May 9, 2017

ஐடி துறையில் தம் கட்டுதல்

ஐடி துறையில் சில காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. தொழில்நுட்பம் (Technical), ஆளுமை(Personality) என்ற இரு வகைகளில் தொடர்ந்து நம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் நாம் தப்பித்துக் கொள்வதற்கான வழி. இதையும் தாண்டிக் கூட தலைக்கு மேல் கத்தி தொங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதையும் சமாளிக்க சில உபாயங்கள் தேவையாக இருக்கின்றன.

கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை வெகு வேகமாக புதிய பரப்புகளை அடைந்திருக்கிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மட்டுமே மொட்டுகளாக இருந்த சொற்கள் எல்லாம் இன்றைக்கு பூத்துக் காயாகி கனியாகி நிற்கின்றன. இந்தத் துறையின் வேகம் அலாதியானது. ஆனால் நாம்தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எதைக் கற்றுக் கொண்டிருந்தோமோ அதையே கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்திய வேலைச் சந்தையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் புதிய பிரிவுகளுக்கு ஆட்கள் இல்லை என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். வேலையில் இருப்பவர்களும் சரி, மாணவர்களும் சரி புதிய பிரிவுகளைப் பற்றி தெளிவான புரிதல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது.

கிபி 2000 ஆம் ஆண்டுவாக்கில் சி, சி++, ஜாவா அதன் பிறகு .net என்று படித்துக் கொண்டிருந்தோம். இன்றைக்கும் கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் இருக்கிறோம். கல்லூரிகளில் இத்தகைய பாடங்களைத்தான் சொல்லித் தருகிறார்கள். Cloud, IoT, Business Intelligence மாதிரியான புதிய களங்களைக் கல்லூரிகள் சொல்லித் தருவதில்லை. சுடச்சுட வளர்ந்து வரும் பிரிவுகளைப் பற்றிக் கற்றுத் தருகிற பயிற்சி நிறுவனங்களும் வெகு குறைவு. ஒரு தனியார் கல்லூரியின் பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘எங்கள் மாணவர்களுக்கு ஜாவாவில் பயிற்சியளிக்கிறோம்’ என்றார். அவரது உடல்மொழியில் ஒரு திருப்தி இருந்தது. அவருக்கு வெளியுலக நிலைமை தெரியுமா என்று தெரியவில்லை. படித்து முடித்துவிட்டு வெளியில் வந்தால் ஜாவா தெரிந்தவர்கள் குப்பை மாதிரி கிடக்கிறார்கள். கம்யூட்டர் சயின்ஸ், ஐடி மாணவர்கள் என்றால் ஜாவா, எந்திரவியல் மாணவர்கள் என்றால் ஆட்டோகேட். எலெக்ட்ரானிக்ஸ் என்றால் மைக்ரோ கண்ட்ரோலர் என்று காலங்காலமாக ஒரே வரிசையில்தான் இருக்கிறோம். இத்தகைய நிபுணர்களுக்கும் நிறுவனங்களில் தேவை இருக்கிறதுதான். ஆனால் நிறுவனங்களின் தேவையை விடவும் அதிகமாக ஆட்களும் சந்தையில் கிடைக்கிறார்கள்.

கீழே இருக்கும் படம் தெளிவாக விளக்குகிறது. 


நடுவில் இருக்கும் கருப்புக் கோட்டை மையமாக வைத்துக் கொள்ளவும். கருப்புக் கோட்டுக்கு மேலாக நீண்டிருக்கிற பிரிவுகளுக்கு சந்தைகளில் தேவைக்கும் அதிகமாக ஆட்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். கோட்டுக்கும் கீழாக இருக்கும் பிரிவுகளில் ஆட்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது என்று அர்த்தம். இந்தப் படம் சில பிரிவுகளை மட்டும்தான் காட்டுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கிற அனைத்து பிரிவுகளையும் சுட்டிக்காட்டவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எங்கே ஆட்கள் நிறைந்திருக்கிறார்கள், எந்தப் பிரிவுகளுக்கு ஆட்களின் தேவை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு நம்முடைய வேலையை வேறொரு தொழில்நுட்பத்துக்கு மாற்றிக் கொள்வது சிக்கலான காரியமில்லை. ஜாவா மாதிரி எல்லோருக்கும் தெரிந்த நுட்பத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே நம்மால் வேறொரு பிரிவுக்கு கால் வைத்துவிட முடியும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும். அவ்வளவுதான். நாம் எந்தப் பிரிவுகளில் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்பதை வேறு யாரும் சொல்ல முடியாது. அதற்கான தேடலையும் கள ஆய்வையும் கற்றலையும் நாம்தான் மேற்கொள்ள வேண்டும். ஆயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன. இணையத்தில் மேய்ந்து விவரங்களைச் சேகரித்து நமக்கு எது ஒத்து வரும் என்பதை சுயமாக முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை வெகு குழப்பமாக இருந்தால் மட்டும் நண்பர்களிடம் ஆலோசிக்கலாம்.

