாத போது இன்னொரு முகமூடிகளைத் தேடிக் கொண்டிருக்கிறவர்கள் ஸ்லீப்பர் செல்களைக் கண்டறிந்து மெல்ல உள்ளே திணிக்கிறார்கள். கமல் அப்படியானதொரு ஆளாக இருக்கக் கூடாது என பிரியப்படுகிறேன். ‘நீ ஆசைப்பட்டால் அந்தக் கட்சியில் சேர்ந்து முதலமைச்சர் ஆகு’ என்று சொல்ல வேண்டும். தனிக்கட்சி, தனிக்கொடி என்று தொடங்கி கூட்டத்தைச் சேர்த்து இன்னொருவன் அரியணை ஏறுவதற்கு முதுகைக் கொடுத்தால் அது அயோக்கியத்தனம். 

அரசியல் ஒன்றும் கேக் இல்லை. வெட்டி எடுத்து வாயில் போட்டுக் கொள்ளவெல்லாம் முடியாது. ‘அது என் பர்சனல்’ என்று சினிமாவில் இருக்கும் வரைக்கும் சொல்லலாம். அடுத்தவனுக்கு விழும் வாக்குகளைப் பெற முயற்சித்தால் அவன் நம்முடைய ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கி அந்தரங்கத்தில் வெளிச்சம் அடிப்பான். கிழித்துத் தொங்கவிடுவார்கள். இன்னமும் எவ்வளவோ இருக்கிறது. 

எல்லாவற்றையும் தாண்டி ஒருவேளை அரசியலுக்கு வருவதாக இருப்பின் கமல் கமலாகவே வரட்டும். எந்தவொரு அரசியல் சார்புமில்லாமலேயே அவரால் தமக்கான களத்தை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் பயணம் செய்து இந்த மண்ணின் பிரச்சினைகளின் நுனியையாவது பார்த்துவிட்டுக் கொள்கைகளையும் கட்சியையும் அறிவித்தால் நன்றாக இருக்கும். 

கேள்வி-பதில்கள்

டி.எஸ். ஐயர் டி.எஸ்.ஐயர் என்று ஒரு பார்ப்பன பயங்கரவாத ஆரிய வந்தேறி, ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி காரரை இந்தப் புகழ் புகழ்கிறீர்களே... அவர்கள் எல்லோருமே மற்றவர்களை அடிமைபடுத்தத் தானே நினைத்தார்கள்? வெறுமென கொவிலில் மணியடித்து சம்பாதித்த காசைத்தானே கொடுத்தார்கள்? போயும்போய் புகழ்வதற்கு அவர்தானா கிடைத்தார்?

ஒருவரை விமர்சனம் செய்ய வேண்டுமானால் குறைந்தபட்சமான தகவல்களையாவது தேடி எடுத்துக் கொள்வது நியாயமானதாக இருக்கும். டி.எஸ்.அய்யரையா புகழ்ந்து எழுதியிருக்கிறேன்? அவரது மகன் ஜி.எஸ்.லட்சுமண அய்யரைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். லட்சுமண அய்யரைத் தெரிந்து கொள்ள ஓயாமாரி என்கிற இந்த சலனப்படத்தையாவது பார்த்துவிடுங்கள். பிறகும் இதே கேள்வி இருந்தால் பேசலாம். அய்யர் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று முத்திரை குத்துவதுதைப் போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது.


கோபியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டத்தில் மிக சரியாக பேசினீர்கள். கொஞ்சம் உணச்சிவசப்பட்டு பேசிவிட்டோமோ என்று பிறகு யோசித்தீர்களா?

எந்தக் கூட்டத்தில் பேசினாலும் அப்படித்தான் தோன்றுகிறது.

மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தபோது உங்கள் எண்ண ஓட்டம் எப்படியிருந்தது? நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

தோற்றுவிடுவார் என்று எதிர்பார்த்தேன். இவ்வளவு மோசமாக தோற்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இத்தகைய மனிதர்களை பொதுவாக ஊடகங்கள் ஏற்றிவிட்டுவிடுகின்றன. இந்தியத் தேர்தல் களத்தின் அடிப்படையே வேறு. ஊடகங்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லை. இன்றைய சூழலில் அவை இரண்டும் வெவ்வேறு உலகங்கள். ஆனால் ஊடகங்களில் விவாதிக்கப்படுவதை நம்பி தேர்தல் நுணுக்கத்தின் அடிநாதமே தெரியாமல் போட்டியிட்டுத் தோற்கிறார்கள். 

நீங்க எப்போதும் கோபிசெட்டிபாளையம், கரட்டிய பத்தி மட்டும் பேசுனா எப்படி தமிழ்நாடு முதலமைச்சர் ஆவது?

இனிமேலாவது நியூயார்க், வாஷிங்கடன் பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும்.

எப்போதும் அரசு பேருந்து, சாதாரண மெஸ்சில் உணவு, பார்த்து செலவு செய்வது. காசிலேயே கவனமாயிருப்பது என்ன உளவியல்?

அடிப்படையிலேயே நான் கஞ்சத்தனம் உடையவன். அப்பா வாங்கிக் கொடுத்திருந்த மிதிவண்டியில் ‘ப்ரேக்’ கட்டை தேய்ந்துவிடும் என்பதற்காக காலை உரசி உரசி நிறுத்திக் கொண்டிருந்தவன். செருப்பு தேயாதா என்று ஒரு கேள்வி தோன்றிய பிறகுதான் என் அறிவுக்கண் திறந்தது என்றால் முடிவு செய்து கொள்ளலாம். இப்பொழுதும் இதைத் தொடர்வதற்குக் காரணம் அதே குணமாகத்தான் இருக்க வேண்டும். பிறரின் பணம் நம்மிடமிருக்கும் போது இந்தக் கவனம் இன்னமும் அதிகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 

சமூக வலைத்தளங்களின் பரவலான பயன்பாட்டால் செய்தி (அச்சு) ஊடகத்திற்கான முக்கியத்துவம் குறைந்துள்ளதாக நினைக்கிறீர்களா?

சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் பற்றி கொண்டாடித் தீர்ப்பார்கள். பங்களாப்புதூர் டீக்கடையில் அதைப் பற்றி பேசுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? அடுத்த நாள் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமாக இருக்கும் போது சங்ககிரி சலூனில் அதைப் பாடுகிறார்கள் என்று கருதுகிறீர்களா? நாம் சமூக வலைத்தளத்திற்குள் இருப்பதால் மொத்த உலகமும் இதற்குள்ளேயே இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோம். அப்படி இல்லை. ஏழு கோடி பேர் தமிழக மக்கள் தொகை என்றால் இணையதளத்தைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் 10 என்ற அளவில் கூட இருக்குமா என்பது சந்தேகம். அச்சு ஊடகத்திற்கான தேவையும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் தரம்தான் சறுக்கிக் கொண்டேயிருக்கிறது.

உங்களுக்கு தெரிந்தவரையில் "இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது" உண்மையிலேயே திறமையின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறதா ? இல்லை இதிலும் வழக்கமான அரசியல்தானா?

அரசியலையும் இலக்கிய விருதுகளையும் பிரித்துப்பார்க்கிற அளவுக்கு நாம் ஒன்றும் பக்குவப்பட்ட சமூகமாக இல்லை. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

சமீபத்தில் ஒருசில பேச்சாளர்களின் பேச்சை காணொளியில் பார்த்தேன் பொதுவாக அவர்களின் கோர்வையான பேச்சின் சாரம்சம் என்னவென்றால் சொந்த ஊரைவிட்டு வெளியூர் வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்கள் தன் வாழ்க்கையையே இழக்கிறார்கள் என்று எதிர்மறையாக பேசுகிறார்கள் (இவர்கள் பேசுவதும் வெளியூர் மேடைதான்) ஆனால் இவர்கள் அனைவரும் கல்லூரியில் பேராசிரியராகவோ அல்லது அரசுப்பள்ளியில் ஆசிரியராகவும் இருக்கின்ற காரணத்தால் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. எல்லோருக்கும் வாழ்கை ஒன்றுபோல் அமைவதில்லையே இந்த மாதிரி பேச்சுக்களை பார்க்கநேரிடும்போது என்ன நினைப்பீர்கள்?

மனிதர்களில் இரண்டு வகைகள்தான் பிரதானம். தாம் நன்றாக இருப்பதாகக் கருதிக் கொண்டு அடுத்தவர்களைப் பார்த்து ‘அய்யோ பாவம்’ என்பது முதல் வகை. அடுத்தவர்கள் நன்றாக இருப்பதாகக் கருதிக் கொண்டு தமக்குத் தாமே ‘அய்யோ பாவம்’ சொல்லிக் கொள்வது இரண்டாம் வகை. கொடுமை என்னவென்றால் இந்த இரண்டு வகையுமே முழுமையான உண்மை கிடையாது. இத்தகைய பேச்சுக்களைக் கேட்பதற்குப் பதிலாக ‘Mumbai talks about sex' என்று யூடியூப்பில் தேடினால் சுவாரசியமான வீடியோக்கள் கிடைக்கும். 

Sarahah கேள்வி பதில்கள். 

Sep 28, 2017

எங்கப்பாருக்கு குதுர இருந்துச்சு..

ஊருக்குள் வாப்பாடு தெரியாத ஆட்கள் நிறையப் பேர் சுற்றுவார்கள். வகைப்பாடு தெரியாதவன் என்று அர்த்தம். எதை எங்கே செய்ய வேண்டும் அல்லது பேச வேண்டும் என்ற ஒரு நிந்த நிது இருக்க வேண்டாமா? இருக்காது. அப்படியொரு வாப்பாடு தெரியாதவனாக இருந்த காலம் அது. கோடை காலம். வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. எங்களுக்கொரு சேக்காளி இருந்தான். சையத் நவாப் ரஹ்மான். வெகு நாட்களுக்கு ‘நாங்கதாண்டா ஆற்காடு நவாப்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவன். ‘எங்கப்பாருக்கு குதுர இருந்துச்சுடா..அந்தக் கெழவன்தான் தொலைச்சுப் போட்டான்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறான். கெட்ட கெட்ட வார்த்தைகளில் அப்பாரைத் திட்டுவான். என்ன சொன்னாலும் நம்பிக் கொள்ள வேண்டியதுதானே?

சையது படிக்கவில்லை. சைக்கிள் கடையொன்றுக்குச் சென்று வந்தான். எங்கள் அம்மாவுக்கு அவனைக் கண்டாலே ஆகாது. கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடுவான் என்று அவனுடன் சேர்வதற்கான தடா பொடாவெல்லாம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. சிட்டுக்குருவி பிடித்து அதை அவன் வறுத்துக் கொடுப்பான். அதைத் தின்பதற்காகவாவது அவனுடன் கள்ளத் தொடர்பிலிருந்தேன். ஊருக்குள் என்ன கசமுசா நடந்தாலும் அவனுக்குச் செய்தி வந்துவிடும். பிற்காலத்தில் எங்கள் ஊரில் ஒரு கொலை நடந்தது. கணவனை மனைவி ஆள் வைத்துத் தீட்டினாள். அவர்கள் கசமுசா விவகாரத்தை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எங்களுக்கு சையது சொல்லியிருந்தான். அவன் சொன்ன பிறகு நாங்களும் அவனோடு சேர்ந்து புலனறிந்து நோட்டம் பிடித்ததெல்லாம் தனிக்கதை. சென்சார். சென்சார். சென்சார். அவனொரு ஜகஜாலக் கில்லாடி. அவ்வளவுதான்.

‘ஆத்தோரமா ஷூட்டிங் நடக்குது’ என்று அவனுக்குத் தகவல் கிடைக்க இருவருமாக கிளம்பினோம். பவானி ஆற்றங்கரை. ஷுட்டிங் என்றாலே அந்த அறியாப்பருவத்தில் கிளுகிளுப்புதான். பாண்டித்துரை ஷூட்டிங் நடந்த சமயத்தில் சில்க்கைவிட்டு அக்கம்பக்கம் நகர மாட்டோம். நாட்டாமை டீச்சர். இப்படி பெரிய பட்டியல் இருக்கிறது. அவர்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகு வெள்ளைத் துணியைப் போர்த்தியபடி அமர்ந்த் கொள்வார்கள். எங்களது திறந்த வாயில் ஈ புகுந்து வெளியே வரும். அந்தக் காலத்தில் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கச் சென்றால் மதிய உணவையும் உண்டு கொள்ளலாம். கூட்டம் எதுவும் இருக்காது. அம்மா அரசு அலுவலர் என்பதால் காலையிலேயே உணவு தயாரித்து வைத்து விட்டுப் போயிருப்பார். தின்றுவிட்டு பொழுது சாயும் வரைக்கும் தடிமாடாகச் சுற்றிக் கொண்டிருப்பேன். சோத்துக்கு வேண்டி  சாப்பிடவில்லையென்று தெரிந்தால் திட்டு விழும். அதனால் இப்படி படப்பிடிப்புத் தளங்களில் வாய் வைத்து வயிற்றை நிரப்பியிருந்தால் அம்மா வீடு திரும்புவதற்குள்ளாக நான் சாப்பிடுகிற அளவுக்கான உணவை எடுத்து சாக்கடையில் கொட்டிவிடுவேன். அப்படி எடுத்துக் கொட்டிவிட்டு சையதுவும் நானுமாக படப்பிடிப்பைப் பார்க்கச் சென்றிருந்தோம். 

ஒரு விளம்பர ஷூட்டிங். டெல்லி கணேஷ்தான் வயலுக்குள் உரத்தை இறைத்துக் கொண்டிருந்தார். அவரையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்குமளவுக்கு பொறுமையில்லை. நீங்க யூரியா வித்தாலும் சரி யூரினை வித்தாலும் சரி என ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றோம். வீட்டிலாவது சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம். வறப்பசி. வேறு ட்ரவுசரும் கைவசமில்லை. அப்பொழுது வயசுக்கு வந்திருக்கவில்லை என்றாலும் அவிழ்த்து வைத்துவிட்டு இறங்குகிற அளவுக்கு பொடியன்களும் இல்லை. தண்ணீரில் இறங்கினால் பசி அதிகமாகிவிடும்.

‘அட அப்படியே எறங்கு...போறதுக்குள்ள ட்ரவுசர் காஞ்சுடும்’ என்றான். 

‘ஈர ட்ரவுசர் போட்டா வீங்கிப் போய்டும்டா’ என்று மறுத்தேன்.

