Apr 28, 2017

பொர்க்கி

இப்பொழுதெல்லாம் வாரம் ஒரு விருது அறிவிப்பு வந்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலான விருதுகளை யாருமே பொருட்படுத்துவதில்லை. ‘கொடுக்குறியா? நீ யாருக்குக் கொடுப்பேன்னு தெரியும்... கொடுத்துட்டு போ’ என்கிற மனநிலைதான் நிலவுகிறது. வெகுஜன சமூகத்தின் இத்தகைய மனப்போக்கு விருது வழங்குகிறவர்களுக்கு பதற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. அதுவும் விருது கொடுப்பவர்கள் இலக்கியக் காவலர்களாகவும் விளம்பர மோகம் கொண்டவர்களாகவும் இருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. புலி வருது கதையாக ஏதாவது முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்கள். எப்படியாவது சர்ச்சையை உண்டாக்கி கவனத்தை தம் மீது குவியச் செய்துவிடுவதிலும் குறியாக இருக்கிறார்கள்.

இந்த வருடம் சுஜாதா விருது அறிவிப்பை ஒட்டி நடக்கும் சர்ச்சைகளை அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் பேசி இதைப் பேசி கடைசியில் தமக்கான கவன வெளியை உண்டாக்குவதற்காக சுஜாதாவை இழுத்துத் தெருவில் விட்டிருக்கிறார்கள். ‘சுஜாதா சாதியே பார்க்கவில்லை’ என்று ஒரு தரப்பு ஊதிப் பெருக்க ‘அவர் ஒரு சாதி வெறியன்’ என்று இன்னொரு குழு கிளம்ப கடைசியில் எல்லோருமாகச் சேர்ந்து அந்த மனிதனை அம்மணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாவம் அந்த ஒல்லிப்பிச்சான் வாத்தியார். தமது பெயரில் விருது வழங்கச் சொல்லி அவர் கேட்டாரா என்ன?

ஒரு விருது வழங்கப்படும் போது விருது யாருடைய பெயரால் வழங்கப்படுகிறதோ அவரையே அசிங்கப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கித் தருவதுதற்கு என்ன பெயர்? அவரது படைப்புகளை விட்டுவிட்டு தனிமனித வசைகளை முன்வைப்பதற்காக களம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு தமக்கான விளம்பரத்தைத் தேடிக் கொண்டு குளிர்காய்வதுதானே பச்சைவாதம்? உலக இலக்கியம் வாசிக்கிறோம் என்கிறார்கள். புத்தகங்களைக் கரைத்துக் குடிக்கிறோம் என்கிறார்கள். பொதுவெளியில் விவாதிக்கிறோம் என்று மார் தட்டுகிறார்கள். இந்த அடிப்படை கூடத் தெரியாதா என்ன? இவ்வளவுதான் பக்குவம்.

கடங்கநேரியான் எனது நட்புப் பட்டியலில் இருக்கிறார். சிறுபத்திரிக்கை மனநிலை கொண்டவர். தமக்கு ஒவ்வாததை எந்தத் தயக்கமுமில்லாமல் அப்பட்டமாக வெளிப்படுத்துகிற மனநிலை அது. விடாமல் கலாய்த்துக் கொண்டிருப்பார். அவரை மனுஷ்ய புத்திரன் இணையப் பொறுக்கி என்று எழுதுகிறார். தமக்கு ஒவ்வாத கருத்தைச் சொல்கிறவர்களை பொறுக்கி என்று விளிப்பது எந்தவிதத்தில் நியாயம்? ஒரு விருது வழங்கப்படும் போது ஆளாளுக்கு எதையாவது சொல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாதா?

தமக்குக் கீழாக வாலைச் சுழற்றிக் கொண்டேயிருப்பவர்களை ஊக்குவிப்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. வாலைச் சுழற்றுகிறவர்களின் சுயமரியாதை சார்ந்தது. அது பற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் தம்மை விமர்சிப்பவர்களைப் பொறுக்கி என்று எழுதுவதற்கான உரிமையை யார் கொடுத்தார்கள்? இனி கடங்கநேரியான் விடமாட்டார். சிலம்பம் ஆடுவார். அதைத்தான் மனுஷ்ய புத்திரன் எதிர்பார்க்கிறார். Negative publicity.

கடந்த பல ஆண்டுகளாக சுப்பிரமணியசாமி செய்வதும் இதைத்தான். திடீரென்று சம்பந்தமேயில்லாமல் சட்டையைப் பிடித்து இழுத்து ஒரு குத்துவிடுவது. குத்து வாங்கியவன் கூட்டம் சேர்த்துவிடுவான். ‘நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்கோ..ஆனா என்னைப் பற்றி பேசு’ என்று சுயகுவியம் சார்ந்து அலைகிறவர்களுக்கு சமூக ஊடகங்கள் நன்றாகத் தீனி போட்டு வளர்க்கின்றன. அதை இவர்களும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

கிளப்பிவிடப்பட்ட உரையாடல் திசை மாறுவது பற்றியும், தனிமனிதத் தாக்குதலாக உருக்கொள்வது குறித்தும் யாருக்கும் எந்தக் கவலையுமில்லை. ‘என்னைப் பார்’ ‘என்னைப் பார்’ என்று அடித்து ஆடிக் கொண்டேயிருப்பார்கள். வேறொரு பிரச்சினை கிடைத்தால் அப்படியே போட்டுவிட்டு அங்கே போய் நின்று கொள்வார்கள்.

இலக்கிய விவாதம் என்ற பெயரில் படைப்புகளை முன்வைத்து உண்டாக்கப்படும் வாதங்களும் பிரதி வாதங்களும் அர்த்தமுள்ளவை. ஆரோக்கியமானவை. உரையாடல்களின் வழியாக பார்வையாளர்களுக்கு வேறொரு புரிதல் உண்டாகும். உரையாடலில் பங்கேற்பவர்களும் இன்னொரு கட்டத்திற்கு நகர்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அத்தகைய constructive உரையாடல்கள்தான் இலக்கியத்திற்கு ஏதாவதொரு வகையில் பங்களிப்பைச் செய்யக் கூடியவை. இப்போதைய சச்சரவில் எங்கேயாவது விருது பெற்ற ஏதேனுமொரு படைப்பு பற்றி எழுதப்பட்டிருக்கிறதா? துழாவிப் பார்த்தால் ‘ஏய்...ங்கோ...நான் யார் தெரியுமா?’ என்கிற ரீதியில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். காலிப் பெருங்காய டப்பாவை உருட்டிவிட்டு அதன் மீது ‘இலக்கிய சர்ச்சை’ என்று லேபிள் வேறு குத்துகிறார்கள். கண்றாவி.

எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். எதையாவது சொல்லப் போக நம்மையும் திட்டுவார்கள். அதற்கு பதில் சொல்வதற்கு மெனக்கெட வேண்டும். உண்மையில் கச்சடா இது. கையை நீட்டாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் கையை அரிக்க வைக்கிறார்கள். சுஜாதா எனக்கு ஆதர்சம். என்னைப் போன்ற பலருக்கும் அவர்தான் ஆதர்சம். அவர் பெயரில் விருது வழங்கினாலும் வழங்காவிட்டாலும் அவரது புகழ் வெளிச்சம் அப்படியேதான் இருக்கும். எங்கேயாவது ஒரு வாசகனை சப்தமில்லாமல் வாசிப்பு நோக்கி இழுத்துக் கொண்டேதான் இருப்பார். இப்படியெல்லாம் அவரை அவமானப்படுத்தி முச்சந்தியில் நிறுத்துவதற்குப் பதிலாக அவர் பெயரில் விருது வழங்குவதையே நிறுத்திவிடலாம். 

இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ப்ரனீதாவோட அப்பாவா?

‘ஆஸ்பத்திரியில் இருக்கேன்...பனசங்கரி வரைக்கும் வர முடியுமா?’ என்றார் ஒரு நண்பர். வனதேவதை என்பதுதான் பனசங்கரி. அந்தக் காலத்தில் வனமாக இருந்திருக்கிறது. இன்று வனம் இல்லை. அந்த தேவதையின் கோவில் இருக்கிறது. நண்பருக்கு பெரிய உடல்நிலைப் பிரச்சினை எதுவுமில்லை. ஆனால் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று சொல்லி அழைத்த பிறகு வர முடியாது என்று சொல்வது நன்றாக இருக்காது. நண்பர் பரிசோதனைகளுக்காக உள்ளே சென்றிருந்தார். இந்த மாதிரியான இடங்களில் பொழுது போவதுதான் பெரும் பிரச்சினை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுத்தம் செய்பவர்கள் என்று யாரையாவது பிடித்து மொக்கை போட வேண்டும். அப்படி ஒரு தமிழர் சிக்கினார். மருத்துவமனையின் ஊழியர் அவர்.

காதில் ரத்தம் வராத குறைதான். எனக்கு இல்லை- அவருக்கு. ராவித் தள்ளிவிட்டேன். நானாக ராவ வேண்டும் என்று நினைக்கவில்லை. ‘ப்ரனீதா இருக்காங்க இல்ல? இது அவங்க ஆஸ்பத்திரிதான்’ என்று சொல்லி அவராகத்தான் மாட்டிக் கொண்டார். 

‘நடிகை ப்ரனீதாவா?’ என்றேன். அப்பொழுதாவது அவர் சுதாரித்திருக்க வேண்டும். ஆமாம் என்று சொல்லிவிட்டார். விடுவேனா? தோண்டித் துருவிவிட்டேன்.


முன்பொரு காலத்தில் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன் அல்லவா? அப்பொழுது எனது கவிதையிலும் ஒரு பெண் பாத்திரம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். நகுலன் கவிதைகளில் வருகிற சுசீலா மாதிரியும், கலாப்ரியாவின் கவிதைகளில் இருக்கிற சசி மாதிரியும் நமக்கென்று ஒரு ஆள் தேவை என்று யோசித்த தருணத்தில் ஹைதரபாத்தில் உடன் பணியாற்றிய ஒரு பூனைக்குட்டியின் பெயர் ப்ரனீதா. ஆள் சிக்குட்டியாக இருப்பாள். ஆனால் ஒரு க்யூட்னெஸ் இருக்கும். அதன் பிறகு அவளது பெயரை வைத்து ஒரு கவிதை எழுதி அது பிரசுரமாகி அதை அவளிடம் காட்டி அதை அவள் மொழி பெயர்த்துத் தரச் சொல்ல நான் விழி பிதுங்கியதெல்லாம் வேறு கதை. ‘நூல் விட்டிருக்கான் பாரு’ என்று கிசுகிசுக்காதீர்கள். அப்பொழுதே அவளுக்கு ஒரு காதலன் இருந்தான். பைக்கில் வந்து அலுவலகத்திற்கு முன்பாக நிற்பான். அவள் பின்புறமாக அமர்ந்து அவனைக் கட்டியணைத்துக் கொள்வான். எப்படியும் சறுக்கி விழுவார்கள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே நிற்பேன். அவன் கிராதகன். ஒரு தடவை கூட கீழே விழவே இல்லை.

நம் ஒவ்வொருவராலும் பால்யத்திலிருந்து இன்றுவரையிலும் ‘பிடித்த பெயர்கள்’ என்று பட்டியலிட முடியும். அப்படியான பெயர்களோடு சேர்த்து ஒரு முகமும் நினைவில் வந்து போகும். அது ஒரு கவித்துவத் தருணம். எனக்கு இப்படியாகப் பிடித்தமான பெயர்கள் நிறைய இருக்கின்றன. ஷீபா என்ற பெயர் பிடிக்கும். எட்டாம் வகுப்பில் அவளை ஒரு தலையாகக் காதலித்தேன் ஷீபாவுக்குப் பிறகு, ஷோபனா, மேனகா, நித்யா, ஸ்ரீவித்யா என்று எத்தனையோ பேர்கள். ஆனால் யாருமே என்னைக் காதலிக்கவில்லை. யாருக்குமே நான் காதலித்தது கூடத் தெரியாது. கடைசியில் வேணிதான் காதலித்தாள். அவளுக்கு வேறு வழியே இல்லை. காதலித்துதானே ஆக வேண்டும்? ஆனால் நமக்குப் பிடித்தமான ஒவ்வொரு பெயரையும் எங்கேயாவது எதிர்கொள்ளும் போது நாம் விரும்பிய அந்த முகமும் மின்னல் வெட்டுவது போல வந்து போய்க் கொண்டிருக்கின்றன. நமக்கு அந்தப் பெயரைப் பிடித்துப் போவதற்கு காரணமானவர்கள் உருமாறி இருக்கலாம். கிழடு தட்டி, உருவம் பெருத்து, தோல் சுருங்கி எப்படியோ இருக்கக் கூடும். ஆனால் நம் மனக்குகைக்குள் பதிந்து கிடக்கும் அந்த முகங்கள் அதே அழகுடனும் அதே வசீகரத்துடனும் அதே துல்லியத்துடனும் உறைந்து போய்க் கிடக்கின்றன. பனி நிரம்பிய உறைபெட்டியில் வைத்த புதுக்கனியைப் போல.

பெயர் என்பது வெறும் சொல் இல்லை. அதுவொரு மந்திரம்.

திருமணத்திற்குப் பிறகும் கூட சிறுகதையிலும் கவிதையிலும் ப்ரனீதா என்ற பெயரைப் பயன்படுத்தினேன். கணவர்களுக்கு எந்தப் பெண்களைப் பிடிக்கிறதோ அந்தப் பெண்களை மனைவிகளுக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. அதனாலேயே ‘காஜல் அகர்வால் நல்லாவே இல்லை. அனுஷ்கா குண்டு. தமன்னா வெள்ளை கரப்பான் பூச்சி’ என்று உடான்ஸ் விட வேண்டியதாக இருக்கிறது. அப்பொழுதுதான் சேனல் மாற்றப்படுவதில்லை. அப்படித்தான் ப்ரனீதாவையும் கைவிட வேண்டியதாகிவிட்டது.

நடிகை ப்ரனீதாவின் அப்பா, அம்மா, அக்காவோ தங்கையோ- லீனா- அவரும் மருத்துவர் எனக் குடும்பமே மருத்துவர்கள். 

பெங்களூரில் மாடலிங், சினிமா என்ற ஆசையில் இருக்கும் வசதியான பெண்களைச் சந்தித்திருக்கிறேன். ‘யோசிச்சு முடிவு செய்யுங்க’ என்று மட்டும் சொல்வேன். அவர்கள் ஏற்கனவே முடிவெடுத்திருப்பார்கள். குறுக்கே நின்றாலும் தாண்டிச் செல்வார்கள்.

சிலர் மட்டும்தான் நயன்தாராவாகவும், த்ரிஷாவாகவும்  முடிகிறது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் அதன் வெளிச்சமும் புகழும் எப்பொழுதுமே ஈர்ப்பு மிக்கவை.   

அறிவுரைதான் சொல்வேனே தவிர நடிகர் நடிகையர் என்று தெரிந்துவிட்டால் எப்படியாவது தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கும்தான் மனம் குறுகுறுக்கிறது. ஆரம்பத்தில் கேட்டதற்கெல்லாம் பதில் சொன்ன ஊழியர் பிறகு ஒரே பதிலையே திரும்பத் திரும்பச் சொன்னார்.

‘அவங்க ஏன் டாக்டர் ஆகலை?’ என்றேன். 

‘எனக்குத் தெரியலைங்களே’ என்றார்.

‘இப்போ எங்க இருக்காங்க?’

‘ஷூட்டிங் போயிருக்காங்க’

‘எந்த ஊருக்கு?’

‘எனக்குத் தெரியலைங்களே’

‘அவங்க கவர்ச்சியா நடிக்கிறதை எப்படி அம்மா அப்பா ஏத்துக்கிறாங்க?’ 

‘எனக்குத் தெரியலைங்களே’

இதுக்கு மேல் அவரிடம் பேசினால் கடுப்பாகிவிடுவேன் எனத் தோன்றியது. 

‘யோவ் போய்யா’ என்று நினைத்துக் கொண்டேன். 

ப்ரனீதாவின் அப்பா வெளியே வந்தார். ‘நீங்க ப்ரனீதாவோட அப்பாவா?’ என்று கேட்கலாம் என்று நினைத்தேன். ‘அவ என் மக’ என்று கடுப்பாகிவிடக் கூடும் என்று அமைதியாக இருந்து கொண்டேன். 

இந்தக் கவிதையை எழுதிய தருணம் இன்னமும் நினைவில் இருக்கிறது. புது எழுத்து இதழில் பிரசுரமானது.

பறவைகள் நகர்ந்துவிட்ட வானம்

ம‌ழை பெய்து 
தெளிந்திருந்த‌ வான‌த்தில்
மூன்று ப‌ற‌வைக‌ள் 
ப‌ற‌ந்து கொண்டிருந்தன.

ப்ர‌னீதா
வேறு ஊருக்குச் செல்வ‌தாக‌ச் சொன்னாள்.
கார‌ண‌ம் எதுவும் சொல்ல‌வில்லை.

புன்ன‌கை
க‌ண்ணீர்
துக்க‌ம்
எதுவுமில்லாமல் மெள‌ன‌மாயிருந்தேன்.

ந‌னைந்திருந்த‌ செடியில்
இலைக‌ளை ப‌றித்துக் கொண்டிருந்தவள்-
நேர‌மாகிவிட்ட‌து என்று
ந‌க‌ர‌த் துவ‌ங்கினாள்.

மூன்று ப‌ற‌வைக‌ள்
இருந்த‌ இட‌த்தில்
இப்பொழுது
மேக‌த்திட்டு வ‌ந்திருந்த‌து.

Apr 27, 2017

பறவையின் விழி வழியே...

• நிசப்தம் அறக்கட்டளை 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

• ஏழைகளுக்கான கல்வி மற்றும் மருத்துவ உதவி ஆகியவற்றோடு சேர்த்து பன்முனை சமூக மேம்பாடு என்பதையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.

• அறக்கட்டளையின் அடிப்படையான பலமாக அதன் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் அறக்கட்டளையின் வரவு செலவுக்கணக்கு (Bank Statement) பிரதியெடுக்கப்பட்டு பொதுவெளியில் (இணையத்தில்) பிரசுரம் செய்யப்படுவதோடு வருடந்தோறும் வருமான வரி முறையாகத் தாக்கல் செய்யப்படுகிறது.

• NGO என்பதாக இல்லாமல் நிசப்தம்.காம் இணையதளத்தை வாசிக்கும் வாசகர்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் அதன் நேர்மைத்தன்மையையும் புரிந்து கொண்டு வழங்கும் நன்கொடையிலிருந்து மட்டுமே நலத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

• அறக்கட்டளை வழியாக இன்று வரை கிட்டத்தட்ட எழுபத்தைந்து லட்ச ரூபாய்க்கான நலப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பயனாளியும் தன்னார்வலர்களால் வெகு தீவிரமாக அலசப்பட்டு தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். 

• பெற்றோர் இல்லாத, பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மாணவர்கள் சற்றேறக்குறைய நாற்பது பேருக்கு படிப்புச் செலவை நிசப்தம் அறக்கட்டளை செய்து வருகிறது. 

• ஏழை மக்களின் மருத்துவ உதவிகளுக்காக பல லட்ச ரூபாய் நிதி மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டிருக்கிறது. தாலசீமியாவால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்குத் தலா ஒரு லட்ச ரூபாய், நிறை மாத கர்ப்பிணிக்கு உண்டான கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்ச ரூபாய், ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட எழுபதாயிரம் ரூபாய் ஆகியவற்றை சில உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

• தமிழக கிராமப்புறங்களில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நூலகம் அமைத்தல் (தலா பத்தாயிரம் ரூபாய்), மாணவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள் (தலா பத்தாயிரம் ரூபாய்), பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களுக்கான ஓராண்டுச்  சம்பளம் (தலா ஐம்பதாயிரம் ரூபாய்) , தொடுதிரை வகுப்பறைகளை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

• வைரவிழா முதனிலைப்பள்ளி, கோபிபாளையம் புனித திரேசாள் ஆரம்பப்பள்ளி ஆகியவற்றிலும், லட்சுமி மில்ஸ் ஆரம்பப்பள்ளியிலும் தலா ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான தொடுதிரை வகுப்பறைகள் (Smart class) அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

• கடலூர், சென்னை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஆடு மாடுகள், தையல் எந்திரங்கள், தொழிற்கருவிகள் என அவர்களது தொழில்களை மேம்படுத்தும் விதமாக கிட்டத்தட்ட நாற்பது லட்ச ரூபாய்க்கான உதவிகள் வழங்கப்பட்டன.

• எம்.ஜி.ஆர் காலனியில் நரிக்குறவர் இனக் குழந்தைகள் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெறுவதற்கும், போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கான பொருளாதார உதவிகளையும் அறக்கட்டளை செய்து கொண்டிருக்கிறது. பயிற்சி பெறுவதற்கான சாதனங்கள் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கின்றன.

• ஒய்ஸ்மென் சங்கத்துடன் சேர்ந்து வேமாண்டம்பாளையம் பஞ்சாயத்து முழுவதும் சீமைக்கருவேல மரம் ஒழிப்புக்காக நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்திருக்கின்றன.

• ஈரோடு மாவட்டம் ஒழலக்கோயில் பஞ்சாயத்தில் பசுமை மீட்பு செயல்பாடாக வேலிக்காத்தான் மரங்களை அழித்து, குளம் குட்டைகளை மேம்படுத்தி, மரங்கள் நடுவதற்காக அமெரிக்காவிவின் சிகாகோ வாழ் தமிழர்கள் மூலம் ஒன்றரை லட்ச ரூபாய் திரட்டப்பட்டு பணிகள் முழு வீச்சாக நடைபெற்று வருகின்றன. 

• இவை தவிர ப்ளஸ் டூ மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சிகள், வாசகர்களை மாணவர்களுக்கான வழிகாட்டிகளாகச்(mentor) செயல்படச் செய்தல், சூழலியல் செயல்பாடுகள் என பல தளங்களிலும் செயல்பட்டு வருகிறது.

• அறக்கட்டளைக்கு வரும் ஒவ்வொரு ரூபாயும் பயனாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் இருப்பதனால் அறக்கட்டளைக்கு என தனி அலுவலகம், ஊழியர்கள் என்கிற வகைகளில் எந்தச் செலவுக்காகவும் நன்கொடையிலிருந்து நிதி எடுக்கப்படுவதில்லை.  

(வார இறுதியில் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படிச் சந்திக்கும் போது இதுவரையிலும் நாம் செய்த பணிகளின் தொகுப்பு கைவசமிருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அப்படித் தொகுப்பட்ட விவரங்கள் மேலே இருப்பவை. நிசப்தத்திலும் பதிவு செய்து வைத்துவிடலாம். இங்கே இல்லாமல் வேறு எங்கு?)

Apr 26, 2017

கைதி

தினகரனை வளைத்துவிட்டார்கள். சசிகலாவுக்கு பெங்களூர், தினகரனுக்கு டெல்லி திகார் என்று அதிமுகவை கைப்பற்ற நினைத்தவர்களையெல்லாம் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பணமும் கட்சிப் பதவியும் மட்டுமே அதிகாரத்தை எதிர்த்து அரசியல் செய்வதற்கு போதுமானதாக இருக்காது என்பதை தினகரனும் சசிகலாவும் உணர்த்தியிருக்கிறார்கள். ஒருவேளை இவர்கள் இருவரும் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தால் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கக் கூடும். வெறும் பணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்துவிடலாம் என்று நினைக்கிறவர்களுக்கு சசிகலாவும், தினகரனும் உதாரணங்களாக இருப்பார்கள். 

இன்று சசிகலாவின் பதாகைகளையும் அதிமுகவின் தலைமையகத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இப்போதைக்கு மன்னார்குடி குடும்பம் தலையெடுக்க வாய்ப்பில்லை. ஓ.பி.எஸ் அணியும் அவர்களை உள்ளெ விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஒருவேளை 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஜக தன் பிடியை இழக்குமானால் சசிகலாவின் குடும்பம் தலையெடுத்துவிடும் என்று சிலர் கணிக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கும் கூடத் தேவையே இருக்காது போலத் தோன்றுகிறது. மீதமிருக்கும் இரண்டரை ஆண்டுகளில் நசுக்கித் தள்ளிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். அதற்கான முஸ்தீபுகள்தான் இவையெல்லாம். 

எப்படியும் இனி அடுத்தடுத்து வரவிருக்கின்ற தேர்தகளில் அதிமுக அடி வாங்கும். அப்படியொரு சூழல் வந்து ‘அதிமுகவை காப்பாற்ற வழியில்லை’ என்கிற சூழலில் மீண்டும் மன்னார்குடி குடும்பத்தை உள்ளே இழுத்து வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதுவரை அதிமுக இதே வலுவோடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அஸ்திவாரத்தை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவை வலுவிழக்கச் செய்து உருவாக்கப்படும் இந்த வெற்றிடத்திற்குத்தான் பாஜக குறி வைக்கிறது. தமிழக அரசியலின் மிகப்பெரிய வெற்றிடத்தை தமதாக்கிக் கொள்கிற வேறு அரசியல் இயக்கங்களே இங்கு இல்லை என்பது துரதிர்ஷ்டம்தான். கடந்த முப்பதாண்டு காலமாக ‘ஒன்னா நீ; இல்லன்னா நான்’ என்று கலைஞரும் ஜெவும் செய்த அரசியலின் விளைவு இது. மூன்றாவது ஓராள் தலையெடுக்கவே விடாமல் செய்துவிட்டார்கள். அந்த இடத்தை பாஜக வளைக்க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. எதிர்த்து நிற்கும் எவருக்கும் இந்த கதிதான் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் என்பது சாமானியர்கள் வேடிக்கை பார்க்க சுவாரசியமான களம். எது வேண்டுமானாலும் நிகழலாம். வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்.

சசிகலா சிறையில் என்ன செய்து கொண்டிருப்பார்? தினகரன் என்ன செய்வார் என்று நினைப்புகள்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவுடன் ஒட்டிக் கொண்ட முப்பதாண்டு காலத்தை சசிகலா அசை போட்டுக் கொண்டிருக்கக் கூடும். எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் அது? எத்தனை பேர்களை வதைத்து இருப்பார்கள்? மிரட்டி உருட்டப்பட்டவர்களின் கணக்கு எவ்வளவு? ஆசிட் வீச்சு, செருப்படி, அடக்குமுறை, நிலம் பறிப்பு என்று தாம் செய்த ஒவ்வொரு காரியமும் மனக்கண்ணில் வந்து போகாதா? எல்லாவற்றுக்கும் கணக்கு இருக்கிறது. 

மனதில் இத்தகைய எண்ணங்கள் ஓடும் போது மனநிலைக்கு ஏற்ப படம் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்று நினைப்பேன். சிறைச்சாலை சம்பந்தப்பட்ட படங்களை இணையத்தில் தேடிய போது 'A Prophet' சிக்கியது. 2009 ஆம் ஆண்டு வெளியான ப்ரெஞ்ச் படம். 

தினகரன், சசிகலாவையெல்லாம் மறந்துவிட்டு படத்தைப் பார்க்க வேண்டும். அற்புதமான படம். காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதற்காகக் கைது செய்யப்பட்ட அரபு இளைஞனுக்கு ஆறாண்டு காலம் சிறைத்தண்டனை கொடுத்து சிறையில் அடைக்கிறார்கள். அவன் அல்ஜீரியன்- யுவராஜ் சிங் மாதிரி இருக்கும் அந்த நடிகன் யார்? பட்டையைக் கிளப்புகிறார். அந்த சிறைச்சாலையில் இரண்டு குழுக்கள் இருக்கின்றன. இசுலாமிய குழு ஒன்று. கர்சியன் குழு ஒன்று. கர்சியன் குழு வலுவானது. அந்தக் குழுத் தலைவன் சக அரேபியக் கொல்லச் சொல்லி நாயகனை மிரட்டுகிறது. வேறு வழியில்லாமல் அவனைக் கொல்கிறான். 

இந்தக் கொலை நாயகனை கர்சியன் குழுவில் நெருக்கமாகச் செய்கிறது. கர்சியன் குழுத் தலைவனுக்காக ஒன்றிரண்டு முறை வெளியில் சென்று வருகிறான். அதற்கான அனுமதியையும் குழுத்தலைவனே பெற்றுத் தருகிறான். வெளியே சென்று வருகிறவன் தனக்கான தொழிலை வெளியுலகில் நிர்மாணித்துக் கொள்கிறான். இதற்கு மேல் கதையைச் சொல்ல வேண்டியதில்லை. படம் இணையத்திலேயே கிடைக்கிறது. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

துருத்தல் இல்லாமல் நகர்கின்ற கதை பார்வையாளனை நகரச் செய்யாமல் பிடித்துக் கொள்கிறது. சிறைக்குள் வருகின்றவனின் மனநிலை, தன்னைக் காத்துக் கொள்ள வேண்டிய அழுத்தம், தன்னை பாலியல் உறவுக்கு அழைத்தவனையே அடுத்தவர்களின் அழுத்தத்திற்காக கொலை செய்த பிறகு அவனது மனநிலை, செத்தவன் எப்பொழுதும் தன்னுடனாக இருக்கும் நினைவுகள், முதன் முறையாக வெளியுலகத்தைப் பார்ப்பது, உருவாகும் நண்பன், அவனது குடும்பம் என நிறைய பாத்திரங்களையும் காட்சிகளையும் அருமையாகப் பின்னியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாட்டு சிறைக்கும் ஒவ்வொரு விதி. இந்தியாவில் அவ்வளவு சீக்கிரம் சிறைச்சாலையை விட்டு வெளியேற முடியாது- ஆனால் பரப்பன அக்ரஹாரா மாதிரியான சிறைச்சாலைகளில் பல கைதிகள் சகஜமாக வெளியில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். நீண்ட காலக் கைதிகள் அவர்கள். சிறை வளாகத்தில் வேலைகளைச் செய்துவிட்டு இரவில் தமது அறைக்குச் சென்று படுத்துக் கொள்வார்கள். தப்பித்துச் செல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கை வந்த பிறகு இப்படி வெளி வேலைகளுக்கு அனுமதிப்பார்கள். ‘தப்பிச்சுடலாம்ன்னு ஆசை இல்லையா?’ என்று கேட்டால் தப்பித்துச் சென்று பயந்து பயந்து நடுங்கிப் பதுங்கி, ஒருவேளை சிக்கிக் கொண்டால் எதிர்காலம் முழுவதும் சிறைக்குள்ளேயே கிடக்க வேண்டும். அதற்கு இது எவ்வளவு சுதந்திரம்? 

