Jun 6, 2017

காணாமல் போனவர்கள்

சமணம் பற்றி எழுதிய கட்டுரையைப் பிரசுரம் செய்த ஒன்றிரண்டு நாட்களில் தமிழாசிரியர் ஒருவர் அழைத்திருந்தார். அந்தக் கட்டுரையில் ‘பரஞ்சேர்பள்ளி என்ற ஊர் சமணர்களின் ஊராக இருந்தது..இப்பொழுது பரஞ்சேர்வழி என்று மருவியிருக்கிறது’ என்று எழுதியிருந்தேன்.  தம்மை அறிமுகம் செய்து கொண்டவர் ‘தம்பி தெரியாம எழுதக் கூடாது...பரஞ்சேர்வழி கரியகாளியம்மன்தான் எங்க குல தெய்வம்... ஒரு நோம்பி நொடி தவறாம போய்ட்டு வர்றேன்..எனக்குத் தெரியாதா? நீங்க சொல்லுற பரன்சேர்பள்ளிங்கிறது வேற ஊரா இருக்கும்..விசாரிச்சு எழுதுங்க..எங்க குலதெய்வ ஊர்ல சமணர் சிலை எல்லாம் இல்லை’ என்றார். 

சற்று கடுமையாகப் பேசினார். முரட்டுத் தமிழ் வாத்தியாரின் தொனி அது. வம்பாகப் போய்விட்டது. அஃதுவொன்றும் பெரிய ஊர் இல்லை. அலைந்து திரிந்து அவர் தேடியிருக்கக் கூடும். செ.இராசுவின் புத்தகத்தில் இருந்துதான் குறிப்பினை எடுத்திருந்தேன். கொங்கு நாட்டு வரலாற்று ஆய்வில் இராசுதான் அத்தாரிட்டி. அவர் தவறான தகவலை எழுத வாய்ப்பேயில்லை. அவருக்கு வயது எண்பதைக் கடந்துவிட்டது. அவரைத் தவிர வேறு யாரிடம் இது குறித்து விசாரிப்பது என்று தெரியவில்லை. 

ஞாயிற்றுக்கிழமையன்று காங்கேயம் சிவன்மலை சென்று அங்கேயிருந்து சென்னிமலை சாலையில் பயணத்தைத் தொடர்ந்த போது தீரன் சின்னமலையின் நினைவு வந்தது. அவரது இயற்பெயர் தீர்த்தகிரி. மைசூர் ராஜ்ஜியம் கொங்குநாடு முழுவதும் வியாபித்திருந்த போது சுல்தானின் ஆட்கள் வரி வசூலை முடித்துக் கொண்டு அதே சிவன்மலை- சென்னிமலை சாலையில் சென்றிருக்கிறார்கள். அப்பொழுது தீர்த்தகிரி பெரும் உருவம். வழிப்பறியில் இறங்கினார். அவருடன் மோத விரும்பாத சுல்தானின் ஆட்கள் பயந்து வரிப்பணம் மொத்தத்தையும் ஒப்படைத்துவிட்டார்கள்.

‘அய்யா நாங்க வெறுங்கையோட போனா எங்களைக் கொன்னுடுவாங்க..நீங்க யாருன்னு சொல்லுங்க’ என்று கெஞ்சியிருக்கிறார்கள்.

‘சிவன்மலைக்கும் சென்னிமலைக்கு நடுவால ஒரு சின்னமலை புடுங்கிட்டான்னு போய்ச் சொல்லு’ என்று பஞ்ச் அடித்திருக்கிறார் தீர்த்தகிரி. அந்தப் பஞ்ச்த்தான் இன்றைக்கும் அவரது பெயராக இருக்கிறது. தீரன் சின்னமலை. இன்னமும் கூட அந்தச் சாலை வனாந்திரமாகத்தான் தெரிகிறது. யாரையாவது குறுக்காட்டி ‘பெரியமலை புடுங்கிட்டான்னு போய்ச் சொல்லு’ என்று எடப்பாடியாருக்குத் தூது அனுப்பலாம் என்று கூடத் தோன்றியது. 

பரஞ்சேர்வழியை அடையும் போது இருட்டியிருந்தது. அது வறப்பட்டிக்காடு. எங்கே போய் தீர்த்தங்கரரைத் தேடுவது?

மீண்டும் திங்கட்கிழமை சென்று பார்த்த போது தீர்த்தங்கரரைக் கண்டுபிடித்துவிட்டேன். அநேகமாக என்னிடம் பேசிய தமிழ் வாத்தியார் நேரடியாகக் கரியகாளியம்மனைக் கும்பிட்டுவிட்டு திரும்பி வந்துவிடுவார் போலிருக்கிறது. அந்த லட்சணத்தோடுதான் குதித்திருக்கிறார். அவருடைய அலைபேசி எண்ணைச் சேமித்து வைக்காமல் விட்டுவிட்டேன். இருந்திருந்தால் சுருக்கென்று கேட்டு விட்டிருக்கலாம். 

