Jul 31, 2017

எப்படி முடிகின்றது?

வெள்ளிக்கிழமையன்று பேருந்து ஏறுவதற்கு முன்பாகவே தயாரிப்புகளைச் செய்து வைத்திருந்தேன். மாணவர்களை அழைத்து வைத்துப் பேசுவது பெரிய காரியமில்லை. அவர்களுக்கு சலித்துவிடக் கூடாது. நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று யோசித்துவிடக் கூடாது. வெளியூர்களிலிருந்தும் வரச் சொல்லியிருந்தோம். ஒவ்வொரு மாணவரிடமும் தொடர்பில் இருக்கிறேன். ‘இங்கிலீஷ்தான் கஷ்டம்’ என்றவர்கள்தான் கணிசமாக இருந்தார்கள். அதனால் ஆங்கிலம்தான் முதல் இலக்கு. மாணவர்களிடம் எப்படித் தொடங்க வேண்டும், அவர்களுக்கு ஏன் ஆங்கிலம் சிரமமாக இருக்கிறது என்பதை எப்படிப் புரிய வைப்பது என்பதெல்லாம்தான் மண்டைக்குள் உலாத்திக் கொண்டிருந்தன. 

சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு பேருந்து நிலையத்தில் இறங்கி வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே அரசு தாமசை எதிரில் பார்த்தேன். ‘இருபது அகராதிகள் வாங்கி வெச்சுடுங்க சார்’ என்று சொல்லியிருந்தேன். அதை யாரோ வாங்கி அவரது முகவரிக்கு பேருந்தில் கொடுத்துவிட்டிருந்தார்கள். அதை வாங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தார். இம்மாதிரியான காரியங்களில் அவரும் கார்த்திகேயனும் பெரும் துணையாக இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களை ஒவ்வொரு ஊரிலும் பிடிக்க வேண்டும். அப்படிப் பிடித்துவிட்டால் பல ஊர்களிலும் இறங்கி வேலை செய்ய முடியும்.

மதியம் இரண்டரை மணிக்கு நிகழ்வைத் தொடங்கினோம். மாணவர்களுக்குத் தேவையான ஏடுகள், எழுதுகோல், தி இந்து ஆங்கில நாளிதழ்களில் சில பிரதிகள் என வாங்கி வைத்திருந்தேன். ஆங்கிலத்தை எதிர்கொள்வதற்கு முதல் வேலையாக நமக்குத் தெரிந்த சொற்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட வேண்டும். சொற்களை அதிகரித்தால் புலமை எப்படி வரும் என்று மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஒவ்வொருவரிடமும் வெள்ளைத்தாளைக் கொடுத்து தமக்குத் தெரிந்த தமிழ் சொற்களை எழுதச் சொன்னபோது மடமடவென்று எழுதினார்கள். இருபது நிமிடங்கள் அவகாசம். அதே இருபது நிமிடங்களைக் கொடுத்து தமக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களை எழுதச் சொன்ன போது வேகம் தடைபட்டது. எழுதி முடித்த பிறகு அவர்கள் எழுதி தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களைச் சொல்லச் சொன்ன போது பல சொற்களுக்குத் தெரியவில்லை.

இதுதான் சிக்கலின் அடிநாதம். 

தமிழில் நமக்கு நிறையச் சொற்கள் தெரிகின்றன. ஆங்கிலத்தில் அடிப்படையான சொற்களே தெரிவதில்லை. ஆக சொற்களைத் தெரிந்து கொண்டால் பெரும் தடையைத் தாண்டிவிடுவது மாதிரிதான். இலக்கணம் என்பது பெரிய சிரமமில்லை. ‘இரண்டு வாழைப்பழங்கள் கொடுங்கள்’ என்பதுதான் சரியான இலக்கணம். ‘இரண்டு வாழைப்பழம் கொடுங்கள்’ என்றுதானே கேட்கிறோம்? நிறைய இலக்கணப்பிழைகள் நமக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அப்படித்தான் ஆங்கிலத்திலும். அப்பட்டமாகத் தெரிகிற சில இலக்கணப்பிழைகளை மட்டும் சரி செய்து கொண்டால் போதும். 

இப்படி சில நுணுக்கங்களை விளக்க வேண்டியிருந்தது. 

அங்குராஜூக்கு அம்மா இல்லை. கூலி வேலை செய்யும் சித்தியின் வளர்ப்பில் அரசுக் கல்லூரியில் பொறியியல் படிக்கிறான். பவித்ராவுக்கு அம்மாவும் அப்பாவும் தினக் கூலிகள். பள்ளியின் முதல் மாணவி. பி.ஏ தமிழ் படிக்கிறாள். ராஜேந்திரனின் பெற்றோர் கூலி வேலை. பி.எஸ்.சி வேதியியல் படிப்பில் அவன் பல்கலைக்கழக ரேங்க் வாங்கியிருந்தான். இப்பொழுது எம்.எஸ்.சி. அசாரூதீன் ஏழைப் பாட்டியின் வளர்ப்பில் இருக்கிறவன். பள்ளியில் முதலிடம். கால்நடை மருத்துவம் சேர்ந்திருக்கிறான். சுஜிதாவும் தமிழரசனும் சாமிநாதனும் விக்னேஷூம் நரிக்குறவர் இனக் குழந்தைகள். இந்தத் தலைமுறையில்தான் அவர்களுக்கு குடியிருக்க நிலையான இடம் கிடைத்திருக்கிறது. இதில் சுஜி அரசுக் கல்லூரியில் பொறியியல் படிக்கிறாள். சாமிநாதனுக்கும் விக்கேனேஷூக்கும் தமிழரசனுக்கும் கலைக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். அய்யாவின் அப்பா மரம் ஏறுகிறவர். இவன் பள்ளியில் முதலிடம். இப்பொழுது பொறியியல் சேர்ந்திருக்கிறான். பத்து பைசா செலவில்லாமல் முழுமையான ஸ்காலர்ஷிப் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. வனிதா மாதேஸ்வரி பற்றி எழுதியிருக்கிறேன் - பெற்றோர் இல்லாத குழந்தைகள். கசாப்புக் கடை நடத்தி தினசரி வருமானத்தைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயக்குமாரும் அப்படித்தான். பால் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை செய்தபடியே எம்.காம் படிக்கிறான். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அத்தனை பேரும் அரசுப் பள்ளியில் படித்து ஜொலித்த மாணவர்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் நிசப்தம் வழியாகக் கல்விச் செலவில் உதவிக் கொண்டிருக்கிறோம்.


ஆங்கிலச் சொற்களைத் தெரிந்து கொள்வதற்கான வழிமுறையைச் சொல்லி அவர்களுக்காக வாங்கி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் நேற்றிலிருந்தே பயிற்சியை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டு அடுத்ததாக ஒவ்வொருவரையும் பேசச் சொன்னேன். ‘இந்த முறை தமிழில் சொல்லுங்கள் அடுத்த முறை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்’என்பதுதான் நிபந்தனை. ஒவ்வொருவரும் தைரியமாகப் பேசினார்கள். அவர்களது உடல்மொழியில், பேசுகிற உள்ளடக்கத்தில் செய்ய வேண்டிய மாறுதல்களை ஒன்றிரண்டு பேருக்கு நான் சொல்ல அடுத்தடுத்துப் பேசிய மாணவர்களிடமிருந்த குறைகளை சகமாணவர்களையே சுட்டிக்காட்டச் சொல்லிய போது அதை மிகச் சரியாகச் செய்தார்கள். அடுத்தவர்கள் என்ன தவறைச் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் போதும். தாம் பேசும் போது அந்தக் குறைகளை நிவர்த்திக்க முயற்சிப்பார்கள். அப்படித்தான் நடந்தது.

ஒவ்வொருவர் பேசுவதையும் கவனித்து அவர்களிடம் குறைகளைச் சொல்லி நிறைகளை வாழ்த்துவதற்கு நேரம் சரியாக இருந்தது. இப்படித்தான் முதல் நிகழ்வைத் தொடங்கியிருக்கிறோம். ஒற்றை வகுப்பறையில் ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நாளில் முடிந்துவிடுகிற காரியமில்லை என்று தெரியும். சங்கிலி இது. கண்ணி அறுந்துவிடாமல் தொடர வேண்டியிருக்கும். வெவ்வேறு ஆளுமைகளை அழைத்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவிருக்கிறோம். ஆங்கிலம், மொழிப்புலமை, ஆளுமை மேம்பாடு, வேலை வாய்ப்புகளைத் தேடுதல், இலக்கை நோக்கிய பயணம் என சகலமும் நிறைந்த பயிற்சியாக இருக்கும். அதுதான் நோக்கம்.

நிகழ்வை ஆரம்பிக்கும் வரைக்கும் மாணவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஏனென்றால் கலவையான மாணவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லூரி. வெவ்வேறு வருடங்களில் படிக்கக் கூடிய மாணவர்கள். ஆனால் அத்தனை பேரின் பிரச்சினையும் ஒன்றுதான் என்ற எங்களின் கணிப்பு சரியாக இருந்தது. மூன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மாணவர்கள் மிகுந்த சந்தோஷமாக வெளியேறினார்கள்.

