May 7, 2017

சிக்க வீர ராஜேந்திரன்

திப்புசுல்தானின் பிறந்தநாளை வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று சமீபத்தில் சிலர் எழுதியிருந்தார்கள். எழுதியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இசுலாமிய நண்பர்கள். நம் ஊரில் வரலாற்று நாயகர்கள் எவ்வளவுதான் சேட்டைகளைச் செய்திருந்தாலும் அவர்களை தங்களின் மதத்தோடும் சாதியோடும் இணைத்துக் கொள்வது என்பது காலங்காலமாகவே நடந்து வருகிறது. இத்தகைய வரலாற்று நாயகர்கள் குறித்து நிலவும் செய்திகளில் எவ்வளவு சதவீதம் உண்மை, புனைவு என்பதைக் கண்டுபிடிக்கவே பெரும்பாடாக இருப்பதும் நம்மிடம் உள்ள வரலாறுகளின் சிக்கல். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய தீரன் என்றாலும்  கர்நாடக வரலாறுகளில் திப்புவின் வேறொரு முகம் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

        (குடகு தேசம்)

குடகு நாடு என்பது பெரிய தேசமில்லை. சற்றேறக்குறைய இன்றைய குடகு மாவட்டம்தான் அன்றைய நாடு. மடிகேரி அந்நாட்டுக்குத் தலைநகர். ஹலேரி வம்சம் ஆண்டு கொண்டிருந்த அந்நாட்டுக்கு மைசூரு பக்கத்து tதேசம். பல்லாண்டு காலமாக மைசூரு நாடு உடையார்களின் சாம்ராஜ்யமாக இருந்து வந்தது. உடையார்களிடம் தளவாயாக இருந்த ஹைதர் அலி 1761 ஆம் ஆண்டு தன்னை மைசூரின் சுல்தான் என்று அறிவித்துக் கொள்கிறார். எடுத்த உடனேயே அறிவித்துக் கொள்வதில்லை. உடையார்களுக்காக நிறையப் போர்களை நடத்தி வென்று கொடுத்தவர் அவர். ‘இவனை விட்டு வைத்தால் ஆபத்து’ என்று பயந்த அரச வம்சம் செய்த சதிகளிலிருந்து தப்பி சுல்தானாக உருவெடுக்கிறார். கிட்டத்தட்ட இருபதாண்டுகள் மைசூரு அவரது ஆளுகையின் கீழ் இருக்கிறது. 

ஹைதர் அலிக்கு பக்கத்து நாடான குடகு நாட்டின் மீது ஒரு கண். அதன் வளமும் குளுமையும் மட்டுமில்லாமல் குடகை ஆக்கிரமித்துவிட்டால் மைசூருவிலிருந்து மங்களூரு துறைமுகத்துக்கு போக்குவரத்தும் எளிதாகிவிடும். குடகு சிறிய நாடுதான் என்றாலும் குடகர்களை வீழ்த்துவது அப்படியொன்றும் எளிதான காரியமாக இல்லை. குடகர்களுக்கு குடகு மலையின் மேடுபள்ளம் அத்துப்படி என்பது முதற்காரணம், அவர்கள் மலைகளின் மறைவிடங்களைப் பயன்படுத்தி கொரில்லா தாக்குதலில் வல்லவர்களாக இருந்தார்கள் என்பது இரண்டாவது காரணம்.

                                                                 (மடிகேரி அரண்மனை)

ஹைதர் அலிக்குப் பிறகு அவரது மகன் திப்பு மைசூருவுக்கு சுல்தான் ஆகிறார். அதன் பிறகு குடகுவுடனான மைசூருவின் பகைமை இன்னமும் அதிகரிக்கிறது. குடகர்கள் திப்புவை ஆரம்பத்தில் தோற்கடிக்க முடிந்தாலும் அவரது வியூகத்திற்கும் போர்த்திறமைக்கும் முன்னால் நிற்க முடியாமல் தோற்கிறார்கள். குடகு நாட்டிற்குள் நுழைந்த திப்புவின் படை மன்னன் தொட்ட வீர ராஜேந்திரனை (தொட்ட என்றால் பெரிய) கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். குடகர்களைக் கொல்கிறார்கள். பெண்களை வன்புணர்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோரைக் கைது செய்வதோடு இசுலாமியத்திற்கு மதமாற்றமும் செய்கிறார்கள். கொலை, கைது உள்ளிட்டவற்றில் எண்ணிக்கை குறித்தான முரண்பாடுகள் இருப்பினும் இதையெல்லாம் திப்புவின் படை செய்யவில்லை என்பதை யாரும் மறுப்பதில்லை. இன்றைக்கும் திப்புவுக்கு எதிராகப் பேசுகிற கன்னடர்கள் சுட்டிக்காட்டும் முக்கியமான வரலாற்றுச் செய்தி இதுதான். திப்பு குடகு நாட்டில் செய்த அழிச்சாட்டியங்களே இன்றளவும் அவரைக் கன்னட இந்துக்களுக்கு எதிரான மனநிலையில் நிறுத்தி வைத்திருக்கிறது. 
(திப்பு சுல்தான்)

