Mar 3, 2017

மக்கள் குரல்

ஒரு கட்டுரையொன்று வாசிக்கக் கிடைத்தது. புவியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கான ஐந்தரைக் கோடி கிலோமீட்டர் தொலைவைத் தாண்டிச் சென்று சேர தயாரிக்கப்பட்ட மங்கள்யானுக்குச் செய்யப்பட்ட செலவு 450 கோடி ரூபாய். . இந்த விவரம் எதற்கு? காரணமிருக்கிறது. பெங்களூரில் ஒரு இரும்பு மேம்பாலம் கட்டத் திட்டமிட்டார்கள். போக்குவரத்தைக் குறைப்பதாகச் சொல்லி திட்டமிடப்பட்ட இந்த மேம்பாலத்தின் மொத்த தொலைவு வெறும் 6.7 கிலோமீட்டர்தான். ஆனால் செலவு கணக்கு என்று எவ்வளவு திட்டமிட்டிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? 1800 கோடி ரூபாய். பணம் கூட போய்த் தொலைகிறது. இந்த மேம்பாலத்துக்காக 800 மரங்களையும் வெட்டப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். அதுதான் பலரையும் பொங்க வைத்துவிட்டது.


ஏற்கனவே பெங்களூரில் மழை இல்லை. தண்ணீர் பஞ்சம் கெட்ட ஆட்டம் போடுகிறது. இந்த லட்சணத்தில் இப்படியே மரங்களை வெட்டிக் கொண்டிருந்தால் என்னதான் செய்து தொலைவது? ஏகப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றன. குழந்தைகள் மரங்களைக் கட்டிப்பிடித்தெல்லாம் கோஷம் எழுப்பினார்கள். ம்ஹூம். ஒன்றும் பலனில்லை. பசுமைத் தீர்ப்பாயத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். கடந்த அக்டோபர் மாதம் பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடையும் விதித்திருந்தது. ஆனாலும் எல் & டி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பூர்வாங்க வேலைகள் வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தன.

நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்- அரசியல்வாதிகளுக்கு வேறு எந்தத் திட்டத்தையும் விட சாலை அமைப்பதுதான் மிகப் பிடித்தமானது. சாலை அமைப்பதில்தான் இருப்பதிலேயே பெரிய வருமானம். ‘லம்ப்பா கிடைக்கும்ண்ணே’என்பார்கள். என்ன போராட்டம் நடந்தாலும் சரி; நாங்கள் சாலையை அமைத்தே தீருவோம் என்றுதான் விடாப்பிடியாக இருந்தார்கள். உள்ளூர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ தினேஷ் குண்டுராவ் கூட கெஞ்சினார். ‘இந்தத் திட்டத்தினால் தேர்தலில் தர்ம அடி விழுந்துவிடும்...கைவிடுங்கள்’ என்று அவர் கேட்டதற்கும் கூட காது கொடுக்கவேயில்லை.

அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. பாஜகவிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கி மீண்டும் தாய்க்கட்சியில் ஐக்கியமாகி மாநில தலைவரும் ஆகிவிட்ட எடியூரப்பா வெகு தீவிரமாக இருக்கிறார். தினசரி ஒரு போராட்டத்தை நடத்துகிறார். ‘காங்கிரஸ் கட்சி இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை இழந்துவிட்டது. கட்சி திவால் ஆகிக் கொண்டிருக்கிறது. உத்தரபிரதேசத் தேர்தலைச் சந்திக்கக் கூட நம் மாநிலத்திலிருந்துதான் தலைமைக்கு பணம் அனுப்புகிறார்கள்’ என்று குண்டைப் போட்டார். இன்னுமொரு வருடம் முதல்வர் பதவியில் நீடிப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாய் தருவதாக சித்தராமைய்யா ஒத்துக் கொண்டிருக்கிறார் என்று இன்னொரு குண்டு. இப்படி அடிமேல் அடியாக வைத்துக் கொண்டிருக்க இன்னொரு பகக்ம் இரும்பு மேம்பாலத் திட்டமும் காங்கிரஸின் பெயரை நாறடித்துக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு கோவிந்தராஜூ என்ற ஒரு எம்.எல்.சியின் வீட்டிற்கு பாஜக அரசாங்கம் வருமான வரித்துறையை அனுப்பி வைத்து ஒரு டைரியை அமுக்கியது. கோவிந்தராஜூ முதல்வர் சித்துவுக்கு வலது கை. அதனால்தான் அவருக்கு வலை வீசினார்கள். ‘டைரியில் இருக்கிற கையெழுத்தே என்னுடையதில்லை’ என்று கோவிந்தராஜூ கதறிப் பார்த்தார். கேட்கிறபடி இல்லை. ஊடகங்கள் டைரி விவகாரத்தைத் தலைப்புச் செய்தியாக்கின. இரும்பு மேம்பாலத்தை ஆரம்பிக்க அறுபத்தைந்து கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டதை டைரியில் எழுதி வைத்திருக்கிறார் என்று செய்தி பரவியது. அதாவது, திட்டத்தை தொடங்குவதற்கு மட்டும் அறுபத்தைந்து கோடி ரூபாய். திட்டம் முழுமையாக முடியும் போது எவ்வளவு அடிப்பார்கள் என்று கேள்வி எழுப்பின.

