இன்று தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். பள்ளிகள் இன்று மூடப்படுகின்றன. செய்தித்தாள்களில் எங்கேயேனும் ஒரு மூலையில் இது பற்றிய செய்தி இருக்கக் கூடும். எடப்பாடியாரும் பன்னீர்செல்வமும்தான் பக்கங்கள் முழுவதும் நிரப்பியிருக்கிறார்கள். ஜெயலலிதா இறந்த போது சசிகலா தன்னைப் பொதுச்செயலாளர் ஆக்கிக் கொள்வதற்கான முஸ்தீபுகளில் இறங்கிய தருணத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் பதவியில் ஒட்டியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் பக்கம்தான் நின்றார்கள். மிரட்டப்பட்டிருக்கலாம் அல்லது இன்னமும் நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி மிச்சமிருக்கிறது- ஒருவேளை ஆட்சி கலைந்து பதவி போனால் மீண்டும் வெல்வதற்கான சாத்தியமில்லை என்று பயப்பட்டிருக்கலாம். எரிகிற கூரையில் பிடுங்கிய மட்டும் இலாபம் என்று கணக்குப் போட்டிருக்கலாம். ஏதோவொன்று. ஆனால் அந்தச் சமயத்தில் கட்சியின் அடிமட்ட சசிகலா மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஆழமான வெறுப்பு இருந்தது. ‘அம்மாவைக் கொன்றதே இவர்கள்தானே’ என்கிற ரீதியிலான வன்மம் அது.
அந்தச் சமயத்தில் ஓபிஎஸ் பக்கமும் தீபாவின் பக்கமும் கூட திரளானவர்கள் சேர்ந்தது கூட மன்னார்குடி குடும்பத்தின் மீது இருந்த வெறுப்புதான் காரணம். அந்தச் சமயத்தில் தீபா தமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பைத் தவறவிட்டார். தன்னை மகாராணியாக நினைத்துக் கொண்டும் கட்சியை தமது வீட்டுச் சொத்தாக கருதிக் கொண்டும் மமதையில் இருந்தவரைப் பார்த்துச் சலித்துப் போனார்கள். மெல்ல மெல்ல அவரிடமிருந்து விலகியவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இடையில் அவரது கணவர் தனியாக ஓர் இயக்கம் கண்டு நகைப்பூட்டி தங்களைத் தமிழக அரசியலின் கோமாளிகளாகக் காட்டிக் கொள்வதிலேயே வெகு தீவிரமாக இருக்கிறார்கள். தமிழக அரசியல் வெகு நுணுக்கமானது. அதன் நுனியைக் கூட தீபா புரிந்து கொள்ளவில்லை. வெறுமனே ஜெ. என்ற இனிஷியல் மட்டுமே போதுமானது என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஓபிஎஸ்ஸூம் எடப்பாடியும் பொசுக்கு பொசுக்கென்று டெல்லிக்குச் சென்று வரத் தொடங்கிய போது தர்மயுத்தத்தின் கூர்வாட்கள் துருவேறத் தொடங்கின. டெல்லியில் தமிழக அரசியலின் காய்கள் நகர்த்தப்பட்டன. அதிமுகவை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான துருப்புச் சீட்டுகளாக இருவரும் மாறினார்கள். டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று வந்த பிறகும் கூட மிக ஆசுவாசமாக பேட்டிகளை வழங்கிய போது தினகரன் கூடிய சீக்கிரம் தமக்கான பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும் டெல்லிவாலாக்களும் இவர்கள் இருவரும் நம்பியிருக்கமாட்டார்கள். மேலூரில் அவர் கூட்டிக் காட்டிய கூட்டம் (அவர்களது சொற்களில் சொன்னால் தானாகக் கூடிய கூட்டம்) நிச்சயமாக வயிற்றில் அமிலத்தைச் சுரக்கச் செய்திருக்கும். அடுத்ததாக சென்னையில் ஆரம்பித்து அடுத்தடுத்து அவர் பொதுக்கூட்டங்களை நடத்தப்போவதாக அறிவிக்க இவர்கள் இரு தரப்பும் ஏதேனும் முடிவுக்கு வந்தாக வேண்டிய அழுத்தம் உண்டானது அல்லது மேலே இருந்து உண்டாக்கப்பட்டது.
தர்மயுத்தம் என்று வாய்ச்சவடால் அடிக்கப்பட்ட இந்த உருட்டல்கள் வெறும் பதவிச் சண்டை என்பதை அரசியல் தெரிந்தவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தாலும் கட்சியின் ஒரு பகுதியினர் ஓபிஎஸ்ஸை முழுமையாக நம்பினார்கள். அவரது சாதிய, தெற்க்கத்திய அடையாளத்தைத் தாண்டியும் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் அவரிடம் ஒட்டியிருந்தற்கான காரணம் கூட அந்த நம்பிக்கைதான் காரணம். ஆனால் தனக்கான இலாக்காக்களைப் பெறுவதிலும் அவரது சகாக்களுக்கான பேரங்களை நடத்துவதிலும்தான் அவரது முழுக்கவனமும் இருந்திருக்கிறது. அரசியல் அப்படித்தானே? அடிமட்டத்தில் இருப்பவன் வயிற்றில் துண்டைக் கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
சசிகலாவும் தினகரனும் தலைமைக்கு வந்து மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிட்டால் தமது தமிழகக் கனவுகளுக்கும் பேரங்களுக்கு ஒத்து வரமாட்டார்கள் என்பதை பாஜக உணர்ந்திருக்கிறது. தமிழகத்திற்கு பார்ட் டைம் கவர்னரை இவ்வளவு மாதங்களாகத் தொடரச் செய்வதற்கான காரணமும் அதுதான். சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோருவதற்கு கவர்னரிடம் நேரம் கேட்ட போது இழுத்தடித்த ஆளுநர் நேற்று ஓபிஎஸ்ஸூம் பாண்டியராஜனும் பதவியேற்பதற்காக வந்து ஆளுநர் மாளிகையில் காத்திருக்கிறார். ‘இப்படித்தான் நடக்க வேண்டும்’ என்று டெல்லி எழுதுவதையும் விரும்புவதையும் ஓபிஎஸ்ஸூம், ஈபிஎஸ்ஸூம் அப்படியே பின் தொடர்கிறார்கள்.
அதிமுகவும் பாஜகவும் இப்படியெல்லாம் விளையாடிக் கொண்டிருக்க ஸ்டாலின் என்ன நினைக்கிறார் என்றே புரியவில்லை. ‘ஆட்சி தானாகக் கவிழும்; மக்களுக்கு வேறு வாய்ப்பில்லை..நம்மைத்தான் முதல்வராக்குவார்கள்’என்று நம்புகிறாரா அல்லது பாஜகவிடம் வம்பை இழுக்க வேண்டியதில்லை என்று ஒதுங்குகிறாரா என்று தெரியவில்லை. குட்டையைக் குழப்ப வேண்டியதில்லை என்றும் பக்குவமான அரசியல்வாதியாக நடந்து கொள்ளலாம் என்று நினைப்பது சரிதான். ஆனால் இந்தச் சூழலில் அதெல்லாம் வேலைக்கு ஆகிற மாதிரி தெரியவில்லை. ஆட்சி கனிந்து மடியில் விழுகிற தருணத்தை அமித்ஷா நிச்சயமாக உருவாக்கமாட்டார். அடுத்த தேர்தலுக்கு முன்பாகவே திமுகxஅதிமுக என்றிருந்த தமிழகத்தின் இரு துருவ அரசியலை உடைத்துவிடுவார்கள். தினகரன், எடப்பாடி அணி என்று பிரிந்து நிற்பது போல ரஜினி மாதிரி ஒருவரைக் கொம்பு சீவிவிட்டு மாற்று அணி ஒன்றை உருவாக்கிவிடுவார்கள். அதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. ரஜினி வெல்கிறாரோ இல்லையோ- அவருக்கு என்று குறிப்பிட்ட சதவீத வாக்குகளாவது விழும். வாக்குகள் பிரிவது நல்லதுதான் என்றும் தம்முடைய வாக்கு வங்கி உடையாது என்று திமுக கணக்குப் போட்டால் அது நிச்சயமாக தவறான கணக்காகத்தான் முடியும். திமுகவுக்கும் அடிவிழும். ஒருவேளை மைனாரிட்டியாக திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டிய சூழல் உருவானால் அது திமுகவுக்கு இன்னமும் தர்மசங்கடமாகிவிடும்.