ஆயிரம் வாய்ப்புகளா என்று கேட்டால், ஆம், ஆயிரம் வாய்ப்புகள்தான்.

உதாரணமாக வணிக நுண்ணறிவு (Business Intelligence) என்றொரு பிரிவு இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கியமானது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் தமது நிறுவனத்தில் பல்வேறு தகவல்களைச் சேகரிப்பது அதை ரிப்போர்ட் ஆக மாற்றுவதுதான் BIநிபுணர்களின் வேலை. எத்தனை கோடிக்கு வியாபாரம் நடந்திருக்கிறது, அடுத்த வாரம் எவ்வளவு விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது, விற்பனை செய்வதற்கு ஏற்ப நம்மிடம் பொருட்கள் கைவசம் இருக்கிறதா என்ற தகவல்களையெல்லாம் சேகரித்து எளிமையாகப் புரிந்து கொள்ளும்படியாக பல்வேறு reportகளை வடிவமைப்பார்கள். 

நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரிப்போர்ட் தேவையாக இருக்கும். உதாரணமாக நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு தமது நிறுவனத்தில் கைவசம் இருக்கும் பொருட்கள் பற்றிய தகவல் அவ்வளவு முக்கியமில்லை. ‘எவ்வளவு வியாபாராம் ஆச்சு’ என்கிற தகவல் தெரிந்தால் போதும். அவருக்குத் தேவையான விவரங்களை மட்டும் கொண்ட ரிப்போர்ட் அவரது மின்னஞ்சலுக்குச் சென்றுவிடும். பொருட்களை வாங்குகிற (Purchasing) பிரிவில் வேலை செய்கிறவர்களுக்கு வேறு தகவல்கள் அடங்கிய ரிப்போர்ட் தேவை. இப்படி ஆளாளுக்கு அவரவர் பணிக்குத் தேவையான ரிப்போர்ட்களைத் தயாரித்துக் கொடுப்பார்கள்.

‘ப்பூ..இவ்வளவுதானா?’ என்றுதான் தோன்றும். ஆனால் அவ்வளவு எளிதான காரியமில்லை. இன்றைக்கு ஒரு பில்லியன் டாலர் வணிகம் நடைபெறும் நிறுவனத்தில் கூட நூறு மென்பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள். அந்த மென்பொருட்களின் வழியாக உள்ளீடு செய்யப்படும் தகவல்களைத் தரவுதளத்தில் (database) சேகரித்து வைக்கிறார்கள். எந்தத் தரவுதளத்திலிருந்து எந்த விவரங்களை எடுக்க வேண்டும்? அவற்றை எந்தெந்தத் தருணத்தில் எடுக்க வேண்டும்? - சில தகவல்களை மாதம் ஒரு முறை எடுத்தால் போதும், சில தகவல்களை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்தால் போதும், சில விவரங்கள் அவ்வப்போது எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் (உதாரணமாக பணமதிப்பு (Currency rate) இப்படி வணிகத்தின் தேவைக்கு ஏற்ப எடுத்த தகவல்களை எப்படி process செய்ய வேண்டும்? யாருக்கு எந்த மாதிரியான ரிப்போர்ட் தேவை, எந்த ரிப்போர்ட்டில் எந்தத் தகவல் இருக்க வேண்டும் என்றெல்லாம் மண்டை காய்கிற வேலை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு நிறுவனத்திற்கு இவையெல்லாம் மிக முக்கியமான தகவல்கள். உயிர்நாடி.

பிஸினஸ் இண்டலிஜென்ஸ் என்பது ஒரு பெரிய களம். அதில் நிறையப் பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவைப் பற்றியும் அலசி ஆய்ந்தால் நமக்கு விருப்பமான ஒரு பிரிவை பிடித்துவிட முடியும். டேட்டா இஞ்சினியர், டேட்டா ஆர்கிடெக்ட் என்று ஏகப்பட்ட ஆட்களுக்கான தேவை இருக்கிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் உதவுகிற நிறைய மென்பொருட்களும் இருக்கின்றன. உதாரணமாக qlikview. qlikview வைத் தெரிந்து வைத்துக் கொண்டால் பிஸினஸ் இண்டலிஜென்ஸுக்குள் மெல்ல நுழைந்துவிட முடியும். உதாரணத்திற்காக இதைக் குறிப்பிட்டிருக்கிறேன். qlikview வை மட்டும் பிடித்துக் கொள்ள வேண்டியதில்லை.

சமீபமாக நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிற Cloud computing, IoT என்பதெல்லாம் கூட இத்தகைய பெரிய பெரிய களங்கள். ஒவ்வொரு களத்திலும் நிறையப் பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு களத்தைப் பற்றியும் மேம்போக்காகவாவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். யூடியூப்பில் Cloud என்று தேடினால் பல நூறு சலனப்படங்கள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு சலனப்படத்தைக் கவனித்தாலே கூட நம்மால் நிறையத் தெரிந்து கொள்ள முடியும். ஒரு களத்தைப் பற்றிய புரிதல் உண்டான பிறகு அதன் வெவ்வேறு பிரிவுகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரிவுகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தையில் என்ன மென்பொருள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். எந்தவொரு மென்பொருளுக்கும் இணையத்தில் கற்பிக்கும் சலனப்படங்கள் இருக்கின்றன. இப்படி நம் அறிவை விஸ்தரித்துக் கொள்வது எளிமையானதுதான். ஆனால் நமக்கு நேரமும் கற்றுக் கொள்கிற ஆர்வமும் வேண்டும். சமூக ஊடகங்களுக்குத் தின்னக் கொடுக்கும் நேரத்தில் பத்து சதவீதத்தை ஒதுக்கினால் கூட போதும். 

இன்றைக்கு மென்பொருள் துறையில் வேலையில் இருக்கிறவர்களின் பெரிய பிரச்சினை தம்மை ஒரு மென்பொருளோடு பிணைத்துக் கொள்வதுதான். ஆரக்கிளிலில் வேலை செய்தால் அதை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் என்கிற மனநிலை பலருக்கும் இருக்கிறது. மென்பொருள்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்தான் என்றாலும் அது மட்டுமே போதுமானது இல்லை. இன்றைக்கு ஆரக்கிள் இருக்கிறது. நாளைக்கு டேரக்கிள் என்று புதியதாக ஏதேனும் வரக் கூடும். எந்தவொரு மென்பொருளையுமே பத்து நாட்கள் மண்டையை உடைத்தால் கற்றுக் கொள்ள முடியும். அது பெரிய காரியமே இல்லை. அப்படியென்றால் எது பெரிய காரியம்? நம்முடைய துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வது. இன்றைக்கு தொலைத் தொடர்புத்துறைக்கான ப்ராஜக்ட் ஒன்றை .net ஐ வைத்து செய்து கொடுத்தால் .netஇல் பிஸ்தாவாக இருப்பதைவிடவும் தொலைத்தொடர்புத் துறையில் பிஸ்தாவாக இருப்பதுதான் பெரிய காரியம். உற்பத்தி (manufacturing), ஊர்தி (automobile) என எந்தத் துறையில் வேலை செய்கிறோமோ அதைக் கற்று வைத்துக் கொள்ள வேண்டும். domain knowledge என்பார்கள். அக்குவேறு ஆணி வேறாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படியொரு அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் என்னதான் மென்பொருள் மாறினாலும் சமாளித்துவிடலாம். 

புதிதாக என்ன களம் உருவானாலும் அதை நம் துறையில் எப்படிப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிற ஆட்களுக்கு அவசியம் இருந்து கொண்டேயிருக்கும். இன்றைக்கு Cloud இருக்கிறது. அதை எப்படி நம் தொலைத்தொடர்புத் துறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று சொல்லுகிற திறமை இருக்க வேண்டும். நாளைக்கு Cloud மாதிரி இன்னொன்று வரலாம். வேறொரு மென்பொருளும் வரலாம். அவற்றையெல்லாம் அவ்வப்போது படித்துக் கொள்ள முடியும். ஆனால் துறை சார்ந்த அனுபவத்தை ஒரே நாளில் யாராலும் படித்துவிட முடியாது. அது நம் அனுபவத்திலிருந்து மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். துறை சார்ந்த அனுபவம்தான் நம்மை unique skill ஆகக் காட்டும். மற்ற யாவுமே மேற்பூச்சுகள். ஜிகினாக்கள்தான். தற்காலிகமானவை. அடுத்த ஐந்தாவது வருடத்தில் வேறொரு பூச்சும் வேறொரு ஜிகினாவும் சந்தையில் வந்திருக்கும்.