Aug 30, 2017

கதைகளும் பேச்சுகளும்

குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது- குறிப்பாக பெற்றவர்கள்- கதைகளின் வழியாகவும் பாத்திரங்களினூடாகவும் தமக்கும் குழந்தைகளுக்குமான உரையாடலுக்கான வெளியை உருவாக்குகிறார்கள். அடுத்தவர்களின் கதைகளாக இருந்தாலும் உள்வாங்கி அதைப் பெற்றவர்கள் சொல்ல வேண்டும். நவீன காலத்தில் உரையாடல் மிக அவசியமானது. அதுதான் நமக்கும் குழந்தைகளுக்குமிடையில் அறிவார்ந்த, பாசப்பிணைப்பை உருவாக்கும். வெறும் பாசப்பிணைப்பு மட்டுமே இருந்தால் போதாது.

வெறுமனே பாசப்பிணைப்பு என்பது நமக்கிடையில் ஒரு மெல்லிய சுவரை எழுப்பும். உதாரணமாக நம் தலைமுறை வரைக்கும் கூட பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்குமிடையில் ஓர் இடைவெளி இருக்கும். நம்மால் அப்பாவிடமும் அம்மாவிடமும் பகிர்ந்து கொள்ளவே முடியாத விஷயங்களை பென்னம்பெரிய மூட்டைகளாகக் கட்டலாம். பயம், தயக்கம் என்ற ஏதாவதொரு தடை. ‘திட்டுவார்கள்’ ‘சொன்னால் வருந்துவார்கள்’ என்று ஏதாவொரு முட்டுக்கட்டை இருக்கும். பெற்றவர்களும் கூட அப்படித்தான். ‘நம் வருத்தங்கள், சிரமங்கள் எல்லாம் குழந்தைகளுக்குத் தெரிய வேண்டியதில்லை’ என்று நினைப்பார்கள். பாசத்தினால்தான் நினைக்கிறோம். இப்படி நாம் மாற்றி மாற்றி நினைத்துத்தான் நமக்கிடையில் சுவரைக் கட்டி எழுப்புகிறோம்.


குழந்தை மனோவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை சமீபத்தில் தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலான கட்டுரைகள் சொல்வதெல்லாம் ‘பேசுங்க’ என்பதுதான். நண்பர்களிடம் எப்படி உரையாடுவோமோ அப்படி சகலத்தையும். தடைகள் இல்லாமல் குழந்தைகளிடம் பேசுவது என்பது பெரும் வரம். ஆனால் சற்று யோசித்துப் பார்த்தால் ‘என் குழந்தைங்ககிட்ட நான் ரொம்ப ஃப்ரீ’ என்று சொல்கிறவர்களில் கூட முக்கால்வாசிப்பேர் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர உண்மையில் அப்படி இருப்பதில்லை அல்லது இருக்க முடிவதில்லை.

நமக்கும் குழந்தைகளுக்குமிடையில் இடைவெளி இருப்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.  தடைகள் இல்லாமல் உரையாடுகிறோமா என்று யோசிக்க வேண்டும்.

எங்கள் சித்தி ‘குஞ்சை அறுத்து காக்காய்க்கு வீசுறேன்’ என்று பேசிய போது அது தவறாகவே தெரிந்ததில்லை. ஆனால் இன்றைக்கு எவ்வளவு பேர் இப்படியான பாலுறுப்புகள் சார்ந்து பேசுகிறோம்? அப்பட்டமாகப் பேச வேண்டியதில்லை. ஆனால் விளையாட்டுத்தனமாகவாவது பேசுகிறோமா? ‘நாகரிகமாகப் பேசணும்’ என்று முடிவு செய்து குழந்தைகளிடம் பாலுறுப்புகள் பற்றிப் பேசுவதேயில்லை. ஒருவகையில் இது ஒரு மனத்தடைதானே? 

இத்தகைய மனத்தடைகள் நாமே அறியாமல் நமக்குள் உருவானவை. சமூகக் கட்டுப்பாடுகள், பண்பாட்டுக் கூறுகள் என பல காரணிகள் இருக்கின்றன. பாலுறுப்புகள் சார்ந்து மட்டுமில்லை. ஆய்ந்து பார்த்தால் நிறைய இருக்கும்.

பொதுவாகவே ‘இது பேசக் கூடாத விஷயம்’ என்று குழந்தைகளிடம் ஓர் எண்ணத்தை உருவாக்குகிறோம். அதனால்தான் வயது கூடக் கூட பாலியல் சார்ந்தும் அந்தரங்கம் சார்ந்தும் நம்மிடம் குழந்தைகள் பேசுவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் பேச வேண்டும் என்கிற உந்துதல் அவர்களை அவர்களது நண்பர்களை நோக்கித் தள்ளுகிறது. பதினைந்து அல்லது பதினாறு வயதுகளில் குழந்தைகள் பெற்றோரைவிடவும் ஏன் நண்பர்களை அதிகம் விரும்புகிறார்கள்? ஏன் வீட்டைவிடவும் வெளியில் இருக்கவே பிரியப்படுகிறார்கள் என்பவை உளவியல் சார்ந்த முக்கியமான வினாக்கள். அவர்களால் வெளியில் தங்குதடையின்றி இருக்க முடிகிறது. எந்தச் சொல்லையும் மிக இயல்பாக பிரயோகிக்க முடிகிறது. அந்தச் சுதந்திரம் வீட்டில் இருப்பதில்லை. மனமும் வெளியில், நண்பர்கள் குழாமுடனும் இருக்கவே முனைகிறது. வெர்ச்சுவல் உலகம் எனப்படும் இணையவெளியும் இதே காரணங்களுக்காகத்தான் குழந்தைகளை உள்ளேயிழுப்பதையும் கவனிக்க வேண்டும். நண்பர்கள் இல்லாத குழந்தைகள் இதற்குள் எளிதில் விழுகிறார்கள்.

பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளியை சரி என்றும் தவறு என்றும் மேலோட்டமாகச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு மனிதர்களிடமும்- மேற்கத்திய சமூகத்திலும் கூட இத்தகைய ‘வரையறுக்கப்பட்ட’ உரையாடல்கள்தான் சாத்தியம். வரையறுக்கப்பட்ட முன்முடிவுகளிலிருந்து சில விதி மீறல்களைச் செய்வதன் வழியாகவே நமக்கும் குழந்தைகளுக்குமிடையிலான ஒத்திசைந்த உறவை உருவாக்க முடியும். குழந்தைகளின் வயதுக்குத் தகுந்தாற்போல உரையாடல்களின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் மாற்றுவது குழந்தை வளர்ப்பில் ஒரு கலை. நாம் எப்பொழுதும் நம் குழந்தைகளை தங்கமாகவும், கண்ணாகவுமே பார்க்கிறோம். ஆனால் அவர்கள் வளரும் போது தம்மை மீசை முளைத்தவர்களாகவும் வயது முதிர்ந்தவர்களாகவும் கருதுகிறார்கள். ‘இதெல்லாம் நம் குழந்தைக்குத் தெரியாது’ என்று நாம் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் போது அவர்கள் ‘எனக்குத் தெரியாத விஷயமே இல்லை’ என்று நம்பத் தொடங்குகிறார்கள். தமக்குத் தெரிந்ததைப் பற்றியெல்லாம் விவாதிக்கவும் தெரிந்து கொள்ளவும் ஆட்களைத் தேடுகிறார்கள்.

பத்து வயது வரைக்கும் குழந்தைகள் கதை கேட்பார்கள். அதற்குப் பிறகு? நம்முடைய கதையாடல் என்பது சுவாரசியமான உரையாடலாக மாற வேண்டிய தருணம் அது. கதைகளைத் தாண்டி ‘நானும் நீயும் நண்பர்கள்’ என்ற புரிதலை உண்டாக்குகிற உரையாடல். அதை வெளிப்படையாகச் சொல்லாமல் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போலச் சொல்லும் போது ‘அவன் என்னைப் பார்த்தான்’ என்றோ ‘அவள் மீது எனக்கு ஈர்ப்பு இருக்கிறதோ’ என்று தானாகவே சொல்வதற்கான சாத்தியங்கள் அதிகம்.

பெற்றோர்களிடம் பேச விரும்பாத/பேச இயலாத விஷயங்களை அவர்கள் பேசும் போது காது கொடுக்க உலகம் தயாராகவே இருக்கிறது. வீடு சொல்லித் தருவதைவிட வீதி சொல்லித் தருவதுதான் அதிகம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். குழந்தைகள் மனரீதியில் நம்மைவிட்டு விலகுவதற்கான அடிப்படையான காரணம் இதுதான். ‘இவங்ககிட்ட எல்லாத்தையும் பேச முடியாது’ என்கிற எண்ணம். அதை எப்படி உடைப்பது? குழந்தைகளுக்கு வெறுமனே கதை சொல்வதோடு நவீன பெற்றோர்களின் கடமைகள் முடிந்துவிடுகின்றனவா? இந்த உலகத்தின் பரிணாமங்களையும் இண்டு இடுக்குகளையும் அவர்களைப் பார்க்கச் செய்வதற்காக நாம் எத்தகைய உரையாடல்களையும் கதையாடல்களையும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது?

பதிப்பாளர் ஜீவ கரிகாலனுடன் பேசும் போது குழந்தைகளுடனான கதையாடல்கள் உரையாடல்கள் சார்ந்து சில புத்தகங்களை எழுதச் சொன்னார். சரியானதாகத் தோன்றியது. குழந்தைகளுக்கான கதைகள், பதின்பருவத்தினருடனான உரையாடல்கள் என்று கலந்து சில புத்தகங்களை எழுதுகிற திட்டமிருக்கிறது. அதைப் பற்றி வாசிப்பது, தெரிந்து கொள்வது, உரையாடுவது என அடுத்த சில மாதங்களுக்குத் தீவிரமாக வேலை செய்யலாம் என்றிருக்கிறேன். 

இந்தப் பேட்டையில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. தன்னந்தனியாக அமர்ந்து நமக்கு நாமே யோசிக்க வேண்டியவை என்று எக்கச்சக்கம். வாசிப்பின் வழியாகவும் தேடல்களின் வழியாகவும் அனுபவங்களைச் சேர்த்துச் சேர்த்து குழந்தைகளின் வயது கூடக் கூட நம்முடைய மன முதிர்ச்சியையும் குழந்தைகளின் வளர்ச்சி சார்ந்த புரிதல்களையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

விழுதுகள் வலுவடையும் போது வேர்கள் வலுவிழக்க வேண்டும் என்பது அவசியமில்லை. வேர்களும் வலுவாகவே இருக்கலாம்!

Aug 29, 2017

விடியாமலா போய்விடும்?

அலுவலகத்தில் ஒரு பணிப்பெண் இருக்கிறாள். அலுவலகம் இயங்கும் கட்டிடடத்திற்கான பணிப்பெண். தமிழரசி. அவளைப் பார்க்கும் போதெல்லாம் பேசுவேன். பெரும்பாலும் ‘வேலை எப்படி போகுது?’ ‘சாப்பிட்டாச்சா சார்?’ என்பது மாதிரியான பட்டும்படாத உரையாடல். தனக்குத் திருவண்ணாமலை சொந்த ஊர் என்று சொல்லியிருந்தாள். அதற்கு மேல் பேசிக் கொள்ள எதுவுமில்லை. அதுவுமில்லாமல் இளம்பெண்ணிடம் சம்பந்தமேயில்லாமல் என்ன பேசுவது?

நேற்று பார்த்த போது ‘கிளம்பறேன் சார்’ என்றாள். வேலையை விட்டுச் செல்கிறாள் போலிருக்கிறது.

‘வேற பக்கம் வேலைக்கு போறியா?’ 

‘ஆமா சார்..ஆஸ்திரேலியா போறோம்’ என்றாள். அவள் சொன்ன தொனியில் குதூகலம் தெரிந்தது. ‘அவர் ஆஸ்திரேலியா போறாரு...நானும் போறேன்’

‘அவர்’ என்றால் கணவனாகத்தானே இருக்க வேண்டும்? திருமணமானவள் என்று தெரியாது.

‘என்னது உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா’ என்று போலியான அதிர்ச்சியுடன் கேட்ட போது ‘போன மாசம்தான் சார்’ என்றாள்.

‘என்ன தமிழ்...ஒரு ஸ்வீட் கூட இல்லை?’

சிரிப்புதான் பதில். அலுவலகப் பணிப்பெண். இவளைத் திருமணம் செய்து கொள்கிறவன் ஆஸ்திரேலியா செல்கிறவன் என்றால் எப்படிப் புரிந்து கொள்வது என்பது எனது குழப்பமாக இருந்தது.

‘லவ்வா?’

‘ஆமாம் சார்’ - ஒரு வெட்கப் புன்னகை.

‘சூப்பர்..எவ்வளவு வருஷமா?’

‘ரொம்ப வருஷமா...’ மீண்டும் புன்னகை.

‘அப்படின்னா?’

விசாரிக்காமல் விட்டால் தலை வெடித்துவிடும் எனக்கு. 

‘வீட்ல ஒத்துகிட்டாங்களா?’ இந்தக் கேள்வியைக் கேட்கும் வரைக்கும் அவள் எல்லோரையும் போலவே என்று நினைத்திருந்தேன்.

அப்படியில்லை. அவனும் அவளும் வெவ்வேறு ஊர்களைச் சார்ந்தவர்கள். இருவருக்கும் பெற்றோர் இல்லை. அதனால் வீடு என்பதும் இல்லை. சிறு வயதிலிருந்தே ஆதரவற்றவர்கள். பெங்களூரில் ஒரு விடுதிதான் இருவரையும் தத்தெடுத்திருக்கிறது. சர்ச் நடத்துகிற விடுதி அது. சர்ச்சில் இருவரும் சந்தித்திருக்கிறார்கள். நண்பர்களாகி பிறகு காதலர்கள். பதினெட்டு வயது வரைக்கும் தேவாலயத்தில் கவனித்துக் கொள்வார்கள். அதன் பிறகு அவரவர் தமக்கான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். பாதிரியாரின் ஒப்புதல் அவசியம்.

பத்தாம் வகுப்பிலேயே இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்திருக்கிறார்கள். பதினெட்டு வயது நிறைவடையும் போது பாதிரியாரிடம் தெரிவித்திருக்கிறார்கள். தமிழரசி படிப்பில் சுமார். அனுக்கு படிப்பு நன்றாக வருமாம். 

‘என்னால படிக்க முடியாது..நீ படி..நான் வேலைக்குப் போறேன்’ என்று சொல்லியிருக்கிறாள். இளங்கலை, முதுகலை என அவன் படித்துக் கொண்டிருந்த போதுதான் இவள் பல பணிகளையும் செய்திருக்கிறாள். அவன் இப்பொழுது இயற்பியலில் எம்.ஃபில் முடித்துவிட்டான். அவனுக்கு படிக்கும் போது பல உதவிகளைச் செய்ததாகப் பெருமையாகச் சொன்னாள். ‘அவனுக்கு நான் செய்யாம வேற யாரு செய்வாங்க’ என்றாள். இப்பொழுது முனைவர் பட்டத்துக்காக (பி.ஹெச்.டி) ஆஸ்திரேலியா செல்கிறான். உதவித் தொகையை அவன் படிக்கவிருக்கும் கல்லூரியே கொடுக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொண்டு இணைந்து கிளம்புகிறார்கள்.

எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது?