திப்பு பிரெஞ்சு மன்னன் நெப்போலியனுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்க்க வியூகம் அமைக்கிறார். சிறையிலிருந்து தப்பிக்கும் தொட்ட வீர ராஜேந்திரன் திப்புவை அழிக்க ஆங்கிலேயர்களுக்கு உதவுகிறான். 1799 ஆம் ஆண்டு திப்பு ஆங்கிலேயர்களால் கொல்லப்பட தமக்கு உதவியதற்கு பரிசாக தொட்ட வீர ராஜேந்திரன் குடகின் மன்னராவதற்கு ஆங்கிலேயர்கள் உதவுகிறார்கள். ஹைதர் அலியின் வம்சம் அழியட்டும் என்று காத்திருந்த உடையார் குடும்பம் (குறிப்பாக லட்சுமி அம்மணி பாட்டி) தனது பேரன் கிருஷ்ணராஜ உடையாரை மைசூரு மன்னராக்க வேண்டும் என்று ஆங்கிலேயரைக் கேட்டுக் கொள்கிறார்.

                       (மும்மடி கிருஷ்ணராஜ உடையார்)

உடையாருக்கு அப்பொழுது வயது ஐந்து. உடையார் பதவியேற்கும் போது உடையார்களின் அரசு ஆங்கிலேயர்களுக்கு எல்லாவகையிலும் விசுவாசமாக இருக்கும் என்ற உறுதியையும் அளிக்கிறது. ஐந்து வயதுப் பையனான உடையாருக்கு சுயமாக ஆட்சி செய்யும் வயது வரும் வரைக்கும் உறுதுணையாக இருப்பதற்காக சமஸ்தானத்தின் திவானாக பூர்ணய்யாவை நியமிக்கிறார்கள். 

(திவான் பூர்ணய்யா)

பூர்ணய்யா கோயமுத்தூர் தமிழர். குடும்ப வறுமையின் காரணமாக மைசூருக்குச் சென்று ஹைதர் அலியின் அரண்மனையில் கணக்குப்பிள்ளையாகச் சேர்ந்து தமது வித்தைகளை எல்லாம் காட்டி ஹைதருக்கும் திப்புவுக்கும் விசுவாசியாக இருக்கிறார். அவர்களின் ஆட்சி முடிந்தவுடன் தமது ஜாகையை ஆங்கிலேயர்கள் மற்றும் உடையார்கள் பக்கம் மாற்றிக் கொண்டு திவானாக உருவெடுக்கிறார். மைசூருவின் வரலாறு அப்படியே தொடர்கிறது. இன்றைக்கும் உடையார்கள்தான் மைசூரு மகாராஜாக்கள். பொம்மை ராஜாக்கள்.

பக்கத்து நாடான குடகுவில் அப்படியில்லை. ஆங்கிலேயர்களின் உதவியுடன் மன்னரான பத்து வருடங்களில் தொட்ட வீர ராஜேந்திரன் இறந்து போகிறான். அவனுக்கு ஆண் வாரிசு இல்லை. அதனால் தனது சகோதரி தேவம்மா ராணியாக வேண்டும் என விரும்புகிறான். ராணி ஆகிவிட்ட போதும் அரசாட்சி நடத்துகிற அளவுக்கு அவளிடம் சூதுவாது போதவில்லை. இரண்டே ஆண்டுகளில் அவளைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு தொட்ட வீர ராஜேந்திரனின் தம்பி லிங்கராஜா மன்னன் ஆகிறான். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அவனது மகன் சிக்க வீர ராஜேந்திரன் (சிக்க என்றால் சிறிய) மன்னன் ஆகிறான். இவன்தான் குடகு தேசத்தின் கடைசி மன்னன்.
                                                          (சிக்க வீர ராஜேந்திரன் தனது மகளுடன்)

