Mar 12, 2017

பாஜகவின் அரசியல்

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ‘இது மோடியின் அலை’ என்று ஒரு தரப்பினர் பேச ‘மோடியின் அலையென்றால் ஐந்து மாநிலங்களிலுமல்லவா வென்றிருக்க வேண்டும்? இது ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை’ என்று எதிர்தரப்பினர் பேசுகிறார்கள். எப்படியோ- இந்தியாவின் மிக முக்கியமான மாநிலத்தை பாஜ கைப்பற்றியிருக்கிறது. அதுவும் பிரமாண்ட வெற்றி. இனி நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த முடிவுகள் பாஜகவுக்கு பக்க பலமாக இருக்கும். ராஜ்யசபாவில் தமது எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளவும் பாஜகவுக்கு உதவும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் கூட இம்முடிவுகளின் அடிப்படையிலேயே காய் நகர்த்துவார்கள். 

உத்தரப்பிரதேசம் மாதிரியான பெரும் மாநிலத்தில் வெற்றி பெறுவது என்பது ஒரு தேசியக் கட்சிக்கான கெளரவ அந்தஸ்து மட்டுமில்லை- மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியின் நிதி ஆதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் துருப்புச் சீட்டாகவும் இருக்கும். அதுமட்டுமிலாமல் மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று நிறுவ தேர்தல் முடிவுகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். மோடியின் மக்கள் ஈர்ப்பு அப்படியேதான் இருக்கின்றன என்று ஊடகங்கள் எழுத ஆரம்பித்திருக்கின்றன. ப.சிதம்பரம் கூட இதே கருத்தைச் சொல்லியிருப்பதாக டைம்ஸ் நவ்-ல் எழுதியிருந்தார்கள். எப்படிப் பார்த்தாலும் பாஜகவுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி என்பதை மறுக்க முடியாது.

உபியைப் போலவே உத்தரகாண்ட் தேர்தலிலும் மொத்தமுள்ள எழுபது தொகுதிகளில் ஐம்பத்தேழு தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருக்கிறது. கோவா, மணிப்பூரில் வலுவான எதிர்கட்சியாக அமரப் போகிறார்கள். பஞ்சாபில் மட்டும் சீக்கியர்கள் தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள். அதற்கும் ‘அகாலிதளத்தின் குடும்ப ஆட்சிதான் காரணம்’ என்று சொல்லி சப்பைக்கட்டு கட்டித் தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.

ஆனால் ஒன்று தெளிவாகப் புரிகிறது- பாஜக மிகத் தெளிவாக காய் நகர்த்தி வருகிறது. எங்கேயெல்லாம் அரசியல் வெற்றிடம் உருவாகிறதோ அங்கேயெல்லாம் தமது கால்களைப் பதித்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். சமாஜ்வாதியின் கட்சிக்குள் நடைபெற்ற உட்கட்சிப் பூசல், மாயாவதி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை பாஜக பயன்படுத்தி தனது பிரச்சார வியூகத்தை உபியில் உருவாக்கியது. அமித்ஷா நேரடியாகக் களமிறங்கியிருந்தார். மோடி தனது தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். கடைசியில் நானூறு தொகுதிகளில் முந்நூற்று இருபத்தைந்தைக் கைப்பற்றிவிட்டார்கள். அதே அலையை வைத்துக் கொண்டே உத்தரகாண்ட்டிலும் வென்றுவிட்டார்கள்.

அடுத்து கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இப்பொழுதே ‘ஆபரேஷன் தாமரை’ போன்றதொரு நடவடிக்கையை எடியூரப்பா தொடங்கியிருக்கிறார். ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மீதும் சித்தராமைய்யா மீதும் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள். காங்கிரஸ் திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால் பாஜக மாற்றுக்கட்சியின் முக்கியத்தலைகளை ஒவ்வொன்றாக உள்ளே இழுத்துக் கொண்டிருக்கிறது. இப்படியே நிலைமை தொடருமானால் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள் என்று கணிக்கலாம்.

