ஒரு வேலையைத் தொடங்குவதில் பணம் பெரிய பிரச்சினையாகவே இருப்பதில்லை. நான்கு பேரின் ஆதரவு வேண்டும். கூடவே நிற்பதான உறுதிமொழி வேண்டும். ‘இதை நாங்க பார்த்துக்கிறோம்’ என்கிற உற்சாகம்தான் நமக்கான மொத்த பலமே. கிராமப்புற வறட்சி நிவாரணப் பணிகளுக்காக ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாயை சிகாகோவிலிருந்து அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘சார்...இந்த மாவட்டத்திலேயே வறட்சியான பகுதின்னு எதைச் சொல்வீங்க?’ என்று கேட்ட போது தனது பணியாளரை அழைத்து ஓர் அதிகாரியை வரச் சொன்னார். வந்தவர் சொன்ன மூன்று கிராமங்களில் ஒழலக்கோயிலும் இருந்தது. அதனால்தான் சிகாகோக்கோவைச் சார்ந்த நம்பிக்கை விதைகள் அமைப்பினரிடம் இந்த கிராமத்தை பரிந்துரைக்கத் தோன்றியது.
நேற்று ஊர்க்கூட்டத்தை நடத்தினோம். கொமரபாளையம் பள்ளிக் கூடத்தில் ஓர் அறையை ஒதுக்கித் தந்திருந்தார்கள். பஞ்சாயத்திற்குட்பட்ட பனிரெண்டு கிராமங்களிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள். பெரும்பாலும் இளைஞர்கள்தான். இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் நிகழ்ந்தது. பணியை எங்கிருந்து தொடங்கவிருக்கிறோம் என்பதில் ஆரம்பித்து வெறும் புதர்களை அகற்றுவதும் சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அடுத்தடுத்த நடவடிக்கைகளாக நாம் எதைச் செய்யவிருக்கிறோம் என்று விவாதித்தோம். எடுத்த உடனேயே ‘இதுதான் எங்க திட்டம்’ என்றெல்லாம் பேசவில்லை. அப்படிப் பேசுவது சரியாகவும் இருக்காது. இது அவர்களுடைய ஊர். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவர்களைப் பேச அனுமதிக்க வேண்டும். திட்டத்திற்கான கோடு காட்டினால் அவர்கள் துல்லியமாகப் பேசுகிறார்கள். நம்மைவிடவும் அவரவர் ஊரைப் பற்றி அவரவருக்குத் தெரியுமல்லவா?
பொதுவாக ஊர் பொதுமக்களை அழைத்து வைத்து நாம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி பேசினால்தான் கடுப்பாகிவிடுவார்கள். மக்கள் பேசுவதுதான் சரியாக இருக்கும். சற்றே ஒழுங்குபடுத்தி திசை மாறாமல் பார்த்துக் கொண்டால் கருத்துக்களைக் கொட்டுவார்கள். கொட்டினார்கள்.
(ஏகாம்பரம் படம் போட்டு விளக்குகிறார்)
ஒரு மணி நேரம் பேசி முடித்த பிறகு ஒருவர் எழுந்து ‘இந்தப் பணி நடைபெறும் போது ஒரு நாளுக்கான மொத்த செலவும் என்னுடையது’ என்றார். கை தட்டினார்கள். சில பல அலைபேசி உரையாடல்கள் நடந்தன. ‘எங்க ஊர் இளைஞர்கள் சார்பா பத்தாயிரம் கொடுத்துடுறோம்’ என்றார்கள். ‘பனிரெண்டு கிராமத்தில் ஒரு கிராமத்துக்கான செலவை நாங்க பார்த்துக்கிறோம்’ என்றார்கள். உண்மையிலேயே புல்லரித்துவிட்டது. ‘எங்க பசங்க பனியன் கம்பெனிக்கு வேலைக்கு போயிருக்காங்க...அவங்க வந்தவுடன் பேசிட்டு எங்களால் எவ்வளவு கொடுக்க முடியும்ன்னு சொல்லுறோம்’ என்று இன்னொரு குழு சொன்னது. இந்த ஆர்வமும் ஒத்துழைப்பும் இருந்தால் போதும். பிறவற்றை நாம் பார்த்துக் கொள்ளலாம்.
அரசியல் பேசவில்லை. இயக்கங்கள் குறித்துப் பேசவில்லை. அரசியல்வாதிகள் பற்றிப் பேசவில்லை. கூட்டத்திற்கு யாரும் கரை வேட்டி கூட கட்டிக் கொண்டு வரவில்லை. இதற்கெல்லாம் எந்த அவசியமும் அங்கு இல்லை.
கிராமப்பஞ்சாயத்தில் உள்ளடங்கிய பனிரெண்டு கிராமங்களின் பெயரும் கரும்பலகையில் எழுதப்பட்டது. அந்தந்த கிராமத்தில் பணி நடைபெறும் போது பணிகளை யார் பொறுப்பெடுத்து பார்த்துக் கொள்வது என்கிற பட்டியல் அப்பொழுதே தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்துக்கும் இரண்டிலிந்து ஐந்து பேர் வரை கொண்ட குழு அது. பணி நடக்கும் போது அங்கேயே இருந்து முழுமையாகக் கண்காணித்து கணக்கு எழுதி வைத்துக் கொள்கிற பொறுப்பு அவர்களுடையது. இந்தத் தன்னார்வலர் குழுவினருக்கு உதவியாக ஐந்து பேர்களைக் கொண்ட கிராமப்பணிக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. பணி நடைபெறும் போது இந்தக் குழு ஒருங்கிணைப்பாளராகவும், பொறுப்பாளர்களாகவும் செயல்படுவார்கள்.