வெளியிலிருந்து பார்க்கும் போது அழகியல் மட்டும்தான் தெரிகிறது. அவர்களது வலியையும் வேதனையையும் அவள் காட்டிக் கொள்ளவே இல்லை. இந்தத் தருணத்தில் அவர்களது அத்தனை துக்கங்களையும் கீழே போட்டு அழுத்தியபடி ஆஸ்திரேலியப் பயணம் என்கிற சந்தோஷம் சிரித்துக் கொண்டிருந்தது.

‘நல்லா இருங்க’ என்றேன்.

‘தேங்க்ஸ் சார்’ 

எனக்கு அவர்கள் இருவரிடமும் நிறையப் பேச வேண்டும் எனத் தோன்றியது. அவர்களுக்கு நேரமில்லை. வியாழக்கிழமை கிளம்புகிறார்கள்.

சில மனிதர்கள் எவ்வளவோ யோசிக்கச் செய்து விடுகிறார்கள். இத்தகைய மனிதர்கள்தான் வாழ்க்கைக்கான பாடங்களை கற்றுக் கொடுத்தபடியே இருக்கிறார்கள்.

எல்லாமும் இருந்தும் எதையாவது சுமையாகக் கருதுகிறவர்கள்தான் அதிகம். எவ்வளவுதான் சுமை இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாத மனிதர்கள் வெகு சொற்பம். தமிழரசி இரண்டாம் வகை. எல்லா மனிதர்களுக்கு ஏதேனும் துக்கமும் வலியும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இங்கே யாருக்குத்தான் வேதனை இல்லை? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துன்பம். அதையே நினைத்துக் கொண்டிருந்தால் மாறிவிடுமா என்ன? எதுவுமே மாறப் போவதில்லை. அழுத்தமும் அழுகையும்தான் கூடும். 

எதிர்கால இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொண்டு வெறித்தனமாக ஓடிக் கொண்டேயிருக்கிறவர்கள் எல்லாவற்றையும் சிதறடித்தபடியே ஒடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கண்களுக்கு தெரிவதெல்லாம் இலக்கு மட்டும்தான். அதை மட்டுமே மனதில் நிறுத்தியபடி ஓடுகிற ஓட்டத்தில் துக்கமாவது வேதனையாவது!

கேள்வி பதில்கள்

மனைவியைத் தவிர வேறு யாரிடமாவது "ஐ லவ் யூ" என சொல்லி இருக்கிறீர்களா?
சொல்ல ஆசைப்பட்டிருக்கிறேன். ‘திருமணத்திற்கு முன்’ என்று முன்னொட்டாகச் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும்.

Any proposal after marriage?
ஒரு முடிவோடுதான் இருக்கிறீர்கள்.

நண்பர்களுக்கு பணம் தந்து திரும்பக்கிடைக்காமல் போனதுண்டா? அந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்/செய்தீர்கள்?
அதை ஏன் கேட்கிறீர்கள்? நிறைய முறை. பிரச்சினை என்னவென்றால் தம்பியிடமிருந்து வாங்கித் தருவேன். திரும்பி வரவில்லையென்றால் வரவேற்பறையில் அமர்ந்து ‘அப்போ அவ்வளவு வாங்கிக் கொடுத்தான். இப்போ இவ்வளவு வாங்கிக் கொடுத்தான்’ என்று சொல்லிக் காட்டுவான். யாரிடமும் திருப்பித் தரச் சொல்லிக் கேட்டதில்லை. இப்பொழுதெல்லாம் யாராவது கேட்டால் ‘இல்லை’ என்று சொல்லிவிடுகிறேன். இதனால் என்னிடம் தொடர்பையே கத்தரித்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். 

It might be the question u have faced/answered n number of times. But I think there is no harm in asking it again, What is the 'trigger point ' for infinite number social activities that u r doing today?
அரசு மருத்துவமனைகளின் உள்நோயாளிகள் பிரிவுகளிலும், பெருமருத்துவமனைகளில் ஐசியூக்களுக்கு முன்பாகவும் நிற்கும் போது நம்மையும் மீறிய ஒரு பயம் வந்து ஒட்டிக் கொள்ளும். எவ்வளவு தைரியமான மனிதராக இருந்தாலும் மருத்துவமனைக்குள் செல்லும் போது வருகிற பதற்றமும் நடுக்கமும் கொடூரமானது. மருத்துவமனைகளில் இருக்கும் போதெல்லாம் நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் தாண்டி என்னவோ இருக்கிறது என்று தோன்றியிருக்கிறது. அதுதான் காரணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். துல்லியமாக ‘இதுதான்’ என்று சொல்லத் தெரியவில்லை.

ஓரே பாடலை திரும்பத்திரும்ப கேட்பது, ஒரு புத்தகத்தை நெக்குருகி பலமுறை வாசிப்பது, சுயம் மறந்து பல மணி நேரங்கள் சதுரங்கம் ஆடுவது. இப்படி ஏதேனும் பித்த நிலை அனுபவம்,  ஆசை உண்டா?
வாழ்க்கையில் இயல்பாக இருந்தாலே அனுபவிக்க எவ்வளவோ இருக்கின்றன. எதற்கு பித்த நிலை? அளவுதான் அழகு.

2013-14 காலகட்டங்களில் மோடியை ஆதரித்து முட்டு குடுத்ததிற்காக சமீபகாலங்களில் வருந்தியதுண்டா?
ஆமாம். 
பின்வரும் கேள்வியை யாராவது கேட்கும் போது கூட..

yevlothaan polisaa yeluthinaalum neenga Modi bhakth thaane ..

I envy on the way you open a conversation, how was that possible to talk and go on with a conversation from a co-passenger to a collector. will be most helpful if you can reveal your secret on opening a convo with anyone.
இந்தவாரம் சென்னையில் இருந்து வரும் போது அருகில் ஒரு ஜார்கண்ட் பையன் அமர்ந்திருந்தான். தனது அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ‘நீ எந்த மாநிலம்’ என்றேன். ‘ஜார்கண்ட்’ என்றான். புதிய மனிதர்களிடம் பேசும் போது நம் முதல் கேள்விக்கான பதிலைச் சொல்லிவிட்டு சில கணங்கள் எதையும் செய்யாமல் ஓர் இடைவெளியைக் கொடுத்தால் நம்முடைய அடுத்த கேள்விக்குத் தயாராக இருக்கிறார்கள் என்று அர்த்தம். உடனடியாக தாம் முன்பு செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தால் நம்மிடம் பேச்சைத் தொடர விருப்பமில்லை என்று ஒரு கணக்கு. யாராக இருந்தாலும் தயங்காமல் முதல் கேள்வியைக் கேட்டுவிடுவேன். அவன் இடைவெளி கொடுத்தான். ஐசிஐசிஐ வங்கியில் வேலை செய்வதிலிருந்து தனது காதலியைப் பார்க்க அவன் சென்னை சென்றுவிட்டுத் திரும்புவது வரை நிறையப் பேசினோம்.

உங்கள் பழைய கட்டுரைகளில் பிறரை பற்றி குறை கூறுவதாக நிறைய இருக்கும், கிட்டத்தட்ட டைரியில் குமுறுவது போல, இப்பொழுது அந்த மாதிரி கட்டுரைகள் வருவதில்லை. அதை நீங்கள் உணர்கிறீர்களா.
திருந்திவிட்டேனா?

You mentioned watching movies with children. Is it a online movie? I am scared to view online movies with children since unwanted pop-ups come up. Which site u use?
fmovies அல்லது அமேசான் ப்ரைம்.

எழுத்தாளர் மணியா? நிசப்தம் மணிகண்டனா? What is closest to your heart?
நிசப்தம். ஆனால் எழுத்துதானே எல்லாவற்றுக்கும் அடிப்படை.

தலைமுடி வளரனும்னு ஏதாவது ட்ரை பண்ணிருக்கீங்களா?
கரடி ரத்தத்தைத் தேய்த்தால் முடி வளரும் என்றார்கள். கொசு ரத்தம் என்றாலாவது முயற்சித்துப் பார்த்திருப்பேன்.

அரசியல் கட்சி, ஓவியா புரட்சி படை போன்றதொரு இயக்கம் ஆரம்பிக்கும் எண்ணம் உண்டோ? (அறக்கட்டளை அல்ல)
நான் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போகப் போகிறேன்?

Aug 28, 2017

டிவியில் என்ன பேசுன?

ஞாயிற்றுக்கிழமை காலையில் தூர்தர்ஷன் பொதிகை சேனலில் ‘காலைத் தென்றல்’ நிகழ்ச்சியில் விருந்தினராக அழைத்திருந்தார்கள். 

விடுமுறை தினத்தில் காலை ஏழரை மணிக்கு நாம் பேசுவதையெல்லாம் யார் கேட்பார்கள் தோன்றாமல் இல்லை. நாமாகச் சொன்னால் ‘அய்யோ சொல்லிட்டானே’ என்று ஒன்றிரண்டு பேர் நினைத்துவிட்டால் என்ன செய்வது என்று கமுக்கமாக இருந்து கொண்டேன். இப்பொழுதெல்லாம் கமுக்கமாக இருந்தால்தான் தாதா என்று ஏற்றுக் கொள்கிறார்களாம். 

அதிகாலை ஆறரை மணிக்கு ஜீவகரிகாலன் அழைத்துச் சென்று அரங்கத்தில் விட்டுவிட்டார். நேரடி ஒளிபரப்பு.

யாராவது ‘ஆமா நீங்க என்னவெல்லாம் எழுதுவீங்க?’ ‘ட்ரஸ்ட்ல என்ன செய்யறீங்க?’ என்று கேட்கும் போது நம்மை நாமே பிரஸ்தாபிக்க வேண்டியிருக்கும். அங்கும் இப்படித்தான் இருக்குமோ என்று பயமில்லாமல் இல்லை. நல்லவேளையாக கேள்விகளைக் கேட்ட செழியன் நிசப்தம் வாசிக்கிறவர். நிறையத் தெரிந்து வைத்திருந்தார். உரையாடலை கவனித்தால் தெரியும். என்ன பேசிக் கொள்கிறோம் என்று முன்னதாகவெல்லாம் முடிவு செய்து கொள்ளவில்லை.

‘நீங்க பேசிட்டே இருங்க..தடையாச்சுன்னா கேள்வி கேட்பேன்’ என்று அவர் சொல்லியிருந்தாலும் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டேயிருந்தார். 

இயல்பாகப் பேச முடிந்தது. முப்பது நிமிட நிகழ்ச்சி. ‘ஏன் முன்னாடியே சொல்லல?’ என்று ஒன்றிரண்டு பேர் கேட்கக் கூடும். அவர்களுக்காக இந்தச் சலனப்படம். அரை மணி நேரத்தில் எதையெல்லாம் சொல்ல வேண்டுமெனெ நினைத்தேனோ அவற்றைச் சொல்லியிருக்கிறேன்.ஒரு காலத்தில் தூர்தர்ஷன் என்பது பெருங்கனவு. இயக்குநர், தூர்தர்ஷன், சிவானந்தாசாலை முகவரிக்கு எவ்வளவு கடிதங்கள் அனுப்பியிருப்பேன்? சொந்தக்காரர்கள் அத்தனை பேரின் பெயர்களையும் குறிப்பிட்டு ஏகப்பட்ட கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரேயொரு கடிதத்தை எதிரொலி நிகழ்ச்சியில் வாசிக்கவும் செய்தார்கள்.

1975 ஆம் வருடத்திலிருந்து பணியாற்றும்- தொடக்க கால ஊழியர்- பாலாஜி ராவ்விடம் எனக்குப் பேசுவதற்கு நிறைய இருந்தன. ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால், கோப்பெருந்தேவி, ஃபாத்திமா பாபு, நிஜந்தன் என்று ஒவ்வொருவர் பற்றியும் விசாரித்தேன். அவரும் சலிப்பில்லாமல் சொல்லிக் கொண்டேயிருந்தார். தூர்தர்ஷன் என்றால் வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் பிம்பம் எனக்கு. 

தனியார் சேனல்களில் ஒருவிதமான இறுக்கத்தன்மை இருக்கும். தூர்தர்ஷனில் அப்படியில்லை. ஏதோ அவரவர் வீட்டில் இருப்பது போன்ற உணர்வுடன்தான் இருக்கிறார்கள். நேரடி ஒளிபரப்பின் போதே கூட சர்வசாதாரணமாக அலைபேசிய அலறவிடுகிறார்கள். பேசி முடித்த பிறகு நன்றாக இருந்ததாகச் சொன்னார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பாளர் லட்சுமி காலை உணவுக்காக திருவல்லிக்கேணிக்கு அழைத்துச் சென்றார். 

நல்ல மனிதர்கள்.

பெங்களூரு திரும்பும் போது செழியனும் நானும் ஜெயலலிதா சமாதிக்குச் சென்றோம். இன்னமும் எம்.ஜி.ஆர் சமாதியில் காது வைத்துக் கேட்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். செழியன் என்னை பாரீஸில் இறக்கிவிட்டார். நடந்து மூர்மார்கெட் சென்று அங்கே சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு....அது பற்றி தனியாகச் சொல்கிறேன்.

எப்படிப் பேசியிருக்கிறேன்?

Aug 26, 2017

என்ன செய்யப் போகிறோம்?

கல்வியைப் பற்றி எழுதும் போது இருவேறு விதமான கருத்துக்கள் உருவாவது இயல்பானதுதான். முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் இருப்பவர்களுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களுடன் சண்டையிட்டு, நிரூபித்து...என்னவாகப் போகிறது? ஆனால் எனக்குத் தெரிந்ததை எழுதிக் கொண்டேயிருப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை.

நீட் தேர்வு பற்றிய விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

‘அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்களை வாங்கிய மாணவர்களை எல்லாம் தனியார் பள்ளிகள் எடுத்துக் கொள்கின்றன. அவர்களையும் அரசுப் பள்ளி மாணவர்களாகத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று சிலர் பேசுகிறார்கள். எவ்வளவு பெரிய அபத்தம் இது? உண்மையிலேயே களத்தை உணர்ந்தவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள். 

நந்தினி பத்தாம் வகுப்பில் முதலிடம். அவளைத் தனியார் பள்ளியொன்றில் இலவசமாக சேர்த்துக் கொண்டார்கள். பனிரெண்டாம் வகுப்பில் 199.25 கட்-ஆஃப் வாங்கினாள். அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துவிட்டாள். அருமையான உதாரணம்தான்.

அதேசமயம் வேறு சில உதாரணங்களையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது-

அய்யாவு, பவித்ரா, அசாருதீன் மூன்று பேருமே வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். அவரவர் பள்ளியில் முதலிடம். பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் தத்தமது அரசு மேனிலைப்பள்ளிகளில்தான் படித்தார்கள். நன்றாகவும் படித்தார்கள். குறையொன்றுமில்லை. தேர்வு முடிவுகள் வெளியான போது 1120க்கு மேல்தான் மூவரும். ஆனால் யாருக்குமே கட்-ஆஃப் போதவில்லை. 190-195 என்கிற அளவுதான். திணறிப் போனார்கள். இவர்கள் மூவரும் என்றில்லை. தமிழகத்தின் மூன்றாம் நான்காம்கட்ட நகரங்களைச் சுற்றியிருக்கும் அரசு மேனிலைப்பள்ளிகளில் பல நூறு மாணவர்களை அடையாளம் காட்ட முடியும். 

பள்ளியில் முதலிடம். ஆயிரத்து நூறு மதிப்பெண்களைத் தாண்டியிருப்பார்கள். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், முதல் நிலைப் பொறியியல் கல்லூரிகளிலும் இடம் இல்லை. 
பிரச்சினையின் அடிநாதம் என்னவென்று புரிகிறதா? 

