May 3, 2017

தலைவலி

ஒரு வாரம் முன்பாக முக்கால் கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது. உச்சி வெயில். அலுவலகத்தில் பார்-பீ-க்யூவுக்கு அழைத்துச் சென்றார்கள். அசைவத்திற்குத்தான் இத்தகைய கடைகள் சரி. சைவத்தில் என்ன தின்றாலும் தயிர்சாதமும் ஊறுகாயும் மாதிரியும்தான். எல்லோரும் செல்கிறார்களே என்று நானும் உற்சவத்தில் கலந்திருந்தேன். எண்ணெய் பதார்த்தங்களாக அடுக்கினார்கள். விழுங்கிவிட்டு மலைப்பாம்பு போல மெல்ல எழுந்து அலுவலகத்தை அடைந்த போதே தலை சற்று வலித்தது. சற்றே மெல்லிய வலி. இரவில் படம் ஒன்றை பார்த்துவிட்டு உறங்கினேன். மறுநாள் படுக்கையை விட்டு எழும் போதே கடுமையான ஒற்றைத் தலைவலி. மதியம் வரைக்கும் இருந்தது. அதோடு முடிந்தது என்று நினைத்தேன். 

மறுநாள் மதியம் அதே தலைவலி. வலி என்று சொல்ல முடியாது. தலைக்குள் சிறு தொந்தரவு. அவ்வளவுதான். நெற்றிப் பொட்டு, காதுக்கு சற்று மேலாக, சுழிக்கு அருகில் என்று இடம் மாறிக் கொண்டேயிருந்தது. பயம் புரட்டியெடுத்துவிட்டது. அலுவலகத்திற்கு பக்கத்திலேயேதான் ஹொஸ்மாத் மருத்துவமனை. நரம்பியல் நிபுணர் இருந்தார். பரிசோதித்துவிட்டு ‘ஒண்ணும் பிரச்சினை இல்ல...ஆனா உங்களுக்கு பயமா இருந்தால் எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்த்துடுங்க’ என்றார். அப்பொழுதுதான் பயம் தனக்கான வடிவத்தை அடைந்தது. மருத்துவமனையில் விசாரித்த போது எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு ஒன்பதாயிரம் ரூபாய் ஆகும் என்றார்கள். எந்தத் தருணத்திலும் என்னிடம் ஐந்தாயிரம் ரூபாய் தாண்டி இருக்காது. வீட்டில் பணம் கேட்டால் ‘ஏன் எதற்கு’ என்பார்கள். ஊருக்குச் சென்று அங்கேயே எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன். ஆனால் பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. பயணத்தின் போது தலை தொடர்ந்து வலித்துக் கொண்டேயிருந்தது அல்லது மனம் வலிப்பதாக நினைத்துக் கொண்டிருந்தது. பயணங்கள்தான் கற்பனைக் குதிரைகளைத் தறிகெட்டு ஓடச் செய்கின்றன. மனதுக்குள் என்னென்னவோ விபரீதக் கற்பனைகள் தோன்றிக் கொண்டேயிருந்தன.

இதுவரையிலும் மரணம் பற்றிய பயம் எதுவுமில்லை. அதற்கான தருணமும் வாய்த்ததில்லை. ‘வந்தால் வரட்டும்’ என்றுதான் தோன்றும். ஆனால் இந்த முறை என்னவோ மனதைப் பிசைந்து கொண்டேயிருந்தது. தெரிந்த மருத்துவ நண்பர்களையெல்லாம் அழைத்துப் பேசினேன். ‘இதுல பயப்பட ஒண்ணுமே இல்ல’என்றார்கள். ஆனால் இவ்வளவு நாளாக இல்லாம இப்பொழுது மட்டும் தலைக்குள் ஏன் என்னவோ வித்தியாசமாக இருக்கிறது என்றுதான் சமாதானம் செய்து கொள்ள முடியவில்லை.

