Apr 26, 2017

கைதி

தினகரனை வளைத்துவிட்டார்கள். சசிகலாவுக்கு பெங்களூர், தினகரனுக்கு டெல்லி திகார் என்று அதிமுகவை கைப்பற்ற நினைத்தவர்களையெல்லாம் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பணமும் கட்சிப் பதவியும் மட்டுமே அதிகாரத்தை எதிர்த்து அரசியல் செய்வதற்கு போதுமானதாக இருக்காது என்பதை தினகரனும் சசிகலாவும் உணர்த்தியிருக்கிறார்கள். ஒருவேளை இவர்கள் இருவரும் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தால் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கக் கூடும். வெறும் பணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்துவிடலாம் என்று நினைக்கிறவர்களுக்கு சசிகலாவும், தினகரனும் உதாரணங்களாக இருப்பார்கள். 

இன்று சசிகலாவின் பதாகைகளையும் அதிமுகவின் தலைமையகத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இப்போதைக்கு மன்னார்குடி குடும்பம் தலையெடுக்க வாய்ப்பில்லை. ஓ.பி.எஸ் அணியும் அவர்களை உள்ளெ விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஒருவேளை 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஜக தன் பிடியை இழக்குமானால் சசிகலாவின் குடும்பம் தலையெடுத்துவிடும் என்று சிலர் கணிக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கும் கூடத் தேவையே இருக்காது போலத் தோன்றுகிறது. மீதமிருக்கும் இரண்டரை ஆண்டுகளில் நசுக்கித் தள்ளிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். அதற்கான முஸ்தீபுகள்தான் இவையெல்லாம். 

எப்படியும் இனி அடுத்தடுத்து வரவிருக்கின்ற தேர்தகளில் அதிமுக அடி வாங்கும். அப்படியொரு சூழல் வந்து ‘அதிமுகவை காப்பாற்ற வழியில்லை’ என்கிற சூழலில் மீண்டும் மன்னார்குடி குடும்பத்தை உள்ளே இழுத்து வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதுவரை அதிமுக இதே வலுவோடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அஸ்திவாரத்தை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவை வலுவிழக்கச் செய்து உருவாக்கப்படும் இந்த வெற்றிடத்திற்குத்தான் பாஜக குறி வைக்கிறது. தமிழக அரசியலின் மிகப்பெரிய வெற்றிடத்தை தமதாக்கிக் கொள்கிற வேறு அரசியல் இயக்கங்களே இங்கு இல்லை என்பது துரதிர்ஷ்டம்தான். கடந்த முப்பதாண்டு காலமாக ‘ஒன்னா நீ; இல்லன்னா நான்’ என்று கலைஞரும் ஜெவும் செய்த அரசியலின் விளைவு இது. மூன்றாவது ஓராள் தலையெடுக்கவே விடாமல் செய்துவிட்டார்கள். அந்த இடத்தை பாஜக வளைக்க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. எதிர்த்து நிற்கும் எவருக்கும் இந்த கதிதான் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் என்பது சாமானியர்கள் வேடிக்கை பார்க்க சுவாரசியமான களம். எது வேண்டுமானாலும் நிகழலாம். வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்.

சசிகலா சிறையில் என்ன செய்து கொண்டிருப்பார்? தினகரன் என்ன செய்வார் என்று நினைப்புகள்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவுடன் ஒட்டிக் கொண்ட முப்பதாண்டு காலத்தை சசிகலா அசை போட்டுக் கொண்டிருக்கக் கூடும். எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் அது? எத்தனை பேர்களை வதைத்து இருப்பார்கள்? மிரட்டி உருட்டப்பட்டவர்களின் கணக்கு எவ்வளவு? ஆசிட் வீச்சு, செருப்படி, அடக்குமுறை, நிலம் பறிப்பு என்று தாம் செய்த ஒவ்வொரு காரியமும் மனக்கண்ணில் வந்து போகாதா? எல்லாவற்றுக்கும் கணக்கு இருக்கிறது. 

மனதில் இத்தகைய எண்ணங்கள் ஓடும் போது மனநிலைக்கு ஏற்ப படம் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்று நினைப்பேன். சிறைச்சாலை சம்பந்தப்பட்ட படங்களை இணையத்தில் தேடிய போது 'A Prophet' சிக்கியது. 2009 ஆம் ஆண்டு வெளியான ப்ரெஞ்ச் படம். 

தினகரன், சசிகலாவையெல்லாம் மறந்துவிட்டு படத்தைப் பார்க்க வேண்டும். அற்புதமான படம். காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதற்காகக் கைது செய்யப்பட்ட அரபு இளைஞனுக்கு ஆறாண்டு காலம் சிறைத்தண்டனை கொடுத்து சிறையில் அடைக்கிறார்கள். அவன் அல்ஜீரியன்- யுவராஜ் சிங் மாதிரி இருக்கும் அந்த நடிகன் யார்? பட்டையைக் கிளப்புகிறார். அந்த சிறைச்சாலையில் இரண்டு குழுக்கள் இருக்கின்றன. இசுலாமிய குழு ஒன்று. கர்சியன் குழு ஒன்று. கர்சியன் குழு வலுவானது. அந்தக் குழுத் தலைவன் சக அரேபியக் கொல்லச் சொல்லி நாயகனை மிரட்டுகிறது. வேறு வழியில்லாமல் அவனைக் கொல்கிறான். 

இந்தக் கொலை நாயகனை கர்சியன் குழுவில் நெருக்கமாகச் செய்கிறது. கர்சியன் குழுத் தலைவனுக்காக ஒன்றிரண்டு முறை வெளியில் சென்று வருகிறான். அதற்கான அனுமதியையும் குழுத்தலைவனே பெற்றுத் தருகிறான். வெளியே சென்று வருகிறவன் தனக்கான தொழிலை வெளியுலகில் நிர்மாணித்துக் கொள்கிறான். இதற்கு மேல் கதையைச் சொல்ல வேண்டியதில்லை. படம் இணையத்திலேயே கிடைக்கிறது. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

துருத்தல் இல்லாமல் நகர்கின்ற கதை பார்வையாளனை நகரச் செய்யாமல் பிடித்துக் கொள்கிறது. சிறைக்குள் வருகின்றவனின் மனநிலை, தன்னைக் காத்துக் கொள்ள வேண்டிய அழுத்தம், தன்னை பாலியல் உறவுக்கு அழைத்தவனையே அடுத்தவர்களின் அழுத்தத்திற்காக கொலை செய்த பிறகு அவனது மனநிலை, செத்தவன் எப்பொழுதும் தன்னுடனாக இருக்கும் நினைவுகள், முதன் முறையாக வெளியுலகத்தைப் பார்ப்பது, உருவாகும் நண்பன், அவனது குடும்பம் என நிறைய பாத்திரங்களையும் காட்சிகளையும் அருமையாகப் பின்னியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாட்டு சிறைக்கும் ஒவ்வொரு விதி. இந்தியாவில் அவ்வளவு சீக்கிரம் சிறைச்சாலையை விட்டு வெளியேற முடியாது- ஆனால் பரப்பன அக்ரஹாரா மாதிரியான சிறைச்சாலைகளில் பல கைதிகள் சகஜமாக வெளியில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். நீண்ட காலக் கைதிகள் அவர்கள். சிறை வளாகத்தில் வேலைகளைச் செய்துவிட்டு இரவில் தமது அறைக்குச் சென்று படுத்துக் கொள்வார்கள். தப்பித்துச் செல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கை வந்த பிறகு இப்படி வெளி வேலைகளுக்கு அனுமதிப்பார்கள். ‘தப்பிச்சுடலாம்ன்னு ஆசை இல்லையா?’ என்று கேட்டால் தப்பித்துச் சென்று பயந்து பயந்து நடுங்கிப் பதுங்கி, ஒருவேளை சிக்கிக் கொண்டால் எதிர்காலம் முழுவதும் சிறைக்குள்ளேயே கிடக்க வேண்டும். அதற்கு இது எவ்வளவு சுதந்திரம்? 

ஏழைகள், வசதி இல்லாதவர்களுக்கு இப்படியான வாய்ப்புகள் எனில் பணக்காரர்களுக்கும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் வேறு மாதிரியான விதிவிலக்குகள் உண்டு. பெங்களூரு சிறையில் ரெட்டி இருந்த போது இரவில் ஆம்புலன்ஸில் வெளியேறி தனது வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு அதிகாலையில் ஊர் விழிப்பதற்குள் வேறொரு ஆம்புலன்ஸில் வந்து படுத்துக் கொள்வார் என்ற வதந்தி இருந்து கொண்டிருந்தது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. ஆனால் பணம் இருந்தால் ஓரளவுக்கேனும் வளைத்துவிடலாம்.

சசிகலாவும் தினகரனும் புழலிலும் கோவைச் சிறையிலும் இல்லாமல் பெங்களூரிலும் திகாரிலும் அடைக்கப்படுவதும் கூட அரசியல்தானே? 

அவர்கள் எப்படியோ போகட்டும். A Prophet ஐ பார்த்துவிடுங்கள்.

4 எதிர் சப்தங்கள்:

செல்வன் said...

இதனை வாசிக்கும் பொழுது எனக்கு பட்டாம்பூச்சி நாவலும் அதைச் சார்ந்து வந்த Papillon திரைப்படமும் நினைவுக்கு வருகிறது.

Aravind said...

2g வழக்கில் சாதகமாந தீர்ப்பு வர ஸ்டாலிந் லங்ஜம் குடுத்தார்நு ஒருத்தன சொல்லவச்சிட்டா பாஜாகாவுக்கு தமிழ்ணாடு அன்னப்போஸ்ட்டா கிடச்சிரும் எதிரியே இல்லாமல். மன்னார்குடியை ஆதரிக்கலை. அவைங்க செங்ஜ அட்டூளியங்களுக்கு இயர்க்கை வச்ச செக் பாஜாகா. பாஜாகாவுக்கும் வல்லவனுக்கு வல்லவன் வைய்யத்துள் உண்டு என்ரு ஒரு பெரிய ஆப்பு னிச்சயம் வரும். னாம் எங்ஜாய் பன்னலாம் பார்வையாளநாக.

சேக்காளி said...

// எதிர்த்து நிற்கும் எவருக்கும் இந்த கதிதான் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.//
நிதிசாலும், மம்தாவாலும் எப்படி எதிர்நீச்சல் அடிக்க முடிகிறது?.இங்கே இருப்பவர்களுக்கு பணத்தை காக்க வேண்டும் என்ற ஆசை.

சேக்காளி said...

//தமிழக அரசியலின் மிகப்பெரிய வெற்றிடத்தை தமதாக்கிக் கொள்கிற வேறு அரசியல் இயக்கங்களே இங்கு இல்லை என்பது துரதிர்ஷ்டம்தான்//
ஆனால் உருவாகாது என எப்படி சொல்ல முடியும்.சட்டசபை தேர்தல் முடிந்த போது இன்றைய தமிழக அரசியல் நிலையை யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா?