Aug 24, 2017

நீட் தேர்வு

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் சேர்க்கையும் மிகுந்த அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் இவ்வளவு வெற்று விவாதங்களுக்கு உள்ளாவது நல்லதில்லை. வெறுமனே உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையாக மாறிக் கொண்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.

நீட் ஆதரிப்பவர்களிலும் எதிர்ப்பவர்களிலும் கணிசமானவர்கள் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே கட்சி சார்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. 

நீட் தேர்வு குறித்தும், மருத்துவப்படிப்புக்கான சேர்க்கை குறித்தும் விவாதிப்பதற்கும் குரல் எழுப்புவதற்கும் முன்பாக மேம்போக்காகவாவது அடிப்படையான சில விவரங்களையாவது தெரிந்து கொள்வது சரியான அணுகுமுறையாக இருக்கும்.

1) தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளும் (2652 இடங்கள்) , அவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அரசு நடத்தும் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்கின்றன. 

2) கடந்த வருடம் வரை மொத்தமுள்ள மருத்துவப்படிப்புக்கான இடங்களில் 85% தமிழக மாணவர்களுக்கானது. பதினைந்து சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. (All India Quota- AIQ). நீட் தேர்வு அமலாக்கப்பட்ட பிறகும் 85%-15% என்கிற விகிதாச்சாரத்தில் மாற்றம் எதுவும் இருக்காது. எண்பத்தைந்து சதவீத இடங்களில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும். அந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

2) இந்திய கோட்டாவுக்கு ஒதுக்கப்படும் பதினைந்து சதவீத இடங்களில் பிற மாநில மாணவர்கள் நீட் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம். அதே போல நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக மாணவர்களும் பிற மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இந்திய கோட்டாவுக்கான இடங்களில் சேரலாம்.

3) தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் எண்பத்தைந்து சதவீத இடங்களில் தற்போது தமிழகத்தில் பின்பற்றப்படும் ஒதுக்கீட்டில் எந்த மாறுதலும் இருக்காது. பின்வரும் இட ஒதுக்கீட்டு விகிதாச்சாரமே பின்பற்றப்படும்
  • பொதுப்பிரிவு- 31%
  • பிற்படுத்தப்பட்ட பிரிவு- 30%
  • மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு- 20%
  • தாழ்த்தப்பட்ட பிரிவு- 18%
  • பழங்குடியினர்-1%
4) தமிழகத்தில் கடந்த எட்டாண்டுகளில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் (நுழைவுத் தேர்வு இல்லாமல்) நிரப்பப்பட்ட 28225 இடங்களில் வெறும் 278 இடங்களில் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். மீதமுள்ள அத்தனை இடங்களும் தனியார் பள்ளி மாணவர்களால் நிரப்பட்டவை.

5) கடந்த ஆண்டு வரையிலும் மேனேஜ்மெண்ட், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடங்களில் சேர்வதற்கு பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைந்திருந்தால் போதுமானதாக இருந்தது. பணக்கார மாணவர்களிடம் பல லட்ச ரூபாய்களுக்கு விற்கப்பட்ட இந்தக் கோட்டாக்களில் சேர்வதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். 

6) நீட் தேர்வு அரசுப்பள்ளி மாணவர்களை பாதிக்கும் என்று பேசுகிறவர்கள் கடந்த எட்டாண்டுகளில் 278 மட்டும் மாணவர்கள் மட்டுமே சேர்ந்தது ஏன் என்ற கேள்விக்கான பதிலைத் தேட வேண்டியதும், நீட் தேர்வு அவசியம் என்று பேசுகிறவர்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாயைச் செலவு செய்து நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் கிராமப்புற மாணவர்களால் சேர முடியுமா, இந்த ஆண்டு பாதிக்கப்படும் மாணவர்களுக்கான மாற்று வழிகள் என்ன என்பதற்கான பதில்களைத் தேடுவதும் முக்கியமாகிறது. 

