Apr 7, 2017

குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?

தமிழகத்தில் சில விசித்திரமான அரசாங்க விதிகள் உண்டு. பள்ளிகளின் வேலை நாட்களும் கூட அப்படியொரு விசித்திரம்தான். கல்லூரிகள் வருடத்தில் 180 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும். உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகள் என்றால் இருநூறு நாட்கள். ஆரம்பப்பள்ளிகள் என்றால் இருநூற்றியிருபது நாட்கள். பெரிய மாணவர்களை வகுப்பறைகளில் இருக்கச் செய்தால் அர்த்தமிருக்கிறது. ஆனால் அவர்களை விட்டுவிடுகிறார்கள். ஐந்தாம் வகுப்பு வரைக்குமான குழந்தைகளை இருநூற்றியிருபது நாட்களுக்கு அடைத்து வைத்து அட்டகாசம் செய்கிறார்கள். அது என்ன 220 நாள் கணக்கு என்று தெரியவில்லை. இந்த விதியின்படி ஏப்ரல் கடைசி வரைக்கும் ஆரம்பப் பள்ளிகள் செயல்பட வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு வந்தாக வேண்டும்.

தமிழ்நாட்டில் இப்பொழுதே வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருக்கிறது. நேற்றைய வெப்ப நிலையை கவனித்தீர்களா? கரூரில் 107 டிகிரி. வேலூரில் 105 டிகிரி. கோயமுத்தூரில் கூட 101 டிகிரி. கிட்டத்தட்ட தமிழகம் முழுக்கவுமே இதுதான் வெப்பநிலை. தகித்துக் கொண்டிருக்கிறது. பகல் பொழுதில் தலை காட்ட முடிவதில்லை. இந்த வெப்பத்தில் இன்னமும் 23 நாட்கள் குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும். வகுப்பறையில் சக மாணவர்களின் மூச்சுச் சூட்டில் நொந்து போக வேண்டும்.



பாவம். விட்டுவிடலாம்.

நேற்று ஒரு நண்பருடன் பேச வேண்டியிருந்தது. கூலித் தொழிலாளி. அவரது குழந்தை அரசுப் பள்ளியில் படிக்கிறது. பேசிக் கொண்டிருந்த போது மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார். விசாரித்தால் குழந்தைக்கு உடல் முழுவதும் கோடைக் கொப்புளங்கள் வந்திருப்பதாகச் சொன்னார். நிலைமை புரிந்து சில தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் பேசினால் அவர்களும் அதையேதான் சொல்கிறார்கள். இந்த வெக்கையைக் குழந்தைகளால் சமாளிக்க முடிவதில்லை. துவண்டு கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் அருகருகே அமர்வதால் கிருமித் தொற்றும் இயல்பாக நடைபெறுகிறது. ஏகப்பட்ட குழந்தைகளுக்கு கோடை கொப்புளம், அம்மை என்று பரவிக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான மாவட்டங்களில் நிலைமை இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. குழந்தைகளைக் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஏப்ரல் தொடக்கத்திலேயே விடுமுறையளித்துக் குழந்தைகளை வீட்டில் இருக்கச் சொல்லிவிடுவதுதான் நல்லது. பெங்களூரு மாதிரியான வெப்பம் குறைவான நகரங்களில் கூட இப்படியான முறை இருக்கும் போது தமிழகம் போன்ற எண்ணெய்ச்சட்டி மாநிலங்களில் ஏப்ரல் மாதத்திலேயே விடுமுறை அளிப்பதில் தவறொன்றுமில்லை. குழந்தைகள் வீட்டிலேயே இருந்தால் மதியவாக்கில் ஒரு முறை குளிக்கச் சொல்லி, நிறைய தண்ணீர் குடிக்க வற்புறுத்தி என தத்தமது குழந்தையை பெரும்பாலான பெற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எல்லாவற்றையும்விட வெப்பகால நோய் பரவலையும் பெருமளவில் தடுக்க முடியும்.

தகிக்கும் கோடையில் குழந்தைகளுக்கு அம்மையும், உடற்சூடும், கொப்புளங்களும் வந்து அவதிப்படுவதைக் காட்டிலும் வேறு என்ன துன்பத்தைத் தந்துவிட முடியும்? உப்புச்சப்பில்லாத பத்தியச் சோறு, மின்சாரம் தடைப்பட்ட பகற்பொழுதுகள், காய்ச்சல், வெளியில் செல்ல அனுமதியில்லாத படுக்கை, குளிக்காத வியர்வை முடை என்று பிஞ்சுகள் கசங்கிப் போவார்கள். வாழ்நாளுக்கும் மறக்க முடியாத நாட்களை அமைத்துக் கொடுத்தது போலாகிவிடும்.