பெரும்பாலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழும் ஆங்கிலமும் கணிதமும் இயற்பியலும் வேதியியலும் சமம்தான். அத்தனை பாடங்களுக்கும் ஒரே முக்கியத்துவத்தை அளித்துப் படிக்கிறார்கள். எந்தப் பாடத்திலும் இருநூறு மதிப்பெண்கள் இருக்காது. ஆனால் அத்தனை பாடங்களிலும் நூற்றியெண்பதுக்கு மேலான மதிப்பெண்கள் இருக்கும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு அப்படியில்லை- அவர்களிடம் ப்ளூ ப்ரிண்ட் உண்டு. எந்தப் பாடத்திலிருந்து எத்தனை கேள்வி வரும்? எந்தப் பாடத்தை சாய்ஸில் விடலாம் என்று கணித்து கணக்கு, இயற்பியல், வேதியியல் அல்லது உயிரியியல், இயற்பியல், வேதியியல் பாடங்களை மட்டும் குறி வைத்து இருநூறுக்கு இருநூறு மதிப்பெண்கள் வாங்குகிறார்கள். தமிழும், ஆங்கிலமும் அவர்களுக்கு பொருட்டே இல்லை. நூற்றைம்பது அல்லது நூற்றியறுபது வாங்கினால் போதும். அதனால்தான் ஆயிரத்து ஐம்பது மதிப்பெண் வாங்கிய தனியார் பள்ளி மாணவனால் அண்ணா பல்கலைக்கழகத்திலும், பிஎஸ்ஜியிலும், மருத்துவக்கல்லூரிகளிலும் நுழைந்துவிட முடிகிறது. ஆயிரத்து நூறைத் தாண்டிய அய்யாவும், பவித்ராவும், அசாருதீனும் திணறுகிறார்கள். 

கட்டுரையாக எழுத வேண்டும் என்பதற்காக இவர்களைச் சுட்டிக்காட்டவில்லை. 2017 ஆம் ஆண்டில் நான் பார்த்த உதாரணங்கள் இவர்கள். ஒவ்வொரு வருடத்திலிருந்தும் உதாரணங்களைக் காட்ட முடியும். எந்த ஊரில் வேண்டுமானாலும் விசாரித்துப் பார்க்கலாம். பரமத்தி வேலூர், வாலாஜாபேட்டை, சத்தியமங்கலம், ஆரல்வாய்மொழி போன்ற தமிழகத்தின் உட்புறத்து ஊர்களைச் சுற்றியிருக்கும் பள்ளிகளில் படித்து வெளியேறிய மாணவர்கள் குறித்தான தகவல்களை மேம்போக்காவாவது தெரிந்து கொண்டு பேசலாம்.

நீட் தேர்வை முன்வைத்து கல்வி சார்ந்த உரையாடல் உருவாகியிருப்பது ஒரு வகையில் நல்லது. ஜல்லிக்கட்டுப் பிரச்சினை போல கலந்தாய்வு முடிந்தவுடன் விட்டுவிட்டுப் போய்விடக் கூடாது என்றுதான் விரும்புகிறேன்.

நம்முடைய கல்விச்சூழலில் இருக்கும் நிலவும் பல சிக்கல்களில் நீட் தேர்வு என்பதும் ஒன்று. இன்றைக்கு அதற்குக் கிடைத்திருக்கும் வெளிச்சத்தில் சிறுபங்கு கூட கல்வியியலின் வேறு பல பிரச்சினைகளுக்கும் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். உண்மையில் நமது கல்வியின் படியடுக்குகள் மிக மிகச் சிக்கலானவை. இங்கு கல்வி நகர்ப்புறத்தவருக்கு ஒன்றாகவும், கிராமப்புறத்தாருக்கு இன்னொன்றாகவும் இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாகவும் தனியார் பள்ளிகளில் வேறொன்றாகவும் இருக்கிறது. நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அரசுப்பள்ளி ஆசிரியரால் இருநூறு மதிப்பெண் மாணவர்களை உருவாக்க முடியாத போது ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர் பல இருநூறு மதிப்பெண் மாணவர்களை உருவாக்குகிறார். ஆசிரியர்களின் தரம் பற்றிய கேள்வி இல்லை- அவர்களுக்கு இடப்படும் இலக்குகள் சார்ந்த கேள்வி இது. ‘அவனை இருநூறு வாங்க வை’ என்பது மட்டும்தான் தனியார் பள்ளிகள் தமது ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கும் இலக்காக இருக்கிறது. அரசுப்பள்ளிகளில் அப்படியில்லை. வித்தியாசம் புரிகிறதல்லவா?

இவற்றையெல்லாம்தான் சிக்கல்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேற்சொன்ன உதாரணங்கள் இந்தச் சிக்கல்களின் விளைவான மேல்மட்ட உதாரணங்கள் மட்டுமே. களத்தில் இறங்கிப் புரிந்து கொள்ள முயன்றால் வெவ்வேறு பரிமாணங்களைத் தெரிந்து கொள்ளலாம். பெண் கல்வி என்பதில் ஆரம்பித்து கல்விக்கூடங்கள், ஆசிரியர்கள், கிராமச்சூழல், சாதிய அடுக்குகள் என்பது வரையிலும் மிக நுட்பமானவை இவை.

நம்முடைய அரசியல் சித்தாந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கல்வி சார்ந்த மனப்பூர்வமான உரையாடல் பொதுவெளியில் நடைபெற வேண்டியிருக்கிறது. ஆனால் அது எந்தக் காலத்திலும் நம் அரசியல் சூழலில் நடைபெறாது.

தமிழகத்தில் அறுபத்தைந்து சதவீத மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் படிக்கிறவர்கள்தான். தனியார் பள்ளி மாணவர்கள் வெறும் முப்பத்தைந்து சதவீதம்தான். ஆனால் அவர்கள்தான் எந்தவொரு மேல்நிலைக்கல்வியிலும் அரசு இடங்களில் தொண்ணூற்றைந்து சதவீத இடங்களைப் பிடிக்கிறார்கள். இதுதான் அவலம். இந்த அவலத்தைத்தான் வசதியாக மறைத்துக் கொள்கிறோம். இன்றைக்குத் தனியார் பள்ளி மாணவர்களின் இடத்தை சி.பி.எஸ்.ஈ மாணவர்கள் இடம் பிடித்துக் கொள்வார்கள் என்கிற பதற்றம் இருக்க வேண்டியதுதான்.

நீட் தேர்வு அல்லது பனிரெண்டாம் வகுப்பில் மூன்று பாடங்களை மட்டுமே வைத்து தகுதியை நிர்ணயித்தல் என்று ஒற்றைத் தேர்வு முறைகளில் எந்தக் கணக்கிலும் பாதிக்கப்படப் போகிறவர்கள் அரசுப்பள்ளி மாணவர்கள்தான். இதுதான் என் நிலைப்பாடு. சிபிஎஸ்ஈ Vs தனியார் பள்ளி மாணவர்கள் என்ற பிரச்சினைக்கு ஏன் அரசுப்பள்ளி மாணவர்களை ஊறுகாய் ஆக்குகிறார்கள் என்றுதான் யோசிக்கிறேன். பேசுவதெல்லாம் ‘அய்யோ கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்கிற நாம் இதுவரையிலும் அல்லது இனிமேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் என்ன திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம் அல்லது செயல்படுத்தப் போகிறோம்? அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் படிக்கும் அறுபத்தைந்து சதவீத மாணவர்களுக்கு நாம் கொடுக்கக் கூடிய வெளிச்சம் என்ன?

வெறுமனே கம்யூட்டரில் கருத்துச் சொல்வதாக இருப்பின் எதை வேண்டுமானாலும் எழுதலாம். யாரை வேண்டுமானாலும் இழுத்துப் போட்டுக் குத்தலாம். யாருக்கும் முத்திரையிடலாம். ஆனால் கள நிலவரம் வேறாக இருக்கிறது. அதன் நுனியையாவது புரிந்து கொள்வதில்தான் குறைந்தபட்ச அறம் இருக்கும்.

Aug 24, 2017

நீட் தேர்வு

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் சேர்க்கையும் மிகுந்த அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் இவ்வளவு வெற்று விவாதங்களுக்கு உள்ளாவது நல்லதில்லை. வெறுமனே உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையாக மாறிக் கொண்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.

நீட் ஆதரிப்பவர்களிலும் எதிர்ப்பவர்களிலும் கணிசமானவர்கள் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே கட்சி சார்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. 

நீட் தேர்வு குறித்தும், மருத்துவப்படிப்புக்கான சேர்க்கை குறித்தும் விவாதிப்பதற்கும் குரல் எழுப்புவதற்கும் முன்பாக மேம்போக்காகவாவது அடிப்படையான சில விவரங்களையாவது தெரிந்து கொள்வது சரியான அணுகுமுறையாக இருக்கும்.

1) தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளும் (2652 இடங்கள்) , அவை தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அரசு நடத்தும் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்கின்றன. 

2) கடந்த வருடம் வரை மொத்தமுள்ள மருத்துவப்படிப்புக்கான இடங்களில் 85% தமிழக மாணவர்களுக்கானது. பதினைந்து சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. (All India Quota- AIQ). நீட் தேர்வு அமலாக்கப்பட்ட பிறகும் 85%-15% என்கிற விகிதாச்சாரத்தில் மாற்றம் எதுவும் இருக்காது. எண்பத்தைந்து சதவீத இடங்களில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும். அந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

2) இந்திய கோட்டாவுக்கு ஒதுக்கப்படும் பதினைந்து சதவீத இடங்களில் பிற மாநில மாணவர்கள் நீட் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம். அதே போல நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக மாணவர்களும் பிற மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இந்திய கோட்டாவுக்கான இடங்களில் சேரலாம்.

3) தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் எண்பத்தைந்து சதவீத இடங்களில் தற்போது தமிழகத்தில் பின்பற்றப்படும் ஒதுக்கீட்டில் எந்த மாறுதலும் இருக்காது. பின்வரும் இட ஒதுக்கீட்டு விகிதாச்சாரமே பின்பற்றப்படும்
  • பொதுப்பிரிவு- 31%
  • பிற்படுத்தப்பட்ட பிரிவு- 30%
  • மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு- 20%
  • தாழ்த்தப்பட்ட பிரிவு- 18%
  • பழங்குடியினர்-1%
4) தமிழகத்தில் கடந்த எட்டாண்டுகளில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் (நுழைவுத் தேர்வு இல்லாமல்) நிரப்பப்பட்ட 28225 இடங்களில் வெறும் 278 இடங்களில் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். மீதமுள்ள அத்தனை இடங்களும் தனியார் பள்ளி மாணவர்களால் நிரப்பட்டவை.

5) கடந்த ஆண்டு வரையிலும் மேனேஜ்மெண்ட், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடங்களில் சேர்வதற்கு பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைந்திருந்தால் போதுமானதாக இருந்தது. பணக்கார மாணவர்களிடம் பல லட்ச ரூபாய்களுக்கு விற்கப்பட்ட இந்தக் கோட்டாக்களில் சேர்வதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். 

6) நீட் தேர்வு அரசுப்பள்ளி மாணவர்களை பாதிக்கும் என்று பேசுகிறவர்கள் கடந்த எட்டாண்டுகளில் 278 மட்டும் மாணவர்கள் மட்டுமே சேர்ந்தது ஏன் என்ற கேள்விக்கான பதிலைத் தேட வேண்டியதும், நீட் தேர்வு அவசியம் என்று பேசுகிறவர்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாயைச் செலவு செய்து நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் கிராமப்புற மாணவர்களால் சேர முடியுமா, இந்த ஆண்டு பாதிக்கப்படும் மாணவர்களுக்கான மாற்று வழிகள் என்ன என்பதற்கான பதில்களைத் தேடுவதும் முக்கியமாகிறது. 

7) கிராமப்புற அரசுப்பள்ளிகளில் 1130 மதிப்பெண்களைத் தாண்டிய மாணவர்கள் கட்-ஆஃப் என்று பார்க்கும் போது 195 என்ற அளவில் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் போவதும் தனியார் பள்ளிகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்தி மொத்த மதிப்பெண்கள் 1000 என்ற போதிலும் கட்-ஆஃப் 199-200 என்ற அளவில் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதையும் கவனத்தில் கொண்டு விவாதிக்க வேண்டியிருக்கிறது.

நீட் தேர்வைப் பற்றி எதைச் சொன்னாலும் இன்னொரு பிரிவினர் குத்துவார்கள். கொதிநிலை அடங்கிய பிறகு விரிவாகப் பேச நிறைய இருக்கிறது.

நீட் தேர்வை எதிர்ப்பவர்களாக இருந்தாலும் ஆதரிப்பவர்களாக இருந்தாலும் நீட் வினாத்தாளில் இந்தாண்டு ஏற்பட்ட குழப்பங்களையும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் தேர்வுத்தாளில் சந்திக்கும் சிக்கல்களையும் பேச உரக்கப் பேச வேண்டியது மிக அவசியம்.

‘சி.பி.எஸ்.ஈதான் பெரிய படிப்பா’ ‘ஸ்டேட் போர்டு வேஸ்ட்’ என்றெல்லாம் பெருமொத்தமாக சண்டையிடுவதையும் விட கைவசமிருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பேசுவதுதான் சரியானதாக இருக்கும். அதேசமயம் ஒரேயொரு ஆண்டின் புள்ளிவிவரங்களை எடுத்துக் கொள்வதைவிடவும் கடந்த சில ஆண்டுகளின் சராசரியான புள்ளிவிவரம்தான் சரியான விடையைக் கொடுக்கும்.

வெறுமையான விவாதங்களும், முரட்டுத்தனமான வாதங்களும் பொதுவெளியில் தேவையற்ற குழப்பங்களைத்தான் உருவாக்கும். அப்படித்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஆதரித்தாலும் சரி; எதிர்த்தாலும் சரி- வித்யாலயாக்கள், விகாஸ்களையும் தாண்டி அரசு மேனிலைப்பள்ளிகளை மனதில் வைத்துக் கொண்டு பேசுவோம். சென்னை, கோயமுத்தூர், திருச்சிக்கு அந்தப்பக்கமாக வேதாரண்யமும், பெரியகுளமும், குருபரண்டப்பள்ளியும் இருக்கின்றன. அங்கேயிருக்கும் பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்களை மனதில் வைத்துக் கொண்டு உரையாடலாம்.

இன்னமும் நிறைய இருக்கின்றன. விரிவாக விவாதிக்கலாம்.

எத்தனை? எவ்வளவு?

இரண்டரை வருங்களுக்கு முன்பாக எம்.ஜி.சாலையில் தற்போதைய நிறுவனத்தில் சேர்வதற்கான நேர்காணல் நடந்தது. பத்து மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். வீட்டிலிருந்து பதினைந்து கிலோமீட்டர். எப்படியிருந்தாலும் ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று கணக்குப் போட்டிருந்தேன். எட்டரை மணி வரைக்கும் படித்துவிட்டு குளித்து சாமி கும்பிட்டுவிட்டு எட்டே முக்காலுக்கெல்லாம் வண்டியைக் கிளப்பினால் அன்றைய தினம் சகல துர்தேவதைகளும் வண்டிச்சக்கரத்தில் அமர்ந்திருந்தார்கள். இரண்டு மணி நேரம் ஆனது. அதுவும் சில்க் போர்ட் இருக்கிறதல்லவா? அதை ஏன் இப்பொழுது நினைக்க வேண்டும். சனியன்.

