Mar 2, 2017

அரசுப்பள்ளி மாணவர்கள்தான் கேடயமா?

‘நீட்’ மாதிரியான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதும் மருத்துவப் படிப்புக்குச் சேரவிருக்கும் மாணவர்களை கடுமையாக வடிகட்டுவது அவசியம் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. காரணமில்லாமல் இப்படிச் சொல்லவில்லை. இன்றைக்கு கோடிகளில் பணம் வைத்திருக்கிறவர்கள் தங்கள் மகனையோ அல்லது மகளையோ எழுபத்தைந்து லட்சம் வரைக்கும் கொடுத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துவிடத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் நீட் தேர்வு என்பது பெரிய தடைக்கல். பணம் கொடுத்து இடம் வாங்குவதாக இருந்தாலும் கூட நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்ணை வாங்க வேண்டும். இதுதான் பிரச்சினை. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு வந்து ‘அய்யோ....அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் தெரியுமா?’ என்று கதறுவார்கள். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதைதான் இது.

சரியான புள்ளிவிவரம் கைவசம் இல்லாமல் விழித்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் ஒரு நண்பர் அனுப்பி வைத்திருந்தார்.

ராமநாதபுரத்தைச் சார்ந்த ராஜூ என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரங்களைக் கேட்டிருக்கிறார். 2009-10 ஆண்டிலிருந்து கடந்த எட்டு வருடங்களில் சற்றேறக்குறைய முப்பதாயிரம் மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று நினைக்கிறீர்கள்? வெறும் 278 பேர்தான். கணக்குப் போட்டால் ஒரு சதவீதம் கூட இல்லை. இதுதான் நம் மாநிலத்தில் அரசுக் கல்வியின் லட்சணம். அரசுப் பள்ளிகளை மெல்ல மெல்ல நசுக்கி தனியார் பள்ளிகளை உசுப்பேற்றுவதுதான் கடந்த பதினைந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறதே.

அரசுப் பள்ளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் அரசுப் பள்ளிகளில்தான் மாணவர்களை மிரட்டக் கூடாது, அடிக்கக் கூடாது என்று ஆயிரம் விதிகளை அரசாங்கம் வகுக்கிறது. தனியார் பள்ளிகளைப் பற்றி அரசாங்கம் ஏதாவது மூச்சு விடுகிறதா? அங்கேயெல்லாம் விடிய விடிய மாணவர்களை விழிக்க வைத்துப் படிக்க வைக்கிறார்கள். சத்தம் வெளியே வராமல் அடித்து கும்முகிறார்கள். கிட்டத்தட்ட சித்ரவதைக் கூடங்களாகத் தனியார் பள்ளிகளின் மேனிலைக் கல்வி இருக்கிறது. அடித்து, உதைத்து பிழிந்து எப்படியாவது உந்தித் தள்ளி விடுகிறார்கள். பெற்றோர்களும் கண்டுகொள்வதில்லை. அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை.

அரசுப்பள்ளிகளிலும் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் விதிமுறைகள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கட்டும். தனியார் பள்ளிகளை மட்டும் தாஜா தாஜா என்று வைத்திருந்தால் அடுத்தடுத்த வருடங்களும் தனியார் பள்ளிகளில்தான் மாணவர்களைக் கொண்டு போய் அமுக்குகிறார்கள். கூலி வேலைக்காரராக இருந்தாலும் கூட அரசாங்கப் பள்ளிகளை விரும்புவதில்லை என்றால் எப்படி விரும்புவார்கள்?

பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தினால் அரசுப் பள்ளி மாணவர்களால் ஜொலிக்க முடியாது என்பதெல்லாம் புரட்டுவாதம். அரசுப் பள்ளி மாணவர்களைச் சாக்காகக் காட்டி பணக்காரர்களின் பிள்ளைகளைத் தாங்கிப் பிடிக்கிற அயோக்கியத்தனம். அரசுப் பள்ளி மாணவர்கள் எப்பொழுதுமே பரிதாபம்தான். அவர்களைச் சுட்டிக் காட்டியே நுழைவுத் தேர்வு ரத்து, நீட் தேர்வு வேண்டாம் என்று சோம்பேறிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வெறுமனே பாடத்தை மனனம் செய்து வாந்தியெடுத்து மதிப்பெண்களை வாங்கினால் போதும் என்றால் தனியார் பள்ளி மாணவர்கள்தான் மதிப்பெண்கள் வாங்குவார்கள். அங்கேதானே ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் அமுக்கி படிக்க வைக்கிறார்கள்?

