குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் கதை சொல்வதற்கான நுட்பங்களை அவ்வப்பொழுது இணையத்தில் தேடுவதுண்டு. நம் ஊர்க்காரர் ஒருவர் ‘குழந்தைகளுக்கு சென்ஸிபிளா கதை சொல்லணும்’ என்று சொல்லி அதைப் பதிவு செய்து யூடியூப்பிலும் ஏற்றி வைத்திருந்தார். பாதியோடு நிறுத்திவிட்டேன். நிஜமாவே அப்படித்தான் சொல்ல வேண்டுமா? குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் கதை சொல்லும் போது ஒரேயொரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டால் போதும்- சுவாரஸியம். குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் சென்ஸிபிளிட்டிக்கு அவசியமே இல்லை. அவர்களது உலகில் குரங்கு பேசும். குருவி தபால் எழுதும். சிங்கம் பைக் ஓட்டும்.
குழந்தைகளுக்கும் இதெல்லாம் நடக்காது என்று தெரியும். ஆனாலும் ரசிப்பார்கள். அதுதான் பால்யம். எப்பொழுது ‘ச்சீ..ச்சீ..இதெல்லாம் நடக்காது’ என்று யோசித்து ரசிப்பதை நிறுத்துகிறதோ அப்பொழுது அந்தக் குழந்தை தனது பால்யத்தைவிட்டு வெளியேறிவிட்டது என்று அர்த்தம். அது தானாக நடக்கும். பால்யத்தை விட்டு குழந்தையை அவசர அவசரமாக வெளியேற்ற வேண்டியதில்லை. சென்ஸிபிளிட்டி, அறிவு என்ற பெயரில் குழந்தைகளை நாம்தான் விடாப்பிடியாகத் துரத்திக் கொண்டிருக்கிறோம். அறிவு என்பது இயல்பாக வளர வேண்டியது. திணிக்க வேண்டியதில்லை.
கட்டற்ற, தடைகள் ஏதுமற்ற மிகுபுனைவு(Fantasy) கதைகள்தான் குழந்தைகளின் கற்பனைக் குதிரையைக் கண்டபடி தட்டி ஓட விடச் செய்பவை. எது குறித்தான தர்க்கமும் இல்லாமல் கதைகள் இருக்கலாம். இன்றைக்கு நிகழ்ந்திருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அத்தனையுமே ஒரு காலத்தில் ஏதேனுமொரு மனிதனின் கற்பனையாக இருந்தவைதானே. ‘டெல்லியில் ஒருத்தன் பேசறது நம்மூர்ல கேட்குமா?’ என்ற கற்பனைதானே வானொலியை உருவாக்கியது? வானொலி கண்டுபிடிக்காத காலத்தில் இதைச் சொல்லியிருந்தால் ‘அவ்வளவு சத்தமா கத்த முடியுமா?’ என்றுதான் தொண்ணூற்றொன்பது சதவீதம் மக்கள் நினைத்திருப்பார்கள். மாற்று வழிமுறைகளை மார்கோனி யோசிக்கும் போது வானொலியாக வடிவெடுக்கிறது.
முதலில் கற்பனை. அதன் பிறகு அதை அடைவதற்கான மாற்று வழிகள்- எடிசன் பல்பைக் கண்டுபிடித்ததிலிருந்து ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தது வரை அத்தனை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலும் இதுதான் சூட்சமம். எதையெல்லாம் பைத்தியகாரத்தனம் என்றும் நடக்கவே நடக்காது என்றும் உலகம் நம்புகிறதோ அதை நடத்திக் காட்டிவிட முடியும் என்று நம்புகிறவன்தான் விஞ்ஞானியாக இருக்கிறான். விஞ்ஞானி மட்டுமில்லை- கலைஞன், படைப்பாளி என சகலரும் தடையற்ற கற்பனைகளைக் கொண்டவர்கள்தான்.