ஏழைகள், வசதி இல்லாதவர்களுக்கு இப்படியான வாய்ப்புகள் எனில் பணக்காரர்களுக்கும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் வேறு மாதிரியான விதிவிலக்குகள் உண்டு. பெங்களூரு சிறையில் ரெட்டி இருந்த போது இரவில் ஆம்புலன்ஸில் வெளியேறி தனது வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு அதிகாலையில் ஊர் விழிப்பதற்குள் வேறொரு ஆம்புலன்ஸில் வந்து படுத்துக் கொள்வார் என்ற வதந்தி இருந்து கொண்டிருந்தது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. ஆனால் பணம் இருந்தால் ஓரளவுக்கேனும் வளைத்துவிடலாம்.

சசிகலாவும் தினகரனும் புழலிலும் கோவைச் சிறையிலும் இல்லாமல் பெங்களூரிலும் திகாரிலும் அடைக்கப்படுவதும் கூட அரசியல்தானே? 

அவர்கள் எப்படியோ போகட்டும். A Prophet ஐ பார்த்துவிடுங்கள்.

Apr 25, 2017

படிப்புகளை பட்டியலிடுதல்

அநேகமாக அடுத்த மாதம் பனிரெண்டாம் வகுப்பிற்கான முடிவுகள் வந்துவிடக் கூடும். கடந்த சில நாட்களாக பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள்/மாணவிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். கடந்த வருடம் ‘எப்படிப் படிப்பது’ உள்ளிட்ட சில பயிற்சி வகுப்புகளை நடத்தியிருந்தோம். அந்தத் தொடர்பின் காரணமாக அழைக்கிறார்கள். 

தேர்வுகள் முடிந்து இன்று வரைக்கும் விளையாட்டு, தொலைக்காட்சி என்று இருந்தாகிவிட்டது. மாணவர்கள் இதுவரை எதிர்கொண்ட பல வருட அழுத்தங்களுக்கு இந்த ஓய்வு அவசியமானதுதான். இனி அவர்கள் சில வேலைகளைச் செய்ய வேண்டும். 

தேர்வு முடிவுகள் வரும் வரைக்கும் பின்வரும் காரியங்களைச் செய்து கொண்டிருப்பது அவசியம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். குறிப்பிட்ட படிப்புக்கு என்றில்லாமல் பின்வரும் அணுகுமுறை  அனைத்து பிரிவுகளுக்கும்/பாடங்களுக்கும் பொதுவானது.

1) எவ்வளவு மதிப்பெண் வரும் என்பதை ஓரளவுக்குக் கணித்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கணிப்பு பாடம் வாரியாக இருக்கட்டும். அப்படிக் கணித்து வைப்பது நம்முடைய மதிப்பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய பாடங்களை ஓரளவு வட்டமிடுவதற்கு உதவும். ஒருவேளை தாம் எதிர்பார்க்கும் கணிக்க முடியவில்லையென்றாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. பின்வருவனவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

2) தமக்கு படிப்பதற்கு வாய்ப்புள்ள பாடங்கள் என்ன என்பதைத் தேடிப் பட்டியலிடத் தொடங்க வேண்டும். ‘எனக்கு படிப்புகளைப் பற்றித் தெரியாதே’ என்று பயப்பட வேண்டியதில்லை. ஆசிரியர்கள், நண்பர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் எனத் தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரிக்கலாம்.  அப்படி விசாரிக்கும் போது ‘நீ இந்தப் படிப்பைப் படிக்க வேண்டும்’ என்று அடுத்தவர்கள் சொல்கிற அறிவுரையை இந்தத் தருணத்தில் முற்றாகப் புறக்கணித்துவிட வேண்டும். நமக்கான வாய்ப்புகள் என்பதில் மட்டும்தான் இப்பொழுது தேடிக் கொண்டிருக்கிறோமே தவிர முடிவு செய்யப் போவதில்லை என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

3) தகவலைச் சேகரிக்கும் போது ஒருவருக்கே அனைத்து படிப்புகளைப் பற்றியும் தெரியும் என்ற நம்பிக்கையை ஒழித்துவிட வேண்டும். உதாரணமாக வனவியல் (Forestry) படிப்பைப் பற்றிச் சொல்லக் கூடியவருக்கு மீன்கள் சம்பந்தமான படிப்பு (Fishery) இருப்பது தெரியாமல் இருக்கலாம். எனவே எவ்வளவு பேரிடம் பேசித் தகவல்களைச் சேகரிக்க இயலுமோ அவ்வளவு பேரிடம் பேசித் தகவல்களைச் சேகரித்து வைக்க வேண்டும்.

4) பொறியியல் படிப்பில் ஆர்வமிருப்பின் வெறுமனே கம்யூட்டர், கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் என்று மட்டும் யோசிக்காமல் அதில் இருக்கும் அனைத்து பிரிவுகளைப் பற்றியும் பட்டியலிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். 

5) வெறுமனே படிப்புகளை மட்டும் தெரிந்து கொள்ளாமல், அந்தப் படிப்பில் இளநிலை படிப்பு மட்டும் போதுமா அல்லது முதுநிலை படிக்க வேண்டுமா, அந்தப் படிப்புகளுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பனவற்றையும் பட்டியலிட்டு வைத்துக் கொள்வது நல்லது.

5) படிப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு நாம் தயாரித்து வைத்திருக்கும் அதே பட்டியலில் குறிப்பிட்ட படிப்புகள் எந்தக் கல்லூரியில் நடத்தப்படுகின்றன என்பதையும் அங்கு வருடத்திற்கு எவ்வளவு செலவாகிறது (விடுதிச் செலவையும் சேர்த்து) எவ்வளவு ஆகும் என்பதையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பல தரமற்ற கல்லூரிகளை வடிகட்டுவதற்கு இது அவசியம்.

6) படிப்பு, கல்லூரி, செலவு ஆகியவற்றைப் பற்றிய பட்டியலைத் தயாரிக்கும் போதே நமக்கு ஓரளவுக்குத் தெளிவு கிடைத்துவிடும். பாடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக இந்தத் தெளிவு ஒவ்வொரு மாணவனுக்கும் அவசியம். ‘எதற்காக இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தாய்’ என்று யாராவது கேட்டால் ஐந்து நிமிடங்களாவது பதில் சொல்லுகிற தெளிவுதான் நாம் சரியான படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதற்கான சாட்சி. இதுதான் நம் எதிர்காலம் என்பதில் கவனமாக இருங்கள்.

7) நாம் பட்டியலிட்டு வைத்திருக்கும் படிப்புக்கான விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும் என்ற விவரத்தையும் கைவசம் வைத்துக் கொள்வது எல்லாவற்றையும் சுலபமாக்கி வைக்கும்.

மேற்சொன்ன பட்டியலைத் தயாரிப்பதற்காக ஒரு வார அவகாசத்தை எடுத்துக் கொள்ளலாம். படிப்பு, கல்லூரி, செலவு, விண்ணப்பம் ஆகிய விவரங்களைப் பட்டியலிட்ட பிறகு அடுத்த கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு நம்முடைய விருப்பத்தைச் சுருக்கலாம். சுருக்கலாம் என்பது ‘இதிலிருந்து எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது’ என்று சுருக்குவது. மேற்சொன்ன பட்டியல் தயாரிப்பு என்பது கடலிலிருந்து மீன்களை அள்ளியெடுப்பது போல. இதன் அடுத்த கட்டம் நமக்கான மீன் வகையை மட்டும் பொறுக்கியெடுப்பது. 

மாணவர்களில் பலரும் இப்பொழுதே ‘இந்தப் படிப்புதான்’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ‘ஏன் இந்தப் படிப்பை முடிவு செய்திருக்கிறாய்?’ என்று கேட்டால் பதில் இல்லை. இவ்வளவு அவசரமாக முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இன்னமும் நேரமிருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்னார்கள், எதிர்வீட்டில் இருப்பவர்கள் படிக்கிறார்கள் என்று நம் வட்டத்தைச் சுருக்கிக் கொள்ள வேண்டியதில்லை.  நம்மைச் சுற்றிலும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றை அலசுவது முக்கியம். பரவலாக வெளியில் தெரியாத படிப்பை படித்துவிட்டு அட்டகாசமாக வாழ்வில் வென்றவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் விழுகிறார்கள் என்று நாமும் ஒரே குட்டையில் விழ வேண்டியதில்லை. வேலைச் சந்தையில் போட்டியே இல்லாத படிப்புகள் நிறைய இருக்கின்றன. அவற்றை நோக்கி நம் பார்வையைச் செலுத்த வேண்டும்.

படிப்படியாகச் செய்யலாம். படிப்புக்காகச் செய்யலாம்

தொடர்புக்கு...
vaamanikandan@gmail.com

சிறைச்சாலை

நேற்று ஒருவரைச் சந்தித்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. மத்திய சிறைகளில் சமூக நல அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். ஏற்கனவே பேசியிருக்கிறோம். அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியாது. ‘சிறைக்கு வர்றவங்கள்ல நிறையப் பேரு socially handicapped' என்றார். அந்தச் சொல்லின் அர்த்தத்தை புரிந்து கொள்ள மெனக்கெட வேண்டியதில்லை. ஆனாலும் அவர் ஒரு கதையையும் சொன்னார்.

முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவம் அது. கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு பங்காளியின் குடும்பத்துடன் வரப்புத் தகராறு. கோவிந்தசாமி கல்யாணமாகாத இளைஞன். கோபமும் வன்மமும் உள்ளுக்குள் ஊறிக் கொண்டேயிருக்க பகைமையும் தீவிரமாகியிருக்கிறது. ஒரு நாள் இரவில் தீட்டிய அரிவாளை எடுத்துச் சென்று பங்காளி வீட்டிலிருந்து ஐந்து பேர்களையும் வெட்டிக் கொன்றுவிட்டான். தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையும் ஒன்று. தடுக்க வந்த நாயும் தப்பிக்கவில்லை. கிராமங்களில் தோட்டங்களில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் ஒவ்வொன்றுக்குமிடையில் தூரம் அதிகம் என்பதால் அலறல் யாருக்கும் கேட்கவில்லை. வெட்டிக் கொன்றுவிட்டு அரிவாளை எங்கோ பதுக்கிவிட்டுச் சென்று தூங்கிவிட்டார்.

அடுத்த நாள் விஷயம் வெளியே தெரிந்து ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்த போது கோவிந்தசாமி மட்டும் வந்து பார்க்கவில்லை. ஏற்கனவே பங்காளித் தகராறு பற்றித் தெரிந்து கொண்ட போலீஸ் சந்தேகத்தின் பேரில்தான் கைது செய்கிறார்கள். வழக்கு நடைபெறுகிறது. சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து வெளியே வந்துவிடுகிறார் கோவிந்தசாமி. ‘கோவிந்தசாமிதான் கொலை செய்தார் என்பதற்கான சாட்சிகளும் நிரூபிக்க முகாந்திரங்களும் இல்லை’ என்று செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்துவிடுகிறது. வெளியே வந்தவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி திருமணம் செய்து இரண்டு குழந்தைகளும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த வரைக்கும் எல்லாம் சுபம்.

திடீரென்று ஒரு பால்காரருடன் சண்டை வருகிறது. கோவிந்தசாமிக்கு கோபம் தலைக்கேற ‘அஞ்சு பேர வெட்டிக் கொன்னதே நான்தான்..உன்னைக் கொல்ல எத்தனை நேரமாகும்’ என்று மிரட்ட அவர் அப்படியே காவல்துறையில் ஒப்பித்துவிட்டார். வந்து சேர்ந்தது விவகாரம். பால்காரரின் புகாரை வைத்து வழக்கைத் தூசி தட்டிய காவல்துறை மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறது. அதன் பிறகு கோவிந்தசாமியால் தப்பிக்க முடியவில்லை. உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்க அதையை உறுதி செய்து உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

கருணை மனுவை மாநில ஆளுநர் நிராகரித்தார். பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்த போது கருணை மனு ஏற்கப்பட்டது. ஆனால் ‘சாகும் வரைக்கும் சிறையிலேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார். சமீபத்தில் கோவை மத்திய சிறையிலேயே இறந்து போனார் கோவிந்தசாமி.

இந்தக் கதையில் கோவிந்தசாமியைத்தான் கவனிப்போம். அவரது குழந்தைகள்?

கொலைகாரன் குழந்தைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் பேசுவார்கள். ஒதுக்கி வைப்பார்கள். வருமானமும் இல்லையென்றால் வாழ்க்கையை நடத்துவதே சிரமமாகிவிடுகிறது. இப்படி சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடப்பதை ‘socially handicapped' என்றார். 

‘கஷ்டப்படுறவங்க படிப்புக்கு நீங்க உதவுறது பத்திக் கேள்விப்பட்டேன்...இந்த மாதிரியானவர்களின் குழந்தைகள் நிறைய இருக்காங்க’ என்றவர் ‘பெரியவங்க செஞ்ச தப்புக்கு அவங்க குழந்தைகளும் பாதிக்கப்படுறாங்க’ என்றார். கோவை மத்திய சிறையில் மட்டும் இரண்டாயிரம் கைதிகள் இருக்கிறார்கள். புழல், வேலூர், மதுரை, பாளையங்கோட்டை என்று கணக்குப் போட்டால் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். ஆனால் கைதிகளைப் பார்க்க எல்லோரையும் அனுமதிப்பதில்லை. 

‘கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ விரும்புகிறோம்’ என்று விண்ணப்பம் தர வேண்டும். அதை சிறைத்துறை பரிசீலித்து சிபிசிஐடி போலீஸார் மூலம் நம்மை விசாரித்து அவர்கள் தரக் கூடிய முடிவுகளின்படியில் அனுமதியளிப்பார்கள். முரடர்களும் திருடர்களும் இருந்தாலும் எப்படியாவது சிக்கிக் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். வழக்கு நடத்த வசதியில்லாதவர்கள், சந்தர்ப்பவசத்தால் சிக்கிக் கொண்டவர்கள், தங்களின் கைதுகளால் பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என்று அவரிடம் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. நிறையச் சொல்லிக் கொண்டிருந்தார்.

கைதிகளுடனான அனுபவம், அவர்களது மனநிலை என்றெல்லாம் பேசவும் நிறைய இருக்கின்றன. அவர் பணியில் இருந்த போது செல்போன்கள் இல்லை என்பதால் கடிதங்கள் வழியான தகவல் தொடர்புதான் வழி. அனைத்துக் கடிதங்களும் தணிக்கை செய்யப்படும். அதை சமூக நல அலுவலர்தான் செய்வாராம். ‘நீங்க நல்லவன்னு சொல்லி அனுப்பி வெச்சீங்க..அவன் வந்து ஒரு ராத்திரி தங்கிட்டு போய்ட்டான்’ என்று மனைவி கணவனுக்கு எழுதிய கடிதங்களையெல்லாம் நினைவுபடுத்திச் சொன்னார்.

பொதுவாகவே கைதாகி உள்ளே வரும் முதல் பதினைந்து நாட்களுக்கு கைதிகள் கடுமையான மன உளைச்சலில் இருப்பார்களாம். ‘அய்யோ இப்படி ஆகிடுச்சே’ என்கிற மனநிலை. உணவு உறக்கம் என எதுவுமே பிடிக்காது. அப்படியான ஆட்களைக் குறி வைத்து நெருங்குகிற கைதிகள் மனதுக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டி முகவரியை வாங்கிக் கொள்வதும் வெளியே செல்லும் போது ‘அவர் சொல்லி அனுப்பினார்’ என்று சொல்லி பணம் வாங்குவது, ‘தங்கிச் செல்வது’ என்பதெல்லாம் நடந்துவிடுகிற சாத்தியங்கள் இருப்பதையெல்லாம் கதை கதையாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

கைதாகி வரும் முதல் தினத்தன்றே ‘இங்க எவனும் யோக்கியன் இல்ல..யார்கிட்டவுன் அட்ரஸைக் கொடுத்துடாதீங்க...அப்புறம் என்ன வேணும்ன்னாலும் நடக்கும்’ என்று கவுன்சிலிங் கொடுப்பாராம். அவரிடம் பேசுவதற்கு இன்னமும் நிறைய இருக்கின்றன. இனி ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் பேச வேண்டும். ‘Socially handicapped- ஞாபகம் வெச்சுக்குங்க’ என்றார். ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். சிறையில் ஒரு விண்ணப்பமும் கொடுத்து வைக்கலாம் என்று தோன்றுகிறது. 