பொதுவான நுழைவுத் தேர்வை நடத்தினால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல்லதுதான். வெறுமனமே மனனம் செய்தால் போதும் என்றில்லாமல் புரிந்து எழுதுகிற தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை வாங்குவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஒருவேளை நீட் தேர்வு நடைபெற்றால் மருத்துவப்படிப்பில் சேரக் கூடிய அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சற்றே கூடினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அதற்கு விடமாட்டார்கள். வாந்தியெடுக்கிற தேர்வு முறைதான் இவர்களுக்கு தோதுப்படும். அப்பொழுதுதான் மேனேஜ்மெண்ட் கோட்டா கல்லா கட்டும்.

நீட் தேர்வு நடைபெறுவதால் அந்நிய மாநில மாணவர்கள் யாரும் இங்கே வந்து சேர்ந்துவிடப்போவதில்லை. தமிழகத்திற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களின் எண்ணிக்கை அப்படியேதான் இருக்கும். ஆனால் அந்தப் படிப்பில் சேர்வதற்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணை நீட் தேர்வில் வாங்க வேண்டும். பீட்சாவும் பர்கரும் தின்றுவிட்டு சோபாவில் அமர்ந்து டிவி பார்த்தபடியே எழுநூற்றுச் சில்லரை வாங்கிய பணக்காரப் பையனால் ஒரு கோடி ரூபாய் கொடுத்து எம்.பி.பி.எஸ்ஸில் சேர முடியாது. அதனால்தான் பணக்கார பெற்றோர்கள் பதறுகிறார்கள். 

வேறு காரணங்களைச் சொன்னால் விவாதிக்கலாம்.

உடனடியாக நீட் தேர்வு நடத்தக் கூடாது என்று கோரிக்கை வைப்பதற்கு ஒரே காரணம்தான் - CBSE பாடப்பிரிவில் மாணவர்கள் பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள். இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இடைவெளி கொடுத்து ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பிலிருந்தே பாடத்திட்டங்களை சற்றே மேம்படுத்தி அமைத்துக் கொடுத்தால் நீட் தேர்வு என்பது தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பெரிய சிரமத்தைக் கொடுக்காது என்கிற அடிப்படையில்தான் மூன்று அல்லது நான்கு வருட இடைவெளி கேட்பது.

ஒருவேளை அரசாங்கம் ‘அதெல்லாம் தர முடியாது’ என்று சொன்னாலும் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன். கடந்த எட்டு வருடங்களாக சராசரியாக வருடத்திற்கு 34 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். அடுத்த சில வருடங்களுக்கு அந்த எண்ணிக்கை பத்து அல்லது இருபது என்கிற அளவுக்கு குறைந்தாலும் கூட ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடாது.

இன்று ப்ளஸ் டூ தேர்வு ஆரம்பமாகிறது.

நீட் தேர்வு குறித்தான பெரிய அளவிலான விவாதம் ஏதுமில்லை. இதைப் பற்றி பேசுகிற ஆட்களின் எண்ணிக்கையும் வெகு குறைவு. ஆனாலும் ஒன்றும் பிரச்சினையில்லை.  நீட் தேர்வு நடத்தப்பட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடுமோ என்கிற பயத்தில்தான் சற்றே அடக்கி வாசித்தேன். மேற்சொன்ன புள்ளிவிவரத்தைப் பார்த்த பிறகு தைரியமாகவே நீட் தேர்வை ஆதரித்துப் பேசலாம். கடுமையான வடிகட்டலுக்குப் பிறகு மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேரட்டும். இல்லையென்றால் வேறு படிப்புகளைப் படிக்கட்டும். இதே கடுமையை பொறியியல் படிப்பிலும் அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்றே குரல் கொடுக்கலாம். 

பணக்காரர்களின் பிள்ளைகளும் தனியார் பள்ளிகளும் கைகோர்த்து வேட்டையாடுவதற்கு அரசுப் பள்ளி மாணவர்கள்தான் கேடயம். இல்லையா? அயோக்கியப்பயல்கள்.