சிக்க வீர ராஜேந்திரன் சரியான முரடன். கொடுங்கோலன். பெண் பித்தன். அழகான பெண் என்றால் அந்தப்புரத்திற்கு இழுத்து வந்துவிடுவான். இவனது குடும்பம், அரசாட்சி, வாழ்க்கை முறை என எல்லாவற்றையும் ‘சிக்க வீர ராஜேந்திரன்’ என்ற நாவல் துல்லியமாக காட்சிப்படுத்துகிறது. நாவலை எழுதிய மாஸ்தி வெங்கடேச அய்யங்காரும் தமிழர்தான். கோலார் மாவட்டத்தின் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். அரசு அதிகாரியாக இருந்தார். தமக்கான பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பதால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமது கடைசிக்காலம் வரைக்கும் கன்னடத்தில் எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதிய சிக்க வீர ராஜேந்திரன் நாவலை ஹேமா ஆனந்ததீர்த்தன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

நாவலை வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக மேற்சொன்ன குடகு, மைசூரு வரலாற்றை சுருக்கமாகத் தெரிந்து வைத்துக் கொண்டு வாசிப்பது நாவலின் பரப்பை நமக்கு விஸ்தரித்துக் கொடுக்கும்.

சிக்க வீர ராஜேந்திரனுக்கு சிறு வயது நண்பன் பசவன். பசவனின் கால் ஊனம். மன்னரின் நாய் பண்ணையைப் பார்த்துக் கொள்வதுதான் அவனது வேலை. சிக்க வீர ராஜேந்திரன் அவனை நொண்டி என்று அழைப்பான். நொண்டி, நாவிதன் என்று அவனுக்கு ஊருக்குள் பல பெயர்கள் உண்டு. கிட்டத்தட்ட இளவரசனுக்கு மாமா வேலையைச் செய்து தருகிறவனாக இருக்கிறான். சிக்க வீர ராஜேந்திரன் தறுதலையாகச் சுற்றுகிறான் என்பதால் கெளரம்மாவைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவள் புண்ணியவதி. எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறாள். ராஜகுமாரியும் பிறக்கிறாள். 
         (ராணி கெளரம்மா)

திருமணமாகி மகள் பிறந்த பின்னரும் மன்னனின் கொட்டம் அப்படியே தொடர்கிறது. மன்னனுக்கு தங்கை ஒருத்தி இருக்கிறாள். அவளது கணவன் சென்ன பசவய்யனுக்கு நாடு மீதும் அரசபதவி மீதும் ஒரு கண். அதனால் மன்னனுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம். மன்னன் தங்கையைச் சிறை வைக்கிறான். சென்ன பசவய்யன் மன்னனை எதிர்க்க ஆங்கிலேயர்களின் உதவிகளை நாடுகிறான்.

இடைப்பட்ட காலத்தில் மன்னனை எதிர்த்து உள்நாட்டில் கிளர்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சில இளைஞர்கள் செய்கிறார்கள். காவேரி மக்கள் இயக்கம் என்ற பெயரில் திரளும் அவர்களால் மன்னனை எதிர்த்து வெற்றியடைய முடியாவிட்டாலும் மக்களிடையே அரசனுக்கு எதிரான மனநிலை உண்டாகிறது. ஆங்கிலேயர்கள் வீர ராஜேந்திரனுடன் நட்பு பாராட்டி விருந்துண்டாலும் கூட மன்னன் குறித்தான புகார்கள் தொடர்ந்து அவர்களுக்குச் செல்கின்றன. குடகில் பிரச்சினை உண்டானால் தமது ஆளுகைக்குட்பட்ட பக்கத்து சமஸ்தானமான மைசூருவிலும் அதன் அதிர்வு இருக்கும் என்று ஆங்கிலேயர்கள் யோசிக்கிறார்கள். மைசூருவில் தமக்கு ஆதரவான ஆட்சியை அமைத்தது போலவே குடகிலும் மன்னனை அகற்றிவிட்டு தமது ஆட்சியை அமைக்க வேண்டும் அதிகாரிகள் தமக்குள் ஆலோசனை செய்கிறார்கள்.