பதினோரு மணிக்கு முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு நுழைந்தது வருத்தம் தெரிவித்ததெல்லாம் தனிக்கதை. தேர்வாகி, வேலையில் சேர்வதற்கான கடிதத்தை வாங்கிக் கொண்டு முதல் நாள் வேலையில் சேரும் போதும் ஒன்பதரை மணிக்கு வரச் சொன்னார்கள். சூடுபட்டிருந்ததால் ஏழரை மணிக்கே கிளம்பினேன். வெறும் இருபதே நிமிடங்கள்தான். சில்க்போர்டாவது சிங்காரியாவது. நிமிடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரம். வாழ்க்கையில் அவ்வளவு சந்தோஷமாக பெங்களூரில் வண்டி ஓட்டியதே இல்லை. இப்பொழுது ஏழரையும் இல்லை- ஏழு மணிக்குக் கிளம்பினால்தான் கூட்டம் குறைவாக இருக்கிறது. போகப் போக என்னவாகுமோ?

தினசரி சென்று வரத் தொடங்கிய பிறகு புதுப்புது பாதைகளைக் கண்டறிந்தேன். குறுக்குவழி, சுற்றுவழியெல்லாம் அத்துப்படியானாலும் கூட ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. ‘இது குறுக்குவழி தப்பிச்சுடலாம்’ என்று போனால் அங்கே நமக்கு முன்பாக நூறு பேர் ஆக்ஸிலேட்டரை முறுக்கிக் கொண்டிருப்பார்கள். சந்து பொந்து என்று எதுவாக இருந்தாலும் அப்படித்தான்.

எங்கள் வீடு இருக்கும் பகுதி குடியிருப்புகளுக்கான லே-அவுட். அங்கே நுழைந்து பிரதான சாலையை அடைந்தால் போக்குவரத்து நெரிசல் இருக்காது. தினசரி ஆயிரம் இருசக்கர வாகனங்களாவது அந்த முப்படி சாலையில் ஓடுகின்றன.  அப்பொழுதுதான் கண் விழித்த பால்குடி மறவாத ஒரு நாய்க்குட்டியை அடித்துக் கொன்றார்கள். சில பாம்புகள் நசுங்கிச் செத்தன. ஒரு குழந்தை சக்கரத்தில் விழுந்து தப்பி எழுந்தது. குடியிருப்புவாசிகள் கற்களை வைத்து சாலையை மறைத்த போது ‘ங்கொப்பனூட்டு ரோடா’ என்று தண்ணீர் லாரிக்காரர்களும் இன்னும் சிலரும் சண்டைக்கு வந்தார்கள். வாகனங்களைக் குறைக்க முடியாது என்றும் வேண்டுமானால் நம் நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவுக்கு வந்து சேர வெகுநாட்கள் ஆகவில்லை.

இதுவொரு பேய் நகரம்.  ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.

நேற்று ஒரு கூட்டத்தில் பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. எனக்கு முன்பாக பேசியவர் ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்று ஆரம்பித்தார். அது எதையெல்லாமோ கிளறிவிட்டது. அடுத்து நான் பேச வேண்டும்.  அதுவரை யோசித்து வைத்திருந்ததையெல்லாம் ஒதுக்கிவிட்டு ‘எண்களில் என்ன இருக்கிறது?’ என்று தொடங்கினேன். யோசித்துப் பார்த்தால் எண்கள்தானே நம்முடைய அத்தனை சிக்கல்களுக்கும் காரணமாக இருக்கிறது?

இரவானால் உறக்கம் விடிந்தால் உணவு தேடல் என்று இருந்த மனிதனை ஐந்து மணிக்கு அலாரம் வைக்கவிட்டு இரண்டு மூன்று முறை அதை அணைக்க வைத்து பதினாறு அல்லது பதினேழு வருடங்கள் படித்து லட்சக்கணக்கானவர்களுக்குள் வேலை தேடி பத்தாயிரமோ இருபதாயிரமோ சம்பளம் வாங்கி ஒரு வீடு கட்டி இரு சக்கர வாகனம் வாங்கி ஒரேயொரு மனைவி கட்டி இரண்டு குழந்தைகளைப் பெற்று நாற்பது வயதில் சர்க்கரை நூற்றைம்பதைத் தாண்டுகிறது அதனால் தினசரி பத்தாயிரம் எட்டுக்களாவது நடை பயில நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து இரண்டு இட்லி அல்லது ஒரு தோசை என ஒடுக்கி ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பினால் இன்றைக்கு அறுபத்தைந்து ரூபாயா எழுபது ரூபாயா என்று குழம்பச் செய்து தினசரி அலுவலகத்தில் இத்தனை மணி நேரம் இருக்க வேண்டும் என்றும் வருடாந்திர உயர்வு வேண்டுமானால் ஐந்து ரேட்டிங் வாங்க வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தப்பட்டு இவை தவிர அலைபேசி எண்கள், வங்கிக் கணக்கு எண், பான் நெம்பரில் தொடங்கி பங்குச் சந்தை எத்தனை புள்ளிகள் என்பது வரை இழுத்து போதாக்குறைக்கு ஆதார் எண்  வரைக்கும்- அடேயப்பா. எத்தனை எண்கள்?

0 வில் ஆரம்பித்து 1,2,3 என்ற எண்களே இல்லையென்றால் வாழ்க்கை எவ்வளவு ஆசுவாசமாக இருந்திருக்கும்?

தேவைப்படும் போது உணவு தேடி பசிக்கிற அளவுக்கு உண்டு இருள் கவியும் போது உறங்கி உணர்வு மேலிடும் போது இணை தேடி என்று இயற்கையோடு இயந்து கிடந்த மனிதன் எப்படி மாறியிருக்கிறான். ஆரம்பத்தில் பாதுகாப்புக்காக வீடு பிறகு செளகரியத்திற்காக வாகனம் என்று படிப்படியாக நகர்ந்து தமது தலைக்கு மேலாகப் பணம், தமக்குப் பிறகாக வாரிசுக்குச் சொத்து என்று ஓடத் தொடங்க அதைப் பார்த்து அடுத்தவர்களும் அவர்களைத் துரத்த, தடையாக எவன் தெரிந்தாலும் எதிரி என்று கருதி அவனை வீழ்த்துவதற்குத் துளியும் தயங்காத குரூர உலகம் இது. நாம் ஒவ்வொருவரும் அங்கம்தான். யாரும் யாரையும் கை நீட்ட முடியாது. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்குக் கோடு. ஒவ்வொரு தேவைக்கும் ஓர் ஓட்டம். வெறித்தனமான ஓட்டம். சக மனிதர்களைப் பற்றியெல்லாம் யோசிப்பதேயில்லை. அதற்கு நேரமும் இல்லை. 

இன்று காலையில் பைக் பின்னால் வந்து இன்னொரு வண்டி இடித்தது. அதிர்ந்து திரும்பினால் ஐம்பது வயதுடைய மனிதர். வாகனத்தின் பின்னால் மகன் இருந்தான். இடித்ததும் இடித்துவிட்டு ‘ஏன் வண்டியை நிறுத்தியிருக்க?’ என்று திட்டினார்கள். சிவப்பு எரிந்து கொண்டிருந்தது. அதெல்லாம் பிரச்சினையில்லை. சென்று கொண்டேயிருக்க வேண்டும். எட்டரை மணிக்கு பையனை பள்ளியில் விட்டுவிட்டு ஒன்பது மணிக்கு அவர் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கக் கூடும். அந்தப் பதற்றம். அவர்களைக் குறை சொல்ல முடியாது. அந்த நேரத்தில் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கவர்கள் யாரை நிறுத்தினாலும் ஒரு கோட்டை இலக்காக வைத்துக் கொண்டு ஓடுகிறவர்கள்தானே?

இப்படியே ஓடி ஓடி நமக்கான வாழ்க்கை என்று எதை வாழ்கிறோம்? யோசித்தால் கிர்ரென்றிருக்கிறது.

Detach yourself from numbers என்று எங்கேயோ படித்திருக்கிறேன். எண்களிலிருந்து விலகி இருக்க முடியுமா? அது சாத்தியமே இல்லாத காரியம். எண்களை விட்டு விலகும் போது நமக்கென்று இருக்கும் சில ஒழுங்குகள் (ஒழுக்கம் இல்லை) மாறும். ஏழு மணிக்கு வேண்டுமானாலும் எழுவேன்; எட்டு மணி என்றாலும் கேட்கக் கூடாது என்றால் வீட்டில் இருப்பவர்களே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உறக்கம் வரும் போதுதான் உறங்குவேன் என்றால் உடல்நிலை கெடும் என்பார்கள். முக்கால் வயிறுக்கு உண்கிறேன். இட்லி சப்பாத்தியின் எண்ணிக்கை பிரச்சினையில்லை என்றால் மருத்துவர் ஏதேனும் சொல்வார். 

ஸ்ஸ்ப்பா. தப்பிக்கவே முடியாது.

எண்களை விட்டு விலகி இருக்க வேண்டும் என எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? அது நேரம், பணம் என்ற எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி விலகுவதாக அல்லது ஒதுங்குவதாக இருந்தால் எண்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் எந்தெந்தக் காரியங்களிலிருந்து விலகி இருக்க முடியும்? எவையெல்லாம் சாத்தியம்? யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்.

Aug 23, 2017

சதுரங்க வேட்டை-2

சதுரங்க வேட்டை 2 படத்தில் இயக்குநர் நிர்மல்குமாருக்கு சில உதவிகளைச் செய்திருக்கிறேன். கதை, திரைக்கதை, வசனம் மூன்றையும் சதுரங்கவேட்டை-1 இயக்குநர் வினோத்திடமிருந்து தயாரிப்பாளர் மனோபாலா வாங்கியிருக்கிறார். இயக்கம் நிர்மல்குமார். படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. அநேகமாக செப்டெம்பரில் வெளியாகும் போலிருக்கிறது.

நிர்மல்குமாரை கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாகத் தெரியும். அலைபேசியில் அழைத்து ஒரு கதையைச் சொல்லி அது குறித்து விவாதிப்பதற்காகச் ‘சென்னை வர முடியுமா?’ என்றார். சென்னை போவது பெரிய விஷயமா என்ன? பையைத் தூக்கி தோளில் போட்டிருந்தேன் ‘சின்னப்பையனா இருக்கீங்க’என்றார். சிரித்து வைத்தேன். அன்றைய தினம்தான் விஜய் ஆண்டனியின் இந்தியா-பாகிஸ்தான் படம் வெளியாகிருந்தது. விஜய் ஆண்டனியின் முந்தைய படமான சலீம் படத்தின் இயக்குநர் நிர்மல்குமார் என்பதால் அவரிடம் டிக்கெட்டுகள் இருந்தன. படம் வெளியான தினத்தில் திரையரங்கில்தான் முதன்முறையாகச் சந்தித்துக் கொண்டோம். 

படம் முடிந்த பிறகு ‘எப்படி இருக்கு?’ என்றார். படம் எனக்குப் பிடிக்கவேயில்லை. அன்றுதான் படம் வெளியாகியிருக்கிறது. நாயகனின் முந்தைய படத்தின் இயக்குநர் இவர்தான். உண்மையைச் சொல்வதா பொய்யைச் சொல்வதா என்று தெரியவில்லை. 

‘மொக்கை’ என்றேன். அவர் எதுவும் சொல்லவில்லை. தவறாக நினைத்துக் கொண்டார் போலிருக்கிறது எனத் தோன்றியது.

அன்று மதியம் நிர்மல்குமாரின் அடுத்த படத்துக்கான கதையைப் பற்றி விவாதித்தோம். திரைப்படங்களில் பணியாற்றுவதற்கு இயக்குநருடனான அலைவரிசை (Frequency) முக்கியம். நம்முடைய பலம், பலவீனங்களை இயக்குநர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ‘இவன்கிட்ட இந்த வேலையை வாங்கிவிட முடியும்’ என்ற தெளிவானவர்களிடம்தான் பணியாற்ற வேண்டும். நிர்மல்குமார் அதில் தெளிவு.

திரையுலகம் என்பது என் சம்பாத்தியத்திற்கான இடமில்லை. ஒன்றாம் தேதியானால் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகிவிடக் கூடாது. திரைப்படம் மட்டுமில்லை அலுவலகத்தைத் தாண்டிச் செய்கிற எந்த வேலையிலும் பணத்தை பொருட்டாக நினைப்பதில்லை. தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு எவ்வளவு ஊதியம் என்று தெரியும். அதை எதிர்பார்த்து ஓடினால் கண்களுக்கு முன்னால் எலும்பைக் கட்டிக் கொண்டு ஓடுவது போலத்தான். ‘நம்மால் இதையும் செய்ய முடியும்’ என்கிற திருப்தியும் கற்றுக்கொள்வதற்கான இடமும் சேர்கிற நட்பும் முக்கியம். அதற்காக உழைக்கலாம். கல்லூரிகளிலும் மேடைகளிலும் ‘நான் படத்துல வேலை செஞ்சேன்’ என்று சொன்னால் மாணவர்கள் நிமிர்ந்து அமர்வார்கள். அவ்வளவுதான். மற்றபடி ‘நமக்கு ஒத்துவராதுங்க’ என்று சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. 

நிர்மல்குமார் நல்ல மனிதர். ப்ரோ, சார், பாஸ் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி அழைப்பார். ‘இதை செஞ்சு கொடுங்க’ என்று கேட்கும் போது நம்முடைய எண்ணங்களும் யோசனையும் வேறு மாதிரி இருக்கும். அப்படி வேலையைச் செய்து கொடுக்கும் போது ‘இதை இப்படி மாத்திக் கொடுங்க’ என்று தயக்கமில்லாமல் கேட்கிறவர். இயக்குநர் என்றில்லை நாம் பணியாற்றுகிற யாருமே நம்மிடம் அப்படிக் கேட்க வேண்டுமானால் நமக்கும் அவருக்குமான ஒத்திசைவு அவசியம். எதைச் செய்து கொடுத்தாலும் மூன்று முறையாவது நிர்மல் திருத்தி வாங்கிக் கொள்வார்.

பொதுவாகவே எந்த வேலையைச் செய்தாலும் அது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படியில்லையென்றால் தூக்கிப் போட்டுவிடலாம். இருப்பது அற்ப ஆயுள். பிடிக்காததையெல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. செய்கிற ஒவ்வொரு வேலையும் நம்மிடமிருந்து கடுமையான உழைப்பைக் கோரக் கூடியதாக இருக்க வேண்டும். பிழிந்து எடுக்கப்பட்ட பிறகும் நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கக் கூடிய வேலைதான் மனதுக்கு நெருக்கமானவை. அப்படியான பணிகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறேன்.

நிர்மல்குமாரிடம் சில கதைகள் தயாராக இருக்கின்றன. அதில் ஒன்றைப் படமாக்குவதற்கான முஸ்தீபுகளில் இருந்தார். அதற்கு முன்பாக மனோபாலாவின் இந்த வாய்ப்பு வந்ததும் சதுரங்கவேட்டை-2 ஐ இயக்கச் சென்றுவிட்டார். நிர்மல்குமார் கடுமையான உழைப்பாளி. நள்ளிரவு மூன்று மணி வரைக்கும் கூட விவாதித்திருக்கிறோம். மூன்று மணிக்கு நான் உறங்கி ஐந்து மணிக்கு எழுந்து பார்த்தால் அப்பொழுதும் எதையாவது எழுதிக் கொண்டிருப்பார். ‘இந்த மனுஷன் வேகத்துக்கு ஓட முடியாது’என்று நினைத்திருக்கிறேன். எஸ்.ஏ.சந்திரசேகரிடமும் பிறகும் பாரதிராஜாவிடமும் உதவி இயக்குநராக இருந்தார். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு முதல் படம்- சலீம்.

சதுரங்கவேட்டை-2 படத்தில் அரவிந்த்சாமியும் த்ரிஷாவும் நடித்திருக்கிறார்கள். அவர்களைத் தவிர நாசர், ராதாரவி, பிரகாஷ்ராஜ் என்று நிறைய பெரும் நடிகர்கள் இருக்கிறார். படத்தைப் பற்றி எதுவும் எழுதக் கூடாது என்றிருந்தேன். இந்தச் சலனப்படம் வாட்ஸப்பில் வந்தது. புதிய இசையமைப்பாளர் அஸ்வமித்ராவின் இசைக்கு கபிலன் வைரமுத்து எழுதிய பாடல். இன்றைய அரசியல் சூழலை வைத்து யாரோ அட்டகாசமாக எடிட்டிங் செய்திருக்கிறார்கள். 

நாம் பணியாற்றிய திரைப்படம் என்கிற மகிழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. வெறுமனே யூடியூப் லின்க்கை பதிவு செய்தால் நன்றாக இருக்காது அல்லவா? அதைச் சுற்றி சில சுவாரசியங்களை எழுதி அதன் பிறகு பதிவு செய்ய வேண்டும். அதற்குத்தான் மேற்சொன்ன கதையெல்லாம்.


ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும்- ‘வில்லன்வேர்ல்ட்’ பாடலின் மெட்டை அனுப்பி வைத்து ‘எப்படி இருக்கு?’ என்று இயக்குநர் கேட்டிருந்தார். சினிமா பாடலாசிரியராக வேண்டும் என்பது ஒரு காலத்திய கனவு எனக்கு. அதற்காகவே சென்னையில் அலைந்திருக்கிறேன். இந்த மெட்டுக்கு நன்றாக எழுதிவிட்டால் இயக்குநரிடம் கொடுக்கலாம் என்று எழுதிப் பார்த்தேன். ம்ஹூம். ஒத்துவரவில்லை. திரைப்பாடல் என்பது பயிற்சி. எனக்கு அது போதாது. இன்னொரு மெட்டும் அனுப்பி வைத்திருந்தார். அவரிடம் சொல்லாமலேயே அதையும் முயற்சித்துப் பார்த்தேன். வேலைக்கு ஆகவில்லை. அறிவுமதி கலக்கியிருக்கிறார். ஆடியோ வெளியாகட்டும். நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்.

Aug 22, 2017

நிசப்தம் App

நிசப்தம் வலைத்தளத்துக்கான இன்னுமொரு App தயார்.

சிவராஜ் என்ற நண்பர் உருவாக்கியிருக்கிறார். பெங்களூருவாசி. குட்டிப்பையன். சமீபத்தில்தான் கல்லூரிப்படிப்பை முடித்திருக்கிறார். பொழுது போக்காக இந்தச் செயலியை வடிவமைத்திருக்கிறார். மிகச் சிறப்பு.


நிசப்தம் தளத்துக்கென ஏற்கனவே சிவசுப்பிரமணியன் ஒரு மொபைல் செயலியை உருவாக்கியிருந்தார். இது இரண்டாவது செயலி. தொழில்நுட்ப ரீதியாக செயலி குறித்தான நிறையச் செய்திகளை சிவராஜ் அனுப்பியிருந்தார். ஆனால் உண்மையில் அவை தலைக்கு மேலாக இருக்கின்றன. என் குருவி மண்டைக்குப் புரியவில்லை.

நிறைய உழைத்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

சோனா கல்லூரியில்தான் படித்தாராம். எனக்கு ஜூனியர். முன்பின்னாக பார்த்தது கூட இல்லை. செயலியின் விவரங்களை அனுப்பி வைத்த போதுதான் ‘நானும் உங்க காலேஜ்தான்’ என்று அனுப்பியிருந்தார். சமீபத்தில் இப்படியான சூரப்புலிகள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படியாக நான்கைந்து தம்பிகள் இருந்தால் ‘நானெல்லாம்....’ என்று சட்டைப் பொத்தானைக் கழற்றி அருவாளை முதுகுக்குப் பின்னால் செருகிக் கொண்டு திரியலாம் போலிருக்கிறது. 

இனிமேல் அப்படித்தான் திரியப் போகிறேன். 

ரோபோஜாலம் புத்தகத்துக்கு என முத்து கெளசிக் பத்தாயிரம் ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார். நூறு பிரதிகள். அதை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அரிவாளை ஏன் தூக்கக் கூடாது சொல்லுங்கள்! எடை மட்டும் அறுபது கிலோவைத் தாண்டிவிட்டால் அரிவாளைத் தூக்குகிற பலத்தை பெற்றுவிடுவேன். அதுதான் சாத்தியமே ஆவதில்லை. ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்துதானே வைப்பான்? பெரிய டான் ஆகிவிடக்கூடும் என்று அவனுக்குப் பொறாமை.

அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

இந்தச் செயலியில் தேடல், பதிவுகளின் பிரிவுகள், எழுத்துரு மாற்றம் என தூள் கிளப்பியிருக்கிறார். 


செயலியைத் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இது

தரவிறக்கிப் பார்த்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

முத்துக் கெளசிக் வாங்கியிருக்கும் ரோபோஜாலம் நூறு பிரதிகளில் பத்துப் பிரதிகளை சிவாவின் உழைப்புக்காக ஒதுக்கிக் கொள்ளலாம். இந்தச் செயலியைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் பத்துப் பேருக்கு தலா ஒரு பிரதியை அனுப்பி வைத்துவிடலாம் என்றிருக்கிறேன். ஒருவேளை நிறையப் பேர் கருத்துக்களை அனுப்பினால் சிவாவே தமக்குப் பிடித்த பத்துக் கருத்தாளர்களைத் தேர்ந்தெடுக்கட்டும். பாராட்டுரையாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. மேம்படுத்துவதற்கான கருத்துக்களாகவும் இருக்கலாம். அவரைப் போன்ற இளம் மென்பொறியாளர்களுக்கு இத்தகைய ஊக்கம் அவசியமானது எனக் கருதுகிறேன்.நன்றி சிவா!

ஆண்ட்ராய்ட்டுக்கான செயலி இது. iOS க்கு இல்லையா? என்று கேட்பார்கள். விரைவில் அதற்கான ஒன்றையும் வெளியிட்டுவிடுவார்.

ஆயிரத்து முந்நூறு ரூபாய் ஃபோனாக இருந்தாலும் சரி முப்பதாயிரம் ரூபாய் அலைபேசியாக இருந்தாலும் சரி. ஆளுக்கு ஒன்றை தரவிறக்கம் செய்து சர்வரை முடக்கவும். ‘அது என்ன நிசப்தம்’ என்று அகிலமே ஸ்தம்பிக்கட்டும். சுந்தர் பிச்சையே கதறட்டும்.

sivarajng@gmail.com
vaamanikandan@gmail.com

சதுரங்கம்

இன்று தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். பள்ளிகள் இன்று மூடப்படுகின்றன. செய்தித்தாள்களில் எங்கேயேனும் ஒரு மூலையில் இது பற்றிய செய்தி இருக்கக் கூடும். எடப்பாடியாரும் பன்னீர்செல்வமும்தான் பக்கங்கள் முழுவதும் நிரப்பியிருக்கிறார்கள். ஜெயலலிதா இறந்த போது சசிகலா தன்னைப் பொதுச்செயலாளர் ஆக்கிக் கொள்வதற்கான முஸ்தீபுகளில் இறங்கிய தருணத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் பதவியில் ஒட்டியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் பக்கம்தான் நின்றார்கள். மிரட்டப்பட்டிருக்கலாம் அல்லது இன்னமும் நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி மிச்சமிருக்கிறது-  ஒருவேளை ஆட்சி கலைந்து பதவி போனால் மீண்டும் வெல்வதற்கான சாத்தியமில்லை என்று பயப்பட்டிருக்கலாம். எரிகிற கூரையில் பிடுங்கிய மட்டும் இலாபம் என்று கணக்குப் போட்டிருக்கலாம். ஏதோவொன்று. ஆனால் அந்தச் சமயத்தில் கட்சியின் அடிமட்ட  சசிகலா மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஆழமான வெறுப்பு இருந்தது. ‘அம்மாவைக் கொன்றதே இவர்கள்தானே’ என்கிற ரீதியிலான வன்மம் அது. 

அந்தச் சமயத்தில் ஓபிஎஸ் பக்கமும் தீபாவின் பக்கமும் கூட திரளானவர்கள் சேர்ந்தது கூட மன்னார்குடி குடும்பத்தின் மீது இருந்த வெறுப்புதான் காரணம். அந்தச் சமயத்தில் தீபா தமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பைத் தவறவிட்டார். தன்னை மகாராணியாக நினைத்துக் கொண்டும் கட்சியை தமது வீட்டுச் சொத்தாக கருதிக் கொண்டும் மமதையில் இருந்தவரைப் பார்த்துச் சலித்துப் போனார்கள். மெல்ல மெல்ல அவரிடமிருந்து விலகியவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இடையில் அவரது கணவர் தனியாக ஓர் இயக்கம் கண்டு நகைப்பூட்டி தங்களைத் தமிழக அரசியலின் கோமாளிகளாகக் காட்டிக் கொள்வதிலேயே வெகு தீவிரமாக இருக்கிறார்கள். தமிழக அரசியல் வெகு நுணுக்கமானது. அதன் நுனியைக் கூட தீபா புரிந்து கொள்ளவில்லை. வெறுமனே ஜெ. என்ற இனிஷியல் மட்டுமே போதுமானது என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஓபிஎஸ்ஸூம் எடப்பாடியும் பொசுக்கு பொசுக்கென்று டெல்லிக்குச் சென்று வரத் தொடங்கிய போது தர்மயுத்தத்தின் கூர்வாட்கள் துருவேறத் தொடங்கின. டெல்லியில் தமிழக அரசியலின் காய்கள் நகர்த்தப்பட்டன. அதிமுகவை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான துருப்புச் சீட்டுகளாக இருவரும் மாறினார்கள். டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று வந்த பிறகும் கூட மிக ஆசுவாசமாக பேட்டிகளை வழங்கிய போது தினகரன் கூடிய சீக்கிரம் தமக்கான பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும் டெல்லிவாலாக்களும் இவர்கள் இருவரும் நம்பியிருக்கமாட்டார்கள். மேலூரில் அவர் கூட்டிக் காட்டிய கூட்டம் (அவர்களது சொற்களில் சொன்னால் தானாகக் கூடிய கூட்டம்) நிச்சயமாக வயிற்றில் அமிலத்தைச் சுரக்கச் செய்திருக்கும். அடுத்ததாக சென்னையில் ஆரம்பித்து அடுத்தடுத்து அவர் பொதுக்கூட்டங்களை நடத்தப்போவதாக அறிவிக்க இவர்கள் இரு தரப்பும் ஏதேனும் முடிவுக்கு வந்தாக வேண்டிய அழுத்தம் உண்டானது அல்லது மேலே இருந்து உண்டாக்கப்பட்டது. 

தர்மயுத்தம் என்று வாய்ச்சவடால் அடிக்கப்பட்ட இந்த உருட்டல்கள் வெறும் பதவிச் சண்டை என்பதை அரசியல் தெரிந்தவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தாலும் கட்சியின் ஒரு பகுதியினர் ஓபிஎஸ்ஸை முழுமையாக நம்பினார்கள். அவரது சாதிய, தெற்க்கத்திய அடையாளத்தைத் தாண்டியும் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் அவரிடம் ஒட்டியிருந்தற்கான காரணம் கூட அந்த நம்பிக்கைதான் காரணம். ஆனால் தனக்கான இலாக்காக்களைப் பெறுவதிலும் அவரது சகாக்களுக்கான பேரங்களை நடத்துவதிலும்தான் அவரது முழுக்கவனமும் இருந்திருக்கிறது. அரசியல் அப்படித்தானே? அடிமட்டத்தில் இருப்பவன் வயிற்றில் துண்டைக் கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

சசிகலாவும் தினகரனும் தலைமைக்கு வந்து மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிட்டால் தமது தமிழகக் கனவுகளுக்கும் பேரங்களுக்கு ஒத்து வரமாட்டார்கள் என்பதை பாஜக உணர்ந்திருக்கிறது. தமிழகத்திற்கு பார்ட் டைம் கவர்னரை இவ்வளவு மாதங்களாகத் தொடரச் செய்வதற்கான காரணமும் அதுதான். சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோருவதற்கு கவர்னரிடம் நேரம் கேட்ட போது இழுத்தடித்த ஆளுநர் நேற்று ஓபிஎஸ்ஸூம் பாண்டியராஜனும் பதவியேற்பதற்காக வந்து ஆளுநர் மாளிகையில் காத்திருக்கிறார். ‘இப்படித்தான் நடக்க வேண்டும்’ என்று டெல்லி எழுதுவதையும் விரும்புவதையும் ஓபிஎஸ்ஸூம், ஈபிஎஸ்ஸூம் அப்படியே பின் தொடர்கிறார்கள். 

அதிமுகவும் பாஜகவும் இப்படியெல்லாம் விளையாடிக் கொண்டிருக்க ஸ்டாலின் என்ன நினைக்கிறார் என்றே புரியவில்லை. ‘ஆட்சி தானாகக் கவிழும்; மக்களுக்கு வேறு வாய்ப்பில்லை..நம்மைத்தான் முதல்வராக்குவார்கள்’என்று நம்புகிறாரா அல்லது பாஜகவிடம் வம்பை இழுக்க வேண்டியதில்லை என்று ஒதுங்குகிறாரா என்று தெரியவில்லை. குட்டையைக் குழப்ப வேண்டியதில்லை என்றும் பக்குவமான அரசியல்வாதியாக நடந்து கொள்ளலாம் என்று நினைப்பது சரிதான். ஆனால் இந்தச் சூழலில் அதெல்லாம் வேலைக்கு ஆகிற மாதிரி தெரியவில்லை. ஆட்சி கனிந்து மடியில் விழுகிற தருணத்தை அமித்ஷா நிச்சயமாக உருவாக்கமாட்டார். அடுத்த தேர்தலுக்கு முன்பாகவே திமுகxஅதிமுக என்றிருந்த தமிழகத்தின் இரு துருவ அரசியலை உடைத்துவிடுவார்கள். தினகரன், எடப்பாடி அணி என்று பிரிந்து நிற்பது போல ரஜினி மாதிரி ஒருவரைக் கொம்பு சீவிவிட்டு மாற்று அணி ஒன்றை உருவாக்கிவிடுவார்கள். அதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. ரஜினி வெல்கிறாரோ இல்லையோ- அவருக்கு என்று குறிப்பிட்ட சதவீத வாக்குகளாவது விழும். வாக்குகள் பிரிவது நல்லதுதான் என்றும் தம்முடைய வாக்கு வங்கி உடையாது என்று திமுக கணக்குப் போட்டால் அது நிச்சயமாக தவறான கணக்காகத்தான் முடியும். திமுகவுக்கும் அடிவிழும். ஒருவேளை மைனாரிட்டியாக திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டிய சூழல் உருவானால் அது திமுகவுக்கு இன்னமும் தர்மசங்கடமாகிவிடும்.

ஜெயலலிதா மரணத்தின் போது சசிகலா குடும்பத்தின் மீது தொண்டர்களுக்கு இருந்த வெறுப்பு தினகரனின் செயல்பாடுகளினால் சற்றே மாறியிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கட்சியை அவரால் காப்பாற்ற இயலும் என்று நம்புகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஆனாலும் கூட இன்றைய சூழலில் தினகரனால் முழுமையாக அதிமுகவை கைப்பற்றிவிட முடியும் என்று தோன்றவில்லை. வழக்குககள், முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி அணியில் இருப்பது, அந்த அணிக்கு டெல்லியின் முழுமையான ஆதரவு என்று பல நிர்ப்பந்தங்கள் அவருக்கு. பாஜகவை அவர் எதிர்த்துப் பேசுவதில்லை. ‘யாரோ மிரட்டறாங்க’ என்றுதான் பேசுகிறார். யார் மிரட்டுகிறார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன? 

அரசியல் வரலாறுகளை பலவான்களால் மட்டுமே எழுத முடியும். 

குட்டை குழம்பிக் கிடக்கிறது. பெரும்பாலான எதிர்கட்சிகள் அமைதியாகியிருக்கின்றன. எப்படியிருந்தாலும் இந்த அரசாங்கம் தமது முழுமையான ஆயுளைப் பூர்த்தி செய்யாது. ஆனால் அதுவரைக்கும் வழித்துக் கட்டுவார்கள். ‘அடுத்த எலெக்‌ஷனில் நீங்க உங்க தொகுதியில் ஜெயிக்கிற அளவுக்கு சம்பாதிச்சுக்குங்க’ என்பதுதான் தாரக மந்திரமாக இருக்கும். கடந்த தேர்தலில் இருந்நூற்றைம்பதாக இருந்த ரேட் இருமடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ ஆகக் கூடும். எடப்பாடி அணி இரட்டை இலையைக் கையகப்படுத்துவற்கான எல்லா வாய்ப்புகளும் உருவாக்கித் தரப்படும். ரஜினி கட்சி தொடங்குவார். கூட்டணிக் கணக்குகள் மாறும். பாஜக தமிழக சட்டமன்றத்திற்குள் காலடி வைக்கும். 2019 மத்திய தேர்தலின் முடிவுகள் தமிழக அரசியல் களத்தின் வடிவத்தை மாற்றும். ஒருவேளை மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால் நிர்மலா சீதாராமனோ அல்லது அவரைப் போன்ற இன்னொருவரோ வெகு சில ஆண்டுகளில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார். 

இந்தச் சாதிக்காரருக்கு உதவுங்கள்

சமீபமாக எரிச்சலூட்டும்படியான ஒரு காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். ‘இந்தச் சாதிக்காரருக்கு உதவுங்கள்’ என்றும் ‘சாதிச் சொந்தத்துக்கு வணக்கம்’ என்றும் வருகிற கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. சில நண்பர்களிடம் இதை பகிர்ந்ததும் உண்டு. உண்மையிலேயே சாதிய, மத அடையாளங்களைக் காட்டி உதவி கோரும்போது சங்கடமாக இருக்கிறது. 

நேற்று அதிகாலையில் கூட ஒருவர் அப்படி அனுப்பியிருந்தார். எழுந்தவுடன் அதுதான் கண்ணில்பட்டது. உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கும் போது ‘இந்தச் சாதிக்காரன்..அதனால் உதவுங்கள்’ என்று கேட்பது சரி என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டேவிட்டேன். முன்பு இப்படியான கோரிக்கைகள் வந்தால் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவதுதான் வழக்கம். ‘அப்படிக் கேட்டது தவறுதான். வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு அனுப்பியதையே உங்களுக்கும் அனுப்பிவிட்டோம். உதவுங்கள்’ என்று பதில் அனுப்பியிருந்தார். பரிசீலிக்கவே இல்லை. முடியாது என்று பதில் அனுப்பினேன்.

பணம் கொடுக்கிறவர்களில் யாரும் சாதி பார்த்துக் கொடுப்பதில்லை. ஆனால் கோரிக்கை வைக்கிறவர்கள்தான் சாதியை ஒரு சலுகையாகப் பயன்படுத்துகிறார்கள்.

விதவிதமான நன்கொடையாளர்கள் குறித்து எத்தனையோ முறை எழுதியாகிவிட்டது- பத்து நாட்களுக்கு முன்பாக ஒருவர் அழைத்திருந்தார். வேலை இல்லாத இளைஞர்களுக்கு Skilled Training என்று அரசாங்கமே அளிக்கிறது. பல நாட்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சி. அதில் கலந்து கொள்கிறவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகையாகவும் வழங்கப்படுகிறது. சேலத்தில் தாம் கலந்து கொண்டதாகவும் தமக்கு அப்படிக் கிடைத்த பணத்தை அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்க தொடர்பு கொண்டிருந்தார். ‘எதுக்குங்க அனுப்புறீங்க?’ என்று கேட்டால் ‘ட்ரெயினிங் உருப்படியாவே இல்லை..அந்தப் பணத்தை வாங்க மனசாட்சி ஒத்துக்கல’ என்றார். சாதாரணமாக நம்பவே முடியாது. ஆனால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். வேலை இல்லாத ஒருவர் கிடைக்கும் சொற்பப்பணத்தைக் கூட அனுப்பி வைக்கும் போது அவர் என்ன சாதி பார்த்தா பணம் அனுப்பி வைக்கிறார்?

அந்தப் பணத்தை வாங்கி சாதியின் அடிப்படையில் இன்னொருவருக்கு நீட்டினால் எங்கே போய் பாவத்தை நீக்குவது?

படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் என்று நாம் நம்புகிற மனிதர்கள் பலரும் சாதியை இறுகப்பற்றியிருக்கிறார்கள். சாதி மட்டுமில்லை- ஏதேனும் ஒரு அடையாளம். 

இதை எழுத வேண்டியதில்லை என்று பல தருணங்களிலும் நினைத்ததுண்டு. ஏதோ தம்மை புனிதனாகக் காட்டிக் கொள்வது போன்ற தொனி உருவாகக் கூடும். அப்படியில்லை. ஆனால் எங்கேயிருந்து சாதியை, மதத்தை, ஊரை அடையாளமாக்குகிறார்கள் என்று புரிவதேயில்லை. நாசூக்காக சாதியைக் கேட்கிறவர்களை எதிர்கொண்டபடியே இருக்க வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் எந்தப் பிரச்சினையுமில்லை. நேர்பேச்சில் சம்பளம் உட்பட எதைக் கேட்டாலும் சொல்லிவிடுகிறேன். ஆனால் ‘ஒருதலைப்பட்சமாக செயல்பட்டிருக்கிறோமா’ என்கிற சந்தேகம் எழுவதையும் தவிர்க்கவே முடிவதில்லை. 

எந்தவொரு அடையாளத்தையோ அல்லது பிராந்தியத்தையோ அடிப்படையாக வைத்து செயல்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அப்படிச் செயல்படுவது அடிப்படையிலேயே அறமற்ற சுயநலச் செயல்பாடாக அமைந்துவிடும். 

சார்பற்றவனாக அடையாளம் எதுவுமில்லாத பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பவனாகவே செயல்பட விரும்புகிறேன். அதற்காகவே அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

நிசப்தம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மனிதாபிமானத்தையும் தகுதியையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அவை நிச்சயமாக சாதி அல்லது ஊர் சார்ந்த விதிவிலக்குகள் இல்லை. இனி வரும் காலங்களில் யாரேனும் சாதியை முன்வைத்துப் பேசத் தொடங்கினால் அவற்றைப் பொதுவெளியில் எழுதி எனது அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வேன்.

நன்றி.

Aug 21, 2017

கேள்விகளும் பதில்களும்

நீங்கள் உங்கள் எழுத்தில் சாருவை வேண்டும் என்றே தவிர்த்து விட்டு விலகி போய் விட்டீர்களா? இல்லை அவரை நீங்கள் ஒரு இலக்கியவதியாக ஏற்று கொள்ளவில்லையா? கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு எழுத்தாளனை தவிர்ப்பது நியாயமா? சமீபத்தில் எழுதிய கட்டுரையில் எஸ்ரா , ஜெமோவை பாராட்டி எழுதியுள்ளீர்கள். அவர்களோடு சம தளத்தில் நிற்கும் சாரு பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. குறைந்தபட்சம் விமர்சனம் கூட இல்லை. சாரு பற்றிய உங்கள் கருத்து என்ன. அவரை இலக்கிய உலகத்தில் எங்கே வைத்துளிர்கள் உங்கள் பார்வையில்.

ஒருவரைப் பாராட்டும் போது ‘இவரைப் போய் பாராட்டலாமா?’ என்று கேட்டால் அர்த்தம் இருக்கிறது. ஒருவரைப் பற்றிப் பேசவில்லையென்றால் ‘ஏன் பேசவில்லை’ என்று கேட்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

முன்பொருமுறை வெண்முரசை தங்கள் மேலாளர் ஒருவர் தினமும் வாசிப்பதாகவும் அவருடன் விவாதிப்பதற்காக நீங்களும் தம்கட்டி உடனுக்குடன் வாசிக்க வேண்டியிருப்பதாக எழுதியிருந்தீர்கள். வெண்முரசை இப்போதும் தொடர்கிறீர்களா?

இல்லை. எழுதுவதில் வேகம் குறையும் போதும் சலிக்கும் போதும் ஜெமோவை வாசிக்கிறேன். எனக்கு அவர் உந்துசக்தி.

நீங்கள் செய்யும் பல சேவைகள் அரசாங்கம் செய்ய தவறுபவை. நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது?

வரலாம்தான். வந்து புத்தி கெட்டுப் போய்விட்டால் என்ன செய்வது? 

What is the future of nisaptham trust? Like when you become old and cannot put the same efforts as you do now?

எனக்கு முப்பத்தைந்து வயதுதானே ஆகிறது?

வருங்காலத்தில் பள்ளி தொடக்கி இப்பொழுது பயனடைந்துள்ள மாணவர்கள் போன்ற மாணவர்களை சேர்த்து புதிய பாட்டத்திட்டத்தை வைத்து சிறந்தவர்களாக உருவாக்க எண்ணம் உண்டா? 

இன்றைக்குச் செய்ய வேண்டிய வேலைகளில் கவனத்தை வைப்பதுதான் நல்லது. காலமும் நேரமும் உருவாக்கும் தேவைகளைப் பொறுத்து களத்தை மாற்றிக்க் கொள்ளலாம்.

தங்களுக்கு மன அழுத்தம் தரும் விஷயம், செயல் எது? அப்பொழுது எப்படி சமாளித்துக் கொள்கீறீர்கள்?

அம்மாவையும் மனைவியையும் கோபப்படச் செய்வது. உறக்கம் தவிர வேறு மருந்து இல்லை.

எந்த புத்தகத்தை அதிக முறை வாசிச்சிருக்கீங்க? எத்தனை முறை? ஏன் பிடிச்சிருக்கு?

சத்திய சோதனை - இரண்டு முறை வாசித்திருக்கிறேன். ஒருவன் இவ்வளவு அப்பட்டமாக இருக்க முடியுமா என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புவதால் பிடித்திருக்கிறது.

தியானத்தில் விருப்பம் உண்டா? அதெல்லாம் நிஜம் அல்லது பொய்யின்னு அனுபவம் உண்டா? இதில் உங்களுக்கு என்ன கருத்து. அம்புட்டு பேரும் அயோக்கணுங்கனா ஒருத்தனும் இல்லையா? நீ உன்ன நம்புன்னு சொல்றது சராசரிக்கும் குறைவான பதில். கார்ப்பரேட் முனில ஒருத்தர சொல்ல முடியுமா?

இன்றைக்கு உயிருடன் இருக்கும் ஒருவர் மீதும் நம்பிக்கை இல்லை.

இது வரை என் மனைவி, மக்கள், அம்மா, அப்பாவுக்கு கூட இந்த விஷயம் தெரியாது. உங்களிடம் தான் முதல் முறையாக கூறுகிறேன். இந்த மாதிரி ஒரு விஷயம் சொல்லுங்களேன்.

நிறைய இருக்கிறது. எதைச் சொல்வது என்றுதான் யோசிக்கிறேன்.

உங்கள் அப்பாவைப் பற்றி நீங்கள் எழுதிய அளவுக்கு, உங்கள் அம்மாவைப் பற்றி நீங்கள் அதிகம் எழுதியதாகத் தெரியவில்லை..

ஓர் உறவை இழக்கும் போது அல்லது இழந்துவிடுவோம் என்று நினைக்கும் போதுதான் அதன் அருமை தெரிகிறது.

Sarahah வில் கேட்கப்பட்ட கேள்விகள்.

Aug 20, 2017

பெண்

விவேகானந்தா கல்லூரியின் மின்னியல் துறையில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் இருக்கிறது. பல நூறு ஏக்கர் பரப்பளவு இருக்கும். பொறியியல், கலை அறிவியல் என வகைவகையான கல்லூரிகளை ஒரே வளாகத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். முழுமையான பெண்கள் கல்லூரி. எந்தப் பாடப்பிரிவிலும் ஆண்களைச் சேர்த்துக் கொள்வதில்லை. கல்லூரியை அட்டகாசமாக பராமரிக்கிறார்கள்.

தேதியெல்லாம் முடிவான பிறகு ஒரு வாரத்திற்கு முன்பாக அழைத்து ‘டெக்னிக்கலா பேசறீங்களா?’ என்று கேட்டார்கள். அது சரிப்பட்டு வராது. கலவையாக பேசுவதாகச் சொல்லியிருந்தேன். பதாகை ஒன்றைக் கட்டியிருந்தார்கள். ‘ஃபோட்டோ அனுப்புச்சு வைங்க’ என்று மறக்காமல் சொல்லிவிட்டேன். வீட்டில் இருப்பவர்கள் நம்ப வேண்டாமா?

கிராமப்புறத்து மாணவிகள்தான் எண்பது சதவீதம். 

பொதுவாக ஒரு வீட்டில் மகனும் மகளும் இருந்தால் மகனுக்குத்தான் எல்லாவிதமான சுதந்திரமும் இருக்கும். அவன் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். சட்டைப் பொத்தான்கள் கழண்டிருக்கலாம். தலைமுடியை விருப்பத்திற்கேற்ப வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். யாரேனும் விருந்தினர்கள் வந்தால் அவன் ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியதில்லை. காபியும் தேநீரும் கொடுக்க வேண்டியதில்லை.பெண்களுக்கு அப்படியில்லை. நாற்காலியில் இப்படித்தான் அமர வேண்டும் என்பதில் ஆரம்பித்து தலை முடி கலைந்திருக்கக் கூடாது. பகலில் உறங்கக் கூடாது. ஆடை துளி விலகியிருக்கக் கூடாது. ஆயிரத்தெட்டு விதிமுறைகள். அதுவும் கிராமப்புறம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.

இதில் ஒரு நுட்பமான அரசியல் இருக்கிறது- சராசரியான ஒரு பெண் தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டால் ‘இவளால முடி கூட வளர்க்க முடியாதா?...திமிரு’ என்பார்கள். அதுவே ஒரு ஐபிஎஸ் பெண்மணி முடியைக் கத்தரித்தால் ‘அந்தப் பொண்ணு செம bold' என்பார்கள். எப்படி இந்த வித்தியாசம் வருகிறது? ஒரு பெண் எங்கே தன்னுடைய அறிவை ஆயுதமாக்குகிறாளோ, தனது திறமையை வெளிக்காட்டி வெற்றியடைகிறாளோ அப்பொழுது அவளிடம் உலகம் அடங்குவதற்குத் தயங்குவதில்லை. அதுவே அவள் சராசரிப் பெண்ணாக இருக்கும் வரைக்கும் அவளை அடக்கி வைக்கவே இந்தச் சமூகம் முனைகிறது.

பெண்ணியம் எல்லாம் இல்லை- இதுதானே நிதர்சனம்?

அரங்கில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சார்ந்த முந்நூறு மாணவிகள் இருந்தார்கள். 


தொழில்நுட்பத்தைப் பேசுவதைவிடவும் ‘இந்த உலகம் வேட்டைக்காடு’ என்பதை அழுத்தம் திருத்தமாகப் பேசுவதிலேயேதான் கவனம் இருந்தது. விலங்குகள் தமக்குத் தேவையான அளவுக்கு மட்டும்தான் வேட்டையாடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் எல்லாவற்றையும் கபளீகரம் செய்கிறான். சக மனிதனையே வேட்டையாடுகிறான். இந்த வேட்டைக்காட்டில்தான் நாம் பிழைத்தாக வேண்டியிருக்கிறது. தன்னை தக்க வைத்துக் கொள்வதில் ஓர் ஆணுக்கு இருக்கும் சவால்களைவிடவும் பெண்ணுக்கான சவால்கள் அதிகம். அவள் தனது சிறகை விரித்துவிடக் கூடாது என்பதில் வீடும் சமூகமும் தெளிவாக இருக்கிறது. ‘படிச்சோமா கல்யாணம் செஞ்சோமா என்றிருக்க வேண்டும்’ என்பதுதான் தாரக மந்திரம். இன்றைக்கும் கூட அதிகபட்ச சுதந்திரம் என்பது வேலைக்குச் செல்லலாம். சுதந்திரம் என்றால் குடிப்பதும் புகைப்பதும் இல்லை. எடுக்கப்படும் முடிவுகளில் பெண்களின் பங்களிப்பின்  சதவீதம் எவ்வளவு? பெரும்பாலான வீடுகளில் ஆண்கள்தானே முடிவெடுக்கும் அதிகார மையங்களாக இருக்கிறார்கள்? அவன் சொல்வதுதானே நடக்கிறது?

காலங்காலமாக இப்படித்தான் சமூகம் இயங்குகிறது. சராசரிப் பெண்ணாக இருந்தால் இதை உடைப்பதெல்லாம் சாத்தியமில்லை. ‘புருஷன் சொல்லுறதைக் கேளு’ என்றுதான் அம்மாவே கூடச் சொல்வார். அதுதான் சரி என்று தம் மனமும் நினைக்கும். பெண் தமக்கான வெளியை உணர வேண்டுமானால், அதனை அடுத்தவர்களும் அனுமதிக்க வேண்டுமானால் தம்மை, தமது அறிவை, திறமையை சகலவிதத்திலும் நிரூபிக்கிற பெண்ணாக இருக்க வேண்டும். படித்து முடித்துவிட்டு சராசரியாக வெளியேறப் போகிறோமா அல்லது தனித்த பெண்ணாக வெளியேறப் போகிறோமா என்பதை முடிவு செய்து கொள்வதற்கும், இலக்கை நிர்ணயிப்பதற்கும், அதை அடைவதற்குமான எல்லாவிதமான வாய்ப்புகளும் அவகாசமும் கிடைக்கிற தருணம் என்பது கல்லூரிக்காலம்.

Know the Things என்பதற்கும் Learn the Things என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மாணவர்களைச் சந்திக்கும் போது நான் வலியுறுத்துவதெல்லாம் Know the Things தான். எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், விஞ்ஞானம் என சகலத்தைப் பற்றியும் ஐந்து நிமிடங்களுக்காவது பேசுகிற திறன் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் எங்கேயாவது இணைத்துப் பேச முடிகிற வல்லமையும்  அவசியமாகிறது. 

ஜான் நாஷ்ஷின் கணிதவியல் கோட்பாடுகள் பொருளாதாரத்தில் பயன்படுகின்றன. ஸ்டீபன் ஹாக்கிங்கின் அண்டவெளி குறித்தான கோட்பாடுகளை தத்துவவியலில் பேச முடிகிறது. சகலத்தையும் நுனியளவுக்குகேனும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேதியியலும் இயற்பியலும் மின்னியல் பொறியாளனுக்கு அவசியம். மின்னியல் பற்றித் தெரியாமல் ஒரு எந்திரவியல் பொறியாளன் இருக்க முடியாது. எந்திரவியலைத் தெரியாதவன் விமானத்தை வடிவமைக்க முடியாது.

பொறியாளன், வல்லுநர் என்பதையெல்லாம் விடுங்கள். 

மிகச் சாதாரணமாக ஈ.பி.எஸ் பற்றியோ ஓ.பி.எஸ் பற்றியோ பெண் பேசினால் கூட  ‘இவ பெரிய இவ’ என்றுதானே சொல்கிறார்கள்? வெளியில் இருப்பவர்கள் வேண்டியதில்லை- உடன்பிறந்த அண்ணன் தம்பிகளிலேயே இப்படிச் சொல்கிறவர்கள்தான் அதிகம். அந்த எண்ணத்தை எப்படித் தகர்க்கப் போகிறீர்கள்? தெரிந்து கொள்ளுங்கள். சகலத்தையும் அறிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் பற்றி இவளுக்குத் தெரியும். எதைப் பற்றியும் இவளால் பேச முடியும் என்கிற எண்ணத்தை சக மனிதர்களிடம் உருவாக்குங்கள். வீட்டில் இருப்பவர்களிடம், வெளியில் இருப்பவர்களிடம் என எல்லோரிடமும் பிம்பம் மாற வேண்டும். அதுதான் பெண் தமக்கான வெளியை, சுதந்திரத்தை அடைவதற்கான வழி.

இதையெல்லாம் விரித்து சற்றேறக்குறைய இரண்டரை மணி நேரங்கள் பேசினேன். முடிக்கும் போது ஆத்மார்த்தமாகக் கரவொலி எழுப்பினார்கள். நிறையக் கேள்விகளைக் கேட்டார்கள். ‘விஜய் மல்லய்யாவை ஏன் கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்’ என்பது வரை. மனநிறைவோடு ஊர் திரும்பிய பாதையெங்கும் மழை நனைத்திருந்தது. 

Aug 18, 2017

அண்ணனுக்கு தலையிலும் தலைக்குள்ளேயும்...

சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் விஜய்யைப் பார்க்க வேண்டும் என ஒரு குழந்தை விரும்பியது. ஏன் பார்க்க வேண்டும் என்றெல்லாம் கேட்க வேண்டியதில்லை. இன்னொரு நாள் சொல்கிறேன். தமிழகத்தில் யாரை வேண்டுமானாலும் பிடித்துவிடலாம். திரைப்பிரபலங்களை நெருங்குவதுதான் வெகு கடினம். பலவிதங்களில் முயற்சித்த பிறகு அவரைப் பிடித்துவிட்டோம். ‘மெர்சல் படத்துல வேற கெட்டப்ல வர்றாராம்..அதனால ஃபோட்டோ வெளியாகிடக் கூடாதுன்னு யோசிக்கிறாரு’ என்றார்கள். அவர் அதைவிட வலுவான காரணம் ஒன்றைச் சொன்னார். நெகிழக் கூடிய காரணம் அது. ஆனால் அது வேண்டாம்.‘கெட்டப்’ என்பதை மட்டும் பிடித்துக் கொள்வோம். நானும் கூட என்னவோ ஏதோ என்று நினைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆராவது மச்சம் வைத்திருந்தார். இவர் மச்சம் கூட வைக்கவில்லை. தாடி வைப்பதெல்லாம் புது கெட்டப் போலிருக்கிறது. 

பொதுவாகவே விஜய், அஜீத் பற்றியெல்லாம் மூச்சுவிடக் கூடாது. ‘கெட்டப்பா முக்கியம்?’ என்று பள்ளிக்கூடத்துப் பையன்கள் கிளம்பி வந்துவிடுவார்கள். 

பொடியன்கள் செய்கிற அழிச்சாட்டியம் இருக்கிறதே- தல பாய்ஸ், தளபதி வெறியன்ஸ் என்று அஞ்சும் பத்துமாகச் சேர்த்து பதாகை வைத்துவிடுகிறார்கள். எங்கள் ஊரிலும் கன கூட்டம். எனக்குத்தான் எட்டாமிடத்தில் சனி உச்சம் அல்லவா?. சில மாதங்களுக்கு முன்பாகத் தார் ரோட்டில் ‘தலக்கு மனசு வெள்ளை..எங்களை எதிர்த்தவனெல்லாம் தறுதலை’ என்று எழுதிக் கொண்டிருந்தார்கள். இரவு நேரம் அது. சோடியம் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பைக்கை நிறுத்திவிட்டு ‘தலக்கு தலையும் வெள்ளை...மனசும் வெள்ளைன்னு எழுதுங்க தம்பி’ என்றேன். உண்மையில் நம்முடைய கவித்துவத்தைக் காட்ட வேண்டும் என்றுதான் சொன்னேன். நக்கலுக்குச் சொல்வதாகப் புரிந்து கொண்டவர்கள் செமக்கடுப்பு ஆகிவிட்டார்கள். உள்ளூர்க்காரனாகப் போய்விட்டேன் என்பதால். பொறுத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. அதன்பிறகு அங்கே நிற்பது நல்லதுக்கில்லை என்று அசிரீரி ஒலித்தது. கிளம்பிச் சென்றுவிட்டேன்.

விடிந்து பார்த்தால் என்னைக் கடுப்பேற்றியிருந்தார்கள். வீட்டுச் சுவரில் ‘அண்ணனுக்கு தலையிலும் ஒண்ணுமில்லை...தலைக்குள்ளேயும் ஒண்ணுமில்லை’ என்று காகிதத்தில் எழுதி ஒட்டி வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். கிராதகப்பாவிகள். நல்லவேளை வீட்டுக்கு முன்னால் இருக்கும் ரோட்டில் எழுதாத வரைக்கும் சந்தோஷம். எத்தனை பேர் படித்தார்களோ! அவசர அவசரமாகக் கிழித்து வீசிவிட்டு வேறு எங்காவது ஒட்டியிருக்கிறார்களா தேடவே கால் மணி நேரம் பிடித்தது. ஒட்டிச் சென்றவர்கள் யாரென்று தெரியும்தான். என்ன செய்ய முடியும்? அதனால்தான் அஜீத் படம் வெளியாகும் போது ‘எனக்கு அஜீத்தைப் பிடிக்கும்’ என்று எழுதிவிட வேண்டும். விஜய் படம் வெளியாகும் போது ‘விஜய் நல்லவர்’ என்று சொல்லிவிட வேண்டும். அவர் பிரியாணி செய்வார். இவர் நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பார் எக்செட்ரா, எக்செட்ரா.

விஜய் அஜீத்தை விடுங்கள்- சிவகார்த்திகேயனுக்கு எத்தனை ரசிகர்கள்? கண்ணைக் கட்டுகிறது. சென்னை கடலூர் வெள்ளத்தின் போது சிவ கார்த்திகேயன் படம் என்னவோ ஒன்று வெளியாகியிருந்தது. மதிய உணவை முடித்துவிட்டு கடலூரில் பேருந்து ஏற வேண்டியதுதான். அந்த இடத்தில் இருந்த திரையரங்கில் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.‘அவன் ஜனவரி ஒண்ணாம்தேதி ஆனா ஜெயில்ல சாப்பாடு பரிமாறுவான்’ என்று முன்னாள் சிறைத்துறை அலுவலர் சொன்னது நினைவுக்கு வந்தது. சிவாவின் அப்பா சிறைத்துறையில் பணியாற்றியவர். அங்கே ஜனவரி ஒன்றில் பணியாளர்களுக்கு விருந்து கொடுப்பாராம். சிவாவும் அவரது சகோதரிக்கும்தான் பந்தி பரிமாறுகிற வேலை. கெட்டப் மாறிவிட்டது. அங்கே ஏதாவது வாயைக் கொடுத்தால் பல்லைத் தட்டிக் கையில் கொடுத்துவிடுவார்கள். அது ஒரு தனி உலகம்.

திரை யாரைப் பெரியளாக்கும் என்று கணிக்கவா முடியும்?

யாஷ் என்றொரு கன்னட நடிகர். இன்றைக்கு கன்னடத்தில் வெற்றிகரமான நடிகர். பின்னணி எதுவுமில்லை. கையூன்றி கர்ணமடித்து ஸ்டாராகிவிட்டார். சமீபத்தில் ஓர் இயக்குநர் அறிமுகப்படுத்தினார். இயக்குநர் தமிழர். ஆனால் கன்னடப் படம் ஒன்றை இயக்கி அது ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டது. ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். யாஷ்ஷுடன் சினிமா பற்றி பெரிதாக எதுவும் பேசவில்லை. அவரும் பெரிய அளவில் கெட்டப் எதுவும் மாற்றாமலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத்தான் கேட்டேன். ‘உங்க ஹீரோஸ் கூட அப்படித்தானே இருக்காங்க?’என்றார். சமீபத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவ்ராஜ்குமாரும் நரைமுடியோடு நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கெட்டப் மாற்றுகிறவர்தான் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினியை விட கமலும், விஜய் அஜீத்தைவிட விக்ரமும்தானே முன்னணியில் இருக்க வேண்டும்? யாஷ் டிவி சீரியல்களில்தான் நடித்துக் கொண்டிருந்தாராம். பிறகு துணைப் பாத்திரங்கள். இப்பொழுது ஹீரோ.

சொன்னால் நம்பமாட்டீர்கள்தான்- 

சதுரங்கவேட்டை-2 கதை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒரு பாத்திரத்தின் வசனத்தைச் சொல்லி ‘இதை நீங்க பேசிக் காட்டுங்க’ என்றார் இயக்குநர். எனக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. ‘அடச் சும்மா பேசுங்க’ என்றார். கடைசி வரைக்கும் தவிர்த்துவிட்டேன். எதற்காகப் பேசச் சொன்னார் என்று பேருந்தில் திரும்ப வரும்போது யோசனை ஓடிக் கொண்டேயிருந்தது. ஒருவேளை எனது வசன உச்சரிப்பு பிடித்துப் போயிருந்து அந்தப் பாத்திரத்தை என்னையே நடிக்கச் சொல்லியிருந்தால் அடுத்தடுத்த படங்களில் நட்சத்திரமாகி தலையில் விக் ஒன்றை மாட்டிக் கொண்டு ஏழெட்டு மாதங்களில் டூயட் ஆடியிருக்கலாம் என்று தோன்றியது. அஜீத் வெள்ளைத் தலையோடு நடிப்பது மாதிரி நாம் சொட்டைத் தலையோடு நடித்தாலும் கோடானு கோடி ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுதான் இருப்பார்கள் என்று நினைத்த போது வெட்கத்தில் கன்னம் சிவந்துவிட்டது.

ஹீரோ மட்டும் ஆகியிருந்தால் ‘அண்ணனுக்கு தலையிலும் ஒண்ணுமில்லை; தலைக்குள்ளேயும் ஒண்ணுமில்லை’ என்று எழுதியவனை இழுத்து வந்து கும்மியிருக்கலாம். தப்பித்துவிட்டான்.