‘அடுத்த முறை கோவை வரும் போது சொல்லுங்க..சிறைக்கு அழைத்துச் செல்கிறேன்’என்று சொல்லியிருக்கிறார். 

கோபியிலிருந்து கிளம்பும் போதே ‘ஏ..பார்த்துக்குங்க நானும் ரவுடிதான்’ என்று கத்திக் கொண்டே செல்ல வேண்டும்.

Apr 22, 2017

ஒன்றே முக்கால் துளி

ஓரிரு மாதங்களுக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறைய பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் ‘நாங்கள் செய்து கொண்டிருக்கும் எந்தச் செய்தியும் பத்திரிக்கையில் வர வேண்டாம். செய்திகளை வெளியிடச் சொல்லியும் உங்களைச் சந்திக்கவில்லை. ஓர் அறிமுகத்துக்கான சந்திப்புதான் இது. ஜூன் மாதம் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை ஆரம்பமாகும். தகுதியான மாணவர்களின் கோரிக்கை வந்தால் சொல்லுங்கள்’ என்றுதான் பேசினேன். இதை வெளிப்படையாக எழுத வேண்டியதில்லை என நினைத்திருந்தேன். ஆனால் எழுத வேண்டும் போலிருக்கிறது.

இதுவரையிலும் எப்படிக் கணக்குப் போட்டாலும் கிட்டத்தட்ட எழுபத்தைந்து லட்ச ரூபாய்க்கான பணிகளையாவது நிசப்தம் அறக்கட்டளை வழியாகச் செய்திருக்கிறோம். கடலூர் சென்னை வெள்ள சமயத்தைத் தவிர வேறு எப்பொழுதும் துண்டுச் செய்தி கூட நாளிதழ்களில் வந்ததில்லை. வெள்ளத்தின் போதும் கூட பத்திரிக்கையாளர்களாக வந்து பார்த்து எழுதியவைதான். பத்திரிக்கைகளில் செய்தி தர முடியாது என்றில்லை- அவசியமில்லை என்கிற எண்ணம்தான்.

இத்தகைய விளம்பரங்களும் செய்திகளும் நம்மைப் பற்றிய எந்தப் புரிதலுமில்லாத ஒரு கூட்டத்துக்கு தேவையில்லாத எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். அப்படியான விளம்பரங்களின் வழியாக நம்மைப் பற்றித் தெரியாதவர்களுக்கு நாம் உருவாக்கக் கூடிய எதிர்பார்ப்புகளும் குழப்பங்களை உண்டாக்கக் கூடியவை. நிசப்தம் என்பது சிறு வட்டம். அது மெல்ல மெல்ல விரிவடையட்டும். அப்படி மெல்ல விரிவடையும் போது நம் வட்டத்திற்குள் இருக்கும் அத்தனை பேருக்குமே நமது செயல்பாடுகள் குறித்தான பரிச்சயம் இருக்கும். அப்படியான புரிதல் மிகுந்தவர்களுக்குள் செயல்படுவதுதான் திருப்தியும் சந்தோஷமும்.

அதனால்தான் அதீத வெளிச்சமும் பத்திரிக்கைச் செய்திகளும் தேவையற்றவை என நினைக்கிறேன். 

நாம் செய்து கொண்டிருக்கிற காரியங்களை வெளிப்படையாகவும் அதே சமயம் விரிவாகவும் அடுத்தவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய தேவை இருக்கிறதுதான். ஆனால் எதையெல்லாம் சொல்ல வேண்டும், யாரிடம் சொல்ல வேண்டும் என்கிற அளவீடுகள் இருக்கின்றன. முன்னிலைப்படுத்த வேண்டியவற்றை முன்னிலைப்படுத்தியும், நம்மை ஒளித்துக் காட்டிக் கொள்ள வேண்டிய இடத்தில் ஒளித்துக் காட்டிக் கொள்வதும் அவசியமாக இருக்கிறது. செய்தித்தாள்களிலும் நாளிதழ்களிலும் விளம்பரம் செய்து கடை பரப்ப வேண்டியதில்லை. இத்தகைய காரியங்களை அப்படியான விளம்பரத்திற்கு செய்வதாக இருப்பின் செய்கிற முறையும் அணுகுமுறையுமே வேறாக இருக்கும். ட்யூப்லைட்டில் ‘உபயம்: பெருமாள் சாமி, மூலைக்கடை வீதி, தூக்கநாய்க்கன்பாளையம்’ என்று செல்போன் எண்ணோடு எழுதுவதற்கும் நாளிதழ்களில் ஜிகினா ஒட்டுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை என்று நம்புகிறேன்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் இதுவரைக்கும் விசிட்டிங் கார்ட், லெட்டர் பேட் என்று கூட எதுவும் வைத்துக் கொண்டதில்லை. அதுவே கூட மறைமுகமான விளம்பரம்தானே? பகட்டோடும் விளம்பரத்தோடும் காரியங்களைச் செய்தால் அடுத்தடுத்து செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் மனம் விளம்பரத்தைத்தான் எதிர்பார்க்குமே தவிர, திருப்தியை எதிர்பார்க்காது. 

நிசப்தம் எப்படிச் செயல்படுகிறது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். நன்கொடையாளர்களிடமிருந்து வருகின்ற நிதியை வைத்துக் கொண்டு நாம் முடிவு செய்யும் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. (Crowd funding). இதுவரையிலும் ‘இந்தக் குறிப்பிட்ட பணிக்கு இந்த நிதியை ஒதுக்குங்கள்’ என்று எந்த நன்கொடையாளரும் சொன்னதில்லை. நானும் அதைச் செய்ததில்லை. சமீபத்தில் அப்படி ஒரு காரியத்தை ஒத்துக் கொண்டேன். அதைப் பற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை. 

ஒவ்வொரு களமும் ஒரு அனுவம்தான். இனிமேல் இப்படி ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அவரவரவருக்கு அவரவர் விருப்பங்கள். சிலருக்கு நிழற்படங்கள் அவசியமாக இருக்கும். சிலருக்கு பத்திரிக்கைகளில் செய்தி வர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். வாட்ஸப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பரவ வேண்டும் என்று விரும்புவார்கள். அவரவருக்கான நிர்பந்தங்கள், அபிலாஷைகள் அவை. அதற்கெல்லாம் நாம் முதுகைக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நமது நோக்கமும் எண்ணமும் கூட திசை மாறிவிடக் கூடும். 

எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அமைதியாக தோள் கொடுக்கக் கூடிய மனிதர்கள் பல நூறு பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் நமக்குச் சரி. அவர்கள் போதும். எப்பொழுதும் சொல்வது போல - நிசப்தம் என்பது பணத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்து தரும் NGO இல்லை. 

நேற்று வந்திருந்த மின்னஞ்சல் இது- 

அன்புள்ள மணி,

முன்பே சொன்னது போல ரூ 1,10,000 நிசப்தம் அறக்கட்டளைக்கு அனுப்பி உள்ளேன். சரி பார்த்துக் கொள்ளவும். வேலைப் பளு காரணமாக இந்த தாமதம். வழமை போல பெயர் மறைத்து விடவும்.

நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளையும் இறைவன் துணையிருந்து வழிநடத்தவும், உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கவும் மனதார வேண்டுகிறேன்.

அன்புடன்,
***

தமது பெயரைக் கூட வெளியில் காட்டிக் கொள்ள விரும்பாத மனிதர்களும் இருக்கிறார்கள். இத்தகையவர்களை நினைத்துக் கொள்கிறேன். இவர்களால்தான் ஒன்றே முக்கால் துளியாவது மழை பெய்கிறது.

Apr 21, 2017

இதுக்குத்தான் இத்தனை அலும்பா?

வெள்ளிக்கிழமை மட்டும் எங்கள் அலுவலகத்தில் ஜீன்ஸ், டீசர்ட் எல்லாம் அணிந்து கொள்ளலாம். முக்கியமாக ஷூ அணிய வேண்டியதில்லை. பெரிய சுதந்திரம் அது. என்னிடம் ஜீன்ஸ் இல்லை. அதனால் அன்றைய தினம் சட்டையை பேண்ட்டுக்குள் செருகாமல் சாவகாசமாக வருவது வழக்கம். ‘இவன் என்ன கோமாளி மாதிரி திரியறான்’ என்று பார்ப்பார்கள்தான். பார்த்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றிக் கண்டுகொள்வதேயில்லை.

கடந்த நான்கு நாட்களாக இரவு நேரப் பணி.  மாலை நான்கு மணிக்கு அலுவலகம் வந்து நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் இருக்க வேண்டும். பிரேசில் நாட்டவர்களுடன் வேலை செய்து கொண்டிருப்பதால் இந்த ஏற்பாடு. வந்தவுடன் தொலைபேசியில் இணைத்துக் கொண்டால் ராவு ராவு என்று ராவுவார்கள். முதல் ஐந்து அல்லது பத்து நிமிடம் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அதன்பிறகு போர்த்துகீசுவில் ஆரம்பித்துவிடுகிறார்கள். எவ்வளவு நேரம்தான் சப்டைட்டில் இல்லாமலே வெளிநாட்டு படம் பார்ப்பது? ‘யோவ்..எங்களுக்கு புரியலைய்யா’ என்று கதறினால் மீண்டும் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவார்கள். அவ்வளவுதான் அவர்களின் அதிகபட்ச கருணை. 

பார்க்கும் வரைக்கும் பார்த்துவிட்டு நான் கொட்டாவி விட ஆரம்பித்துவிடுவேன். கடந்த நான்கு நாட்களாக இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த கசமுசா மொழியைக் காதுகளில் நிரப்பிக் கொண்டு போய் படுத்தால் காலை பத்து மணி வரைக்கும் அடித்துப் போட்டது மாதிரி உறக்கம் வருகிறது.

இப்படி ஓடிக் கொண்டிருந்த தருணத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக ஒரு கல்லூரிப் பேராசிரியை அழைத்திருந்தார். 

‘எம்.சி.ஏவுக்கு ப்ராஜக்ட் வைவா நடக்குது...நீங்க தேர்வாளராக வர முடியுமா?’ என்றார். ஊருக்குள் ஓர் ஆல்வே அண்ணாசாமி இருந்தால் இப்படியெல்லாம் அழைக்கத்தான் செய்வார்கள்.

‘எப்பங்க?’ என்றேன்.

‘வெள்ளிக்கிழமை’ என்றவர் ‘காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும்’ என்றார்.

‘வியாழக்கிழமை வரைக்கும் நைட் ஷிஃப்ட் மேம்...’ என்று தயங்கினேன். அதுவுமில்லாமல் அங்கே போய் அமர்ந்து தத்தகா பித்தக்கா என்று கேள்வி கேட்டு அவமானப்பட்டுவிடக் கூடாதல்லவா? எம்.சி.ஏவுக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப் போட்ட மாதிரி.

‘பதினோரு பொண்ணுங்கதான் சார்....மத்தியானம் வரைக்கும் இருந்தீங்கன்னா போதும்’ - இரண்டாவது சொல்லை கவனியுங்கள். பெண்கள் கல்லூரி. அதைத் தெரிந்த பிறகும் மறுக்கவா முடியும்? யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு கூகிளில் தேடினால் பெங்களூரில் வெகு பிரபலமான கல்லூரி அது. வேணியிடம் சொன்னேன். தலையில் அடித்துக் கொண்டாள். பேராசிரியை அழைத்து வேண்டா வெறுப்பாகச் சொல்வது போல ‘கஷ்டம்தான்..ஆனாலும் வர்றேன்’ என்று சொல்லி வைத்திருந்தேன். கேட்கிற கேள்வி கொஞ்சமாவது அர்த்தமாக இருக்கட்டும் என்று க்ளவுட், பிக் டேட்டா என்றெல்லாம் சில தலைப்புகளையும் புரட்டி வைத்திருந்தேன். 

நேற்று போர்த்துக்கீசிய படம் பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்று உறங்கிய போது இரண்டரை மணி. ஆனால் பாருங்கள்- இன்று காலை ஏழு மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. அத்தனை உற்சாகம். நேற்றிரவே நல்ல சட்டையும் பேண்ட்டையும் எடுத்துத் தரச் சொல்லி வேணியிடம் கேட்டிருந்தேன். அவள் எடுத்து வைத்ததைத் தவிர்த்துவிட்டு பிறவற்றிலிருந்து துழாவி ஒரு துணியை எடுத்து அணிந்து கொண்டேன். முழுக்கை சட்டை, பொருத்தமான பேண்ட், பளிச்சென்று துடைத்து வைத்த ஷூ. வெள்ளிக்கிழமையன்று இதையெல்லாம் நினைத்துக் கூட பார்த்தில்லை.

இரண்டு இட்லிகளை விழுங்கிவிட்டு வெகு நாட்களுக்குப் பிறகாக சீப்பு ஒன்றையும் எடுத்துச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன். பிரேமம் படத்தில் வருகிற நகைச்சுவை பேராசிரியர் மனதில் வந்து போனார். அதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இப்பொழுது நம்மை சூர்யாவாகவோ ஆர்யாவாகவோ நினைத்துக் கொள்ள வேண்டும். கல்லூரிக்கு வழி தெரியாது. ஒவ்வொரு ஆட்டோக்காரராக விசாரித்துபடியே கல்லூரிக்கு முன்பாக வண்டியை நிறுத்திவிட்டு பேராசிரியையை அழைத்தேன். 

‘எத்தனை மணிக்கு ஆரம்பம்ன்னு சொன்னீங்க?’என்றேன். 

‘அய்யோ சார்..நான் சொன்னது அடுத்த வாரம்’- பொடனி அடியாக அடித்தது போலிருந்தது. மணி எட்டரை கூட ஆகியிருக்கவில்லை.

‘நேத்து கூட உங்களுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தேனே’

‘சாரி சார்...நான் பார்க்கவே இல்லை’என்றார். 

இதையெல்லாம் புலம்புவதற்கு எனக்கு ஒரு ஜீவன் உண்டு. ‘இதுக்குத்தான் இத்தனை அலும்பு பண்ணிட்டுத் திரிஞ்சீங்களா?’ என்றாள். வீட்டில் அம்மா, மகி என்று ஒருத்தர் பாக்கியில்லாமல் பீலா விட்டிருந்தேன். ‘நீங்க இண்டர்வியூ நடத்துவீங்களாப்பா?’ என்று மகி கிளம்பும் போது கேட்டான். வாயைத் திறக்காமல் புன்னகைத்தபடியே பந்தாவாகத் தலையை மட்டும் ஆட்டிவிட்டு வண்டியை எடுத்திருந்தேன். போதாக்குறைக்கு ஜீவ கரிகாலனிடம் கூட அழைத்துச் சொல்லியிருந்தேன். இனி வீட்டுக்கும் போக முடியாது. நேராக வண்டியை அலுவலகத்துக்கு விட்டுவிட்டேன். எட்டரை மணி. அலுவலகத்தில் ஒருவரும் இல்லை. எல்லோரும் நம்மை மாதிரியா பொழப்புக் கெட்டுத் திரிவார்கள்?