7) கிராமப்புற அரசுப்பள்ளிகளில் 1130 மதிப்பெண்களைத் தாண்டிய மாணவர்கள் கட்-ஆஃப் என்று பார்க்கும் போது 195 என்ற அளவில் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் போவதும் தனியார் பள்ளிகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்தி மொத்த மதிப்பெண்கள் 1000 என்ற போதிலும் கட்-ஆஃப் 199-200 என்ற அளவில் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதையும் கவனத்தில் கொண்டு விவாதிக்க வேண்டியிருக்கிறது.

நீட் தேர்வைப் பற்றி எதைச் சொன்னாலும் இன்னொரு பிரிவினர் குத்துவார்கள். கொதிநிலை அடங்கிய பிறகு விரிவாகப் பேச நிறைய இருக்கிறது.

நீட் தேர்வை எதிர்ப்பவர்களாக இருந்தாலும் ஆதரிப்பவர்களாக இருந்தாலும் நீட் வினாத்தாளில் இந்தாண்டு ஏற்பட்ட குழப்பங்களையும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் தேர்வுத்தாளில் சந்திக்கும் சிக்கல்களையும் பேச உரக்கப் பேச வேண்டியது மிக அவசியம்.

‘சி.பி.எஸ்.ஈதான் பெரிய படிப்பா’ ‘ஸ்டேட் போர்டு வேஸ்ட்’ என்றெல்லாம் பெருமொத்தமாக சண்டையிடுவதையும் விட கைவசமிருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பேசுவதுதான் சரியானதாக இருக்கும். அதேசமயம் ஒரேயொரு ஆண்டின் புள்ளிவிவரங்களை எடுத்துக் கொள்வதைவிடவும் கடந்த சில ஆண்டுகளின் சராசரியான புள்ளிவிவரம்தான் சரியான விடையைக் கொடுக்கும்.

வெறுமையான விவாதங்களும், முரட்டுத்தனமான வாதங்களும் பொதுவெளியில் தேவையற்ற குழப்பங்களைத்தான் உருவாக்கும். அப்படித்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஆதரித்தாலும் சரி; எதிர்த்தாலும் சரி- வித்யாலயாக்கள், விகாஸ்களையும் தாண்டி அரசு மேனிலைப்பள்ளிகளை மனதில் வைத்துக் கொண்டு பேசுவோம். சென்னை, கோயமுத்தூர், திருச்சிக்கு அந்தப்பக்கமாக வேதாரண்யமும், பெரியகுளமும், குருபரண்டப்பள்ளியும் இருக்கின்றன. அங்கேயிருக்கும் பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்களை மனதில் வைத்துக் கொண்டு உரையாடலாம்.

இன்னமும் நிறைய இருக்கின்றன. விரிவாக விவாதிக்கலாம்.

13 எதிர் சப்தங்கள்:

sairamakoti said...

There is quota for handicapped and first counseling starts for them
Similarly we can allot separate quota,say 300 seats for govt. School students, especially from villages every year
If any such students had attended Neet this year, separate list can be drawn restricting their quota to say 300 this year and all can be selected
Thusjustice can be ensured for the village students
For those who have not attended Neet,let them attend Neet next year and compete with other students undertheir quota of 300 seats.
Hence to protect these students govt should immediately declare quota like oc s
C St bc and obc

Selva Natarajan said...

நன்றி. இந்தப் பதிவு என்னுடைய பல கேள்விகளுக்கு தெளிவான பதில் கொடுத்துள்ளது. வழக்கம்போல் whatsapp சேதிகள் எல்லாம் அரைகுறையானவை என்ற என் எண்ணத்தை உறுதிப் படுத்தியும் உள்ளது.

Anonymous said...

As Mr. Sairamakoti said, extra 5 marks were awarded in cut off marks for those who studied in govt schools in villages. This happened some 15 years back during the state level entrance exam time.