எனக்கு வெகு திருப்தி. 

இந்தப் பதிவை எழுத வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. அரசு தாமஸ் இன்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அது எழுதத் தூண்டியது. அவரது பதிவு-

பெங்களுருவிலிருந்து 7 மணி நேர பேருந்துப் பயணம். கோபிபாளையத்தில் 3 மணி நேர அமர்வு. அதற்கு முன்னும் பின்னும் என மொத்தமாக 6 மணி நேர இருப்பு. கோபி "திண்ணை" கடையில் 4பணியாரம்+ ஒரு தேநீர். அப்படியே மீண்டும் 7மணி நேரம் பெங்களூரை நோக்கிப் பயணம்.

எங்கே? என்ன அமர்வு? எதற்கு? என்பது பற்றியெல்லாம் அவரே எழுதுவார்...

எனக்கு என்னவென்றால் நிசப்தம் அறக்கட்டளை வளர்க்கும் அந்த "Super16" மாணவர்களுக்கான பயலரங்கில், தான் கருத்துகளைக் கூறியதோடு, அவர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச வைத்து , கூர்ந்து கவனித்து ழி நடத்தியது தான் பெரிதும் வியப்பாக இருந்தது..

எப்படி முடிகின்றது உங்களால்??

பதில் இருக்கிறது- வாசகர்கள், குடும்பம், தன்னார்வலர்கள் என எல்லோரையும் சுட்டிக்காட்ட முடியுமென்றாலும் யாரிடமுமே பேசாத அய்யாவு காலை ஆறு மணிக்கே அழைத்திருந்தான். ‘க்ளாஸ் டைம் டேபிள் அனுப்பியிருக்காங்க சார்...எப்படி படிக்கிறதுன்னு ஐடியா கொடுங்க’ என்றான். அவனது பயந்த சுபாவத்துக்கு அவன் என்னை அழைத்துப் பேசுவான் என்றெல்லாம் நினைத்ததில்லை. இப்படி புதிதாக முளைத்து வருகிறவர்கள் நம்மை நம்பி நெருங்குகிறார்கள் அல்லவா? அந்த ஒரு நம்பிக்கை போதும். நான்கு பணியாரமும் கூட இல்லாமல் அலைய முடியும்!

கலாப்ரியாவும் பாரதிமணியும்

நேற்று கவிஞர் கலாப்ரியாவுக்கு பிறந்தநாள். பெங்களூரில்தான் இருந்தார். மதியம் அழைத்து ‘வெளியில் சாப்பிட போலாம் வாங்க’ என்றார். சனிக்கிழமையன்று ஊரில் பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு ஞாயிறு காலையில்தான் வந்து சேர்ந்திருந்தேன். ‘மத்தியானம் வெளியில் சாப்பிட்டுக்கிறேன்’ என்று சொன்னால் கடித்துக் குதறிவிடுவார்கள் என்று தெரியும். ‘சார்..இன்னைக்குத்தான் அதிசயமா வீட்டில் இருக்கேன்.. உங்களைப் பார்க்க வர்றேன்..ஆனா சாப்பிட வரல சார்..’ என்று சொல்லிவிட்டு குக்கரில் விசில் அடங்குவதற்காகக் காத்திருந்தேன். 

கலாப்ரியா என்பது நா.முத்துக்குமார் அறிமுகப்படுத்தி வைத்த பெயர். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக எழுதி வைத்திருந்தவற்றையெல்லாம் கவிதை என நம்பி அவரிடம் நீட்டிய போது ‘கலாப்ரியாவை படிங்க’ என்று சேலம் கேஸில் ஹோட்டல் அறையில் அவர் சொன்னது நினைவில் இருக்கிறது. எல்லோரையும் போலவே நானும் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு கலாப்ரியா அறிமுகம் ஆனார்- கவிதைகள் வழியாக. நினைவின் தாழ்வாரங்கள் நூல் வெளியான போது அந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஹைதராபாத்திலிருந்து மதுரை வந்திருந்தேன். 

அவர் பெங்களூரு வரும்போதெல்லாம் எப்படியும் சந்தித்துவிடுகிற வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது. ‘மணிகண்டன்..இங்க வந்திருக்கேன்’ என்பார். அதிர்ந்து பேச மாட்டார். அவர் ‘எப்ப வர்றீங்க?’ என்று கேட்டால் ‘எப்ப’ சற்று ஒலி மிகுந்தும் ‘வர்றீங்க’ என்பது ஒடுங்கியும் இருக்கும். பல சமயங்களில் கடைசிச் சொற்களை நாமாகத்தான் யூகித்துக் கொள்ள வேண்டும். ‘அரை மணி நேரத்தில் வந்துடுறேன்’ என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருந்தேன். இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று எனக்குத் தெரியும். கலாப்ரியாவின் மகள் வீடு ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் இருக்கிறது. மதிய உணவுக்காக ஜூனியர் குப்பண்ணாவில் இருந்தார்கள். மகாலிங்கமும், திருஞானசம்பந்தமும் வந்திருந்தார்கள். சம்பந்தம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டேயிருப்பார். மகாலிங்கம் பேசவே மாட்டார். இருவருமே நிறைய வாசிக்கிற சுவாரசியமான மனிதர்கள். மகாலிங்கம் தனது நிழற்படம் வெளியாவதைக் கூட விரும்பமாட்டார்.  நேற்று சிக்கிக் கொண்டார்.


அவர்கள் மதிய உணவை முடித்துவிட்டு வெளியில் வரட்டும் என்று மரத்தடியில் காத்திருந்தேன். நவீன தமிழ்க் கவிதையில் இருந்துவந்த இறுக்கமான சூழல் கலாப்ரியா எழுத வந்தபிறகு உடைபட்டதை கவனிக்க முடியும். மிகப்பெரிய செய்திகளை மிகச் சாதாரணமாகச் சொல்லிவிடுகிற வித்தை அவரிடம் வாய்த்திருந்தது. பறவைகளைப் பார்க்கும் போதெல்லாம் அவரது இரண்டு கவிதைகள் நினைவுக்கு வராமல் இருந்ததில்லை.

கூட்டிலிருந்து 
தவறிவிழுந்த 
குஞ்சுப்பறவை
தாயைப் போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதிச்சாகும்
வரை

                                                                   ***

அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை

உணவை முடித்துவிட்டு அவர்கள் வந்த பிறகு கலாப்ரியாவின் மகள் வீட்டிற்குச் சென்றிருந்தோம். பேச்சு, பேச்சு மற்றும் பேச்சுதான். சம்பந்தம் பேசியவற்றையெல்லாம் நாவல் சிறுகதைகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகாக ‘பாரதிமணியைப் பார்க்க போலாமா?’ என்றார் கவிஞர். 

பாட்டையா எனக்கு நல்ல தோஸ்தாகிவிட்டார். எந்தளவுக்கு தோஸ்த் என்றால் நான் ஃபோனில் அழைத்தால் எடுக்கமாட்டார். அந்த அளவுக்கு ராவி விடுகிறேன். இந்திராகாந்தியிலிருந்து அம்பானி வரைக்கும், க.நா.சுவிலிருந்து சுப்புடு வரைக்கும் ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. ஆஃப் த ரெக்கார்ட் விவகாரங்களையெல்லாம் வஞ்சகமே இல்லாமல் பேசுவார். ‘என் பேரைச் சொல்லிடாதடா’ என்பார். எப்பொழுதாவது அந்தக் காலத்து விவகாரங்களை கிசுகிசுவாக எழுதினால் அது பாட்டையா சொன்னது என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

‘நான் ஃபோன் செஞ்சா எடுக்க மாட்டாரு..வேணும்ன்னா பாருங்க’ என்று சொல்லிவிட்டு அழைத்தேன். அதே போல எடுக்கவில்லை. ‘இப்போ நீங்க பண்ணுங்க’ என்றேன். கலாப்ரியா அழைத்தார். அப்பொழுதும் எடுக்கவில்லை. எனக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. ஆனால் அடுத்த பத்து நிமிடங்களில் கலாப்ரியாவை திரும்ப அழைத்தார். என்னை அழைக்கவில்லை. ‘உங்களை கவனிச்சுக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டேன்.

என்னிடம் யமஹா ரே இருக்கிறது. கலாப்ரியாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு கோரமங்களாவுக்குச் சென்றிருந்தோம். பாரதி மணி வெகு உற்சாகமான மனிதர். ‘எழுபத்தைந்து வயதுக்கு மேல் ஒவ்வொரு நாளும் போனஸ்தான்’என்பது அவரது சித்தாந்தம். எந்தப் பெண்ணாவது சரி என்று சொன்னால் இன்னொரு திருமணம் செய்யக் கூடத் தயாராகத்தான் இருக்கிறார். சென்னையிலிருந்தால் தினசரி ஒரு பெண்ணாவது காதல் கடிதம் அனுப்புவதால் முகவரியை மாற்றிக் கொண்டு பெங்களூரு வந்துவிட்டவர். கலாப்ரியாவையும் என்னையும் அமர வைத்து பைப்பில் புகையிலையை உறிஞ்சியபடியே பேசிக் கொண்டிருந்தார்.


ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் ஓடியிருந்தது. வீட்டிற்குச் செல்ல வேண்டும். சிண்ட்ரெல்லா மாதிரி.

‘சார் கிளம்பலாமா?’ என்றேன்.

‘அதுக்குள்ளவா?’ என்றார் பாட்டையா.

கிளம்பி வந்தோம். கலாப்ரியா ஹெல்மெட் இல்லாமல் வண்டியில் அமர்ந்திருந்தார். ட்ராபிக் போலீஸ் குறுக்காட்டினார். ‘சார் நான் வேணும்ன்னா டுபாக்கூரா இருக்கலாம்..பின்னாடி இருக்கிறவர் அப்பாடக்கர்...கலைஞர் முதல் கலாப்ரியா வரைன்னு புக் வந்திருக்கு தெரியுமா? கலைஞர் யாருன்னு உங்களுக்குத் தெரியும்..கலாப்ரியா உங்களுக்குத் தெரியாது..அது இவர்தான்’ என்று வசனம் பேசலாம் என்று நினைத்திருந்தேன். நூறு ரூபாய் அபராதம் விதிப்பார். அதற்காக கலைஞரையெல்லாம் இழுத்து ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் விட வேண்டுமா என்று நினைத்துக் கொண்டேன். அவர் அபராதம் விதித்தார்.

வீடு திரும்பும் போது மணி ஆறாகி இருந்தது. திட்டுவார்களோ என்று பயந்தேன். நல்லவேளையாக பாட்டையா நிழற்படங்களை அனுப்பி வைத்திருந்தார். ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸூம் போட்டிருந்தார். காட்டினேன். ‘இப்படியெல்லாம் ரெண்டு பெரிய மனுசங்களைச் சந்திக்கிறதுக்கு கொடுப்பினை வேணும்...’என்றேன். கூலாகிவிட்டார்கள். அது தப்பிப்பதற்காகச் சொன்னதில்லை. உண்மையும்தான். எனக்கு அவ்வப்பொழுது வாய்த்துவிடுகிறது.

Jul 28, 2017

சூப்பர் 16

சூப்பர் 30 ஆனந்த் குமார் மீது எப்பொழுதுமே மிகுந்த மரியாதை உண்டு. பீஹார்காரர். கணிதத்தில் கெட்டிக்காரர். பட்டப்படிப்பு முடித்தவுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கும் இடம் கிடைக்கிறது. ஆனால் அப்பா இறந்துவிட பொருளாதாரச் சூழலின் காரணமாக சேர முடியாமல் போகிறது. பீஹாரிலேயே தனிப்பயிற்சி வகுப்பு நடத்தத் தொடங்கியவர் ஆரம்பித்ததுதான் சூப்பர் 30. அவரது பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்கள் முப்பது பேருக்கும் ஒரு வருடத்திற்கு தங்குமிடம் உணவு என எல்லாமும் இலவசம். ஆனந்தின் அம்மாதான் சமையல் செய்கிறார். இப்படி ஒவ்வொரு வருடம் தேர்ந்தெடுக்கப்படும் முப்பது மாணவர்களுக்கும் இந்தியாவில் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஐஐடி-ஜேஈஈ தேர்வுக்கு பயிற்சியளிக்கிறார். இதுவரை நானூற்றைம்பது மாணவர்களுக்கு பயிற்சியளித்து முந்நூற்று தொண்ணூறு பேர்களை ஐஐடிக்குள் அனுப்பியிருக்கிறார். இந்த வருடம் முப்பது பேருமே ஐஐடியில் சேர்ந்திருக்கிறார்கள்.

லேசுப்பட்ட காரியமில்லை. அத்தனையும் ஆனந்த்குமாரின் சொந்தச் செலவு. அவரை ரோல்மாடலாக வைத்துக் கொண்டு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என வெகு நாளாக ஆசை. செய்யப் போகிற காரியத்துக்கான வடிவம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தது. எத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது, எந்தவிதமான பயிற்சியளிப்பது என்பது மாதிரியான தெளிவின்மை இருந்தது. இப்பொழுது நேரம் கனிந்திருக்கிறது. மாணவர்களைத் தங்க வைத்து உணவளித்துப் பயிற்சியளிப்பது சாத்தியமில்லை. ஆனால் மாணவர்களை செதுக்க முடியும். கால்நடை மருத்துவம், மீன்வளத்துறையியல், பொறியியல், பி.ஏ தமிழ், டிப்ளமோ, ஐடிஐ என பல்வேறு பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். படிப்பிலோ அல்லது விளையாட்டிலோ சூரக்குட்டிகள் இவர்கள். நிசப்தம் மூலமாக படித்துக் கொண்டிருப்பவர்கள். பெற்றோர் வாய்க்கப்படாதவர்கள், கூலி வேலைக்குச் செல்கிறவர்கள், நாடோடிகளின் பிள்ளைகள் எனக் கலந்த கூட்டம். அவர்களிலிருந்து பதினாறு பேர்கள். 

சூப்பர் 16. பதினாறு என்ற எண்ணிக்கையில் ஒன்றிரண்டு மாணவர்கள் கூடலாம் குறையலாம். இவர்களுக்கு வருடம் முழுமையும் தொடர்ந்து பயிற்சியளிக்கப்படும். ஆங்கிலம், தன்னம்பிக்கை, உலகை எதிர்கொள்ளல் என்று பல்வேறு வகையான பயிற்சிகள். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாள். தொடர்ந்து பயிற்சியாளர்கள் வருவார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ், பத்திரிக்கையாளர்கள் என்று கலவையானவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். தம்முடைய தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக வருகிறவர்கள். ஒவ்வொருவரிடமும் வருடத்தில் அவர்களின் ஒரேயொரு நாளைக் கேட்டு வாங்கிக் கொள்வதாகத் திட்டம். ஒரு மாதம் வெளியிலிருந்து வருகிறவர்கள் பயிற்சியளிப்பார்கள். அடுத்த மாதம் நான் பயிற்சியளிப்பதாகத் வடிவமைத்து வைத்திருக்கிறோம். 

பயிற்சியாளர்களின் செயல்திட்டங்களை மாணவர்கள் செயல்படுத்துகிறார்களா என்ற கண்காணிப்பும் உண்டு.

ஏன் இந்தப் பணியைச் செய்கிறோம்? எதற்காக இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்? வெற்றி பெற்ற பிறகு சமூகத்திற்கு இவர்கள் செய்ய வேண்டிய பங்களிப்பு என்ன என்பது பற்றியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது. மாணவர்களுக்கும் நமக்குமிடையில் ஒருவிதமான புரிதலும் நட்பும் உறவும் உருவாவதற்காகத்தான் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் நான் அவர்களோடு பேச விரும்புகிறேன். இப்பொழுதே வாரத்தில் ஒரு முறையாவது ஒவ்வொருவருடனுடம் பேசாமல் இல்லை என்றாலும் இன்னமும் நெருங்க வேண்டியிருக்கிறது.

ஒரு வகையில் நெகிழ்த்தி வடிவமைத்தல்தான். 

ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாகப் பேசியதிலிருந்து இந்த பதினாறு பேருக்குமே ஏதாவதொரு பிரச்சினை இருக்கிறது. வெளியிடங்களில் பேச முடிவதில்லை, மொழிப்பிரச்சினை, தன்னம்பிக்கைக் குறைவு என்று எதையாவது சொல்கிறார்கள். ஆனால் வெளிப்படையாகச் சொல்கிறவர்கள். அப்படி வெளிப்படையாகச் சொல்வதுதான் அவர்களின் பலமே. அதைச் சரி செய்து தருவதுதான் இத்தகைய தொடர்ச்சியான பயிற்சிகளின் நோக்கமும் கூட. இவர்களில் பலருக்கும் தெளிவான இலக்கு இருக்கிறது. அப்படி இல்லாதவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். இலக்குக் ஏற்ப சிலருக்கு ஏற்கனவே வழிகாட்டிகள் இருக்கிறார்கள். மீதமிருப்பவர்களுக்கான வழிகாட்டிகளைப் படிப்படியாக ஒதுக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு தீவிரமாகச் செய்யும் போது வழிகாட்டிகளும் அதே அளவு தீவிரத்தன்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை. எல்லாம் சரியாக அமையும். 

இத்திட்டம் குறித்து இனி தொடர்ந்து அவ்வப்பொழுது எழுதிக் கொண்டேயிருக்கிறேன். நிசப்தம் செயல்பாட்டில் இது அடுத்த கட்டம்.

