May 10, 2017

ரவுடி வர்றாரு..

சிக்க வீர ராஜேந்திரன் புத்தகம் குறித்து எழுதிய ஒரு மணி நேரத்தில் மெரினா புக்ஸ் தளத்துக்காரர்கள் அழைத்து ‘பத்து புக் ஆர்டர் வந்திருக்கு...யார் எழுதினதுன்னு பார்த்துட்டு உங்களைக் கூப்பிடுறோம்’என்றார்கள். அதன் பிறகு அநேகமாக இருபது அல்லது முப்பது புத்தகங்கள் விற்பனை ஆகக் கூடும் என்று நினைத்திருந்தேன். இது மெரினா புக்ஸ் தளத்தின் இன்றைய ஃபேஸ்புக் செய்தி-

ஒரு புத்தக விமர்சனத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா..

தமிழின் பிரபல எழுத்தாளர், நிசப்தம் வலைத்தளம் மற்றும் அறக்கட்டளை நடத்திவருபவர் வா.மணிகண்டன். நிசப்தம் வலைத்தளம் வாசகர்களிடையே மிகப் பிரபலம். பல ஆயிரம் பேர் வலைத்தளத்தை பின்தொடர்ந்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன் அவர் சிக்க வீர ராஜேந்திரன் தொடர்பாக பதிவிட்டிருந்தார். இது வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மெரினா புக்ஸ்-ல் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கவீர ராஜேந்திரன் புத்தகத்தை ஆர்வத்துடன் ஆர்டர் செய்துள்ளனர்.

இப்படி யாராவது ‘பிரபலம்..அது இது’ என்றெல்லாம் உசுப்பேற்றும் போது அப்படியே நம்பிக் கொள்வதில்லை. ரணகளம் ஆக்கிக் கொள்ள முடியாதல்லவா? அவர்களிடம் அலைபேசியிலும் உறுதிப்படுத்திக் கொண்டேன். விற்பனை நூறு பிரதிகளைத் தாண்டியிருக்கிறது என்றார்கள். சந்தோஷம்.

நூறு என்பது பெரிய விஷயம்தான். என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை முந்நூறு பிரதிகள்தான் அச்சடித்தார்கள். இன்னமும் விற்பனையாகாமல் கிடப்பதாகச் சொல்கிறார்களாம்.

சிக்க வீர ராஜேந்திரன் நாவலை வாசித்து முடித்த போது சனிக்கிழமை இரவு. உறக்கம் வரவில்லை. மைசூரு சமஸ்தானம், ஹைதர் அலி, திப்பு சுல்தான் உள்ளிட்ட குடகு நாட்டின் அக்கம்பக்கத்து வரலாறுகளைப் புரட்டி வருடம் வாரியாக மனதுக்குள் உருவேற்றிக் கொண்டு உறங்கச் சென்ற போது மணி இரண்டைத் தாண்டியிருந்தது. கனவிலும் நாவல் ஓடிக் கொண்டிருந்தது. மறுநாள் காலையில் எழுந்தவுடன் நூல் பற்றிய குறிப்பை எழுதத் தொடங்கியிருந்தேன். மைசூரு மற்றும் குடகின் வரலாற்றை இணைத்து எழுதிய போது திருப்தியாகவும் இருந்தது. திப்பு சுல்தானுக்கும் பிரெஞ்ச் மன்னன் நெப்போலியனுக்கும் இடையில் தூதுவராக இருந்த கருப்பசேர்வை கொங்குநாட்டுக்காரர். தீரன் சின்னமலையின் ஆள். அதையும் கோர்த்து வைத்திருந்த கட்டுரை நீண்டதாக இருந்ததால் கருப்பசேர்வை விவகாரத்தைக் கத்தரித்துவிட்டு பிரசுரம் செய்திருந்தேன். கருப்பசேர்வை பற்றி இன்னொரு நாள் தனியாக எழுதிக் கொள்ளலாம்.

