இது நடந்து ஒரு வாரம் இருக்கும். உடன் பணிபுரியும் தெலுங்குவாலா ஒருவர் வழியில் தன்னை இறக்கிவிடச் சொன்னார். சனிபகவானே வண்டியில் ஏறுகிறது என்று தெரியாமல் ஏற்றிக் கொண்டேன். வண்டியைக் கிளப்பிய சில கணங்களில் ‘ஒரு சின்ன வேலை இருக்கு’ என்று நிறுத்தச் சொன்னார். அதுவொரு அழகு நிலையம். Unisex Spa. பெங்களூரு வந்த புதிதில் யுனிசெக்ஸ் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது. ‘என்னடா இது இப்படி அப்பட்டமாக எழுதி வைத்து அழைக்கிறார்கள்’ என்று மாக்கான் மாதிரி நினைத்துக் கொண்டிருந்தேன்.
வண்டியிலிருந்து இறங்கிய தெலுங்குவாலா தன்னிடமிருந்த சீப்பைக் கொண்டு தலையை வாரியபடியே ‘நீங்களும் வாங்க’என்றார். நமக்குத்தான் தலை வாருகிற வேலை இல்லை அல்லவா? கையினால் நான்கைந்து முடிகளை சற்றே ஒதுக்கிக் கொண்டு உள்ளே சென்றேன். ஸ்பா என்றவுடன் நீங்கள் எசகுபிசகாக நினைத்துக் கொள்ளக் கூடாது. குளிப்பதற்காக ஒரு மருந்து வாங்குவதுதான் அவரது நோக்கம். குளிக்க சோப்புதானே வாங்குவார்கள் என்ற கேள்வி எழலாம்தான். ஆனால் அது மருந்துதான். சோப்பாகவும் பயன்படும். ஒரு பெரிய பாட்டில். பச்சைத் தேயிலை, இஞ்சி என்று விதவிதமான வாசனைகளில் இருக்கிறது. ஒரு போத்தல் 499 ரூபாய்.
அதை எடுத்துப் பார்த்த தெலுங்குவாலா என்னைப் பார்த்து ‘சோப் எல்லாம் போட வேண்டியதில்லைங்க..இந்த பெங்களூரு அழுக்குக்கு...’என்றார். ஆர்கானிக் என்று சொன்னாலே ஈர்ப்பு வந்துவிடும் அல்லவா? எனக்கு வந்து வந்துவிட்டது. வாங்கலாமா வேண்டாமா என்று பெருங்குழப்பம். ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கினால் வேணி ‘எதுக்கு வெட்டிச் செலவு’ என்று கேட்கக் கூடும். எனக்கு அழகு கூடிவிடும் என்று பொறாமைப்படுகிறாளோ என்னவோ. பொறாமைப்பட்டால் படட்டும். தினசரி அழகூட்டிக் கொண்டேயிருந்தால்தான் அறுபதுகளைத் தொடும்போது அமிதாப்பச்சன் மாதிரி இருப்பேன். குழப்பத்திற்கு பிறகு ஒரு போத்தல் வாங்கிக் கொள்வது என்று முடிவு செய்து கொண்டேன். தெலுங்குக்காரருக்கும் அது சந்தோசம்.
என் கையில் பணமாக இல்லை. ‘நீங்க கார்டுல பணம் கொடுத்துடுங்க’ என்று சொல்லிவிட்டு கையில் தனது ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டார். இதுவெல்லாம் விவகாரம் ஆகும் என்று எனக்கு எப்படித் தெரியும்? குறைந்தபட்சம் கார்டு தேய்த்த ரசீதையாவது கிழித்து வீசியிருக்க வேண்டும். வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டேன். The spa என்று கொட்டை எழுத்தில் அச்சிட்டிருந்தார்கள். அதை நான் கவனிக்கவில்லை. என் கெட்ட நேரம்- வேணி கண்ணில் சரியாகப் பட்டுவிட்டது.
இந்த மாதிரியான விவகாரங்களில் அவளிடம் சிஐஏ, சிபிஐ, ரா எல்லாம் தோற்றுவிட வேண்டும். அவளிடம் மட்டுமில்லை, எந்த மனைவியும் அப்படித்தான். தோண்டித் துருவிவிடுவார்கள். கூகிளில் அந்த முகவரியைத் தேடி எடுத்துவிட்டாள். மசாஜ் உள்ளிட்ட காரியங்களைச் செய்யும் அழகு நிலையத்தில்தான் பணம் கொடுத்திருக்கிறேன் என்று உறுதியாகிவிட்டது. அதோடு நிறுத்தியிருந்தால்தான் பரவாயில்லையே- மாலை ஐந்தே முக்காலுக்கு பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது. அதற்கு சில நிமிடங்கள் முன்பாகத்தான் அவள் அழைத்துப் பேசியிருந்தாள். அப்பொழுது அலுவலகத்தில் இருந்தேன். அலைபேசியிலும் அலுவலகத்தில் இருப்பதாகத்தான் சொல்லியிருந்தேன். அவள் அழைத்துப் பேசிய நேரங்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு ‘இது என்ன பில்?’ என்றாள்.
