ஞாயிற்றுக்கிழமை இளவழகன் அழைத்திருந்தார். ‘அய்யாவுவைப் பார்த்தேன்’ என்றார். அவர் சென்னைவாசி. சொந்த ஊர் நாமக்கல் பக்கமோ என்னவோ. இவர் எங்கே அய்யாவுவைப் பார்த்தார் என்று குழப்பமாக இருந்தது. அய்யாவு பற்றி முன்பு ஒன்றிரண்டு முறை எழுதியிருக்கிறேன். 1130 மதிப்பெண்கள் வாங்கியவன். வசதியில்லாத குடும்பம். ஒரு தன்னார்வக்குழுவினர் வந்து ‘இந்தக் காலேஜ்ல ஃபீஸே இல்லை...அங்கேயே சேர்ந்துக்க’ என்று மூளையைக் கழுவி அவனைத் தனியார் கல்லூரியில் சேர்த்துவிடுவதற்கான முயற்சிகளில் இருந்தார்கள். நல்லவேளையாகக் கடைசி நேரத்தில் தப்பிவிட்டான். அதே ‘ஜீரோ ஃபீஸ்’தான் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியிலும். கிராமப்புறத்திற்கென அவர்கள் ஒதுக்கி வைத்த இடங்களில் ஒன்றை அய்யாவு தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
வேலூர் கல்லூரியில் சேர்வதற்கு முன்பாக ஒரு முறை நேரில் சந்திக்க விரும்பியிருந்தேன். கல்லூரியில் என்னவிதமான சவால்களைச் சந்திக்க நேரிடும் என்றாவது அவனிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது. அவன் கல்லூரியில் சேர்ந்துவிட்ட விஷயம் இளவழகன் சொல்லித்தான் தெரியும். நிசப்தத்தில் அய்யாவு பற்றி எழுதியதை வைத்து இளவழகன் அவனைப் பற்றித் தெரிந்து கொண்டு தேடிச் சென்றிருக்கிறார். இளவழகனின் உறவுக்காரப் பையன் ஒருவனும் அதே கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். ‘இருவருக்கும் ஒரே அறை கொடுத்துவிடுங்கள். அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிச் சேர்த்திருக்கிறார். அழைத்துப் பேசிய போது ‘ஏம்ப்பா ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல’ என்றேன். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
ஒருவன் மட்டும் என்றில்லை. தொண்ணூறுகளின் பாதிக்குப் பிறகாகப் பிறந்தவர்கள் பலரும் அப்படித்தான் இருக்கிறார்கள். இதைக் குற்றச்சாட்டாக வைக்கவில்லை. ஒரு தலைமுறையே இப்படித்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. நிறைய உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.
ஹரீஷ் என்றொரு மாணவன். கோவைக் கல்லூரியொன்றில் பொறியியல் படிக்கிறான். கடந்த வருடம் கல்லூரிக் கட்டணம் கட்டியிருந்தோம். சரியாக ஒரு வருடம். கடந்த வாரம் அழைத்து ‘இந்த வருஷம் ஃபீஸ் கட்ட முடியுமா?’ என்கிறான். இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. கிட்டத்தட்ட அவனை மறந்திருந்தேன். அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது வெறுமனே நன்றியை எதிர்பார்த்து இல்லை. அது அவசியமும் இல்லை. பிற உதவிகளைப் பெறுகிறவர்களில் ரசீது கூட அனுப்பாதவர்கள் நிறைய உண்டு. அது பிரச்சினையே இல்லை.
ஆனால் மாணவர்களை அப்படி விடக் கூடாது. தொடர்ந்து நம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என நினைப்பேன். எளிய குடும்பத்திலிருந்து வருகிறவர்கள் அவர்கள். வெளியுலகம் தெரிவதில்லை. வெறுமனே பட்டம் ஒன்றை வாங்கினால் போதும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இந்த உலகத்தின் ஆழ அகலங்களும் இங்கே நிலவுகிற போட்டிகளும் அவர்களுக்குத் தெரிவதேயில்லை. எதைப் படிப்பது, எப்படிப் படிப்பது, மேலே வருவதற்கான சாத்தியங்கள் என்ன என்றெல்லாம் அவர்களிடம் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது. படிப்புக்காக பணம் கொடுப்பதைத் தாண்டியும் அவர்கள் நம் கண்ணியிலிருந்து அறுபட்டுவிடவே கூடாது என்பதுதான் முக்கியம். அதற்காகத்தான் Mentoring என்கிற திட்டமும் கூட.
கடந்த வாரம் மாதேஸ்வரனைச் சந்தித்த போது ‘கீர்த்தி சார் கூட பேசுறியா?’ என்றேன். மாதேஸ்வரன் அம்மா அப்பா இல்லாதவன். வாரத்தில் ஒரு நாள் மட்டும் கசாப்புக்கடை நடத்தி தன்னையும் தனது அக்காவையும் கவனித்துக் கொள்கிறான். இருவருமே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் கீர்த்திதான் வழிகாட்டி. கீர்த்தி நாராயணன் வருமான வரித்துறையில் துணை ஆணையர். ஐ.ஆர்.எஸ். அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். மாதேஸ்வரன் போட்டித் தேர்வுகள் எழுத விரும்புவதாகச் சொல்லியிருந்தான். தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகளுக்கான புத்தகங்களை வாங்கி அனுப்பி ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார்.
