Jun 23, 2017

குழந்தைகளுக்காக..

பெங்களூரில் ஒரு தமிழ்க் குழுமம் இருக்கிறது. மாரத்தஹள்ளியிலிருந்து வைட் ஃபீல்ட் செல்லும் வழியில் இருக்கும் அபார்ட்மெண்ட்வாசிகள். அவ்வப்பொழுது குழந்தைகளுக்காக ஒரு நிகழ்ச்சியும் நடத்துவார்கள். அக்கம்பக்கத்துக் குழந்தைகள் நாற்பது ஐம்பது பேர் கலந்து கொள்வார்கள். பெற்றோர்களும் அமர்ந்திருப்பார்கள். பெரிய திட்டமிடல் எதுவுமில்லாத குடும்ப நிகழ்ச்சி மாதிரி அது. எந்தக் குழந்தையும் தயாரிப்பு எதுவும் செய்து வர வேண்டியதில்லை. ஆடச் சொல்லுவார்கள்; பாடச் சொல்லுவார்கள். குழந்தைகளையே கதை சொல்லச் சொல்வார்கள். ‘ஒரு காக்கா இருந்துச்சா’ என்று மழலை மொழியில் தத்தக்காபித்தக்கா என்று சொல்வதைக் கேட்க மகிழ்வாக இருக்கும். பெரியவர்களும் குழந்தைகளுக்குக் கதையைச் சொல்வார்கள். 

ஒரு வகையில் குழந்தைகளுக்கான Ice breaking இது.

ஒரு முறை குடும்பத்தோடு கலந்து கொண்டேன். ‘மறுபடியும் எப்போ போலாம்?’ என்று கேட்கக் கூடிய சுவாரசியமான நிகழ்ச்சி. இந்த மாதம் (ஜூன் 24) சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு ஆரம்பிக்கிறார்கள். ஐந்து அல்லது ஆறு மணிக்கு முடிந்துவிடும். அழைப்பிதழை அனுப்பி வைத்திருக்கிறார்கள். பொதுவெளியில் சொல்லிவிட்டால் வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்வார்கள். அல்லவா?

பெங்களூரில் வசிப்பவர்கள் கலந்து கொள்ளலாம். இதுவொரு உத்வேகமூட்டக்கூடிய நிகழ்ச்சியும் கூட. ‘நம்ம ஏரியாவிலும் இப்படிச் செய்யலாமே’ என்று தோன்ற வைத்துவிடுவார்கள். நடத்துகிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பு. பள்ளி, வீடு என்று தாண்டி சமூகத்தோடு இணைவதற்கான சாளரம். இத்தகைய நிகழ்வுகள் பல பகுதிகளிலும் நடந்தால் நன்றாக இருக்கும். சுருங்கிச் சுருங்கி ஒவ்வொரு மனிதனுமே தனி உலகமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். செல்ஃபோன், கம்யூட்டர் இத்யாதிகள் மனிதர்களைத் தம்மோடு பிணைத்துக் கட்டியிருக்கின்றன. எதிரில் வரக் கூடிய மனிதனைக் கூட சில வினாடிகள் உற்று நோக்குவதற்கான மனநிலையில்லாதவர்களாகிக் கொண்டிருக்கிறோம். 

சக மனிதர்களுடன் கலந்து உறவாடும் இப்படியான நிகழ்வுகள் வழியாகத்தான் எலெக்ட்ரானிக் வஸ்துகளைத் தாண்டியும் வாழ்க்கை சுவாரசியமிக்கது என்பதைக் குழந்தைகளுக்கும் உணர்த்த முடியும். நாமும் புரிந்து கொள்ள முடியும். முதலில் நாம் புரிந்து கொள்வோம். பிறகு குழந்தைகளுக்குச் சொல்லித் தரலாம்.

மாரத்தஹள்ளிவாசிகளுக்கு ஒரு கோரிக்கை. இந்நிகழ்வை அவ்வப்பொழுது நடத்தாமல் தொடர்ச்சியாக நிகழ்ச்சியை நடத்தினால் நன்றாக இருக்கும். ஒரே அடுக்ககத்தில் நடத்தாமல் இதே ஊரில் வெவ்வேறு குழுக்களுடன் இணைந்து ஆங்காங்கே ஒவ்வொரு மாதக் கூட்டத்தை நடத்தினால் இதன் வலையமைவும் பெரிதாக இருக்கும் பங்கேற்பும் விரிவடையும். ஆலோசிக்கவும்.

நிகழ்ச்சிகளைத் தாண்டி பஞ்சுமிட்டாய் என்கிற குழந்தைகளுக்கான இதழையும் வெளியிடுவார்கள். நாளை வெளி வரக் கூடிய இதழ்- நான்காவது இதழ். முந்தைய மூன்று இதழ்களையும் இணைப்பில் வாசிக்கலாம்.  


அச்சு எடுத்து தமிழ் வாசிக்கத் தெரியும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சில அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். அவர்கள் நடத்தும் தமிழ்ப் பள்ளிகளில் வாசித்துக் காட்டுவதற்கான நல்லதொரு சஞ்சிகை இது.

விவரம்:

நாள் : ஜூன் 24 (சனிக்கிழமை)
நேரம் : மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : Ashish JK Apartment , Thubarahalli extended road,Thubarahalli,Bengaluru 560066
(Marthahalli to Whitefield road)

தொடர்புக்கு:

பிரபு - 9731736363
ராஜேஸ் - 9740507242
ஜெயக்குமார் - 9008111762
ப்ரவின் - 9886705436

1 எதிர் சப்தங்கள்:

Trade said...

Thanks a lot for sharing... We went for this event and it's really amazing.. Defiantly it's an ice breaking event for parents too..