சமீபமாக எல்லாவற்றையும் ஒப்புமைப்படுத்திக் கொள்வது வழமையாகியிருக்கிறது. ‘காய்ச்சல் வந்துச்சு...செக்கப் செஞ்சு பார்த்தா கன்பார்ம் ஆகிடுச்சு...அஞ்சு லட்சம் ஆகும்ன்னு சொன்னாங்க’ என்று அறக்கட்டளையை அணுகுகிறவர்கள் சொன்ன சொற்களை யாருக்கு காய்ச்சல் வந்தாலும் மனம் யோசித்துப் பார்த்து அலட்டிக் கொள்கிறது. ‘முதல்ல தலைவலி..அப்புறம் திடீர்ன்னு ஞாபகமறதி’ என்று யாரோ சொல்லியிருப்பார்கள். அதை மனம் அசைபோடத் தொடங்கிவிடும். இப்படி எல்லாவற்றையும் personalize செய்து கொள்வது என்பது அதீதமான மன உளைச்சலை உண்டாக்கிவிடும் என்பது தெரியும்தான். ஆனால் மனம் சொன்ன பேச்சுக் கேட்பதில்லை. இப்பொழுதெல்லாம் மருத்துவர்கள் சற்றே விலகி நின்று மருத்துவம் பார்ப்பது கூட இந்தக் காரணத்தினால் இருக்கலாம். போதாக்குறைக்கு கூகிளில் தேடினால் நோய்க்குறிகள் வந்து குவிகின்றன. வியர்வை வராத மனிதர்கள் யாராவது உண்டா? ஆனால் வியர்ப்பது ஏதொவொரு விபரீத நோயின் அறிகுறியாக இருக்கும். தலைவலியும் காய்ச்சலும் பல நோய்களுக்கான அறிகுறிகள். இப்படித்தான் எல்லாவற்றையும் குதப்பி மனம் பேதலித்துப் போய்விடுகிறது.

மருத்துவர் சிவசங்கர் அலைபேசியில் ‘மனப்பிராந்திங்க’ என்றார். 

‘எதுக்கு தேவையில்லாம நியூரலாஜிஸ்ட்கிட்ட போனீங்க’ என்றும் கேட்டார். பெங்களூரில் குடும்ப மருத்துவர் என்றெல்லாம் யாரையும் பிடித்து வைத்திருக்கவில்லை. பொது மருத்துவரைப் பார்க்கச் சென்றால் நானூறு ரூபாய் வரைக்கும் வாங்குவார்கள். சிறப்பு மருத்துவரிடம் சென்றால் ஐநூறாக இருக்கும். இவரைப் பார்த்து அவர் அவரைப் பார்க்கச் சொல்லி என இழுத்துக் கொண்டேயிருக்காமல் நேரடியாக சிறப்பு மருத்துவரையே பார்த்துவிடலாம் என்றுதான் சென்றிருந்தேன். 

அருள்மோகன், கலைச்செல்வி என்று தெரிந்த மருத்துவர்கள் ஒருவரும் பாக்கியில்லை. Vascular Headache என்றார்கள். எல்லோரும் ஒரே அறிவுரையைத்தான் சொன்னார்கள்- ‘அடுத்தவர்கள் தமது குறைகளைச் சொல்லும் போது எல்லாவற்றையும் உணர்வுப்பூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை’. நான் உணர்வுப் பூர்வமாகத்தான்  எடுத்துக் கொள்கிறேன். அதுதான் பிரச்சினை.

அப்பாவுக்கு ஒரு காலத்தில் கடுமையான முதுகுவலி வந்தது. பார்க்காத மருத்துவர்கள் இல்லை. கடைசியில் யாரோ ஒரு மருத்துவர் மனநல மருத்துவரை பரிந்துரைத்தார். ‘முதுகுவலிக்கும் சைக்யாட்ரிஸ்ட்டுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கூட அப்பாவை பார்க்க வந்திருந்த ஒருவர் கேட்டார். ஆனால் வலி சரியாகிவிட்டது. ஏதோ சம்பந்தமிருக்கிறது. டெல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்வதற்காக எனக்கு ஐந்தாறு நேர்காணல்களை நடத்தினார்கள். அந்த இரண்டு நாட்களில் கடுமையான முதுகுவலி வந்திருந்தது. மன அழுத்தம் மனிதர்களுக்கு முதுகுவலியை உண்டாக்கிவிடும் என்று தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் காரணமேயில்லாமல் தலைவலி வர வாய்ப்பில்லை என்று எனக்குத் தெரிந்த கால் வைத்தியன் உள்ளே குமுறிக் கொண்டிருந்தான். 