முதலாமாண்டு கல்லூரியில் சேர்ந்த போது சங்கர்ராஜா என்ற நண்பன் பேராசிரியரிடம் ‘சார் கரண்ட்டை வயர்லெஸ்ஸா கொண்டு போக முடியாதா?’ என்றான். எங்களுக்கு சிரிப்பு வந்தது. ‘அது சாத்தியமே இல்லை’ என்று அந்தப் பேராசிரியர் சொன்னார். இருபது வருடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அது நடக்கிற காலம் வெகு தொலைவில் இல்லை. புவிக்கு வருகிற சூரிய ஒளியில் மிகச் சொற்பத்தைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். புவிக்கு மேலாக மிகப்பெரிய ஒளிப்படத் தகடுகளை நிறுவி சூரிய ஒளியை லேசராக மாற்றி புவிக்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது இன்னும் என்னென்ன பரிமாணங்களை எடுக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஏதோவொரு மனிதனின் கற்பனைதானே இதெல்லாம்?
மனிதனின் சகல கற்பனைகளும் சாத்தியமாகிவிடும். அவ்வளவு வளர்ச்சியடைந்திருக்கிறோம். சில கற்பனைகள் ஐந்து வருடங்களில் நிகழும். சில ஆயிரம் வருடங்கள் எடுத்துக் கொள்ளும். ரோபோடிக்ஸ் வரலாற்றை இணையத்தில் தேடிப்பார்த்தால் புரிந்து கொள்ளலாம்- பல நூறாண்டுகளாக ரோபோ பற்றி யாரோ தொடர்ந்து சிந்தித்தும் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். அப்படித்தானே இன்றைக்கு மனித உருவிலான ரோபோ வரை வந்திருக்கிறோம்?
தினசரி குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் சிரமம் இருப்பதாகச் சொல்கிறவர்கள் உண்டு. எதைக் குறித்துச் சொல்வது என்று தெரியவில்லை என்பார்கள். எளிய சூத்திரம்தான் - கற்பனை. வேறு எதையும் யோசிக்க வேண்டியதில்லை. ஒருவனுக்கு டுமாங்கோலி என்று பெயர் சூட்டி அவனை உலகம் முழுக்கவும் சுற்றி வரச் செய்தாலே மூன்று மாதங்களுக்குக் கதையை இழுக்க முடியும். தமிழகத்தைச் சுற்றி வரச் செய்தால் மாதக் கணக்கில் சொல்லலாம். எந்த ஊரிலிருந்து தொடங்குகிறான், அங்கே அவன் யாரைச் சந்திக்கிறான், என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறான் - இதுதான் எளிய தொடக்கம். அவன் என்பது ஒரு முயல்குட்டியாகக் கூட இருக்கலாம். ஒரு குருவியாக இருக்கலாம். வில்லன்xஹீரோ என்கிற binary ஆக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. எல்லோருமே நல்லவர்களாகவும் இருக்கலாம். எல்லோருமே தீயவர்களாகவும் இருக்கலாம்.
பொதுவாக கதையில் வரும் நல்லவர்கள் தீயவர்களை அடிக்கும் போது கதையைக் கேட்கும் குழந்தைகள் சிரிப்பார்கள். தீயவர்கள் கீழே விழும் போதும், அவமானப்படும் போதும் அடி வாங்கும் போதும் சிரிப்பார்கள். எங்கேயெல்லாம் குழந்தைகள் சிரிக்கிறார்களோ அதை அடிக்கடி சொல்லலாம். எதிரியை எப்படி அடிக்கிறார்கள்? தக்காளியைக் கொண்டு அடித்தார்கள். எப்படி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு பயணிக்கிறார்கள்? எல்லாமே கற்பனைகள்தான். பயணங்கள் என்பது விசித்திரமாக இருக்கலாம். கழுகு மீது அமர்ந்து பயணிக்கலாம். வானவில்லைக் கயிறாகப் பயன்படுத்தி ஊஞ்சல் ஆடலாம். சண்டையின் போது சிட்டுக்குருவி குச்சியை எடுத்து வந்து கொடுக்கும். அதை வைத்து எதிரியைத் தாக்கலாம். நடுவில் எதிர்ப்படும் கடலைத் தாண்ட முடியாமல் சிரமப்படுவது, கடலுக்கடியில் பயணிப்பது அங்கே அவர்கள் காணும் காட்சிகள், மலையுச்சியில் கிடைக்கும் விபரீத அனுபவங்கள் என இயற்கை சார்ந்தும் கற்பனை கலந்து சொல்லுகிற கதைகள் குழந்தைகளை மனக்கிளர்ச்சி அடையச் செய்யக் கூடியவை.
