Mar 16, 2017

எலி மவனே

வீட்டில் என்ன அக்கப்போர் வேண்டுமானாலும் இருக்கலாம். எலிகளின் அக்கப்போர் மட்டும் ஆகவே ஆகாது. பெங்களூரில் வீட்டைச் சுற்றிலும் நிறைய காலியிடங்கள் இருக்கின்றன. காலியிடங்களைச் சுற்றி புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. மண்டிக் கிடக்கும் புதர்களுக்குள் எலிகள் அம்மணமாய் ஓடிப் பிடித்து குட்டி போடுகின்றன. அது பிரச்சினையில்லை. வீட்டிற்குள்ளும் ஓடி வந்துவிடுகின்றன.

தினசரி எலிப்பொறியைத் திறந்து முறுக்கு அல்லது தேங்காய்த் துண்டில் நெய் தடவி அதைக் கொக்கியில் மாட்டிவிட்டுப் போவது தம்பியின் வழக்கம். அலுவலகத்திற்குக் கிளம்பும் தருணத்தில் எலிப்பொறிக்குள் நான் பார்க்கும் போதெல்லாம் நெய்யும் முறுக்குமாய் தின்று கொழுத்த எலி ஒன்று என்னைப் பார்த்து பயந்தபடி முழிக்கும். சுற்றியிருக்கிறவர்கள் எல்லோரும் ‘நீ நல்லவண்டா’ என்று வடிவேலு கணக்கில் சொல்லி உசுப்பேற்றி வைத்திருக்கிறார்கள் அல்லவா? எந்நேரமும் ‘என்னை ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்னு சொல்லிட்டாங்க’ என்றே எமோஷனலாகத் திரிகிறேன். இனிமேல் நடக்கும் போது கையில் மயில் தோகை ஒன்றை எடுத்து கூட்டியபடியே எறும்பு பூச்சிககளை எல்லாம் மிதிக்காமல் நடப்பது ஒன்றுதான் பாக்கியாக இருந்தது.

எலி சிக்கிய பொறியைத் தூக்கிக் கொண்டு போகும் போதெல்லாம் அம்மா ‘அடேய்... பக்கெட்ல தண்ணியைப் புடிச்சு உள்ள போடு’ என்பார். 

‘ச்சே!ச்சே! காந்தி 48ல செத்து போய் 82 ல உங்க வயித்துல வந்து பொறந்துருக்காரு’ என்பேன். அப்பொழுது நடிகர் தனுஷ் நல்லவனாக எப்படி நடிப்பாரோ அப்படியொரு முகபாவனையைக் காட்டுவதுண்டு. அம்மா தலையில் அடித்துக் கொண்டு ‘திருந்தாத ஜென்மம்’ என்று நினைத்துக் கொண்டு உள்ளே போய்விடுவார். நான்கைந்து புத்தன் ஏழெட்டு காந்தி ஆறேழு ஏசுக்கள் உள்ளே இருப்பதான பூரிப்பில் நான்கைந்து வீடுகள் தள்ளிச் சென்று பொறியைத் திறந்தால் அது வெகு வேகமாக ஏதோவொரு திசையில் ஓடிப் போகும். இனிமேல் வராது என்று நினைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பிச் செல்வேன்.

தினசரி இதே கதைதான்- கடந்த சில மாதங்களாகவே.