இப்படி வசமாகச் சிக்கும்போது வியர்த்துவிடும். தத்தக்காபித்தக்கா என்று உளறினேன். உளற வேண்டும் என்றில்லை. இந்த மாதிரியான விவகாரங்களில் என் விவரம் அவ்வளவுதான். முதலில் மசாஜ் செய்திருப்பேன் என்று சந்தேகப்படுகிறாள் என்று நினைக்கவில்லை. ‘இதையெல்லாம் எதுக்கு வாங்கி உடம்பைக் கெடுத்துக்குறீங்க?’ என்று திட்டுவாளே என்றுதான் உளறினேன். ஆனால் அதையெல்லாம் தாண்டி ஆபத்தில் சிக்கியிருக்கிறேன் என்று பிறகுதான் புரிந்தது. முதலை வாய்க்குள் காலை விட்டிருக்கிறேன். பாட்டிலை வீட்டிற்குள்ளேயே ஒளித்து வைத்திருந்தேன். இரண்டொரு நாட்களுக்குப் பிறகு வழிந்தபடியே ‘ரிசல்ட் சூப்பரா இருக்கு..நீயும் வேணும்ன்னா எடுத்துக்கோ’ என்று சொல்லிச் சமாளித்துவிடலாம் என்பதுதான் திட்டமாக இருந்தது.
திட்டமெல்லாம் தவிடுபொடியாகியிருந்தது. எசகுபிசகாக எதையும் செய்யவில்லை என்று எப்படி நம்ப வைப்பது என்று பெருங்குழப்பம். ‘அப்படி இப்படி ஏதாச்சும் செஞ்சுட்டு வந்து அதை வெச்சு கட்டுரை எழுதற ஆளுதானே நீங்க’என்றாள். தப்பிக்கவே முடியாத லாஜிக்கலான கேள்வி இது. ‘போறதுன்னா போய்ட்டு வாங்க..ஆனா சொல்லிட்டு போங்க’ என்றாள். இப்படியெல்லாம் செய்வேன். ஆனால் இந்த முறை அப்படியெல்லாம் எந்த லோலாயமும் செய்யாமலே சிக்கியிருக்கிறேன். உளறிக் கொட்டி கிளறி மூடி கடைசியில் நடந்ததை நடந்தபடியே சொன்னேன். அரை குறையாக நம்பினாள்.
‘ஃபோனில் பேசும் போது ஆபிஸில் இருக்கிறதாத்தானே சொன்னீங்க?’
‘அப்போ ஆபிஸில்தான் இருந்தேன்...கிளம்பும் போதுதான் அவனும் கூட வர்றேன்னு சொன்னான்’
‘அஞ்சே முக்காலுக்கு பில் போட்டுட்டீங்க....அவ்வளவு சீக்கிரமவா முடிவு செஞ்சு வாங்குனீங்க?’ என்ன பதில் சொன்னாலும் குறுக்குக் கேள்வி கேட்கிறாள். என்னதான் செய்வது?
‘அந்தாளு ஏற்கனவே பயன்படுத்தியிருக்காரு..அவர் சொன்னாருன்னு பொசுக்குன்னு வாங்கிட்டேன்’
அதன் பிறகு ஏழெட்டு கேள்விகள். நான்கைந்து பதில்கள். கடைசியாக சில வினாடிகள் யோசித்தாள்.
‘இப்படி வாங்குறதுக்கெல்லாம் திட்டுவாங்களா? மறைச்சாத்தான் கோபம் வரும்’ என்றாள். அப்பாடா! தப்பித்துவிட்டேன் என்ற நம்பிக்கை பிறந்தது.
பிரளயமே வந்து போனது போல இருந்தது. பெரும் வெள்ளத்தில் சிக்கித் திணறி மேலே வந்தவனைப் போல ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். இனிமேல் யாரையும் வண்டியில் ஏற்றிக் கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.
அடுத்த நாள் அலுவலகத்தில் தெலுங்குவாலாவிடம் ‘உன்னாலதான்யா இப்படி சிக்கிட்டேன்’ என்றேன்.
அவன் யோசிக்கவே இல்லை. ‘ஆயிரம் ரூபாய்க்கு எங்கேயாவது மசாஜ் செய்வாங்களான்னு கேட்க வேண்டியதுதானே?’என்றான்.
‘இது நமக்குத் தோணாம போய்டுச்சே’ என்று நினைத்தேன். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு நன்மை இருக்கிறது. ‘ஆயிரம் ரூபாய்க்கு மசாஜ் செய்யமாட்டாங்கன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று திருப்பிக் கேள்வி கேட்டிருந்தால் மறுபடியும் வசமாகச் சிக்கியிருப்பேன். தலை தப்பியது மசாஜ் பார்லர் புண்ணியம்.
10 எதிர் சப்தங்கள்:
hahahahaha... இந்த நேரம் இந்த நேரம் இப்படியே நீளாதா?
rofl :P
Same blood
//தெலுங்குக்காரருக்கும் அது சந்தோசம்//
இருக்காதா பின்ன. நாம மட்டும் ஏமாறல. நம்மோட இந்த மாக்கானும் ஏமாறுறானே ன்னு
//அவளிடம் சிஐஏ, சிபிஐ, ரா எல்லாம் தோற்றுவிட வேண்டும். //
அப்பல்லோ ஆசுபத்திரில என்ன நடந்து ன்னு விசாரிக்க சொல்லும்ய்யா.
ஃபன்னி ஃபெல்லோ...
:)
இப்படி எசகு பிசகா மாட்டிக்கொள்வதே பெரும்பாலான ஆண்களுக்கு பழக்கமாக இருக்கிறது!
பேசி ஜெயிக்க முடியுமா என்ன!
What pity in Bangalore City?
இப்பதான் modern மஹாபாரதம் வென்முரசு கிருஷ்னன் பாமா ஊடல் படிச்சிட்டு சிரிச்சிட்டு இருன்தேன். உங்கள் இன்த பதிவு சேம் effect குடுக்குது. எனவே, அன்னி உங்க வலைதளத்தின் மாபெரும் றசிகைனு தெரியுது. தினமும் படிக்கிராங்க.
SopperBoss.
There is comedy ,even in your irony.
Keep it up.
regards
Shankar
Post a Comment