‘அப்படின்னா கழட்டி ஓரமா வெச்சுட்டு ஆத்துக்குள்ள வா...நா வேணும்ன்னா கண்ணை மூடிக்குறேன்’ என்றான். இவனை நம்ப முடியாது. பார்த்தாலும் பார்த்துவிடுவான். விடவும் மாட்டான். எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்துவிட்டு வீங்கினாலும் பரவாயில்லை என்கிற தீர்ப்புக்கு மனம் வந்து சேர்ந்துவிட்டது. தலையை நனைத்த பிறகு சட்டையை விரித்து மீன் பிடித்து அங்கேயே கல்லில் தேய்த்து - உப்பு மிளகுபொடி, தீப்பெட்டியெல்லாம் எப்பவும் வைத்திருப்பான் - ஈரத்துணியோடு அமர்ந்து கற்களைக் கூட்டி நெருப்பு மூட்டி மொட்டைப்பாறையில் காய வைத்திருந்த மீன் துண்டுகளை வறுத்துத் தின்றுவிட்டுக் கிளம்பும் போது அந்தி சாயத் தொடங்கியிருந்தது. வீங்கிவிட்டது என நினைக்கிறேன்.

பகல் நேரத்தில் எங்கள் வீட்டில் யாருமில்லை. பிரச்சினையில்லை. ஒருநாளும் இல்லாத திருநாளாக சையதுவின் வீட்டில் அவனைத் தேடியிருக்கிறார்கள். ‘எங்கேயாவது சுற்றிவிட்டு வந்துவிடுவான்’ என்று நினைக்கிற வீடுதான் அது. அன்றைய தினம் அவனது அப்பாருக்கு உடல்நிலை சரியில்லை. மூச்சிழுக்கவும் அவர் சையதுவைக் கேட்டிருக்கிறார். நாங்கள் மீன் வறுத்துக் கொண்டிருக்கும் போது அவர் தமது கடைசி மூச்சை இழுத்து விட்டிருப்பார் போலிருக்கிறது. உயிர் பிரிவதற்குள்ளாக அவனைப் பிடித்துவிட வேண்டும் என்று அலைந்திருக்கிறார்கள். போய்ச் சேர்ந்துவிட்டார். நாங்கள் வந்து சேரும் போது அவனது வீட்டில் ஓலை வேய்ந்திருந்தார்கள். ஆடு மேய்க்கிறவர் ஒருவர் பார்த்து ‘உங்கப்பாரு போய்டுச்சு...எங்கடா போன?’ என்று கேட்டார். அவன் எதுவும் சொல்லவில்லை. ஆற்காடு நவாப் இறந்துவிட்டார். 

அவனுக்கு அப்பாரு இறந்ததைவிடவும் வீட்டில் மாட்டிக் கொள்வோமோ என்றுதான் பயம் அதிகமாக இருந்தது. ‘ஆத்துக்குப் போனோம்ன்னு மூச்சுவிட்டுறாதடா..எங்கப்பன் கொன்னே போடுவாரு’ என்றான். நான் பயந்திருந்தேன். அவன் வீட்டுக்குள் நுழையும் போது நான் யார் கண்ணிலும் படாமல் தப்பித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். சாவு வீட்டில் கூட்டம் சேர்ந்திருக்கவில்லை. வீட்டு வாசற்படியை அவன் மிதித்ததுமே அவனது முதுகில் குப்பென்று ஒரு அடியைப் போட்டார் அவனது அப்பா. ஒரே ஓட்டம். தலை தெறிக்க ஓடிவிட்டேன்.

என் கெட்ட நேரம்- எங்கள் வீட்டுச் சாவி சையது ட்ரவுசருக்குள் சிக்கிக் கொண்டது. ‘அந்தக் குல்லாக்காரன் நம்மளையும் சாத்திடுவானே’ என்று நடுக்கம் இல்லாமல் இல்லை. ஆனால் சாவி இல்லாமல் என்ன செய்வது? ஒரு மொத்து வாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 

பம்மியபடியே வெளியே நின்றேன். அவனது அப்பா வெளியிலேயே நின்றிருந்தார். ‘அப்பா செத்துப் போயிருக்காரு..இந்தாளு அழுகாம நின்னுட்டு இருக்காரே’ என்று நினைத்தபடியே பார்த்தேன்.

‘ஏஞ்சாமீ?’ என்று கேட்டார். பரவாயில்லை. அடி விழாது போலிருக்கிறது.

‘ஊட்டுச் சாவி சையது கிட்ட இருக்குதுங்க’ என்றேன்.

‘இரு கண்ணு அந்தத் தெள்ளவாரியைக் கூப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு ‘டேய்...’ என்று சப்தமிட்டார்.

‘ஆத்துக்கு போய்ட்டு வர்றீங்களா?’ என்று அவர் கேட்கவும். அவசரமாக மறுத்து ‘மீன் வறுத்துத் திங்கப் போனோம்’ என்று சொல்லச் சொல்ல சையது வெளியில் வந்தான். அவன் முகத்தைப் பார்த்திருக்க வேண்டுமே. ‘ஆத்துக்குப் போனோம்ன்னு சொல்லவே இல்லையேடா’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே சாவியைக் கையில் திணித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான். உறவினர்கள் வரத் தொடங்கினார்கள். நான் ஒரே ஓட்டம்தான்.

சில நாட்களுக்குப் பிறகு பார்த்த போது ‘உனக்கெல்லாம் கொஞ்சமாச்சும் வாப்பாடு இருக்குதாடா?’ என்றான். அப்பாரு சாகும் போது இவன் பக்கத்தில் இல்லையென்று முதுகு பழுத்ததாகச் சொன்னான். அப்பாருவின் உடல் கிடந்த போதேதான் அடி விழுந்திருக்கிறது. அதன் பிறகு அவனை அவனது அம்மாயி ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். தூத்துக்குடி பக்கம். சையதுவின் குடும்பம் இப்பொழுது எங்கேயிருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை இப்பொழுதும் சையது தூத்துக்குடியில் இருக்கக் கூடும். உண்மையான ஆற்காடு நவாப் குடும்பத்துக்கு சென்னை ராயப்பேட்டையில் பதினேழு ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக அரண்மனையொன்று இருக்கிறது. 

ஏன் யாவரும்?

சில பணிகளைச் சிலருடன்தான் தொடர்ந்து செய்ய முடியும். நாம் ஒவ்வொருவரும் காட்டாற்று வெள்ளம்தான். அவரவர் போக்கில் போய்க் கொண்டிருக்கிறோம். சில மனிதர்கள் இலைகளாகவும் தழைகளாகவும் மலர்களாகவும் நம்முள் விழுகிறார்கள். நம் போக்கு பிடித்தவர்களும் ஒத்துக் கொண்டவர்களும் நம்மோடு தொடர்ந்து பயணிக்கிறார்கள். பிடிக்காதவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். சிலர் அமைதியாக ஒதுங்குகிறார்கள். சிலர் சத்தமிடுகிறார்கள். அடுத்தவர்கள் சத்தமிடுகிறார்கள் என்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தால் நம் திசை மாறிப் போய்விடும். போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். 

‘எப்பவுமே ஏன் யாவரும் பதிப்பகத்திலேயே புத்தகத்தைக் கொடுக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை யாராவது எப்பொழுதாவது கேட்டுவிடுவார்கள். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ‘ஒன்பதாயிரத்து எந்நூறு ரூபாய் ராயல்ட்டி பணம் நாங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. எப்பொழுது வாங்கிக் கொள்கிறீர்கள்?’ என்று மூன்றாவது முறையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். இது வெறுமனே பணம் சார்ந்த விஷயம் மட்டுமில்லை. அவர்களின் பொருளாதார நிலைமை நன்றாகவே தெரியும். சமீபத்தில்தான் போர்ஹேயின் புத்தகத்தை (பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு) வெளியிட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாயை அதற்காகச் செலவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகத்திலும் வருகிற வருமானத்தை எடுத்து கொஞ்சம் கைக்காசை போட்டு அடுத்த புத்தகத்தைத் தயார் செய்கிறவர்கள் அவர்கள். போர்ஹேயின் புத்தகத்தை வெளியிடுவதற்காகக் கொஞ்சம் கடனும் வெளியிடங்களில் வாங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எழுத்துக்கும் புத்தகத்துக்குமாக உழைக்கின்ற இவர்களிடம் எப்படி பணம் கேட்க மனம் வரும்? ‘வைங்க...வாங்கிக்கிறேன்’ என்றுதான் சொல்லியிருந்தேன். 

‘புத்தகம் எவ்வளவு வித்துச்சு’ என்ற ஒரேயொரு கேள்வியைக் கேட்டால் கூட வாய்ப்பு கிடைக்கிற இடங்களிலெல்லாம் தம்மிடம் புத்தகம் போட்டவனை கீழே தள்ளி கலாய்த்துக் கொண்டிருக்கிற பதிப்பாளர்கள் உலாவருகிற ஊர் இது. ஒதுங்கியிருந்தாலும் விடமாட்டார்கள். பொதுவாகவே எனக்கு ஒரு முகராசியுண்டு. ‘திமிர்பிடித்தவன்’என்று எதிரில் இருப்பவர் நினைத்துக் கொள்வார். ‘நல்லாத்தானே பேசினேன்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பேன். சமீபத்தில் கூட இரண்டு பேராசிரியர்களைச் சந்தித்துப் பேச வேண்டியிருந்தது- அவர்களில் ஒருவர் நன்கு அறிமுகமானவர். இன்னொருவர் புதியவர். புதியவர் பழையவரிடம் ‘அவர் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை’ என்றாராம். ‘he is not happy' என்றார் பழையவர். இப்படி எல்லாவற்றையும் தாண்டித்தான் நட்புகள் உருவாகி வலுப் பெறுகின்றன. அதனால்தான் நட்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. கரிகாலனிடமும் கண்ணதாசனிடமுமான நட்பு அப்படி உருவானதுதான்.

‘பணம் உங்களுக்குன்னா மெதுவா தரலாம்..அதை வாங்கி நல்ல காரியம்தானே செய்யப் போறீங்க?’ என்று கேட்டு ராயல்ட்டி தொகையைத் தந்துவிடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். ஒன்பதாயிரத்து எந்நூறு ரூபாய் ராயல்ட்டி தொகை. சில நாட்களுக்கு முன்பாக ஒரு அறிவிப்பைச் செய்திருந்தோம். ஆயிரம் ரூபாய்க்கு ரோபோஜாலம் புத்தகத்தை வாங்கினால் பத்துப் பிரதிகளுக்கு ஐநூறு ரூபாய் புத்தகத்தின் அடக்கவிலை. மீதமிருக்கும் ஐநூறு ரூபாயை தக்கர் பாபா வித்யாலயாவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பு அது. தக்கர் பாபா வித்யாலயா தலித் குழந்தைகளுக்கான விடுதி. ஜி.எஸ்.லட்சுமண அய்யர் என்கிற சுதந்திர போராட்ட தியாகியால் உருவாக்கப்பட்டது. அவர்களிடம் பேசிய போது ஐஸ்க்ரீம் கடைகளில் இருக்கும் உறைபெட்டி (Freezer box) ஒன்றுதான் அவர்களின் தேவை. காய்கறிகள், மீதமாகும் உணவுப் பொருட்களை வைத்துக் கொள்வதற்குப் பயன்படும் என்றார்கள். அக்கம்பக்கத்து விவசாயிகள் தானமாக வழங்கும் காய்கறிகள் சில சமயங்களில் அழுகிப் போவதுண்டு எனவும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை யாராவது வழங்கினால் அதைச் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை என்றார்கள்.

ரோபோஜாலம் புத்தகத்தை பாண்டியராஜ், மாதேஸ்வரி, ஹரி ஆகியோர் தலா பத்துப் பிரதிகள் வாங்கினார்கள். அகிலா முப்பது பிரதிகள் வாங்கினார். முத்து கெளசிக் நூறு பிரதிகள் வாங்கினார். இப்படி ஒரு தொகை கிடைத்தது. எல்லாமே எழுத்து வழியாக வந்த பணம். சமீபத்தில் தாயுமானவன் வந்திருந்தான். பள்ளி நண்பன். இலண்டனில் இருக்கிறான். தக்கர் பாபா விடுதிக்கு உதவுகிற விவரத்தைச் சொன்னேன். அவன் ஒரு தொகையைத் தருவதாகச் சொன்னான். எல்லாவற்றையும் சேர்த்து முப்பத்து மூன்றாயிரம் ரூபாய்க்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட வோல்டாஸ் ஃப்ரீஸர் பெட்டிக்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது. இன்னும் இரண்டொரு தினங்களில் விடுதியை அடைந்துவிடும். காந்தி ஜெயந்தியன்று காந்தியவாதி உருவாக்கிய விடுதிக்கு எங்களால் முடிந்த சிறு உதவி.

லட்சுமண அய்யர் பற்றிச் சொல்ல வேண்டும். அவரது தந்தையார் டி.எஸ் பெரும் பணக்காரர். பல நூறு ஏக்கர் சொத்துக்களுக்கான அதிபதி. அந்தக் காலத்தில் டி.எஸ் வங்கி என்று தனியாகவே ஒரு வங்கியை நடத்திக் கொண்டிருந்தவர். லட்சுமண அய்யர் அத்தனை சொத்தையும் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தாரை வார்த்தார். எங்கள் அப்பா எஸ்.எஸ்.எல்.சி முடித்த வயது- எங்கேயோ நடந்து கொண்டிருந்த போது அய்யர் அவர்கள் பார்த்து ‘ஏன் செருப்பில்லாம நடக்குற?’ என்று கேட்டிருக்கிறார். அப்பா சிரித்திருக்கிறார். ‘நீ எந்த ஊரு?’ என்றாராம். கரட்டடிபாளையம் என்றதற்கு ‘அங்க ஒரு ஏழு செண்ட் இருக்குது..எழுதிக்கிறியா?’ என்று கேட்டிருக்கிறார். யோசித்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. எந்த யோசனையுமில்லாமல் இடங்களையும் சொத்துக்களையும் அள்ளி வழங்கிச் சென்ற வள்ளல். ஒரு முறை நகராட்சி சேர்மேனாக இருந்தார். இன்னொரு முறை பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தள வேட்பாளராக நின்றார். தோற்கடித்தார்கள். இன்றைக்கு அவரது மகன் அவர் கட்டிய பள்ளியில் தற்காலிக ஆசிரியராக இருக்கிறார்.

மனிதர்கள் எப்படியெல்லாமோ வாழ்ந்திருக்கிறார்கள். 