ஜெயலலிதா மரணத்தின் போது சசிகலா குடும்பத்தின் மீது தொண்டர்களுக்கு இருந்த வெறுப்பு தினகரனின் செயல்பாடுகளினால் சற்றே மாறியிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கட்சியை அவரால் காப்பாற்ற இயலும் என்று நம்புகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஆனாலும் கூட இன்றைய சூழலில் தினகரனால் முழுமையாக அதிமுகவை கைப்பற்றிவிட முடியும் என்று தோன்றவில்லை. வழக்குககள், முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி அணியில் இருப்பது, அந்த அணிக்கு டெல்லியின் முழுமையான ஆதரவு என்று பல நிர்ப்பந்தங்கள் அவருக்கு. பாஜகவை அவர் எதிர்த்துப் பேசுவதில்லை. ‘யாரோ மிரட்டறாங்க’ என்றுதான் பேசுகிறார். யார் மிரட்டுகிறார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?
அரசியல் வரலாறுகளை பலவான்களால் மட்டுமே எழுத முடியும்.
குட்டை குழம்பிக் கிடக்கிறது. பெரும்பாலான எதிர்கட்சிகள் அமைதியாகியிருக்கின்றன. எப்படியிருந்தாலும் இந்த அரசாங்கம் தமது முழுமையான ஆயுளைப் பூர்த்தி செய்யாது. ஆனால் அதுவரைக்கும் வழித்துக் கட்டுவார்கள். ‘அடுத்த எலெக்ஷனில் நீங்க உங்க தொகுதியில் ஜெயிக்கிற அளவுக்கு சம்பாதிச்சுக்குங்க’ என்பதுதான் தாரக மந்திரமாக இருக்கும். கடந்த தேர்தலில் இருந்நூற்றைம்பதாக இருந்த ரேட் இருமடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ ஆகக் கூடும். எடப்பாடி அணி இரட்டை இலையைக் கையகப்படுத்துவற்கான எல்லா வாய்ப்புகளும் உருவாக்கித் தரப்படும். ரஜினி கட்சி தொடங்குவார். கூட்டணிக் கணக்குகள் மாறும். பாஜக தமிழக சட்டமன்றத்திற்குள் காலடி வைக்கும். 2019 மத்திய தேர்தலின் முடிவுகள் தமிழக அரசியல் களத்தின் வடிவத்தை மாற்றும். ஒருவேளை மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால் நிர்மலா சீதாராமனோ அல்லது அவரைப் போன்ற இன்னொருவரோ வெகு சில ஆண்டுகளில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார்.
7 எதிர் சப்தங்கள்:
"ஒருவேளை மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால் நிர்மலா சீதாராமனோ அல்லது அவரைப் போன்ற இன்னொருவரோ வெகு சில ஆண்டுகளில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார்."
அப்படி நடந்தால் அது தமிழ்நாட்டுக்கு மிகவும் நல்லது.இந்த கழிசடைகளுக்கு அவர் எவ்ளவோ மேல்.
//ரஜினி கட்சி தொடங்குவார். கூட்டணிக் கணக்குகள் மாறும். பாஜக தமிழக சட்டமன்றத்திற்குள் காலடி வைக்கும். 2019 மத்திய தேர்தலின் முடிவுகள் தமிழக அரசியல் களத்தின் வடிவத்தை மாற்றும். ஒருவேளை மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால் நிர்மலா சீதாராமனோ அல்லது அவரைப் போன்ற இன்னொருவரோ வெகு சில ஆண்டுகளில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார். //
இது நடப்பதற்கான சாத்தியங்கள் இருபதாக எனக்குத் தோன்றவில்லை. அதிமுக, திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு 2016 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இருந்தது. அதிமுக, திமுக காலியாகிவிடுமோ என அனைவரும் நினைத்திருந்த வேளையில் 234 தொகுதியையும் மக்கள் திமுக, அதிமுகவிற்கு அளித்தார்கள்.
நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தது போல திமுக, அதிமுகவிடம் இருக்கும் அமைப்புரீதியான கட்டமைப்பு தமிழகத்தில் எந்த கட்சியிடமும் இல்லை. ஆட்சி கவிழ்க்கப்பட்டு, கூட்டணி எப்படி அமைந்தாலும் பிஜேபியுடன் ரஜினியோ, அதிமுகவோ யார் இணைந்தாலும் பிஜேபி எதிர்ப்பு என்ற முறையில் திமுகவுடன் அனைத்து கட்சிகளும் கூட்டணி வைக்கலாம் பாமகவைத் தவிர.
சிறுபான்மையினர் ஓட்டு ஒன்றுகூட பிஜேபி கூட்டணிக்கு கிடைக்காது. தமிழகத்தின் சட்டமன்றத்திற்குள் பிஜேபி நுழையும் அளவிற்கு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிடவில்லை.
பிஜேபி+அதிமுக+ரஜினி கூட்டணி அமைத்தால் நீங்க ஓட்டுப்போடுவீங்களானு உங்க நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள். அதற்கான பதில்தான் நிர்மலா சீத்தாராமன் முதல்வர் ஆவாரா என்பதைச் சொல்லும்.
/ பாஜக தமிழக சட்டமன்றத்திற்குள் காலடி வைக்கும்./
/ நிர்மலா சீதாராமனோ அல்லது அவரைப் போன்ற இன்னொருவரோ வெகு சில ஆண்டுகளில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார். /
அடப்பாவி , ஏன்யா இப்படி வயிற்றில் புளியைக் கரைக்கிறீரு ?
இப்போது கடுமையான கோபத்துடன் ஒன்றுமே செய்யமுடியாத கையறு நிலையில்தான் தமிழக மக்கள் உள்ளனர். நிச்சயமாக இப்போது திமுக சாதுரியமாக செயல்பட வேண்டும் பழம் நழுவி பாலில் நிச்சயமாக விழாது ( ஆதரவு வாபஸ் என்று தினகரன் ஆதரவு MLA-க்கள் கடிதம் கொடுத்தவுடன் எதிர்பாத்ததுபோலவே ஆளுநர் மும்பை சென்றுவிட்டாரே)
அரசியல் கணக்குகளை பலவான்களின் ஆசை மட்டுமே தீர்மாணிப்பதில்லை.
சில நேரம் உம் போன்ற கணவான்களின் கனவும் பலிக்கும் நம்புவோம்.
அன்பே சிவம்சம்
மணிகண்டன் அவர்களே என்னை மன்னித்து விடுங்கள்!.எந்த நேரத்தில் நிர்மலா சீத்தா ராமன் முதல்வர் ஆனால்தான் என்ன ? என்று கேள்வி எழுப்பினோ அதற்கு மரணஅடி கிடைத்திருக்கிறது.இந்த கூறு கெட்ட மத்திய அமைச்சரின் வாக்குறுதியை நம்பி நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப்படிப்பு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இருக்காது என்று நம்பிய நிலையில் மண் விழுந்துஇருக்கிறது.இந்த கோமாளிக்கு தமிழக கோமாளிகள் எவ்வளவோ மேல்!
இன்று அரசியல் ஞானி களின் கையிலிருந்து சகுனி களின் கைக்குப் போய் விட்டது சாமி.
Post a Comment