‘அவரைப் பத்தித் தெரியுமா?’ என்றேன். மாதேஸ்வரனுக்கு ஒன்றும் தெரியவில்லை. விளக்கிவிட்டு ‘அவர் லெவலுக்கு லெட்டர் எழுதி போஸ்ட் பண்ணனும்ன்னு ஒண்ணுமில்ல...எழுதினதைக் கொடு பார்க்கிறேன்’ என்றால் எங்கேயோ தொலைத்துவிட்டான்.
‘அவரைப் பத்தித் தெரியுமா?’ என்றேன். மாதேஸ்வரனுக்கு ஒன்றும் தெரியவில்லை. விளக்கிவிட்டு ‘அவர் லெவலுக்கு லெட்டர் எழுதி போஸ்ட் பண்ணனும்ன்னு ஒண்ணுமில்ல...எழுதினதைக் கொடு பார்க்கிறேன்’ என்றால் எங்கேயோ தொலைத்துவிட்டான்.
‘என்னப்பா இப்படி இருக்கிற?’ என்றால் முழிக்கிறான்.
மேற்சொன்ன மாணவர்கள் எல்லோருமே நன்கு படிக்கக் கூடியவர்கள். பொறுப்பானவர்கள்தான். ஆனால் எங்கே பிரச்சினையென்றுதான் தெரியவில்லை.
மேற்சொன்ன மாணவர்கள் எல்லோருமே நன்கு படிக்கக் கூடியவர்கள். பொறுப்பானவர்கள்தான். ஆனால் எங்கே பிரச்சினையென்றுதான் தெரியவில்லை.
சனிக்கிழமையன்று எம்.ஜி.ஆர் காலனிக்குச் சென்றிருந்தோம். கழைக்கூத்தாடிகள் காலனி அது. அங்கு பதினேழு மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதினார்கள். பதினாறு பேர் தேர்ச்சியடைந்துவிட்டார்கள். ஒருவன் தொள்ளாயிரத்துச் சில்லரை மதிப்பெண்கள். மற்றவர்கள் அதற்கும் குறைவு. அவர்களும் அப்படித்தான். இடையில் சில மாணவர்களைத் தவிர யாருமே தொடர்பு கொள்ளவில்லை. நல்லவேளையாக பதினாறு பேரும் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்கள். அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காகச் சென்றிருந்தோம். அந்தக் காலனியில் ஒரு பெண் பொறியியல் படிக்கிறாள். அவளைச் சக்ரவர்த்தி என்றொரு நல்ல மனிதர் படிக்க வைக்கிறார். காலனியிலிருந்து மூன்று பேர்களை கொல்கத்தாவுக்கு தேசிய அளவிலான மூன்று மாத ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளருக்கான பயிற்சிக்கு அனுப்பி வைத்திருந்தோம். அவர்களும் பயிற்சியை முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள். காலனி மொத்தமும் கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். இனி எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று பேசுவதற்காகக் கூடியிருந்தோம்.
‘நீங்க ஏன் எங்களுக்கு வேண்டி கஷ்டப்படுறீங்க?’ என்று அதில் ஒரு பெண் சில நாட்களுக்கு முன்பாகக் கேட்டிருந்தாள். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி அவள். சிரித்துக் கொண்டே வந்துவிட்டேன். அதற்கான பதிலைச் சொல்வதுதான் நோக்கமாக இருந்தது.
‘தமிழகத்தில் எவ்வளவுதான் பிற்படுத்தப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சொந்தமாக ஒரு குடிசையாவது இருக்கும். காலங்காலமாக நீங்கள் மட்டும்தான் நாடோடிகளாகத் திரிந்தவர்கள். இப்பொழுது இருக்க இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் இது போதாது. மேலே வர இன்னமும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது’ என்று பேசிக் கொண்டிருந்த போது அங்கேயும் அப்படித்தான். பல பொடியன்கள் ஆங்காங்கே வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு படுத்திருந்தார்கள். அதில் சிலரை இந்த அவ்ருடத்திலிருந்து புதியதாக ஜிம்னாஸ்டிக்கு அனுப்புகிறார்கள். அவர்களுக்காகத்தான் பேசிக் கொண்டிருந்தோம்.