அய்யரின் பணியை ஒப்பிடும் போது இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றே தெரியும். இருப்பினும் இச்சிறு பணியைச் சாத்தியப்படுத்திய யாவரும் பதிப்பகத்துக்கும் துணையாக இருந்த நண்பர்களுக்கும் நன்றி.

Sep 26, 2017

போர் போர்..சத்தியமங்கலத்தில் போர்!

சத்தியமங்கலத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. அதில் பேச அழைத்திருக்கிறார்கள். தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறேன். பேசுவது ஒரு பக்கம். இத்தகைய சிறு அளவிலான புத்தகக் கண்காட்சி நடைபெறும் பகுதிகளில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். அக்கம்பக்கத்து ஊர்களில் இருக்கும் கிராமப்புற பள்ளிகளிலிருந்து மாணவர்களை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கச் சொல்ல வேண்டும். ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களே புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்களுக்கு புத்தகங்களுடன் நெருக்கம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சார்லஸ் முந்தாநாள் எழுபதாயிரம் ரூபாயை அனுப்பியிருந்தார். அதில் ஐம்பதாயிரம் ரூபாயை இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாக உத்தேசம். அவருக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். 

பத்து பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளிக்கும் ஐந்தாயிரம் ரூபாய்க்கான கூப்பன்களை அச்சடித்து விநியோகித்துவிடலாம். இருபத்தைந்து ரூபாய், முப்பது ரூபாய், ஐம்பது மற்றும் நூறு ரூபாய் கூப்பன்களாக இருக்கும். அதை மாணவர்களிடம் ஆசிரியர்கள் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் மாணவர்கள் தாம் விரும்பக் கூடிய புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தமது ஆசிரியர்களிடம் காட்டினால் அவர்கள் அனுமதிக்கும்பட்சத்தில் புத்தகம் பள்ளி நூலகத்தில் சேரும். புத்தகத்தின் விலைக்கு ஏற்ற கூப்பன்களை கடைக்காரர்களிடம் மாணவர்கள் கொடுத்துவிடுவார்கள். கண்காட்சியின் இறுதி நாளில் ஒவ்வொரு கடைக்காரர்களும் தம்மிடமிருக்கும் கூப்பன்களை ஒப்படைத்து அதற்கேற்ற பணத்தை வாங்கிக் கொள்ளலாம்.

பத்து கிராமப்புற பள்ளிகளில் நூலகம் அமைக்கப்படுவதற்கு சார்லஸ் அனுப்பி வைத்த தொகை பயன்படுத்திக் கொள்ளப்படும். திட்டம் எப்படி இருக்கிறது?

அது இருக்கட்டும். என்னையும் நம்பி பேசுவதற்கென அழைத்திருக்கிறார்கள் பாருங்கள். 

சத்தியமங்கலத்தில் ஒன்றரை ஆண்டுகள் படித்திருக்கிறேன். இரண்டாம் வகுப்பு. சாரு மெட்ரிகுலேஷனில் சித்ரா டீச்சர் செய்த அழிச்சாட்டியங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து போகின்றன. ட்ரவுசரை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக மைதானத்தைச் சுற்றவிடப் போவதாகச் சொல்லி வகுப்புத் தோழி பானுவை விட்டு ட்ரவுசரை உருவச் சொல்ல அவள் சாம பேத தான தண்ட முயற்சிகளை எல்லாம் பிரயோகித்து இழுக்க விடுவேனா பார் என்று இழுத்துப் பிடித்து என் மானத்தைக் காப்பாற்றியதைப் பற்றி பேசுவேனா?

சரவணனும் நானும் பள்ளிப் பேருந்தில் பயணித்த போது ‘என்னடா ஒடக்காயாட்ட எட்டிப் பார்த்துட்டே இருக்க?’ என்று பள்ளி ஆயா கொட்டு வைத்து மண்டை புடைத்த கதையைப் பேசுவேனா? ‘அந்தக் கிழவி சோத்துல பேதி மருந்த கலந்துடுவோம்டா’ என்று திட்டமிட்டதைப் பேசுவேனா? ‘உங்க பையன் உருப்படமாட்டான் போலிருக்கு’ என்று அப்பொழுதே வசைபாடியதைக் கேட்டு வந்து 'டீச்சர் கிடக்குறாங்க விடு’ என்று அப்பா சொன்னதைச் சொல்வேனா? 

ஒன்றரை வருடங்களில் ஒரு நூறு கதைகளைச் சேகரித்த ஊர் அது.

சமணர்கள் தமிழகத்திற்குள் நுழைவதற்கான வாயிலாக இருந்ததும், ஹைதரும் திப்புவும் நினைத்தால் கிளம்பி வந்த தடமாகவும், புலிகள் உலவும் வனமாகவும் என வரலாறு சார்ந்தும் இயற்கை சார்ந்தும் சத்தியமங்கலத்துக்கு நிறையச் சிறப்புகள் உண்டு. கடைசியாக வீரப்பன் ஒளிந்திருந்தது வரைக்கும். இதையெல்லாம் பேசினாலே சுவாரசியமாகத்தான் இருக்கும்.

பார்த்துவிடலாம் ஒரு கை.

ஆகவே தாய்மார்களே, பெரியோர்களே, என்னைப் போன்ற சில்வண்டுகளே- அக்டோபர் இரண்டாம் தேதி. காந்தி பிறந்த நாள். சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவாக இருப்பினும் தவிர்த்துவிட்டு சத்தியமங்கலம் நோக்கித் திரண்டு வருக. சத்தி அதிர்ந்தது என்றெல்லாம் செய்தி வராவிட்டாலும் பரவாயில்லை. ‘அடுத்த வருடம் இவனைக் கூப்பிடவே கூடாது’ என்று மட்டும் அவர்கள் நினைத்துவிடக் கூடாது. வரிக்கு வரி கைதட்டுக. வார்த்தைக்கு வார்த்தை ஓ போடுக.  ‘இவன் அப்படியொன்னும் நல்லா பேசலயே’ என்றும் குழம்ப வேண்டும். ‘எதுக்கு இப்படி கை தட்டுறாங்க’ என்றும் குழம்ப வேண்டும்.

இன்குலாம் ஜிந்தாபாத்! புரட்சி ஓங்குக!!

பர்ஸை கண்டுபிடிச்சுக் கொடுங்கய்யா

மழை பெய்து கொண்டிருந்தது. இரவு முழுவதுமாகப் பெய்த மழையின் மிச்சம் அது. சிங்கசந்த்ராவில் இறங்கி வீட்டை அடைவதற்குள் நனைத்துவிடக் கூடிய அளவுக்கு சற்றே வலுவான மழை. அதிகாலை நான்கரை மணி. வேக வேகமாக நடைபோட்டால் நாய் துரத்தும். Singular. பெங்களூரில் வீதிக்கு இருபது நாய்களைப் பார்க்கலாம். அதுவும் அத்துவான வேளைகளில் செருப்பு நிலத்தோடு உரசும் ஒலியைக் கேட்டால் சிலிர்த்து எழும் அவைகளைச் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். குனிந்து கல்லை எடுத்தால் அல்லது எடுப்பது போன்ற பாவனையைச் செய்தால் பத்தொன்பது நாய்கள் காணாமல் போய்விடும். ஆனால் மீதமிருக்கும் ஒரு நாய் இருக்கிறதே- அது மட்டும் ஓடியும் போகாது. பாய்ந்தும் வராது. குரைத்துக் கொண்டே நிற்கும். நடந்தால் பின்னால் மெல்ல எட்டி வைக்கும். அசந்தால் பின்பக்கமாக ஓடி வந்து கடித்துச் சதையைக் கவ்விவிடுமோ என்னும்படியான பயத்தில் நம்மைச் சிறுநீர் கழிக்க வைத்துவிட்டுத்தான் அடங்கும். 

பேருந்திலிருந்து இறங்கியாகிவிட்டது. மழையில் நனைந்து கொண்டே வேகமாக நடக்கும் போதுதான் அவரைப் பார்த்தேன். நாற்பது வயது இருக்கும். ராயல் என்ஃபீல்ட் ஷோரூமை அண்டியபடி பதுங்கியிருந்தார். நடமாட்டமில்லாத அந்தத் தருணத்தில் பயமாக இருந்தது. நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். பரமேஸ்வரன் என்று தமிழர் ஒருவர் அப்படியானதொரு கதையைச் சொல்லியிருக்கிறார். மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு சில வருடங்களுக்கு முன்பாக இப்படியொரு அதிகாலையில் இறங்கிய போது நெருங்கி வந்த ஒருவன் மகளின் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டான். என்ன செய்ய முடியும்? பை, பர்ஸ் என எல்லாவற்றோடும் சேர்த்து மனைவியின் நகைகள், அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் உட்பட எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வந்ததாகச் சொன்னார். 

சில மாதங்களுக்கு முன்பாக எங்கள் பக்கத்து வீட்டிலேயே ஒரு திருட்டு நிகழ்ந்தது. அது மாலை வேளை. திடீரென்று வீட்டுக்குள் மூன்று பேர்கள் நுழைந்து கத்தியைக் காட்டிவிட்டார்கள். வயதான அம்மாவும் work from homeஇல் இருந்த மகளும்தான் போணி. இருக்கிற நகைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு- தாலியை மட்டும் விட்டுவிட்டார்கள்- அவ்வளவு செண்டிமெண்ட். இப்படி திருடர்களின் விதவிதமான கதைகளைக் கேட்கும் போது பயமில்லாமல் இருக்குமா? அதன் பிறகு போலீஸ் வந்தார்கள். விசாரித்தார்கள். ஒருவரையும் பிடிக்கவில்லை. ‘கேமிரா மாட்டிக்குங்க..அதான் பாதுகாப்பு’ என்று அறிவுரை சொல்லிவிட்டுப் போனார்கள். 

மழைக்கு அண்டியிருந்தவரைப் பார்த்தால் திருடன் மாதிரி தெரியவில்லை. நமக்கென்ன ஐபிஎஸ் மூளையா? பார்த்தவுடன் திருடன், பிக்பாக்கெட் என்றெல்லாம் கணித்து முடிவுக்கு வருவதற்கு. இத்தகைய சூழல்களில் மனதுக்கு வேலை கொடுத்துவிடக் கூடாது. ‘ச்சீ..பாவம்’ என்று மனம் கருதத் தொடங்கினால் மூளை சறுக்கக் கூடும். பழைய அனுபவமிருக்கிறது. இருந்தாலும் ஒரு கணம் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. அவரைப் பார்த்த அந்தக் கணத்தில் அவரும் பார்த்துவிட்டார். பிச்சை கேட்பது போல கையை நீட்டினார். பார்க்காதது போல நடக்கத் தொடங்கினேன். அடுத்த நான்கு அடிகளுக்குள் எனக்குப் பின்பாகவே அவரும் நடக்கத் தொடங்கினார். சில கணங்களில் பயம் பற்றிக் கொண்டது. மனம் கண்டபடி கற்பனை செய்யத் தொடங்கியது.

இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாகக் கொன்றுவிடுகிறார்கள். குர்கானில் ஒரு பள்ளி வளாகத்திலேயே ஒரு சிறுவன் கொல்லப்பட்டான் அல்லவா? என்ன காரணம் என்று தேடினால் சில்லியான ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். பள்ளியின் கடைநிலை ஊழியன் கழிவறையில் சுயமைதுனம் செய்து கொண்டிருக்கும் போது குட்டிப்பையன் உள்ளே நுழைந்து பார்த்துவிட்டான் என்பதற்காகக் கொன்றானாம். இன்னொரு சாரார் பாலியல் பலாத்காரத்திற்கு ஒத்துவரவில்லை என்று கொன்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். எப்படியோ கொன்றுவிட்டான். பெங்களூரில் விப்ஜியார் என்றொரு பள்ளியில் ஆறு வயதுப் பெண்ணை ஒருவன் கொன்றான். பாலியலுக்காகவும் பணத்துக்காகவும் கொல்வதெல்லாம் பெரிய காரியமே இல்லை. நாம்தான் சூதானமாக இருந்து கொள்ள வேண்டும். 

ஓட்டமெடுத்து ஈரத்தில் வழுக்கி விழுந்து தொலைந்தால் வசமாகச் சிக்கிக் கொள்வோம். நம் மீது அட்லங்கால் போட்டு அமர்ந்து கழுத்த வெறுக் வெறுக்கென்று அறுத்துவிட்டுப் போனால் ‘சொம்பும் போச்சுடா கோவிந்தா’ ஆகிவிடும். மெல்ல நடக்கவும் பயம். கத்தியைக் கொண்டு வந்து பின்னால் குத்தினால் ‘புறமுதுகிட்டு ஓடினான் அந்த மணிகண்டன்’என்று வரலாற்றில் பழிப்புச் சொல் வந்துவிடும். நின்றுவிடுவதுதான் உசிதம். உங்களுக்குச் சிரிப்பு வரலாம். அந்தக் கணத்தில் எவ்வளவு பயமாக இருந்தது என்று எனக்குத்தான் தெரியும். ஈரத்தோடு ஈரமாக யூரின் டேங்க் உடைந்ததா என்று கூடத் தெரியவில்லை. நின்று மெல்லத் திரும்பினேன். ‘உன்னை எதிர்க்க மாட்டேன்’ என்று அவரிடம் காட்டிக் கொள்வதான உடல்மொழியில் திரும்பிய திருப்பு அது. 

‘ஏனு பேக்கு?’ என்றேன்.

‘ஏனு இல்லா’ என்றார். சோடியம் விளக்கு வெளிச்சத்தில் அந்த ஆள் சிரித்தது தெரிந்தது. ஒருவேளை மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் எழுந்தது. நடுக்கம் இல்லாமல் இல்லை.

‘ஓகி...’ என்றேன்.  போ என்று அர்த்தம்.

இரண்டே இரண்டு வாக்கியங்கள்தான் கன்னடத்தில் பேசியிருந்தேன். அதில் எப்படிக் கண்டுபிடித்தானோ தெரியவில்லை. ‘பணம் கொடு’ என்றான். தமிழில். திருடனேதான். 

தனித்துச் சிக்கியிருக்கும் இடங்களில் சத்தம் போடுவதும் கூட ஆபத்துதான். குரலை அமுக்குவதற்காக கழுத்தை நெரித்தால் சோலி சுத்தம். 

‘இல்லை’ என்று மறுக்கவேண்டும் என மனம் நினைத்தாலும் சட்டைப்பையில் ஐம்பது ரூபாய் இருந்தது. எடுத்து நீட்டினேன். தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்தான். முழுமையாக சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. ஒற்றை ஆள்தான். பெரிய கல்லாக எடுத்து தாக்கினால் என்ன ஆகிவிடும் என்றும் மனம் கணக்குப் போட்டது. நம்முடைய கணக்கு சரியாக நடந்துவிட்டால் தப்பித்துவிடலாம். ஏமாந்துவிட்டால் வம்பாகிவிடும். எப்படியிருந்தாலும் தாக்கப் போவதில்லை. பணத்தைக் கொடுப்பதற்குத் தயராவதற்குள்ளாகவே இன்னொருவனும் வந்துவிட்டான்.

பர்ஸை எடுத்துக் கொடுத்தேன். பறித்துக் கொண்டார்கள். ஆளரவமில்லாமல் இருந்தது அந்தப் பகுதி. வேகமாக அவர்களைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. செல்போன் தப்பிவிட்டது. அதை அவர்கள் கேட்கவுமில்லை. கேட்பதற்குள்ளாக நகரத் தொடங்கினேன். நடை ஓட்டமாக மாறியது. 

எங்கள் ஏரியாவில் ஒரு ஏரியும் அதன் கரையில் பிள்ளையார் கோவிலும் இருக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கு மஞ்சுநாதா பூசை செய்வார். அவரிடம் சொன்னேன். அவரும் அவருடைய உதவியாளரும் அவர்களுக்குப் பின்னாலேயே நானுமாக ஓடிச் சென்றோம். யாருமில்லை. காவல்துறையில் புகார் அளிக்கச் சொன்னார். அங்கேயிருந்து அழைத்தேன். ஒரு வண்டியில் வந்தார்கள். பேட்ரோல் வாகனம். விவரங்களைக் கேட்டார்கள். அடையாளம் சொன்னேன். ‘சரி தேடுறோம்..நீங்க ஒரு புகார் எழுதிக் கொடுங்க’ என்றார்கள். கொடுத்தேன். பர்ஸூக்குள் என்ன இருந்தது என்பதையெல்லாம் விலாவாரியாக எழுதச் சொன்னார்கள்.

முந்நூறு ரூபாய்க்குள்ளாகத்தான் இருந்திருக்கும். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் பிரதிகள் இருந்தன. ஐசிஐசிஐ வங்கியின் பண அட்டை ஒன்றையும் வைத்திருந்தேன். 

வாங்கிப் படித்தார். ‘கடனட்டை ஒன்னுமில்லையா சார்?’ என்றார்.

இல்லையென தலையை ஆட்டினேன். முந்நூறு ரூபாய்க்காக ரிஸ்க் எடுக்கமாட்டார்கள் போலத் தெரிந்தது. அப்படியே பிடித்தாலும் தூக்கிலா போடப் போகிறார்கள்? ‘ஜாக்கிரதையா இருந்துக்குங்க’ என்றார். எதிர்பார்த்ததுதான். ‘உங்க துப்பாக்கியைத் தர்றீங்களா..சேஃப்டிக்கு வெச்சுக்குறேன்’ என்று கேட்கலாமா எனத் தோன்றியது. கடுப்பாகி என்கவுண்ட்டரில் போட்டாலும் போட்டுவிடுவார்கள் எனத் தோன்றியது.

‘ஆயித்து சார்’ என்று சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். மழை நின்றபாட்டைக் காணோம்.

Sep 25, 2017

கேள்வி பதில்கள்

பல பள்ளிகளுக்குச் செய்த உதவியைப் பற்றி எழுதுகிறீர்கள். நசிந்து வரும் கோபி, வைர விழா மேல்நிலைப் பள்ளிக்கும் நிசப்தத்தின் உதவியை அளிக்கலாமே?

நான் படித்த பள்ளி என்ற காரணத்துக்காக உதவுவதாக இருந்தால் என் சம்பளத்திலிருந்துதான் உதவ வேண்டும். அறக்கட்டளையின் பணத்திலிருந்து உதவுவது சரியாக இருக்காது. பொருளாதார ரீதியில் வலுவில்லாமல் இருக்கும் பள்ளியாகவும் சரியான தலைமையாசிரியரைக் கொண்டதாகவும், மாணவர்களின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்வதாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கிறேன். வைரவிழா மேனிலைப்பள்ளி பழைய பெருங்காய டப்பாவாக இருக்கிறது என்பதுதான் என் புரிதல்.

தற்போது ஏதாவது தின பத்திரிகைகளில் அல்லது வார இதழ்களில் கட்டுரைகள் எழுதுகிறீர்களா ?

யாரும் கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் அனுப்புவதில்லை.

பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு சென்று உள்ளீர்கள். ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளுக்கு சென்ற போது அங்கேயே நிரந்தர குடியுரிமை பெற்று தங்கி விட எண்ணியதுண்டா?

கரட்டடிபாளையத்துக்கு மாதம் இரு முறையாவது சென்றுவிட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அது தடைபடுமெனில் எந்த வாய்ப்பாக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்.

கணவன் மனைவிகிடையிலான உறவில் மூன்றாம் நபர் வரும் பட்சத்தில் எப்படி விரட்டி விடுவது? கண்டும் காணமலும் விடமுடியவில்லை எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் அது பாட்டுக்கு காட்டாறு வெள்ளமாக காதல் ஓடுகிறது.

மிகக் கடினமான கேள்வி. பிரச்சினையின் பரிமாணங்கள் தெரியாமல் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அப்படியே சொன்னாலும் அது சரியான பதிலாக இருக்குமா எனவும் புரியவில்லை.

வருடம்-1991. குமரியில் தொழிற்சாலைகள் இன்றி வேலைவாய்ப்புகள் குறைந்து அதே சமயம் படித்தவர்கள் நிறைந்த சூழலில், அவர்கள் அரசு வேலைவாய்ப்புகளை பெற பலர் நேரடியாக லஞ்சம் கொடுத்து அரசு போக்குவரத்து துறையில் சேர்ந்தனர். நிறையப் பேர் அதை நோக்கி படையெடுத்த போது அத்துறையில் அதுவரை இல்லாத, ஆனால் புதிய பணி நிலைகள் உருவாக்கப்பட்டு அந்த புதிய பணிகளுக்கு லஞ்சம் பெறப்பட்டு வேலை கொடுக்கப்பட்டது. போக்குவரத்து துறை அதிக நிதிசுமைக்கான சூழலுக்குள் தள்ளப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதும் அதற்கு மானியமாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதும் நடைபெறுகிறது. ஒரு அரசு துறையை மோசமான சூழலுக்கு தள்ளிய கே.ஏ.செங்கோட்டையனை நீங்கள் ஆதரிப்பது நியாயம் என கருதுகிறீர்களா?

கே.ஏ.எஸ் எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகள் நிறைய. அப்பாவை ஏதோவொரு ஊருக்கு பணிமாற்றம் செய்த போது ‘அண்ணனுக்கு கோபியில் போஸ்டிங் போடுங்க’ என்று ராஜ.கண்ணப்பனை(அப்போதைய மின்துறை அமைச்சர்) வலியுறுத்தி வாங்கிக் கொடுத்தார். விருப்ப ஓய்வுக்கு எழுதிக் கொடுத்த அம்மாவை பணியிலிருந்து விடுவிக்காத கோட்டாச்சியரைக் கடிந்து விடுவித்தார். ஒவ்வொரு முறையும் வேட்பாளராக அறிவிக்கப்படும் போதும் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் ஆதரவு கேட்டார். எங்கள் வீட்டில் பெரும்பாலான நிகழ்வுகளில் அவர் கலந்திருக்கிறார். ஜெயலலிதாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் அடைத்திருந்த போது தினசரி பதினைந்து நிமிடங்களாவது நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம்- என்னை மதித்துப் பேசினார். ஆனால் கடந்த தேர்தலில்தான் ‘செங்கோட்டையன் ஏன் தோற்க வேண்டும்?’ என்று துண்டுச்சீட்டு அச்சடித்து பரப்புரை செய்தேன். கோபியில் அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப் போவதாகச் சொன்ன போது ‘அப்படி அவன் பிரச்சாரம் செய்தால் எனக்கு மருத்துவமே வேண்டாம்’ என்று அப்பா கோபப்பட்டார். அவரைச் சமாதானம் செய்துதான் மைக் பிடித்தேன். அப்பா இறந்ததற்கு கே.ஏ.எஸ் வரவில்லை. என்னுடைய பிரச்சாரம் காரணமாக இருக்கலாம். சமீபத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றும் அந்நிகழ்வில் பேச முடியுமா என்றும் அழைத்தார்கள். ‘எதைப் பாராட்டிப் பேசுவது?’ எனக் கேட்டு மறுத்தேன். எந்த அடிப்படையில் அவரை நான் ஆதரிப்பதாகச் சொல்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை.

கமல் அரசியல் குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

ஒருவேளை சாருவை மதித்தால் கமல்தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. சாரு எப்பொழுது யாரை எதிர்ப்பார் என்றும் தெரியாது. ஆதரிப்பார் என்றும் தெரியாது. நாம் ஏன் தலையைக் கொடுக்க வேண்டும்?

பாஸ், எப்ப பாஸ் இந்த ஆப்பிள் போனுக்கு நிசப்தம் ஆப் கிடைக்கும்?

கூகிள் ப்ளே ஸ்டோர் வழியாக செயலியை வழங்கினால் காசு கொடுக்க வேண்டியதில்லை. ஆப்பிள் ஸ்டோரில் நம் செயலியை நிறுவ காசு கொடுக்க வேண்டுமாம். வேலைக்கு ஆகாது போலிருக்கிறது. 

சில கேள்விக்கு பதில் அளிப்பதை (மத்திய அரசிற்கு எதிரானது போன்று பொருள் வரக்கூடிய) தவிர்க்கிறீர்கள்தானே?

எதையும் தவிர்ப்பதில்லை. இருநூறுக்கும் அதிகமான கேள்விகள் இருக்கின்றன. கலவையான கேள்விகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வாரத்தில் இரண்டு முறை மட்டுமே கேள்வி-பதில் இருக்க வேண்டும் என்பதும் ஒரு விதி. அதனால் நிறையக் கேள்விகள் பதில் சொல்லப்படாமல் இருக்கின்றன.

Sarahah கேள்விகளும் பதில்களும்..

தூங்கி வழியும் அரசு

கடந்த இரண்டு நாட்களில் பல தலைமையாசிரியர்களைத் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. ‘ஆயிரம் மதிப்பெண்களைத் தாண்டக் கூடிய தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை அளிக்க விரும்புகிறோம்’ என்று சொன்னால் பெரும்பாலான ஆசிரியர்களின் பதில் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. தலித் மாணவர்கள்தான் அரசுப்பள்ளிகளில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முதல் மதிப்பெண்களை வாங்குவதில்லை. முதல் மதிப்பெண்கள் என்றில்லை ஆயிரங்களைத் தாண்டுவதும் வெகு அரிதாகவே இருக்கிறது. ‘பிசி பையன் ஒருத்தன் இருக்கான். எம்பிசி பொண்ணு ஒருத்தி இருக்கா’ என்கிறார்கள். அவர்களை நிராகரிக்க வேண்டும் என்றில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் பயிற்சியை விரிவாகச் செயல்படுத்த வேண்டிய அவசியமிருப்பின் அப்பொழுது இணைத்துக் கொள்ளலாம். 

அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் புத்தகங்களைக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் திட்டம். அப்பொழுதுதான் ஐந்து மாதங்களாவது மாணவர்கள் சுயமாகப் படிப்பதற்கு நேரம் கிடைக்கும். ஆனால் மாணவர்களைச் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. தகுதியான மாணவர்களைச் சேர்த்தாக வேண்டும். வழக்கமாக இத்தகைய கட்டுரைகளை எழுதினால் எனக்கு அங்கொரு மாணவனைத் தெரியும்; இங்கொரு மாணவியைத் தெரியும் என நிறைய மின்னஞ்சல்கள் வரும். ஆனால் சத்தமே இல்லை. என்னவோ சிக்கல் இருக்கிறது.

நிறைய தலித் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் இந்தப் போட்டி யுகத்தை எதிர்கொள்கிற அளவுக்கான வலுவில்லாமல் திணறுகிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தை நம்ப வேண்டியதில்லை- அவர்கள் செய்ய மாட்டார்கள்- தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து களத்தில் நிற்கும் போராளிகள் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசுப்பள்ளிகளில் படிக்கும் இந்த மாணவர்களது சமூக மற்றும் குடும்பச் சூழல், வறுமை என பல காரணிகள் இம்மாணவர்கள் மதிப்பெண்களில் சோடை போவதற்குக் காரணமாக இருக்கின்றன. அவற்றையெல்லாம் களைவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படாமல் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளைக் களைவது சாத்தியமா என்ற விவாதங்கள் அவசியமானவையாகின்றன.

விதிவிலக்கான மாணவர்களும் இருக்கிறார்கள். குணசுந்தரி என்ற மாணவியைப் பற்றி சில நாட்களுக்கு முன்பாகக் குறிப்பிட்டிருந்தேன். அம்மாவும் அப்பாவும் கூலித் தொழிலாளர்கள். குடிசையில்தான் வசிக்கிறாள். தனியார் பள்ளிகள் கொத்திச் செல்லாத மாணவிகளில் ஒருத்தி. 1070 மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள். இப்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் வருடத்தில் சேர்ந்திருக்கிறாள். கடந்த வருடம் இத்தகைய பயிற்சியை நடத்தியிருந்து குணசுந்தரிக்கு பயிற்சியளித்திருந்தால் அவளால் நிச்சயமாக மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்க முடியும். இத்தகைய மாணவ மாணவிகளைத்தான் தேட வேண்டியிருக்கிறது. இத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டும் பிரச்சினையில்லை. தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியளிப்பதில் இன்னொரு சிக்கலும் கண்ணுக்கு முன்னால் இருக்கிறது. தேர்வுக்கு தயார் செய்வதற்குத் தேவையான தரமான புத்தகங்கள் தமிழில் வெகு குறைவு. ஒன்றிரண்டு புத்தகங்கள் கண்ணில்பட்டன. ஆனால் அவையெல்லாம் சோபிக்காத புத்தகங்கள். வெகு சுலபமான கேள்விகளை மட்டும் சேர்த்திருக்கிறார்கள். இந்தக் கேள்விகள் எதற்கும் பயன்படாதவை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

அக்டோபர் மாதமே வந்துவிட்டது. அரசாங்கம் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்நேரம் தேர்வுக்கான பயிலரங்குகள் தொடங்கப்பட்டு புத்தகங்கள் மற்றும் மாதிரி வினா விடைகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ம்ஹூம். இந்த வருடமும் செயல்படுவார்கள் என்று தெரியவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ‘அதிரடி அறிவிப்பு வெளியாகும்’ என்று அவ்வப்பொழுது பேசிக் கொண்டேயிருக்கிறார். இப்படி சொல்லிச் சொல்லியேதான் அனிதாவைக் கொன்றார்கள். இந்த வருடம் என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. 

நீட் தேர்வு அவசியமில்லை; தேர்வினை ரத்து செய் என்பதெல்லாம் அரசியல் ரீதியிலான போராட்டங்கள். அது ஒரு பக்கம் தொடரட்டும். தேர்வினை இவர்களால் தடுத்த நிறுத்த முடியுமா என்று தெரியவில்லை. அப்படி இயலாதபட்சத்தில் மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான முன்னெடுப்புகளையாவது செய்ய வேண்டும் அல்லவா? பதினொன்றாம் வகுப்பு பாடங்களும் நீட் தேர்வில் சேர்த்தி. இரண்டு வருடப் பாடங்களும் சிபிஎஸ்சி திட்டத்தின் அடிப்படையில். இயற்பியலில் எத்தனை பாடங்கள், வேதியலில் எவ்வளவு பாடங்கள், உயிரியலில் எவற்றையெல்லாம் படிக்க வேண்டும் என்கிற தெளிவை இந்நேரம் உருவாக்கியிருக்க வேண்டியதில்லையா? எந்தப் பாடத்திற்கு எவ்வளவு ‘வெயிட்டேஜ்’ என்கிற அளவுக்கு நுட்பங்களை ஆசிரியர்களுக்காவது சொல்லித் தந்திருக்க வேண்டும். உண்மையிலேயே பல மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இத்தேர்வின் அ, ஆ, இ, ஈ கூடத் தெரியவில்லை. 

கடந்த வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் flukeஇல் அடித்தவர்கள்தான். யார் எப்படி மதிப்பெண்கள் வாங்கினார்கள் என்றெல்லாம் தெரியாது. வாங்கியவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த வருடம் அப்படி இருக்காது. தனியார் பள்ளிகளும் பயிற்சி நிறுவனங்களும் மாணவர்களைத் தயார்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். தனியார் பள்ளி மாணவர்கள் உருட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அரசாங்கம்தான் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது. கடந்த வருடம் இரண்டு அரசுப்பள்ளி மாணவர்களாவது மருத்துவப்படிப்பில் சேர்ந்தார்கள். இந்த வருடம் போட்டி அதிகரிக்கும். நீட் கட்-ஆஃப் தேர்வும் தமிழகத்தில் அதிகரிக்கும். இந்த லட்சணத்தில் அரசாங்கம் இருக்குமானால் இரண்டு மாணவர்களை மருத்துவப் படிப்பில் சேர்ப்பது கூட சாத்தியமில்லாமல் போய்விடும். வெறும் புருக்கு வெளக்கெண்ணெய்க்குக் கேடு என்றொரு சொலவடை உண்டு. தமிழக அரசும் அமைச்சர்களும் டர்புர் கேஸூகளாக இருக்கிறார்கள். பாராட்டு விழாக்களை நடத்தி நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குவதை விட்டுவிட்டு உருப்படியான செயல்களில் கல்வித்துறை இறங்குவதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. 

Sep 22, 2017

நீட் 2018 - என்ன செய்யப் போகிறோம்?

பாலா மார்ஸ் அழைத்து ‘நீட் தேர்வுக்கு ஏதாவது செய்கிற திட்டமிருக்கிறதா?’ என்றார். முன்பே கூட சிலர் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்கள். தயக்கமாகத்தான் இருந்தது. ஒரு பாடத்துக்கு இருபத்தைந்தாயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை பயிற்சியாளர்களுக்குக் கொடுக்கிறவர்கள் இருக்கிறார்கள். பயிற்சியாளர்கள் வீட்டிற்கே வந்து பாடம் சொல்லித் தருவார்கள். பயிற்சியாளர்களை நியமித்தல், பயிற்சி வகுப்புகளில் சேர்த்தல் என நீட் தேர்வு பயிற்சிக்காக பல லட்சங்கள் வரைக்கும் தம்முடைய மகன் அல்லது மகளுக்காகச் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். குழிக்கு ஏற்ற பணியாரம் என்கிற கதையாக நாம் கொடுக்கிற தொகைக்கு ஏற்ப விதவிதமான கவர்ச்சிகளுடன் பாடம் நடத்துகிற பயிற்சி மையங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஈசல் பூச்சியென பெருகியிருக்கும் இந்த கூட்டத்துக்குள் நாம் என்ன செய்ய முடியும் என்ற யோசனையில்லாமல் இல்லை.

கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள், மாணவர்கள், பாலா மார்ஸ் மாதிரியான ஆர்வலர்கள் என்று பல தரப்பினரிடமும் பேசியதிலிருந்து யோசனை இப்பொழுது ஒரு வடிவத்துக்கு வந்திருக்கிறது.  பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பத்து முதல் பதினைந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அத்தனை பேரும் அரசுப் பள்ளி மாணவர்களாக இருப்பார்கள். தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின மாணவர்கள் என்றால் முன்னுரிமையளிக்கலாம். மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள், தலைமையாசிரியரின் பரிந்துரை, குடும்பச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏன் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் என்று கேட்டால் அரசுப்பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களில் பயிற்சி வகுப்புக்கான கட்டணம் கூட செலுத்த முடியாதவர்கள் அவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இன்னொரு காரணம்- நம்முடைய இலக்கும் சிறியதாக இருக்கும். சுமாரான மதிப்பெண்களை வாங்கச் செய்தால் கூடப் போதும். கல்லூரியில் இடம் வாங்குவது எளிது.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு அக்டோபர் மாதத்திலேயே ஒரு நாள் பயிலரங்கை நடத்தி நீட் தேர்வு குறித்தான முழுமையான புரிதலை அளிக்க வேண்டும். அதே நாளிலேயே நீட் பயிற்சிக்கான புத்தகங்களையும் அவர்களுக்கு வழங்கி அந்தந்த பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கண்காணிக்கச் சொல்லலாம். கண்காணிக்கும் ஆசிரியர்களும் நம் மாணவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். மார்ச் மாதம் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிவடைகின்றன. அநேகமாக மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெறும். இடைப்பட்ட நாற்பது நாட்களும் மாணவர்களை ஓரிடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு கொடுத்து பயிற்சி ஆசிரியர்களை நியமித்து- அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும்- பயிற்சியளித்து தேர்வுக்கு அனுப்பலாம்.

செய்ய இயலாத காரியமில்லை. சிலவற்றில் கவனத்தைச் செலுத்த வேண்டும். உதாரணமாக மாணவர்கள் கணிதத்தை தவிர்த்து விட்டு மருத்துவப் படிப்பிலும் சேர முடியாமல் போனால் அவர்களை நட்டாற்றில் விட்டது போல ஆகிவிடும். அதனால் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு இறுதி வரைக்கும் அவர்கள் நான்கு பாடத்திலுமே கவனம் செலுத்துவதுதான் சரி. ஓரிடத்தில் தங்க வைத்துப் படிக்க வைப்பதென்றால் விடுதி வசதியுடன் கூடிய பள்ளிக்கூடமாக இருந்தால் சரியாக இருக்கும். நாற்பது நாட்களும் மாணவர்களை கவனித்துக் கொள்வதற்காக தன்னார்வலர்களோ அல்லது விடுதிக் காப்பாளரோ தேவையாக இருக்கும். அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கான கால அட்டவணையைத் தயார் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு இடையிடையே உளவியல் பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்குவதற்கான சரியான நிபுணர்களைப் பிடிக்க வேண்டும். நாற்பது நாட்களுக்கு மாணவர்கள் வெளியூரில் தங்குவதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும். உள்ளூர் ஆசிரியர்கள் நம்மைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி நிறைய இருக்கின்றன. சற்றே மெனக்கெட வேண்டியிருக்கும். செய்து பார்த்துவிடலாம்.

வார இறுதியில் ஐந்தாறு பள்ளிகளின் தலையமையாசிரியர்களைச் சந்திக்கும் திட்டமிருக்கிறது. இன்னமும் சில நாட்களில் கூடுதலான தெளிவு கிடைக்கும். 

அக்டோபர் மாதத்தில் நடைபெறும் ஒரு நாள் பயிலரங்கில் கலந்து கொள்வதற்கும், நாற்பது நாட்கள் தங்கிப் படிப்பதற்கும் தயாராக இருக்கும் மாணவர்கள்- நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களாக இருப்பின் தெரியப்படுத்துங்கள். ஏனோதானோ என்றிருக்கும் மாணவர்களை விட்டுவிடலாம். அவர்களையும் நசுக்கி நாமும் நம்முடைய உழைப்பை வீணடித்துக் கொள்ள வேண்டியதில்லை. அதிகபட்சம் பதினைந்து மாணவர்களைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள், தாழ்த்தப்பட்ட/பழங்குடியின மாணவர்களுக்குத்தான் முன்னுரிமையளிக்கலாம். மார்ச் மாதம் வரைக்கும் மாணவரை ஆத்மார்த்தமாகக் கவனித்துக் கொள்ளும் ஆசிரியர் ஒருவரும் அந்தந்தப் பள்ளியில் இருப்பது அவசியம்.

எவ்வளவு மாணவர்களை மருத்துவர்களாக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இறங்கிப் பார்த்துவிடலாம். இதுவொரு சீரிய சோதனை முயற்சியாக இருக்கும். இந்த முயற்சியில் கற்றுக் கொள்ளும் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்தடுத்த வருடங்களில் திட்டத்தை மாற்றியமைக்கலாம்.

கேள்வி பதில்கள்

நிசப்தம் blog மூலமா வருகின்ற உங்களது சொந்த வருமானம் எவ்வளவு வருடத்திக்கு ?

நிசப்தம் தளத்தில் சில கட்டுரைகளை வாசித்திருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. சமீபத்தில் ஒரு மாணவி கல்லூரியியொன்றில் சான்றிதழ்களைக் கொடுத்து பணத்தையும் கட்டிவிட்டாள். அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. தான் சேர்ந்திருந்த கல்லூரியில் சான்றிதழ்களைக் கேட்ட போது நவம்பருக்கு மேலாகத் தருவதாகச் சொல்லிவிட்டார்கள். தகவல் கிடைத்த பிறகு தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் மூலமாக கல்லூரியில் பேசினோம். இன்று காலை அந்தப் பெண் அழைத்து சான்றிதழ்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாகச் சொல்லி நன்றி தெரிவித்தாள். மாணவியை அறிமுகப்படுத்தியவர் நிசப்தம் வாசிப்பவர். கல்லூரியில் பேசிய அதிகாரி நிசப்தம் வாசகர். இதுவொரு சாம்பிள். இத்தகைய தொடர்புகளும் நட்புகளும்தான் நிசப்தம் மூலமான எனது வருமானம். தினசரி இரண்டு அலைபேசி அழைப்புகள். மாதம் இருபத்தைந்து மின்னஞ்சல்கள். மற்றபடி, வருடந்தோறும் அறுநூறு ரூபாயை நிசப்தம்.காம் என்ற டொமைனுக்காக கூகிளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். 

"சனியன் தொலைந்தது" என்று நிசப்தத்தில் எழுதியபோது கடுமையாக மிரட்டப்பட்டீர்களா?

சில நாட்கள் கழித்து ஒரு அழைப்பு வந்தது. ‘சசிகலாவை சிறையில் சந்திக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கு நல்லதொரு புரிதல் உருவாகும். ஏற்பாடு செய்கிறோம்’ என்றார். மிரட்டுவதற்காக அழைத்திருக்கிறார்கள் என்று நினைத்த எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. உடனடியாகச் சந்திக்க விரும்பவில்லை என்றும் சில காலம் கழித்து நானே தொடர்பு கொள்வதாகவும் சொல்லித் தவிர்த்தேன். 

எல்லா மக்கள் வரிப் பணத்தையும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழான்னு சொல்லி எல்லா மாவட்டத்திலும் செய்து கட்சியை விளம்பரப்படுத்துறாங்க. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கு செய்த செலவை வேற நல்ல விஷயத்துக்கு, குறைந்த பட்சம் விவசாய முன்னேற்றத்திற்காவது செலவு செய்ய வேணும்னு சொல்லி அய்யாக்கண்ணு நீதிமன்றம் கதவை தட்டப்போறதா உங்களுக்கு கனவு வந்ததா?

அணைகிற மெழுகு எப்பொழுதும் பிரகாசமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வது இயல்புதான். சொன்னால் மட்டும் கேட்கவா போகிறார்கள்? 

சில எழுத்தாளர்களுக்கு இணையத்தில் வாசகர்கள் எழுதும் கடிதங்களை வாசித்திருக்கிறேன் பெரும்பாலானவர்கள் தங்களை மிக தாழ்மையாக காட்டிக்கொள்வதாகவே எனக்கு படுகிறது "பிழை இருப்பின் அடியேனை மன்னியுங்கள் போன்ற வரிகளை படிக்க நேரிடும்போது அது ஒருவித மரியாதையாக இருந்தாலும் ஒரு அதீதமான அடிமைத்தனம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எழுத்தாளர்கள் என்றாலே எல்லாம் தெரிந்தவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமில்லை. நெருங்கிப் பார்த்தால் சாமானிய மனிதரைவிடவும் இலக்கியம் தெரிந்தவர்களிடம்தான் வன்மமும் பொறாமையும் எரிச்சலும் சிறுமைத்தனமும் அடுத்தவர்களை மட்டம் தட்டும் குணமும் அதிகமாக இருக்கும். தம்மைப் பற்றிய அளவுகடந்த பிம்பத்தை தமக்குத்தாமே கட்டி வைத்திருக்கிற எழுத்தாளர்கள் நிறைய உண்டு. கடந்த சில வருடங்களாக இலக்கியக் கூட்டங்களில் பார்வையாளராகக் கூட கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதும் கூட இத்தகைய மனநிலையினால்தான். எழுத்தை ஆராதிப்பதற்கும் எழுத்தாளர்களை ஆராதிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

வாழ்க்கையில் தேவையில்லாத குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே உள்ளது. சிறு சிறு விஷயங்களுக்கு கூட. விடுபட வழி கூறவும்.

தவறு செய்யாத மனிதர்கள் உண்டா? தவறு செய்யும் போதெல்லாம் ‘செய்தாகிவிட்டது. இனி இதைச் செய்யமாட்டேன்’ என்று விருப்ப தெய்வத்தின் மீது மனதார சத்தியம் செய்துவிடுவேன். முயற்சித்துப் பாருங்கள். அப்படியும் முடியவில்லையென்றால் இன்றைய அரசியல்வாதிகளை நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களைவிடவா மிகப்பெரிய தவறுகளை நாம் செய்துவிடப் போகிறோம்?

ஒரு கற்பனைக் கேள்வி. கமல் கட்சி தொடங்கினால் அவரது கட்சியில் இணைந்து கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போடலாமே? உங்களது கருத்து.

கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் மிகச் சுலபமாக ஜெயிப்பார்.

நான் புத்தகம் வெளியிட வேண்டும் என்று ஆவலாக உள்ளேன். ஆனால் அதற்கான வழிமுறைகள் குறித்து தெரியவில்லை. ஏதாவது உதவி செய்ய முடியுமா தோழரே?

புத்தகம் வெளியிடுவதற்கு முன்பாக படைப்புகளை பல்வேறு பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கள். அவை வெளியானால் நம் எழுத்தில் ஏதோவொரு ஈர்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். வெளியாகவில்லையெனில் எதனால் நிராகரித்தார்கள் என்று யோசித்துப் பார்த்து நம் எழுத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். ஓரளவுக்குப் பரவலாக படைப்புகள் வெளியாகி நம்முடைய பெயருக்கு கவனம் கிடைத்துவிட்டால் பதிப்பாளர்களை அணுகுவதில் சிரமம் இருக்காது. அப்படியில்லையெனில் போலி பதிப்பாளர்கள் நிறைய இருக்கிறார்கள். புத்தகம் வெளியிடுவதற்கே காசு கேட்பார்கள். அதற்கு பெயர் வெளியிடுதல் இல்லை. அச்சிடுதல். பணத்தை வாங்கிக் கொண்டு அச்சிட்டு பிரதிகளை நம்மிடம் கொடுத்துவிடுவார்கள். நோட்டீஸ் கொடுப்பது போல ஆளாளுக்கு ஒரு பிரதியைக் கொடுக்க வேண்டியதுதான். 

நா.முத்துக்குமாரின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன-

பொண்டாட்டி தாலியை 
அடகு வச்சு 
புஸ்தகம் போட்டேன் 
தாயோளி 
விசிட்டிங் கார்டு மாதிரி 
ஓசியில் தர வேண்டியிருக்கு

Sarahah வில் வந்த கேள்விகள்.

Sep 21, 2017

என்னதான் நடக்கிறது?

‘இந்திய அளவில் ஏன் வேலை வாய்ப்புகள் குறைகின்றன?’ என்ற கேள்விக்கான பதில்களைத் எழுதுகிறேன் பேர்வழி என ஆரம்பித்து ‘மோடிதான் காரணம்’ என்று எழுதினால் ‘த்தா...புள்ளிவிவரம் இருக்கா?’ என்று கூட்டம் வரும். எதுக்குய்யா வம்பு என்று ஒதுங்கினால் ‘மோடிதான் காரணம்ன்னு எழுதவேயில்லை.. நீ என்ன ட்ரவுசரா?’ என்று இன்னொரு கூட்டம் வரும். எத்தனை பேரைப் பார்த்திருப்போம்?

ஏற்றிவிட்டுப் போய்விடுவார்கள். மத்தளமா என்ன? இருபக்கமும் அடி வாங்குவதற்கு? காதிலேயே போட்டுக் கொள்ளாமல் நகர்ந்துவிட வேண்டும். எங்கே விடுகிறார்கள்?

தேசிய அளவிலான வேலை வாய்ப்புகளைப் பற்றிப் பேசும் போது மென்பொருள்/தொழில்நுட்பத் துறையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. உற்பத்தித் துறை, போக்குவரத்து, கல்வி, நல்வாழ்வு, கட்டமைப்பு என சகலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்வதேச பொருளாதார மந்தத் தன்மை போன்ற காரணங்கள் ஒரு பக்கமும், பண மதிப்பிழப்பு, தவறான கொள்கை முடிவுகள் போன்ற காரணங்கள் இன்னொரு பக்கமும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிக்கான தேவைகளின் சுருக்கம் என மற்றொரு பக்கமும் என பன்முகமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் பேச வேண்டியிருக்கிறது.

ஒரு துறையின் வளர்ச்சியும் வேலை வாய்ப்புகளும் ஏன் சுருங்குகிறது என்று ஆராய வேண்டுமானால் மெனக்கெட வேண்டியிருக்கும். நிறையப் புள்ளிவிவரங்களும் தேவை.

உதாரணமாக, வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் உற்பத்தித் துறை (Manufacturing) மிக முக்கியமானது. திறனற்ற (Unskilled) மற்றும் அரைத் திறன்(Semi Skilled) தொழிலாளர்களுக்கான லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உற்பத்தித் துறைதான் உருவாக்கித் தருகிறது. மோடி பிரதமர் ஆனபிறகு மேக்-இன்-இந்தியா என்ற திட்டத்தை பிரம்மாண்டமாக அறிவித்தார். இந்தியாவில் உற்பத்திகளை வலுவூட்டி இன்றைக்கு உற்பத்தியில் ராஜாவாக இருக்கும் சீனாவை வீழ்த்தப் போகிறோம் என்று மார் தட்டினார்கள்.

அந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறதா? India's Industrial Production(IIP) என்பது சுரங்கம், மின்சாரம், உற்பத்தி  உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியைக் காட்டக் கூடிய கணக்கீட்டுப் புள்ளி. இதில் 75% உற்பத்தித் துறையின் பங்களிப்புதான். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எவ்வளவு குறைந்திருக்கிறது என்று கீழ்கண்ட புள்ளி விவரத்தில் தெரிந்து கொள்ளலாம். ஏகப்பட்ட விளம்பரங்கள், பில்ட்-அப்புகளுக்குப் பிறகும் IIP ஐ கீழே இழுத்துக் கொண்டு போகிறது என்றால் அரசாங்கம் தோற்றுப் போயிருக்கிறது என்றுதானே அர்த்தம்?  ஒருவேளை அந்தத் திட்டம் வெற்றியடைந்திருக்குமாயின்  IIP உச்சத்திற்குச் சென்றிருக்க வேண்டும். நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை.

பிரதமர் வெளிநாடுகளுக்குப் பயணிக்கிறார். முதலீடுகளை ஈர்த்து வருவதாகச் சொல்கிறார்கள். அது என்னவோ உண்மைதான். எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு 60 பில்லியன் டாலர்கள் வந்து குவிந்திருக்கிறது. ஆனால் அதன் விளைவுகள் என்ன என்பதை யாராவது சொல்ல வேண்டும். 

முந்தைய ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் எவ்வளவு சதவீதம் வெளிநாட்டு முதலீடுகள் இருந்தனவோ அதே சதவீதத்தில்தான கடந்த மூன்றாண்டுகளாகவும் தொடர்கிறது (சுமார் 30%). மீதமிருக்கும் எழுபது சதவீத முதலீடானது சேவைத் துறைக்குத்தான் செல்கிறது. மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களில் மேக்-இன் இந்தியா பற்றிப் பேசுகிறார். இதனை அவரது கனவுத் திட்டமாகவும் சொல்கிறார். ஆனால் அவரால் ஏன் உற்பத்தித் துறையில் பெருமளவும் முதலீட்டை ஈர்க்க முடியவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும். முப்பது சதவீதம் வெளிநாட்டு முதலீடும் கூட புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவே பயன்படுத்தப்பட்டனவா என்றும் ஆராய வேண்டியிருக்கிறது. கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளாகவே உற்பத்தித் துறையில் முதலீடு செய்யப்படும் பணமானது பிற நிறுவனங்களை வாங்கவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக நிறுவனம் X இல் முதலீடு செய்யப்படும் பெருந்தொகையைக் கொண்டு நிறுவனம் Y ஐ வாங்கி தம்மோடு இணைத்துக் கொள்வார்கள். இருப்பதை இணைத்தால் புதிதாக எப்படி வேலை வாய்ப்பு உருவாகும்? வெறுமனே முதலீடு மட்டும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. நாட்டின் பல இடங்களிலும் அதற்கான களம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி, பொருளாதார சிறப்பு மண்டலங்கள் ஆகியவை சுறுசுறுப்பாக அறிவிக்கப்பட்டதோடு சரி. கடந்த மூன்றாண்டுகளில் என்ன முன்னேற்றம் இருக்கிறது? எல்லாவற்றையும் செய்திகளிலும் செய்தித்தாள்களிலும் மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதே சமயம் கடந்த இரண்டாண்டுகளாக நிலவிய கடும் வறட்சியானது உழவுத்தொழிலைக் கடுமையாக பாதித்ததையும் அதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான தேவை குறைந்ததையும் புள்ளிவிவரங்களில் சேர்க்காமல் உற்பத்தித் துறையின் சுணக்கத்தைப் பேச முடியாது. மேக்-இன்-இந்தியா மாதிரியான பெரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் கூட இந்தியாவானது Free Trade Area என்பது முக்கியமான விஷயம். இங்கே தொடங்கப்படும் நிறுவனங்கள் இறக்குமதி செய்து கொள்ள பெருமளவு கட்டுப்பாடுகள் இல்லை. இறக்குமதி அதிகரிக்கும் போது இங்கேயிருக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அத்தகைய நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைப்பதும், ஆட்களைக் குறைப்பதும், புதிய வேலைகளை உருவாக்காததும் வேலைச் சந்தையில் பெரும் பாதிப்பை உருவாக்குகின்றன.

உலகளவிலான வணிகம், பொருளாதாரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் என மேக்ரோ காரணங்களும் மைக்ரோ காரணங்களும் கலந்து காலி செய்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் சேவைத் துறையில் கிட்டத்தட்ட எழுபது சதவீத வெளிநாட்டுப்பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. சேவைத் துறை என்றால் வங்கிகள், ஆயுள் காப்பீடு, கல்வி, தொழில்நுட்பம் என நிறையத் துறைகள் உண்டு. ஆனாலும் அவை பெருமளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கியதற்கான தரவுகள் எதுவுமில்லை. உற்பத்தித் துறையில் ஏன் வேலைவாய்ப்புகள் குறைந்தன என்று காரணங்களைப் பட்டியலிடுவதைப் போலவே ஒவ்வொரு துறையிலும் காரணங்களை அலச முடியும். அதற்கு அசாத்திய பொறுமையும், நிறைய புள்ளிவிவரங்களும் தேவைப்படும்.

மென்பொருள் துறை சுருங்குவதற்கு புதிய தொழில்நுட்பங்கள், உலக அளவிலான தொழில்துறை அழுத்தம், ஆட்டோமேஷன் என்று நிறையக் காரணங்களைப் பட்டியலிடலாம். 2021 ஆம் ஆண்டுவாக்கில் ஐடியின் சேவைத் துறை (Services) கிட்டத்தட்ட பதினான்கு சதவீதம் சுருங்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு மென்பொருள் பராமரிப்பு (Software Maintenance) என்பதன் வழியாக பல நிறுவனங்கள் வருமானம் கொழித்துக் கொண்டிருக்கின்றன. ஐந்து பேர்களை ஆன்-சைட்டுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள். நாற்பது பேர்கள் இந்தியாவில் இருப்பார்கள். ஐந்து பேர்களும் வெளிநாட்டு வாடிக்கையாளரிடம் ‘அந்த வேலையைச் செய்ய நாலு பேரு வேணும்..இந்த வேலையை ரெண்டு நாள்ல முடிச்சுத் தர்றோம்’ என்று பேசிப் பேசி வாங்கி அனுப்புவார்கள். இங்கே வேலை செய்து அனுப்பி வைப்பார்கள். இப்பொழுது பல நிறுவனங்கள் பராமரிப்பு என்பதை செலவினத்தில் சேர்த்திருக்கின்றன. செலவைக் குறைக்க முயற்சிக்கின்றன. அதற்காக ஆட்களைக் குறைக்கிறார்கள். சர்வீஸ் நிறுவனங்கள் அடி வாங்க இதுவொரு முக்கியக் காரணம். எல்&டி பதினான்காயிரம் பேர்களை வெளியேற்றியது. காக்னிசண்ட், விப்ரோ, டிசிஎஸ், டெக் மஹிந்திரா போன்ற பல சேவை சார்ந்த நிறுவனங்கள் ஆட்களை வெளியேற்றியதையெல்லாம் நினைவு படுத்திக் கொள்ளலாம். 

புதிய நுட்பங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதுதான் ஐடிதுறையில் மிகப்பெரிய அச்சுறுத்தல். ஜூன் 2017 இல் எக்னாமிக் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் அறுபத்தைந்து சதவீதம் பேர் புதிய தொழில்நுட்பங்கள்தான் பழைய ஆட்களை வெளியில் தள்ளுகின்றன என்று பயப்பட்டிருக்கிறார்கள். இதுதான் நிதர்சனம். இதைத்தான் திரும்பத் திரும்பப் பேச வேண்டியிருக்கிறது.

ஒரு துறை சுணங்கிப் போவதற்கு யார் காரணம்? என்ன காரணம்? என்கிற விவாதங்கள் தேவைதான். நிறையப் பேசலாம். ஆனால் பொருளாதார நிபுணர்கள் பேச வேண்டிய விவகாரம் இது. என்னைப் போன்ற அரைவேக்காடுகளும், போலி பொருளாதாரப் புலிகளும், உட்டாலக்கடி புரட்சியாளர்களும் பேசினால் முன்முடிவுகளுடன் ஒற்றைத்தன்மையுடன்தான் அணுகுவார்கள்.  அப்படி அணுகுவதால் ஏதேனும் பயன் இருந்தால் செய்யலாம்தான். யாராவது சண்டைக்கு வந்தால் பதிலுக்குப் பதில் என்று சூடான களமொன்றை உருவாக்கி கூட்டம் சேர்த்து பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கலாம்.

சச்சரவுகளிலிருந்து விலகி நின்று புதிய தொழில்நுட்பங்கள் என்ன, எவற்றுக்கான தேவை இருக்கிறது, எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என உரையாடினால் தேடலும் விரிவாகும் யாராவது ஓரிருவருக்காவது பயன்படவும் செய்யும். அதைச் செய்யலாம். 

Sep 20, 2017

வேலை கிடைக்குமா?

ஒருவர் அழைத்திருந்தார். பெயர் அவசியமில்லை. முப்பத்தேழு வயதாகிறது. பெங்களூரில் ஒரு அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கி தவணை கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு மகள். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். மனைவி இல்லத்தரசி. கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென்று வேலையை விட்டு அனுப்பிவிட்டார்கள். இடிந்து போயிருக்கிறார். முன் பின் அறிவிக்கப்படாத வேலை இழப்பு. ‘பெருசா சேமிப்புன்னு எதுவுமில்லை...ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா?’ என்றார். இரண்டு மாத அடிப்படைச் சம்பளத்தை மட்டும் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக குறைந்தது பத்துப் பேர்களிடமாவது பேசியிருப்பேன். வேலைச் சந்தை அப்படியொன்றும் நன்றாக இல்லை. இவருக்கு என்றில்லை- வேறு சில நண்பர்களுக்காகவும் கடந்த சில நாட்களாக விசாரித்தால் ‘ஜனவரிக்கு மேல பார்க்கலாம்’ என்கிறார்கள். புதிய ஆட்களை எடுக்க எந்த நி்றுவனமும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

கடந்த ஒன்றரை வருடங்களாகவே வேலைச் சந்தை அடி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. பெருநிறுவனங்கள் ஆட்களை வெளியேற்றின.  ட்ரம்ப்பைக் காரணம் காட்டி பல நிறுவனங்கள் தமது பணியாளர்களின் கழுத்துக்களை நோக்கி கத்திகளை வீசின. பல நிறுவனங்கள் வெளியே சத்தம் வராமல் கமுக்கமாக கதையை முடித்தன. வேலை இழந்து தேடிக் கொண்டிருக்கிறவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கக் கூடும். 2017 அக்டோபருக்கு மேலாக நிலைமை சீரடைந்துவிடும் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சூழல் மாறியது போலத் தெரியவில்லை. இப்பொழுது ஜனவரியை நோக்கி விரல் நீட்டுகிறார்கள். 


எனக்குத் தெரிந்து மட்டுமே நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும். துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்குமானால் நிலைமையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

கடந்த பத்து அல்லது பதினைந்தாண்டுகளாக பெங்களூரிலும் கோவையிலும் தனது விரிவாக்கத்தைச் செய்து கொண்டிருந்த ஜெர்மானிய பெருநிறுவனமொன்று சத்தமில்லாமல் பல ப்ராஜக்ட்களை வியட்நாமுக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இன்னோர் இந்திய ஐடி சேவை நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் கம்போடியா சென்று வருகிறார். அங்கே நிறுவனத்தை வலுப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கிறார்கள். ஆட்களை எடுத்து, பயிற்சியளித்து வேலையை அங்கே அனுப்ப வேண்டும் என்பது இவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் இலக்கு.

‘அங்கே சம்பளம் குறைவு’ என்பது மட்டுமே காரணமில்லை. இங்கே நிறுவனங்கள் இழந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஆதரவு, திறமையான ஆட்களுக்கான பற்றாக்குறை என பல்லடுக்குச் சிக்கல் இது. யாரைக் கேட்டாலும் ‘எங்க கம்பெனியில் hiring freeze' என்கிறார்கள். கடந்த வருடம் கல்லூரிகளில் வளாகத் தேர்வில் மாணவர்களைத் தேர்ந்தெடுத்துச் சென்ற பல நிறுவனங்கள் இன்னமும் மூச்சுவிடவில்லை. படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்வதற்காகக் காத்திருக்கும் மாணவர்களிடம் பேசினால் பதறுகிறார்கள். 

ஒரு காலத்தில் சிடிஎஸ் நிறுவனத்தை சொர்க்கம் என்பார்கள். வேலையிலிருந்து வெளியேற்றுவது வெகு அரிது. நாற்பது வயசுக்கு மேல அதுல சேர்ந்துட்டா ரிட்டையர்மெண்ட் வரைக்கும் காலத்தை ஓட்டீவிடலாம்’ என்று ஒரு சக நண்பர் சொன்னது நினைவில் இருக்கிறது. இன்றைக்கு அந்த நிறுவனமே கதகளி ஆடிக் கொண்டிருக்கிறது. மேல்மட்ட ஆட்கள் பலர் வேலையை விட்டு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். சிடிஎஸ்ஸே அப்படியெனில் அந்தக் காலத்திலேயே சர்வசாதாரணமாக வெட்டிக் கொண்டிருந்த நிறுவனங்களைப் பற்றியெல்லாம் கேட்கவே வேண்டியதில்லை. ரத்த வேட்டைதான்.

பன்னாட்டு கார்போரேட் நிறுவனங்களுக்கு இலாபம் மட்டுமே முதற்குறிக்கோள். இலாபம் குறையும் போது செலவினங்களைக் குறைக்க முயற்சிக்கிறார்கள். முதல் செலவினமாக ஊழியர்களின் சம்பளம் அவர்களின் கண்ணில்படுவது துரதிர்ஷ்டம்தான். ஓலா, ஊபர் மாதிரியான நிறுவனங்கள் வரைக்கும் யாருமே விதிவிலக்கில்லை. கடந்தாண்டுகளில் மாதம் 32000 ரூபாய் வரைக்கும் வருமானம் பார்த்துக் கொண்டிருந்த ஓட்டுநர்களுக்கு இந்தாண்டு மாதம் சராசரியாக 21000 ரூபாய் கூட வருவதில்லை என்ற புள்ளிவிவரம் கண்ணில்பட்டது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இலாபம் மீதான வெறி நிறுவனங்களுக்கு அதிகமாகிறது. நிறைய பிடித்தம் செய்யத் தொடங்கியிருக்கின்றன. ஓலா, ஊபரில் போகும் போது ஓட்டுநர்களிடம் கேட்டுப் பார்க்கவும்.

ஐடி துறையில் மட்டுமில்லை- பொதுவாகவே பல துறைகளிலும் இதுதான் சூழல். ஊழியர்களால் உடனடியாக வேலை மாற முடியாத சூழலை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. சம்பள உயர்வை நிறுத்தி வைக்கின்றன. பணி உயர்வை தாமதப்படுத்துகின்றன. புதியவர்களை வேலைக்கு எடுக்காமல் முன்பு ஐந்து பேர்கள் சேர்ந்து செய்த பணியை இப்பொழுது மூன்று பேர்களை வைத்துச் சமாளிக்கச் சொல்லி அழுத்துகிறார்கள். ஏதேனும் சுணக்கம் காட்டுகிறவர்களை ‘பெர்பார்மன்ஸ் சரியில்லை’ என்று முத்திரை குத்துகிறார்கள். உற்பத்தித் துறை, வங்கி, விளம்பரம் என எந்தத் துறையில் இருப்பவர்களிடமும் இயல்பாகப் பேசிப் பார்க்கலாம். ‘வேலை எப்படிப் போகுது?’ என்று கேட்டால் பதில் சொல்வார்கள்.

சர்வதேச அளவில் மந்தநிலை காணப்படுகிறது என்ற ஒற்றைக் காரணத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதுவும் முக்கியமான காரணம் என்றாலும் இந்திய வணிகச் சூழல், அரசாங்கங்களின் கண்காணிப்பு இல்லாமை எனத் தொடங்கி இதுவரையிலும் பல நிறுவனங்கள் தமது ஊழியர்களை வெறும் சுரண்டலுக்கு மட்டுமே பயன்படுத்தின என்பது வரைக்கும் நிறையக் காரணங்களை அடுக்க முடியும். ஒருவன் வெப்சைட் வடிவமைப்பாளராகப் பணியில் சேர்ந்தால் அவன் ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் அதில் மட்டுமே வேலை செய்ய வேண்டும். அவன் வேறு தொழில்நுட்பங்களைப் பற்றி யோசிக்கக் கூட வாய்ப்பளிக்காத பணிச்சூழல்தான் இங்கே நிலவுகிறது. அவன் வேலை செய்து கொண்டிருக்கு மென்பொருளானது சந்தையில் தமது இடத்தை இழக்கும் போது அதில் பணியாற்றிய ஊழியனும் வேலையை இழக்கிறான். இதுவொரு கொடுமை.

தம்மை புதிய நுட்பங்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்வதும், சந்தையில் நிலவும் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் வழியாக இன்னமும் சில ஆண்டுகளுக்கு பணியில் இருக்க முடியும். ஊளைச்சதையாக தொங்குகிறவர்களை-  நிறுவனங்கள் அப்படித்தான் குறிப்பிடுகின்றன- பெருத்த இலாபம் தராத தொழில்நுட்பங்களை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு- தமக்கு ஊளைச் சதையாக இருப்பவர்களை வெட்டி வீசுவதற்கு எந்த நிறுவனமும் தயங்கப் போவதில்லை. கடந்த வாரத்தில் வேலைச் சந்தை நிபுணர் ஒருவரிடம் பேசிய போது ‘திஸ் சிச்சுவேஷன் வில் கண்டினியூ’ என்றார். அவர் கணிப்புப்படி அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்காகவாவது வருடம் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பேர் வேலையிழப்பார்கள் என்றார்.

பயப்படவும் பதறவும் எதுவுமில்லை. வேட்டைக்காடு இது. அப்படித்தான் இருக்கும். எல்லாவற்றுக்கும் நம்மைத் தயார் செய்து கொள்வது நம் கைகளில்தான் இருக்கிறது.

Sep 19, 2017

இயங்கும் உலகம்

சில க்ளிஷேவான புலம்பல்கள் உண்டு. ‘இந்தக் காலத்து பசங்க இருக்காங்களே...’ என்று ஆரம்பிப்பார்கள். ‘அவனெல்லாம் பொழைக்கறதுக்கு பரதேசம் போய்ட்டான்..ஊரைப்பத்தி அவன் நினைக்கவா போறான்?’ என்பது மாதிரியான தட்டையான புலம்பல்கள். அப்படியெல்லாம் நாமாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். மிகச் சமீபத்தில் மட்டும் இரண்டு குழுக்களுடன் தொடர்பு உண்டானது. ஒரு குழு காங்கேயம் பக்கம். இன்னொரு குழு நாமக்கல் பக்கம். தனித்தனி வெவ்வேறு குழுக்கள். அவர்களுக்குள் அறிமுகமில்லை. ஆனால் இரண்டு குழுவினரிடமும் ஒற்றுமை உண்டு. குழுக்களை இயக்குகிறவர்கள் உள்ளூரில் இல்லை. அந்தந்த ஊரில் பிறந்து வளர்ந்து பிழைப்புக்காக பெங்களூருவுக்கும் சென்னைக்கும் அமெரிக்காவுக்கும் பரதேசம் போனவர்கள்தான். 

நிலம் காய்ந்து நிலத்தடி நீர் வற்றி ஊரே பாலையாகிக் கொண்டிருந்த போது நம் ஊருக்கும் எதையாவது செய்வோமே என்று களமிறங்கியவர்கள் அவர்கள். ஆட்களைத் திரட்டி, நிதி சேர்த்து, என்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்வது என்றெல்லாம் மண்டை காய்ந்து- அந்தவகையில்தான் தொடர்பு கொண்டார்கள். ‘நீங்க இந்த மாதிரி வேலைகளைச் செய்யறதாச் சொன்னாங்க..நாம பேசுவோமா?’ என்று பேசத் தொடங்கினார்கள். இன்றைக்கு காங்கேயம் அருகில் மரவம்பாளையத்தில் ஐந்து ஏக்கர் குளத்தை ஒரு குழுவினர் சரி செய்ய, பேளுக்குறிச்சியில் இன்னொரு குழுவினர் மற்றொரு ஏரியைத் தூர் வாரியிருக்கிறார்கள்.

இரண்டு ஊர்களிலும் பணி முடிந்துவிட்டது. பேளுக்குறிச்சி ஏரியைத் தூர்வாரிய wakeourlake என்ற குழுவினர் ஒரு படி மேலே போயிருக்கிறார்கள். தூர் வாருவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் ஏரிக்கான நீர் சேகரிப்புப் பகுதியைச் சீராக்கி, தங்களுடைய அனுபவங்களையெல்லாம் பட்டியலிட்டு ஒரு வழிகாட்டும் ஆவணம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார்கள். அவர்கள் ஏரியின் புதர்களை வெட்டி நீர் வரத்துப் பாதைகளைச் சரி செய்த அடுத்த நாளிலேயே பெருமழை பெய்து ஏரி நிரம்பியிருக்கிறது. தாம் சீர்படுத்திய ஏரி மழை நீரால் நிரம்புவதை நேரடியாகப் பார்ப்பதற்கு பெரும் வரம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் பெற்றிருக்கிறார்கள். 

அடுத்தகட்டமாக கொல்லிமலையில் இருக்கும் ஏரி ஒன்றை நோக்கி மண்வெட்டியையும் கடப்பாரையையும் தூக்கிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். கொல்லிமலையிலிருந்து இறங்கும் நீர் இந்த ஏரியில் சேகரமாகிறது. இந்தப் பணியைச் சரியாக செய்து முடித்தால் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து பேளுக்குறிச்சி வரை சுமாராக 1500 விவசாயிகள் பலன் அடைவார்கள் என்றும்  ‘உங்களுக்குத் தெரிஞ்ச தன்னார்வலர்கள், ஸ்கூல் என்.எஸ்.எஸ் எல்லாம் இருந்தால் சொல்லுங்க’ என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது. 

இத்தகைய களப்பணியாளர்களிடம் பேசவும் கற்றுக் கொள்ளவும் நிறைய இருக்கின்றன. எந்த இடத்திலும் துருத்திக் கொண்டிருக்கமாட்டார்கள். தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் மாட்டார்கள். தாம் உண்டு தம் வேலையுண்டு என்று அடுத்தடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறவர்கள் இவர்கள்தான். இத்தகைய மனிதர்களைக் கவனப்படுத்துவதும் ஒற்றைச் சொல்லிலாவது வாழ்த்துச் சொல்வதும் அவசியம். அவர்கள் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் அதுவொரு உற்சாக டானிக். 

போகிற போக்கில் கடந்து போனால் இவர்கள் செய்கிற பணிகளின் அருமையும் மகத்துவமும் தெரியாது. 

எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு தம்முடைய நேரத்தையும் உழைப்பையும் ஏரியைத் தூர் வாருவதிலும் குளத்தை ஆழப்படுத்துவதிலும் செலவிடுவதற்கு பெரிய மனம் வேண்டும். உள்ளூர்களில் எவ்வளவு ஆதரவு இருக்கும் என நினைக்கிறீர்கள்? ஒரு திட்டம் வெற்றிகரமாக முடியும் போது வேண்டுமானால் நிழற்படத்துக்கு பாவனை காட்டுவதற்காகக் கூட்டம் சேரும். ஆனால் களத்தில் வேலை நடக்கும் போது ஐந்து சதவீத உள்ளூர்வாசிகள் கூட நிற்கமாட்டார்கள். விதிவிலக்குகள் என ஒன்றிரண்டு ஊர்கள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான ஊர்களில் நிலைமை அப்படித்தான். ‘வர்றவங்க வரட்டும்..நாம் முடிவு செய்ததை நாம் செய்வோம்’ என்கிற மனநிலை மட்டும் இல்லையென்றால் துரும்பைக் கூட அசைத்துப் போட முடியாது.


(பேளுக்குறிச்சி நீர் வரத்துப் பாதை)(நிரம்பிய ஏரி)

இத்தகைய நற்காரியங்களை வாழ்நாள் முழுக்கவும் ஒரு மனிதனால் செய்து கொண்டேயிருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இவர்களைப் பார்த்து ஏதேனுமொரு ஊரில் வேறொரு ஒரு குழு இறங்கும். அவர்களைப் பார்த்து இன்னொரு குழு செயல்படத் தொடங்கும். ஷங்கர் படத்தில் நிகழ்வது போல ஒரேயிரவில் அத்தனையும் மாறப் போவதில்லை. விடியும் போது பசுமை பூத்துக் குலுங்கவும் போவதில்லை. ஆனால் ஒவ்வொன்றும் தொடர்புடைய சலனங்கள். ஒன்றின் விளைவு இன்னொன்றில் தெரியும். ஆங்காங்கே யாராவது அடுத்தவர்களுக்கான பணிகளைச் செய்து கொண்டேதான் இருப்பார்கள். 

உலகம் இயங்குவதும் கூட இத்தகைய முகம் காட்டாத இளம் போராளிகளால்தான். மனமார வாழ்த்தலாம்! 

நீர் நிலைகளை மேம்படுத்துவதற்கான wakeourlake குழுவினரின் வழிகாட்டுமுறைகள்:1) ஏரி அல்லது குளத்துக்கான நீர்ப்பிடிப்புப் பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.
2) உள்ளூர்வாசிகளிடமும் மூத்தவர்களிடமும் பேசி நீர் நிலையின் வரலாறைத் தெரிந்து கொள்ளவும்.
3)  நீர் நிலையின் கொள்ளவைத் தெரிந்து ஐத்திருப்பதும் அவசியம்.
4) நீர் நிலைக்கான நீர் வரத்துப் பாதைகள், நீர் வெளியேறும் பாதைகள், நிரம்பும் போது வடிகால்கள் முதலியனவற்றைப் பற்றிய புரிதல் வேண்டும்.
5) உள்ளூர்வாசிகளிடம் நம்முடைய செயல்பாடுகள் குறித்துப் பேசுவது முக்கியம்.
6) உள்ளூர் மக்கள் நம்முடைய செயல்பாடு குறித்து நேர்மறையான எண்ணத்தைக் கொண்டிருப்பது அவசியம். நேர்மறையான எண்ணத்தை உருவாக்க முடியவில்லையென்றாலும் அவர்களுக்கு எதிர்மறைச் சிந்தனை உருவாகிவிடாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.
7) கிராமநிர்வாக அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர்/மாவட்ட வன அலுவலரிடம் தகுந்த அனுமதிகளைப் பெற்றுக் கொள்வது முக்கியம்.
8) ஜேசிபி எந்திரம் எவ்வளவு நேரம் ஓட வேண்டும், மனித ஆற்றல், மண்ணை வெளியேற்றும் முறை, இதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும் என்பதைக் கணித்துக் கொண்டு பணியை ஆரம்பிக்கவும்.
9) பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக உள்ளூர் மக்கள், அதிகாரிகள், தன்னார்வலர் குழுவை வைத்து ஒரு கூட்டம் நடத்துவது அவசியமானது.
10) நம்முடையத் திட்டம் என்ன, அதை எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம், எந்த வரிசையில் பணிகளைச் செய்யப் போகிறோம் என்ற தெளிவான திட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் தெரிவித்துவிடவும். (இவற்றை ஆவணப்படுத்தி வைத்துக் கொள்வதும் அவசியம்)
11) திட்டப்பணி குறித்தான விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடவும். 
12) உள்ளூர்வாசிகளைக் கொண்ட குழுவொன்றை அமைப்பதும் மிக முக்கியம்.
13) தூர்வாரும் பணியின் போது கிடைக்கும் மண்ணை வெளியேற்றுவது குறித்தான துல்லியமான திட்டமும் அனுமதியும் மிக அவசியம்
14) உள்ளூரில் பதாகைகள், துண்டுச்சீட்டுகள் வழியாகவும் அரிமா சங்கம் உள்ளிட்ட சேவை சங்கங்களின் வழியாகவும் விளம்பரப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கவும்
15) அக்கம்பக்கத்து கல்லூரிகள்/பள்ளிகளிடம் தெரியப்படுத்தி என்.எஸ்.எஸ் முதலான குழுக்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவும்.

பல்லு வெள்ளையா இல்லையே...

‘எப்படி பல் வெளக்குவீங்க?’ இப்படித்தான் அந்தப் பெண்மணி கேட்டார். பல் மருத்துவர். ஒவ்வொரு மாதமும் யாராவது அலுவலகத்தில் முகாம் போட்டுவிடுகிறார்கள். கண் மருத்துவர்கள், காது மருத்துவர்கள் என்று வந்தமர்ந்து பரிசோதனைச் செய்துவிட்டு ‘இதைச் செய்ய பரிந்துரைக்கிறோம்’ என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். இன்னமும் மசாஜ் பார்லர்கள் ஆட்கள் மட்டும்தான் பாக்கி. மருத்துவர்களின் வரிசையில் பல் மருத்துவர்கள் வந்திருந்தார்கள். அதில் ஒருவருக்கு சோனாலி என்று பெயர். பெண்ணாக இருந்தால் பெயரைக் கேட்டுவிட வேண்டுமல்லவா?

‘ப்ரஷ்லதான் டாக்டர்’

‘மேல இருந்து கீழாகவா? பக்கவாட்டிலா?’ 

விட்டால் பல்லுக்கு ஒரு கேள்வி கேட்பார் போலிருந்தது. பொறுமையாக பதில் சொல்லி வைத்தேன். வெளியிடமாக இருந்தால் லோலாயமாக பதில் சொல்லலாம். அலுவலகத்தில் என்றால் போட்டுக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். டெல் நிறுவனத்தில் பணியாற்றிய போது இப்படி ஒரு மருத்துவரிடம் எடக்கு மடக்காகப் பேச - அவர் ஒரு வடகிழக்கு மாநில மருத்துவர்- மனித வளத்துறையில் போட்டுக் கொடுத்துவிட்டார். மின்னஞ்சலாகவே அனுப்பியிருந்தார். அவர் மாட்டிவிட்ட  விவகாரம் எனக்குத் தெரியாது.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து காலையில் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே மேலாளர் அழைத்து ‘எப்போ வருவ?’ என்றார். ஒரு மணி நேரம் ஆகும் எனச் சொன்னதற்கு மனித வளத்துறை ஆட்கள் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்.

சோலி சுத்தம். சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? அப்படிப் பார்க்க விரும்பினாலே வேலையை விட்டுத் தூக்கப் போகிறார்கள் என்றுதான் அர்த்தம். விரல்களில் நடுக்கம் பரவியிருந்தது. ‘என்ன காரணம்?’ என்று மேலாளரிடம் கேட்டதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை. ‘கிளம்பி வா’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார். எனக்கு முன்பாகவே மேலாளரையெல்லாம் விசாரித்து வைத்திருந்தார்கள்.

அறைக்குள் நுழைந்தவுடன் முதல் கேள்வியே ‘டாக்டர்கிட்ட என்ன பேசுன?’ என்பதுதான். பொய் சொல்கிறான் என்று தெரிந்தால் குத்திவிடுவார்கள் என்று தெரியும். அச்சுபிசகாமல் சொன்னேன்.  எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு ‘இனி இப்படி லோலாயம் பண்ணுன....’ என்ற எச்சரிக்கையுடன் விட்டுவிட்டார்கள். அதைக் கதையாகவே எழுதலாம். எழுத வேண்டும். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அலுவலக வளாகத்தில் சுண்டெலி மாதிரி நடந்து கொள்வேன். இருக்கிற இடம் தெரியாது.

சோனாலியிடமும் அப்படி நடந்து கொள்வதுதான் நல்லது. பதில்களையெல்லாம் கேட்டுக் கொண்டு ‘உங்க பல்லை சுத்தம் பண்ணனும்...பண்ணிடலாமா?’ என்றார். பல் துலக்கிவிடுவதற்குக் கூட யாராவது ஆள் வைத்துக் கொள்வார்களா? நம்மை மாதிரியான பெரிய மனுஷன் என்றால் அப்படித்தான். விஜய், அஜீத், சூர்யாவுக்கு அப்புறம் நாம்தானே?

‘வலிக்குமா டாக்டர்?’

‘ச்சே..ச்சே..பத்து நிமிஷம் கூட ஆகாது’ என்றார். சரி என்று சொல்லிவிட்டேன். முகமூடியொன்றை அணிந்து கொண்டு குத்திக் குடைவார் என்றெல்லாம் யோசிக்கவில்லை. வாகாகப் படுக்க வைத்து இரண்டு மூன்று சாதனங்களை உள்ளே விட்டு... அட சாமீ! புஸ்ஸென்று நீரைப் பீய்ச்சியடிக்கும் ஒரு கம்பியை வைத்துக் கொண்டு குடாய்ந்துவிட்டார் குடாய்ந்து. பேசவும் முடியவில்லை. கத்தவும் முடியவில்லை. கையை உயர்த்தும் போதெல்லாம் ‘ஆச்சு ஆச்சு’ என்று சொல்லியபடியே சுரண்டி ஒவ்வொரு பல்லாக சுளுக்கெடுத்துவிட்டார். 

இடையிடையே எச்சில் துப்ப மட்டும் அனுமதித்தார். ரத்த ரத்தமாக வந்தது. பிறந்ததிலிருந்தே பல் துலக்காமல் இருந்திருந்தால் கூட இவ்வளவு சுரண்ட வேண்டியதில்லையே டாக்டர் என்று மனதுக்குள் நினைத்தபடியே நாற்காலியின் கைப்பிடியை இறுகப்பற்றிக் கிடந்தேன். வலியையும் மீறி எனக்கு ஒரே நம்பிக்கைதான். பற்கள் எப்படியும் ஜொலி ஜொலித்து சிநேகாவின் பற்கள் மாதிரி பளீரென இருக்கும் என்ற நப்பாசை.

வெளியே வந்தவுடன் வாய் நிறைய புன்னகையுடன் ஒரு நிழற்படத்தை எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸப் என அத்தனை இடங்களிலும் படத்தை மாற்றிவிட வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லை. முகம் தெரிகிறதோ இல்லையோ- நிழற்படத்தில் பற்கள் தெரிய வேண்டும். கடைசியில் கண்ணாடியைக் காட்டினார். ஆங்காங்கே ரத்தம் வந்த சிவப்புப் புள்ளிகள் தெரிந்தன. 

‘என்ன டாக்டர்..கலர் கோலம் போட்ட மாதிரி இருக்கு?’ என்று கேட்டதற்கு சிரித்தார்.

‘அந்த இடத்தில் எல்லாம் ஈறு பலவீனமாக இருக்குன்னு அர்த்தம்’ என்றார். கத்தியை வைத்துக் குத்தினால் உடலில் எல்லா இடமுமே பலவீனமாகத்தானே இருக்கும்? இப்பொழுதும் அந்த வடகிழக்கு மருத்துவச்சிதான் நினைவுக்கு வந்தாள். அடங்கிக் கொண்டேன்.

அப்பா இருந்தவரைக்கும் வீட்டில் எப்பொழுதும் கருவேலம் குச்சி ஒரு கட்டு வைத்திருப்பார். ஊருக்குப் போகும் போதெல்லாம் வண்டியை எடுத்துக் கொண்டு போய் அளவான நீளத்தில் வெட்டி முட்களை நீக்கி ஒரு கட்டுத் தயார் செய்து எடுத்து வருவார். அவ்வப்பொழுது அதில் பல் துலக்குவார். ஆலம் விழுதைப் பார்க்கும் போதெல்லாம் கிள்ளி மென்று துப்புவார். அவருக்கு மருத்துவம் எதுவும் தெரியாது. யாரோ எப்பொழுதோ அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். கடைசி வரைக்கும் அதைப் பின்பற்றினார். வறுத்த பட்டாணியை கடக் முடக்கென்று கடித்துத் துப்ப அவரால் முடிந்தது. கரும்பு கடிக்க முடிந்தது. 

எனக்கு அதற்கெல்லாம் நேரமும் இல்லை. செய்கிற முனைப்பும் இல்லை. பல் இருக்கும் வரைக்கும் பக்கோடா தின்ன வேண்டியது. உதிர்ந்துவிட்டால் பக்கோடா தின்பதை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான். 

அறுநூற்றைம்பது ரூபாய் கேட்டார்கள். சுத்தம் செய்ததற்கான தொகை. இருப்பதிலேயே விலை உயர்ந்த ப்ரஷ் வாங்கினாலும் கூட பதின்மூன்று ப்ரஷ்கள் வாங்கி அவை தேயும் வரைக்கும் தேய்த்துத் தள்ளியிருக்கலாம். கொடுத்த காசுக்கு ஒரு கேள்வியாவது கேட்டு விட வேண்டும் என ‘பல்லு வெள்ளையாகலையே’ என்றேன். சிநேகா அளவுக்கு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் நயன்தாரா? ம்ஹூம்.

‘அதுக்கு ப்ளீச்சிங் பண்ணனும்’ என்றார். பல் துலக்கவே அறுநூற்றைம்பது ரூபாய். பட்டி பார்த்து வெள்ளைப் பெயிண்ட் அடிக்க எவ்வளவு கேட்பார்களோ என்று தெரியவில்லை. பணத்தை வாங்கும் போது ‘ப்ளீச்சிங் பண்ணனுமா?’ என்றார். வீட்டிலேயே ப்ளீச்சிங் பவுடர் இருக்கிறது. நானே பார்த்துக் கொள்வதாக முடிவு செய்து கொண்டு ‘மிக்க நன்றி டாக்டர்’ என்று வெளியே வந்துவிட்டேன்.