Mar 6, 2017

வேலி முள்

எதிர்பார்த்ததைவிடவும் மிகச் சிறப்பாகவே தொடங்கியிருக்கிறோம். பெங்களூரிலிருந்து கிளம்பி ஊரை அடையும் போது காலை ஆறரை மணியாகியிருந்தது. காலை எட்டு மணிக்கெல்லாம் வேமாண்டம்பாளையத்துக்கு வந்துவிடச் சொல்லியிருந்தார்கள். தூங்குவதற்கென்று நேரமில்லை. கிளம்பிச் சென்றிருந்தோம். குற்றவியல் நீதித்துறை நடுவர் பழனிவேல்தான் சிறப்பு விருந்தினர், அவருக்காக காத்திருந்த சில நிமிடங்களிலேயே வந்து சேர்ந்தார். நீதிமன்றங்களே பல இடங்களில் வேலி முள்ளுக்கு எதிராக களமிறங்கியிருக்கின்றன. பழனிவேல் மாதிரியான ஆர்வமிக்க நீதிபதிகள் இருந்தால் இன்னமும் சிறப்பு. மரம் பிடுங்கப்பட்டு கீழே கிடக்கும் இடத்தில் அவரே இறங்கி இழுத்துப் பார்த்து ‘இந்தளவுக்கு வேரை விட்டீங்கன்னா மறுபடியும் தழைஞ்சுக்கும்..சுத்தமா எடுங்க’ என்கிறார். எந்திரத்தை இயக்குகிறவர் பதறிப் போகிறார். 


‘அடுத்த வாரம் வர்றேன்....வேலை முழுமையா முடியலைன்னா ரிப்போர்ட் அனுப்பிடுவேன்’ என்று வட்டார வளர்ச்சி அலுவலரை அழைத்துச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர்காரர்களுக்கும் எங்களுக்கும் வெகு சந்தோஷம். களத்தை அடையும் வரைக்கும் யோசனைகளும் குழப்பங்களும் இல்லாமல் இல்லை. பணம் கொடுத்துவிட்டு வந்த பிறகு யார் வேலையைப் பார்த்துக் கொள்வார்கள்? வேலை நடைபெறவில்லையென்றால் என்ன செய்வது? என்றெல்லாம் எண்ணங்கள் ஓடிக் கொண்டேயிருந்தன. எவ்வளவுதான் திட்டமிட்டாலும் இத்தகைய சந்தேகங்கள் வரத்தான் செய்யும். ‘நானும் கச்சேரிக்குப் போறேன்’ என்கிற கதையாக வெறுமனே ஆரம்பித்து பந்தா காட்டிவிட்டு விட்டுவிட்டால் என்ன அர்த்தமிருக்கிறது? 


ஆனால் தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு பெருமளவு சந்தேகம் குறைந்திருக்கிறது. உள்ளூர்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீதிபதி கவனித்துக் கொள்வார். நம்பிக்கையிருக்கிறது.

video


சந்தைக்கடையில் தொடங்கி ஊர் முழுவதுமாக வேலி முட்களை அழித்துவிட்டு பிறகு குளத்துக்கு ஜேசிபி எந்திரம் செல்கிறது. கிட்டத்தட்ட அறுபது ஏக்கர் குளம் அது. அவிநாசி-அத்திக்கடவு திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதைப் பற்றி கூடிய விரைவில் விரிவாக எழுதுகிற திட்டமிருக்கிறது. ஒருவேளை அரசாங்கமும் ஆளுவர்க்கமும் மனது வைத்து பன்னெடுங்காலமாக வெறும் கோரிக்கையாகவே கிடக்கும் அத்திட்டத்தை நிறைவேற்றினால் கடைசியாக அத்திக்கடவு தண்ணீர் வேமாண்டம்பாளையத்துக் குளத்தைத்தான் வந்தடையும். அத்திக்கடவு திட்டத்தின் கடைசி நீர்பிடிப்புக் குளம் வேமாண்டம்பாளையத்துக் குளம். அதைத்தான் சுத்தம் செய்யப் போகிறோம். இப்பொழுது நீர்ப் வரத்துப் பாதைகள் அடைபட்டு, குளம் முழுக்கவும் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்து கிடக்கின்றன. அதைச் சுத்தம் செய்து வைக்க வேண்டும்.