Aug 17, 2017

கஃபீலும் வெங்கியும்

தலைப்பைப் பார்த்தவுடன் ‘மத நல்லிணக்க வகுப்பெடுக்க கிளம்பிவிட்டான்’ என்று நினைக்கத் தோன்றுமே. பதற வேண்டாம். அதுவன்று விவகாரம். இருவருமே பெங்களூரில் கார்போரேட் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள். வெவ்வேறு நிறுவனங்கள். தமிழர்கள். 

வெகு நாட்களுக்கு முன்பாக கஃபீல் அழைத்திருந்தார். 

‘அண்ணா..எங்க கம்பெனியில் ஸ்டேஷனரி பொருட்களைச் சேகரித்திருக்கிறோம்...யாருக்குக் கொடுக்கலாம்?’ என்றார். பெரும்பாலான நிறுவனங்களில் CSR (Corporate Social Responsibility) என்று வைத்திருக்கிறார்கள். சமூகத்திற்கு என ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம். நிதியும் நிறையச் சேரும். அதைக் கொண்டு மரம் வைப்பார்கள், தெருக்களைச் சுத்தம் செய்வார்கள் இப்படி சில பணிகளுக்குப் பிறகும் பணம் மிச்சமாகும். மிச்சமாகிற பணத்தை ஏதேனும் தொண்டு நிறுவனங்களை அழைத்துக் கொடுப்பார்கள் அல்லது திருப்பி அனுப்பி வைத்துவிடுவார்கள். 

கஃபீல் பணிபுரியும் நிறுவனத்தில் பணியாளர்களிடம் பணமாக வாங்காமல் விரும்புகிறவர்கள் ஸ்டேஷனரி பொருட்களாகக் கொடுக்கலாம் என்று வாங்கி வைத்திருந்தார்கள்.  முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள். பேனா, பென்சில், அழிப்பான், காகிதம், நோட்டுகள், வரைபொருட்கள் எனக் கலவையாக இருந்தன. இதற்கு முன்பாக இந்த மாதிரி யாருக்கும் வாங்கிக் கொடுத்ததில்லை. அனுபவமில்லையென்றாலும் சரி- எதையும் விட்டுவிடக் கூடாது. எங்கேயாவது யாருக்காவது பயன்படும்.

‘வாங்கிடுங்க கஃபீல்’ என்று சொல்லியிருந்தேன். 

‘ட்ரஸ்ட் பத்தி ஒரு பவர்பாய்ண்ட் கேட்கிறாங்கண்ணா’ என்றார். அனுப்பி வைத்ததை அவர் பட்டி பார்த்து டிங்கரிங் செய்து மேல் மட்ட ஆட்களுக்குக் காட்ட அவர்கள் ‘இவன் ஏதோ செய்யறான் போலிருக்கு’ என நினைத்திருக்கக் கூடும். நிசப்தம் அறக்கட்டளை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இனி அவர்கள் சமூகம் சார்ந்த தங்களது பணிகளுக்கு நம்மைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அவர்களுடைய ஒரு மணி நேரத்தை வாங்கித் தரச் சொல்லியிருக்கிறேன். நேரடியாகச் சென்று இதுவரை என்ன செய்கிறோம், எப்படிச் செய்கிறோம் என்பது பற்றியெல்லாம் விளக்கலாம் என்ற யோசனை இருக்கிறது. அநேகமாக இந்த மாதத்திற்குள் அதைச் செய்துவிட வேண்டும்.

எம்.ஜி.ஆர் காலனி மற்றும் அண்ணா நகர் காலனி இரண்டிலும் சேர்த்து இருநூற்றைம்பது குழந்தைகள் இருக்கிறார்கள். லம்பாடிகள் எனப்படும் ஊரோடிகளின் குழந்தைள். ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை படிக்கக் கூடிய மாணவர்கள் இவர்கள். அவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப பொருட்களைப் பிரித்துக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வாரத்திற்குள் முடித்துவிடுவோம். 


கஃபீல் போலத்தான் வெங்கியும். ஆனால் அவர் வேறொரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தங்கள் நிறுவனத்திலிருந்து மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை பயன்படுத்தப்பட்ட கணினிகளைப் பள்ளிகளுக்குத் தருவதாகச் செய்தி அனுப்பியிருந்தார். 

‘நல்லா வேலை செய்யுமாங்க?’ என்றேன். 

‘அட்டகாசமாக இருக்கும்’ என்றார். அப்படியானால் சரிதான். உடனடியாக ஏழு பள்ளிகளிடமிருந்து கோரிக்கைக் கடிதங்களைப் பெற்று அனுப்பி வைத்திருந்தோம். 

பத்து நாட்களுக்குப் பிறகு ‘உங்களுக்கு முப்பத்தேழு கணினிகள் ஒதுக்கப்பட்டிருக்கு’ என்றார். கணினிகளைப் பள்ளிகள் வாரியாகப் பிரித்து அவர்களே அழகாக பெட்டி கட்டி வைத்திருந்தார்கள். கஃபீலும், வெங்கியும் வெங்கி அவரவர் பொருட்களை வாகனத்தில் ஏற்றிவிட்டிருந்தார்கள். சனிக்கிழமை இரவு வந்து சேர்ந்தன. பொருட்களை இறக்கி அடுக்கி வைக்க நள்ளிரவு ஆனது. ஞாயிற்றுக்கிழமை காலையில் ஏழு அரசு பள்ளிகளுக்கும் தலா ஐந்து கணினிகளாகப் பிரித்துக் கொடுத்தாகிவிட்டது.

‘பழைய கணினிதானே?’ என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் சிறு உடைசல் கூட இல்லை. வெங்கி சொன்னவுடன் எனக்கும் கூட சற்று தயக்கமாக இருந்தது. ‘பழையன கழிதல்’ என்ற பெயரில் ஆகாவழிகளைத் தள்ளிவிட்டால் என்ன செய்வது என்கிற தயக்கம்தான். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை. மிகச் சிறப்பாக இருக்கின்றன. என் கணிப்புப்படி எப்படியிருந்தாலும் ஒவ்வொரு கணினியும் இருபதாயிரம் ரூபாய்க்குக் குறைவில்லாமல் மதிப்பிருக்கும். அப்படியென்ரால் ஒரு பள்ளிக்கு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கியிருக்கிறார்கள். பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வெகு சந்தோஷம். பயன்படுத்தப்பட்ட கணினிகள் கிடைக்கப்பெறுவதே கூட அவர்களுக்கு பெரிய காரியம்தான். கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு யார் தருகிறார்கள்? கணினிகளைப் பெற்றுக் கொண்ட தலைமையாசிரியர்களின் முகத்தைப் பார்த்திருக்க வேண்டும்.இந்த முறையும் சிறப்பாகச் செயல்படுகிற அரசு ஆரம்ப/நடுநிலைப்பள்ளிகளாகத்தான் தேர்ந்தெடுத்தோம். வடிகட்டித்தான் பள்ளிகள் முடிவு செய்யப்பட்டன.  என் பங்களிப்பு என்று பெரிதாக எதுவுமில்லை. பள்ளிகளிடம் கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றுக் கொடுத்தது, வாகன ஏற்பாடுகளைச் செய்தது என எல்லாவற்றையும் ஆசிரியர் தாமஸ் பார்த்துக் கொண்டார். நஞ்சப்பன் நிசப்தம் வாசகராம். அவருடைய வண்டிதான் பெங்களூரு வந்திருந்தது. வாடகை, சுங்கக்கட்டணம் என எல்லாமுமாகச் சேர்த்து எட்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டார். இரவு ஒன்பது மணிக்கு வண்டி வந்து சேர்ந்தது. வண்டியிலிருந்து பொருட்களை இறக்கி வைப்பது, பிரிப்பது என சகலத்தையும் எம்.ஜி.ஆர் காலனி சிங்கக்குட்டிகள் பார்த்துக் கொண்டார்கள். கஃபீலும், வெங்கியும் பெங்களூரில் அலுவலக அனுமதி உள்ளிட்ட எல்லாவிதமான செயல்களையும் மேற்கொண்டார்கள். இதை எழுத வேண்டிய தேவை இருக்கிறது. பெருநிறுவனங்கள் பலவும் இத்தகைய உதவிகளை வழங்குகின்றன. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் உதவிகள் வந்து கொண்டேயிருக்கின்றன. கொஞ்சம் கவனித்து அவர்களிடம் பேசினால் உதவிகளைத் தேவைப்படுகிறவர்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்க முடியும். 

நிறைய வெங்கிகளும் கஃபீலும் தேவையாக இருக்கிறார்கள். முகம் காட்டாத மனிதர்கள் முகம் தெரியாத மனிதர்களுக்கு என வழங்குகிறார்கள். நாம் நேரடியாக உதவ முடியாத இடங்களில் இத்தகைய உதவிகளைப் பற்றிய தகவல்களை சரியான நபர்களுக்குத் தெரியப்படுத்தினால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் ‘இவ்வளவுதானா?’ என்று நினைக்கும் ஒவ்வொன்றுமே ஏதாவதொரு மனிதருக்கு ‘அம்மாடியோ’வாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். எதுவுமே ‘இவ்வளவுதான்’ என்றில்லை. இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது.  

ஏழு பள்ளிகளுக்குத் தலா ஐந்து கணினிகள் தவிர மீதமான இரு கணினிகளை எம்.ஜி.ஆர் காலனியில் அமைத்துக் கொடுத்திருக்கும் நூலகத்திற்கு வழங்கிவிடலாம் என்பது திட்டம். அந்த மாணவர்கள் மாலை நேரத்தில் பயன்படுத்தட்டும்.

கணினிகளை வழங்கிய Sasken நிறுவனத்திற்கும் எழுதுபொருட்களை வழங்கிய KPMG நிறுவனத்திற்கும் நன்றி. கஃபீலுக்கும் வெங்கிக்கும் தனியாக நன்றி சொல்ல வேண்டியதில்லை. இருவரும் செயல்பட்டிருக்கவில்லையெனில் இந்தப் புன்னகை சாத்தியமில்லை. 

எஸ்.ராவும் மார்க்ஸூம்

கடந்தவாரம் திருப்பூரில் நிறைய இடங்களில் கார்ல் மார்க்ஸ் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் பேசப் போவதாக சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்கள். ‘இவர் கம்யூனிஸ்ட்டா?’ என்று ஒரு கணம் அபத்தமாக யோசித்தேன். அவர் பேசியதன் காணொளியை நேற்று சில நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பேச்சு. அவரது வழமையான தங்கு தடையில்லாத பேச்சில் கார்ல் மார்க்ஸ் பற்றியும் அவரது நண்பர் ஏங்கெல்ஸ் பற்றியும் மார்க்ஸின் மனைவி ஜென்னி பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை, சித்தாந்தங்கள் குறித்துப் பேசிய காணொளி இது.

நான் கம்யூனிஸ்ட் இல்லை. கம்யூனிஸ சித்தாந்தங்களில் பெரிய நம்பிக்கையுடையவனுமில்லை. ஆனால் தன்னை மார்க்சியவாதி என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடிய நண்பர்கள் பலர் எனக்கு இருக்கிறார்கள். மார்க்ஸூம் அவரது சிந்தனைகளும் பலரைத் தாக்கியிருக்கின்றன. உலகை புரட்டிப் போட்ட சிந்தனையாளர்கள் என்ற பட்டியலைத் தயாரித்தால் கார்ல் மார்க்ஸை முதல் இடத்தில் வைக்க முடியும் என நம்பலாம். 

‘அப்படி என்னய்யா மார்க்ஸ் சிந்திச்சுட்டான்?’ என்று கேட்கிறவர்களுக்கு எஸ்.ராவின் இந்தப் பேருரை முக்கியமான திறப்பாக இருக்கும். இந்தப் பேச்சுக்காக எஸ்.ராவின் உழைப்பை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. உரையின் தொடக்கத்திலேயே ‘கம்யூனிஸ்ட் மார்க்ஸ் பத்திப் பேசறது முக்கியமில்லை; எழுத்தாளன் பேசறது முக்கியம்’ என்று சொல்லித்தான் தன்னை தோழர் எஸ்.ஏ.பெருமாள் அழைத்ததாக எஸ்.ரா குறிப்பிடுகிறார். ‘இவர் கம்யூனிஸ்ட்டா?’ என்ற என் கேள்விக்கான பதில் இது.

கம்யூனிஸத்தை நம்புகிறோம்; நம்பவில்லை என்பது இரண்டாம்பட்சம். கோடிக்கணக்கானவர்கள் நம்புகிற சித்தாந்தத்தை உருவாக்கிய மனிதனைப் பற்றிய அடிப்படையாவது நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். புத்தகங்களை வாசிப்பது, இணையத்தில் துழாவுவது போன்றவற்றைச் செய்யலாம்தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் அதைச் செய்வோம்? ‘அதெல்லாம் போரடிக்கும்’ என்ற மனநிலைதான் இருக்கும்.

நேற்றிரவு ஒருவர் அழைத்திருந்தார். ‘என்ன செஞ்சுட்டிருக்கீங்க?’ என்ற வழக்கமான கேள்விக்கு ‘கார்ல் மார்க்ஸ் பற்றிய பேச்சைக் கேட்டுட்டு இருக்கேன்’ என்றேன்.

‘தூக்கம் வருமே’ என்றார். இணைப்பை அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். இன்று காலை ‘அட்டகாசம்’ என்று பதில் அனுப்பியிருந்தார். ஒன்றிரண்டு தகவல் பிழைகள் இருக்கின்றன. உதாரணமாக மார்க்ஸ் இறந்த தேதியைத் தவறாகக் குறிப்பிடுகிறார். ஆனால் இது இயல்பானதுதான். குறிப்பேயில்லாமல் இரண்டு மணி நேரம் பேசுவது சாதாரணக்காரியமில்லை. ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஓர் ஆளுமையைப் பற்றிப் பேச வேண்டுமானால் கூட ஒரு மணி நேரமாவது தயாரிக்க வேண்டும். இரண்டு மணி நேரம் பேச வேண்டுமானால்? 

எஸ்.ராவையும் ஜெயமோகனையும் பார்த்து பொறாமைப்படுகிறவர்கள், தூற்றுகிறவர்கள், வசைபாடுகிறவர்கள் ஒரு விஷயத்தை கோட்டைவிட்டுவிடுகிறார்கள். இவர்களின் உழைப்பை லாவகமாகத் தவிர்த்துவிடுகிறார்கள். இன்றைக்கு அவர்கள் சேர்ந்திருக்கும் இடமானது சாதாரணமாக அடையக் கூடியதில்லை. கடும் வாசிப்பின் வழியாகவும், எழுத்தின் வழியாகவும் ஆளுமைகளாக உருவெடுத்திருக்கிறார்கள். இன்றைக்கும் கூட அவ்வளவு அர்ப்பணிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.ராவின் இந்த உரையைக் கேட்கிறவர்களுக்கு அதன் பின்னால் இருக்கக் கூடிய உழைப்பு புரியும். எஸ்.ரா மாதிரியான ஆளுமைகள் பேசும் போது கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். இந்த உரையும் அப்படியானதொரு உரைதான். 

இரவில் கனவு முழுக்கவும் எஸ்.ராவும் மார்க்ஸூமாகவுமே இருந்தார்கள்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், அற்புதமான உரை நிகழ்த்திய எஸ்.ராவுக்கும், பதிவு செய்த ஸ்ருதி டிவிக்கும் நன்றி.

நிறையப் பேர் இந்தக் காணொளியைப் பார்த்திருக்கக் கூடும். பார்க்காதவர்களுக்காக இந்த இணைப்பு-