மாலையில் அரசு தாமஸும் நானும் நீதிபதி பழனிவேலு அவர்களைச் சந்தித்தோம். வட்டாரம் முழுமைக்கும் அவர்தான் பொறுப்பு. ஊர் இளைஞர்களைப் பற்றிச் சொன்ன போது ‘நிஜமாவே அவ்வளவு ஆர்வமா இருக்காங்களா?’என்று நம்ப முடியாமல் கேட்டார். நாங்களே இவ்வளவு பெரிய உற்சாகத்தை எதிர்பார்த்துச் செல்லவில்லை என்றோம். அடுத்த ஞாயிறன்று (ஏப்ரல் 16) நீதிபதியை வைத்தே பணியைத் தொடங்குகிறோம். வருவாய்த்துறை, பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலிருந்தும் அனுமதி பெற்றுத் தரும் வேலையை நீதிபதி பார்த்துக் கொள்வார்.
ஜேசிபிக்கு ஒரு மணி நேரத்துக்கு எழுநூறு ரூபாய் வாங்குகிறார்கள். வேமாண்டம்பாளையத்தில் அறுநூற்று இருபத்தைந்து ரூபாய் கொடுத்தோம். இந்த கிராமத்தில் அறுநூற்று ஐம்பது ரூபாய். உள்ளூர்காரரிடமே வண்டி இருக்கிறது. குட்டைகளைச் சுத்தம் செய்து ஆழப்படுத்துவதிலிருந்து வேலையைத் தொடங்குகிறோம்.
பணி நடைபெறும் போதே ஆங்காங்கே செடிகளையும் நடுகிறோம். செடி நடுவதற்கான பொறுப்பை திரு.கார்த்திகேயன் எடுத்துக் கொண்டார். நடப்படுகிற செடிகளுக்கு நீர் ஊற்றுவதற்கான வண்டியை மூன்று மாதங்களுக்குத் தருவதாக அங்கேயிருந்த வாழ்க வளமுடன் அமைப்பைச் சார்ந்த பெரியவர் ஏற்றுக் கொண்டார். இந்த வறட்சியிலும் தனது தோட்டத்திலிருந்து தினசரி ஒரு லாரி தண்ணீர் தருவதாக உள்ளூர்க்காரர் ஏற்றுக் கொண்டார் கொண்டார். செடி நடப்பட்ட பிறகு அவற்றைக் கண்காணிக்கும் வேலையை ஊர்க்குழுவே பார்த்துக் கொள்ளும்.
வேறு என்ன வேண்டும்?
முதல் பத்தியில் சொன்னது போல பணம் பிரச்சினையில்லை. அது தானாக வந்து சேரும். உள்ளூர்காரர்களின் ஆர்வமும் உற்சாகமும்தான் முக்கியம். அதை ஒழலக்கோயிலில் பார்க்க முடிந்தது. ‘நம்ம ஊர்’ என்று களமிறங்கியிருக்கிறார்கள். எண்ணி இருபத்தைந்து நாட்கள். ஒழலக்கோயில் பஞ்சாயத்தை அட்டகாசப்படுத்திவிடலாம்.
9 எதிர் சப்தங்கள்:
அருமையான செய்தியை தந்துள்ளீர்கள்....உங்கள் கட்டுரை "அடிச்சு தூள் கிளப்புவோம்" படித்த முடித்த பிறகு ஒரு பெறும் நிம்மதி கிடைத்து.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இதன் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
ஒரு சரியான திட்டத்தை தேர்ந்து எடுக்க உதவிய உங்களின் எங்களின் கோடான கோடி நன்றிகள்.
ஒன்றுபடுவோம், தமிழகம் செலுத்திட படுபோடுவோம்.
அன்புடன்
மணி
நம்பிக்கை விழுதுகள் குழு - சிகாகோ
Super Mani...
Keep it up....
இபபொழுதுதான் புரிகிறது சரியானதொரு வழிகாட்டுதல் இருந்தால் நம் இளைஞாகள் அற்புதமான செயல்களைச் செய்துகாட்டுவார்கள்.இந்த முன்னேரைத் தொடர்ந்து பின்னேர்களும் செயல்பட இறைவன் துணைபுரிவான்
நான் இதுவரை படித்த உங்கள் எழுத்தில் இக்கட்டுரை தந்த நிம்மதியும் சந்தோசமும் அளவில்லாதது.
அடிச்சு தூள் கெளப்புங்க மணி
Mr Manikandan please note the tree sapling plantation is normally done during the rainy season. hence plan for plantation thenand not during the summer / ry seasn. your concentration should be on clearing the Bushes and desilting of the water bodies
// (ஏகாம்பரம் படம் போட்டு விளக்குகிறார்)//
வா.மணிகண்டன் ங்கறது புனை பெயரா?. இம்புட்டு நாளா தெரியாம இருந்துருக் "கேனே"
Congrats Mani for d initiation. Will it extend to other districts
Good leaders are need of the hour. Wish you success in your endeavor, Save our earth.
Post a Comment