போராட்டக்காரர்களுக்கு எண்ணெய் ஊற்றியது போலாகிவிட்டது. மரத்தை வெட்டுகிறார்கள் என்பதைக் கூட விட்டுவிட்டு இந்தத் திட்டமே ஊழல்தான் என்றுதான் கிளம்பினார்கள். இன்னும் ஒரு வருடத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு காங்கிரஸூக்கு மண்டை இடி ஆகிவிட்டது. சித்தராமையா ஒரு நாள் முழுவதும் அறைக்குள் பூட்டிக் கொண்டு யாரையுமே சந்திக்கவில்லை என்று கூடச் சொன்னார்கள். அவருக்கும் டென்ஷன் எகிறியிருக்கும் அல்லவா? காங்கிரஸைக் கிழித்துத் தொங்கவிடுவதற்கு எதிர்கட்சிகளுக்கும் அருமையான வாய்ப்பு. அவர்களுக்கும் மரங்கள் என்பதைவிடவும் பணம் என்பதுதான் பிரதானமாக இருந்தது.

எல்லாமுமாகச் சேர்ந்து நேற்று ‘இந்தத் திட்டம் கைவிடப்படுகிறது’ என்று அறிவித்துவிட்டார்கள். எந்நூறு மரங்கள் தப்பித்துவிட்டன. தேர்தலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அடுத்த வருடம் தேர்தல் மட்டும் வராமல் இருந்தால் நிச்சயமாக மரங்களை வெட்டி வேலையை ஆரம்பித்திருப்பார்கள். காங்கிரஸ் கர்நாடகத்தையும் இழந்துவிட்டால் உத்தரகண்ட்டும், ஹிமாச்சல பிரதேசமும் மட்டும்தான் அதன் கைவசம் இருக்கும். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றிரண்டை வைத்திருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையிலும் அவை அரசியல்/பொருளாதார முக்கியத்துவமில்லாத மாநிலங்கள். அதனால் கர்நாடகாவை இழந்துவிடக் கூடாது என்றுதான் வெகு தீவிரமாக இருக்கிறார்கள். சித்துவும் எடியும் கட்டிப்புரண்டு கொண்டிருக்கிறார்கள்.

எப்படியோ மரங்கள் தப்பித்துவிட்டன. பெரிய ஆசுவாசம் இது.

வெட்டப்படவிருக்கும் மரங்கள் குறித்து கடந்த சில மாதங்களாக Bangalore Mirror பத்திரிக்கை மட்டும் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தது. ‘நம்மால் என்ன செய்ய முடியும்?’ என்று யோசித்துக் கொள்வேன். முடிந்தவரை இந்தச் செய்திகளை வாசிப்பதையே தவிர்த்துவிடுவதுண்டு. அரசியல்வாதிகள் இருந்த உறுதியைப் பார்த்தால் எப்படியும் வெட்டிவிடுவார்கள் என்றுதான் தோன்றியது. தேவையில்லாமல் மனதுக்குள் போட்டு உழப்பி என்ன செய்யப் போகிறோம் என்ற சலிப்பும் இல்லாமல் இல்லை. பசுமைத் தீர்ப்பாயத்தின் தடை கூட அவர்களை எதுவுமே செய்யவில்லை என்பது அயற்சியாக இருந்தது. ஆனால் மக்களின் எதிர்ப்பு திரண்டு வந்தால் அரசியல்வாதிகள் சற்றே பின்வாங்குவார்கள் என்ற நம்பிக்கை மிகச் சமீபமாக உருவாகியிருக்கிறது. ஜல்லிக்கட்டு ஓர் உதாரணம். இரும்பு மேம்பாலம் இரண்டாவது உதாரணம். இனி வருங்காலத்தில் இது தொடரக் கூடும்.

ஈரோட்டிலிருந்து மேட்டுப்பாளையம் வரைக்கும் நான்கு வழிச்சாலையாக மாற்ற ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. ஊர்ப்பக்கத்தில் ஒரு சலனமும் இல்லை. ‘நம்மை வீட்டை விட்டு காலி பண்ணச் சொல்லாமல் இருந்தால் சரி’ என்று மக்கள் இருக்கிறார்கள் போலிருக்கிறது. அரசின் கணக்குத்தான் ஆயிரத்து சொச்சம் மரங்கள். தன்னார்வலர்கள் எடுத்த கணக்கு எட்டாயிரத்துச் சொச்சம் மரங்கள். பசுமைத் தீர்ப்பாயத்தின் மீது சற்றே நம்பிக்கையிருக்கிறது. சரியான வழக்கறிஞர் ஒருவரைப் பிடித்து வழக்கை அங்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அதைவிடவும் மக்களிடடையே விழிப்புணர்வு உண்டாக வேண்டும். மக்களின் குரல் மட்டும்தான் எதிர்காலத்தில் ஒரே வெளிச்சம். நமக்கு என்ன வந்தது என்றிருந்தால் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.