இணையத்தில் எழுதுகிறவர்கள் ஒன்றை கவனித்திருக்கக் கூடும். வழக்கமான வாசகர்களின் எண்ணிக்கையில் சற்றேறக்குறைய பாதிதான் ஞாயிற்றுக்கிழமையன்று இருக்கும். மெதுவாக எழுந்து கறியும் சோறும் உண்டுவிட்டு பகலில் உறங்கி வெளியே சென்றுவிட்டு வந்தால் நாள் முடிந்திருக்கும். அதனால் வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாக இருக்கும். முன்பெல்லாம் இதை எழுதினால் வாசிப்பார்களா? இந்த நேரத்தில் பிரசுரம் செய்யலாமா என்றெல்லாம் குழம்புவதுண்டு. அப்படி யோசிக்கத் தொடங்கினால் கவனம் முழுவதும் அதிலேயேதான் இருக்கும். அதனால் தோன்றும் போது எழுதிவிடுவது; முடிக்கும் போது பிரசுரித்துவிடுவது. சிக்கவீர ராஜேந்திரன் கட்டுரையை வாசித்தவர்களும் வழக்கத்தில் பாதிதான். அதிலேயே நூறு பேர் புத்தகத்தை வாங்கியிருக்கிறார்கள் என்பது வியப்பு.

புத்தகத்தின் விலை சல்லிசுதான்.

என்ன இருந்தாலும் நாம் சொன்னால் நம்பி வாங்குகிறார்கள் என்பதே கெளரவம்தான். ‘நீ சொல்லைன்னாலும் வாங்கியிருப்போம்’ என்று முழியை உருட்டுகிறவர்களுக்கு கோடி கும்பிடு. வழியை விடுங்கள். பந்தா செய்து கொள்கிறேன். 

புத்தகம், சினிமாவையெல்லாம் பொறுத்தவரைக்கும் நம் அறிவைக் காட்டுவதற்காகக் கண்டதையெல்லாம் பரிந்துரை செய்தால் ‘இவன் ஒரு வெளங்காதவன்’ என்று முடிவு செய்து திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள். அதனால் உண்மையிலேயே மனதுக்கு நெருக்கமானவற்றைப் பற்றி எழுதுவதுதான் சரியாக இருக்கும். இல்லையென்றால் அமைதியாக இருந்து கொள்ள வேண்டும்.

இதில் என்ன கித்தாப்பு என்றால் புத்தக விற்பனையைப் பார்த்துவிட்டு மெரினா புக்ஸ்காரர்கள் ‘இவன் பெரிய ரவுடி போலிருக்கு’ என்று நினைத்திருக்கக் கூடும். அவர்கள் நினைத்தால் நினைத்துவிட்டுப் போகட்டும். ஆன்லைனில் புத்தகங்களை வாங்குவதற்கு தமிழில் இருக்கக் கூடிய மிகக் குறைந்த நல்ல தளங்களில் இதுவும் ஒன்று. நேஷனல் புக் ட்ரஸ்ட் மாதிரியான சந்தைகளில் அவ்வளவாகக் கிடைக்காத பதிப்பகங்களின் புத்தகங்களையெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறார்கள். சிக்க வீர ராஜேந்திரன் நாவல் கூட அவர்களது தளத்தில் மட்டும்தான் விற்பனைக்கு இருந்தது.

வெறும் பீத்தலுக்காக இல்லாமல் தம்முடைய வாழ்தலுக்காக வாசிக்கிறவர்கள்தான் எப்பொழுதுமே நேசத்திற்குரியவர்கள். அத்தகையவர்களிடம் வாசிப்பு பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்க வேண்டும். 

கணினி, செல்போன் உள்ளிட்ட திரைகளின் வழியாக வாசித்தாலும் பரவாயில்லை- புத்தகமாக இருப்பதை வாசிக்க வேண்டும். தினசரி நாற்பது அல்லது ஐம்பது பக்கங்களாவது வாசித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன். தகவலுக்காக வாசிப்பது வேறு; அனுபவத்திற்காக வாசிப்பது வேறு- அனுபவத்திற்காக வாசிக்க வேண்டியதுதான் அவசியம். அதுதான் மனித மனத்தின் இண்டு இடுக்குகளில் வெளிச்சம் அடித்துக் காட்டும். நம்முள் புதைந்து கிடக்கும் வக்கிரங்களையும் மனிதத்தன்மையும் வெளியில் கொண்டு வந்து போடும். அதன் வழியான மனத்திறப்புகள்தான் நம்மைப் பக்குவப்படுத்தக் கூடியன. 

தினசரி நம்மைச் சுற்றிலும் ஆயிரம் சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் ஆயிரம் அழுத்தங்களும் பிரச்சினைகளும் இருந்து கொண்டேதான் இருக்கும். அவையெல்லாம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருப்பவைதான். எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு கொஞ்சமே கொஞ்சம் வாசித்தால் கூட போதும். அதன் திருப்தி தனி.

நன்றி.