அந்தத் தருணத்தில் மன்னனின் தங்கையும் அவளது கணவனும் நாட்டிலிருந்து தப்பிச் செல்கிறார்கள். பயணத்தின் போது குதிரையின் ஓட்டத்தில் அவர்களது கைக்குழந்தை தவறி விழுகிறது. இரவில் இதை உணராமல் அவர்கள் வெகு தூரம் சென்றுவிடுகிறார்கள். அந்தக் குழந்தை மன்னனின் கைகளுக்கு வந்து சேர்கிறது. குழந்தையை மீட்டுத்தரச் சொல்லி மன்னனின் தங்கையும் அவளது கணவனும் ஆங்கிலேயர்களை நாடுகிறார்கள். ஆங்கிலேயர்கள் இது குறித்து மன்னனுக்குத் தூது அனுப்ப தூதுவர்களையே மன்னன் கைது செய்கிறான். இப்படி மன்னனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் பகைமை வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

இன்னொரு பக்கம் மன்னனின் அட்டகாசத்தைப் பொறுக்காமல் அமைச்சர் போபண்ணா மன்னனுக்கு எதிராகத் திரும்புகிறார். அவர் குடகர். தைரியசாலியும் கூட. அதே சமயத்தில் ஆங்கிலேயர்களின் படை குடகை நோக்கி வருகிறது. அதற்குள் போர்வீரர்களையெல்லாம் தம் பக்கம் திருப்பி வைத்திருக்கும் போபண்ணா ஆங்கிலேயர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மன்னன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதைத் தெரிவிக்கிறார். 

                                                                         (நால்குநாடு அரண்மனை)

தங்கை, அவனது கணவன் மற்றும் ஆங்கிலேயர்களின் மீதான எரிச்சலில் இருக்கும் மன்னன் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைக் கொன்றுவிடுகிறான். தங்கையின் குழந்தையைக் கொன்றதிலிருந்து மன்னனுக்கு புத்தி பேதலிக்கிறது. அவனுக்குச் சிகிச்சையளிக்க நால்குநாடு அரண்மனைக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கு குணமடைகிறான் என்றாலும் குடகின் படையும் ஆங்கிலேயப்படையும் சேர்ந்து மன்னனைக் கைது செய்கிறது. கைது செய்யப்பட்ட மன்னன் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவனை வேலூருக்கு இடமாற்றம் செய்கிறார்கள். ராணியும் மன்னனின் மகளும் மன்னனுடனேயே செல்கிறார்கள். உடனடியாக குடகுக்கு புதிய மன்னரைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. ராஜகுமாரிக்கு ஆளுகிற வயது வந்த பிறகு அவள் ராணியாக்கப்படக் கூடும் என்று பேச்சளவிலான ஒப்பந்தத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சி குடகில் அமுல்படுத்தப்படுகிறது.

மன்னன் வேலூரில் இருப்பதைவிடவும் வட இந்தியாவில் இருப்பதுதான் நல்லது என்று ஆங்கில அரசு கருதுகிறது. காசிக்கு இடமாற்றுகிறார்கள். காசியில் ராணி கெளரம்மா இறந்து போகிறாள். ராஜகுமாரியும் மன்னனும் இங்கிலாந்து செல்கிறார்கள். இங்கிலாந்தில் மன்னன் இறந்துவிட கிறித்துவராக்கப்பட்ட ராஜகுமாரி ஆங்கிலேயக் கேப்டனை மணந்து ஒரு பெண்ணை ஈன்றெடுக்கிறாள்.

இது நாவலின் சுருக்கம். இவர்களைத் தவிர பகவதி, தொட்டம்மா, தீட்சிதர், உத்தய்யன், மந்திரி லட்சுமி நரசிம்மய்யா அவரது அம்மா என்று பல பாத்திரங்கள் நாவல் முழுவதும் உலவுகிறார்கள். ஐநூறு பக்க நாவல் இது. வாசிக்க எந்த இடத்திலும் தடையில்லாமல் நகர்ந்து கொண்டேயிருக்கும். 

ராஜகுமாரியின் மகள் எடிட் சாதுவை இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டின் போது ராயர் என்பவர் சந்திக்கிறார். அவர் மாஸ்தி வெங்கடேச அய்யங்காருக்கு இந்தச் சந்திப்பு பற்றியும் சுவாரஸியமான இந்த வரலாற்றை நாவலாக நீங்கள் எழுத வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார். அப்படித்தான் சிக்க வீர ராஜேந்திரன் நாவல் வடிவம் பெறுகிறது. 

                                                                (மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்)

மெரினா புக்ஸ் தளத்தில் புத்தகம் ஆன்லைன் விற்பனைக்கு இருக்கிறது. முப்பத்தியிரண்டு ரூபாய்தான். ஐநூறு பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எப்படி இவ்வளவு சல்லிசாக விற்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. வெளியான தருணத்தில் கன்னடத்தில் சர்ச்சைகளை உண்டாக்கிய நாவல் என்றாலும் வாசிக்கத் தவறவிடக் கூடாத நாவல்.