பல நூறு ஏக்கர் நிலங்களுக்கு நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நீராதாரமாக விளங்கிக் கொண்டிருந்த ஆழ்குழாய் கிணறுகளுக்கும் (பெரும்பாலானவை இப்பொழுது காய்ந்துவிட்டன) இந்தக் குளம்தான் நீர் பிடிப்புப் பகுதி. அந்தக் குளத்தைத்தான் சரி செய்யப் போகிறோம். பணி ஒழுங்காக செய்து முடிக்கப்பட்ட பிறகு ஒன்று அல்லது இரண்டு மழை பெய்தால் போதும். நாம் விவசாயிகளுக்கு செய்த பேருதவியாக இது இருக்கும்.

படங்களைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். வெக்கையில் ஊரே வெடித்துக் கிடக்கிறது. விவசாயம் முற்றாகப் பொய்த்துப் போயிருக்கிறது. கால்நடைகளுக்கும் கூட மேய்ச்சல் அருகிவிட்டதாகச் சொன்னார்கள்.

இந்த சீமைக்கருவேல மர ஒழிப்புப் பணிக்காக. ஒய்ஸ்மென் அமைப்பினர் ஒரு லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து இன்னமும் நிதியை வழங்கவில்லை. கையோடு காசோலையை எடுத்துச் சென்றிருந்தேன். ‘வைங்க தம்பி..வேலை நடக்கட்டும்...உங்ககிட்ட இருந்தா பேங்க்ல இருக்கிற மாதிரிதானே? தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறோம்’என்று சொல்லிவிட்டார்கள். அவ்வளவு நம்பிக்கை. சிரித்துக் கொண்டே வந்துவிட்டேன்.

சனிக்கிழமையன்று வேலை ஆரம்பித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையும் அங்கேயே ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தோம். செய்தவரைக்கும் சுத்தமாக வேலை செய்திருக்கிறார்கள். இன்னமும் எவ்வளவு நாட்கள் வேலை நடக்கும் என்று துல்லியமாகத் தெரியவில்லை. வருகிற புதன்கிழமையன்று ஒரு முறை செல்கிறேன். அடுத்த வாரத்தில் ஐந்து நாட்கள். சனி ஞாயிறு ஆரம்பித்து புதன்கிழமை வரைக்கும் வேலை நடக்கும் இடத்திற்குச் சென்றுவிடுவேன். அதற்குள் ஓரளவுக்கு பணி நிறைவடைந்துவிடும் என்ற நம்பிக்கையிருக்கிறது. அதன்பிறகு விவரங்களை முழுமையாக பதிவு செய்கிறேன்.

உள்ளூர்காரர்கள், மருத்துவர் சத்தியசுந்தரி, ஒருங்கிணைத்துக் கொடுத்த எஸ்.வி.சரவணன், இரண்டு மூன்று நாட்களாக ஒவ்வொரு பகுதியாகச் சுற்றியலைந்து விவரங்களைச் சேர்த்த அரசு தாமஸ், கார்த்திகேயன், உறுதுணையாக இருக்கும் குமணன், கள்ளிப்பட்டி உதய், அவரது நண்பர்கள், உள்ளூர் பஞ்சாயத்து தலைவர், அபிலாஷ், நிரஞ்சன் என அத்தனை பேரின் பங்களிப்பும் இருக்கிறது. தாமசு மற்றும் கார்த்திகேயன் இருவரும் இன்றிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்த்து வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். எஸ்.வி.சரவணன் நீதிபதியிடமும் அரசு அதிகாரிகளிடமும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

சரியாகச் செய்துவிடுவோம் என்றுதான் தோன்றுகிறது.

எப்பொழுதுமே நிசப்தம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி உறுதுணையாக இருக்கும் அத்தனை பேருக்கும் அந்தப் பகுதி மக்களின் நன்றி உரித்தாகும். தொடக்க நிகழ்வில் கோவையிலிருந்து வந்து கலந்து கொண்ட பூபதி, தனது தந்தையை அனுப்பி வைத்திருந்த ரமேஷ், ஈரோடு மூர்த்தி உள்ளிட்ட நிசப்தம் நண்பர்களுக்கும் நன்றி.

இவ்வளவு தோள்கள் துணை நிற்கவில்லையென்றால் இத்தகைய பணிகளை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் எல்லாம் இல்லையென்றால் அறக்கட்டளையின் பெயரில் ஓரணுவும் அசையாது.