அதன்பிறகுதான் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். ‘ஓ வாவ்..நேத்து நைட் ஷிஃப்ட் முடிச்சுட்டு இப்பவே வந்துட்டீங்க’ என்றார்கள். 

சின்சியர் சிகாமணியாக முகத்தை வைத்துக் கொண்டு ‘பிரேசில் டிஸ்கஷன்ல பேசினதெல்லாம் ரிவைஸ் பண்ணலாம்ன்னு’ என்றேன். இதையேதான் மேலாளரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். கருப்பராயனோ காளியாத்தாவோதான் அவரை நம்ப வைக்க வேண்டும்.

அது பரவாயில்லை. நான்கைந்து பேர் ‘வெள்ளிக்கிழமையதுவுமா என்ன ஃபார்மல்’ என்று கேட்டுவிட்டார்கள். என்ன பதில் சொன்னாலும் நம்பமாட்டார்கள் என்று தெரியும். வெறும் புன்னகைதான் பதில். அதே சூர்யாவையும் ஆர்யாவையும் மனதில் வைத்துக் கொண்டு.

எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும். அதையும் பதிவாக எழுதுகிற வாய்ப்பும் கிடைக்கும். ஆனால் நானொரு கஜினி முகம்மது. அடுத்த வாரமும் செல்வேன். ஆனால் கல்லூரியின் பெயரை இப்பொழுதே சொல்லமாட்டேன். ‘இவன் பாருங்க உங்க காலேஜூக்கு எதுக்கு வர்றான்னு’ என்று யாராவது போட்டுக் கொடுத்துவிடுவார்கள். உள்ளே விடாமல் திருப்பி அனுப்பிவிடக் கூடும். அடுத்த வெள்ளிக்கிழமை போய்விட்டு வந்து சொல்கிறேன்.

தையல் ஊசி விற்பவன்

நான்கு வழிச் சாலைகள் வந்த பிறகு இந்தியர்களின் வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது. கிபி இரண்டாயிரம் வரைக்கும் கூட சாலை வழியாக இருநூறு கிலோமீட்டர் என்பதும் பெரும் தொலைவு. விடிய விடிய பயணிக்க வேண்டும். இரு வழிச் சாலைகளில் நமக்கு எதிரில் வாகனங்கள் வரும் போது சற்று வேகத்தைக் குறைத்து ஒதுங்கி வழி விட வேண்டும். ஊர்களைக் கடக்கும் போது யாராவது குறுக்கே வருவார்கள். கால்நடைகள் சாலையைக் கடக்கும். நாய்கள் குறுக்குமறுக்குமாக ஓடும். வேகத்தைக் குறைக்க வேண்டும். 

இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. கிட்டத்தட்ட வேகம் குறையாமலே ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊரை அடைந்துவிட முடிகிறது. வழுக்கும் சாலைகளில் தொலைவுகள் சுருங்கிவிட்டன. எங்கள் தேசத்தின் வளர்ச்சி என்று நாம் சொல்லிக் கொள்வதற்கு சாலைகள் அடையாளக் குறிகளாக மாறியிருக்கின்றன.

இது ஒரு கோணம். 

இந்த வளர்ச்சியை அடைவதற்குத்தானே இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் நிலங்களை இழந்திருக்கிறார்கள்? பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது? பல நூறு ஊர்களுக்கு நடுவில் கறுப்பு எல்லைக் கோடுகளாக சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளும் முதியவர்களும் கால்நடைகளும் கடக்கவே முடியாத பெரும் பாம்புகளாக அவை ஊர்களுக்கு நடுவில் படுத்திருக்கின்றன. தினசரி தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டுச் சாகும் நாய்களின் எண்ணிக்கை மட்டுமே பல்லாயிரக்கணக்கில் இருக்கும். இவையெல்லாம் வலி இல்லையா? பதிவு செய்யப்படாத வலிகள்.

வளர்ச்சி என்று ஒரு பக்கம் இருந்தால் அதற்கான இழப்புகள் இன்னொரு பக்கம் இருக்கும். யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் அந்த இழப்புகளைச் சுட்டிக்காட்டக் கூடியவை. நம்மைச் சுற்றிலும் பின்னப்படும் நுண்ணரசியலைப் பேசக் கூடியவை. உலகமயமாதலும் வணிகமயமாதலும் சாமானியர்கள் வாழ்வில் நிகழ்த்துகின்ற பகடையாட்டங்களை தனது கவிதை மொழியின் வழியாக தொடர்ந்து பதிவு செய்யும் கவிஞர் யவனிகாவின் இந்தக் கவிதையும் அத்தகைய நுட்பம் மிக்கது.


பழைய, செப்பனிடப்பட்ட பேருந்து ஒன்று காட்சிப்படுத்தப்படும் கவிதையை ஒரு முறை வாசிக்கலாம்-

பலமுறை செப்பனிடப்பட்ட பழைய பேருந்தினுள்
அதன் கண்ணாடி சன்னல்கள் தகரங்கள்
மற்றும் இருக்கைகளும் நடுங்க
எளிய மக்களுடன் குறைந்த கட்டணத்தில் பயணிப்பது
ஒரு நான்குவழிச் சாலையின் அழகிற்கு
சற்றுப் பொருத்தமில்லாததுதான்
தனது நிறுத்தத்தில் இறங்க அக்கிழவர்
கால்களில் வலுவற்று இருந்தார்
அவரின் நிலம் கைமாறி இருக்கலாம்
இரண்டு ரூபாய்க்கு ஏழு தையல் ஊசிகளை
விற்பவன் உற்சாகமாக இறங்கிப் போயிருந்தான்
இன்னுமிருக்கிறதா கிழிந்த துணிகள்
பழக்கூடைகள் பள்ளிச் சிறார்கள்
தலை வறண்ட பெண்கள் இடையே
ஏதோ நடத்துனர் தன் கால்களால் பேருந்தை
உந்தி ஓட்டுபவர் போல சிரமமாகத் தெரிகிறார்
எத்தனைமுறை செப்பனிடப்பட்டாலும் அப்பேருந்து
நான்குவழிச் சாலையின் மேம்பாலத்தில்
தோன்றும்போது இருபுறமும்
தொலைந்துபோன தன் கிராமத்தையேதான்
திடுக்கிட்டுத் தேடிச் செல்லும் போல
சாலையின் நடுவே நீளமாக வைத்த அரளிகள்
இளம்சிவப்பில் பூத்திருக்கின்றன.

அதுவொரு பழைய பேருந்து. பலமுறை செப்பனிட்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் செப்பனிட்டாலும் கருகருவென நீண்டிருக்கும் அழகிய நான்கு வழிச்சாலைக்கும் அந்தப் பேருந்துக்கும் துளி கூட பொருத்தமில்லாமல் இருக்கிறது. அந்தப் பேருந்திலிருந்து வலுவில்லாமல் இறங்கிச் செல்கிறார் ஒரு முதியவர். ஒருவேளை தமது நிலத்தை விற்ற துக்கத்தில் அவர் இருக்கக் கூடும். அதே பேருந்திலிருந்துதான் ஊசி விற்கிறவன் ஒருவன் உற்சாகமாக இறங்கிச் செல்கிறான் - இடையில் ‘ஏம்ப்பா நாமதான் வளர்ந்த நாடாச்சே....இங்கே இன்னமும் பழைய துணிகள் இருக்கின்றனவா?’ என்று கவிஞனின் நக்கல். அந்தப் பேருந்தின் கூட்டத்தில் நடத்துனர் வெகு சிரமப்படுகிறார். ஆனால் பாருங்கள்! எவ்வளவுதான் செப்பனிட்டு நான்கு வழிச்சாலைக்கு ஏற்ற பேருந்தாக மாற்ற முயன்றாலும் தனது பழைய பாதையையும் தொலைந்து போன கிராமத்தையுமேதான் இந்தப் பேருந்து தேடிக் கொண்டிருக்கிறது.

கவிதையின் அரசியலை எளிமைப்படுத்தி புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். 

நான்கு வழிச்சாலைகளை அமைத்து கார்போரேட் நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும், அவர்களின் சொகுசுக் கார்களுக்கும், சரக்கு வண்டிகளுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தாலும் கூட இந்த தேசத்தில் நிலத்தை விற்றுக் கொண்டிருக்கும் முதியவர்களும், இரண்டு ரூபாய்க்கு ஏழு ஊசிகளை விற்றுக் கொண்டிருப்பவர்களும், தலை வறண்ட பெண்களும், பழக்கூடையைச் சுமந்து திரிகிறவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். பகட்டான வளர்ச்சி மேக்கப் வெளிச்சத்தில் சாமானியர்கள் மறைக்கப்பட்டுவிடுகிறார்கள். எளிய மனிதர்களின் அவலங்கள் வளர்ச்சி பிம்பத்தின் நிழலில் ஒளிந்து கொண்டாலும் கூட அவர்கள்தான் இந்த தேசத்தின் நிதர்சனம். இல்லையா? இன்னமும் சாமானிய மக்கள் வறுமையில் சிக்குண்டுதான் கிடக்கிறார்கள். சாலைகள், மால்கள், ஒளி கூசும் சோடியம் விளக்குகள், கணினி நிறுவனங்கள், ஜீன்ஸ், டீஷர்ட் என எல்லாவற்றையும் தாண்டி இந்த மண்ணின் மனிதர்களைச் சுட்டிக் காட்டுவதாக இக்கவிதையை எடுத்துக் கொள்ளலாம். அவர்களைப் பார்க்கச் சொல்லி வாசகனைக் கோருகிறது யவனிகாவின் இந்தக் கவிதை.

எல்லாவற்றையும் மறைத்துவிட்டு சாலையின் நடுவில் இளஞ்சிவப்பில் பூத்திருக்கும் அரளியைப் பார்த்து பூரித்துக் கொண்டிருக்கிறோம்.

Apr 20, 2017

புற்று

புற்று ஒரு புதிரான நோய். ‘ஏன் வந்துச்சு?’ என்ற கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடிவதில்லை. சித்த மருத்துவர்களில் நிறையப் பேர் இந்நோய் வைத்தியத்திற்கு மருந்து வாங்கிக் கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். ‘இது கர்ம நோய்’ என்பார்கள். அலோபதி மருத்துவத்திலும் கூட அறுவை சிகிச்சை, கீமோதரபி, கதிரியக்கம் என்று மூன்று வகைமையில் ஏதோவொன்றைத் நோயின் தன்மைக்கு, அதன் வீரியத்துக்கும் ஏற்ப தேர்ந்தெடுத்து சிகிச்சை செய்து கொள்ளலாம் என்பார்களே தவிர நோய்க்கான காரணம் என்ன என்பதைச் சொல்வதில்லை. சொல்ல முடிவதில்லை.

சமீபமாக புற்றுநோயின் பரவல் வெகு அதிகம். நோயாளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியிருக்கிறது. பெரும் மருத்துவமனைகளில் ‘புற்றுநோய் பிரிவு’ என்று தனியொரு கட்டிடத்தையே ஒதுக்கியிருக்கிறார்கள். சிகிச்சையின் காரணமாக உடல் வலுவிழந்து முடியை இழந்து கறுப்பேறி தளர்ந்த உடலுடன் இருப்பவர்களைப் பார்க்கவே சகிப்பதில்லை. எப்படியாவது உயிரை இழுத்துப் பிடித்துவிட வேண்டும் என்று மருத்துவ சிகிச்சையின் எல்லாவிதமான சித்ரவதைகளுக்கும் தம் உடலைக் கொடுக்கிறார்கள்.

சில புற்றுநோய்களில் முழுமையாக குணமடைகிறவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக மார்பகப் புற்றுநோய், ஆரம்பகட்ட இரத்தப் புற்று நோய் போன்றவற்றிலிருந்து தப்பி இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். சில புற்றுநோய்களுக்கு நாள் குறித்துக் கொடுத்துவிடுகிறார்கள். எவ்வளவுதான் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அது வீண். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இத்தகைய புற்று நோய்களுக்கு நடைபெறும் ஆராய்ச்சிகள் அளவுக்கு எல்லாவிதமான புற்றுநோய்களுக்கும் ஆராய்ச்சிகள் நடைபெறுவதில்லை என்பதும் ஒரு காரணம்.

தெரிந்தவர் ஒருவரின் குழந்தைக்கு சமீபத்தில் கால் எலும்பில் புற்றுநோய் வந்திருந்தது. வீக்கம் வந்த பிறகுதான் கவனித்திருக்கிறார்கள். வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் பரிசோதனை செய்து புற்றுதான் என்பதைக் கண்டறிந்த பிறகு அதிகபட்சம் ஒரு மாதம்தான் என்றும் இனி தேவையில்லாமல் சிகிச்சை என்ற பெயரில் குழந்தையை வதைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். குழந்தை நடிகர் விஜய்யின் ரசிகர். ‘ஒரு முறை விஜய்யை சந்திக்க வைக்க முடியுமா?’ என்றார்கள். பலவிதங்களிலும் முயற்சி செய்து பார்த்தேன். மேலாளர் வரைக்கும் தகவல் சென்றது. ஆனால் சந்திக்க வைக்க முடியவில்லை. ‘இந்த மாதிரி குழந்தைகளைச் சந்தித்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மனம் கொந்தளிப்பாகவே இருப்பதாக’ நடிகர் சொல்வதாகச் சொன்னார்கள். அதுவும் சரிதான். அந்தக் குழந்தையின் நிழற்படத்தை அனுப்பி வைத்திருந்தார்கள். கனவில் எல்லாம் அந்தப் படம் வந்து போகிறது.

உலகத்தையே பார்த்திராத அந்தக் குழந்தைக்கு ஏன் எலும்பில் புற்று நோய் வந்தது? மூளையில், தண்டுவடத்தில் என ஏன் கட்டிகள் வந்து ஆளை முடிக்கின்றன? நாற்பதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் இவ்வளவு புற்று நோயாளிகள் இல்லையே. இப்பொழுது பெருக என்ன காரணம்? சூழல், உணவு, வாழ்க்கை முறை என்று ஏதோவொரு காரணம் நிச்சயமாக பின்னணியில் இருக்கிறது. ஏன் அது குறித்து விரிவான விவாதங்கள் இல்லை? எந்த அரசியல் இத்தகைய விவாதங்களைத் தடுக்கிறது? பல கோடி ரூபாய்க்கு நடைபெறும் மருந்து வணிகம், ஆனாலும் பெரிய விழிப்புணர்வு இல்லை என நாம் நிறையப் பேச வேண்டியிருக்கிறது.

Backyard burning என்று சொல்கிறார்கள் அல்லவா? குப்பைகளை எரிப்பது. டயர், ப்ளாஸ்டிக், பாலித்தீன் என எல்லாவற்றையும் போட்டு எரிப்பது கூட புற்று நோய்க்கான முக்கியக் காரணம் என்கிறார்கள். பெங்களூர் மாதிரியான பெருநகரங்களில் பத்து கிலோமீட்டரைக் கடப்பதற்குள் நான்கைந்து முறையாவது இந்தப் புகையை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. எவ்வளவு பெரிய ஆபத்து இது? இதைப் பற்றிய விழிப்புணர்வு எதுவும் நம்மிடம் இல்லை.

கண்ணுக்குத் தெரிந்த அல்லது தெரியாத பல விஷயங்கள் குறித்தும் ஒரு புரிதல் உண்டாக வேண்டும். புற்றுநோய் என்றால் என்ன? நோய்க்கு பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கக் கூடும்? சிகிச்சை முறைகள் என்ன? என்றெல்லாம் இந்த நோய் குறித்து விரிவாக எழுதுகிற எண்ணம் இருந்தது. ஆனால் இரண்டு காரணங்களினால் தயக்கமும் இருந்தது. முதல் தயக்கம்- இது மருத்துவம், உடலியல் சார்ந்தது. தெரியாத துறை. தவறாக எதையாவது உளறிவிடக் கூடாது என்கிற தயக்கம். இரண்டாவது தயக்கம்- இதில் வெகு ஆழமாக இறங்கிவிடக் கூடாது என்கிற தயக்கம். சில நாட்களுக்கு முன்பாக புற்றுநோய் பற்றி எழுதியிருந்த போது முனைவர் வெங்கடேஷ் தொடர்பு கொண்டார். அப்பாவுக்கு பிரச்சினை என்று எழுதியவுடன் முதலில் தொடர்பு கொண்டு பேசியவர் வெங்கடேஷ்தான். ஹெபாட்டிட்டிஸ், புற்றுநோய் ஆகியவற்றில் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பவர். ஜெர்மனியில் ‘யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்ட்டரில்’ ஆராய்ச்சியாளர்.

அவருடன் பேசி, சில மின்னஞ்சல்கள் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். முனைவர் வெங்கடேஷ் கட்டுரைகளுக்கான உள்ளடக்கத்தை ஒலிப்பதிவு செய்து மின்னஞ்சலில் அனுப்பி வைத்துவிடுவார். அதை உள்வாங்கி சந்தேகங்கள் இருப்பின் தெளிவடைந்து பிறகு கட்டுரையாக மாற்ற வேண்டியது என் பொறுப்பு.

 • கேன்சர் என்றல் என்ன? வகைகள், எப்படி வருகின்றன?
 • மனிதர்களின் மரபுப்பொருள்களின் மாற்றங்களுக்கு காரணம் என்ன?
 • நோய்க்கிருமிகள் மற்றும் சூழல் மாசுக்கள் எப்படி ஜீன்களை பாதிக்கின்றன?
 • புறமரபியல் காரணிகள் எப்படி ஜீன்களை பாதிக்கின்றன?
 • ஏன் பல புற்றுநோய்களுக்கு நிரந்தரத் தீர்வு இல்லை?
 • கேன்சருக்கு நோய் எதிர்ப்பு வேக்சின் மருந்துகள் உண்டா?
 • எத்தகைய கேன்சர்களை குணப்படுத்த இயலும்?
 • மருத்துவ சிகிச்சை உட்கட்டமைப்பில் இருக்கும் பிரச்சனைகள்
 • மாற்று மருத்துவ முறைகள் எந்த அளவுக்கு நம்பகமானவை?
 • குருத்து செல்(Stem cell) மாற்று சிகிச்சை முறைகள்
 • ஜீன் தெரப்பி, இம்முன்னோ தெரபி சாத்தியங்கள்
 • அரிதான கேன்சர் வகைகள்
 • புற்றுநோய் எப்படி பரவுகிறது?
 • சிகிச்சையின் பக்கவிளைவுகள்
 • ஜீன்களின் ஆரோக்கியத்தை எப்படி காப்பது, மேம்படுத்துவது?
 • கேன்சருக்கு எதிராக சமுதாயத்தில் நமது பங்களிப்பு
இப்போதைக்கு மேற்சொன்னவற்றை உள்ளடக்கத்தில் கட்டுரைகள் இருக்கும். விரிவாக எழுதும் போதும், கேள்விகள் வரும் போதும் இதன் போக்கும் உள்ளடக்கமும் மாறக் கூடும். அவசரம் எதுவுமில்லாமல், அழுத்தம் எதுவுமில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் அனுப்பி வைக்கட்டும். வெங்கடேஷ் அனுப்பி வைத்த பிறகு அதைக் கேட்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் எனக்கு ஒன்றிரண்டு நாட்கள் ஆகக் கூடும். ஆனால் ஒரு சில மாதங்களில் மேற்சொன்ன தலைப்புகளில் விரிவாக எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வெங்கடேஷ் முதல் ஒலிப்பதிவை அனுப்பி வைத்துவிட்டார். அதிலிருந்து சில தகவல்களை இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியிருக்கிறேன். இனி தொடர்ந்து பேசுவோம்.

Apr 19, 2017

பத்துப் பள்ளிகள்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பத்து பள்ளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். காரணத்தைக் கடைசியில் சொல்கிறேன்.

இங்கிலாந்தில் கோல்செஸ்டர் என்றொரு ஊர். இலண்டனிலிருந்து நாற்பது நிமிடப் பயணம். அங்கே இருக்கும் தமிழ்க் குடும்பத்துப் பெண்கள் ஒரு பணியைச் செய்கிறார்கள். புது மனைப்புகுவிழா, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தீபாவளி பொங்கல் மாதிரியான பண்டிகைகளுக்கு பலகாரம் செய்து விற்பனை செய்கிறார்கள். நாற்பது ஐம்பது பேர்கள் வரைக்கும் கலந்து கொள்கிற நிகழ்வுகளுக்கு சமையல் கூட செய்கிறார்கள். இதில் வருமானம் வருமல்லவா? வருகிற இலாபத்தை அப்படியே இந்தியாவுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். கிட்டத்தட்ட பத்து பேர் வரைக்கும் சேர்ந்து இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அமைப்புக்கு ஜெகத் சேவா என்று பெயர்.

அந்தக் குழுவைச் சேர்ந்த தன்ராஜ் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இதற்கு முன்பாக சேலம் ஆதவ் அறக்கட்டளை, சென்னை அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு சர்க்கரை பரிசோதனை உபகரணம், காரைக்குடி அருகே ஒரு பள்ளிக்கு நீர் தொட்டி மற்றும் மின் விசிறிகள், ஈரோட்டுக்கு அருகில் ஒரு பள்ளிக்கு மின் விசிறி என்று கடந்த சில வருடங்களாக உதவியிருக்கிறார்கள். இந்த வருடமும் பணம் இருக்கிறது. பயனாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி விவகாரங்களில் என்னை ஆல் இன் ஆல் அழகுராஜாவாக நினைத்துக் கொள்கிறார்கள்.

நான்கு லட்ச ரூபாய். தொகையை எப்படி பயன்படுத்தலாம் என்று சில திட்டங்களை பதிலாக அனுப்பியிருந்தேன். குழுவிடம் பேசிவிட்டு‘எங்களுக்கு முழு சம்மதம்’என்றார். அத்தனை திட்டங்களையும் இப்பொழுதே சொல்ல வேண்டியதில்லை. பணியை ஆரம்பிக்கும் போது சொல்லிக் கொள்ளலாம்.

முதல் திட்டத்திற்கான வேலைகளை இப்பொழுது ஆரம்பித்துவிடலாம். இத்திட்டத்திற்கு ஒரு லட்ச ரூபாய். அதற்குத்தான் பள்ளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். பள்ளிகளுக்கு உதவும் போது அரசு பள்ளிகளுக்கு உதவ வேண்டியதில்லை என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதும் உண்டு. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

முதற்காரணம்- அரசுப் பள்ளிகளுக்கு அரசாங்கமே நிதி ஒதுக்கீடு செய்கிறது. தலைமையாசிரியர் சரியானவராக இருக்கும் பட்சத்தில் நிதியை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். பல பள்ளிகளில் அத்தியாவசியமான தேவைகளை விட்டுவிட்டு கண்ட செயல்பாட்டுக்கும் நிதியை ஒதுக்கிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

இரண்டாவது காரணம்- அரசுப்பள்ளியில் தலைமையாசிரியர் சரியானவராக இருந்து நாம் அவர்களுக்கு உதவினாலும் கூட இரண்டொரு வருடத்தில் பதவி உயர்வு, இடமாற்றம் என்ற காரணங்களைச் சொல்லி வேறு பள்ளிகளுக்குச் சென்றுவிட்டால் புதியதாக ஒருவர் வருவார். இப்படி வருகிறவர் நல்லவராக இருந்துவிட்டால் பரவாயில்லை. போனாம்போக்கியாக இருந்தால் நாம் செய்த அத்தனை உதவியும் வீண்.

அனுபவப்பூர்வமாக இதை நேரில் பார்த்திருக்கிறேன். முன்பொரு சமயம் புத்தக விற்பனையில் வந்த தொகையைக் கொண்டு சில பள்ளிகளுக்கு நூலகங்கள் அமைத்துக் கொடுத்திருந்தோம். இப்பொழுது விசாரித்துப் பார்த்தால் சில பள்ளிகளில் மட்டுமே புத்தகங்கள் இருக்கின்றன. வேறு சில பள்ளிகளில் புத்தகங்கள் என்ன ஆயிற்று என்று கூடத் தெரியவில்லை. ஆசிரியர் மாறி புதியவர் வரும்போது அவர் இதையெல்லாம் கண்டுகொள்வதேயில்லை. அப்பொழுது எனக்கும் அனுபவமில்லை. செய்துவிட்டோம். இப்பொழுதும் அதே பிழையைச் செய்ய வேண்டியதில்லை.

அதே இரண்டு காரணங்களுக்காகத்தான் அரசு உதவி பெறும் (Aided) பள்ளிகளுக்கு உதவலாம். பெரும்பாலான உதவி பெறும் பள்ளிகள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டவை. அந்தக் காலத்தில் மேலாண்மை நிர்வாகம் வலுவானதாக இருந்திருக்கும். அனுமதி பெற்று பள்ளியைத் தொடங்கியிருப்பார்கள். சமீபகாலமாக பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் நிதி நெருக்கடி, பொருளாதாரச் சிக்கல்கள் போன்றவற்றால் திணறிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் மூடப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்தால் நிச்சயமாக அதிர்ச்சியை உண்டாக்கக் கூடும். உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்த வரைக்கும் சம்பளம் மட்டும் அரசாங்கம் கொடுத்துவிடுகிறது. மற்ற வசதிகளையும் செலவுகளையும் பள்ளிகளே பார்த்துக் கொள்ள வேண்டும். நிர்வாகம் திணறும் போது அப்படிப் பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் எவ்வளவுதான் சிறப்பானவர்களாக இருந்தாலும் அவர்களால் வேறு எதுவும் செய்ய முடிவதில்லை.

கோல்செஸ்டர்காரர்கள் முதற்கட்டமாக வழங்கும் ஒரு லட்சத்தை வைத்து பத்து பள்ளிகளுக்கு உதவலாம்.

ஐந்து பள்ளிகளில் சிறு நூலகம் அமைத்துத் தரலாம். ஒவ்வொரு பள்ளிக்கும் ரூபாய் பத்தாயிரம் என்றால் ஐம்பதாயிரம் ரூபாய். இன்னுமொரு ஐந்து பள்ளிகளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கித் தரலாம். புத்தகங்களைப் போலவே ஒவ்வொரு பள்ளிக்கும் ரூபாய் பத்தாயிரத்துக்கான விளையாட்டுச் சாமான்கள். ஆக மொத்தம் ஒரு லட்ச ரூபாய்.

சிறப்பாகச் செயல்படுகிற தலைமையாசிரியர்களைக் கொண்ட அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளிகள் அல்லது நடுநிலைப்பள்ளிகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். ஏற்கனவே சிறு நூலகத்தை அமைத்து பராமரித்து வருகிற பள்ளிகளுக்கு கூடுதலாக புத்தகங்களை வழங்கலாம். விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பள்ளியாக இருப்பின் அவர்கள் கேட்கின்ற விளையாட்டுச் சாதனங்களை வாங்கிக் கொடுத்துவிடலாம். தமிழகத்தின் எந்த மாவட்டமாக இருப்பினும் சரி- கிராமப்புறத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கலாம்.

பரிந்துரை செய்கிறவர்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட வேண்டும். ‘இந்த ஸ்கூல் பத்தி வாட்ஸப்பில் வந்துச்சு’ என்கிற ரீதியில் பரிந்துரை செய்வதுவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்பதாக இருப்பின் தயவு செய்து தலையை நீட்ட வேண்டாம்.

பள்ளிகளின் கோரிக்கைகள், பரிந்துரைகள் பெறப்பட்டு மேற்சொன்ன நோக்கங்களை மனதில் வைத்துக் கொண்டு விசாரித்து இறுதியாக பத்துப் பள்ளிகளின் பட்டியலை முடிவு செய்து கொள்வோம். அதன் பிறகு புத்தகங்களின் பட்டியல் விளையாட்டுச் சாமான்களின் பட்டியல் என நிறைய வேலைகள் இருக்கின்றன. பள்ளிகளின் பட்டியல் தயாராகும் வரைக்கும் புத்தகம்/ விளையாட்டுச் சாதனங்களின் பட்டியல்களை யாராவது தயாரிக்க முடியுமென்றால் அவர்களுக்கு ரத்தினக் கம்பளமே விரிக்கலாம். இணைந்து செயல்படுவோம்.

nisapthamtrust@gmail.com

தமிழில் பேசுவதில்லையே?

அன்பு மணிகண்டன்,

அண்மையில் பன்மொழி தொலைபேசி உரையாடல்களின் தரவு (Multi-lingual speech telephone conversation data) குறித்தான தொழில் நுட்ப சாத்தியங்கள் பற்றிய கருத்தரங்கை நடத்த சென்று இருந்தேன். (நான் மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை, ஆனாலும், இத்திட்டத்தில் என் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட வேறு சில காரணிகளும் இருந்ததால் சென்று இருந்தேன்). 

சிங்கப்பூரில் தமிழ் அங்கீகரிகப்பட்ட தேசிய மொழி என்பதை நீங்கள் அறிவீர்கள்.  தேசிய மொழிகளுக்கு ‘ஆழக்கற்றலின் மூலம் பேச்சைக் கண்டறிதல்’ (Speech recongnition by deep learning) ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். தரவு வைத்திருக்கும் அமைப்பைப் பொறுத்தவரையில் தமிழ் மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லை, ஏனெனில், தமிழ் மக்கள் தொலைபேசியில் உரையாடும் போது ஆங்கிலத்திலேயே உரையாடுவதாகக் குறிப்பிட்டனர். ஆகையால், தமிழ் மொழிக்கான தரவு (data)அதிகம் இல்லை எனக் கூறினார். (ஆனால் சீனர்கள் அவர்கள் மொழியில் உரையாடி இருப்பதால் அந்த மொழிக்கானத் தொழில் நுட்பம் தேவை எனக் கூறினர்).

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், நாம் தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பேச முனைய, அது நம் மொழியியல் ஆராய்ச்சிக்கு பெரும் இடையூறாக ஆகியிருக்கிறது. இதுவரைத் தமிழ் மொழி அழிவதைப் பற்றிக் கவலை அற்று இருந்தேன்- தமிழின் தொன்மையைப் பற்றி பேசுவோரிடம், தமிழ் மொழித் தன்னையே காத்துக்கொள்ளும் என பேசி இருக்கிறேன். இந்த சம்பவத்திற்குப்பின் கொஞ்சம் பதட்டம் வந்திருகிறது. உண்மையில், தமிழ் மொழிக்கான தொழில்நுட்பம் வளர நாம் ஏதாவது வகையில் தரவுகளைத் தயார் செய்ய வேண்டும். மொழியில் போதுமான தரவுகள் இல்லாமல், போதுமான பயன்பாடு இல்லாமல்,  எவ்வளவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மேற்கொண்டாலும் பயன் தராது. இதற்கு எதாவது வழிவகை செய்ய இயலுமா என தீர்க்கமாக யோசிக்க வேண்டும். ​நாம் ஃபேஸ்புக்கிலும், வலைப்பதிவுகளிலும் தமிழ் மொழி உபயோகிப்பதின் மூலம் தமிழ்மொழிக்கான எழுத்துத் தொழில்நுட்பம் (Text related techonologies) வளரும். ஆனால், உரையாடல்கள் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்கள் வளர பலதரப்பட்ட்ட துறைகளில் (மருத்துவம், விஞ்ஞானம், தொழில் துறை) பேச்சுமொழிக்கான தொழில்நுட்பம் அவசியம் இல்லையா? ​மருத்துவம் போன்ற இன்றியமையாத துறைகளில், தமிழ் மொழியின் பயன்பாடும், அதற்கு தேவையான தொழில் நுட்பமும் இருத்தல் தேவையானது இல்லையா? 

