May 5, 2017

ஏப்ரல்’2017

பரோடா வங்கிக் கிளை செய்யும் சில அலும்புகளால் அறக்கட்டளையின் மாதாந்திர வரவு செலவுக் கணக்கை வெளியிடுவதில் இரண்டு மூன்று நாட்கள் தாமதமாகிவிட்டது. விவரங்களை கட்டுரையின் இறுதியில் எழுதியிருக்கிறேன்.

ஏப்ரல்’2017 க்கான அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு இது. மாத இறுதியில் அறக்கட்டளையில் பனிரெண்டு லட்சத்து பனிரெண்டாயிரத்து எண்பத்து ஒன்பது ரூபாய் இருக்கிறது. அது போக பதினேழு லட்ச ரூபாய் நிரந்தர வைப்பு நிதியில் இருக்கிறது. ஆக, சற்றேறக்குறைய முப்பது லட்ச ரூபாய் கைவசம் இருக்கிறது. கல்வி உதவித் தொகைக்கான கோரிக்கைகள் வரத் தொடங்கியிருக்கின்றன. கோரிக்கைகளை விசாரித்து விவரங்களைச் சரி பார்த்து நிதி வழங்குவதில் உதவ விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளலாம்.


ஆர்ச் மேட்ரிக்ஸ் என்னும் கட்டிட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காசோலை வாழை அமைப்பினர் நாஞ்சலூர் என்னும் ஊரில் கட்டுகிற பள்ளிக்கு வழங்கப்பட்ட தொகை. திரு.பாபு பத்மநாபன் வழங்கிய நான்கு லட்ச ரூபாய் இரண்டு தவணைகளில் வழங்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டிருக்கும் தொகை இரண்டாவது தவணை. கட்டிட வேலையைச் செய்து கொண்டிருக்கும் நிறுவனமான ஆர்ச் மேட்ரிக்ஸ் பெயரில் காசோலை வழங்கச் சொல்லிக் கோரினார்கள்.

ஸ்ரீ சாய் குமரன் என்கிற ஆறு மாதக் குழந்தையை நுங்கம்பாக்கம் காஞ்சிக் காமகோடி சைல்ட் ட்ரஸ்ட் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். திண்டுக்கல்காரர்கள். குழந்தையின் அப்பா கூலித் தொழிலாளி. அவர்களது முதல் குழந்தைக்கு நோய்த் தொற்று வந்து இறந்திருந்தது. அதே தொந்தரவு சாய் குமரனுக்கும் வந்த போது பயந்திருந்தார்கள். நிசப்தம் சார்பில் திரு.சுந்தர் அவர்களுடன் மாதக் கணக்கில் தொடர்பில் இருந்தார். மருத்துவமனைக்கு தொடர்ந்து சென்று பார்ப்பதும், அவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்வதாகவும் அவரது பணி மகத்தானது. ஆனால் குழந்தையின் உடல்நிலை திடீரென்று நலிவடைந்தது. ஒரு கட்டத்தில் இனி பிழைக்க வைக்க முடியாது என்று மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள். மருத்துவமனைச் செலவுகள் இருபத்தைந்தாயிரம் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டது. குழந்தை இப்பொழுது உயிருடன் இல்லை.

சுப்பிரமணியம் புற்று நோயாளி. உடல் வெகுவாக நலிந்து போயிருக்கிறார். இருந்த கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் விற்று சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏகப்பட்ட கடன் ஆகியிருக்கிறது. ‘கீமோதெரபிக்கு பணம் தேவைப்படுது’ என்றார்கள். கோவை மருத்துவமனையில் பதினேழாயிரம் ரூபாய் ஆகும் என்று சொல்லியிருந்தார்கள். அந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. 

ரூ.6697 திண்டுக்கல் காந்திகிராம் கல்லூரியில் முதுநிலை வேதியியல் படிக்கும் மாணவர் ராஜேந்திரனுக்கான கல்வி உதவித் தொகை. பதிவாளரின் பெயரில் காசோலை வழங்கப்பட்டிருந்தது.

வரவுகளைப் பொறுத்த வரையிலும் ஐம்பத்து நான்காயிரம் ரூபாயைக் குறிப்பிட வேண்டும். ஈரோடு மாவட்டம் எம்.ஜி.ஆர் காலனியில் வசிக்கும் நரிக்குறவர் இன மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கு கடனாக வழங்கப்படட் தொகை இது. ஒரு முறை முப்பதாயிரம் ரூபாயும் இன்னொரு முறை இருபத்து நான்காயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. அந்தந்த மாதங்களில் நிசப்தம் கணக்கு வழக்கிலும் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை இப்பொழுது திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.

பரோடா வங்கியில் கணக்கு வழக்கை வைத்துக் கொண்டிருப்பது வர வர பெரும் தலைவலியாக இருக்கிறது. ‘பதினேழு லட்ச ரூபாய் நிரந்தர வைப்பு நிதிக்கு மாற்றுங்கள்’ என்று மின்னஞ்சல் எழுதிய போது ஒரே நாளில் மாற்றினார்கள். தொகையின் முதிர்வுக்காலமும் முடிந்துவிட்டது. எந்த அறிவிப்புமில்லாமல் தன்னிச்சையாக மீண்டும் நிரந்தர வைப்பு நிதியாக மாற்றிவிட்டார்கள். ‘அந்தத் தொகையை பயனாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். சாதாரணக் கணக்குக்கு மாற்றிக் கொடுங்கள்’ என்று கேட்டால் நேரில் வந்து கடிதம் வழங்கச் சொல்கிறார்கள். இதற்கு வேண்டி வேலை நாளில் செல்ல வேண்டும். 

அதே போலத்தான் ஆன்லைன் பரிமாற்றத்திற்கான கடவுச் சொல்லை மாற்றச் சொல்லி வங்கியின் இணையத்தளம் சொல்கிறது. மாற்ற இயலவில்லை. கடவுச் சொல்லை மாற்றாமல் தளத்துக்குள்ளும் நுழைய முடியவில்லை. வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகினால் கிளையை அணுகச் சொன்னார்கள். கிளைக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். கடந்த ஒரு மாத காலத்தில் தொலைபேசியிலும் நிறைய முறை பேசியாகிவிட்டது. ஒரு மாதம் ஆகிவிட்டது. இப்பொழுது கையொப்பமிட்ட கடிதம் கேட்கிறார்கள். ‘ஒவ்வொரு மாசமும் தவறாம பேங்க் ஸ்டேட்மெண்ட் பப்ளிஷ் செஞ்சுட்டு இருக்கேன்..இந்த மாதம் தாமதமாகிறது’ என்று சொன்னாலும் எந்தச் சலனமும் இதுவரையிலும் இந்தத் தொந்தரவுகள் இல்லை. இப்பொழுது புது மேலாளர் வந்திருக்கிறார் போலிருக்கிறது. இளைஞர்கள் நிறையப் பேர் சேர்ந்திருக்கிறார்கள். தாளிக்கிறார்கள்.

வரவு செலவு குறித்து ஏதேனும் கேள்விகள் இருப்பின் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.