பதினாறு மாணவர்கள் என்பது முதல் வருடத்திற்கு அதிக எண்ணிக்கைதான். தொடக்கத்தில் தடுமாற்றம் இருக்கும். ஆனால் பெருமளவு வெற்றியடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. தெளிவான திட்டம் இருக்கிறது. செயல்படுத்திவிட முடியும். ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ‘ஐஐடி’ என்பது மாதிரியான ஒற்றை நோக்கமில்லை. வெறுமனே வேலைக்குச் செல்லுதல் என்பது மாதிரியான தட்டையான இலக்கும் இல்லை. ஒவ்வொருவருக்கும் துல்லியமான இலக்குகள்- நிர்ணயித்து அதை அடைந்து காட்டுகிறோம். 

உங்கள் அத்தனை பேர்களின் ஆதரவுடனும்!

எப்படி கதை விடுகிறீர்கள்?

குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் கதை சொல்வதற்கான நுட்பங்களை அவ்வப்பொழுது இணையத்தில் தேடுவதுண்டு. நம் ஊர்க்காரர் ஒருவர் ‘குழந்தைகளுக்கு சென்ஸிபிளா கதை சொல்லணும்’ என்று சொல்லி அதைப் பதிவு செய்து யூடியூப்பிலும் ஏற்றி வைத்திருந்தார். பாதியோடு நிறுத்திவிட்டேன். நிஜமாவே அப்படித்தான் சொல்ல வேண்டுமா? குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் கதை சொல்லும் போது ஒரேயொரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டால் போதும்- சுவாரஸியம். குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் சென்ஸிபிளிட்டிக்கு அவசியமே இல்லை. அவர்களது உலகில் குரங்கு பேசும். குருவி தபால் எழுதும். சிங்கம் பைக் ஓட்டும். 

குழந்தைகளுக்கும் இதெல்லாம் நடக்காது என்று தெரியும். ஆனாலும் ரசிப்பார்கள். அதுதான் பால்யம். எப்பொழுது ‘ச்சீ..ச்சீ..இதெல்லாம் நடக்காது’ என்று யோசித்து ரசிப்பதை நிறுத்துகிறதோ அப்பொழுது அந்தக் குழந்தை தனது பால்யத்தைவிட்டு வெளியேறிவிட்டது என்று அர்த்தம். அது தானாக நடக்கும். பால்யத்தை விட்டு குழந்தையை அவசர அவசரமாக வெளியேற்ற வேண்டியதில்லை. சென்ஸிபிளிட்டி, அறிவு என்ற பெயரில் குழந்தைகளை நாம்தான் விடாப்பிடியாகத் துரத்திக் கொண்டிருக்கிறோம். அறிவு என்பது  இயல்பாக வளர வேண்டியது. திணிக்க வேண்டியதில்லை. 

கட்டற்ற, தடைகள் ஏதுமற்ற மிகுபுனைவு(Fantasy) கதைகள்தான் குழந்தைகளின் கற்பனைக் குதிரையைக் கண்டபடி தட்டி ஓட விடச் செய்பவை. எது குறித்தான தர்க்கமும் இல்லாமல் கதைகள் இருக்கலாம். இன்றைக்கு நிகழ்ந்திருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அத்தனையுமே ஒரு காலத்தில் ஏதேனுமொரு மனிதனின் கற்பனையாக இருந்தவைதானே. ‘டெல்லியில் ஒருத்தன் பேசறது நம்மூர்ல கேட்குமா?’ என்ற கற்பனைதானே வானொலியை உருவாக்கியது? வானொலி கண்டுபிடிக்காத காலத்தில் இதைச் சொல்லியிருந்தால் ‘அவ்வளவு சத்தமா கத்த முடியுமா?’ என்றுதான் தொண்ணூற்றொன்பது சதவீதம் மக்கள் நினைத்திருப்பார்கள். மாற்று வழிமுறைகளை மார்கோனி யோசிக்கும் போது வானொலியாக வடிவெடுக்கிறது.

முதலில் கற்பனை. அதன் பிறகு அதை அடைவதற்கான மாற்று வழிகள்- எடிசன் பல்பைக் கண்டுபிடித்ததிலிருந்து ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தது வரை அத்தனை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலும் இதுதான் சூட்சமம். எதையெல்லாம் பைத்தியகாரத்தனம் என்றும் நடக்கவே நடக்காது என்றும் உலகம் நம்புகிறதோ அதை நடத்திக் காட்டிவிட முடியும் என்று நம்புகிறவன்தான் விஞ்ஞானியாக இருக்கிறான். விஞ்ஞானி மட்டுமில்லை- கலைஞன், படைப்பாளி என சகலரும் தடையற்ற கற்பனைகளைக் கொண்டவர்கள்தான்.

முதலாமாண்டு கல்லூரியில் சேர்ந்த போது சங்கர்ராஜா என்ற நண்பன் பேராசிரியரிடம் ‘சார் கரண்ட்டை வயர்லெஸ்ஸா கொண்டு போக முடியாதா?’ என்றான். எங்களுக்கு சிரிப்பு வந்தது. ‘அது சாத்தியமே இல்லை’ என்று அந்தப் பேராசிரியர் சொன்னார். இருபது வருடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அது நடக்கிற காலம் வெகு தொலைவில் இல்லை. புவிக்கு வருகிற சூரிய ஒளியில் மிகச் சொற்பத்தைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். புவிக்கு மேலாக மிகப்பெரிய ஒளிப்படத் தகடுகளை நிறுவி சூரிய ஒளியை லேசராக மாற்றி புவிக்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது இன்னும் என்னென்ன பரிமாணங்களை எடுக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஏதோவொரு மனிதனின் கற்பனைதானே இதெல்லாம்?


மனிதனின் சகல கற்பனைகளும் சாத்தியமாகிவிடும். அவ்வளவு வளர்ச்சியடைந்திருக்கிறோம்.  சில கற்பனைகள் ஐந்து வருடங்களில் நிகழும். சில ஆயிரம் வருடங்கள் எடுத்துக் கொள்ளும். ரோபோடிக்ஸ் வரலாற்றை இணையத்தில் தேடிப்பார்த்தால் புரிந்து கொள்ளலாம்- பல நூறாண்டுகளாக ரோபோ பற்றி யாரோ தொடர்ந்து சிந்தித்தும் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். அப்படித்தானே இன்றைக்கு மனித உருவிலான ரோபோ வரை வந்திருக்கிறோம்?

தினசரி குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் சிரமம் இருப்பதாகச் சொல்கிறவர்கள் உண்டு. எதைக் குறித்துச் சொல்வது என்று தெரியவில்லை என்பார்கள். எளிய சூத்திரம்தான் - கற்பனை. வேறு எதையும் யோசிக்க வேண்டியதில்லை. ஒருவனுக்கு டுமாங்கோலி என்று பெயர் சூட்டி அவனை உலகம் முழுக்கவும் சுற்றி வரச் செய்தாலே மூன்று மாதங்களுக்குக் கதையை இழுக்க முடியும். தமிழகத்தைச் சுற்றி வரச் செய்தால் மாதக் கணக்கில் சொல்லலாம். எந்த ஊரிலிருந்து தொடங்குகிறான், அங்கே அவன் யாரைச் சந்திக்கிறான், என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறான் - இதுதான் எளிய தொடக்கம். அவன் என்பது ஒரு முயல்குட்டியாகக் கூட இருக்கலாம். ஒரு குருவியாக இருக்கலாம். வில்லன்xஹீரோ என்கிற binary ஆக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. எல்லோருமே நல்லவர்களாகவும் இருக்கலாம். எல்லோருமே தீயவர்களாகவும் இருக்கலாம். 

பொதுவாக கதையில் வரும் நல்லவர்கள் தீயவர்களை அடிக்கும் போது கதையைக் கேட்கும் குழந்தைகள் சிரிப்பார்கள். தீயவர்கள் கீழே விழும் போதும், அவமானப்படும் போதும் அடி வாங்கும் போதும் சிரிப்பார்கள். எங்கேயெல்லாம் குழந்தைகள் சிரிக்கிறார்களோ அதை அடிக்கடி சொல்லலாம். எதிரியை எப்படி அடிக்கிறார்கள்? தக்காளியைக் கொண்டு அடித்தார்கள். எப்படி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு பயணிக்கிறார்கள்? எல்லாமே கற்பனைகள்தான். பயணங்கள் என்பது விசித்திரமாக இருக்கலாம். கழுகு மீது அமர்ந்து பயணிக்கலாம். வானவில்லைக் கயிறாகப் பயன்படுத்தி ஊஞ்சல் ஆடலாம். சண்டையின் போது சிட்டுக்குருவி குச்சியை எடுத்து வந்து கொடுக்கும். அதை வைத்து எதிரியைத் தாக்கலாம். நடுவில் எதிர்ப்படும் கடலைத் தாண்ட முடியாமல் சிரமப்படுவது, கடலுக்கடியில் பயணிப்பது அங்கே அவர்கள் காணும் காட்சிகள், மலையுச்சியில் கிடைக்கும் விபரீத அனுபவங்கள் என இயற்கை சார்ந்தும் கற்பனை கலந்து சொல்லுகிற கதைகள் குழந்தைகளை மனக்கிளர்ச்சி அடையச் செய்யக் கூடியவை.

