Mar 17, 2017

நிசப்தம்

நிசப்தம் என்றொரு படம் வரவிருக்கிறது என்பது இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தெரியும். இனி யாராவது கூகிளில் நிசப்தம் என்று தேடினால் படம்தான் முதலில் வருமே என்று அங்கலாய்ப்பாகத்தான் இருந்தது. இன்றைக்கு மதராசப்பட்டினம் என்று தேடினால் ஆர்யாவும் எமிஜாக்சனும்தான் முதலில் வந்துவிழுகிறார்கள். அது அப்படித்தான். ஒரு பெயரில் படம் வந்துவிட்டால் அதன் பிறகு இணையத்தில் படம்தான் முக்கியத்துவம் பெறும். மதராசப்பட்டினத்தில் ஆர்யாவும் எமிஜாக்சனும் நடித்திருக்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொண்டுதான் சென்னையின் பழைய பெயர் மதராசப்பட்டினம் என்று தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த பத்து வருடங்களாக நிசப்தம் என்று கூகிளில் தேடினால் நிசப்தம்.காம் தான் முதலில் வரும். அந்த இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டுமே என்கிற அங்கலாய்ப்புதான்.

2015 சமயத்தில் பெங்களூரில்தான் நிசப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தினசரி அலுவலகத்துக்குச் செல்லும் வழியில்தான் படப்பிடிப்புத் தளமும் இருந்தது. இயக்குநர் மைக்கேல் அருணுக்கு வாழ்த்துச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதே மின்னஞ்சலிலேயே நான் நிசப்தம் என்ற வலைப்பதிவில் தினமும் எழுதுவதாகச் சொல்லி அதையும் குறிப்பிட்டிருந்தேன். அவர் தனது படத்தின் சில நிழற்படங்களை அனுப்பி வைத்திருந்தார். இடையில் ஒரு முறை அலைபேசியிலும் பேசினோம். அப்பொழுதே கூட கொரியன் படமான ‘ஹோப்’ கதையை இன்ஸ்பிரேஷனாக வைத்துத்தான் தமது படத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். எந்த நம்பிக்கையில் என்னிடம் சொன்னார் என்று தெரியவில்லை. அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் ஹோப் திரைப்படத்தைத் தேடிப் பார்த்தேன். ஹோப் வலியுண்டாக்குகிற படம். சாதாரணமாகப் பார்த்துவிட முடியாது.

மைக்கேல் திருவண்ணாமலைக்காரர்.

பெங்களூரில்தான் இளம் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வது சர்வ சாதாரணமாகிக் கொண்டிருக்கிறது அல்லவா? பல செய்திகள் வெளியிலேயே வருவதில்லை. ஒன்றிரண்டு செய்திகள் கசிந்தாலும் அடுத்த சில நாட்களில் நீருற்றி அணைத்து புகைச்சலே இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். விப்ஜியார் என்ற பள்ளியிலேயே வைத்து ஆறு வயது பெண் குழந்தையை பள்ளி ஆசிரியர் வன்புணர்ந்தான். போராட்டமெல்லாம் நடத்தினார்கள். பள்ளியையையே மூடச் சொன்னார்கள். விடுவார்களா கல்வித் தந்தைகள்? அடுத்த ஒன்றரை வாரங்களுக்குத்தான் எல்லாமும். அதன் பிறகு எல்லாமே வழக்கம் போல செயல்படுகின்றன. பள்ளி செயல்படுகிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். அந்தத் துன்பத்தை அனுபவித்த குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும்தான் வாழ்நாளுக்குமான துன்பம்.

புத்தாண்டு சமயத்தில் கவனித்தீர்களா என்று தெரியவில்லை? தொடர்ச்சியாக பெங்களூரின் சிசிடிவி கேமிராக்களின் ஒளிப்பதிவுகள் வெளியாகிக் கொண்டேயிருந்தன. தனியாகச் செல்லும் பெண்கள், குழந்தைகளை புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் அவை. அதன் பிறகு என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தெரியவில்லை. பணமும் வசதியும் கொட்டக் கொட்டத்தான் இங்கே அத்துமீறல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. ஜன நெரிசல் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ‘நமக்கு வம்பு வேண்டாம்’ என்று சாளரங்களையும் கதவுகளையும் அடைத்துக் கொள்கிற போக்கு பெருகியிருக்கிறது. இளம் குழந்தைகள்தான் பாவம். வெளியில் சொல்ல முடியாமல் பயந்தே பாதிச் சம்பவங்களைச் சொல்லாமல் விழுங்கிக் கொள்கிறார்கள்.


ஹோப் படத்தையும், பெங்களூரில் நடைபெற்ற ஒரு பெண் குழந்தை மீதான பாலியல் துன்புறுத்தலையும் அடிப்படையாக வைத்து மைக்கே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்துக்கு விகடனில் நல்ல விமர்சனம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள்.

படத்தை இயக்கி முடித்து இரண்டு ஆண்டுகாலம் வெளிவராமல் கிடப்பது பெருந்துன்பம். இது வெறுமனே தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் பாடு மட்டுமில்லை. தொழில்நுட்பக்கலைஞர்கள், சினிமா நடிகர்கள் என்று நிறையப் பேருக்கு வெளியாகாமல் கிடக்கும் படம் அவர்களுக்கான நம்பிக்கையை புதைத்து வைத்துக் கிடக்கக் கூடும். ‘ஓ..அந்தப் படத்துல வேலை செஞ்சிருக்கீங்களா? அது வரட்டும்...பார்த்துட்டு சொல்லி அனுப்புறேன்’ என்ற பதிலைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருக்கக் கூடும். ஒரு படம் வெளியாகவில்லை என்பது வெறுமனே நிதி சார்ந்த முடக்கம் மட்டுமில்லை. பல பேரின் வாழ்க்கை சார்ந்த முடக்கம். 

நிசப்தம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது வெளியாகியிருக்கிறது. நல்ல படம் என்றாலும் கூட வெளியில் பரவலான பேச்சு உருவாகவில்லை. சமூகத்தின் அசலான பிரச்சினைகளை பேசுகிற படங்களும் படைப்புகளும் பரவலாக விவாதிக்கப்பட்டு கவனம் பெறுவது காலத்தின் அவசியம். நிசப்தம் அப்படியானதொரு கவனத்தைப் பெற வேண்டிய திரைப்படம். பெண் குழந்தைகள் மீதான நடக்கிற பாலியல் அத்து மீறல்கள், அதற்கான உளவியல் சிக்கல்கள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சமூகத்தின் பொதுத்தளத்தில் உருவாக்கப்பட வேண்டிய புரிதல்கள் என நாம் பேச வேண்டிய பல விஷயங்களுக்கு இத்தகைய படைப்புகள் அச்சாரமிடக் கூடும்.

அந்த விதத்தில் இத்தகைய படங்கள் வசூல் ரீதியிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். இயக்குநர் மைக்கேல் அருணுக்கும், படக்குழுவினருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!