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிக் கொண்டிருக்கிறது’ என்று தமிழிசை பேசியிருக்கிறார். ஏற்கனவே தேர்தல் அரசியலிலிருந்து கிட்டத்தட்ட கம்யூனிஸ்ட்களை வெளியேற்றியிருக்கிறோம். காங்கிரஸும் பலமிழந்து வலுவான எதிர்கட்சி இல்லாத நிலைமை உருவாவது தேசத்திற்கு நல்லதில்லை. அரசாங்கம் கொண்டு வரக் கூடியத் திட்டம் எதுவாக இருப்பினும் அதை வலுவான குரலில் விவாதிக்கக் கூடிய தேசிய அளவிலான எதிர்கட்சிகளுக்கான தேவை இருந்து கொண்டேதான் இருக்கும். ராகுல் காந்தி புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. இப்போதைக்கு திரிணமூல் காங்கிரஸ் மட்டும்தான் பிரதான எதிர்கட்சியாக கண்ணுக்குத் தெரிகிறது. ஆம் ஆத்மியை இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஒடிசாவின் நவீன் பட்நாயக், தமிழகத்தின் அதிமுக, ஆந்திராவின் தெலுங்குதேசம் போன்ற பிராந்திய கட்சிகள் மத்திய அரசுடன் நட்புணர்வோடு செல்லவே எத்தனிக்கக் கூடும். திமுக, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போன்ற கட்சிகள் தேசிய அளவில் பாஜகவை எதிர்த்துப் பணியாற்றுகிற வலு கொண்டவையாக இன்றைய சூழலில் இல்லை என்பதே நிதர்சனம்.

வலுவான தேசியக் கட்சிகளை வீழ்த்துதல், பிராந்தியக் கட்சிகளை தமக்குச் சாதகமாக படிய வைத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளில் பாஜக முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு சூழலை உருவாக்கிக் கொள்வார்களோ என்று பயப்படவும் வைக்கிறார்கள். உத்தரப்பிரதேசம்தான் கடந்த ஆறு மாதங்களாக அவர்களின் எல்லாவிதமான கவனத்தையும் கோரிக் கொண்டிருந்தது என்பதால் அங்கே தமது பார்வையை நிலை நிறுத்தியிருந்தார்கள். வென்றாகிவிட்டது. இனி பாஜகவுடைய தலைமையின் பார்வை தென்னகத்தை நோக்கி முழுமையாகத் திரும்பும் என்றுதான் கருதத் தோன்றுகிறது. இவர்களின் பட்டியலில் அடுத்த மாநிலமாக தமிழகம் இருக்கக் கூடும். 

தமிழகம் பாஜகவுக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக இருக்கும் என்றாலும் அதிமுகவின் வலுவற்ற தலைமையால் உருவாகியிருக்கும் வெற்றிடத்தை எல்லாவிதத்திலும் பயன்படுத்திக் கொள்ளவே பாஜக முனையும். கடந்த ஐம்பதாண்டு காலமாக திமுகxஅதிமுக என்ற இருமுனை போராட்டத்தில் கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸூம் அவ்வப்போது சட்டப்பேரவைக்குள்ளும் பாராளுமன்றத்துக்குள்ளும் யாரையாவது அனுப்பிக் கொண்டிருந்தாலும் இவர்கள் யாருமே அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றோ திமுகவை நொறுக்க வேண்டும் என்றோ கனவே கண்டிருக்கமாட்டார்கள். அப்படி யாராவது துளி நினைத்தாலும் அவர்களை திமுகவும் அதிமுகவும் பிரித்துச் சிதறச் செய்து கொண்டிருந்தார்கள். பாஜகவின் அணுகுமுறை குதிரையேறுவதாக இல்லை. கடந்த சில தேர்தல்களாகவே தம்முடைய சொந்த பலத்திலேயேதான் நின்று கொண்டிருக்கிறார்கள். டெபாஸிட் இழந்தாலும் கூட முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நோக்கமே திராவிடக் கட்சிகளை வீழ்த்துவதுதான். தமிழக அரசியல் கட்டிடத்தில் ஒன்றிரண்டு செங்கற்களை பிடுங்கிவிட்டாலும் கூட மிக எளிதாக காலூன்றிவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. அதற்கான எல்லாவிதமான பிரயத்தனங்களையும் பாஜக செய்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்றைக்கு அதிகமாக செய்திகளில் அடிபடக் கூடிய தலைவர்களாக பாஜகவினர் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அதிகமாகக் கலாய்க்கப்படுகிறவர்களாகவும் பாஜகவினர் இருக்கிறார்கள். சற்றே கவனித்தால் அரசியலைப் பொறுத்தவரைக்கும் நல்லவர் என்கிற பிம்பத்தைவிடவும் அதிகமாகப் பேசப்படுகிறவராக இருந்தால் போதும் என்றுதான் தோன்றுகிறது. ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் சொல்லப்படுகிற கருத்தெல்லாம் பெரும்பான்மையான மக்களின் எண்ணமாக இருப்பதில்லை என்பதைத்தான் தேர்தலின் முடிவுகள் திரும்பத் திரும்பக் காட்டுகின்றன. அறிவுத்தளத்திலான அரசியல் வேறு; கள நிலவரம் வேறு. இரண்டையும் குதப்பிக் கொள்வது எந்தக் காலத்திலும் வெற்றியைத் தராது. போராளிகள், அறிவுஜீவிகள் என்பவர்கள் எல்லாம் இப்படியான பிம்பங்களை நம்பித்தான் தேர்தல் களத்தில் இறங்குகிறார்கள். இரோம் ஷர்மிளாவை இணையவாசிகள் பாராட்டினார்கள். எவ்வளவு வாக்குகளை வாங்கினார்? அதுதான் அரசியல். நல்லவன் வல்லவன் என்பதைவிடவும் ‘பப்ளிசிட்டி’ என்பதன் தேவை அதிகமாக இருக்கிறது. இங்கே எச்.ராஜாவும் தமிழிசையும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

உபி யின் கோல்டுபில்டர் கோவாலு அகிலேஸ் தான் பாஜக வின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு உதவியவர்.