உங்களுடைய எண்ணம் பற்றிப் பகிரவும்.​ ​

நன்றி

அன்புடன்
சவிதா

முனைவர் சவிதா சிங்கப்பூரில் கணினியியல் விஞ்ஞானியாக இருக்கிறார். அவரிடமிருந்து இம்மின்னஞ்சல் வந்திருந்தது. ‘நாம் பேசுவதிலும் எழுதுவதிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தாவிட்டால் என்ன குறைந்துவிடும்’ என்கிற மனநிலை நம்மில் பலருக்கும் உண்டு. அதன் எதிர்விளைவுகளை மின்னஞ்சல் சுட்டிக் காட்டுகிறது.

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது Big data யுகம்.

மனிதன் நேருக்கு நேர் அமர்ந்து பேசுகிற தருணங்கள் மிகக் குறைந்துவிட்டன. நம்முடைய எண்ணங்கள் யாவுமே பிறருக்குத் தகவல் தொடர்பு சாதனங்களின் வழியாகவே கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கணவனும் மனைவியும் கூட நேரில் பேசுவதைவிடவும் அலைபேசியில் பேசுகிற நேரம்தானே அதிகமாகிக் கொண்டிருக்கிறது? இப்படி சாதனங்களின் வழியாக பரிமாறிக்கொள்ளப்படுகிற பெரும்பாலானவை data வாக மாறுகிறது. சாதனங்களின் வழியாக நாம் பேசுவதையும், எழுதுவதையும் யாரோ எங்கோ எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கு வாய்ப்பிருக்கிறது. பலவிதமான ஆராய்ச்சிகள். ‘மதியம் மூன்றிலிருந்து ஐந்து மணி வரைக்கும் தமிழர்களுக்கு எந்த நடிகையைப் பிடிக்கும்?’ என்கிற அளவுக்கு சொல்லக் கூடிய அளவுக்கு ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.

இத்தகைய ஆராய்ச்சிகளில் பல பிரிவுகள் உண்டு. தனிமனித உளவியல், சமூக உளவியல் என்றொரு ரீதியில் நடைபெற்றால் நம்முடைய டேட்டாவை வைத்து தொழில்நுட்ப ரீதியிலான ஆராய்ச்சிகளையும் பல குழுக்கள் செய்து கொண்டிருக்கின்றன. 

முனைவர் சவிதா குறிப்பிட்டிருப்பது அப்படியானதொரு தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி. 

Speech recognition என்பதை எளிதாகச் சொல்ல வேண்டுமானால் நம் உரையாடலை எழுத்து வடிவுக்கு மாற்றுதல். உதாரணமாக, கணினியின் ஒலிவாங்கியில் திருக்குறளை ஒருவர் படித்தால் அது எழுத்து வடிவுக்கு மாற்றப்பட்டுவிட வேண்டும். இதற்காக மென்பொருட்கள் இருக்கின்றன என்றாலும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரே சொல்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உச்சரிக்கக் கூடும், குரல் தொனி மாறியிருக்கலாம் இதையெல்லாம் புரிந்து கொண்டு சொற்களை எழுத்து வடிவத்துக்கு கணினி மாற்ற வேண்டும். நம் மொழியில் இருக்கக் கூடிய பல லட்சம் சொற்களையும் எழுத்து வடிவில் மாற்ற வேண்டுமானால் தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டியிருக்கிறது.

அத்தகையதொரு ஆராய்ச்சிக்கு தொலைபேசி உரையாடல்களிலிருந்து தரவுகளை எடுத்திருக்கிறார்கள். நம்மவர்கள் நிறையப் பேர் ஆங்கிலத்திலேயே பேசுவதால் ‘தமிழுக்கு அவசியமில்லை..சீன மொழியின் பக்கம் கவனம் செலுத்துவோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். 

சர்வதேச அறிவியல் கருத்தரங்கில் இப்படியானதொரு ஒதுக்குதல் மிகப்பெரிய இழப்புதான். பிரச்சினை புரிகிறது. ஆனால் இதற்கான தீர்வு என்ன?

மெல்ல மெல்லத் தமிழை விட்டு விலகிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் தோன்றுகிறது. தனித்தமிழ் உரையாடல் என்று கொடி பிடிக்கவில்லை. குறைந்தபட்ச உரையாடலைக் கூட தமிழில் நிகழ்த்துவதில்லை. ‘இல்லையே தமிழில்தானே பேசுகிறோம்’ என்று சொல்லலாம்தான். பேசுகிறோம். எத்தனை கலைச் சொற்களை நம் உரையாடலில் பயன்படுத்துகிறோம்? நோய்கள், மருந்துகள், அறிகுறிகள், கணினி சம்பந்தப்பட்ட சொற்கள், தொழில்நுட்பச் சொற்கள் என பல்துறைக் கலைச் சொற்களையும் நாம் ஆங்கிலத்தில்தான் புழக்கத்தில் வைத்திருக்கிறோம். 

வளம், செழுமை, தொன்மை என்பதையெல்லாம் தாண்டி மொழியின் தினசரி பயன்பாடுதான் அதனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சமீப ஐம்பதாண்டுகளில் மொழியில் கலைச் சொற்கள் நிரம்பியிருக்கின்றன. ஜப்பானியர்களும் சீனர்களும் பெரும்பாலான கலைச் சொற்களை அவர்களது தாய் மொழியிலேயேதான் பயன்படுத்துகிறார்கள். நாம் அப்படியில்லை. பெரும்பாலான சொற்களுக்கு ஆங்கிலத்தை நம்புகிறோம். 

அதன் எதிர்விளைவுகள் நம் கண்களுக்குத் தெரியாதவையாக இருக்கின்றன. தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் நம் மொழியை ஒதுக்குவது அப்படியொரு மோசமான எதிர்விளைவு. அதைத்தான் இந்த மின்னஞ்சல் சுட்டிக் காட்டுகிறது.

கலைச் சொல் அகராதி உருவாக்கம், சொற்களை தினசரிப் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் என நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் சொற்களை மொழி பெயர்க்கிறவர்கள் நம்முடைய முழியைப் பெயர்க்கிறார்கள். பெரும்பாலான புதுச் சொற்களை கடப்பாரையை விழுங்கியவனைப் போல உச்சரிக்க வேண்டியிருக்கிறது. மைக்ரோடிப் பென்சில் என்பதை நுண்முனை கரி எழுதுகோல் என்று மொழி பெயர்த்துக் கொடுத்தால் அதை எப்படி தினசரி பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது? இயல்பான சொற்கள் இல்லாமை, அதனைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வழிமுறைகளும் அணுகுமுறைகளும் இல்லாமை என நிறையக் குறைகளைச் சுட்டிக்காட்டலாம்.

அரசாங்கம், கல்வியாளர்கள், மொழியியல் அறிஞர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் என சகலரும் இணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. இன்றைக்கு ஆரம்பித்தாலும் கூட சீனர்களையும் ஜப்பானியர்களையும் எட்டிப்பிடிக்க பத்தாண்டு காலம் தேவைப்படலாம். ஆனால் நாம் தொடங்குவதற்கே பத்தாண்டு காலம் ஆகும் என்றுதான் தோன்றுகிறது. பத்தாண்டு காலம் என்பது கூட பேராசைதான்.

Apr 18, 2017

விடுமுறை- நன்றி

‘குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்’ கட்டுரை எழுதிய தினத்தன்று அது அதிகமாக கவனம் பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் வழியாக பரவலாக பரவிக் கொண்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். ஏப்ரல் 21 ஆம் தேதியை இந்த ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக அறிவுறுத்தி தொடக்கப்பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டிருக்கிறது. நிசப்தத்தில் எழுதிய கட்டுரைதான் விடுமுறை அளிக்கப்பட்டதற்கான காரணம் என்று உரிமை கொண்டாடவில்லை. அது சரியாகவும் இருக்காது. ஆனால் சிலரின் கவனத்தையாவது ஈர்த்திருந்தால் அதுவே ஆகப் பெரிய திருப்தி. 

கோபிபாளையம் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் கடிதம் எழுதி அதை ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்திருந்தார். அவரது குறிப்பு கொடுத்த சந்தோஷம் அளவிட முடியாதது. 

                                                                    ***

சமூகத்திற்கான எழுத்து விதைகள் என்றும் விளையும்;
உறுதியாகக் கனி கொடுக்கும்...
        
தமிழகத்தில் தற்போது நிலவும் கடுமையான வெப்பச் சூழலில், தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகள் அனுபவிக்கும் துயரங்களை, நண்பர் வா.மணிகண்டன் அவர்கள் தன் வலைப் பூவில் கட்டுரையாக எழுதியிருந்தார்.

அடுத்த நாளே அக்கட்டுரை குழந்தை நல ஆர்வலர்கள், அரசு துறை உயர் அலுவலர்கள், ஆசிரியர் இயக்கங்கள் எனப் பரவலாகப் பரவியதோடு, அரசின் கவனத்தையும் ஈர்த்தது. 

விளைவு?

எதிர்வரும் 22ஆம் நாள் முதல், "பள்ளிகளுக்கு விடுமுறை" என தமிழக அரசின் கல்வித் துறை அறிவித்துள்ளது. கல்வி, அரசியல், சமூகம், பசுமை, நட்பு என இவர் தூவும் அனைத்து எழுத்து விதைகளும் விளைந்து கனி கொடுக்கின்றன.

குழந்தைகளின் துயர் நீக்கி, மகிழ்ச்சியை மலர வைத்த தங்களின் விரல்களுக்கு, மிக்க நன்றி, வா.மணிகண்டன்.
                       
                                                             ***

வெம்மையின் கொடுமையைக் கருத்தில் எடுத்துக் கொண்டு அரசாங்கமாகவே இந்த முடிவை எடுத்திருந்தாலும் அல்லது வேறு எவரேனும் இதே கோரிக்கையை முன்னெடுத்திருந்தாலும் மகிழ்ச்சி. இல்லையென்றால் துரும்பை எடுத்துப் போட்ட சந்தோஷம் எனக்கு. சமூக மாற்றம், புரட்சி என்றெல்லாம் மிகப்பெரிய பிரளயங்களை உருவாக்க வேண்டியதில்லை. உருவாக்குவது சாத்தியமும் இல்லை. கவனத்திற்கு வரும் பிரச்சினைகளின் மீது சிறு சிறு கற்களை எறிந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்- காலம் முழுக்கவும்.

முயற்சி யாருடையதாக இருப்பினும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி. கட்டுரையைப் பரவலாக பகிர்ந்து கொண்டவர்களுக்கும்.

சின்ன சிவாஜிகள்

சனிக்கிழமையன்று சென்னை ஏ.வி.எம் டப்பிங் தியேட்டரில் இருந்தேன். உலக உருண்டை சுற்றிக் கொண்டிருக்கும் அந்த நுழைவாயிலைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோவொரு படத்தில் ரஜினியை வாயில் காவலர் துரத்திவிடுகிற காட்சிதான் நினைவுக்கு வரும். உள்ளே நுழையும் போது என்னையும் யாராவது ஒரு காவலர் துரத்திவிட்டால் அண்ணாமலை ரஜினி மாதிரி தொடையைத் தட்டி சவால் விடலாம் என்று நினைத்திருந்தேன். காவலர் அறை குப்பை படிந்து கிடந்தது. இப்பொழுதெல்லாம் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் போலிருக்கிறது. எதற்கும் இருக்கட்டும் என்று இருக்கன் குடி மாரியம்மனை ஒரு முறை வேண்டிக் கொண்டு காலை எடுத்து வைத்தேன்.

சினிமாக்காரர்களுடன் இருக்கும் போது கிசுகிசுக்கள் நிறையக் கிடைக்கும். யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரிந்து வாயைப் பிளக்கலாம். ‘அவன் எப்படி சார் ஜெயிச்சான்?’ என்று கேட்டு வாயைப் பிடுங்கலாம். பலவற்றை எழுத முடியாது. எல்லாவற்றையும் காதில் வாங்கி வைத்துக் கொள்வேன். நமக்கு சுவாரஸியம் முக்கியம் அல்லவா?

அப்பொழுதுதான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நாயகனாக நடிக்கவிருப்பதாகவும் அப்படி நடித்தால் அது நயன் தாராவோடு என்று பேசியதாக ஒரு செய்தி ஓடிக் கொண்டிருந்தது. அதை ஃபேஸ்புக்கிலும் ஆளாளுக்கு கலாய்த்துக் கொண்டுமிருந்தார்கள். சினிமாவில் உருவம் பெரிய அம்சமே இல்லை. விஜய், தனுஷ் போன்றவர்கள் திரைத்துறைக்குள் நுழைந்த போது ‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ என்றுதான் பேசினார்கள். இன்றைக்கு அவர்களைத் தவிர்த்துவிட்டு திரைத்துறையின் வரலாறை எழுத முடியுமா? 

திரைத்துறையில் அழகெல்லாம் பொருட்டே இல்லை. வாய்ப்புதான் முக்கியம். பணம் வைத்திருப்பவர்கள், வாரிசுகள் உள்ளிட்டவர்கள் எளிதாக உள்ளே தலையை நீட்டி விடுகிறார்கள். அதில் திறமையும் அதிர்ஷ்டமும் இருப்பவர்கள் தம் கட்டி மேலே வந்துவிடுகிறார்கள். இந்தத் துறையில் இருப்பவர்கள் யாரிடம் பேசினாலும் 'attitude முக்கியம்’ என்பார்கள். தலைக்கனம், தெனாவெட்டு என்பதெல்லாம் ஒரு கட்டத்திற்கு பிறகு வர வேண்டியவை. எடுத்தவுடனேயே இதையெல்லாம் கடை பரப்பினால் தூக்கிக் கடாசி விடும். சரவணா ஸ்டோர்ஸ்காரர் பணக்காரர் என்பதால் நமக்குத் தெரிகிறது. எத்தனை பேர் சொத்தை அழித்துக் கொண்டு பணத்தை எடுத்து வந்து காணாமல் போயிருக்கிறார்கள்?