தம்பி சண்டைக்கே வருவான். ‘எங்க கொண்டு போய் விட்டாலும் திரும்ப வந்துரும்டா’ என்பான். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்தே அவன் என்னை அடே புடே என்றுதான் பேசுகிறான். நாமாகவே நம்மை பெரிய மனுஷன் என்று நம்பிக் கொள்ள வேண்டியதுதான். வீட்டிலேயே அவ்வளவுதான் மரியாதை. அவனிடம் கீதாபதேசம் பேசினால் கையில் சிக்கியதை எடுத்து எறிந்துவிடக் கூடும் என்பதால் அரை கிலோமீட்டருக்கு அந்தப்பக்கமாக விட்டிருப்பதாகச் சொல்லிவிடுவதுண்டு. அவன் பொறி வைப்பதோடு சரி. எலியை ஒரு நாளும் பார்த்ததில்லை என்பதால் ஒரே எலியா அல்லது வேறு வேறு எலியா என்று அவனுக்குத் தெரியவே தெரியாது. எனக்கும் கால்களைத் தூக்கிப் பார்த்து அடையாளம் வைத்துக் கொள்கிற அளவுக்கு விவரம் பத்தாது. 

இளிச்சவாயனாக இருந்தால் எலி கூட நம் மீது ஏறி ஒன்றுக்கடித்து விளையாடுமாம். 

சனிக்கிழமையன்று ஊருக்குக் கிளம்பினோம். மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு குடும்பத்தோடு கிளம்பும் போதே கெட்ட வாடை வீசத் தொடங்கியது. ‘என்னடா இது எலி செத்துப் போன நாத்தம் அடிக்குது?’ என்று ஆளாளுக்குக் கேட்டார்கள். ஆமாம் என்று நானும் தலையை ஆட்டினால் எல்லாம் இவனால்தான் என்று மொத்தப் பொறுப்பையும் என் தலை மீது இறக்கி வைத்து வீடு சென்று சேரும் வரை கும்மியடிப்பார்கள். ‘எனக்கு அடிக்கலையே’ என்று சொல்லியபடியே ஓசுர் வரைக்கும் சமாளித்தேன். இதெல்லாம் மறைக்கிற சமாச்சாரமா? குடலைப் புரட்டிக் கொண்டு வந்தது. ‘எல்லோரும் ஜன்னலைத் திறந்து வெச்சுக்குங்க’ என்று சொல்லி அடுத்த நான்கு மணி நேரத்துக்கு பஜனைப் பாட்டை வாங்கிக் கொண்டே வந்தேன்.

மதியம் வீட்டை அடைந்து சாப்பிடும் போதே தலை வலித்தது. மற்றவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. ஒன்றும் பிரச்சினையிருக்காது என்று நினைத்துக் கொண்டேன். தலைவலியும் காய்ச்சலும் அவனவனுக்கு வந்தால்தானே தெரியும்? வந்துவிட்டது. வாட்டியெடுத்து விட்டது. முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்ததாலோ என்னவோ நான் மட்டும்தான் சிக்கிக் கொண்டேன். நல்லவேளையாக மற்றவர்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை. நான்கைந்து நாட்கள் கடுமையான காய்ச்சல். அக்கம்ப்பக்கத்தில் பன்றிக்காய்ச்சல் வேறு பரவிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அதுவாக இருக்குமோ என்றுதான் சந்தேகமாக இருந்தது. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை. மருத்துவரிடம் சென்ற போது ‘ஏதோ இன்ஃபெக்‌ஷன்’ என்றார். நானாகவே முடிவு செய்து கொண்டேன். நெய்யும் முறுக்கையும் தின்ற அந்த குட்டியானைதான் காரணம் என்று.

நல்லது செய்யலாம் என்று நினைக்கிறவனைச் சீண்டிப் பார்ப்பதுதானே இந்த உலகம்? இதே உலகத்தில் பிறந்த எலி மட்டும் விதிவிலக்காக இருக்குமா என்ன? மகிழ்வுந்து சர்வீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் விட்ட பிறகுதான் தெரிந்தது வண்டிக்குள்தான் திருமணம் நடத்தி, முதலிரவு கொண்டாடி, குட்டி போட்டு குடும்பம் நடத்தி குதூகலமாக இருந்திருக்கிறார்கள் என்பதே. குளிர்சாதனக் குழாயில் மட்டுமே மூன்று எலிகள் செத்துக் கிடந்திருக்கின்றன. அநேகமாக அவர்கள் மூதாதையர்களாக இருக்கக் கூடும். மயானத்துக்கு மட்டும் எதற்காக வெளியில் செல்ல வேண்டும்; இவன் வண்டிக்குள்ளேயே அடக்கம் செய்து சமாதி கட்டிவிடலாம் என்று தலைவனையும் அருகிலேயே தலைவியையும் புதைத்து சிலு சிலுவென கடற்கரைக் காற்று வாங்க அனுமதித்திருப்பார்கள் போலிருக்கிறது. 