Periasamy Selvaraj said...

இந்த விஷயத்தில் இன்னொன்றும் கவனிக்க வேண்டியதுள்ளது. அதை ஏன் யாரும் கவனிக்க மறுக்கின்றார்கள் என்று புரியவில்லை. கல்வி என்பது மாநிலப் பட்டியலிலிருந்து மத்திய அரசின் கைகளில் சென்று கொண்டு இருக்கின்றது . இது எனக்கு சரியாகப்படவில்லை. நமக்கு சரியான தலைவர்களோ அரசுகளோ சமீப காலங்களில் கிடைக்கவில்லை என்ற போதும் இந்தப்போக்கை நான் ஆதரிக்க தயாராக இல்லை . நம் கல்வி முறை என்பது நம் வாழ்வின் அடித்தளம். அதன் குறை நிறைகளை ஆராய்ந்து சரி செய்வது நம் கடமை. மத்திய அரசின் கைகளில் அதிகாரம் சென்றபின் , அதில் நம்முடைய நலன்களை எதிர்பார்ப்பது கனவாகத்தான் இருக்கமுடியும். இதற்க்கு நெடுவாசல் தொடங்கி ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

Periasamy Selvaraj said...

2007க்கு முன்பு வரை நாம் நுழைவுத்தேர்வு வைத்திருந்தோம். பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் , நுழைவுத்தேர்வு மதிப்பெண் இரண்டையும் கருத்தில் கொண்டு இடம் அளிக்கப்பட்டது . NEET தேர்வு நடைமுறையை விட இந்த நடைமுறை சிறப்பானது என்று எனக்குத்தோன்றுகிறது. வெறும் NEET மட்டுமே அளவுகோல் என்றால் பள்ளிப்படிப்பு எதற்கு?

andrews selvaraj said...

But Extra 5 Marks was introduced by DMK GOVT but it was stopped By court

சேக்காளி said...

இரா.கதிர்வேல் said...

#TNagainstNEET தமிழக அரசு கடந்த பத்தாண்டுகளில் நடத்திய மருத்துவப் படிப்புச் சேர்க்கைகளில் சில நூறு அரசுப் பள்ளி மாணவர்கள் தான் படித்திருக்கிறார்களாம். இதை ஒரு RTI மூலம் கண்டுபிடித்திருக்கிறார்களாம். எனவே, நமது மருத்துவப் படிப்புச் சேர்க்க முறை ஏழைகளுக்கு எதிராக இருக்கிறதாம்.
* இந்த RTI ஆவணத்தைக் கண்ணால் பார்த்த சாட்சிகள் யாராவது இருக்கிறீர்களா? எனக்கு ஒரு xerox copy தாங்க. 1000 உரூபாய் தருகிறேன். கண்ணால் பார்க்காத வரை இது கட்டுக்கதை என்று தான் கருத முடியும்.
இந்த RTI தகவல் உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.
* NEET இந்தச் சிக்கலை எப்படித் தீர்க்கும்? அட்டகாசம் படத்தில் பக்கத்து auto கண்ணாடியைத் திருப்பி கருணாசு autoவை ஓட வைப்பதில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது?
* அரசு பள்ளி +2 மாணவர்கள் மட்டும் தான் ஏழைகள் என்று யார் சொன்னார்கள்? அரசு உதவி பெறும் பள்ளிகள் பற்றி கணக்கு எடுக்கப்பட்டதா? 10ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறும் பல அரசுப் பள்ளி மாணவர்களைத் தனியார் பள்ளிகள் கட்டணம் இன்றி சேர்த்துக் கொள்கின்றன. கடன் வாங்கியாவது தனியார் பள்ளியில் சேர்த்து விடும் எண்ணற்ற பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
* ஏழையோ பணக்காரனோ தனியர் பள்ளியில் படித்த முதல் தலைமுறைப் பட்டதாரிகள் பலர் இருக்கிறார்கள். இங்கு மருத்துவம் படிக்கும் பலர் முதல் தலைமுறை மருத்துவர்கள். இவை எல்லாம் சாதனைகள் இல்லையா?
ஆக அடிமட்டத்தில் இருக்கும் ஏழைகளுக்கும் சமமான வாய்ப்புகள் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், முன்பு சில நூறு பேராவது மருத்துவம் படித்தார்கள் என்றால் இப்போது ஒருத்தரும் படிக்க கனவு கூட காண முடியாது.
எனவே, முதலைக் கண்ணீர் வடிப்பதை நிறுத்தவும்.