குழந்தைகளைக் கதை கேட்கச் செய்வது எளிதான காரியம். சுவாரஸியத்தைக் கொண்டு வந்துவிட்டால் அமர்ந்துவிடுவார்கள். அவர்கள் கதை கேட்டுப் பழகிவிட்டால் பிறகு நாம் எதைச் சொன்னாலும் காது கொடுப்பார்கள். குழந்தைகளின் கற்பனைகள் தறிகெட்டு ஓடட்டும். விழித்திருக்கும் பெரும்பாலான தருணங்களில் கண்களையும் மூளையையும் டிவியின் திரையிலும் செல்போன் திரையிலும் பொருத்திக் கொண்டால் எந்தக் கற்பனையும் மனதில் ஓடாது. நாம் கதைகளைச் சொல்லச் சொல்ல அவர்கள் அந்தப் பாத்திரங்களையும் இடங்களையும் கற்பனை செய்ய வேண்டும். அந்த கற்பனைதான் தொடக்கப்புள்ளி. அந்த இடத்துக்குக் கொண்டு வருவது நம் கைகளில்தான் இருக்கிறது.
ஒரேயொரு பிரச்சினை- நாம் நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்படி நாம் நேரத்தை ஒதுக்காவிட்டால் செல்போனும் கணினியும் தம் நேரத்தை ஒதுக்கி குழந்தைகளை தம் வசம் எடுத்துக் கொள்ளும். பல வீடுகளில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரேயொரு பிரச்சினை- நாம் நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்படி நாம் நேரத்தை ஒதுக்காவிட்டால் செல்போனும் கணினியும் தம் நேரத்தை ஒதுக்கி குழந்தைகளை தம் வசம் எடுத்துக் கொள்ளும். பல வீடுகளில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
4 எதிர் சப்தங்கள்:
நம் வீட்டில் அவர்கள் வசித்தாலும்,அவர்கள் வீட்டில் நம்மால் நுழையக்கூட முடியாது.
please share any good websites for Tamil stories
//எந்த ஊரிலிருந்து தொடங்குகிறான், அங்கே அவன் யாரைச் சந்திக்கிறான், என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறான் - இதுதான் எளிய தொடக்கம்.//
ஏனென்றே தெரியாமல்,கேட்காமல் அடைத்து வைக்கப் பட்டிருந்த வாசலை திறந்து காட்டியுள்ளீர்கள்.
ஆனா பாருங்க இந்த நாசமா போன மனசு ஓவியா வை எப்படி செயிக்க வைக்கலாம் ன்னுல்லா பதை பதைச்சுட்டு இருக்கு?
ஒரேயொரு பிரச்சினை- நாம் நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்படி நாம் நேரத்தை ஒதுக்காவிட்டால் செல்போனும் கணினியும் தம் நேரத்தை ஒதுக்கி குழந்தைகளை தம் வசம் எடுத்துக் கொள்ளும். பல வீடுகளில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
- Rightly said. Mobile, Wifi, FB, Television takes most of our time and imagination away from us. In the end, slowly this habit distances children from parents. Should be aware, vigilant to change this habit.
Post a Comment