இரண்டு மூன்று நாட்களாக தலைவலி இருந்து கொண்டேதான் இருந்தது. வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. பாராசிட்டமால் எடுத்துக் கொள்ள மனம் ஒப்பவில்லை. எந்த மருத்துவ நண்பர்களையும் நேரில் சந்திக்க முடியவில்லை. யாரையாவது நேரில் பார்த்துப் பேசினால் சற்று அமைதியுறக் கூடும் என்று தோன்றியது. ஞாயிற்றுக்கிழமையன்று சரவணனைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் பொறியாளர். வெகு காலத்திற்கு முன்பாக கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தவர். படித்த படிப்பை விட்டுவிட்டு சித்த மருத்துவம், வள்ளலார் என்று அவர் தமக்கான பாதையை அமைத்துக் கொண்டார். 

நாடி பிடித்துப் பார்த்தவர் ‘உடம்பு சூடு’ என்றார். 

‘ஒரு வைத்தியம் சொல்லுறேன்..கேட்குறியா?’ என்றவர் ‘இஞ்சி, கொத்துமல்லி, சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வெச்சு ரெண்டு தடவை குடிச்சுடு..சரியாகிடும்’என்றார். எனது இரண்டு நாள் குழப்பத்தைப் பார்த்து வீட்டிலிருந்தவர்களும் பயந்திருந்தார்கள். ‘தலைவலிக்குதா?’ என்று அம்மா கேட்ட போதெல்லாம் இல்லையென்று சொல்லியிருந்தேன். ‘அப்புறம் ஏன் முகம் வாடியிருக்குது?’ என்று கேட்டார். உள்ளுக்குள் இருந்த பயம் முகத்தில் தெரிந்திருக்கும் போலிருக்கிறது. சாதாரண தலைவலிக்கு இவ்வளவு பயமா என்றுதான் வேணி கேட்டாள். அவள்தான் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் கொடுத்தாள்.

யோசித்துப் பார்த்தால் ‘திடீர்ன்னு தலைவலி வந்திருக்குன்னு சொல்லியிருக்கீங்க..எதுக்கும் எம்.ஆர்.ஐ பார்த்துடுங்க’ என்பதுதான் பயத்தின் அடிநாதம். வலிக்கான காரணம் தெரிந்து கொள்ளும் வரைக்கும் பயம் இருந்து கொண்டேயிருக்கும் எனத் தோன்றியது. உடற்சூடுதான் காரணம் என்று தெரிந்து கொண்டது பாதி நிம்மதியைக் கொடுத்திருந்தது. சரவணன் சொன்னது போல தலைக்கு நல்லெண்ணய் தேய்த்து குளிர்நீரில் குளித்துவிட்டு அவர் சொன்ன நாட்டு வைத்தியத்தைச் செய்தேன். சரவணன் மனோவியல் மருத்துவம் பார்த்தாரா அல்லது வெம்மைக்கான மருத்துவத்தைச் சொன்னாரா என்று தெரியவில்லை. மண்டை தெளிவாகிவிட்டது. 

உயிரே போகிற வலி வந்தாலும் கூட பற்களைக் கடித்துக் கொண்டு முந்தைய தலைமுறையினர் களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் அப்படியான மனிதர்கள் இருக்கிறார்கள். வெப்பமும் மழையும் உடல் உபாதைகளும் அவர்களை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. ஆனால் மிகச் சாதாரண வலியைக் கூட பிரம்மாண்டப்படுத்தி அதை எல்லா நோய்களுடனும் பிணைத்து, பயம் கவ்வ மருத்துவர்களை அணுகும் இன்னொரு தலைமுறையையும் காலம் உருவாக்கியிருக்கிறது. அதில் ஒருவனாக மாறியிருக்கிறேன் போலிருக்கிறது. உடலைப் பற்றியும் அதன் பிரச்சினைகள் பற்றியும் முழுமையான புரிதல் இருக்க வேண்டும். இல்லையென்றால் எதையுமே தெரிந்து கொள்ளக் கூடாது. இணையம், நண்பர்கள் என்றெல்லாம் அரையும் குறையுமாகத் தெரிந்து கொள்வது, அடுத்தவர்களுக்கு வருகிற பிரச்சினைகளைத் தம்மோடு இணைத்துக் கொள்வது என்றெல்லாம் இருந்தால் எந்தக் காலத்திலும் நிம்மதியே இருக்காது.