Jasper said...

சுதந்திரம் பெற்றுத் தந்ததை விட வேறு எதுவும் செய்யாமல் காங்கிரஸ் 70 ஆண்டுகளாக நாட்டை சீரழித்தது போலவும்,(நாட்டைப் பிரித்துக் கொடுத்து விட்டதாகவும்)பிஜேபி அதை சரி செய்ய சில ஆண்டுகள் தேவை என்பது போலவும் , demonetization என்பது தீவிரவாதிகளை ஒடுக்கவும், கருப்பு பணத்தை மீட்கவும் , மேலும் எல்லா வித முதலீடுகளும், பண பரிவர்த்தனைகள் வெளிப் படையாக இருக்கும் எனவும் அநேக பிஜேபி சார்ந்தவர்களின் எண்ணம். Intellectuals நிறைய பேர் அவர்கள் பக்கமும் உள்ளார்கள். ஆனால் நமக்காக குரல் கொடுப்பவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் இல்லை. தம்பி! நான் நினைப்பது ஒவ்வொருவரும் தன எண்ணங்களை சீர் தூக்கிப் பார்த்து அடிப்படை வாதம் அரசியலும், மதத்திலும் கலந்து விடாமல் நாம் அனைவரும் ஜாதி, மதம், இனம் தாண்டி முதலில் " தமிழர்கள் " என்ற உணர்வோடு இருந்து பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அஞ்சாமல் நம் கடமைகளைச் செவ்வனே செய்து மனிதாபிமானத்துடன் வேற்றுமைகள், முரண்பாடுகள் வந்தாலும் அவற்றை மறந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும். கட்சி சார்பில்லாமல் தங்களைப் போன்றோர் தேர்தலில் நிற்பவர்களில் மேலானோரை இனம் காட்டி விட்டால் போதும். மாநிலம் செழிக்க மத்தியிலும் அவர்களை ஆதரிப்போர் வேண்டும் என சொல்லி மாறி, மாறி இவர்கள் அனைவரும் கூட்டுக களவாணிகளாக மட்டுமே இருந்துள்ளனர். தற்போது மீனவர் பிரச்சனை, விவசாயிகள் தற்கொலை ,வறட்சி, மழையின்மை,நதி நீர் பங்கீடு இவற்றில் நாம் தனித்து நிறுத்தப் பட்டோம். இனிமேலாவது இருக்கிற குளங்கள் , நீர் நிலைகளை யாரையும் எதிர் பார்க்காமல் அப்பகுதி மக்களோடு இணைந்து "நமக்கு நாமே " என ஒற்றுமை உணர்வோடு சுத்தப் படுத்த வேண்டும். பிற மாநிலங்களையும் அனுசரித்து சண்டை இல்லாமல் வாழ வேண்டும். யாரைக் கலாய்த்தாலும் எப்படியும் அரசாங்க உத்தரவுக்கு அனைவரும் அடி பணிவோம். ஆனால் நமக்குள்ள ஒற்றுமையில் பெரியார், அம்பேத்காருக்குப் பங்கு உண்டு. பெரியார், அம்பேத்கார்,அன்னை தெரசா போன்றோரை முன் மாதிரியாக அனைவரும் கொள்ள வேண்டும். நம் நாட்டில் எத்தனை குறைகள் இருந்தாலும் அதை அற வழியில் அரசாங்கத்துக்கு உணர்த்த வேண்டிய பங்கு அனைவருக்கும் உண்டு. வாழ்க பாரதம். வளர்க நம் நாடு.

சே சேது said...

Good article Anna

சக்திவேல் விரு said...

அவர்களின் தீவிர பிரச்சார முறைகளை பார்க்கும்போது தமிழ்நாட்டு மக்கள் அதி வேகத்தில் ப ஜ க ஆட்சி அமையக்க போவது உறுதி... மக்கள் தானே அரசு ...

வெட்டி ஆபீசர் said...

பிரதான எதிர்க்கட்சி இல்லையா...ஏன் IJKக்கு என்ன கொறச்சல்?
தீயா வேல பாக்கணும் மணி...