குழந்தைகளைக் கதை கேட்கச் செய்வது எளிதான காரியம். சுவாரஸியத்தைக் கொண்டு வந்துவிட்டால் அமர்ந்துவிடுவார்கள். அவர்கள் கதை கேட்டுப் பழகிவிட்டால் பிறகு நாம் எதைச் சொன்னாலும் காது கொடுப்பார்கள். குழந்தைகளின் கற்பனைகள் தறிகெட்டு ஓடட்டும். விழித்திருக்கும் பெரும்பாலான தருணங்களில் கண்களையும் மூளையையும் டிவியின் திரையிலும் செல்போன் திரையிலும் பொருத்திக் கொண்டால் எந்தக் கற்பனையும் மனதில் ஓடாது. நாம் கதைகளைச் சொல்லச் சொல்ல அவர்கள் அந்தப் பாத்திரங்களையும் இடங்களையும் கற்பனை செய்ய வேண்டும். அந்த கற்பனைதான் தொடக்கப்புள்ளி. அந்த இடத்துக்குக் கொண்டு வருவது நம் கைகளில்தான் இருக்கிறது.

ஒரேயொரு பிரச்சினை- நாம் நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்படி நாம் நேரத்தை ஒதுக்காவிட்டால் செல்போனும் கணினியும் தம் நேரத்தை ஒதுக்கி குழந்தைகளை தம் வசம் எடுத்துக் கொள்ளும். பல வீடுகளில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

Jul 27, 2017

அப்துல் கலாம்

காலையிலிருந்து எரிச்சலாகவே இருந்தது. அப்துல்கலாமை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் எடுத்துக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் ஒரு ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் தேதியன்று காந்தியை விமர்சிப்பது போலத்தான். அப்படி விமர்சித்தால் இவர்கள் அரசியல் விஞ்ஞானிகள் சமூகப்புரட்சியாளர்கள் ஆகிவிடுகிறார்கள். இத்தகையவர்களிடம் ஒன்றும் பேசுவதற்கில்லை. ஏனென்றால் இவர்கள்தான் நாட்டுக்காகவும் நாட்டுமக்களுக்காகவும் அல்லும் பகலுமாக உழைத்துச் சலித்த பெருமக்கள் அல்லவா? குறுக்கே கிடக்கும் துரும்பைத் தள்ளிப் போட்டிருக்கமாட்டார்கள். ஆனால் வாய் நிறைய வக்கனை. ஒருவரையும் விட்டு வைக்கமட்டார்கள். அப்துல்கலாமை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?

அப்துல்கலாம் மீதாக ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் செய்த முக்கியமான பணி என்றால் குழந்தைகளை நோக்கி நம் கவனத்தைச் செலுத்த திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். மாணவர்களின் முக்கியத்துவத்தைத் இந்த தேசத்துக்கு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். சொல்வதுடனும் சுட்டிக்காட்டுவதுடனும் நிறுத்தவில்லை. செய்து காட்டினார். வடக்கும் தெற்குமாகவும் கிழக்கும் மேற்குமாகவும் தேசம் முழுக்கவும் தொடர்ந்து பயணித்தார். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சலிப்பேயில்லாமல் பேசினார். ஜனாதிபதி பதவியை விட்டு ஓய்வு பெற்ற பிறகும் பயணித்துக் கொண்டேயிருந்தார். அதற்காகவே அவரைக் கொண்டாட வேண்டும்.

எந்த ஊரிலிருந்து வேண்டுமானாலும் கிராமப்புற மாணவர்கள் நூறு பேர்களை எடுத்துக் கொள்ளலாம். மாணவர்களின் தேர்வு எந்த ஒழுங்குமில்லாத ரேண்டம் தேர்வாக இருக்கட்டும். அந்த மாணவர்களின் பிரச்சினை என்று அலசினால் நம்முடைய முடிவு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? உறுதியாகச் சொல்ல முடியும்- தன்னம்பிக்கை குறைவு என்பதுதான் மிக முக்கியமானதாக இருக்கும். ஆசிரியர்களாலும், பெற்றோராலும், சமூகத்தாலும் நிவர்த்திக்க முடியாத அந்தக் குறையின் மீது பொடனி அடியாக அடித்த மனிதர் அப்துல்கலாம். தயக்கமேயில்லாமல் இதைச் சொல்லலாம். இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை ஊட்டுவதற்கான மனிதர்களே நம்மிடம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

‘உன்னால் முடியும்’ என்று சொல்வதற்கே இங்கு ஆட்கள் இல்லையே! நுண்ணரசியல் பேசுகிறேன் பேர்வழி என்று எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பேசிப் பேசி அடுத்த தலைமுறையின் மனதின் அடியாழத்திலேயே எதிர்மறைச் சிந்தனைகளைத்தானே விதைத்து வைத்திருக்கிறோம்.‘இங்கே எதுவுமே சரியில்லை’ என்பதுதானே நம்மில் ஒவ்வொருவரின் முடிவுமாக இருக்கிறது. ‘என்னதான் பாடுபட்டாலும் என்னால் ஜெயிக்க முடியாது’ என்று பேசுகிற பல மாணவர்களை அடையாளம் காட்ட முடியும். இப்படி எல்லாவற்றிலும் எதிர்மறைச் சிந்தனைகளையே ஊட்டி ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கும் நம் அரைவேக்காட்டு அறிவுஜீவிச் சமூகத்திற்கு அப்துல்கலாம் மாதிரியானவர்களைப் பார்த்தால் எரியத்தான் செய்யும்.

இளைஞர் சமூகத்தைப் பார்த்து எல்லாவற்றையும் நேர்மறையாக அணுகச் சொன்னவர் அவர். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மிகப்பெரும் உயரத்தை அடைந்தார். படித்து, வேலைக்குச் சென்று, படிப்படியாக உயர்நிலையை அடைந்து, தனிமனித ஒழுக்கத்திற்கு உதாரணமாகத்தானே வாழ்ந்து காட்டினார்? அத்தகைய நேர்மறையான சிந்தனையாளர்கள்தானே காலத்தின் தேவை? ‘இது வேண்டாம்’ ‘அது வேண்டாம்’ ‘அதில் நொட்டை’ ‘இதில் குட்டை’ என்று எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டேயிருக்கும் போலி முகங்கள்தான் தலைவர்கள். இல்லையா? அப்படியானவர்களைத் தலைவர்களாகக் காட்டுவதைத்தான் வெர்ச்சுவல் உலகமான சமூக ஊடகம் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

அப்துல்கலாம் மீதான அரசியல் பொருளாதார விமர்சனங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தாலும் அவர் நம் காலத்தின் மகத்தான மனிதர். இளம் இதயங்களில் நெருப்பை மூட்டியவர் அவர். ‘அக்னிக்குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கோர் காட்டினில் பொந்திடை வைத்தேன்’ என்ற வரிகளுடன் பொருந்திய நெருப்பு அது. அவர் இன்னமும் சில காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். வாழ்ந்த காலத்திலேயே ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசியிருக்கிறார். லட்சக்கணக்கான மாணவர்களுடன் ஆத்மார்த்தமாக உரையாடியிருக்கிறார். எந்த ஒரு கல்லூரியிலும் பள்ளியிலும் மாணவர்களிடம் பேசிப் பார்த்தவர்களுக்குத் தெரியும்- மாணவர்கள் கேள்வி கேட்கவே தயங்குவார்கள். அவர்களைத் ‘துணிந்து கேளுங்கள்’ என்று தூண்டிவிட்டவர் அவர். கேள்வி கேட்கவும், விவாதிக்கவும், இலக்குகளை நிர்ணயிக்கவும் அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டேயிருந்தவர். நம் காலத்தின் இளம் சமுதாயத்துக்கு தெளிவான உந்துசக்தியாக இருந்தார்.

மிகப்பெரும் பதவியில் இருந்த போதும் ஊழலற்ற, எளிமையான மனிதராக முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். பிரணாப் முகர்ஜியும், பிரதீபா பாட்டிலும் இந்த நாட்டுக்குச் செய்தவை என்ன என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால் அப்துல்கலாம் குறித்தான பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும். ஆனால் அதைச் செய்யமாட்டார்கள்.


பேசுகிறவர்கள் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள். 

அப்துல்கலாமிடமும் ஆயிரம் குறைகள் இருந்திருக்கலாம். குறைகளே இல்லாத மனிதர் வேண்டும் என்று கேட்டால் எங்கே போய்த் தேடுவது? நம்முடைய மக்களில் பெரும்பாலானவர்கள் இப்படியானவர்கள்தான்- ஒற்றை வரி பாராட்டைக் காட்டிலும் மணிக்கணக்கில் குறைகளை அடுக்குவார்கள். சமூக ஊடகம் அதே மனநிலைக்கு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி- He was one of the greatest positive personality in our time.அவ்வளவுதான்.

உனக்கு அவ்வளவு தெரியுமாய்யா?

அலுவலகத்தில் எங்கள் அணியில் ஒரு பையன் புதிதாகச் சேர்ந்திருக்கிறான். வட இந்தியாவைச் சேர்ந்தவன். கன்னடப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு பாதிக்கன்னடத்தவன் ஆகிவிட்டான். என்னைவிட கன்னடம் அதிகமாகப் பேசுகிறான் என்று காதில் கொஞ்சம் புகை வந்தாலும் என்னையும் அவனையும் சேர்த்து ஒரு நிகழ்ச்சியை நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். Toastmaster. இதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது என்று சொன்னேன். அலுவலகத்தில் பேசுவதே மிகக் குறைவு. மொத்தமாக ஐம்பது பேர்தான் எங்கள் அலுவலகத்தில். பெண்கள் வெகு குறைவு. கூட்டம் கூட்டமாகச் சென்று மதிய உணவை உண்பார்கள். இருக்கையிலேயே அமர்ந்து கோழி கொத்துவது போல மதிய உணவைக் கொத்தும் ஒரே ஆள் நான்தான். சேரக் கூடாது என்றில்லை. விவாதம் என்ற பெயரில் பல சமயங்களில் தாளித்துவிடுவார்கள். வாட்ஸப் செய்தியை எல்லாம் படித்துவிட்டு வந்து ஒருவர் மோடி பிரமாதம் என்பார். இன்னொருவர் மன்மோகன் சிங்தான் டாப் என்பார். விஷயம் தெரிந்து பேசுகிறவர்கள் கிடைப்பது வரம். அப்படியானவர்கள் பேசினால் காது கொடுக்கலாம். 

ஒரு சித்தாந்தத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாமல் தன்னை அந்தச் சித்தாந்தவாதியாகக் காட்டிக் கொள்கிறவர்களிடம் பேசுவதைப் போன்ற கடினமான காரியம் எதுவுமில்லை. இந்துத்துவா, திராவிடம், பெரியாரியம், அம்பேத்கரியம் என்று எந்தச் சித்தாந்தமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அது பற்றிய விரிவான புரிதல் கொண்டவர்கள் அதைப் பற்றிப் பேசுவதில் தவறில்லை. தம்மை இண்டலெக்சுவலாகக் காட்டிக் கொள்வதற்காக அரையும் குறையுமாகத் தெரிந்து வைத்துக் கொண்டு அதைக் கொட்டுகிறவர்கள்தான் அதிகம். தாம் நம்புகிற சித்தாந்தத்தை ஆதரித்துப் பேசுவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்துத்துவத்தை ஆதரிக்கிறேன் பேர்வழி என்று இசுலாமியர்களைத் திட்டுவார்கள். தன்னைப் பெரியாரிஸ்ட் என்று காட்டிக் கொள்வதற்காக முரட்டுத்தனமாக மதங்களின் அத்தனை கூறுகளையும் எதிர்பார்கள். கூறு கெட்டதனமாகத் தெரியும். அலுவலகம் என்பதால் நாசூக்கைக் கடைபிடிக்க வேண்டும்.

யாருடனும் சேராமலிருப்பதால் நான் அறிவாளி என்று அர்த்தமில்லை. நாமும் அரைவேக்காடு. நம்முடன் விவாதிக்கிறவனும் அரைவேக்காடு என்றால் அவனும் பாவம்தானே?

முடிந்தவரைக்கும் எந்தச் சித்தாந்தத்திலும் உறுதியாகச் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதுதான் என் சித்தாந்தம். ஒரு சித்தாந்தத்தைத் தீவிரமாக நம்புகிறவனாக நாம் வெளிப்படத் தொடங்கினால் ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வோம். ஒரு இந்துத்துவவாதி இந்து மதத்தின் அருமை பெருமைகளைப் பேசினால் அதற்காகக் கைதட்ட ஒரு கூட்டம் சேரும். அதே இந்துத்துவவாதி மாலிக் காபூரின் படையெடுப்பைப் பற்றி எழுதினாலும் அதே கூட்டம்தான் கைதட்டுமே தவிர வெளியில் இருப்பவர்கள் ‘அவன் முஸ்லீம்ன்னாவே அப்படித்தான் எழுதுவான்’என்பார்கள். ஒரு சித்தாந்தவாதியாக தம்மைக் கருதிக் கொண்டு அல்லது வெளியில் காட்டிக் கொண்டு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வதைவிடவும் காலம் முழுவதும் சிறு சிறு சலனங்களையும், விவாதங்களையும் தொடர்ந்து உருவாக்கி அது பற்றிய எதிர்கருத்துக்களை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு தேவைப்படுகிற இடங்களில் தம்முடைய கருத்துக்களை மாற்றிக் கொள்ளவும் தயங்காதவனாக இருப்பதுதான் சமூகத்தில் நம்முடைய இருப்புக்கான அர்த்தத்தை உருவாக்குகிறது என்று உறுதியாக நம்புகிறேன்.

இப்படி இருந்தால் ‘இன்னைக்கு ஒரு பேச்சு..நாளைக்கு ஒரு பேச்சு’என்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். அதுவொன்றும் தவறில்லை. வாழ்க்கை அதன் போக்கில் போவதுதான் சரி. அந்தந்தத் தருணத்தில் எவையெல்லாம் மனதுக்குச் சரி என்று தோன்றுகிறதோ அதைப் பின்பற்றிக் கொள்ளலாம். நம் மனம் சரி என்று சொல்வதைப் பின்பற்றுவதில் ஒரு செளகரியம் இருக்கிறது. Comfort zone. ஒரு சித்தாந்தத்தை உறுதியாகப் பின்பற்றினால் அதே சித்தாந்தத்தைப் பின்பற்றும் சக கொள்கையாளரோ அல்லது அந்தச் சித்தாந்தத்தின் தலைமையோ  எதைச் சொன்னாலும் நாம் ஆதரிக்க வேண்டியிருக்கும். அவர்களுக்காக நாம் கம்பு சுற்றிக் கொண்டிருப்போம். அதற்கான தேவை என்ன? முரட்டுத்தனமாக ஒரு சித்தாந்தத்தையோ அல்லது ஒரு மனிதரையோ நம்ப வேண்டியதற்கான அவசியம் என்ன?

வாழ்ந்து முடிக்கும் போது நம்மைப் பற்றிய ஒரு சித்திரம் உருவாகும் அல்லவா? அதுதான் நிரந்தரம். வாழ்வின் கடைசித் தருணம் வரைக்கும் நம்மைப் பற்றிய பிம்பங்களையும் சித்திரங்களையும் தொடர்ந்து அழித்துக் கொண்டேயிருக்கலாம். சரியான புத்தகங்களை வாசித்து தகுதியான மனிதர்களுடன் உரையாடி புரிதலும் நெகிழ்தலும்தானே மனித மனதுக்கான வளர்ச்சி? உணர்ச்சிவசப்பட்டு அரைகுறையாக ஒன்றை ஏற்றுக் கொண்டு அதைவிட்டு விலக முடியாமல் இறுகிப் பிடித்துக் கொண்டு நாமும் அரைகுறையாகவே இருந்தபடி நம்மைப் போன்ற சக அரைகுறை எதிர்சித்தாந்தவாதியுடன் தம் கட்டி களமாடியபடி அப்படியே தேங்கிப் போவதில் என்ன பலன் இருக்கிறது?

பொதுவான உரையாடல் என்றால் பிரச்சினையே இல்லை. தீவிரமான விஷயங்களைப் பொறுத்த வரைக்கும் சரியான மனிதர்களுடன் விவாதிக்க வேண்டும். விவரம் தெரிந்தவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். இத்தகைய குழப்பங்களினால்தான் அலுவலக உரையாடல்களில் கலந்து கொள்வதில்லை. ‘ஜி.எஸ்.டியினால விலை குறைஞ்சுடுச்சு தெரியுமா?’ என்று தொடங்கினால் எதைப் பேசுவது? ஜி.எஸ்.டி பற்றி வேறு ஏதேனும் நல்ல அம்சம் இருந்து பேசினால் பரவாயில்லை. விலை குறைந்துவிட்டது என்றால் எப்படி நம்புவது? பதினெட்டு ரூபாயிலிருந்த காபி பத்தொன்பது ரூபாய் ஆகியிருக்கிறது. நேரடியாகக் கண்ணில் பார்க்கிறோம். ஆனால் விலை குறைந்துவிட்டது என்கிறார். ‘இவங்ககிட்ட பேசி ஏன் வாயைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டும்?’ என்று தோன்றும். முழுமையான புரிதல் இல்லாத மனிதர்களுடன் மணிக்கணக்கில் மல்லுக்கட்டுவதைவிடவும் மாஸ்டர்களிடம் கால் மணி நேரம் பேசினால் போதும். பேசுவது என்றால் வாசிப்பு என்று கூட இருக்கலாம். ஏதாவதொரு திறப்பைக் காட்டிவிடுவார்கள். தீக்குச்சியை உரசி வெளிச்சத்தைக் காட்டிவிடுவார்கள். அங்கே போய் அமைதியாக இருப்பதைவிடவும் இங்கேயே இருந்து கொள்ளலாம் என்று தனிக்கட்டைதான். அதனால்தான் என்னவோ ‘இவனைப் பேச வைக்கலாம்’ என்று இந்த டோஸ்ட் மாஸ்டர் பணியைக் கொடுத்துவிட்டார்கள்.