https://www.facebook.com/ravidreams

இரா.கதிர்வேல் said...

கேள்வி: இப்பொழுதும் 85% மருத்துவப் படிப்பு இடங்கள் தமிழகத்துக்குத் தான். அதில் இட ஒதுக்கீடும் இருக்கிறது. பிறகு ஏன் நீட் சமூக நீதிக்கு எதிரானது என்கிறீர்கள்?

பதில்:
நீட் என்பது இளங்கலை மருத்துவப் படிப்புக்கு மட்டும் அன்று. உயர் மருத்துவப் படிப்புகளுக்கும் அது தான் இப்போது வழி.
மருத்துவப் படிப்பு என்பது மூன்று நிலைப்படும்.

* உயர் தனிச்சிறப்பு மருத்துவப் படிப்பு - இதில் தமிழ்நாட்டில் மட்டும் 200+ இடங்கள். மொத்த இந்தியாவிலேயே 1400+ இடங்கள் தான். இவை அனைத்தும் இப்போது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் திறந்து விடப்பட்டுள்ளன. ஆனால், முன்பு தமிழகத்துக்குத் தனி ஒதுக்கீடு இருந்தது.

* முதுகலை மருத்துவப் படிப்பு (MD) - தமிழகத்துக்கு 50% ஒதுக்கீடு. இதில் தமிழ அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இருந்தது. இப்போது அதனை நீக்கி விட்டார்கள். இதனால் மருத்துவர்கள் அரசுப் பணியில் சேர்வது குறையும். தமிழக பொது மருத்துவத் துறை நலிவடையும். ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி உயர் நடுத்தர மக்களின் மருத்துவ நலன் கேள்விக்குள்ளாகும். இது ஒரு தலைமுறையையே போட்டியிட விடாமல் நலிவுற வைக்கும்.

* இளங்கலை மருத்துவப் படிப்பு (MBBS) - நீட் தகுதிப் பட்டியலில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிக இடங்களை முன்னேறிய வகுப்பினர் பெற்றுள்ளனர். இது வரும் ஆண்டுகளில் இன்னும் கூடுதலாகும். ஒட்டு மொத்தமாகப் பின் தங்கிய, ஒடுக்கப்பட்ட வகுப்பினர் பெறும் இடங்கள் குறையத் தொடங்கும்.

அது தான் உங்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது என்கிறீர்களா? இதே கேள்வியை மகளிருக்குச் சிறப்புப் பேருந்து இருக்கும் போது ஏன் பொதுவான பேருந்தில் ஏறுகிறீர்கள் என்று கேட்பீர்களா? திறந்த போட்டி என்பது அனைவரும் சமமாகப் போட்டியிடுவதற்கான களம். அது முன்னேறிய வகுப்பினருக்கு மட்டுமான மறைமுக இட ஒதுக்கீடு அன்று. அனைவரும் வெல்லும் ஆட்டத்தில் வெல்ல முடியாவிட்டால் ஆட்டத்தையே மாற்றுவது தான் நீட். இது சமூக நீதிக்கு எதிரானது.
இதை எல்லாம் தாண்டி சமூகநீதி என்பதனை வெறும் சாதி வாரி இட ஒதுக்கீடு மட்டுமே என்று புரிந்து கொள்வது மிகவும் தட்டையான புரிதல் ஆகும்.

இதே போல் நாளை இளங்கலை மருத்துவப் படிப்பில் தமிழகத்துக்கான 85% ஒதுக்கீடு இரத்து செய்யப்படாது என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா?
பயம் காட்டவில்லை. ஒரே நாள் இரவில் 500, 1000 உரூபாய் செல்லாது என அறிவிக்கும் இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

https://www.facebook.com/ravidreams

GeoKaiser said...

I agree with Kathirvel's comment. TN's rights are being eroded. Why is education which was in the state's list being encroached upon by the center.This is a question of principle. We decided to get rid of TNPCEE, because it was giving an unfair advantage to the well off students. Why are the marks scored in Class - XII ignored ? We all know the reason - it will make it harder for the CBSE students to compete against the SB. And we all know the who study in CBSE schools.
Very disappointed with the stand you have taken. The statistics you show are misleading, because it ignores all the Government aided schools. There are hundreds of good affordable,quality schools run by Hindu trusts(I studied in one such school) and the church which are the lifeline of our education system.
The more alarming thing, is the removal of quota from the higher medical education. We should not have to share this with outsiders at any cost. Already the fertility of South India has fallen below replacement rate, while North India is bursting at the seams. Soon, this will be dominated by people from North India.
Now, I understand why so many Americans want a wall along their Mexico border. I for one don't mind a wall to keep BIMARU guys out of our state. TN is one of the very few 5Cr+ states which scores very high in all the social parameters. Their backward mentality will take us back to the dark ages. India is effectively being ruled by the cow belt, with the rights of the south being eroded gradually.

Muru gan said...

கல்வி கற்பிக்கும் முறையும் தேர்வுமுறையும் மாற வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. என்ன மனப்பாடம் செய்தார்கள் என்பதை விட என்ன புரிந்து கொண்டார்கள் என்பதே முக்கியம். இந்த மாற்றம் வந்த பிறகே நுழைவுத்தேர்வு என்பது சரியாக இருக்கும். ஏழை மாணவர்களுக்கும் சிறப்புப் பயிற்சி எட்டும்படி இருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மதிப்பெண்னை மட்டுமே கருத்தில் கொள்ளக்கூடாது.

சில சந்தேகங்கள்;
///////////1) தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளும் (2652 இடங்கள்) , அவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அரசு நடத்தும் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்கின்றன.

4) தமிழகத்தில் கடந்த எட்டாண்டுகளில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் (நுழைவுத் தேர்வு இல்லாமல்) நிரப்பப்பட்ட 28225 இடங்களில் வெறும் 278 இடங்களில் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். மீதமுள்ள அத்தனை இடங்களும் தனியார் பள்ளி மாணவர்களால் நிரப்பட்டவை.////////////

சந்தேகம் 1)
இந்த ஆண்டிற்கான அரசுக் கல்லூரி இடங்கள் 2652 எனில் 8 ஆண்டுகளுக்கான அரசுக்கல்லூரி இடங்கள் 8*2652 = 21,224 அல்லது அதைவிடக் குறைவு(8 வருடங்களில் இடங்களு அதகமாகியுருக்க வாய்ப்புண்டு) 28225 என்பது எப்படி வந்தது? எனக்கு விளங்கவில்லை

சந்தேகம் 2)
278 என்பது 8 ஆண்டுகளின் கூட்டுத்தொகை. முதல் ஆண்டிலிருந்து 8ம் ஆண்டு வரை எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்திருக்கிரதா? தகவல் பெற்ற தங்களின் நண்பரிடம் இந்தத்தகவல் உள்ளதா? தயவு செய்து 278 என்பதற்கு தரவு தரவும்.