முன்பெல்லாம் வீட்டிற்கு பெரியவர்கள் வந்தால் அவர்களிடம் பேசச் செய்து, யாரேனும் நமக்கு உதவினால் அவர்களுக்கு நன்றி சொல்லச் சொல்லி என்று குறைந்தபட்சமான நல்ல பழக்கவழக்கங்களையாவது பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். இன்றைக்கு பெற்றவர்களிடமிருந்து குழந்தைகளைத் தொழில்நுட்பங்கள் துண்டித்துவிடுகின்றன. தொலைக்காட்சியும் செல்போன்களும்தான் அவர்களின் உலகமாக இருக்கிறது. பெற்றோர் சொல்வது காதிலேயே விழுவதில்லை. பெற்றோரும் விட்டுவிடுகிறார்கள். வீட்டுக்கு யாராவது புதியவர்கள் வந்தால் ஏதாவதொரு செல்போனைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் ஓடுகிற குழந்தைகள்தான் அதிகம். அதன் விளைவுகள் நேரடியாகத் தெரிவதில்லை.
தொடர்பில் இருக்கும் மாணவர்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது அழைத்து வைத்து ஒரு நாள் முழுவதும் பயிற்சியளிக்கிற திட்டமிருக்கிறது. அதையெல்லாம் செய்யாவிட்டால் கல்வி உதவிகளைச் செய்வதில் பலனே இருக்காது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் ஒரு தலைமுறையே இப்படித்தானே உருவாகிக் கொண்டிருக்கிறது?
பல தரப்பிலும் பழகும் போது ‘ச்சே...என்ன இப்படி இருக்காங்க?’ என்று தோன்றாமல் இல்லை. படிப்பு, மதிப்பெண்கள் எல்லாம் அப்புறம். முதலில் Values என்ன என்பதைத்தான் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டியிருக்கிறது. தலைமுறைகள் தாண்டத் தாண்ட எங்கேயோ பெரிய இடைவெளி விழுந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த இடைவெளியை எங்கே எப்படி நிரப்பப் போகிறோம் என்றுதான் புரியவில்லை.
9 எதிர் சப்தங்கள்:
இவ்வளவு புறக்கணிப்புகளுக்கு அப்புறமும் நீங்கள் தொடர்ந்து முன் செல்வதால் தான் உங்களை பாராட்ட வேண்டியிருக்கிறது....உங்களை பார்த்து பொறாமைப் பட வேண்டியிருக்கிறது
// ஆனால் ஒரு தலைமுறையே இப்படித்தானே உருவாகிக் கொண்டிருக்கிறது?
பெரும்பாலும் அப்படியே.
ஏன் என்பதற்கான பதில் தெரிந்தால் நல்லது. முயற்சிகள் தொடர்கின்றன.
அருண்,
இதைப் புறக்கணிப்பு என்று எடுத்துக் கொண்டால் சுணங்கிவிடுவோம். அறியாமை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.
அன்பின் அருண், இது தான் மணி போன்ற அருளாளர்களின் இயல்பு. இன்னும் அதிகமாக பொறாமை படுங்கள். அப்போது தான் ஏதேனும் ஒரு கட்டத்தில் மணி நம்மை பார்த்து பொறாமை படும் அளவு நாமும் மாற இயற்கை ஊக்குவிக்கும் வாழ்க வளமுடன்.
உங்கள் கல்வி சேவை வாழ்க! வளர்க!
//‘நீங்க ஏன் எங்களுக்கு வேண்டி கஷ்டப்படுறீங்க?’ என்று அதில் ஒரு பெண் சில நாட்களுக்கு முன்பாகக் கேட்டிருந்தாள்.//
இந்த கேள்விதான் "நீங்க ஏன் செய்யறீங்க"
http://www.nisaptham.com/2017/06/blog-post_47.html
பதிவிற்கான ஆரம்பமோ?
அடுத்த உருப்படியான வேலை என்ன செய்யலாம். சொல்லுங்க (chotta BIG) பா ஸூ..✔
மணி,
//இதைப் புறக்கணிப்பு என்று எடுத்துக் கொண்டால்
அது உங்கள் (சராசரிக்கு அதிகமான) பெருந்தன்மை..
கோபால் அய்யா,
//இது தான் மணி போன்ற அருளாளர்களின் இயல்பு
மிகச் சரி
//இன்னும் அதிகமாக பொறாமை படுங்கள்.
இன்றைய நிலையில் அது மட்டும் தான் முடிகிறது...
சிந்திக்க வேண்டிய விசயத்தை தெளிவா சொல்லி இருக்கீங்க மணி
நல்ல பண்புகளை சொல்லி தர வீடும் பள்ளியும் சேர்ந்து செயல்படனும் .. பள்ளிகளின் நிலைமை தான் நமக்கு நல்லா தெரியுதே .. குறைந்த பட்சம் வீட்டிலாவது இந்த வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கனும் .. நம்முடைய பெற்றோர்கள் அளவுக்கு நாம் உறவினர் , அக்கம்பக்கத்தாரோடு உறவு கொண்டாடுவதில்லை. அடுத்த தலைமுறையில் இந்த பிரச்சினை பூதாகரமாக ஆகி வருகிறது. உங்கள் பதிவு அதை தான் சுட்டுகிறது.
வழமை போல உங்களின் நற்சிந்தனைக்கும் மற்றும் செயலுக்கும் எனது அன்பும், நன்றிகளும்
Post a Comment