எங்கள் ஊரில் ஒருவர் இருந்தார். பைக்கில், காரில், வீட்டின் முன்புறத்தில் என திரும்பிய பக்கமெல்லாம் சிவாஜியின் பெயரை பொறித்து வைத்திருப்பார். கையில் SIVAJI என்று பச்சை குத்தியிருந்தார். அவருக்கு சினிமாதான் ஆசை. அப்பொழுது எங்கள் ஊரில் நிறைய ஷுட்டிங் நடக்கும். ஒவ்வொரு படப்பிடிப்பையும் பார்த்து அங்கேயிருக்கும் எல்லோரிடமும் பேச்சுக் கொடுப்பதுதான் வாடிக்கை. இந்த உலகம்தான் பெரிய தூண்டில் ஆயிற்றே? ஓர் உதவி இயக்குநர் இவரிடம் வந்து ‘சார் ஒரு கதை சொல்லுறேன்’ என்று சொல்லவும் இவர் கேட்டிருக்கிறார். கதையில் இவர்தான் நாயகன். கிட்டத்தட்ட உயரமான ஓமக்குச்சி நரசிம்மன் போலிருப்பார். சற்றே சதை பிடித்தாற்போல இருந்தாலும் அதே சொட்டை அதே முக அமைப்பு. நாயகியாக அந்தச் சமயத்தில் அங்கேயிருந்த ஆம்னியை முடிவு செய்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் அந்தப் பெயரில் ஒரு நடிகை இருந்தார்.

சின்ன சிவாஜி தனது அப்பன் சம்பாதித்து வைத்திருந்த தோட்டங்காட்டையெல்லாம் விற்று பணம் சேர்த்து சென்னைக்குச் சென்றார். அப்பொழுது அரசுத்துறையில் வேலையிலும் இருந்தார். பணம் இருக்கும் வரைக்கும் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. டிஜிட்டல் வராத காலம். எடுத்து முடித்த வரைக்கும் படத்தை பெட்டியில் மூடி வைத்திருந்தார். எப்பொழுது பேசினாலும் ‘கொஞ்சம் பணம் தேவை..இருந்தா ரிலீஸ் செஞ்சுடலாம்’ என்பார். காரை விற்று, வீட்டை விற்று என எல்லாவற்றையும் விற்றும் எதுவும் செய்ய இயலவில்லை. இதெல்லாம் நடந்து இருபது வருடங்கள் இருக்கும். இடையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, வழக்கைச் சந்தித்து என காலம் ஓடிக் கொண்டேயிருந்தது. 

பல வருடங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டிற்கு வந்திருந்த போதுதான் அவரைத் தெரியும். ஒரு சீட்டு நடத்துவதாகவும் அப்பா அதில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கோரினார். அப்பொழுதுதான் இந்த விவரங்களை எல்லாம் பேசினார். ‘டோப்பா வெச்சுட்டேன்...கேமிரா மேன் நம்ம பையன்தான்..அழகா காமிச்சுடுவான்’ அப்பாவுக்கு அதெல்லாம் புரியவில்லை. சிரித்தார். ஆனால் சீட்டில் இணைய முடியாது என்று சொல்லி அனுப்பினார். அதன் பிறகு இந்த சின்ன சிவாஜியை அடிக்கடி சாலைகளில் பார்ப்பதுண்டு. சமீபத்தில் பார்த்த போது ‘இப்போ எல்லாம் டிஜிட்டல் வந்துடுச்சு...ஈஸி..கொஞ்சம் பணம் சேர்த்துட்டு டிஜிட்டலா மாத்தி ரிலீஸ் செஞ்சுடலாம்ன்னு இருக்கேன்’ என்றார். அதிர்ச்சியாக இருந்தது. இயக்குநர் எங்கே இருக்கிறார் என்று தெரியாது; ஆம்னி என்ன ஆனார் என்பதும் தெரியாது. கிட்டத்தட்ட இவரது வாழ்க்கையே முடிந்துவிட்டது. இன்னமும் அந்த ஒற்றைப் படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். 

சினிமா பற்றித் தெரியாமல், அதன் ஆழ அகலத்தைப் புரிந்து கொள்ளாமல், தன் திறமையைத் துல்லியமாக எடை போடாமல் மூழ்கிப் போன பல்லாயிரம் பேர்களில் அவரும் ஒருவர். பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

டப்பிங் தியேட்டரில் உருவம் பற்றிய பேச்சு வந்தது. டப்பிங் தியேட்டர் பணியாளர் ஒருவர் யோகிபாபு பற்றி பேசத் தொடங்கினார். நடிக்க வந்த புதிதில் மிதிவண்டியில் டப்பிங்குக்கு வருவாராம். பிறகு பைக்கில் வந்திருக்கிறார். அதன் பிறகு ஸ்விஃப்ட். இன்றைக்கு இன்னோவா காரில் வருகிறார் என்றார். அவர் திரைத்துறைக்கு வந்து அதிகபட்சமாக பத்து வருடங்கள் ஆகியிருக்கக் கூடும். கடகடவென உயரத்திற்குச் சென்றுவிட்டார். ஆளைப் பிடிப்பதே சிரமம் என்கிறார்கள். நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். நன்றாக இருக்கட்டும். வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து எழுந்து வரும் அத்தகைய மனிதர்கள் உச்சத்தை தொடுவதில் தவறேதுமில்லை. எதற்காக யோகிபாபு பற்றிச் சொல்கிறேன் என்றால் எந்த உருவத்தை பழிக்கிறோமோ, எந்த நிறத்தை மட்டமாகப் பார்க்கிறோமோ அதே உருவமும் நிறமும்தான் அவருக்கு மூலதனம். 

சினிமா என்றில்லை- பொதுவாகவே மற்றவர்களிடம் இல்லாத ஒரு தனித்துவம் நம்மிடம் இருக்கும். அதைக் கண்டறிவதில்தான் வாழ்க்கையின் வெற்றிச் சூத்திரமே அடங்கியிருக்கிறது. அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தத் தனித்துவத்தைக் கண்டறிகிறவர்கள் வெற்றியாளர்களாகிவிடுகிறார்கள். அப்படி கண்டடைய முயலாதவர்கள் அடுத்தவர்களைப் பார்த்து புலம்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.

Apr 17, 2017

தற்கொலையைப் பரிசளிக்கும் விஞ்ஞானிகள்

புளூட்டோ கோள் கண்டுபிடிக்கப்பட்ட தினத்திலிருந்து ‘அது கோளே கிடையாது’ என்று அறிவிக்கப்பட்ட தினம் வரைக்கும் ஒரு முறை கூட அது சூரியனை சுற்றி முடிக்கவில்லை என்ற குறிப்பு கண்ணில்பட்டது. புளூட்டோ சூரியனைச் சுற்றி வர 248 ஆண்டுகள் ஆகும். 1930 ஆண்டு கண்டுபிடித்து 2006 இல் ‘உன்னை கோள்ன்னு சொல்ல முடியாதுப்பா’ என்று அறிவித்துவிட்டார்கள். அமைச்சர் பதவி கொடுப்பதாகச் சொல்லிவிட்டு பதவியேற்பதற்கு முன்பாகவே திருப்பி அனுப்புவது போலத்தான். ஆனால் புளூட்டோ இதையெல்லாம் கண்டுகொள்ளவா போகிறது? ‘நீங்க என்னவோ சொல்லிட்டு போங்க...நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று அதுவாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது.

ஒரே செய்திதான். ஆனால் இந்தச் செய்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பார்க்கக் கூடும்.  

வீட்டுப்பாடத்தை
பாதியில் கைவிட்டு
போட்டது போட்டபடி
உறங்கிக் கொண்டிருக்கிறாள் சிறுமகள்

அவள் விரித்துவைத்த பக்கத்தில்
படபடக்கிறது சூரியக்குடும்பம்

யா.....ருப்பா அத வெலக்குனது
பா....வம்பா புளூட்டோ

அவளது தழுதழுப்பின் வார்த்தைகள்
இந்த அறையில்தான் உறைந்திருக்கின்றன

தனது கடைக்குட்டியை இழந்த சோகத்தில்
தனக்குத்தானே தீ வைத்துக்கொள்ள
திகுதிகுவென வளர்கிறது தீ.

தனது தாயைக் காப்பாற்றச் சொல்லிக்
கதறியபடியே சுற்றிச் சுற்றி வருகின்றன
மீதி எட்டுப்பிள்ளைகளும்.

- லிபி ஆரண்யாவின் உபரி வடைகளின் நகரம் தொகுப்பிலிருந்து

வீட்டுப்பாடத்தை எழுதிக் கொண்டிருக்கும் போதே உறங்கிப் போன சிறுமகள் புளூட்டோவின் மீது பரிதாபப்படுகிறாள். ‘அதை ஏன் கோள் இல்லைன்னு சொன்னாங்க’ என்று தூக்கத்திலேயே தனது வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள். அது குழந்தையின் மனம். அப்படித்தான் இருக்கும்.

இதே செய்தியைக் கவிஞனின் மனம் Fantasy கவிதையாக்குகிறது. அதைத் துருத்தல் இல்லாமல் செய்வதுதான் தனிச்சிறப்பு.

சூரியனுக்கு ஒன்பது குழந்தைகள். அவற்றில் ஒன்றை இழந்துவிடுகிறது. தனது கடைக்குட்டியை இழந்துவிட்ட சோகத்தில் சூரியன் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு எரிகிறது. ‘அய்யோ எங்க அம்மாவைக் காப்பாத்துங்க’ என்று மீதமுள்ள எட்டுக் குழந்தைகளும் கதறிச் சுற்றி வருகிறார்கள்.

புரிந்து கொள்ள எளிது என்றாலும் மனதில் சித்திரமாக்கி ரசிப்பதற்கு ஏற்ற சுவாரஸியமான கவிதை இது.


கவிதை நேரடியானதாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. அது தனது வாசகனை யோசிக்கச் செய்யலாம். பெரும்பாலும் Fantasy கவிதைகளிலிருந்து அவன் தனக்கான சித்திரம் ஒன்றை உருவாக்குகிறான். அவன் சுயமாக உருவாக்கிக் கொள்ளும் அந்த உலகிற்குள் சில கணங்கள் பயணித்து வெளியேறுகிறான். லிபி ஆரண்யாவின் இக்கவிதை அந்தப் பயணத்தை மிக இயல்பாக சாத்தியப்படுத்துகிறது. சூரிய உலகிற்குள் வாசகனை உள்ளிழுத்து வெளியே அனுப்புகிறது.  

நேர்த்தியாக இத்தகைய கண்ணாமூச்சி விளையாட்டுக்களை நிகழ்த்தும் கவிதைகள் ஒரு புதுவெளியை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அப்படியான வெளிகளை உண்டாக்குவதில் லிபி வித்தகர்.
                              
                                                                    ***

கல்லூரியொன்றில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவீன கவிதையை அறிமுகம் செய்யும்படியாக சிறு தொகுப்பை உருவாக்கித் தரும் பணியைத் தந்திருக்கிறார்கள். கவிதை, கவிதை குறித்தான சிறு அறிமுகம், கவிஞர் பற்றிய குறிப்பு என்றிருக்க வேண்டும் என்றார்கள். தமிழில் பல நூறு கவிஞர்கள் இருக்கிறார்கள். பதினைந்து பேர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது சிரமமான காரியம். அதனாலேயே தாமதப்படுத்திக் கொண்டிருந்தேன். நேற்று பயணத்தின் போது திடீரென்று தோன்றியது-  எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் வெகு அமைதியாக கவிதையுலகில் அற்புதமாக இயங்கிக் கொண்டிருக்கிற கவிஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். கண்டராதித்தன், லிபி ஆரண்யா, ஸ்ரீ நேசன் உள்ளிட்ட கவிஞர்களை மனதில் மனதில் வைத்திருக்கிறேன். அவர்களின் எளிமையான கவிதைகளைத் தொகுத்து மாணவர்களுக்குக் கொடுத்துவிடலாம்.

Apr 16, 2017

பசுமை மீட்பு

ஒழலக்கோயில் பஞ்சாயத்தில் திட்டமிட்டபடி பசுமை மீட்பு பணியைத் தொடங்கியிருக்கிறோம். உள்ளூரில் நேர்த்தியாக ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்கள். கோவில் திருவிழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வரிசையாக நாற்காலிகள் போட்டு, கூட்டத்தில் கலந்து கொள்கிறவர்களுக்கு எலுமிச்சம் பழ ஜூஸ் தயார் செய்து, ஒலி பெருக்கி அமைத்து, மிட்டாய்களும் வாங்கி வைத்திருந்தார்கள். திருவிழா போலிருந்தது.நீதிபதி பழனிவேல் அவர்கள் எந்திரத்தைத் தொடங்கி வைத்தார். உறுமியபடி அது ஓடத் துவங்கியிருக்கிறது. உள்ளூர்க்காரர்கள் திரளாக வந்திருந்தார்கள். 

இந்த வாரம் எனக்கு ஓய்வே இல்லை. வியாழக்கிழமை இரவு பெங்களூரிலிருந்து வேமாண்டம்பாளையம், வெள்ளிக்கிழமை இரவு அங்கிருந்து சென்னை, சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து ஒழலக்கோயில் என்று நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக மூன்று இரவுப் பயணம். கண்கள் களைத்திருக்கின்றனதான். ஆனால் இப்படியான பணிகளுக்கு எவ்வளவு அலைந்தாலும் சலிக்கவே சலிக்காது. ஞாயிறு மதியம் ஊரிலிருந்து கிளம்பி வந்து பெங்களூரில் இதை உற்சாகமாகத் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.

செய்கிற வேலையில் திருப்தியிருந்தால் களைப்பு எதுவும் செய்துவிடாது. அவ்வளவு திருப்தி இன்று.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ஓர் ஆசிரியை ஜூஸ் கொடுத்தார். ஒரு சிறுமி இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தார். சிலர் குப்பைகளை அள்ளி ஓரமாக ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் தம் வீட்டு வேலையைப் போல இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். பிறகு ஏன் திருப்தி உண்டாகாது? உள்ளூரில் இதே உற்சாகமும் வேகமும் குன்றாமல் இருக்குமாயின் இந்தப் பஞ்சாயத்தில் மேற்கொள்ளவிருக்கும் பணி அற்புதமான விளைவுகளை உண்டாக்கும்.

ஏற்கனவே எழுதியிருந்தது போல இது வெறும் ஒரு நாள் விளம்பரச் செயல்பாடு இல்லை. புதர்களை நீக்கி, நீர் நிலைகளை மேம்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு என நீண்டகாலத் திட்டமிருக்கிறது. ஆயிரமாண்டு வரலாறு கொண்ட ஊர் ஒழலக்கோயிலும் அக்கம்பக்கத்து ஊர்களும். நாற்பதாண்டுகளுக்கு முன்பு வரை கூட சிறப்பாக விவசாயம் நடைபெற்றிருக்கிறது. இப்பொழுதுதான் வறண்டு மருதமும் முல்லையும் திரிந்து வெறும் பாலையாகிக் கிடக்கிறது. இழந்த பசுமையை மீட்டெடுக்க இருபதாண்டு காலம் கூட பிடிக்கலாம். ஆனால் மீட்கவே முடியாது என்றில்லை என்றுதான் தோன்றுகிறது. இன்று அதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம். தொடர்ந்து செயல்பட வேண்டியதுதான்.


அரசு அதிகாரிகள், உள்ளூர் பெரியவர்கள், இளைஞர்கள் என்று ஆதரவிருக்கிறது. அதனால் நம்பிக்கையும் இருக்கிறது.

வேமாண்டம்பாளையத்தில் நிறையக் கற்றுக் கொண்டோம். அங்கேயிருந்த குறைகள் பெரும்பாலானவற்றை இங்கே களைந்திருக்கிறோம். இங்கே கற்றுக் கொள்ளும் குறைகளை அடுத்த பணியின் போது நிவர்த்தி செய்து கொள்ள வேண்டியதுதான். 

பேச வாய்ப்புக் கிடைத்தது. அதன் காணொளி இது. (Google Chrome இல் திறக்கும்)


எழுதவும் நிறைய இருக்கிறது. எழுதுகிறேன்.