////////////
4) தமிழகத்தில் கடந்த எட்டாண்டுகளில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் (நுழைவுத் தேர்வு இல்லாமல்) நிரப்பப்பட்ட 28225 இடங்களில் வெறும் 278 இடங்களில் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். மீதமுள்ள அத்தனை இடங்களும் தனியார் பள்ளி மாணவர்களால் நிரப்பட்டவை.////////////
சந்தேகம் 3)
278 என்பது அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, தமிழ் வழி கல்வி பயிலும் லட்சக்கணக்கான அரசு உதவி பெறும் பள்ளி (ஆண்டுக் கட்டணம் மட்டும் சிறிதளவு வசூலிபர். 17 ஆண்டுகளுக்கு முன்னர் 300ரூபாய் ஆண்டுக்கட்டணம்)மாணவர்களின் எண்ணிக்கை எங்கே? அவர்களுக்கும் சிறப்பு நுளைவுத்தேர்வு பயிற்சி பெறுவதில் பொருளாதார சிக்கல் உண்டு.
மீதமுள்ள அத்தனை இடங்களும் தனியார் பள்ளி பணக்கார மாணவர்களால் நிரப்பப்பட்டவை என்கிறீர்களா?

//////////
கடந்த எட்டாண்டுகளில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் (நுழைவுத் தேர்வு இல்லாமல்) நிரப்பப்பட்ட 28225 இடங்களில் வெறும் 278 இடங்களில் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.////////
சந்தேகம் 4)
நுழைவுத்தேர்வு இருக்கும் போது இதைவிட(278) அதிக எண்ணிக்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்கிறீர்களா?
நுழைவுத் தேர்வை நீக்கியது கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை மாணவர்களுக்கு பயனளிக்கவில்லை எனக்கருதுகெறீர்களா?

////////
5) கடந்த ஆண்டு வரையிலும் மேனேஜ்மெண்ட், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடங்களில் சேர்வதற்கு பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைந்திருந்தால் போதுமானதாக இருந்தது. பணக்கார மாணவர்களிடம் பல லட்ச ரூபாய்களுக்கு விற்கப்பட்ட இந்தக் கோட்டாக்களில் சேர்வதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
//////////
சந்தேகம் 5)
உங்களுக்கு இதுதான் பிரச்சனை. மேனேஜ்மெண்ட் / வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடங்களில் எத்தனை பேர் சேர்கிறார்கள்? சேர்ந்தார்கள்? நுழைவுத்தேர்வு வந்தால் அதற்கு அவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்று விடுவார்கள். சிறப்புப் பயிற்சி பெற முடியாத ஏழை மாணவர்களின் எதிர்காலம் என்ன?

சந்தேகம் 6)
நுழைவுத்தேர்வு தான் (ஒரு பேச்சிற்கு)தீர்வு என்றாலும், நுழைவுத்தேர்வை ஏன் மத்திய அரசு அதன் பாடத்திட்டத்தில் நடத்த வேண்டும். ஏன் மாநில அரசு மாநில பாடத்திட்டத்தில் நடத்தக்கூடாது.

Muru gan said...

Raised an RTI request to HRD. Lets wait for the response

1. how many a) Government run higher secondary schools, b)private run but Government aided higher secondary schools, c)private run higher secondary schools (non-govt. aided ) are/were there in Tamilnadu for the past 20 years

2. how many students studied 12th std. in Tamilnadu from a) Government run higher secondary schools, b)private run but Government aided higher secondary schools, c)private run higher secondary schools (non-govt. aided ) for the past 20 years?

3. In which medium of education the 12th std. students of Tamilnadu studied in each category i.e., a) Government run higher secondary schools, b)private run but Government aided higher secondary schools, c)private run higher secondary schools (non-govt. aided ) for the past 20 years?

4. How many students went to study MBBS from each category i.e., a) Government run higher secondary schools, b)private run but Government aided higher secondary schools, c)private run higher secondary schools (non-govt. aided ) for the past 20 years from Tamilnadu

Muru gan said...

Reply :- The information sought by you in your RTI application is not maintained by School III Section, Department of School Education & Literacy, Ministry of Human Resources Development.

You are advised to contact the concerned State Government for the desired information.