பிரச்சினை என்னவென்றால் எதற்காக ஒதுங்கி இருந்தேனோ அதே விவாதங்களை நான் நடத்த வேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நிகழ்ச்சி நடைபெறும். ஒரு தலைப்பைக் கொடுத்து மற்றவர்களைப் பேச வைக்க வேண்டும். ‘நீங்களே தலைப்பைக் கொடுங்க’ என்று கேட்டிருந்தேன். அதே தலைப்புகள்தான். அதே கடிதான். ஜிஎஸ்டி, சீனாவை வெல்லுமா இந்தியா? இப்படியெல்லாம். ‘இதைப்பத்தியெல்லாம் நமக்கு உண்மையிலேயே தெரியுமா? அல்லது நடத்துகிறவனுக்குத்தான் தெரியுமா?’ என்று துளி கூட யோசிக்கமாட்டார்களா? ஆத்து ஆத்து என்று ஆத்துவார்கள். ஒன்று மட்டும் நிச்சயம்- வாழ்க்கை நம்மை வைத்துக் கபடியாட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் இமயமலைக்கே போனாலும் கரடியை அனுப்பி வைத்துக் கடிக்கும். 

Jul 26, 2017

சிறார் நூல்களின் பட்டியல்

பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பதற்காக வாங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் இது. பனிரெண்டு பள்ளிகளுக்கு பாரதி புத்தகாலயமும், மெரினா புக்ஸ் மூன்று பள்ளிகளுக்குமான நூல்களை சேகரித்துக் கொடுத்தார்கள். மெரினா புக்ஸ் பட்டியலுக்கும், பாரதி புத்தகாலயத்தின் பட்டியலுக்கும் சிறு வேறுபாடு இருக்கும். கீழே இருக்கும் பட்டியல் பாரதி புத்தகாலயம் சேகரித்துக் கொடுத்த புத்தகங்களின் பட்டியல்.

பாரதி புத்தகாலயம் மொத்தம் பனிரெண்டு பள்ளிகளுக்கான புத்தகங்களை வாங்கிக் கொடுத்ததால் சில புத்தகங்களில் பனிரெண்டு பிரதிகள் கிடைக்கவில்லை. அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே பட்டியல்தான் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்ததால் ஏற்கனவே தயாரித்திருந்த புத்தகப்பட்டியலில் மீண்டும் சிறு மாற்றங்களைச் செய்து கொடுத்திருந்தேன். 

ஐந்து Bill ஆகக் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பில்லிலும் எவ்வளவு சதவீதம் தள்ளுபடி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பதிப்பகம், புத்தகம் வெளியான காலத்திற்கு ஏற்ப தள்ளுபடியின் சதவீதம் மாறியிருக்கிறது. முதல் நான்கு பில்லையும் கூட்டினால் தொண்ணூறாயிரம் ரூபாய் வரும். ஐந்தாவது பில்லில் இருக்கும் நான்காயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகம் அவர்களாக சேர்த்து அனுப்பியிருக்கிறார்கள். இலவச இணைப்பு.

நூல்களைச் சேகரித்து, பில் தயாரித்து, அனுப்பி வைத்த பாரதி புத்தகாலயத்தாருக்கும் அங்கு குறிப்பாக சிராஜூதினுக்கும், மெரினா புக்ஸ் நிறுவனத்திற்கும் அங்கு குறிப்பாக செளந்தருக்கும் ஆத்மப்பூர்வமான நன்றி. இந்தக் காரியத்தில் இவர்களின் இருவரது ஒத்துழைப்பும் அலாதியானது.

நாம் பதினைந்து பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்கியிருக்கிறோம். இவை தவிர திருமதி.அனுராதா கிருஷ்ணசாமி போன்ற சிலர் நேரடியாக பணத்தை மெரினா புக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து தாம் விரும்பிய பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பியிருக்கிறார்கள். இதே புத்தகப் பட்டியல். இப்பொழுது சற்றேறக்குறைய இருபது பள்ளிகளில் இந்தப் புத்தகங்கள் இருக்கின்றன. இனிவரும் காலத்திலும் யாரேனும் இந்தப் பட்டியலை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் பொதுவெளியில் வைத்துவிடலாம். தேவைப்படுகிறவர்கள் மெரினா புக்ஸ்ஸைத் தொடர்பு கொண்டால் அவர்கள் சேகரித்துக் கொடுத்துவிடுவார்கள். அந்தக் கடையில் கடையில் செளந்தர் கில்லாடியான ஆள். (அலைபேசி எண்: 95006 96558)

பில் அப்படியே பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இதே அளவு தள்ளுபடியை எதிர்பார்க்க வேண்டியதில்லை. மொத்தமாக வாங்கியதால் இவ்வளவு தள்ளுபடி வழங்கியிருக்கிறார்கள். 

பட்டியல் Google Spreadsheet ஆகவும் இருக்கிறது.


Bill : 01SlDescription of Goodsபதிப்பகம்QtyRateDisc. %Amount
1எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் -ஜான் ஹோல்ட்பாரதி 12170.00
2040.00
2இது யாருடைய வகுப்பறை…? - ஆயிஷா நடராஜன்பாரதி 12195.00
2340.00
3வன்முறையில்லா வகுப்பறை - ஆயிஷா நடராஜன்பாரதி 1280.00
960.00
4கனவு ஆசிரியர் - துளசிதாசன்Books for Children12100.00
1200.00
5அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு - பில் பிரைசன்பாரதி12445.00
5340.00
6நீங்களும்விஞ்ஞானியாகவேண்டுமென்றுவிரும்புகிறீர்களா? -ஆயிஷா நடராஜன்பாரதி 1280.00
960.00
7சி.வி.ராமன் 125 - த.வி.வெங்கடேஸ்வரன்Books for Children1270.00
840.00
8சூரிய மண்டலம் - கீதா, மாலன்புதிய தலைமுறை1240.00
480.00
9உலகப் பெண் விஞ்ஞானிகள்Books for Children1270.00
840.00
10டார்வின் ஸ்கூல் - இரா.நடராசன்பாரதி 1275.00
900.00
11யானைகள் 100 - யோகானந்த், முகமது அலிபாரதி 1230.00
360.00
12சூரியனும் சந்திரனும் நட்சதிரங்களும் - யூமா வாசுகிபாரதி 1240.00
480.00
13குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் - லியோ டால்ஸ்டாய்பாரதி 1235.00
420.00
14வாத்துராஜா -விஷ்ணுபுரம் சரவணன்பாரதி 1250.00
600.00
15மரத்தின் அழைப்பு - யூமா வாசுகிபாரதி 12100.00
1200.00
16எழுதத் தெரிந்த புலி - எஸ்.ராமகிருஷ்ணன்பாரதி 1240.00
480.00
17யானை சவாரி- பாவண்ணன்பாரதி 1240.00
480.00
18மீசைக்காரப் பூனை - பாவண்ணன்பாரதி 1250.00
600.00
19அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை - விழியன்பாரதி 1225.00
300.00
20பனியார மழையும் பறவைகளின் மொழியும் - கழனியூரன்பாரதி 12110.00
1320.00


22140.00

Less : Discount


30%6642

Total15498.00

Bill : 02

SlDescription of Goodsபதிப்பகம்QuantityRateDisc. %Amount
1DictionaryNCBH12160.00
1920.00
2பாரதிதாசன் கவிதைகள்(கவிதா)
1275.00
900.00
3திருக்குறள் மூலமும் உரையும்
12120.00
1440.00
4ஜான்ஸி ராணி (படக்கதை)Sri Senbhaga1230.00
360.00
5காமராஜ் (படக்கதை)Sri Senbhaga1230.00
360.00
6அரிச்சந்திரன் (படக்கதை)Sri Senbhaga1250.00
600.00
7மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (படக்கதை)Sri Senbhaga1250.00
600.00
8சட்டமேதை அம்பேத்கர் (படக்கதை)Sri Senbhaga1250.00
600.00
9வீரபாண்டிய கட்டபொம்மன் (படக்கதை)Sri Senbhaga1250.00
600.00
10சுபாஷ் சந்திரபோஸ் (படக்கதை)Sri Senbhaga1250.00
600.00
11கொடிகாத்த திருப்பூர் குமரன் (படக்கதை)Sri Senbhaga1250.00
600.00
12மாவீரன் பகத்சிங் (படக்கதை)Sri Senbhaga1250.00
600.00
13டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (படக்கதை)Sri Senbhaga1250.00
600.00
14ராணி மங்கம்மாள் (படக்கதை)Sri Senbhaga1250.00
600.00
15வ.உ.சிதம்பரனார் (படக்கதை)Sri Senbhaga1250.00
600.00


10,980.00

Less :