மத்தியபுரீஸ்வரர் என்கிற சிவன் கோவிலுக்கும் கரியகாளியம்மன் கோவிலுக்கும் இடையில் ஆதி அம்மனின் கோயில் இருக்கிறது. அந்தக் கோவிலுக்கு பெரிய மரியாதை இல்லை. யாரும் சென்று வருகிற மாதிரியும் தெரியவில்லை. அவ்வப்பொழுது யாராவது பொட்டு வைத்துவிடுகிறார்கள். 




ஆதி அம்மனின் கோவிலுக்கு நேர் வடபுறம் சாலையோரமாக தீர்த்தங்கரரின் சிலை இருக்கிறது. ஒரு பூசாரியிடம் கேட்ட போது ‘அது புத்தர் சிலைன்னு சொன்னாங்க...யாரும் பூசை பண்ணுறதில்லைங்க’ என்றார். அவருக்கு செ.இராசுவைத் தெரிந்திருந்தது. அவர் வந்திருந்த போது வண்டியில் வைத்து அழைத்துச் சென்றதாகச் சொன்னார். ‘அது சமணர் சிலைங்க...புத்தர்கள் இல்லை’என்று சொல்லிவிட்டு விளக்கினேன்.


சமணர் சிலைக்கும் புத்தர் சிலைக்கும் வித்தியாசங்களில் முக்கியமானது தலைக்கு மேலாக இருக்கும் முக்குடை. புத்த மதச் சிலைகளில் முக்குடை இருக்காது. 

சமணர்களில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் உண்டு. ஆரம்பத்தில் அவர்கள் மட்டும்தான் பிரதானமாக இருந்தார்கள். பிற்காலத்தில் சைவ சமயத்தில் அம்மன் வழிபாடு மக்களிடையே பிரசித்தி பெற்ற போது சமணர்களும் தங்கள் ஒரு உபாயத்தைத் தேடினார்கள். இயக்கன் - இயக்கி என்ற திட்டத்தை அமுல்படுத்தினார்கள். இயக்கனும் இயக்கியும் தீர்த்தங்கரருடம் இருப்பவர்கள். ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் ஒரு இணை உண்டு. ஆக, இருபத்து நான்கு இணை. இயக்கி என்பதும் இந்தக் காலத்து இசக்கி ஒன்றா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்தச் சிலையில் தீர்த்தங்கரரின் இருபக்கமும் இயக்கனும் இயக்கியும் இருப்பதைக் காணலாம். பரன்சேர்பள்ளியில் இருக்கும் சிலை மகாவீரருடையது. பாகுபலி. இருபத்து நான்காவது தீர்த்தங்கரர். அவருடைய சின்னம் சிங்கம். சித்தாயிகாவும் மாதங்கனும் அவருக்கான இயக்கி இயக்கன்.

பராமரிப்புப் பணி, புதுக் கட்டிடம் என்று நாம்தான் வரலாற்றுச் சான்றுகளைக் கொத்துக்கறி போட்டுக் கொண்டிருக்கிறோம். நல்லவேளையாக பரன்சேர்பள்ளி இன்னமும் பட்டிக்காடாக இருக்கிறது. வணிகமயமாக்கியிருந்தால் தீர்த்தங்கரரை எப்பொழுதோ தலைமுழுகியிருப்பார்கள். பாவம், தப்பித்துக் கொண்டிருக்கிறார். ஒன்றை மறுக்க விரும்பினால் முழுமையாகத் தெரிந்து கொண்டு மறுக்க வேண்டும். இல்லையென்றால் அமைதியாக இருந்து கொள்வது உத்தமம். அரை குறையாகத் தெரிந்து கொண்டு பேசினால் தமிழாசிரியராக இருந்தால் என்ன? தலைமையாசிரியராக இருந்தால் என்ன? எரிச்சல் வரத்தான் செய்யும்.

ஒருவிதத்தில் இப்படியான அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பவர்களின் எதிர்ப்பும் நல்லதுதான். தேடிச் சென்றதில் இன்னமும் சில வரலாற்றுத் தகவல்களுக்கான ஆரம்பப்புள்ளிகள் சிக்கியிருக்கின்றன. அவற்றை நேரம் வரும் போது விரிவாக எழுதுகிறேன்.

எல்லாம் சரி. தீர்த்தங்கரருக்கு கடுப்பா, காளியம்மனுக்குக் கடுப்பா என்று தெரியவில்லை- காலைத் தவறாக வைத்து கணுக்காலில் சவ்வு கிழிந்துவிட்டது. பற்களைக் கடித்துக் கொண்டே ஊர் வந்து சேர்ந்து எலும்பு மருத்துவரை அணுகியதற்கு ஐந்து நாட்களாவது படுக்கையில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார். என்னதான் செய்வது? தினசரி இரண்டு பதிவுகளாவது எழுதி அந்த வாத்தியாருக்கு அனுப்பி படிக்கச் சொல்ல வேண்டும். கைங்காரர்.