விடுமுறை எடுத்தால் உருப்படியாக ஏதாவது சில வேலைகளைச் செய்ய வேண்டும். காய்ச்சல்காரனாக ஒரு தலையணையைக் கட்டிப்பிடித்து அப்படியும் இப்படியும் புரண்டு படுத்து விட்டத்தையும் ஜன்னலையும் பார்த்தது மட்டும்தான் மிச்சம். குறைந்தபட்சம் நிசப்தத்தில் கட்டுரை எழுதுகிற அளவுக்காவது அனுமதித்திருக்கலாம். ‘அப்பாடா! எலிதான் காரணமா? அந்த எலி வாழ்க!’ என்று வாழ்க கோஷம் போடாதீர்கள். ‘அய்யோ திரும்ப வந்துட்டான்’ என உங்கள் எலிகளிடம் சொல்லுங்கள். இனி வேட்டையராஜாவாக மாறப் போகிறான் இந்த ஒல்லிப்பிச்சான். ஒவ்வொரு முறை உடல்நிலை சரியில்லாத போது ஒரு சங்கல்பம் எடுத்துக் கொள்வதுண்டு. ‘இனி கடலை போடக் கூடாது’ ‘இனி சைட் அடிக்கக் கூடாது’ இப்படி நிறைவேற்றவே முடியாத சங்கல்பங்கள். கொஞ்ச நாட்கள் கழித்து ‘இதெல்லாம் மனிதனின் இயல்பு’ என்று சங்கல்பத்தை உடைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படியில்லை ‘எலி மவனே or எலி மவளே...சிக்குனீங்கன்னா ஜலசமாதி ஆக்கி மண்ணுக்குள் புதைத்துவிட்டுத்தான் மறுவேலை’ என்று முடிவு செய்திருக்கிறேன். எடுத்த சபதம் முடிப்பேன். கலங்காதே!

5 எதிர் சப்தங்கள்:

bons alias bondamani said...

நீங்க ஏன் எலிகளுக்கு கு.க செய்து வெளியில் விடக்கூடாது ?
:)

Sarakaari said...

I'll complaint to Peta

சக்திவேல் விரு said...

ஆமாங்க கு க பண்ணி கையில ஒரு தேங்காய் தொரடியும் கொஞ்சம் கடலையும் கொடுத்து விடீங்கன்னா எங்காவது போயி பொழச்சுக்கும்......ஆனா அது அடுத்து முறை குடும்பத்த விருத்தி பண்ண முயற்சிக்கும் போது உங்களுக்கு பலஜென்மசாபம் விடும்...பார்த்துக்கோங்க மணி.. :-)

ADMIN said...

உங்களுக்கு வந்தது எலிக் காய்ச்சலா இருக்குமோ? :)

சேக்காளி said...

//மயானத்துக்கு மட்டும் எதற்காக வெளியில் செல்ல வேண்டும்; இவன் வண்டிக்குள்ளேயே அடக்கம் செய்து சமாதி கட்டிவிடலாம் என்று தலைவனையும் அருகிலேயே தலைவியையும் புதைத்து சிலு சிலுவென கடற்கரைக் காற்று வாங்க அனுமதித்திருப்பார்கள் போலிருக்கிறது.//
என்ன செய்ய. இனி எலி சமாதியில் அடித்து சபதம் எடுப்பதெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது.