May 27, 2017

மாட்டுப்புத்தி

சைவ உணவுக்காரனாக நான் மாறி பல மாதங்களாகிவிட்டன. இது நானாக விரும்பிய மாற்றம். ஒருவேளை யாரேனும் யாரேனும் அந்தச் சமயத்தில் கட்டாயப்படுத்தியிருந்தால் ‘மூடிட்டு போ’ என்று சொல்லியிருப்பேன். ஒருவரின் உணவுப்பழக்கம் என்பது அவரது தனிமனித சுதந்திரம். அதை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர  ‘இதை நீ உண்ணலாம். இதை நீ உண்ணக் கூடாது’ என்று சொல்கிற உரிமையை அடுத்தவன் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டியதில்லை. 

இன்றைக்கு மத்திய அரசாங்கம் தேசத்தின் உணவுப்பழக்கத்தில் கை வைக்கிறது. வெறும் மூன்றாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி மூன்றாயிரம் வருடங்களுக்கும் மேலாகத் தொடர்கிற உணவுப்பழக்கத்தை அதிரடியாக மாற்ற முயல்வது என்பது பச்சையான சர்வாதிகாரம். சில ஆண்டுகளுக்கு முன்பாக தம்மை அசைக்க ஆளே இல்லை என்ற நினைப்பில் ஆடு மாடுகளைக் கோவில்களில் பலியிடக் கூடாது என்று ஜெயலலிதா அறிவித்தார். தமிழக மக்கள் அடுத்த தேர்தலில் பொடனி அடியாக அடித்தார்கள். ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டால் கூட மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடும். ஆனால் தமது பண்பாட்டு விழுமியங்களின் மீது கை வைத்தால் அதை எந்தச் சமூகமும் பொறுத்துக் கொள்ளாது. ஒரு சமூகம் காலங்காலமாக பின்பற்றி வரக் கூடிய ஒரு பழக்கத்தை தமது உத்தரவின் வழியாக ஓரிரவில் மாற்றிவிடலாம் என்று ஆட்சியாளர் நினைப்பார் என்றால் அதைவிடவும் முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக நம்மை ஆளுகிற பாஜக அரசாங்கம் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறது.

இதுவொன்றும் காட்டுமிராண்டிகளின் தேசமில்லை. ஏதோ திடுதிப்பென்று உருவாகிய சமூகமும் இல்லை. ஐந்தாயிரமாண்டுகளாக மெல்ல மெல்ல உருமாறி உணவு, பண்பாடு, வாழ்க்கை முறை, கல்வி என நெகிழ்ந்து பக்குவப்பட்ட சமூகமாக மாறியிருக்கிறது. எது சரி, எது தவறு என்று முடிவெடுக்கிற திறம் இந்த தேசத்து மக்களிடம் இருக்கிறது. அவர்களிடம் தமது காவி வேட்டியைத் தூக்கிக்காட்டி ‘நீங்க எல்லாம் காட்டுமிராண்டிகள்..நாங்க சொல்லுறதைச் செய்யுங்க’ என்று உரக்கப் பேசினால் மக்கள் எரிச்சல் அடையத்தான் செய்வார்கள். 

‘மான்கறிக்குத் தடை இருக்கே...யானைக்கறியைச் சாப்பிடுவீங்களா?’ என்றெல்லாம் கிளம்பி வருகிறார்கள். ஓர் உயிரினம் எண்ணிக்கையில் குறைகிறது என்கிற போது சூழலியல் நோக்கில் அதைக் கொல்லத் தடை விதிப்பது என்பது வேறு. மாட்டுக்கு பூணூல் பூட்டி புனிதப்படுத்தி அதைக் கொல்லக் கூடாது என்பது வேறு. பாஜக அரசாங்கம் தேர்ந்தெடுத்திருப்பது இரண்டாவதை.

மாடுகளைப் புனிதப்படுத்த விரும்பினால் அதை மக்களின் மனதளவில் உருவாக்க வேண்டியதுதானே? பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸூம் பிரச்சாரம் செய்து மக்களை மாற்றாலாமே? அது சாத்தியமில்லை என்று அவர்களுக்குத் தெரியும். காலங்காலமாக பின்பற்றுகிற உணவுப்பழக்கத்தை மாற்றச் சொன்னால் தமது வாலில் வற ஓலையைக் கட்டி விரட்டியடிப்பார்கள் என்று அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் மக்கள் வழங்கிய அதிகாரத்தை அவர்களுக்கு எதிராகவே பிரயோகப்படுத்துகிறார்கள். 

மூக்கணாங்கயிறு கட்டக் கூடாது, மாடுகளை வெறும் தரையில் படுக்க வைக்கக் கூடாது என்றெல்லாம் உத்தரவிட்டிருக்கிறார்கள். எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. அப்படியே சாணம் போடுவதற்காக மாடுகளுக்குத் தனித்தனி கக்கூஸ்களைக் கட்டித் தர வேண்டும். காளையும் பசுவும் இணை சேர்வதற்காக தனிப் படுக்கையறை கட்டித் தர வேண்டும் என்ற இன்னபிற உத்தரவுகளைப் பிறப்பித்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

‘மாட்டுக்கறி தின்னக் கூடாது’ என்று நேரடியாகச் சொல்லவில்லையே என்று மத்திய அரசாங்கத்தின் வக்கீல்கள் வருவார்கள். நேரடியாகச் சொல்லவில்லைதான். ஆனால் இத்தகைய உத்தரவுகளின் நோக்கம் அப்படிச் சொல்வதுதான். இனி சந்தைக்கடையிலும் ஊர் காலனிகளிலும் கசாப்புக்கடை நடத்த முடியாது. மாறனும் சரசாளும் மாட்டுக்கறிக்காகக் டவுன் இறைச்சிக் கடைக்குப் போகப் போவதில்லை. அவர்களுக்கு சுலபத்தில் சிக்காத வஸ்தாக மாட்டுக்கறியை மாற்றுகிறது இந்த அரசாங்கம்.

மாட்டுப்பண்ணைகள், இறைச்சிக் கூடங்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட மாமிச வியாபாரத்தை ஒழுங்குபடுத்துவதிலும் நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் உணவுக்காக வருவதைத் தடுப்பதிலும் தவறில்லை. அவற்றையெல்லாம் படிப்படியாகச் செய்ய வேண்டும். திடுதிப்பென்று மொத்தச் சமூகத்தின் உணவுப்பழக்கம் மீது மறைமுகமாகத் தடையை விதிப்பது மதவாதம் இல்லாமல் வேறு என்ன? இன்றைக்குச் சந்தைக்கடையிலும் காலனியிலும் கொல்லுகிற மாடுகளை விட இறைச்சி ஏற்றுமதியாளர்கள் கொல்கிற மாடுகளின் எண்ணிக்கை அதிகம். உலகின் மாட்டுக்கறிக்கான தேவையில் கிட்டத்தட்ட இருபது சதவீதத்தை நம் நாடுதான் ஏற்றுமதி செய்கிறது. மாடுகளைக் கொன்று வெட்டி பதப்படுத்தி பெட்டியில் நிரப்பி அனுப்பி வைக்கிறார்கள். அதைத் தடுத்தால் தேசத்தின் வருமானம் போய்விடும் என்று விட்டுவிட்டு சாமானியனின் உணவுப்பழக்கத்தில் கை வைப்பது என்ன நியாயம்?

மாடுகளைக் கறிக்காக விற்கக் கூடாது என்று சட்டம் இயற்றுவது உழவனையும் நேரடியாகப் பாதிக்கும். கிடாரிக் கன்று என்றால் உழவன் வளர்க்கிறான். காளை மாட்டுக் கன்று என்றால் வைத்துக் கொண்டு இனி என்ன செய்வான்? வயதான மாடுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வான்? மழையில்லாக் காலத்தில் தன்னுடைய செலவுக்கே கஷ்டப்படுகிற விவசாயிக்கு கூடுதல் சுமை இல்லையா?. ‘உங்களுக்கு வேணும்ன்னா வெச்சுக்குவீங்க..வேண்டாம்ன்னா கொல்லுவீங்களா?’ என்று கேட்கலாம்தான். இப்படி எல்லாவற்றிலும் செண்டிமெண்ட் பார்ப்பதாக இருந்தால் ஆடு, கோழியிலிருந்து மீன் வரைக்கும் எதையும் சாப்பிடக் கூடாது. நிலத்திற்கு அடியில் விளையும் வெங்காயம் கிழங்குகளைத் கூடத் தின்னக் கூடாது.  வருடாவருடம் கறவை வற்றும் போது சினை ஊசி மூலமாக வயிற்றில் கரு உண்டாக்கி கன்றுகளுக்குக் கூட விடாமல் பாலைக் கறந்து குடிப்பது கூட அயோக்கியத்தனம்தான். வெண்ணெய், தயிர் என்று எல்லாமே விலங்குகள் மீதாக நாம் செய்கிற சித்ரவதைகள்தான். கொம்புக்கு வர்ணம் பூசுவது தவறென்றால் மாடுகளின் பாதம் தேயாமல் இருக்கவும், கூரான பொருகள்  ஏறாமல் இருக்கவும் லாடம் கட்டுவது அதைவிடத் தவறுதான். அதையும் தடை செய்வார்களா? நம் தேசத்து விவசாயியை விடவும் ‘எங்களுக்குத்தான் மாடுகளின் மீது அக்கறை’ என்று யாராவது கூவினால் அவர்களைப் பார்த்து எப்படி வேண்டுமானாலும் சிரிக்கலாம். 

மாட்டுக்கறிக்கு மட்டுமில்லை- அசைவத்திற்கு எதிரான மனநிலை கொண்டவன் நான். அதில் இருக்கும் சாதக பாதகங்களை சக மனிதர்களிடம் பேசலாமே தவிர ‘சாப்பிடாத’ என்று சொல்கிற உரிமை மனைவி பிள்ளையிடத்தும் கூட இல்லை. அதேதான் அரசாங்கத்திற்கும். 

‘முன்னேற்றம், வளர்ச்சி’ என்றெல்லாம் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு மாட்டுச் சாணத்தில் வறட்டி செய்து விற்றுக் கொண்டிருக்காதீர்கள். இந்த தேசத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. குறைந்து வரும் வேலை வாய்ப்பு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், சீனாவின் ஆதிக்கம், அமெரிக்க அதிபரின் மறைமுக இந்திய எதிர்ப்புணர்வு, கிராமப்புற மேம்பாடு, நீர்வள மேலாண்மை என்று வரிசையாகப் பட்டியலிட முடியும். இதையெல்லாம் விட்டுவிட்டு ரம்ஜான் மாதம் தொடங்குகிற தினத்தில் மாட்டுக்கறி மீதான கட்டுப்பாடுகளை இறுக்குவது, மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் மதச்சாயம் பூசுவது என்று எல்லாவற்றிலும் குதர்க்கமாகச் செயல்படுவது பன்முகக் கலாச்சாரம் கொண்ட இந்திய தேசியத்துக்கு எதிரானது. முரண்பாடானது. 

தேன் கூட்டைக் கலைத்துக் கொண்டேயிருக்கிறீர்கள். ஆட்சியதிகாரம் என்பது ஐந்தாண்டுகள்தான். மக்களின் அதிகாரம் நிரந்தரமானது.