தமிழ்நாட்டில்தான் எட்டாம் வகுப்பு வரைக்கும் தேர்வுகள் இல்லாத தேர்ச்சி ஆயிற்றே? இன்னமும் இருபது நாட்கள் கூடுதலாக இருந்து மட்டும் என்ன பலன்? இந்த இருபது நாட்களில் கூடுதலாக எதைக் கற்றுக் கொடுத்துவிடப் போகிறோம் என்று யோசிக்க வேண்டிய தருணமிது. இயற்கை வறுத்தெடுக்கும் போது அதற்கேற்ப முடிவு எடுப்பதுதான் உசிதம். வெப்பத்தை பெரியவர்கள் சமாளித்துக் கொள்வார்கள். குழந்தைகளால் இயலாத காரியம். இன்றைய வெப்பம் எப்படியிருக்கிறது என்பதுதான் நமக்கே தெரியுமே.

இப்போதைக்கு வெயில் குறைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. நாளுக்கு நாள் ஏறிக் கொண்டேதான் இருக்கிறது. இந்தக் கோடையில் குழந்தைகளை வாதிக்க வேண்டியதில்லை. அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கட்டும். இன்னுமொரு இருபது நாட்களுக்கு அவர்களைக் கூடுதலாகப் பள்ளிக்கு வரச் செய்து நாம் பெரிதாக எதையும் சாதிக்கப் போவதுமில்லை. தமிழகம் முழுவதும் ஆரம்பப்பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிப்பதுதான் சரியான முடிவாக இருக்கும்.

ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியகளும் ஆசிரியர்களும் இதில் எதுவும் செய்வதற்கில்லை. 220 நாட்கள் வகுப்புகளை நடத்தியே தீர வேண்டும் என்பது அவர்களுக்கு தரப்பட்டிருக்கும் உத்தரவு. அதை அவர்களால் மீற முடியாது. அரசாங்கம்தான் கவனிக்க வேண்டும். யாராவது கல்வியமைச்சரிடமும் அதிகாரிகளிடமும் சொல்ல வேண்டும். ஊடகங்கள் எழுத வேண்டும். ஒருவேளை, இருநூற்றியிருபது நாட்கள் செயல்பட வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்த முடியாது என்றால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து போக வேண்டும் என உத்தரவிட்டுவிடலாம். அவர்களுக்குத்தான் புள்ளிவிவரம் சேகரிக்கும் வேலை வருடம் முழுக்கவும் இருக்கிறதே. அதை அவர்கள் செய்து கொண்டிருக்கட்டும். பிஞ்சுக் குழந்தைகளுக்கு விடுமுறை விட்டுவிடலாம். 

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

sathiskumar education said...

Different method of teaching in various level followed by tn govt ...for age upto age 5 kindergarten ..tis is not compulsary for all age 5 to 10 is
1st standard they followed ABL method... this method full of activity and various level of learning process so only this level children must attend 220 days age 11 to 16 alm method sand plus one plus two is a junior colleges so they dont want more working days...


And high heat is raised this year only starting march ... heat increse agarathuku school days ah kami pananum nu illa namba environment pollution panitu ippa working days ah kami pana solrathu rna nayam...

Govt school saturday and sunday leave...


Saturday workung day pana .. march la irrunthey leave vidalam... neriya reasons irruku ji...

நாச்சியப்பன் said...

எல்லாம் சரி. அது என்ன 101 டிகிரி, 105 டிகிரி. பாரன்ஹீட் அளவு இந்தியாவில் கிடையாது, அமெரிக்காவில்தான் என நினைத்திருந்தேன். இந்தியா SI அளவுகளை 1955-62 கால கட்டத்திலேயே பாராளுமன்ற சட்டம் மூலமாக அமுல் படுத்தியது. நம் நாட்டில் இன்னும் இந்த குழப்பங்கள் நிறைய உள்ளன. பாரன்ஹீட், அடி , கன அடி, TMC , இவையெல்லாம் கல்வி திட்டத்தில் இன்னுமா இருக்கின்றன? ஏன் ஊடகங்கள் (தி ஹிந்து உட்பட) இந்த குழப்பத்தை அதிகமாக்குகின்றன? குறைந்த பட்சம் நிசப்தம் இணைத்தளமாவது இக்குழப்பத்தை தவிர்க்கலாமே?

Jasper said...

தனியார் பள்ளிகள் கூட தற்போதெல்லாம் தமிழ் புத்தாண்டு முன் வரை செயல் படுகின்றன. CBSE பள்ளிகள் ஏப்ரல் இறுதி வரை.