Aug 14, 2017

சில கேள்விகளும் பதில்களும்

Sarahah என்றொரு தளம். பதிவு செய்து வைத்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்க முடிகிறது. மொட்டைக் கடிதம் எழுதுவதன் டிஜிட்டல் வடிவம். கடந்த வாரத்தில் தொடங்கி ஃபேஸ்புக்கில் இணைப்பைக் கொடுத்திருந்தேன். நிறையப் பேர் செய்திகளை அனுப்பியிருந்தார்கள். சுவாரசியமான/பதில் சொல்ல வேண்டிய கேள்விகளைத் தொகுத்து நிசப்தத்தில் எழுதலாம் என்று அப்பொழுதே தோன்றியது. பெயரைக் குறிப்பிடாமல் வரக் கூடிய கேள்விகள் சுவாரசியமானவைதான். பதில் சொல்வதும் கூட சுவாரசியம்தான். 

முயற்சித்திருக்கிறேன். 

நிசப்தம் தளத்தின் வலது பக்கத்தில் நிரந்தரமாக இணைப்பைக் கொடுத்து வைத்திருக்கிறேன். சலிக்காத வரைக்கும் இதைத் தொடரலாம்.

                                                                       ***
Tell us, how you manage your time. How about last week 24/7 , what did you do?

திங்கள் முதல் வெள்ளி வரைக்கும் அலுவலகமும் குடும்பமும்தான். அதற்குத்தான் நேரம் சரியாக இருக்கிறது. வழக்கமாக காலையில் காலையில் எட்டரை மணிக்கு அலுவலகத்தை அடைந்துவிடுகிறேன். மாலை ஏழு அல்லது ஏழரை மணிக்குள் வீட்டுக்குத் திரும்பினால் அடுத்த இரண்டு மணி நேரங்கள் குடும்பத்துடன். உணவை முடித்துவிடு மகிக்கும் யுவிக்கும் கதை சொல்லிய பிறகு ஒன்பதரை அல்லது பத்து மணிக்கு எல்லோரும் உறங்கிவிடுவார்கள். அதன் பிறகு 12 மணி வரைக்கும் எனக்கான நேரம். தினசரி இரண்டு மணி நேரம் என்பது கணிசமான நேரம் இல்லையா? போதுமானதாக இருக்கிறது.

கடந்த வாரத்தில் மூன்று படங்கள் பார்க்க முடிந்தது - A Beautiful Mind (2001) மற்றும் The Theory of Everything (2014) ஆகிய இரண்டு படங்களை எனக்காகவும் The Good Dinosaur(2015) குழந்தைகளுக்காகவும் பார்த்தேன். இடைப்பட்ட நாட்களில் ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற புத்தகத்தைப் பாதி முடித்திருக்கிறேன்.

வழக்கமாக ஒவ்வொரு தினமும் காலையில் அன்றைய தினத்துக்கான பதிவை எழுதுவேன். அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் போது வாய்ப்பிருந்தால் இன்னுமொரு பதிவு எழுதுவேன். ஏற்கனவே மனதுக்குள் தயார் செய்து வைத்துக் கொள்வதா ஒரு கட்டுரையைத் தட்டச்சு செய்ய முப்பது முதல் நாற்பது நிமிடங்கள் போதுமானதாக இருக்கிறது.

எப்பொழுதுமே தொலைக்காட்சி பார்ப்பதில்லை. நேரத்தை மிச்சம்பிடிக்கிறேன் என்று சொல்வதைக் காட்டிலும் நேரத்தை வீணடிப்பதில்லை மட்டும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். சிலர் கேட்பது போல கடுமையான உழைப்பு என்று ஒரு போதும் நினைத்ததில்லை. பணிகள் பிடித்தமானவையாக இருக்கின்றன. சுமை தெரிவதில்லை.

ஐந்து நாட்களும் சற்று மெதுவாகச் செல்லும். வார இறுதியில் மட்டும் நிற்க நேரமிருக்காது. அறக்கட்டளை, பயணம் சம்பந்தப்பட்ட பணிகளை வார இறுதிக்குச் சேகரித்து வைத்துக் கொள்கிறேன். அதனால்தான் பதிவுகள் எழுதுவது கூட சாத்தியமில்லாமல் ஆகிவிடுகிறது.

While traveling on TN Govt buses 3+2, when crossing IT Peoples who waiting for Travels what you think on your mind?

அனுபவங்களைத் தவறவிடுகிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். பொதுவாகவே மென்பொருள் துறையில் இருக்கிறவர்களுக்கு raw ஆன மனிதர்களை எப்படிக் கையாள்வது என்பது தெரிவதில்லை என்று நம்பலாம். நிறுவனங்களில் மின்னஞ்சல் அனுப்பும் போதும் உரையாடல்களின் போதும் ஒரு நாசூக்குத் தன்மையைப் பழகிக் கொள்கிறோம். அது ஒரு மேல்மட்ட மனோநிலையை உருவாக்கிவிடுகிறது. ‘எனக்குத் தெரியும்’ என்பதான பாவனை. ஆனால் உலகத்தின் பெரும்பான்மை என்பது Raw ஆன மனிதர்கள்தானே? முப்பது ரூபாய் கொடுத்தால் ‘ரெண்டு ரூபா சில்லரை கொடு’ என்று கேட்கிற சிடு சிடு நடத்துனர் கூட நமக்கான பாடம் ஒன்றைத்தான் வைத்திருக்கிறார். மனிதர்களிடமிருந்து விலகும் போது அத்தகைய பாடங்களைத் தவறவிட்டுவிடுகிறோம்.

Who is Manikandan?

கலவையான சராசரிதான். எல்லாமும் கலந்திருக்கிறது. 

அப்புறம் நீங்க சின்னவீடு வைச்சுருக்க மேட்டரு யாருக்கும் தெரியாதுதானே...

பெங்களூரில் ஒரு வீடு இருக்கிறது. அது எல்லோருக்கும் தெரியும். கரட்டடிபாளையத்தில் ஒரு வீடு. அதுவும் எல்லோருக்கும் தெரியும். சென்னையில் Penthouse வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது யாருக்கும் தெரியாது. penthouse.com தானே வீடு தேட உதவும் இணையதளம்?

நிசப்தம் பெயர்க்காரணம்?

பேசலாம் என்ற பெயரில் blog இருந்தது. அப்பொழுது அதிகம் எழுதவில்லை. பேசலாம் என்று பெயர் வைத்தால்தான் பேசுவதே இல்லை. அதற்கு நேரெதிராக ஒரு பெயரை வைத்துப் பார்க்கலாம் என்று பெயரை என்று மாற்றினேன். நிசப்தம் நிறைய சப்தம் போட்டதால் அதுவே தொடர்கிறது.

எந்த ஒரு எழுத்தாளரும் இறங்காத பல நற்காரியங்களில் தாங்கள் கடினமாய் ஈடுபடுத்திக் கொள்வது மிக சந்தோஷம்.. இருந்தாலும் பல பதிவுகளில் நீங்கள் உங்களை தாங்களே முன்னிலைப் படுத்திக் கொள்வது வெளிப்படையாய் தெரிகிறது.. எதற்காக இந்த உள் அரசியல்? அரசியலில் இறங்குவது என்றால் நேரடியாக எதாவது ஒரு கட்சிக்காரன் என்று பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டியது தானே? தாங்கள் செய்யும் நற்காரியங்களுக்கு அது மிகப்பெரிய தடை என்பது தெரிந்தே இதனை மறைக்கிறீர்களா?

இணையவெளியில் பெயர் தெரிவதால் உள்ளூரில் ஊரில் அத்தனை பேருக்கும் தெரியும் என்று அர்த்தமில்லை. களத்தில் என்ன செய்கிறோம் என்பதை இங்கே எழுதியாக வேண்டியிருக்கிறது. அப்படி வெளிப்படையாக எழுதவில்லை என்றால் நீங்கள் குறிப்பிட்ட ‘பல நற்காரியங்கள்’ இல்லை- ஒரு நற்காரியத்தைக் கூடச் செய்திருக்க முடியாது. அது முன்னிலைப்படுத்திக் கொள்வது என்றில்லை. ஆனால் அப்படியொரு பிம்பம் உருவாவது இயல்புதான்.  ‘நிசப்தம்’ மணிகண்டன் தெரியுமா என்று யாரோ கேட்க பக்கத்துவீட்டு மோகன்ராஜ் ‘அப்படி யாரும் இல்லையே’ என்று பதில் சொன்னது எனக்குத் தெரியும். இத்தனைக்கும் மோகன்ராஜ் எனக்கு முப்பது வருடப் பழக்கம். ஒருவேளை வெறுமனே ‘மணிகண்டனைத் தெரியுமா?’ என்று கேட்டிருந்தால் மோகனுக்கு பதில் சொல்வதில் பிரச்சினை இருந்திருக்காது. அவ்வளவுதான் என்னுடைய பிரபல்யம். எனது உயரம் எனக்குத் தெரியும். முன்னிலைப்படுத்துவதாக இருந்தாலும் அரசியல் களத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் இருந்தாலும் எனக்கு நானே போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்ள மாட்டேனா? 

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

அம்புட்டு பேரும் http://vaamanikandan.sarahah.com/ போயி கேள்விக் கணையை தொடுக்காங்க போல. ஒத்த பின்னூட்டத்த கூட காணல.