20% 2,196.00

Total8,784.00Bill : 03

SlDescription of Goods
QuantityRateDisc. %Amount
1மனிதன் எங்கனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்Books for Children12300.00
3600.00
2கருவியாலஜிBooks for Children1250.00
600.00
3மாத்தன் மண்புழுவின் வழக்கு Books for Children1270.00
840.00
4தமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல்Books for Children12100.00
1200.00
5அழகிய பூனை - வாண்ட காக்Books for Children1230.00
360.00
6உயிர் தரும் மரம் - ஷெல் சில்வர்ஸ்டீன்பாரதி புத்தகாலயம்1230.00
360.00
7குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்பாரதி புத்தகாலயம்1235.00
420.00
8வந்தே மாதரம்பாரதி புத்தகாலயம்1260.00
720.00
9சார்லி சாப்லின் பாரதி புத்தகாலயம்1270.00
840.00
10உயிர் தோன்றியது எப்படி ?- ஏ.என்.நம்பூதிரிபாரதி புத்தகாலயம்1240.00
480.00
11வாசிப்பை நேசிப்போம் - ச.சுப்பராவ்பாரதி புத்தகாலயம்1210.00
120.00
12அறிவாளியா? முட்டாளா? - த.வி.வெங்கடேஸ்வரன்பாரதி புத்தகாலயம்1225.00
300.00


9,840.00

Less :


30% 2,952.00

Total6,888.00Bill: 04

Sl.NoDescription of GoodsPublicationQtyRateDisc . %Amount
1புவியுருண்டை
12500
6000
2பாரதியார் கவிதைகள்
1275
900
3நல்ல தமிழில் எழுதுவோம்- என்.சொக்கன்கிழக்கு பதிப்பகம்12200
2400
4வாழ நினைத்தால் வாழலாம் - ருத்ரன்நர்மதா பதிப்பகம்12100
1200
5எனக்குரிய இடம் எங்கே? - ச.மாடசாமிசூரியன் பதிப்பகம்12100
1200
6படிப்பது சுகமே - வெ.இறையன்புNCBH1250
600
7படிப்படியாய் படி - இரா.ஆனந்தகுமார்விகடன்12100
1200
8அக்னிச்சிறகுகள் - அப்துல்கலாம்
12160
1920
9சத்தியசோதனை - காந்தியடிகள்
12100
1200
10நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - குகன்வானவில் பதிப்பகம்12140
1680
11பெரியார் - அஜயன் பாலா
1285
1020
12அம்பேத்கர் - அஜயன் பாலாவிகடன்1290
1080
13நான் நம்மாழ்வார் பேசுகிறேன்விகடன்12175
2100
14வள்ளலார் வரலாறு- சுத்தானந்த பாரதியார்வ.உ.சி. நூலகம்1245
540
15டாப் 100 வரலாற்று மனிதர்கள் - பூ.கொ.சரவணன்விகடன்12245
2940
16நம் தேசத்தின் கதை - தேவ் நாத்நர்மதா பதிப்பகம்12175
2100
17நாடுகளின் வரலாறு - ஜி.எஸ்.எஸ்தி இந்து12200
2400
18கதையில் கலந்த கணிதம் - இரா.சிவராமன்Pie கணித மன்றம்12150
1800
19விளையாட்டு வடிவில் கணக்கு- வாண்டு மாமாகவிதா பதிப்பகம்1250
600
20டாப்100 அறிவியல் மேதைகள் - பூ.கொ.சரவணன்விகடன்12150
1800
21ஸ்டீபன் ஹாக்கிங் - நாகூர் ரூமிசிக்த்ஸ் சென்ஸ்1250
600
22உங்கள் உடல் பேசுகிறேன் - கீதா, மாலன் புதிய தலைமுறை1280
960
23நம்து உடல்: ஓர் அற்புத இயந்திரம்- ராஜேஷ் பிஜ்லானிநேஷனல் புக் ட்ரஸ்ட்1230
360
24விளையாட்டு விஞ்ஞானம் - சுப்பையா பாண்டியன்விகடன்12145
1740
25இணையில்லா இந்திய அறிவியல் -இரா.சிவராமன்Pie கணித மன்றம்12120
1440
26நீங்களே செய்யலாம்-1,2 - வாண்டு மாமாகங்கை புத்தக நிலையம்12250
3000
27சுற்றுச்சூழல் மாசுகளும் விளைவுகளும்- வேணு சீனிவாசன்விஜயா பதிப்பகம்12115
1380
28உலகம் வெப்பமடைவதும் அதன் தீய விளைவுகளும் - பால.அர்த்தநாரீஸ்வரர்கடலாங்குடி பதிப்பகம்1240
480
29ஊர்ப்புறத்து பறவைகள் - கோவை சதாசிவம்குறிஞ்சி பதிப்பகம்1280
960
30நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலும்அறிவியல் வெளியீடு1275
900
31காண் என்றது இயற்கை- எஸ்.ராமகிருஷ்ணன்உயிர்மை12110
1320
32மண்ணின் மரங்கள்- கார்த்திக் தமிழ்தாசன்இயல்வாகை1275
900
33காகிதத்தில் வேடிக்கை உருவங்கள் செய்வது எப்படி?மணிமேகலைப் பிரசுரம்1255
660
34பேச்சுக்கலைப் பயிற்சி (1&2) - குமரி அனந்தன்வானதி பதிப்பகம்12100
1200
35ஓவியம் வரையக் கற்றுக் கொள்ளுங்கள் (1 & 2)மணிமேகலைப் பிரசுரம்12140
1680
36மூளைக்கு வேலை- தந்திரக் கணக்குகள் - தர்மராஜ் ஜோசப்நர்மதா பதிப்பகம்1280
960
37வினாடி வினா- 2500 - ஜெகாதாசாரதா பதிப்பகம்1270
840
38பொது அறிவு -5000 - அம்பிகா சிவம்விஜயா பதிப்பகம்12100
1200
39நர்மதாவின் சூப்பர் க்விஸ்நர்மதா பதிப்பகம்12100
1200
40மாணவர்களுக்கு பயன் தரும் கேள்வி பதில்கள் - அனந்தகுமார்நிவேதிதா பதிப்பகம்1270
840
41சுண்டைக்காய் இளவரசன் - யெஸ்.பாலபாரதிவானம் பதிப்பகம்1260
720
42மாயக்கண்ணாடி - உதயசங்கர்நூல்வனம்1270
840
43காட்டுக்குள்ளே கொண்டாட்டம் - கொ.மா.கோதண்டம்விஜயா பதிப்பகம்1280
960
44நகைச்சுவை ததும்பும் முல்லா நஸ்ரூதின் கதைகள்முத்தமிழ் பதிப்பக1250
600
45தெனாலிராமனின் மதியூகக் கதைகள் - ரெட்டி ராகவய்யாநேஷனல் புக் ட்ரஸ்ட்1290
1080
46வேலன் பார்த்த அதிசய அட்லாண்டிக் - ஹர்மீந்தர் ஓஹ்ரிநேஷனல் புக் ட்ரஸ்ட்1230
360
47உலகின் மிகச் சிறிய தவளை- எஸ்.ராமகிருஷ்ணன்டிஸ்கவரி புக் பேலஸ்1240
480
48புலியைத் தேடி ஒரு பயணம் - கீதிகா ஜெயின்நேஷனல் புக் ட்ரஸ்ட்1240
480
49பூசணிக்காய் முதல் ஊறுகாய் வரை - சுனிலா குப்தேநேஷனல் புக் ட்ரஸ்ட்1270
840
50உலகப் புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள்சப்னா12125
1500
51கனவினைப் பின் தொடர்ந்து- த.வெ.பத்மாஎதிர் வெளியீடு12100
1200
52பேசும் தாடி - உதயசங்கர்வானம் பதிப்பகம்1280
960
53காண்ாமல் போன சிப்பாய் - விஜயபாஸ்கர் விஜய்வானம் பதிப்பகம்1250
600
54அட்லஸ்
12100
1200
55பைபிள் கதைகள்பிரேமா பிரசுரம்12160
1920
56திருக்குரானின் உள்ளடக்கம் என்ன? - அப்துல்லாஹ் அடியார்இசுலாமிய நிறுவனம் ட்ரஸ்ட்1235
420
57சிறுவர்களுக்கு இராமாயணம் - ஏ.சோதிநன்மொழி பதிப்பகம்1270
840
58யுரேகா யுரேகா (பாகம் 1&2)அறிவியல் வெளியீடு1265
780
59வேடிக்கையான விடுகதைகள் - 1000மணிமேகலைப் பிரசுரம்1240
480


73,560

Less: Discount


20%14,712

Total58848Bill : 05

SlDescription of Goods
QuantityRateDisc. %Amount
1வன்முறையில்லா வகுப்பறை
1080.00
800.00
2ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
10250.00
2500.00
3கீழடி
2025.00
500.00
4மா.சே.துங் ஒரு மனிதர் கடவுளல்லர்
5180.00
900.00
5உணவோடு உரையாடு
1035.00
350.00
6ஆயிஷா 
5015.00
750.00
7பாரதியார் உருவப்படம் பெரியது
5120.00
600.00
8பாரதியார் உருவப்படம்
570.00
350.00


6,750.00

Less : Discount


40% 2,700.00

Total4,050.00